நான், உமா மகேஸ்வரன், பஞ்சு மூவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறோம். பெங்களூரில் மல்லேஸ்வரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வாடகையை பகிர்ந்து கொள்கிறோம்.
நான் பெங்களூருக்குப் புதியவன். நான்கு மாதங்களுக்கு முன்புதான் வேலை கிடைத்து இவர்களுடன் ஒட்டிக் கொண்டவன். சீனியரான உமா மகேஸ்வரனுக்கு அடுத்த மாத இறுதியில் கல்யாணம். உமாதான் அட்வான்ஸ் கொடுத்து வீட்டைப் பிடித்தவன்
என்பதால், அவன் திருமணத்திற்கு பிறகு அவனின் தனிக் குடித்தனத்திற்காக நானும் பஞ்சுவும் வீட்டைக் காலி செய்வதாக ஏற்பாடு.
உமா நல்லவன். ஆனால் கோபக்காரன். நானும் பஞ்சுவும் கொஞ்சம் ஷோக் பேர்வழிகள். சனி, ஞாயிறுகளில் பிக்சர் பிக்சராக ட்ராட் பீர் குடிப்போம். எம்.ஜி ரோட், பிரிகேட் ரோட் சுற்றி சைட் அடித்துவிட்டு இரவு பத்து மணிக்கு மேல்தான் வீடு திரும்புவோம். இரண்டு முறை பஞ்சுவுடன் காபரேக்கு சென்ற அனுபவமும் உண்டு.
பஞ்சு பெண்கள் விஷயத்தில் ரொம்ப வீக். அவ்வப்போது எவளையாவது பிக்கப் செய்துகொண்டு, எங்காவது அவளுடன் உல்லாசமாக இருந்துவிட்டு வருவான். அம்மாதிரி சமயங்களில் என்னை கழட்டிவிட்டு தனியாகச் செல்வான். பிறகு என்னிடம் வந்து தன்னுடைய அனுபவங்களை ரசனையுடன் கோர்வையாகச் சொல்வான். எனக்கு பொறாமையாக இருக்கும்.
உமாவுக்கு பஞ்சுவின் நடவடிக்கைகள் கொஞ்சமும் பிடிக்காது. அவனை வீட்டில் சேர்த்துக் கொண்ட பிறகுதான், அவனின் கெட்ட காரியங்களைப் பற்றி தனக்கு தெரிய வந்ததாகவும், ஒரே அலுவலகத்தில் வேலை செய்வதால் அவனை காலி செய்யச் சொல்ல மனம் வரவில்லையென்றும், என்னை அவனிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்கும் படியும், நான் சேர்ந்த புதிதில் உமா என்னை எச்சரித்தான்.
அவனின் இந்த எச்சரிக்கைக்குப் பிறகுதான் எனக்கு பஞ்சுவிடம் ஒட்டுதல் அதிகமாகியது. இந்த நிமிடம் வரை நான் கற்புள்ளவன் என்றாலும், அதைச் சீக்கிரமாக தொலைத்து விடுவதில் மிகவும் தீவிரமாக இருக்கிறேன். ஒரு பெண்ணிடம் கிடைக்கப் போகும் புதுமையான அனுபவத் தேடலுக்காக என் மனசும், உடம்பும் அலை பாய்கிறது.
பதின்மூன்று வயதிலிருந்து, குறைந்த பட்சம் இருபத்தைந்து வயது வரையில் – ஒரு மாமாங்கம் – பெண் சுகத்திற்கு உடல் தயாராயிருந்தாலும், திருமணம் என்கிற ஒரு சமூக அங்கீகரிப்பிற்காக நான் காத்திருக்க வேண்டும் என்பது எனக்கு சுத்த அபத்தமாகப் படுகிறது.
எனவே நான் பஞ்சுவிடம், முதல் அனுபவத்திற்காக ஏங்கும் என் ஆசையைச் சொல்ல, அவனும் மிக இயல்பாக “ஆஹா அதனாலென்ன கண்ணா கூடிய சீக்கிரமே அரங்கேற்றி விடலாம்” என்றான். அந்த நல்ல நாளுக்காக நான் காத்திருக்கலானேன்.
அன்று சனிக்கிழமை. எங்களுக்கு அலுவலகம் அரை நாள். உமா அலுவலகத்தில் என்னிடம் வந்து, ‘தன் திருமண விஷயமாக மதுரைக்கு அன்று மதியமே கிளம்புவதாகவும், திங்கட்கிழமை காலையில் திரும்புவதாகவும்’ சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான்.
இதை நான் உடனே பஞ்சுவிடம் ஓடிப் போய்ச் சொல்ல, “அப்படியா, உமா மதுரைக்குப் போறான்னா இன்னிக்கு ராத்திரியே நம்ம வீட்டிலேயே உனக்கு அரங்கேற்றம் பண்ணிடலாம்” என்று பெரிதாகச் சிரித்தான்.
எனக்கும் ‘இதில்’ எதிர்பார்ப்பு அதிகமிருந்ததால் அன்றைய தினத்திற்கான எல்லா செலவுகளும் என்னுடையதுதான் என்று பஞ்சுவை உற்சாகப் படுத்தி அவனை தயார் படுத்தினேன். மாலை பப்புக்கு சென்று முட்ட முட்ட பீர் குடித்தோம். பின்பு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு பஞ்சு என்னைக் கூட்டிச் சென்றான். எவளாவது கிடைப்பாளா என்று நோட்டம் விட்டான். காத்திருந்தோம்.
“கவலையே படாத கண்ணா, பெங்களூரில் பெண்களுக்குப் பஞ்சமில்லை. இந்த மாதிரி பொது இடங்களில் பெண்களை பிக்கப் செய்வது இந்த ஊரில்தான் சகஜம்…நம்ம ஊர் மாதிரி டபுள் கிராஸிங், கலாட்டா என்ற பயம் கிடையாது.” என்னை உற்சாகப் படுத்தினான்.
அடுத்த ஐந்து நிமிடங்களில் எங்களுக்கு எதிர் பிளாட்பாரத்தில் ஒரு அழகிய பெண் ஒயிலாக வந்து நின்றாள். அடிக்கடி உதட்டை ஈரப் படுத்திக் கொள்வதும், கைக் கடியாரத்தை பார்த்துக் கொள்வதுமாக ஒருவித அமைதியின்மை அவளிடம் காணப்பட்டது. பஞ்சு என்னிடம் உற்சாகமாக, “வா நாம அவகிட்ட போய் நிக்கலாம்… பாத்தா யீல்டு மாதிரிதான் தெரியுது” என்றான்.
பஸ்ஸூக்காக காத்திருக்கும் பயணிகள் மாதிரி நாங்கள் இருவரும் அவளருகில் போய் நின்று கொண்டோம். மாலை நேரத்திய சுறுசுறுப்புடன் செங்கல் நிற டவுன் பஸ்கள் வருவதும் போவதுமாக இருந்தன.
மயில் கழுத்து நிறத்தில் புடவையும், அதே நிறத்தில் ஜாக்கெட்டும் அவளது சிகப்புத் தோலுக்கு எடுப்பாக அழகு சேர்த்தன. மெலிதான பவுடரில் ஒரு குடும்பப் பெண் மாதிரிதான் தோற்றமளித்தாள். எனக்கு கிளு கிளுப்பாக இருந்தது.
அவள், பக்கவாட்டில் நின்ற எங்களைப் பார்த்துவிட்டு, தன் கண்களில் ஒரு விதமான அங்கீகரிப்பைத் தெரிவித்தாள். எனக்கு அவளின் இந்தச் செய்கை ஆர்வத்தை அதிகரிக்க, பஞ்சு சற்று ¨தா¢யமுற்று அவளிடம் மிக நெருங்கி நின்று ஒரு புன்னகையுடன் அவளிடம் “எஷ்டு” என்று கேட்டான்.
அவள் சகஜமாக, “மனே எல்லி?” என்று கேட்டதும் பஞ்சு பேசிய கன்னடம் எனக்குப் புரியவில்லையாயினும் அவளுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது மட்டும் புரிந்தது.
மல்லேஸ்வரம் செல்வதற்காக மூவரும் ஒரு ஆட்டோவில் ஏறிக் கொண்டோம். நடுவில் அவள். வியர்வையுடன் கலந்த மெல்லிய பவுடர் வாசனை அவளிடமிருந்து வந்தது. அவளின் அருகாமை எனக்கு படபடப்பாக இருந்தது. நான் இயல்பாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக பஞ்சுவிடம், “பாத்தா யீல்டு மாதிரிதான் தெரியுதுன்னியே… அது என்ன யீல்டு?” என்றேன். அவன் சிரித்துக்கொண்டே “ஓ அதுவா அது ஆங்கில வார்த்தை..யீல்டுன்னா கிடைக்கும்னு அர்த்தம்… அதான் கிடைச்சுடுச்சே” என்றான்.
வீட்டையடைந்தோம். பஞ்சு என்னிடம், “நான் முதல்ல முடிச்சுக்கறேன், நீ ஹால்ல இரு” என்றான். பெட்ரூமுக்குள் அவளை அழைத்துச் சென்று கதவை ஒருக்களித்துச் சாத்தினான். அவள் ஏதோ கேட்க, பஞ்சு கதவைத் திறந்து என்னிடம், ” ஒரு ஐனூறு ரூபாய் எடு” என்றான். நான் என் பர்ஸிலிருந்து எடுத்துக் கொடுத்தேன். கதவு திறந்திருந்த நிலையிலேயே அவள் மிகவும் சுவாதீனமாக தன் ஜாக்கெட்டை அவிழ்த்தாள். நான் அதைப் பார்க்க நேரிட்டது. பஞ்சு மறுபடியும் கதவைச் சாத்தினான்.
என் முறைக்காக ஹாலில் காத்திருந்தேன். திறந்திருந்த ஜன்னல்கள் வழியே குளிர் காற்று வீசியது. வெளியே மின்னலடித்தது. திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. அரை மணி நேரம் சென்றிருக்கும். வீட்டின் கதவு பட படவென தட்டப்படும் சத்தம் கேட்டது.
இந்த நேரத்தில் எங்களின் ‘இந்த’ நிலையில் கதவைத் தட்டுவது யார்? பயத்துடன் கதவை கொஞ்சமாக திறந்து எட்டிப் பார்த்தால், வெளியே உமா மகேஸ்வரன் கையில் சூட்கேஸ¤டன் நின்றிருந்தான். அதிர்ந்து போனேன். இருப்பினும் இயல்பான குரலில், “என்ன உமா மதுரைக்குப் போகலையா?” என்று கேட்டு கதவை நன்றாகத் திறந்தேன்.உமா உள்ளே வந்தான். மழையில் நனைந்திருந்தான்.
“மேகதாத் அணை கட்டக்கூடாது என இன்றைக்கு தமிழ் நாட்டில் பந்த்தாம்… அதனால ஹோசூர் செக்போஸ்ட் வரையும்தான் பஸ் போகுமாம்… மதுரைக்கு போக முடியல, மெஜஸ்டிக்ல ஒரு சினிமா பார்த்துட்டு வெளிலயே டின்னர முடிச்சுட்டேன்”
நான் பயந்தபடியே பஞ்சுவும் அவளும் இருந்த அறையை நோக்கி உமா சூட்கேஸ¤டன் நெருங்க, நான் அவனை மறிக்க முயல, அதே நேரத்தில் பஞ்சுவும் கதவைத் திறக்க, உள்ளே அவள் பிறந்த மேனியுடன் நிற்க – நான்கு பேரும் ஒருவரையொருவர் பலவிதமான முக பாவங்களுடன் பார்த்துக் கொண்டோம்.
விவரிக்க முடியாத அசிங்கமான சூழ் நிலை அது.
உள்ளிருந்தவள் நடப்பவை எதுவும் புரியாத நிலையில், தொழில் ரீதியாக என்னையும் உமாவையும் மையமாகப் பார்த்து விவஸ்தைகெட்டத்தனமாக, “பேக பன்றி” என்றாள்.
பஞ்சு ஈனமான குரலில் அவளிடம், “நீனு இல்லிந்த முதலு ஹோகிபிடு” என்றவுடன், அவள் மிகவும் இயல்பாக தன் பாவாடை, புடவை, ஜாக்கெட்டை தேட ஆரம்பித்தாள்.
பஞ்சு ஹாலில் கலங்கி நின்றிருக்க, உமா என்னை கிச்சனுக்கு தள்ளிக் கொண்டு போனான்.
“பஞ்சுகிட்ட அவள முதல்ல வெளில அனுப்பி கதவைச் சாத்தச் சொல்லுங்க, யாராவது பார்த்தா எனக்குத்தான் அசிங்கம்” பஞ்சுவுக்கு கேட்கும்படி உரத்துச் சொன்னான்.
உமா என்னிடம் பேசிய விதத்திலிருந்து அவன் என்னை சந்தேகப் படவில்லை, பஞ்சுவிடம்தான் கடுப்பாக இருக்கிறான் என்பதை சட்டென புரிந்துகொண்ட நான் பரமயோக்கியன் மாதிரி, “சரி உமா” என்று ஹாலுக்கு வந்தேன்.
பஞ்சு அவளை உடனே அனுப்புவதில் குறியாக இருந்தாலும், வெளியே பெய்து கொண்டிருந்த பெரிய மழையினால் அவள் தயங்க, தன்னுடைய குடையை எடுத்து அவளிடம் கொடுத்து அவசரமாக வெளியேறச் செய்து கதவைச் சாத்தினான்.
உமா ஹாலுக்கு வந்து பஞ்சுவை எரித்து விடுவதைப்போல பார்த்து அனலான குரலில், “ஏண்டா உனக்கு இதெல்லாம் அசிங்கமா படலயா, இதுக்கெல்லாம் என் வீடுதானா உனக்கு கிடச்சுது… நாளக்கி இந்த வீட்ல நான் குடித்தனம் பண்ண வேண்டாமா? அப்படியென்ன உனக்கு அயோக்கியத்தனமான பொட்டச்சி சுகம்? நீ எங்கயும் போ, எவளோடயும் போ…கார்த்திகை மாசத்து நாய் மாதிரி அலை. நீ சீரழிஞ்சு போனா எனக்கு கவலை இல்ல, ஆனா என் வீட்ல தண்ணியடிப்பதும், தேவடியாவோட கூத்தடிப்பதும்தான் வேண்டாங்கறேன். இனிமே நான் உன்ன நம்பத் தயாரா இல்ல. உப்பு போட்டு சோறு திங்கறவனாயிருந்தா நீ இன்னும் பத்து நிமிஷத்துல இந்த வீட்ட விட்டு வெளியே போ… இல்லன்னா நான் போறேன், என் உடம்புல நல்ல ரத்தம் ஓடுது” அவன் உடம்பு படபடத்தது.
பஞ்சு பதிலேதும் சொல்லாது, தன் உடைமைகளை ஒரு சூட்கேஸில் திணித்துக் கொண்டான். உமாவிடம் மாட்டிக் கொண்டதற்கான வருத்தமும் ஏமாற்றமும் அவன் முகத்தில் தெரிந்தது. நானும் இதில் பஞ்சுவுக்கு உடந்தையானதால் உமாவின் வார்த்தைகள் என்னையும் சுட்டது.
வெளியே மழை இன்னமும் வலுத்தது. நான் சற்று ¨தைரியத்துடன், “உமா வெளிய மழை பயங்கரமா பெய்யுது, இந்த ராத்திரில அவன் எங்க போய்த் தங்குவான்? நாளைக்கு காலைல பஞ்சுவ வெளியேற்றுவது என் பொறுப்பு” கெஞ்சினேன்.
“நான் சொன்னா சொன்னதுதான் கண்ணன். இல்லேன்னா நான் போறேன், எனக்கும் ராத்திரிதான், மழைதான்.”
உமாவின் பிடிவாதம் எனக்கு எரிச்சலையூட்டினாலும், என்னால் மேற்கொண்டு எதையும் அவனிடம் பேசமுடியவில்லை.
கொட்டும் மழையில் பஞ்சு வெளியேறினான்.
உமா கதவை அடித்துச் சாத்தினான். “தயவுசெய்து நீங்களும் கெட்டுப் போகாதீங்க கண்ணன், முறையற்ற பெண் சுகம் ரொம்ப மோசமானது. ஆரோக்கியமான அனுமதியுடன் கூடிய இன்பத்துக்காக சீக்கிரமே ஒரு கல்யாணம் பண்ணிக்குங்க.” தன்னுடைய படுக்கையை உதறிப் போட்டான்.
முதலில் பஞ்சுவிடம், ‘எனக்கும் அவனுடன் சேர்த்து வேறு ஜாகை பார்க்கச் சொல்ல வேண்டும்’ என்று நினைத்தபடியே, அன்று இரவு வரையிலும் மீண்டும் கற்புள்ளவனாகவே நான் தூங்கிப் போனேன்.
நேரில் பார்த்தது போன்ற ஒரு கதை. கதையின் முடிவு வித்தியாசமானது.
மோஷீன் அஹ்மத்