அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-22
அத்தியாயம்-19
மகனே! விபரீதமான சம்பவமாகத்தான் தோன்றும் உனக்கும் சரி, எனக்கும் சரி. கட்டுக்கதைகளிலும் இப்படி இராதே என்றே கூறுவர். ஆனால், எனக்கு ஏற்பட்ட மனமுறிவு என்னை எந்த விபரீதத்துக்கும் தயாராக்கிவிட்டது. ராதா சொல்வாள், பூனைகூடப் புலியாக மாறும் என்று. நம்மைக் கண்டதும் ஓடும் பூனையைத் துரத்திக் கொண்டு சென்று, ஒரு அறையில் அது புகுந்த பிறகு, கதவைத் தாளிட்டுக் கொண்டால், தப்பி ஓட மார்க்கமே இல்லாததால், பூனைக்குப் பிரமாதமான திகில் ஏற்பட்டு, திகிலின் விளைவாகத் தைரியம் உண்டாகிப் பாய்ந்து, நமது கண்களை நாசம் செய்துவிடுமாம்! பூனை அல்ல அந்த நேரம், புலியாகிவிடுகிறது என்று ராதா கூறுவாள். நான் பட்ட வேதனை என்னை அவ்விதமாக்கிவிட்டது. என்னவோ ஓர் வகையான வெறி, சே! எக்கேடு கெட்டாலும் கெடுவோம், இந்தக் கெடுமதியாளனுடன் மட்டும் இனி இருக்கக்கூடாது என்று ஒரு எண்ணம், அசைக்க முடியாதபடி ஏற்பட்டுவிட்டது. பிணம் சுடலையில் வேகிறது. நான் ஆண் உடையில் ஊரைவிட்டு வெளியே செல்கிறேன்.
அப்பா! நான் காவி அணிந்து உலவிய காலம் இருக்கிறதே, அது வெந்த புண்ணுக்கு வேல் ஆக முடிந்தது. கயவர்களின் கூட்டுறவே கிடைத்தது. அவர்கள் ஊரை ஏய்க்க உரத்த குரலில் பாடும் பஜனைப் பாட்டுக்களை, நானும் முதலில் நம்பினேன். நானும் அவர்களில் ஒருத்தியாக இருக்க ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது, அவர்களைப் போல் மூடர்கள் வேறு கிடையாது என்பது. பலர் என்னைப் போலவே வாழ்க்கையில் ஏற்பட்ட திகைப்பினாலேயே திருவோடு தூக்கினவர்கள் – பிறகோ, அவர்கள் பாடுபட்டுப் பிழைக்க விரும்புபவருக்குக் கைகொடுக்க மறுக்கும் உலகை ஏய்த்து வாழ இதுவே எளிய வழி என்று கண்டறிந்து, அதற்கேற்றபடியே நடக்கலாயினர். இத்தகையவர்களுடன், நான் சில மாதங்கள் உலாவினேன். திருவிழா எங்கெங்கு நடக்கிறதோ அங்கெல்லாம் செல்வது. சாவடிகள் எங்களுக்குச் சொந்தம். குளத்தங்கரைகளில் கொண்டாட்டம் – போலீஸின் கண்களில் சிக்கிவிட்டால் ஆபத்துதான். இந்நிலையில், நான் பெற்ற அனுபவம் இருக்கிறதே, அதனை ஆயுட்காலம் பூராவும் கூறலாம். ராதாவிடம் சொல்லித்தான், பண்டாரங்களைப் பற்றியே ஒரு பெரிய புத்தகம் எழுதச் செய்யவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு விதவிதமான பண்டாரங்களைபற்றி எனக்குத் தெரியும். அவர்களின் ‘கதைகள்’ உலகுக்கு, எச்சரிக்கையாகக்கூட இருக்கும். நான் அந்த உலகிலே கண்ட பல அதிசயங்களைக் கூறி உனக்குச் சலிப்பு உண்டாக்கப் பிரியப்படவில்லை. சுருக்கமாகச் சிலது மட்டும் கூறுகிறேன் – பல இரவுகள் பட்டினி கிடந்திருக்கிறேன். திருட்டுச் சொத்திலே பங்கு பெற்றிருக்கிறேன் – போலீஸில் கூடச் சிக்கிக் கொள்ள இருந்தேன் ஒரு முறை! இவ்வளவும், எனக்கு அல்லலைத் தந்ததே தவிர, ஆபத்தைத் தரவில்லை – ஆண் உடை எனக்குக் கவசமாக அமைந்திருந்தது. ஆனால் மகனே! நான் எப்படியடா கூறுவேன், அந்தக் கவசம் என்னைக் கடைசி வரை காப்பாற்ற முடியாது போயிற்று. நான் படுகுழியில் தள்ளப்பட்டேன்… உன் அன்னை என்ற அந்தஸ்திலிருந்து வீழ்ந்தேன். அன்று எனக்குக் கடுமையான ஜுரம். நான் கூட்டாளியாகக் கொண்டிருந்த கிழப் பண்டாரம், எனக்கு மருந்து வாங்கிக் கொடுத்தான். மருந்தோடு விபசாரம் என்ற விஷமும் கலந்தான். தற்செயலாகத்தான் கண்டுகொண்டான் – தகாத காரியம் என்று கெஞ்சினேன், எதிர்க்கச் சக்தி இல்லை. நான் வீழ்ந்தேன்! விழியில் வழிந்தோடிய நீர் கொஞ்சமல்ல. மேலும் நடந்தவைகளைக் கூறி உன்னைச் சித்திரவதை செய்யத் துணியவில்லையடா கண்ணே! நான் துரோகியானேன் – விபசாரியானேன் – பிறகு எனக்கும் பண்டாரக் கூட்டமோ, காவி உடையோ தேவைப்படவில்லை. கிழப் பண்டாரம் சில நாட்களுக்குப் பிறகு, என்னைத் தன் தங்கை வீட்டுக்கு அழைத்துச் சென்று, பெருமையுடன் கூறினான். “ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்லி என்னை இந்தத் தள்ளாத வயதிலே துரத்தினாயே, பார்த்தாயா, புதையல்!” என்றான். அவள் என்னைப் பார்த்த பார்வையை இப்போது எண்ணிக் கொண்டாலும் நடுக்கம் பிறக்கிறது. சிறிய பலகாரக் கடை அது. பலகாரம் மட்டுமல்ல, திருட்டுச் சாராயக் கடையும் அதுதான். அது என்னைப் போல அபலைகள் சிக்கிக் கொள்ளும் சமயத்திலே விபசார விடுதியாகவும் மாறும். அவள் இரண்டு முறை தண்டனை பெற்றவள் – திருட்டுக் குற்றத்துக்காக. அதனால் அவளுக்கும் போலீஸிடம் பயம் இருப்பதில்லை. கேலியாகக் கூடப் பேசுவாள். அவர்களும், அவளைத் தமாஷ் செய்வார்கள். எப்படித்தான் ஏற்பட்டதோ அந்த வேகம். எனக்கே புரியவில்லை; நான் அந்த இடத்திற்கு வந்த சில வாரங்களுக்குள் முழுவதும் அழுகிய மனதைப் பெற்றுவிட்டேன். சேற்றிலே கால் வைத்தாகி விட்டது. ஆழப் புதைந்து கொண்டது. காலைச் சேற்றிலே இருந்து எடுத்துக் கொள்ளச் சக்தியுமற்றுப் போயிற்று. பிறகு அந்தச் சேறு, சந்தனம் ஆகிவிடத்தானே வேண்டும். விடுதியிலே, சந்தித்த நாயுடுதான், விடுதலைக்கு வழி சொன்னான் – ரங்கோன் போய் விடுவோம் என்று. கிளம்பினேன். ரங்கோனிலும் என் வாழ்க்கை, புயலில் சிக்கிய கலம் போலத்தான். நாயுடு சம்பாதிப்பார் – குடிக்க மட்டுமே தான் அந்தப் பணம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் போலச் சில சமயம் நடந்து கொள்வார். சில சமயம், வேதாந்தம் பேசுவார். சில வேளைகளில் ஏதோ போன ஜென்மத்திலே நமக்குள் தொடர்பு இருந்திருக்க வேண்டும். அதனாலேதான் இந்த ஜென்மத்திலே இது ஏற்பட்டது என்பார்.
ராதா பிறந்தாள் – எனக்கு அந்த வேதனையான வாழ்விலேயும் ஒருவகை ஆனந்தம் தர, அவள் பிறந்தாள்.
மகனே! அவளும் நானும் இங்கு வர நேரிட்டது ஜப்பானின் குண்டு வீச்சால். அந்தக் குண்டு வீச்சின் கொடுமையைவிட, அதிகக் கொடுமைக்கு நான் உன்னை ஆளாக்கிவிட்டேன். ஆனால், நான் இவ்வளவும் கூறாவிட்டால் என் மனம் வெடித்து விடும் என்று பயந்து விட்டேன். என்னை மன்னித்துவிடு! உன் மாதா நான். ஆனால், மாபாவியானேன் – என் மன வேதனை அளவு கடந்தது. அதன் விளைவுகள் பல – நான் இவைகளைக் கூறி என் நடத்தைக்குச் சமாதானம் தேடுகிறேன் என்று எண்ணாதே. என் கடைசி நாட்களில் நிம்மதி வேண்டும் – மனத்தின் பாரம் குறைய வேண்டும். உன்னைக் கண்டேன், என் துர்நடத்தையையும் கூறினேன் – என்னை மன்னித்துவிடு – ஆனால் நான் உன் மாதா என்பதையும் மறந்துவிடு. குற்றம் செய்வதற்கு முன்பு கொடுமைக்கு ஆளானாள் என்பதை மட்டும், மனமார நம்பு. அப்பா! பொன் நிற மேனியிலே படரும் புண், கருநிறத்தை உண்டாக்கிவிடுகிறதல்லவா, அதுபோல என் நற்குணத்தை உன் அப்பாவின் கொடுமை கெடுத்து, என்னை இக்கதிக்குக் கொண்டு வந்தது. நான் குற்றமற்றவள் என்று வாதாடவில்லை. ஆனால் குற்றவாளி நான் மட்டுமல்ல. உன் அப்பா, பெரிய குற்றவாளி! பணப் பேய் பிடித்தவர் – மாசற்ற மனைவி மீது அபாண்டம் சுமத்தியவர் – கொலைகாரர் – கொடுமை புரிந்தவர் – ஆனால் அவர் இன்னும் ஊரிலே மதிக்கப்படுபவர். நான் வந்திருக்கிறேன், உன்னைக் கண்டேன், பேசினேன், முழு விவரத்தையும் கூறிவிட்டேன் என்பது தெரிந்தால் போதும்; பயத்தால் மாரடைப்பு உண்டாகிப் பிராணன் போய்விடும். அவர் எதற்கும் உலகிலே அஞ்சாமல் இருக்க முடியும். ஆனால் உன் அன்னையை, நேருக்கு நேர் நின்று பார்க்க முடியாது! தைரியம் வராது! நான் விபசாரி என்று உலகம் என் எதிரிலே கூறும், உன் அப்பாவால் மட்டும் கூற முடியாது. எந்த அக்ரமத்தையாவது அவர் செய்ய எண்ணும்போது கூட, அவருடைய மனக்கண் முன் என் உருவம் தோன்றும். தம்பி! விபசாரியான நான் வேதாந்தம் பேசுகிறேன், வழுக்கி விழுந்து விட்ட நான் பிறர்மீது பழி சுமத்தித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறேன் என்று எண்ணிவிடாதே. இவ்வளவும் நான் உன்னிடம் கூறாமலே இருந்து விட்டிருக்கலாம். நான் யாரோ ரங்கோனிலிருந்து வந்தவள் என்று நினைத்துக் கொண்டு இருப்பாய். என்னால் முடியவில்லை, மூடிபோட்டு வைக்க. பல வருஷங்களாக மனதிலே இருந்து வந்த பெரிய பாரத்தைக் கீழே தள்ளிவிட்டேன்.
நான் சூதுக்காரியல்ல – நான் சூதுக்காரர் கிளப்பிய சூறாவளியிலே சிக்கியவள். என்னிடம் பரிதாபம் காட்டி, பலரறிய, “என் அன்னை, ரங்கம்!” என்று கூறுவாயா என்று நான் கேட்பதற்காகவும் இவ்வளவு பேசவில்லை. பழி தேடிக் கொடுத்தவள்! பாதகி! விபசாரி என்று என்னைப் பற்றி என் கதையை அறியா முன்பு, நீ கூறியிருக்கவோ, எண்ணியிருக்கவோ முடியாது. நான் தான் இறந்துவிட்டேனே, தாயை இழந்தவன் என்றுதானே நீ கருதிக் கொண்டிருந்தாய் – ஊரும் நம்பிற்று. இனியும் அதேபோலத்தான் எண்ணும்.
அத்தியாயம்-20
“நண்பா! கொடுமைக்கு ஆளான என் தாயாரின் சோகம் நிரம்பிய கதையை அவர்கள் கூறி முடித்த பிறகு என் கண்களிலே கொப்புளித்த நீரைத் துடைத்துக் கொண்டேன் – என் தாயாரை நோக்கி, ‘அம்மா! பிரேத பரிசோதனை செய்து பயனில்லை. இனி நடக்க வேண்டியதைக் கவனித்தாக வேண்டும். அது என் கடமை. அப்பா, பேராசையால் செய்துவிட்ட பெரிய கேடு, உன்னைச் சூழ்ந்து கொண்டு கெடுத்துவிட்டது. குற்றவாளியை நான் கண்டு கொண்டேன். தண்டனை மட்டும் தர முடியாது. நான், என் வாழ்நாளில் இதற்குப் பரிகாரம் தேடுவேன். என் தாயார் உயிருடன் இருக்கிறார்கள் என்று ஊரறியக் கூறுவதல்ல இதற்குப் பரிகாரம். என் தங்கையின் வாழ்வு சரியாக அமையும்படி பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இனி என்னுடையது. அப்பா வருவதற்குள், நீங்கள் இங்கிருந்து புறப்பட்டுவிட வேண்டும். அவர் கோட்டையூர்க் கிராமத்தைவிட்டு இங்கு குடியேறிவிட்டது போலவே, நமது கிராமத்தவர் வேறு சிலரும் இவ்வூரில் வந்திருக்கிறார்கள். யாராவது, எப்படியாவது அடையாளம் கண்டுபிடித்துவிட்டால், தொல்லை’ என்று கூறிப் பணம் உதவினேன். ராதா இப்போது கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள்” என்று என் நண்பன் நாகசுந்தரம் கூறி முடித்தான். எப்போதும் நான் கேட்டிராத அந்த விசித்திரமான கதை, என் உள்ளத்தை உருக்கிவிட்டது. சாதாரணமாக, விபசாரி என்ற உடனே யாருக்கும் காமுகனுக்கும் கூடக் கோபம் வரும். ஆனால், இப்படி விபசாரப் படுகுழியிலே இடறி விழவேண்டியபடி, கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் கதையைக் கேட்டால், கோபத்திற்குப் பதில் துக்கந்தானே வரும். நான் என் நண்பனின் சோக நிலையைக் கண்டு பரிதாபப்பட்டதுடன், அவன் தன் பொறுப்பை உணர்ந்து, பெருந்துயரில் வீழ்ந்த தன் அன்னைக்கும் தங்கைக்கும் பேருதவி செய்த பெருங்குணத்தைப் பாராட்டினேன்.
நாகசுந்தரம் சொன்னான், “நண்பா? இப்போதுள்ள நிலையைப் பார். ராதா மாசுமறுவற்றவள் – எழிலுள்ளவள் – படிக்கிறாள் கல்லூரியில் – ஆனால் அவளை என் தங்கை என்று நான் ஏற்றுக்கொள்வதற்கில்லை – அதனால் அவள் ஒரு கெடுதியும் செய்யாமலேயே அவளுடைய வாழ்வின் ஆரம்பமே முட்டுக்கட்டை போடப்பட்டதாகிவிடுகிறது. காலில் தளை இடப்பட்டவன் ஓட முயன்றால் இடறி விழத்தானே வேண்டும்! கறுப்புத் துணிகொண்டு கண்களைக் கட்டிவிட்டு, காயும் நிலவைக் கண்டு கவிபாடு என்று கேட்பது போல, அவளை விபசாரி மகள் என்று முத்திரை பொறித்துவிட்டு பிறகு, வாழ்விலே நிம்மதி பெறுவதற்காக, கௌரவம் பெறுவதற்காக, நீ கண்ணுங்கருத்துமாக இருக்கவேண்டுமென்று கூறிப் பயன் என்ன? அவளுடைய வாழ்வு களங்கமற்றதாக இருக்க வேண்டுமானால், அவள் மீது பூசப்படும் கறைகளைக் கண்டு கவலை கொள்ளாத வீரன் வேண்டும், அவளை மணம் புரிய உன்னை நான் அத்தகைய வீரன் என்று நம்பியே, இவ்வளவு வேதனை நிரம்பிய விஷயத்தைக் கூறினேன். உலகம் அறியாது இந்த உண்மையை; நீ அறிவாய். நீ விரும்பினால், ஊராரிடம் கூறி எனக்கு இழிவு கூட உண்டாக்க முடியும்; தூற்ற முடியும்; வம்பளக்கலாம்; என்னைக் கேவலப்படுத்தவும் செய்யலாம். இதைத்தான் சாமான்யர்கள் செய்வார்கள். நீ, தனிக் குணம் உள்ளவன். இல்லையானால், மறைத்து வைக்க வேண்டிய விஷயத்தை நான் மனந்திறந்து உன்னிடம் கூறியிருக்க மாட்டேன். என் தாயின் கௌரவம் நசித்துவிட்டது; அதை இனி மீட்க முடியாது. என் தங்கையின் வாழ்வு சரியாக அமையும்படி செய்வதுதான் இப்போது நான் ஆற்றக்கூடிய தொண்டு. இதற்கு உன் உதவி வேண்டும். உன் உள்ளத்தில் ஈரமும் உண்டு, வீரமும் உண்டு. எனவே தான் உன்னை நாடினேன். பரந்தாமா! என் தங்கை ராதாவைக் கலியாணம் செய்து கொண்டு அவளுக்குக் கௌரவமான வாழ்வு அளிக்க வேண்டுகிறேன் – கெஞ்சுகிறேன்.”
நாகசுந்தரம் என்னை அவ்வளவு உருக்கமாகக்கூட கேட்டிருக்க வேண்டியதில்லை. சிறுத்தையால் சின்னா பின்னமாக்கப்பட்ட தாய் மானுக்கு அருகே, ஏதுமறியாது தாவிக் குதிக்கும் மான் கன்றை, யார் தான், கண்டதும் காப்பாற்ற முன்வராமலிருப்பார்கள். ராதா, விபசாரியின் மகள்! அவளை என் மனைவியாக்கிக் கொண்டு, புது நிலை, கௌரவம், அந்தக் குடும்பத்துக்குக் கிடைக்கச் செய்வேன். விபசாரம் ஒரு குற்றம் – ஆம் – ஆனால், அதற்குத் தண்டனை, தாய் செய்ததற்காக மகளுக்குத் தருவது தர்மமல்ல. சமூகம், அடிக்கடி தவறுகள் செய்யும் மக்களைக் கொண்டதுதான். தவறு செய்தவர்களையெல்லாம் அடியோடு ஒதுக்கி வைத்துக் கொண்டு போய், அவர்களையே ஒரு பரம்பரையாக்கியும் விட்டால், பிறகு சமூகம் வெறும் சாக்கடைச் சேறு நிரம்பிய இடம், அதன் நாற்றத்தைச் சகிக்கமாட்டாமல் சங்கடப்படும் ஒரு சிறு கூட்டம் – இவை மட்டும் கொண்டதாகிவிடும். அதுவல்ல சமூகத்தைத் திருத்தும் வழி. ரங்கம் விபசாரி, ரங்கத்தின் மகள் ராதா! அவளை மீட்பேன் என்று நான் ஏற்கெனவே தீர்மானித்து விட்டேன். எந்த மகனும், தன் ஆருயிர் நண்பனிடம் கூடத் தன் தாய் விபசாரியான வேதனை மிகுந்த கதையைக் கூற மாட்டான். என் நண்பன் என்னிடம் கூறினான். அவ்வளவு நம்பிக்கை என்னிடம்.
சில நாட்கள், நாங்களிருவரும் சந்திக்கவில்லை. கோட்டையூரார், அதாவது நாகசுந்தரத்தின் அப்பா யாத்திரையிலிருந்து திரும்பினார். அதனால், அவர் ஊரிலில்லாத சமயம் நடைபெற்ற வரவு செலவு காரியங்கள் ஆகியவற்றைக் காட்டவும் கூறவும், என் நண்பனுக்கு நேரம் சரியாக இருந்தது. நானோ காரியத்தைக் கவனிக்காமலில்லை. என் நண்பனொருவன், கல்லூரியில் இருந்தான். அவனுடன் கடிதப் போக்குவரத்து நடத்தினேன் – கல்லூரி நிர்வாகம் – விளையாட்டு இடம் – விடுதி – படிப்பகம், இப்படிப்பட்ட விஷயங்களைப்பற்றி, நான் இரண்டு மூன்று கடிதம் போட்டதால் அவனுக்கு என்ன எண்ணம் ஏற்பட்டதோ தெரியவில்லை. ஒரு கடிதத்தில், அவன் ஒரு முறை கல்லூரி ஹாஸ்டலில் வந்து என்னுடன் நாலு நாள் தங்கிவிட்டுத்தான் போயேன் என்று அழைப்பு அனுப்பிவிட்டான். நான் அதைத்தானே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். எனவே, மகிழ்ந்தேன். நாகசுந்தரத்திடம் சென்று, விஷயத்தைக் கூறினேன். அவன் சிரித்துவிட்டு, “ஏது! மும்முரமாக ராஜ தந்திர வேலை செய்து வந்திருக்கிறாய். ஆனால், இவ்வளவு சுற்றி வளைத்துக் காரியம் செய்திருக்கவேண்டியதில்லையே. நானே உன்னை அழைத்துக் கொண்டு போவதாகத்தான் தீர்மானித்திருக்கிறேன். ஒரே நாள் தான் தங்கப் போகிறோம். ஆனால் அது விசேஷமான நாள். உன் நண்பன் உனக்கு அந்த விசேஷத்தைப் பற்றி ஒன்றும் கூறவில்லையோ?” என்று கேட்டான். “இல்லையே! ஹாஸ்டலில் வந்து நாலு நாள் தங்கி இருக்கலாம் என்று மட்டுந்தான் எழுதினான்” என்றேன்.
“பயல், சாமர்த்தியக்காரன்” என்றான் என் நண்பன்.
நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, ஒரு ஆசாமி வந்தான், ஒரு சிறு மூட்டையும், பெட்டியும் தூக்கிக் கொண்டு.
“எல்லாம் கேட்டபடி இருக்கிறதா?” என்று என் நண்பன் கேட்டான்.
“எல்லாம் கிடைத்தது. ஆனால், ‘ஸ்பிரிங் சேலை, மட்டும் கிடைக்கவில்லை” என்றான் வந்த ஆசாமி.
“என்ன நாகு அது? ஸ்பிரிங் சேலையா? அப்படி என்றால்?” என்று நான் கேட்டேன்.
“தேடித் தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை. முன்பு ரம்பா சங்கீத சபாவிலே உபயோகித்தார்களாம் அதுபோல. பிறகு யாரும் உபயோகிக்கவில்லை. மற்றக் கம்பெனியிலெல்லாம்…” என்று ஏதோ விளக்கம் கூறினான் வந்த ஆள்.
“அது தெரியுமே எனக்கு. இந்த எண்ணெய்க் கலர் சேலை கட்டிக் கொள்வார்கள் மற்றக் கம்பெனிகளில்” என்று நாகசுந்தரம் ஏதோ விளக்கம் பேசினான். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. பெட்டியைத் திறந்தான், கிரீடம், முத்து மாலை, கைவளை, காதுக்கு லோலாக்கு – இப்படி நாடகச் சாமான்களாக இருந்தன. மூட்டையிலே சரிகை வேட்டிகள், புடவைகள் இப்படி இருந்தன.
“நாகு, என்னடா இது? கூத்து ஆடப் போகிறாயா?” என்று நான் கேட்டேன். வந்த ஆசாமி பணம் வாங்கிக் கொண்டு போன பிறகுதான் நாகசுந்தரம் பதில் சொன்னான்.
“கூத்துப் பார்க்கப் போகிறோம்” என்றான்.
“எங்கே? என்ன கூத்து? அதற்கு நீ ஏன் சாமான்கள் சேகரிக்கிறாய்?” என்று நான் கேள்விகளை அடுக்கினேன். என் நண்பன், “இவ்வளவுக்கும் இதோ பார், பதில்” என்று கூறிக் கொண்டு, ஒரு அழைப்பு அட்டையைக் கொடுத்தான். அதிலே என் மனம் மகிழச் செய்யும் விஷயம் பொறிக்கப்பட்டிருந்தது.
கமலா கன்னியர் கல்லூரி
வைர விழா
மேற்படி விழா திருமதி திலகவதி, M.A.அவர்கள் தலைமையில் நடைபெறும்.
அன்று மாலை
மாணவி ரங்கோன் ராதா எழுதிய “தாரா”
என்னும் நாடகம் நடத்தப்படும். ராதா, தாரா வேடத்தில் தோன்றுவார். அழைப்பிதழ் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
அகிலம்,
கல்லூரித் தலைமை ஆசிரியை.
அழைப்புக் கடிதம் எனக்குக் கிடைத்ததும் அளவில்லா மகிழ்ச்சி கொண்டேன். நண்பன் அழைப்புக் கடிதத்துடன் ராதா அனுப்பிய வேறோர் கடிதத்தையும் என்னிடம் தந்தான்.
“அண்ணா, கல்லூரியிலே, வைரவிழா, அதிலே வெறும் பளபளப்பு மட்டும் இருக்க வேண்டுமென்று கல்லூரி அதிகாரிகள் எண்ணுகின்றனர். எனக்கோ வெறும் ஜொலிப்பு போதாது! உண்மையான மதிப்பு இருக்கவேண்டும். அப்போது தான் அது அசல் வைரம் என்று தோன்றுகிறது. ஆனால் இங்கு தானே ரங்கோன் வைரங்கள் ஏராளமாக வாங்குகிறார்கள்!
விழாவிலே, வேடிக்கைகள் இருக்கவேண்டுமென்று பலர் பலவகைத் திட்டம் கூறினர். நான் தான் நாடகம் ஆடவேண்டுமென்று சொன்னேன். பிறகு கதையைக் கூறினேன். எங்கள் கல்லூரித் தலைமை ஆசிரியை அகிலம் அம்மையார் சீறினார்கள். நாடகத்தை நடத்தக்கூடாதென்று, பல காரணங்கள் காட்டினார்கள். ஒவ்வொரு காரணத்தையும் நான் மறுத்து, அவர்கள் கொண்ட எண்ணத்தைத் தவறு என்று விளக்கினேன். கடைசியில், பணம் அதிகம் செலவாகுமே, கல்லூரியில் பணம் ஏது? என்று கூறிவிட்டார்கள். நான் இதற்கும் சளைக்கவில்லை. செலவை மாணவிகளே ஏற்றுக் கொள்வதற்குச் சம்மதிக்கிறார்கள் என்று ஒரு பொய் சொன்னேன். அண்ணா! இந்த வேடிக்கையைப் பார். நான் பல உண்மைகளைச் சொன்னதிலே வெற்றி ஏற்படவில்லை – ஒரு பொய் சொன்னேன் – உடனே வெற்றி! அப்படியானால் தாராளமாக நாடகத்தை நடத்து என்று கூறி விட்டார்கள். பிறகுதான், மாணவிகளைக் கலந்து பேசினேன். பணம் கொஞ்சம் வசூலாயிற்று; போதாது. ஆகவே, இந்தக் கடிதத்துடன் உள்ள பட்டியலில் கண்டுள்ள சாமான்களை வாங்கிக் கொண்டு வர வேண்டுகிறேன். நாடகத்தில் நான் நடிப்பது இதுதான் முதல் தடவை என்று எண்ணாதீர் அண்ணா! ரங்கோன் பள்ளிக்கூடத்திலேயே ஒரு முறை நான் சந்திரமதி வேஷம் போட்டு, ‘கெட்ட பெயர்’ எடுத்தவள்.”
இப்படிக்கு,
ராதா.
இந்தக் கடிதத்தைப் படித்தானதும் நாடகச் சாமான்களுக்காக எவ்வளவு
செலவாயிற்று, நான் தருகிறேன் அந்தப் பணத்தை எனக் கேட்கலாமா என்று தோன்றிற்று. பிறகு, அந்த ஆசையை அடக்கிக் கொண்டேன்.
குறிப்பிட்டபடி நாங்களிருவரும் கல்லூரி சென்றோம். ராதா, எங்களை அன்போடு வரவேற்றாள். ஒரு இலட்சிய மங்கையிடம் என்னென்ன கவர்ச்சி, குணம் இருக்கவேண்டுமென்று நான் எதிர்பார்த்தேனோ, அவ்வளவும் ராதாவிடம் பொருந்தி இருந்தன. நான் எதிர்பாராத அளவு அவளிடம் சம்பாஷணைச் சமர்த்து இருந்தது. பெரும்பாலான வீடுகளிலே இந்தச் சம்பாஷணை, கிடையவே கிடையாதல்லவா! உப்புச் சப்பற்ற பேச்சு, இல்லையானால் ஓங்காரக் கூச்சல்! ஒரு மணி நேரம், ஓய்வாக உட்கார்ந்து பல விஷயங்களைப் பற்றி இனிமையாகப் பேசும் குடும்பம், எங்கே இருக்கிறது; அதிலும் ஒரு ஆணும் பெண்ணும், மகனும் தாயும், அல்லது அண்ணனும் தங்கையும் அல்லது புருஷனும் மனைவியும், ஏதோ ஓர்வகைத் தொடர்பு கொண்டவர்கள், பேசுவது என்று ஆரம்பித்தால், ஏதாவது சச்சரவில் போய் முடியுமே தவிர, நிம்மதியாக முடிவதில்லை. பேச முடிவதில்லை – தெரியாததால் ஒருவருக்கொருவர், ஒவ்வொரு விஷயத்திலும் முரண்பட்ட எண்ணம், ஆசை கொண்டவர்கள், எப்படிக் கூடிப் பேசமுடியும். பெண்களுக்கும் ஆண்களுக்கும், வேலை நேரம் போக, பேசிக் கொண்டிருக்கத் தெரியாதுதான். என்ன பேசுவது? எப்படிப் பேசுவது? என்பது தெரியவில்லை. ராதாவிடம், இந்தச் சாமர்த்தியம் இருந்தது மட்டுமல்ல. அவள் அதனை ஒரு நல்ல ‘கலை’யாக்கி வைத்திருந்தாள். பெண், அதிலும் ஒரு இளமங்கை, மேலும் ஒரு கல்லூரிக் கன்னிகை பேசினால், இனிமையாகத்தானே இருக்கும் – அது ‘கலை’யாகவும் தோன்றும், கனிரசமாகவும் இருக்கும் என்று கேலி செய்வார்கள் என்னை. ஆனால் நான் உண்மையைச் சொல்கிறேன் – கல்லூரி கன்னியர்கூட, சேர்ந்தாற்போல் ஒரு அரைமணி நேரம் இனிமை குறையாமல், அதேபோது ஆபாசம் விளையாமல், பேசக் கற்றவர்கள் அதிகம் பேர் இல்லை என்பது தான் என் அபிப்பிராயம். அதிக அனுபவம் இல்லை. ஆனால் சொல்வது சீக்கிரத்தில் மற்றவர்களால் மறுத்துவிட முடியாது. பெண்களின் பேச்சிலே குழைவு, நெளிவு, குறுகுறுப்பு, இனிமை இவை நிரம்பி இருக்கும் – இருக்கத்தானே செய்யும். ஆனால் இவை மட்டுமே போதுவதில்லை. இவற்றுடன் கொஞ்சம் மனதுக்குத் தெளிவும், நேரம் வீணாக்கப்படவில்லை என்று எண்ணுகின்ற அளவுக்கு அறிவு மணமும் அதிலே கமழ வேண்டும். ராதா இந்த அறிவு மணம் கமழும்படி பேசினாள். ஆனால் அந்த மணமும் பலவகை அல்லவா? சில உண்டே, ‘நெடி’ என்று கூறக்கூடிய அளவுக்கு அப்படி அல்ல; நல்ல மல்லிகையின் மணம் – மணம் – அதுவும் தோட்டத்திலே மல்லிகை, சற்றுத் தூரத்திலே நாம் – அப்போது உண்டாகுமே மணம், அதுபோன்று விதம் – ராதாவின் பேச்சிலே இருந்தது. அதே போது நளினம் – உறுதி – அப்பப்பா! இன்பக் கனவே நனவானது என்று கூறுவேன் – அவள் பேச்சிலே, அவ்வளவும் கலந்து இருந்தது. ஒரு உதாரணம் பாருங்கள், ராதாவுடன் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவி, ராதா, நான், என் நண்பன், நால்வருமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்; அப்போது பிரிட்டிஷ் ராணிமார்களைப் பற்றிய பேச்சு வந்தது; நான் ஏதோ ஓர் விஷயத்தைக் குறிப்பிடுவதற்காக, எலிசபெத் ராணியைப் பற்றிப் பேசினேன். உடனே, ராதாவுடன் இருந்த அந்தப் பெண், வெடுக்கென்று, “அவளா? ஆண்களை வேட்டையாடினவள்” என்றாள்! உண்மை இதிலே கொஞ்சம் உண்டு. ஆனால், அந்தப் பெண், அதைச் சொன்ன முறை இருக்கிறதே, அது என்னவோ போலிருந்தது. நான், என்னையுமறியாமல், எலிசபெத்துக்கு வக்கீல் வேலை செய்ய நேரிட்டது. நான் சொன்னேன், “அரசியாக இருந்துகொண்டு பல கட்சித் தலைவர்களையும் பக்குவமாக நடத்திச்சென்று, அதேபோது தன் பதவிக்கும் ஆபத்து வராதபடி பரிபாலனம் செய்வது எளிதான காரியமல்ல. எலிசபெத், இந்தக் காரியத்தை எவ்வளவோ திறமையாக நடத்தி வந்தது போற்றுதலுக்கு உரியதுதான்” என்றேன். என் ராதா கன்னத்தில் மெல்ல அறைவது போலப் பேசினாள், “எலிசபெத் அரசியாக இருந்ததால் உயர்தரமான வேட்டையாடி வரமுடிந்தது; நிலை வேறாக இருந்தால், வேட்டை மட்டும் நின்றிராது; ஆனால், வேட்டைக்குரிய பொருள் வேறாக இருந்திருக்கும்” என்றாள். நான் அவள் பதிலிலே சொக்கினேன். வேறு யாராவது இதே பேச்சைச் சொல்லியிருந்தால், அந்த அளவு ‘ரசம்’ எனக்கு ஏற்பட்டிருக்குமா என்பது தெரியாது. ராதா சொல்லும்போது அதை நான் பெரிதும் ரசித்தேன். எங்கள் சம்பாஷணை அன்று அதிக நேரம் நடைபெறமுடியவில்லை. நாடக வேலைகளை ராதா கவனிக்க வேண்டி இருந்தது.
நாடகத்தைக் கண்டேன் – நாடகத்தையா? ராதாவின் படம் எப்படிப்பட்டது என்பதைக் கண்டேன். நான் கேட்ட விஷயங்களை, எவ்வளவோ மறந்துவிட்டிருக்கிறேன், கண்டவைகளை மறந்து விட்டிருக்கிறேன். ஆனால், அந்த நாடகம்! அதை மட்டும் நான் ஒரு துளியும் மறக்கவில்லை – மறக்க முடியாது.
கல்லூரிப் பொது மண்டபத்திலே தான் நாடகம், சின்ன அளவுதான், அதிகமான அலங்காரங்கள் இல்லை – தேவைப் படவுமில்லை. ராதாவின் திறமை, எந்தக் குறையையும் எவரும் காணமுடியாதபடி செய்துவிட்டது. நாடகம் வேண்டாமென்று ஆரம்பத்திலே பேசிய அகிலம் அம்மையார் பரவசமானார்கள். நாடகத்திலே ராதாவுக்கு முக்கிய வேஷம். அவள் தானே தாரா! ஆஹா! எப்படிப்பட்ட தாராவாகக் காட்சி அளித்தாள், என் ராதா! நாடகத்தின் ஒவ்வொரு கட்டமும் எனக்கு இப்போதும் கண்ணெதிரே இருக்கிறது. இருந்தாலும், நான் ராதா தந்த குறிப்புப் புத்தகத்தையும் துணைக்கு வைத்துக் கொண்டே, அந்த நாடகத்தை உங்களுக்குக் கூறுகிறேன்.
முதல் காட்சி
விளக்கொளி மங்கலாக இருக்கிறது. பசும்புற்றரை மீது தாரா (அதாவது என் ராதா) படுத்துக் கொண்டிருக்கிறாள். ரோஜா நிறச் சேலை! தலையிலே மலர்ச் செண்டு! கையிலே காம்புடன் உள்ள மலர்ந்த தாமரை. அந்தத் தாமரையிலே தன் இதழை வைத்துக் கொண்டிருக்கிறாள் ராதா.
உள்ளே இருந்து ஒரு குரல் கேட்கிறது.
“தாரே! தாரே! தாரோய்!”
அந்தக் குரலிலே கடூரமும் நடுக்கமும் கலந்து இருந்தது.
அந்தக் குரலைக் கேட்டும், தாமரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கிறாள்.
ஒரு கிழவர் – அதாவது தாராவின் கணவர் வருகிறார் – முனிவர் என்று மட்டுமல்ல, முதியவர் என்பது பார்த்ததும் நன்றாகத் தெரியக்கூடிய நடை நொடி பாவனை! ஒன்று, கூற மறந்துவிட்டேனே, ராதா கதை மட்டும் எழுதவில்லை, பயிற்சி தந்தவளும் அவளே! கிழவன், “தாரே” என்று மீண்டும் கூப்பிட்டான்.
தாரா, படுத்திருந்த நிலையிலிருந்து மாறி, பசும்புல் தரைமீதே உட்கார்ந்து, இரு கால்களையும் கைகளால் கட்டிக் கொண்டு கணவனைப் பார்த்தாள். கிழவனின் முகத்திலே ஒரு களை – தாராவின் முகத்திலே ஒருவகைப் பயம்.
தாமரையைக் காட்டிக் கேட்டாள், “தாமரை எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தீர்களா?” என்று.
மனைவிக்கு எதனிடம் பிரியமோ அந்தப் பொருள் தனக்கும் பிரியம் என்று கூறிக் கொள்ளும் கணவன்மார் ரகம் அவர். ஆகவே, அவர் தாமரையைப் புகழ ஆரம்பித்தார் – வசனமல்ல – ஒரு நீண்ட கவிதை – அதுவும், தாரா சலிக்குமளவு – சபையோருங்கூடத்தான் சலித்தனர்.
பாடி முடித்தான பிறகு, பொருளை விளக்க ஆரம்பித்தார் – பதம் பதமாகப் பிரித்து. நின்று கொண்டிருந்தவர், தாராவின் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டார். தாரா, அந்தப் பாட்டு, அதற்கு அவர் சொன்ன பொருள் விளக்கம் இவைகளைக் கவனித்துக் கொண்டல்ல, வேறு எங்கேயோ அவளுடைய மனம் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. தாராவின் முகபாவம், இதை நன்றாகக் காட்டிற்று.
தாராவாலும் சகிக்க முடியவில்லை சங்கடத்தை – பொருள் விளக்கப் பேச்சை நிறுத்தினாள், வேறு பேசி.
“ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளக் கவிதை சிறந்த வழியா, கண்களா?” என்று கேட்டாள் கணவனை நோக்கி.
“இதென்ன கேள்வி? கவிதை என்றால் நீ என்னவென்று எண்ணிக் கொண்டாய்?” என்று சற்றுச் சுறுசுறுப்புடன் துவக்கினார் முனிவர்.
“கவிதை ஆராய்ச்சிக்குப் போய்விடாதீர். நான் கேட்பது சாதாரணக் கேள்வி. ஒரு பொருளை அறிய, ரசிக்க, பாராட்ட, புகழ, விரும்ப, கண்ணின் துணை தேவையா? கவிதையின் துணை தேவையா?” என்று ‘புட்டுப் புட்டு’ப் பேசினாள் தாரா.
“இப்படிக் கேட்டால் எப்படிச் சொல்வது?” என்றார் அவர்.
“விளங்கச் சொல்கிறேன். தாராவின் இலாவண்யத்தை அழகாக விளக்கி ஒரு கவிதையை யாராவது பாடக் கேட்டுத்தான் நீங்கள் தெரிந்து கொள்ள முடியுமா? அல்லது உமது கண்களைக் கொண்டே நான் ஓர் அழகிதான் என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா?” என்றாள்.
“தாரே! நீ மகா குறும்புக்காரி” என்று அவர் பதில் கூறிக் கொண்டே, தாரையின் கன்னத்தைக் கிள்ளினார். அவளோ, தாமரையின் ஒரு இதழைக் கிள்ளிக் கொண்டிருந்தாள்.
“அதுபோலவே, இந்தத் தாமரையின் அழகை எனக்கு விளக்கக் கவிதை கூறி, களைத்துப் போக வேண்டாம். என் கண்கள் போதும், தாமரையின் அழகைக் கண்டு ரசிக்க” என்று கூறிக் கொண்டே எழுந்திருந்தாள்.
இருவரும், போகப் புறப்படும்போது, நாலைந்து வாலிபர்கள் எதிரே வந்தனர்.
“குருஜீ…”
“என்னடா, தடிப்பயல்களா, சுலோகத்தின் பொருளை ஏழுமுறை சொல்லிய பிறகும்…”
“அதற்கல்ல குருஜீ! ஜுரத்துக்கு ஒரு பச்சிலை தருவீர்களே…”
“ஆமாம்! தாரா பறித்துத் தருவாள்…”
“ஏன், யாருக்கு ஜுரம் என்று தாரா கேட்கிறாளே, காதிலே விழவில்லையோ, மடையர்கள்?”
“நல்ல ஜுரம்! ஏதேதோ உளறிக் கொண்டு…”
“யாரடா? நீங்கள் உளறுவது…”
“சும்மா இருங்கள். குருவிடம் பேசுவதால், குளறுகிறார்கள். தம்பி! தெளிவாகச் சொல். யாருக்கு?”
“சந்திரனுக்கு!”
“தடிப்பயல்! இரவு, நெடுநேரமாகிறது அவன் தூங்க. உடம்பு எப்படி கெடாமலிருக்கும்.”
“அப்பா! அப்பா! கொஞ்ச நேரம் சும்மா இருமே. தம்பி ஜுரம் கடுமையா?”
“நெருப்பின் மீது கை வைப்பது போல் இருக்கிறது அம்மணி. முதலிலே தலைவலி என்றான், பிறகு ஜுரம் – வர வர வேகமாக வளர்ந்து…”
“பாவம்! ஏன் பயந்திருப்பானோ?”
“பைத்தியக்காரி! இந்தப் பிள்ளைகள் வேண்டுமானால் பயப்படும். அவனா! மகா நெஞ்சழுத்தக்காரன் – ஏன் பயப்படப் போகிறான்?”
“இல்லை, குருஜீ! அவன் கூடத்தான் பயந்தாங்கொள்ளி. நாங்களாவது தங்களிடம் மட்டும் பயப்படுவோம் – சந்திரன் அம்மாவிடம் கூடப் பயப்படுவான்.”
“அவனுடைய அம்மா என்ன அவ்வளவு பொல்லாதவளா?”
“இல்லை, இல்லை. அம்மா என்றால், சந்திரனுடைய அம்மாவல்ல. தங்களைத்தான் குறிப்பிடுகிறோம்.”
“என்னடா இது வேடிக்கை. என்னைக் கண்டா சந்திரன் பயப்படுகிறான்?”
“கண்டு பயந்தால் கூடப் பரவாயில்லையே! காணாமலே கூடப் பயப்படுகிறான்.”
“போதும் புத்தியில்லாததுகளே. ஆமாம், ஜுரம் வரக் காரணம்?”
“காட்டுக்குளம் இருக்கிறதே, அதிலே…”
“கண்டபடி புரண்டு இருப்பான்.”
“அவன் என்ன எருமையா புரள? ஒரு வாலிபன், தடாகத்திலே விளையாடாமலா இருப்பான்.”
“நெடுநேரம் இருந்தான். நெடுநேரம் மட்டுமல்ல. நாலைந்து முறை நீந்தினான், நடுக்குளம் வரை.”
“சரி! சரி! தாரே, நீ அந்தப் பச்சிலையைப் பறித்து இந்தப் பயலிடம் கொடுத்தனுப்பு. நான் போய்ப் பார்க்கிறேன் சந்திரனை. டே! பயல்களா, வாருங்கள். அடே! சாமம்! நீ இருந்து பச்சிலையை வாங்கிக் கொண்டுவா.”
இந்தச் சம்பாஷணைக்குப் பிறகு முனிவரும், சீடர்களும், சாமம் தவிர, போய்விட்டனர். தாரா, அவர்கள் போன பிறகு, சாமத்திடம் பேசலானாள்.
“நாலைந்து முறை, ஏனடா நீந்தினான்?”
“வேடிக்கைக்குச் செய்தானோ, வேண்டுமென்றே செய்தானோ தெரியாது அம்மணி.
நடுக்குளம் சென்று திரும்பினான், கையிலே, ஒரு அழகான தாமரையுடன். எங்களிடம் காட்டி, இது அழகாக இருக்கிறதா என்று கேட்டான்?”
“யார் சந்திரனா?”
“ஆமாம், அம்மணி.”
“தாமரையை உங்களிடம் காட்டி, இது நன்றாக இருக்கிறதா என்று கேட்டதும், நீங்கள் தடிப்பயல்கள், எனக்கு உனக்கு என்று கேட்டிருப்பீர்கள், உங்களுக்கெல்லாம் தாமரை கொண்டு வர மறுபடியும் நீந்தி இருப்பான்.”
“இல்லை அம்மா! எங்களுக்கு ஏன் தாமரை? நமது சிண்டு இருக்கிறானே, அவன் சந்திரன் கொண்டு வந்த தாமரையைப் பார்த்துவிட்டு, இது அழகாக இல்லை, பூர்ண மலர்ச்சி இல்லை என்றான்.”
“யார் சிண்டுவா?”
“ஆமாம்.”
“பிறகு?”
“சந்திரன், அந்தத் தாமரையைக் கசக்கிப் போட்டுவிட்டு வேகமாக ஓடி, மறுபடியும் குளத்திலே வீழ்ந்து, மற்றோர் தாமரையைப் பறித்துக் கொண்டு வந்து, கோபத்துடன் எங்களிடம் காட்டி, இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டான்.”
“அது நல்ல தாமரைதானா?”
“ஆமாம். ஆனால், இந்தச் சிண்டு, இது முன்பு கொண்டு வந்ததை விட மோசம் என்றான். சிண்டு கேலி செய்கிறான் என்று தெரியாமல், மறுபடியும் பாய்ந்தான் குளத்தில்.”
“பாபம்.”
“இப்படி ஐந்து தடவை நடந்தது. சிண்டு கடைசி வரையில் கேலி செய்வது
என்றுதான் இருந்தான். பிறகு அவனே பயந்து போனான், சந்திரன் அதிகம் களைத்துப் போயிருப்பது கண்டு. இது ரொம்ப அழகானது – சிலாக்கியமானது என்று புகழ்ந்தான். அப்போதுதான், சந்திரன் புன்சிரிப்புக் கொண்டான்.”
“அது, இந்தத் தாமரைதானே.”
“ஆமாம். தங்களுக்குத்தான் தந்தானா, தாமரையை?”
“ஏன் ஆச்சரியம்? என்ன சொன்னான், யாருக்குத் தரப் போவதாகச் சொன்னான்.”
“இல்லை… அவனைக் கேட்டோம்…”
“என்ன கேட்டீர்கள்?”
“இப்படித் தேடித் தேடி முதல் தரமான தாமரையாகப் பொறுக்கி எடுத்து யாருக்குத் தரப் போகிறாய் என்று கேட்டோம்.”
“கேட்டதற்கு அவன் என்ன சொன்னான்?”
“அவனா! என்னவோபோல் எங்களைப் பார்த்தான். ஒரு நீண்ட பெருமூச்செறிந்தான். பிறகு தழதழத்த குரலில்…”
“தழதழத்த குரலில்”
“அழகுத் தெய்வம் – என்றான்.”
தாரை புன்சிரிப்புடன் நின்றாள்.
இத்துடன் முதல் காட்சி முடிந்தது.
“அழகு தெய்வம் – எவ்வளவு பொருத்தமான பெயர், தாராவுக்கு! அதிலும் ராதா அந்த வேடம் தாங்கிய போது, பொருத்தம் மிகமிகச் சோபையுடன் இருந்தது. முதல் காட்சிக்கும் இரண்டாம் காட்சிக்கும் இடையே கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. கல்லூரி நாடகந்தானே. எனவே, சீன் மாற்றம், உடை மாற்றம் போன்ற காரியங்களுக்கு நேரம் பிடித்தது. சாதாரணமாக இந்தத் தாமதத்தைத் தவிர்க்க முடிவதில்லை. தன் தங்கையின் அறிவுத் திறனைக் கண்டு, பெருமையுடன் வீற்றிருந்த என் நண்பனைக் கண்டேன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஒன்றும் பேசாமல், மற்றவர்கள் பேசினது, அரை குறையாகக் காதில் விழுந்தது.
அழகுத் தெய்வம்.
மலர்ந்த தாமரை.
கடும் ஜுரம்.
இந்தப் பெண், யாராவது நாடகக்காரியின் மகளோ! இப்படிப் பலர் பேசிக் கொண்டனர்.
சாந்தி நிகேதனம் – அடையாறு கலாக்ஷேத்திரம் இவைகளைப் பற்றியும் பேச்சு எழுந்தது. ஆனால், அவை கலா மன்றங்கள்; இது ஒரு கல்லூரி – வேறு பல அலுவலுக்கிடையே, தயாரிக்கப்பட்ட நாடகம். அந்த நாடகத்தின் முதல் காட்சி ரசிகர்களுக்கு, திறமைமிக்க நடிகர்களை, புகழ்பெற்ற கலா மண்டலங்களை நினைவிற்குக் கொண்டு வந்ததென்றால், தாரா நாடக அமைப்பின் விசேஷத்தை விவரிக்க வேண்டுமா!
என்னைப் போலவே பலரும், இரண்டாம் காட்சியைக் காணத் துடித்துக் கொண்டிருந்தனர். முதல் காட்சியைத் தோற்கடித்துவிட்டது இரண்டாவது காட்சி.
பர்ண சாலை. அதன் வெளிப்பக்கம் ஒரு பலகை. அதன் மீது ஒரு வாலிபன். அவனருகே மற்றுமிருவர். தளிர் கொண்டு வீசுகிறார்கள். வாலிபன் கண்களைத் திறப்பதும் மூடுவதுமாக இருக்கிறான். காட்சியின் துவக்கம் இவ்வண்ணமிருந்தது.
“சந்திரா! சந்திரா! என்னப்பா, பயங்காட்டுகிறாயே?” மிகப் பரிவுடன், இருவரில் ஒருவன் பேசுகிறான். சந்திரன் கண்களைத் திறந்து அவனைப் பார்க்கிறான். பார்வையா அது – விரக தாபத்தை விளக்கும் அருமையான பிரசங்கம்!
“வந்துவிட்டார் – வந்துகொண்டே இருக்கிறார் – குரு வருகிறார்” என்று கூவியபடி இரண்டோ ர் சீடர்கள் ஓடி வந்தனர். குருவும் அவர்களைத் தொடர்ந்து வந்தார் – சந்திரனின் உடலைத் தொட்டுப் பார்த்தார் – பிறகு மருந்து என்று கருதிக்கொண்டு, ‘குரு வேலையை’ச் செய்தார்.
“சொன்னபடி நடப்பதில்லை – காட்டிலே அலைவது – கண்ட கண்ட தடாகங்களிலே புரளுவது – வரவர, சந்திரா! நீ ரொம்பக் கெட்டுவிட்டாய்!”
சந்திரன் மீண்டுமோர் முறை, பார்வையால் பேசினான் – இம்முறை சோகமும், வெட்கமும், திகைப்பும் கலந்து இருந்தது அந்தப் பார்வையில்.
இதற்குள், பச்சிலையுடன் வந்து சேர்ந்தான் சீடன். குரு முறைப்படி அதனைச் சாறுபிழிந்து, சந்திரனுக்கு கொடுத்துவிட்டு, அவனுடன் துணைக்கு இருக்கப் பச்சிலை கொண்டு வந்தவனை மட்டும் அமர்த்திவிட்டு, மற்றச் சீடர்களை அழைத்துக் கொண்டு, ஆஸ்ரமம் சென்றுவிட்டார். அவர் போன பிறகு, சந்திரன் மெள்ளப் பேசினான்.
“பச்சிலை, நீயா பறித்து வந்தாய்?”
“நானல்ல! நீ யாருக்காகத் தாமரையைப் பறித்து வந்தாயோ, அதே தாரா பறித்துத் தந்தாள் பச்சிலை.”
கண்களை மீண்டும் மூடினான் – புன்னகை தவழ்ந்தது.
“நோயுமூட்டினாள் – மருந்தும் தந்தாள்” – துணிந்து கூறினான் அந்த வார்த்தையை நண்பன்.
“துஷ்டா” என்றான் சந்திரன்; பேச்சிலே காரமில்லை – முகத்திலே கோபக் குறியில்லை – குழைவு கூட இலேசாக இருந்தது.
“சந்திரா! நீ இவ்வளவு விரைவிலே மனதைப் பறி கொடுத்து விடக்கூடியவனென்று நான் எண்ணியதே இல்லை, உண்மையைக் கூறுகிறேன். என் நண்பனாகிய நீ, ஏக்கம் கொண்டிருக்கிறாயே என்று எண்ணும் போது உன்னிடம் இரக்கம் வருகிறது. என்றபோதிலும், பொதுவாக எண்ணும் போது, குருவை நினைக்கும்போது, உன் பருவத்தைப் பார்க்கும் போது, உன் செயல், எனக்குப் பிரமாதமான கோபத்தை மூட்டுகிறது” என்றான் அந்த நண்பன். தவழும் புன்னகை மறையவில்லை… சந்திரன் நண்பனின் வார்த்தையைத் திருத்தினான்! ‘சிந்தனை’ – ‘செயல் அல்ல’ என்றான்.
“இந்த விதண்டாவாதம் கிடக்கட்டும் சந்திரா! குரு பத்தினியை…”
“அவளுடைய கணவர் என் குரு – ஆமாம் – அந்தத் தொடர்பு துளியும் கெடவில்லை.”
“படித்த பாடங்களின்படி நட. உபநிஷத் காட்டும் உண்மையின்படி நட. நான் அதிக காலம் சகித்துக் கொண்டிருக்க மாட்டேன். ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டுள்ள உன்னை, நான் வேறு வேதனைக்குள்ளாக்குகிறேன் என்று வருத்தப்படாதே, படுகுழியில் விழுமுன்னம் உன்னை எச்சரிக்கிறேன். துரோகச் சிந்தனையை விடு. முடியாவிட்டால் இங்கு படிப்பதையாவது நிறுத்திக் கொண்டு வேறு இடம் சென்றுவிடு.”
“எங்கும் அவள் இருக்கிறாள்!”
“சந்திரா! ஏது வேதத்தை இந்த விகார காரியத்துக்கும் பயன்படுத்தப் பார்க்கிறாய்.”
“சொல் விளக்கம் வேண்டாமப்பா. நிலைமை விளக்கம் வேண்டும். பச்சிலையைப் பறித்துத் தரும்போது, தாரா என்ன…”
“அவளும் பித்துப்பிடித்தவளாகத்தான் இருக்கிறாள்.”
“ஆஹா! நண்பா, இந்த ஒரு வாசகத்துக்கு நான் என் ஆயுள் உள்ளளவும் உனக்குச் சேவை செய்யலாம் போலிருக்கிறது. என்னைப் பித்தனாக்கியவள், தானும் அதே நிலையில் இருக்கிறாளா! எங்கே தாரா இப்போது? எங்கே என் அழகுத் தெய்வம்?”
“இதோ வந்துவிட்டேன்.” ஆம்! ராதாவின் குரல்! ஆனால் சந்திரனின் ஏக்கக் குரலுக்கு அளித்த பதில் அல்ல. குருவின் கூப்பிடும் சத்தம் கேட்டு, தாரா, பதிலுரைத்தாள் அதுபோல. அதுவரை, அவள் அந்தப் பர்ணசாலையில் பக்கத்திலே இருந்த மலர்ப் புதரிலே மறைந்துகொண்டுதான் இருந்தாள். காதல் நோய் கொண்ட கட்டழகனின் பேச்சைக் காதாரக் கேட்டாள். கட்டளையிடும் உரிமை பெற்ற கணவனின் குரலைக் கேட்டு, ஓடோ டிச் சென்றாள். அவள் உள்ளமோ நர்த்தனமாடிற்று. இவ்வளவையும் விளக்க, பேச்சு, பாட்டு ஒன்றும் கிடையாது. தாரா – அதாவது என் ராதா இங்குமங்கும் ஓடினாள் – இதோ! வந்தேன்! என்று கூவியபடி – புள்ளிமான்போல. நூற்றுக் கணக்கிலே நாங்கள் இருந்தோம் நாடகத்தைக் கண்டு களித்தபடி. ராதாவின் பார்வை, யார் மீதேனும் வீழ்ந்ததோ! இல்லை! எங்கோ சஞ்சரித்தன! என்னென்னவோ பேசின! மூன்றாவது காட்சி ஆரம்பமாயிற்று. தாராவும், குருவும் குடும்ப வாழ்க்கையை எப்படி நடத்தி வந்தனர் என்பதை விளக்கும் காட்சி. அதையும் என் தாரா, அருமையான முறையிலேதான் அமைத்திருந்தாள். இருவருக்குள் நடைபெறும் சம்பாஷணைகளின் மூலம், இருவரும் வேறு வேறு உலகிலே, சஞ்சரித்து வருவதை விளக்கினாள். குரு தன் எதிரே ஒரு குவியல் ஓலைச் சுவடிகளை வைத்துக் கொண்டிருந்தார் – ஒன்றைப் பிரித்துப் படிப்பதும், அதைப் படித்துக் கொண்டிருக்கும்போதே ஏதோ புது யோசனை கொண்டவராய், வேறோர் சுவடியை அவசரமாக எடுத்துப் பிரித்துப் படிப்பதும், விளக்கம் பெற்று மகிழ்வதுமாக வீற்றிருந்தார் – அவருக்கு அருகே, பலவிதமான மலர்களைத் தன் எதிரே குவியலாக வைத்துக் கொண்டு தாரா பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள் – இடையிடையே நல்ல மல்லி, அழகிய இருவாட்சி, இவைகளை மாலையுடன் இணைக்காமல் தனியாக எடுத்து வைத்து அழகு பார்ப்பதுமாக, அவள் காணப்பட்டாள். ஒவ்வோர் சமயம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் ஏதேனும் பேசவேண்டும் என்று எண்ணி, என்ன செய்வது என்று தெரியாததால் திகைத்துக் கொண்டிருந்த காட்சி சிறந்த நகைச்சுவைப் பகுதியாக இருந்தது. இந்தத் திகைப்பைப் போக்க, குரு மௌனப் படிப்பு முறையை மாற்றி, உரத்த குரலிலே படிக்கலானார், சுலோகத்தை.
“வசந்தருது மனமோகனம் அளிக்குமோ? என்று கேட்ட ஸ்ரீ மகாலட்சுமியை, ஸ்ரீமந் நாராயணமூர்த்தி பார்த்து, ஹே! பிரிய நாயகி! மனதுக்கு இசைந்தவளும், மனோஹரியும், மாசற்ற கற்பினளுமான மனைவியுடன் கூடி வாழும் பேறு பெற்றவனுக்கு வசந்தருது, ஆண்டுக்கொருமுறை அல்ல, ஆண்டு முழுவதும், ஆயுள் முழுவதும் உண்டு என்று பதில் கூற, லட்சுமி தேவியார் தன் பர்த்தாவின் பாகு மொழியை உண்டு மயங்கினவளாய், அவருடைய மார்பிலே சாய்ந்து கொண்டாள்.”
குரு, சுலோகத்தை ஒரு முறைக்கு இருமுறை, பதம் பதமாகப் பிரித்து, படிக்கும்போதே பொருள் விளங்கக்கூடிய விதமாகப் படித்துக் காட்டி, தாரா தன் கருத்தைக் கூறுவாள், அதை ஒட்டிப் பேசத் தொடங்கலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். தாராவோ, குருவின் கருத்தை அறிந்து கொண்டும், கவனியாதவள் போலிருந்துவிட்டாள். ஆனால் சுலோகத்தின் பொருளைக் கண்டு ரசித்தாள் என்பது அவளுடைய முகபாவத்தில் அழகாக விளங்கிற்று. கொஞ்ச நேர மௌனத்துக்குப் பிறகு குரு தேவர், தம் கருத்துக்கேற்ற வழிப்படி தாரா வராமற் போய்விட்டாலும், அவளுடைய கருத்தின் வழிப்படி சென்றாவது அவளிடம் பேசுவோம் என்று எண்ணியவராய்,
“தாரா, முல்லைக்கும் இருவாச்சிக்கும், பார்த்த உடனே வித்தியாசம் தெரிந்துவிடுகின்றதோ?” என்று ஒரு கேள்வி கேட்டார். தாரா அதற்குப் பதில் கூறாமல், முல்லையையும் இருவாட்சியையும் மாறி மாறிப் பார்த்தாள். குருவுக்குச் சலிப்பும் கோபமும் வந்துவிட்டது.
“தாரே! உனக்கு மலர்களிடம் பிரியம் அதிகம் இருக்கலாம் – இருக்க வேண்டியதுதான். மங்கையும் மலரும் இணைபிரியாத தோழர்கள். ஆயினும், நான், எப்போதேனும், மனச்சந்துஷ்டிக்காக உன்னிடம் பேசத் துடித்தாலும் அப்போதும், நீ என்னை உதாசீனம் செய்கிறாயே இது சரியாகுமா?” என்று கேட்டார். அவருடைய பேச்சு, கோபத்வனியில் ஆரம்பமாகி, சோகரசத்தில் போய் முடிந்தது. தாரா இதற்கு மட்டும் பதிலுரைத்தாள்.
“நான் பேசுவது தங்கள் மனச் சஞ்சலத்தைப் போக்கிச் சந்துஷ்டியைத் தரும் என்று கூறுகிறீரே, இது எனக்கு நிரம்பச் சந்தோஷம் அளிக்கிறது” என்றாள்.
“அது தெரிகிறது… வியாக்யானம். என் மனச் சந்துஷ்டிக்காக வேணும், ஏன் என்னிடம் பேசக்கூடாது” என்று கோபமாகவே கேட்டார். தாரா பதிலுக்குக் கோபித்துக் கொள்ளவில்லை. மலர்க்கூடையை அவரிடம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, “அவசரமாக வெளியே சென்று வரவேண்டும் – தயவு செய்து பூத்தொடுத்துக் கொண்டு இருங்கள்” என்று கூறிவிட்டு வெளியே போகத் தயாரானாள். அவளிடம் கோபம் கொண்டிருந்த குருதேவர், தாராவின் ஒரே ஒரு புன்னகையால் திருப்தி அடைந்துவிட்டார். திருப்தி அடைந்தது மட்டுமல்ல, தேன் உண்ட வண்டென மயங்கினார். குழந்தைபோல பேசலானார். “தாரே! மலர்மாலை தொடுத்துத் தருகிறேன், நல்ல முறையிலே. ஆனால், நீ எங்கே போகிறாய், இவ்வளவு அவசரமாக, இந்த நேரத்தில்?” என்று கேட்டார்.
“ஒரு அருமையான பச்சிலை இருக்கிறது பக்கத்துத் தோட்டத்து வேலியில். அதைச் சாறு பிழிந்து கொடுத்தால் உடனே, சந்திரனின் காய்ச்சல் நின்றுவிடும்” என்றாள். கூறிக் கொண்டே வெளியே சென்றாள்.
பார்க்கப் பார்க்க, தாரா நாடகம் புதுமை நிரம்பியதாகக் காணப்பட்டதுடன், ராதாவின் மனப்போக்கைச் சித்தரித்துக் காட்டுவதற்காகவே தீட்டப்பட்டது என்ற எண்ணமும் ஏற்படச் செய்தது. ஒவ்வொரு காட்சி மூலமும் ராதா, தாராவின் மனப் போராட்டத்தையும், சந்திரனின் காதல் வேகத்தால் தன்னைத்தானே இழந்துவிடும் நிலைக்குச் செல்வதைத் தடுக்கவேண்டும் என்று எண்ணுவதையும் சித்தரிப்பதாகவே இருந்தது.
ஒரு காட்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது. தாராவும் அவளுடைய தோழியும் பேசிய காட்சி அது.
“ஆண்கள் மகாவீரர்கள் என்கிறார்களே, அது பொய்யடி, பொய்!” என்று தாரா கூறினாள் சிரித்துக் கொண்டே.
“அற்புதமான கண்டுபிடிப்போ! வீராதி வீரன் என்று விருது பெற்றவரானாலும் வேல்விழி மாதரிடம் மண்டியிடுபவர்தான் ஆடவர் என்பது, யாரறியாதது? புதிதாகக் கண்டறிந்து கூறுகிறாயோ?” என்று கேட்டாள் தோழி.
“அதுமட்டும் அல்ல! காதலிக்கும் போது கூட, ஆடவர் கோழைத்தனத்தைக் கைவிடுவதில்லையடி. சந்திரன் என் மீது எவ்வளவு காதல் கொண்டிருக்கிறான்… அப்படிப்பட்டவன்… எவ்வளவு பயப்படுகிறான் தெரியுமோ?” என்று கேட்டாள்.
“ஓஹோ, அதைத்தான் நீ கோழைத்தனம் என்று கூறுகிறாயோ! பாபகாரியம் புரிய அஞ்சுபவன், கோழையா! என்ன தாரா! வரவர உன் புத்தி இப்படிக் கோணலாகிவிட்டது” என்று கண்டிக்கும் முறையிலே கூறினாள் தோழி. அப்போது, ராதா (தாரா வேடத்தில்) ஒரு பார்வை பார்த்தாள், தோழியை. ஆஹா! அந்தப் பார்வை என்னென்ன பேசிற்று தெரியுமோ! ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் கூடப் பேசலாம், அந்த ஒரு பார்வையின் பொருளைப்பற்றி. அப்படிப்பட்ட அபூர்வமான பார்வை அது; தோழி, பயந்தே போனாள். “தாரா! விபரீதமாக எதுவும் செய்துவிடாதே” என்று எச்சரித்தாள் தோழி. நடந்த விபரீதமான காரியந்தான் தெரிந்தாயிற்றே. அதற்குத் தாராவின் தனிமொழி மூலம் தரப்பட்ட விளக்கம் தான் புதுமையானது.
தாரா, உலவுகிறாள் – விபரீதம் நேரிட்டான பிறகு – தனியாக.
அவள் முகத்திலே புன்னகை தவழ்ந்தபடிதான் இருக்கிறது – ஆனால், அன்றலர்ந்த மலருமல்ல, வாடிய மலருமல்ல, இரண்டுக்கும் இடையே உள்ள நிலையில்தான் – மலர்போல் முகம்.
வழியிலே, இருபுறமும் இருந்த செடிகளின் தளிர்களைப் பறிப்பதும் வீசுவதுமாக, எழுத்தற்ற ஆனால் இனிமையுள்ள இசை ஒலியுடன் செல்கிறாள்.
ஒரு புன்னை மரத்தடியில் உட்காருகிறாள். பிறகு பேசுகிறாள்.
“சந்திரா! பழி முழுவதையும் நான் ஏற்றுக்கொண்டேன் அல்லவா! நானாக –
மனமுவந்து – துணிந்து – விளைவுகளைக் கூடக் கவனியாமல், ஏன்? அந்த இரகசியத்தை உலகம் எங்கே அறியப்போகிறது?”
“நீ என் மீது கொண்டிருந்த காதல், உன்னைச் சில நாட்களில் தீய்த்துவிட்டே இருக்கும். பாவம்! நீயோ, ஒரு கோழை! கனி, தானாகக் கரத்தில் வந்து விழட்டும் என்று காத்திருக்கும் முடவன் போல இருந்தாய்.”
“சந்திரன் என்ன செய்தான் தெரியுமோ! ‘குரு பத்தினியை…’ தேவலோகம் பேசுமே என்று அஞ்சினாய்.”
“அந்த அச்சம் இருந்ததே தவிர, குரு பத்தினியிடம் காதல் கொள்ளலாமா என்ற எண்ணம் மட்டும் பிறக்கவில்லை.”
“ஒரு நாள், நான் தீர்மானித்தேன், ‘ஓஹோ, சந்திரன் பழி நமக்கும், பலன் தனக்கும் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறான். அவனுடைய கோழைத்தனம், ஆடவருக்குள்ள சுபாவத்தின் சாயல்தான்; சரி! நானே பழியை ஏற்றுக் கொள்கிறேன். என் கெட்ட நடத்தையாலேயே சந்திரன் கெட்டுவிட்டான் என்று எண்ணக்கூடிய விதமாக, நானே நடந்து கொள்வேன்’ என்று தீர்மானித்தேன். சந்திரா! நீ என்னைக் காதலித்தாய். ஆனால் மாசற்றவன் என்று மற்றவர்கள் நினைக்கும்படி, ‘மறைவு’ வேண்டுமென்று எண்ணினாய், நான் பழியை ஏற்றுக் கொண்டேன். எனக்கு, அது ஒரு பாரமாகத் தோன்றவில்லை. என் வாழ்வு அவ்வளவு ருசியற்றுப் போயிருந்தது. காதலின்பத்துக்காக ஏங்கிக் கிடந்தேன் – கிடைத்த காதலன் கோழையாக இருக்கக் கண்டேன் – எனவே, நான் துணிந்து பழியை ஏற்றுக் கொண்டேன்.”
இந்தத் தனிமொழியைத் தாரா கூறிய போது, நாடகம் கண்டவர்கள், மகிழவில்லை – ஆமோதிக்கும் துணிவு யாருக்குத்தான் வரும்.
“இவளும் ஒரு பெண்தானா! அதிலும் தேவலோகத்தில்! – என்றுதான் உலகம் என்னைப் பற்றிக் கூறும்” என்று முடித்தாள் தனிமொழியை. இதற்குக் கொட்டகை அதிர்ந்தது, கரகோஷத்தில் நாடகம் முடிந்தது.
“சுயமரியாதைப் பிரசாரமப்பா இது” – ஒரு பெரியவர் பேசினார்.
“தேவலோக ஆபாச விளக்கம்” – ஒரு பண்டிதர் சொன்னார்.
“இப்படிப்பட்ட இடமா இந்தத் தேவலோகம்?” – ஒரு மூதாட்டி பேசினாள்.
“ஆண்கள், பழிபாவத்தை எப்படியாவது பெண்கள் மீது சுமத்தி விடுகிறார்கள்” – ஒரு கல்லூரி மாணவி கூறினாள்.
ராதாவை, நாங்கள் ஒரு அரை மணி நேரத்துக்குப் பிறகு சந்தித்தோம்.
“எனக்கு எண்ணம் சரியாக உருவாகவில்லை. ஆகவேதான் நாடகம் சற்றுத் தெளிவற்றுப் போயிற்று. என் கருத்து ஆடவர்கள் தூண்டுபவர்கள் – பெண்கள் அதற்குப் பலியாகி விடுகிறவர்கள். உண்மைக் குற்றவாளி, ஆடவர்; பலிபீடத்தில் சாய்பவர்கள், பெண்கள் – ஆடவர்களின் குற்றங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன, பெண்களின் தவறு எவரும் கண்டிக்கக்கூடிய நிலையில் மன்றத்துக்கு வந்து விடுகிறது என்பதை விளக்குவது தான்” என்றாள்.
ராதா, நாடகத்தின் மூலமும், அதன் விளக்கமாகக் கூறிய மொழியின் மூலமும், தன் தாயார் போன்றவர்கள் பழிக்கப்படுகிறார்களேயொழிய, அவர்களை அந்தக் கதிக்கு ஆளாக்கிய காதகர்கள், மதிப்புடன் உலவுகிறார்கள் என்ற உண்மையை இடித்துரைக்கிறாள் என்றே எனக்குப்பட்டது.
விடைபெற்றுக்கொண்டு வீடு திரும்பினோம். சுருக்கமாக, ஆனால் உறுதியுடன், நான் என் தீர்மானத்தை, என் நண்பனிடம் கூறினேன் – “நண்பா! நான் ராதாவைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறேன்” என்று.
அத்தியாயம்-21
“நீ இலட்சியவாதி என்பதை நான் அறிவேன்… ஆனால், இவ்வளவு தைரியம் உனக்கு ஏற்படும், இவ்வளவு விரைவிலே என்று நான் எண்ணினதில்லை. ராதாவை நீ மணம் செய்து கொள்வதானால் ஏற்படக்கூடிய இன்னல், இழிசொல் ஆகியவைகள் சாமான்யமாக இரா! சமூகமே உன்னைப் பகிஷ்கரிக்கக்கூடும்; தீர யோசித்து முடிவு செய்!” என்று என் நண்பன் கூறினான். உண்மைதான்! உலகம் என்னென்னவோ பேசும்! ஆனால் நாம் நமது மனத்திற்குச் சரி என்று பட்டதைச் செய்யும்போது, பயமும் கவலையும் ஏன் ஏற்பட வேண்டும்? என்று எண்ணினேன் – மேலும், தங்கையின் பொருட்டு என் நண்பன் தடை பல வரினும் எதிர்த்து நின்று எனக்குத் துணை புரிவானல்லவா என்ற தைரியம் வேறு எனக்கு! எனவே, “அச்சம் வேண்டாம். ராதாவுக்காக நான் எதையும் ஏற்கத் தயார்” என்றேன். “மகிழ்ச்சி – நண்பா! – மட்டற்ற மகிழ்ச்சி – என் இதயத்தைக் குத்திக் கொண்டிருந்த ‘முள்’ எடுபடும், உன் தீரச் செயலால்” என்று நாகசுந்தரம் மன எழுச்சியுடன் கூறினான்.
அவனிடம் அவ்வளவு தைரியமாகப் பேசிவிட்டேனல்லவா – தனியாக இருக்கும்போதும் திகில் ஏற்படத்தான் செய்தது. பர்மா நாயுடு ஒருவர் – அவருடைய மகள் இந்த ராதா – என்ற பொய்யைத்தான் கூறியாக வேண்டும். உண்மையைக் கூறுவது என்றால், கோட்டையூரார் குடும்ப இரகசியங்கள் அம்பலம் வரும். நண்பன் நாகசுந்தரத்துக்குத் தாங்கமுடியாத அவமானம் ஏற்படும்.
விபசாரியின் மகள் என்று தெரிந்திருந்தும், நான், ராதாவை என் குடும்ப விளக்காக்கிக் கொள்ளச் சம்மதிக்கும்போது – சூழ்நிலையால், ஒரு முதியவரின் பேராசையால், விபசாரப் படுகுழியில் தள்ளப்பட்ட அம்மையை – தன் “தாய்” என்று தைரியமாகக் கூறி, அதனால் ஏற்படும் இழிவையும் ஏசலையும், ஏன் என் நண்பன் தாங்கிக் கொள்ளக்கூடாது! – என்று நான் சில சமயம் யோசிப்பதுண்டு. ஆனால் நேரடியாக, நாகனைக் கேட்கத் தைரியம் வருவதில்லை.
தக்க சமயம் வந்ததும் திருமணம் நடத்திக்கொள்வது என்பதற்காக அல்ல நான் காத்துக் கொண்டிருந்தது. என் மனதிலே காதல் அரும்பு மலராகிவிட்டது – எனினும் ராதாவின் மனம் எப்படியோ, அதைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? அதற்காகவே காலம் கடத்தி வந்தேன். என் நண்பன், ஜாடைமாடையாகக் கூறிவிட்டிருப்பான் போலிருக்கு தன் தாயாருக்கு. அந்த அம்மை, என்னைத் தனி அன்புடன் உபசரிக்கத் தொடங்கினார்கள். பர்மா நாயுடுவும் எனக்குப் பழக்கமாகிவிட்டார். நெருங்கிப் பழகப் பழக, அவரும் சூழ்நிலையால் கெட்டுப் போனவர் என்பதைத் தெரிந்து கொண்டேன். சூது தெரியாதவர். வாழும் வகையறியாதவர். யாரையும் சுலபத்தில் நம்பிவிடுவார் – திடீரென்று விரோதம் பாராட்டுவார் – காரணமே இருக்காது.
ஒரு நாள் என் நண்பன் நாகசுந்தரம், “ஏன் ஏதாவது சிறு தொழிலோ, வியாபாரமோ செய்யக்கூடாது? குடும்பம் கொந்தளித்தபடியே இருக்கலாமா? நாலு பேர் பார்த்து மெச்சும்படியான நிலையில் இருக்கவேண்டாமா?” என்று புத்தி கூறினான் – வந்துவிட்டது கோபம், பர்மா நாயுடுவுக்கு. “தம்பி! ஏதோ நீ கொஞ்சம் பணம் கொடுத்து உதவி செய்கிற காரணத்தாலேயே என்ன பேசினாலும் கேட்டுக் கொள்வேன் என்று எண்ணிக் கொள்ளாதே. நான் மகா ரோஷக்காரன். மதியாதார் தலைவாசல் மிதிக்கமாட்டேன். என்னைக் கேவலம் உன் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் என்று எண்ணிவிட்டாய் – இதை நான் சகித்துக் கொள்ள மாட்டேன். பார்! இன்னும் இரண்டே மாதங்களில், பவுன் பவுனாகக் குவித்துக் காட்டுகிறேன். பணம் சேகரிக்கும் வித்தை எனக்கும் தெரியும்” என்று படபடவெனப் பேசிவிட்டார். என் நண்பன் மிகவும் வேதனைப் பட்டான். நான் தான் தக்க சமாதானம் கூறினேன்.
கோபத்தின் காரணமாக, என் நண்பனிடம், பர்மா நாயுடு, பிறகு பணமே கேட்பதை நிறுத்திக் கொண்டார் என்று எண்ணுகிறீர்களா? அதுதான் கிடையாது! நாலு நாட்களிலே கோபம் போய்விட்டது. “தம்பி! உன்னைத் தவிர வேறு யார் எனக்குக் குலதெய்வம்” என்று பேச ஆரம்பித்தார். என் நண்பன் மிகுந்த சிரமப்பட்டு பர்மா நாயுடுவை ‘வியாபாரி’யாக்கினான். அதிக இலாபம் வரக்கூடியது அல்ல என்ற போதிலும், ஏதோ கௌரவமாகக் குடும்பம் நடத்தப் போதுமானதாக இருந்தது.
ராதாவுக்கும் எனக்கும் காதல் எவ்வளவு வேகமாக வளர்ந்து வந்ததோ, அதைவிட வேகமாக நாகசுந்தரத்துக்கும் அவன் தகப்பனாருக்கும் மனபேதம் வளரலாயிற்று.
காசி யாத்திரைக்குப் பிறகு, கோட்டையூரார், பூச்சும் பஜனையும் அதிகமாக்கிக் கொண்டார். ஒவ்வொரு சனிக்கிழமையும், வீட்டிலே சத்கதா காலட்சேபம்! சிறு சிறு கோயில்களிலே எல்லாம், உற்சவங்கள்! கோட்டையூரார் பெரிய ‘பக்திமான்’ ஆகிவிட்டார் என்று பலரும் பேசிக் கொண்டனர்; புகழ்ந்தனர்.
நாகசுந்தரம், கோட்டையூராரின் கொடுஞ் செயலைத் தெரிந்து கொண்டதால், அவனுக்கு அவரிடம் இருந்து வந்த பயம், பாசம், மதிப்பு யாவும் பறந்துவிட்டன. அவருடன் சரியாகப் பேசுவதுமில்லை – பேச நேரிட்டாலும், கண்டிப்புக் குரலிலே தான்! அவர் திடுக்கிட்டுப் போனார், தன் மகனின் குணம் மாறிவிட்டது கண்டு. அவர் என்ன கண்டார், மகன், தந்தையின் ‘திருக்கலியாண’ குணத்தைத் தெரிந்து கொண்டதன் விளைவு இது என்று.
கோட்டையூரார் கணக்கேட்டைப் புரட்டிப் பார்த்து, “நாகா! இதென்ன 300 உன் பேரில் எழுதியிருக்கிறாயே?” என்று கேட்பார். “ஆமாம், என் செலவுக்கு எடுத்துக் கொண்டேன்” என்று தயக்கமின்றி நாகசுந்தரம் பதில் கூறுவான். கோபம், கோட்டையூராருக்கு. எனினும் அடக்கிக் கொண்டு, “என்னடா செலவு 300-க்கு? மோட்டார் சைக்கிள் வாங்கவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தாயே அதற்கா?” என்று விளக்கம் கேட்பார். “அதெல்லாம் இல்லை. என் சொந்தச் செலவுக்கு எடுத்துக் கொண்டேன்” என்று கூறுவான், நாகசுந்தரம். கோட்டையூரார் மிரள மிரள விழிப்பார்.
அதட்டிப் பார்த்தார். அவன் முறைத்திடலானான்.
புத்தி கூறிப் பார்த்தார், அவன் அலட்சியப்படுத்தினான்.
சலித்துக் கொண்டார், அவன் சட்டை செய்வதாக இல்லை.
“மகனா இவன்! என்னை உயிரோடு வேகவைக்கும் மகாபாதகன். என்ன பாபமெல்லாம் உருண்டு திரண்டு, இவன் உருவாகி வந்து என்னை வாட்டுகிறது” என்று கலக்கத்துடன் பேசலானார்.
ஏறக்குறைய 5000 ரூபாய்க்கு இருக்கும், நாகசுந்தரம், ‘சொந்த செலவு’க்கு என்று கணக்கு எழுதி எடுத்திருந்த தொகை.
“சொந்த செலவு! ஐந்து அல்ல! பத்து அல்ல! நூறு இருநூறு அல்ல – 5 ஆயிரம். இவருக்குச் சொந்தச் செலவு – கவர்னர் பிரபு!” என்று மனம் கொதித்துக் கூறுவார் கோட்டையூரார் – காதில் வாங்கிக் கொள்வதில்லை நாகசுந்தரம்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் – முடியாத நிலையில் கோட்டையூரார், என்னைக் கூப்பிட்டனுப்பி, தன் மகனைப் பற்றிக் கூறலானார்.
“போடா அப்பா. போய், அந்த சத்யசுந்தர், என்ன கூறி அழுகிறாரோ அதைக் கேட்டு, அவருக்குச் சாந்தியும் சாமதானமும் ஏற்படும்படி செய்துவிட்டு வா” என்று நாகசுந்தரம் கேலி செய்தான், நான் கோட்டையூராரைப் பார்க்கப் போவது தெரிந்து.
“தாகத்துக்குச் சாப்பிடுகிறாயா தம்பி! இளநீர்” என்ற அட்டவணையுடன் கோட்டையூரார் பேச்சைத் துவக்கினார். பைத்தியக்காரர்! அவர், உலகினர் கண்களுக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்த “இரகசியங்கள்” யாவும் எனக்கும் நாகனுக்கும் தெரியும் என்பதை அவர் என்ன கண்டார். கைலாயத்துக்கு அப்போதுதான் போய்ப் பார்த்துவிட்டு, பரமன் அருள் பெற்றுக் கொண்டு வந்த பரம பக்தர் போலப் பேசலானார். இடையிடையே ‘சங்கரனை’ச் சாட்சிக்கு இழுத்தபடி! “தம்பி! கோட்டையூரார் குடும்பம் என்றால் சகலரும் மதிக்கக் கூடிய நிலைமைக்கு, ஏதோ நான் பாடுபட்டுப் பகலென்றும் இரவென்றும் பாராமல் உழைத்துக் கொண்டு வந்தேன். என் சுபாவம் எல்லோருக்கும் தெரியும். கஞ்சன் அல்ல! ஆனால் கண்ணை மூடிக்கொண்டு பணத்தை வாரி இறைப்பவனுமல்ல! பழமொழி சொல்வார்களல்லவா, ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு, என்று – அதுபோல எதற்கும் ஒரு அளவு, காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறவன். கஷ்டப்பட்டு, யாரையும் மோசம் செய்யாமல் சேர்த்த சொத்து – அதனாலே தான் எனக்குக் கொஞ்சம் அக்கறை, சொத்து பாழாகக்கூடாது என்பதிலே. ஊருக்கு உபகாரியாக, இவ்வளவு காலம், மதிப்போடு வாழ்ந்துவிட்டேன். இப்போது வீட்டில் ஒரு காலும் சுடுகாட்டில் ஒரு காலும் வைத்துக்கொண்டு இருக்கிற சமயம். இந்தச் சமயத்திலே, நாகசுந்தரம், என்னை இம்சிக்கிறான். அவனுடைய பேச்சும் போக்கும் எனக்குத் தாங்க முடியாத வேதனையை உண்டாக்குகிறது. வாலிபப் பருவம் – பொறுப்பு தெரியாது. அதனால் கொஞ்சம் ஆடுகிறான் என்று நானாகச் சமாதானம் செய்து கொண்டேன் – முதலில். என்னால் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு விஷயம் வளர்ந்துவிட்டது. தம்பி! நீயும் ஏதோ நாலு காசு உள்ள இடத்திலேதான் வளருகிறாய். நீயே சொல்லு, சொந்தச் செலவுக்கென்று ஆறு மாதத்திலே ஐயாயிரம் எடுத்துக் கொள்ளலாமா? இந்த அக்ரமத்தை எப்படிச் சகித்துக் கொள்வது? யார் சகித்துக் கொள்ள முடியும்? உன்னைப் போன்ற நல்லவர்களோடு பழகியும், இவன் இப்படியா கெட்டுக் கீரை வழியாவது? ஐயாயிரம் ஏனடா எடுத்தே என்று கேட்டால், ஏதாவது அடக்கமான பதில் கூறவேண்டுமே! கிடையாது! ஆமாம் – என் சொந்தச் செலவு! என்று கூறுகிறான். ஊரிலே, இது வரையிலே எவனும் என்னிடம் பேசினதில்லை இதுபோல! இவன் பேசுகிறான்! ஐயாயிரம் சொந்தச் செலவாம் – கேட்டாயடா தம்பி! சொந்தச் செலவு ஐயாயிரம் – வயிறு எரியாதா எனக்கு. இதைவிட நான் தூங்குகிற போது என் தலைமேலே கல்லைப் போட்டுச் சாகடித்து விடலாமே. போக்கிரி சாக்கிரி – குடியன் வெறியனெல்லாம் கூட, கோட்டையூராரிடம் வாலாட்டக் கூடாது, ஒட்ட நறுக்கி விடுவார் என்று பயந்து பேசும் – இந்தப் பய, ஒரு காசுக்குப் பயன் கிடையாது. இவனாலே, ஒழுங்கா கையேடு குறிக்கத் தெரியாது, பேரேடு பதியத் தெரியாது, எந்த மாதம் விதை போடணும், எந்த மாதம் அறுவடைக்குப் போகவேணும் என்கிறது தெரியாது. இப்படிப்பட்ட பயலுக்கு, ஐயாயிரம் தேவைப்படுதாம் தம்பி! சொந்தச் செலவுக்கு!! விவரம் கேட்டா, “ரௌடி” போல முறைத்துப் பார்க்கிறான் என்னை! கோபத்தாலே, எதாவது இரண்டு வார்த்தை நான் கடுமையாகச் சொல்லி விட்டால், என்னை அடித்துவிடுவான் போலிருக்கு! இவ்வளவு கெட்டுப் போயிருக்கிறான்! நான் இனியும் பொறுத்துக் கொண்டிருக்கப் போவதில்லை. கடைசியாக உன்னிடம் சொல்லி விட்டேன். நீ அவனுக்கு தகுந்த புத்திமதி சொல்லு – திருந்திக் கொள்ளப் போகிறானா இல்லையா என்று தீர்மானமாகக் கேட்டுவிடு பிறகு நான் என்னாலானதைப் பார்த்துக் கொள்கிறேன் – அவனும் அவனுடைய கைவரிசையைக் காட்டிப் பார்க்கட்டும். கோட்டையூராரோடு மோதிக் கொண்டு நாசமாகிப் போனவர்கள் பல பேர்! இவன், பொடிப்பய – இவனும் வேண்டுமானால் பார்க்கட்டும். இவ்வளவுதான் நான் சொல்லக் கூடியது; நீ, புத்தியுள்ளவன் – பொறுப்பு அறிந்தவன் – உன்னாலேதான் அவனைத் திருத்த முடியும்” என்று கோட்டையூரார் கூறி, “தம்பி! தாகத்துக்கு ஏதேனும் வேண்டுமா?” என்ற முடிவுரையுடன், தமது பேச்சை முடித்துக் கொண்டார்.
கோட்டையூராரின் கோபத்தைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை – யாருக்கும் ஏற்படத்தானே செய்யும் தன் மகன், பணத்தைப் பாழாக்குவது தெரிந்தால். கொடுமை பல செய்து, அட்டூழியங்கள் அநேகம் செய்து, கட்டினவளைத் துரோகம் செய்து, பராரியாக்கி, விபசாரியாகும்படி துரத்திய ஆசாமி, எவ்வளவு யோக்யர் போல, கண்ணியவான் போலப் பேசுகிறார் – எப்படி முடிகிறது இப்படிப் பகல் வேஷமிட என்பதை எண்ணித்தான் ஆச்சரியப்பட்டேன்.
“போடா, முட்டாளே! மளமளவென்று உண்மையை எடுத்து வீசி, வாயை அடக்காமல், அவர் கூறிக்கொண்டிருந்த கட்டுக் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு வருகிறாயே!” என்று நாகசுந்தரம் என்மீது கோபித்துக் கொண்டான், நான் தூது போய்வந்த விவரம் கூறினதும். கோட்டையூரார் என்னிடம் முறையிட்டும் பயனில்லை என்பதைக் கண்டுகொண்டான பிறகு, சில நாட்கள் நேரடியாகவே, நாகசுந்தரத்தைத் தாறுமாறாகத் ‘திட்டி’ப் பார்த்தார் – அதிலும் பலன் ஏற்படவில்லை. பிறகு, கடைசி பாணத்தைப் பிரயோகித்தார் – வக்கீல் விருத்தாசல ஐயர் அந்தப் பாணத்தைத் தயாரித்துக் கொடுத்தார். அது இது:
நோட்டீஸ்
இதனால், சகலருக்கும் தெரிவிப்பது யாதெனில், என் மகன் நாகசுந்தரம், சிலருடைய துர்ப்போதனையால், குடி, கூத்தி, சூதாட்டம் போன்ற கெட்ட காரியங்களில் ஈடுபட்டு, சொத்தைப் பாழாக்குவதால், அவனை நான், குடும்பத்திலிருந்து வெளியேற்றிவிட்டேன். அவனிடம் ‘விடுதலை’ப் பத்திரமும், எழுதி வாங்கியாகி விட்டது. அவனுக்கும், என் குடும்பச் சொத்துக்கும் இனி ஒரு சம்பந்தமும் கிடையாது. இதை அறியாது, யாராவது அவனுக்குக் கடன் கொடுத்தால், அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
கோட்டையூர் – தர்மலிங்க முதலியார்.
இந்த ‘நோட்டீஸ்’ தயாரித்து என்னிடம் கொடுத்தனுப்பினார் கோட்டையூரார். இது அடுத்த வெள்ளிக்கிழமை எல்லா பத்திரிகைகளிலும் வெளியிடப் போகிறேன் – கடைசி முறையாக நீ கூறியும், திருந்தப் போகிறானா, அல்லது ஊர் சிரிக்க வைக்கட்டுமா என்று கேட்டுச் சொல்லிவிடு – என்றெல்லாம் ‘சேதியும்’ சொல்லி அனுப்பினார். நாகசுந்தரத்தின் நற்பெயருக்கு இந்த ‘நோட்டீஸ்’ எவ்வளவு கேவலத்தை உண்டாக்கும் என்பதை எண்ணி நான் பதைத்துப் போனேன் – நாகசுந்தரத்திடம் இதைக் கூறினேன் – அவன் விழுந்து விழுந்து சிரித்தான் – சிரித்துவிட்டு, ஒரு காகிதத்தில், ஏதோ எழுதி என்னிடம் கொடுத்துவிட்டு, “சொல்லு அவரிடம், வக்கீல் நோட்டீஸ் வெளிவந்த மறுதினம் இந்த விளம்பரமும் வெளிவரும் என்று” எனக்குக் கூறினான். தந்த விளம்பரம் இது:
ஒரே ஸ்பெஷல் நாடகம்
தமக்கையை மணம் செய்துகொண்டு, சொத்துக்காக ஆசைப்பட்டு, தங்கையை மணம் செய்துகொள்ள எண்ணி மனைவியைச் சித்திரவதை செய்த மகானுபாவர் யார்?
*உயிரோடு இருப்பவரைச் செத்ததாகக் கதை கட்டிய கண்ணியன் யார்?
*பிச்சைக்கு வந்த கிழவி பிணமான மர்மம் என்ன?
*பேய்பிடித்ததாகப் பொய் சொன்ன பேயன் யார்?
*முதலிய அதி அற்புத மர்மங்களை விளக்கிடும்
“கோட்டையூர்க் கொலைகாரன்”
என்ற அற்புதமான நாடகத்தைச் சீர்திருத்த நாடக சபையார் விரைவில் நடத்திக் காட்டுவார்கள்.
நாகசுந்தரம்,
காண்ட்ராக்டர்.
என் நண்பனின் சாமர்த்தியம் தக்க பலன் தந்தது. கோட்டையூரார், இடிகேட்ட நாகமானார், இந்தக் காகிதக் கணையை நான் வீசினதும். கண்களிலே மிரட்சி – வாய் குளறலாயிற்று – உடல் நடுங்கிற்று.
“ஐயாயிரம் – கூத்திக்கும் குடிக்கும் போகவில்லை – தங்களால் சித்திரவதை செய்யப்பட்ட ரங்கம்மாளின் குடும்பத்துக்குத்தான் போயிருக்கிறது” என்று விளக்கலானேன்.
“ரங்கம்! ரங்கம், இங்கா இருக்கிறாள்? என் மகனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதா – ஐயையோ!” என்று அலறினார் – படுத்தார் – அவருக்கு நெடுநாட்களாக இருந்து வந்த பச்சைவாத நோய் தாக்கிற்று – கை கால் வரவில்லை – சரியாகப் பேச முடியவில்லையே தவிர, அவர் மனதிலே, என்னென்ன எண்ணங்கள் தோன்றின என்பதை – அவர் பொழிந்த கண்ணீர் காட்டிற்று.
நாகசுந்தரம் கோட்டையூராருக்கு வந்துள்ள கொடிய வியாதியைப் போக்கப் பல மருத்துவர்களை ஏற்பாடு செய்தான் – பலன் இல்லை.
ரங்கம்மாளுக்குச் சகல விஷயமும் கூறப்பட்டது – வருந்தினார்கள்; ஒருமுறையாவது அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று கூறினார்கள் – நாகசுந்தரம் “வேண்டாம், அம்மா! உங்களைப் பார்த்தால், ஏற்படக்கூடிய மன அதிர்ச்சியாலே, அவர் இறந்துவிடக் கூடும்” என்று கூறித் தடுத்தான். ‘தொடர் தொடராகத் துன்பங்களைத் தாங்கித் தாங்கிப் பழக்கமாகிவிட்டது நாகு! – இதையும் தாங்கிக் கொள்கிறேன் – வேறென்ன செய்ய முடியும்” என்று ரங்கம்மாள் சோகமாகக் கூறினார்கள்.
அத்தியாயம்-22
ராதாவின் ‘அன்பை’ நான் பெற்றுவிட்டேன் – இனி என் தகப்பனாரின் அனுமதிதான் தேவை. நாகசுந்தரம்தான் இதற்குத் ‘தூது’. சுலபமாகவும் வெற்றியாகிவிட்டது. நாங்கள் ‘நாயுடு’ குடும்பம்! எனவே, பர்மா நாயுடு ஒருவர் வந்திருக்கிறார். அவருடைய மகள் ராதாவைத்தான் கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறான் பரந்தாமன் என்று சொன்னதும், அப்பா சம்மதித்துவிட்டார். திருமண நாளும் குறிக்கப்பட்டுவிட்டது. கடைசியில், தன் மகள் சுகப்பட, கௌரவப்பட, வழி கிடைத்ததே என்ற மகிழ்ச்சி ரங்கம்மாளுக்கு! தன் தங்கைக்குத் தகுந்த ‘வரன்’ கிடைத்ததுபற்றி நாகசுந்தரத்துக்குக் களிப்பு! எனக்கும் ஆனந்தம்! ராதா? ஒரே குதூகல மயம்!
இவ்வளவையும் ‘பாழ்’ செய்யக் கிளம்பினான், பர்மா நாயுடு! கலியாணத்துக்கு இரண்டே நாட்கள் உள்ளன. நேரே என் வீடு வந்தான். மாடியில், என் தனி அறையில் நான் இருந்தேன்… புதிதாகத் தைத்து வந்த, கோட்டு ஒன்றை போட்டுக்கொண்டு, ‘கண்ணாடியில்’ பார்த்தபடி.
“மாப்பிள்ளையாகப் போகிறாயோ, மாப்பிள்ளை!” – என்று கோபமும் கேலியும் கலந்த குரலிலே கேட்டான் – கதவை, உட்புறம் தாளிட்டுக் கொண்டான்.
“இதோ பார்! எனக்கு இப்போதே ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்தாக வேண்டும். இல்லையானால் இந்தக் கலியாணம் நடைபெறாது – கண்டிப்பாக நடைபெறாது” என்று கூறினான்.
எனக்கு பிரமாதமான கோபம் வந்துவிட்டது.
“ஆயிரம் ரூபாயா? ஏன்? பெண்ணை விற்கிறாயா அந்த விலைக்கு?” என்று நான் கேட்டேன், கோபமாகத்தான்.
“பெண்ணை விற்பது அல்ல! அந்த “இளித்தவாய்ச் சிறுக்கி” யார் தடுத்தாலும், உன்னைத்தான் கலியாணம் செய்து கொள்வாள். நான் கேட்கும் ஆயிரம், ராதாவுக்காக அல்ல! இரகசியத்தை வெளியிடாமலிருக்க! உன் அப்பாவுக்கு, ரங்கத்தின் “பூர்வீகம் தெரியாதிருக்கவேண்டுமே, அதற்காக! தெரிந்தால், ஊர் சிரிக்குமே. ஒப்புக்கொள்வாரா, உன் தந்தை. அதற்காக, நான் வாயை மூடிக் கொண்டிருப்பதற்காக. ‘ஆயிரம்’ தரவேண்டும் என்றான். எனக்கு வந்த கோபத்தில், அப்படியே அந்தக் குடிகாரனின் கழுத்தைப் பிடித்து நெரித்து விடலாமா என்று கூடத் தோன்றிற்று. அடக்கிக் கொண்டு, சாந்தமாக ஆனால் உறுதியுடன் கூறினேன் – அரை ரூபாய்கூடக் கொடுக்க முடியாது என்று. “கலியாணத்தைத் தடுக்க, உன்னால் முடியாது. ஊரிலே ஒரு சமயம், உன் உளறல் கேட்டுச் சில பேர் இழிவாகப் பேசக்கூடும். அதுதான் நடைபெறுமேயொழிய, கலியாணம் நின்றுவிடாது” என்று நான் சொன்னேன்.
“கோட்டையூராரின் முதல் மனைவிதான் ரங்கம் என்பது தெரிந்தால் கூடவா, உன் அப்பா சம்மதிப்பார் இந்தக் கலியாணத்துக்கு?” என்று முடுக்குடன் கேட்டான் பர்மா நாயுடு.
“கலியாணம் எனக்கு! அப்பாவுக்கு அல்ல” – என்று நான் வெடுக்கெனப் பதில் சொன்னேன். பர்மா நாயுடு, ஆயிரத்தை ஐந்நூறு ஆக்கினான் – நான் முறைத்துப் பார்த்தேன், இருநூறுக்கு இறங்கினான் – எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “மிரட்டிப் பணம் வாங்குவது முடியாது, மாமா! ஆயிரம் கூடத் தந்துவிடுவேன், அன்புடன் கேட்டால்” என்று சொன்னேன் – இளித்தான். ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுத்தேன். அவைகளை வாங்கிக்கொண்ட பிறகு சொன்னான். “தம்பி! ஏன் தெரியுமா இது! கலியாணத்தின் போது, உன் அந்தஸ்துக்கு ஏற்றபடி நான் உனக்கு மரியாதை செய்ய வேண்டாமா? அதற்காகத்தான்!”
திருமணம் சிறப்பாக நடந்தேறியது.
பர்மா நாயுடு, நானூறு ரூபாயில் எனக்கு ‘ரிஸ்ட் வாட்ச்’ வாங்கித் தந்தார்!
கோட்டையூரார் ‘ராதாவுக்கு’ ஆசீர்வாதமும், அழகான வைர நெக்லெசும் பரிசளித்தார் – பகிரங்கமாக அல்ல.
எப்படியோ பெரியதோர் ‘பொய்’ சொல்லி, என் தகப்பனாரை ஏமாற்றியாகிவிட்டது.
அந்தப் பொய் சொல்லாவிட்டால், உண்மையைக் கூறி இருந்தால், ராதாவை நான் மனைவியாகக் கொள்வதை எப்படி என் அப்பா சம்மதிப்பார்!
நானும் நாகுவும், இதைப் பேசிக்கொண்டே சிரித்துக் கொண்டிருந்தோம், ஒரு நாள் மாலையில், என் மாடி அறையில்.
“அண்ணா! அப்பாவை ஏமாற்றிவிட்டதாகத்தானே அத்தான், ‘கித்தாப்பு’ப் பேசுகிறார்” என்றாள் ராதா.
“ஆமாம் – சாமர்த்தியமாக நான் காரியத்தைச் சாதித்துக் கொண்டேன் – அப்பா, கர்நாடகப் பேர்வழி – கலப்பு மணத்துக்குத் துளியும் சம்மதிக்கமாட்டார்” என்றேன்.
“தங்களைவிடத் தங்கள் அப்பாதான் சாமர்த்தியசாலி” என்றாள் ராதா.
“எப்படி?” என்று நாகு கேட்டான்.
“அண்ணா! இவர் அவருடைய மகன் அல்ல! இவர் மனித குலம் – செட்டியாரோ, நாயுடுவோ, முதலியாரோ, பிள்ளையோ, என்னவோ தெரியாது” என்றாள் ராதா.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
“விளங்காது, நானாக விளக்கினாலொழிய! எனக்கும் உங்கள் அப்பா சொன்னதால்தான் தெரிந்தது” என்றாள்.
என் உள்ளம் வெடித்துவிடும் போலிருந்தது.
“பரமா, பயப்படாதே! பழங்கதை – இனிக் கூறித்தான் தீரவேண்டும், அதை” என்று கூறிக்கொண்டே என் அப்பா, அறைக்குள் வந்தார்.
“எனக்குக் கல்யாணமாகிப் பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லை – கவலைப்பட்டேன் – பிறகு, ‘கர்ப்பம்’ தரித்தது – அதாவது கர்ப்பம் தரித்ததாக, என் மனைவி ‘பாசாங்கு’ செய்தாள். தாய் வீடு சென்றாள் – அங்கு ஒரு லேடி டாக்டரின் உதவியால், என்னை நம்பவும் வைத்தாள். லேடி டாக்டர் ஏழைகளுக்காக ஒரு பிரசவ விடுதி நடத்தி வந்தார்கள் – அங்கு பிறந்த ஒரு குழந்தையின் தாய் இறந்துவிடவே, அந்தக் குழந்தையை என் மனைவியுடையதாக்கினார்கள் – நீதான் அந்தக் குழந்தை!” என்றார்.
எனக்கு பேச்சு எழவில்லை.
“அந்தக் குழந்தைதான் தாங்கள். அந்த லேடி டாக்டர்தான், கல்லூரியில் நாடகமாடினேனே, ‘தாரா’ நாடகம், அப்போது தலைமை வகித்த திலகவதி” என்று ராதா விளக்கம் கூறினாள்.
“கொஞ்சம் துப்பறியும் வேலை செய்தேன் – திலகவதியும் துணை செய்தார்கள் – கண்டுபிடித்தேன் உண்மையை” என்று ராதா கூறினாள்.
“எனக்குத் தெரியாது, இந்த ரகசியம் ராதாவுக்குத் தெரியும் என்று. கலியாணத்துக்குப் பிறகு, ராதாவே என்னிடம் ஆதாரத்துடன் கேட்கவே, நான் உண்மையை ஒப்புக்கொண்டேன்” என்று மேலும் விளக்கம் கூறலானார் என் தகப்பனார்.
எனக்கு என்னென்னவோ எண்ணங்கள் தோன்றித் தோன்றிக் கலைந்தன.
நாகசுந்தரம், சாமர்த்தியமாகப் பேச்சை வேறு பக்கம் திரும்பினான்.
பல நாட்களாயின, என் மனம் ஒரு நிலையை அடைய.
“இப்போது கூறுங்கள், யார் சாமர்த்தியசாலி? உங்கள் அப்பாதானே! நீங்கள், நான் யார் என்பதை அவர் அறிந்து கொள்ளாதபடி சாமர்த்தியமாகக் காரியம் செய்தீர். அவரோ நீங்கள் யார் என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியாதபடி, இவ்வளவு வருஷங்களாக மறைத்து வைத்தார். அவர்தானே உண்மையில் சாமர்த்தியசாலி” என்று ராதா கேட்டாள்.
அவளை என் அருகே இழுத்து முத்தமிட்டுக் கூறவேண்டும் என்று எண்ணினேன் – அதை எப்படித்தான் என் ராதை தெரிந்து கொண்டாளோ தெரியவில்லை; தளிர்போலச் சாய்ந்தாள் என் மீது. அவளுடைய கன்னங்களில் – ஆமாம் – என் கரம்தான் முதலில் விளையாடிற்று – பிறகு அதரம்.
“கிளியே! மறைந்துபோயிருந்த ‘இரகசியத்தைக்’ கண்டறிந்த, நீதான் எங்களிருவரை விடச் சாமர்த்தியசாலி” என்றேன் நான்.
“சந்தேகமென்ன அதிலே! பொதுவாகவே, ஆண்களை விடப் பெண்கள்தான் சாமர்த்தியசாலிகள்” என்றாள் என் ராதா.
‘எப்படி?’ என்று நான் கேட்கவில்லை. நான் அவள் கூந்தலைக் கோதினேன் – களித்தேன்.
“எப்படி என்று கேட்கிறீர்களா கண்ணாளா! எவ்வளவு பெரிய சாமர்த்தியசாலியான ஆடவனாக இருப்பினும் அவனைப் பெற்றெடுத்தவள் ஒரு பெண்தானே! அவள் தானே சிறப்புக்குக் காரணம்” என்றாள்.
“இன்பமே” என்றேன் நான்.
கண்களை ஒரு விநாடி மூடித் திறந்தாள் – செந்தாமரை மலர்ந்தது. அருகே வந்தாள், வசந்தம் வீசிற்று!
புன்னகை புரிந்தாள், புது விருந்து உண்டேன்!
-முற்றும்-
– திராவிடநாடு, 1947.
– ரங்கோன் ராதா (நாவல்), முதற் பதிப்பு: 2002, பூம்புகார் பதிப்பகம், சென்னை.