யார் துணை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 10, 2021
பார்வையிட்டோர்: 4,951 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இது நேற்று நடந்தது.

ஒரே இருட்டு கும்மிருட்டு. அழுகத் தேங்காய்க்குள்ளே நுழைஞ்சு பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி. பிரஸ்ஸிலே மிஸின்மேன் சிலிண்டர் இங்கைத் தொடச்சுப் போட்ட பேப்பர் மாதிரி கீற்றுகீற்றா வானத்தில் கொஞ்சம் வெளிச்சம்.

நான் தூங்கிக் கொண்டிருக்கேன். நல்ல தூக்கம். நல்ல தூக்கமா? என்றைக்கய்யா நல்ல தூக்கம் தூங்கினேன்! ஏதோ துங்குகிறேன். விழித்துக் கொண்டிருப்பதைப் போல ஒரு தூக்கம் நடுநிசி.

“சார் தந்தி.”

“கதவு ஓட்டை வழியா போட்டுட்டுப் போய்யா!”

என்றோ என்றைக்கோ -யார் கண்டா? -சொன்னேன்.

“டேய், உங்க ஊர்லே ஒரு வேலை இருந்தா பாருடா. இங்க பசங்க ரொம்ப மோசம். நூத்தி ஐம்பது ரூபாய் தரேன்கிறான். நாலுநாள் லீவு போட்டா மூணு நாள் சம்பளத்தே புடிக்கிறான். என்னடான்னா இஷ்டமில்லேன்னா ஓடுங்கறான். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு முதலாளிங்கறான். பெட்டியிலே கருப்புப் பணம் கள்ளக்கணக்கு எழுத எனக்குக் கை வந்து போச்சு.

“உடனே கிளம்பு. நாளை, மறுநாளைக்குள் எதிர்பார்க்கிறேன். அவசரம்.”

இதுவா தந்தி. கிட்டா கல்கத்தாவிலே இருக்கான். டில்லியிலிருந்து தந்தி. பய என்னிக்கி அங்கே போனான். பக்கத்து வீட்டிலே எவனாவது என் பேருள்ளவன் இருக்கானா? இல்லே… நானேதான்.

ஓடினேன்… ஓடினேன். குதிகால் தரையில் வேரூன்றிப் போச்சு, ஆணிவேர் அறாமல் எப்படிச் செடியைப் புடுங்குவது −தண்ணி ஊத்தி புடுங்கினா? உளை விழுந்த நிலம் மாதிரி பொதபொதன்னு சேறு. உழப்போன மாடு உள்ளே புதையுது. கொம்பு தெரியுது. மூக்கணாங்கயிற்றைப் புடிச்சு மேலே தூக்கு.

மெதுவாய் டெலிபோன் பூத்துக்கும் போய்விட்டேன். அழகான சின்ன அறை. உள்ளே இருந்து பேசினால் வெளியே தெரியாது. உள்ளே போனதும் கதவு சாத்திக் கொள்கிறது. வெளியே சிவப்பு எழுத்து எரியுது. ‘உள்ளே ஆள் இருக்கு’ இந்தியாவிலே விஞ்ஞானம் முன்னேறிப் போச்சு. ஒரு பட்டனை அழுத்தினா மணி அடிக்குது. ரீசிவரைக் காதில் வைத்துக்கொண்டு “ஹலோ, எய்ட், திரி, ஃபோர், டு, ஒன், ஸெவன்.”

மீண்டும் மணி.

“ஹலோ-ஏர்லைன்ஸா-டில்லிக்கு டிக்கட் இருக்கா? எத்தனை மணிக்கு-ஒன்று இருபதுக்கு கிளம்புதா? தேங்க்யூ.”

பக்கத்தில் இருக்கும் உண்டியலில் பதினைந்து பைசாவைப் போட்டுவிட்டு வெளியில் வருகிறேன். கதவு சாத்திக் கொள்கிறது. பச்சை வெளிச்சம். ‘நீங்கள் உள்ளே வரலாம்’ என்று விளக்கு எரிகிறது.

ஒரே வெயில். துருத்தி வைத்து தணலை மேலே ஊதுவதைப் போல வெயில் தகிக்கிறது. பெரியம்மை கொப்புளங்களைப் போல உடம்பெல்லாம் வியர்வை முத்துக்கள். சட்டை முதுகோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. ரத்த வியர்வை. நெற்றி வியர்வையை வழித்துவிட்டால் கீரைப் பாத்திக்கு நீர்பாய்ச்சிவிடலாம். தார் ரோட்டில் எங்கே கீரை விதைப்பது? புஞ்சையில் நான் சிறுவனாக இருந்தபோது விதைத்த கீரை இப்பொழுது முப்பது வருஷங்களுக்குப் பிறகு பசுமையாய் முளைத்திருக்கிறது. அதைப் பறித்து நாளை மசித்துவிடலாம்.

மவுண்ட்ரோட்டில் ஒரு குடிசை மிக அழகாக புத்துலக உத்திகளை எல்லாம் பயன்படுத்தி அமெரிக்கா, ரஷ்யா எல்லாம் சென்று திரும்பின. கட்டிடக்கலை நிபுணர்கள் கூட்டு முயற்சியிலே உருவாக்கி இருக்கிறார்கள். வாசலில் “இண்டியன் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற போர்டு குழந்தை எழுதும் எழுத்து வடிவத்தில் எழுதித் தொங்குகிறது. படியில் அடியெடுத்து வைக்கிறேன். உள்ளே போகலாமா என்ற தயக்கம்.

“கெட்இன்…கெட்இன்.”

“டில்லிக்கு என்ன டிக்கெட்?”

“நூத்திப் பத்தொன்பது ரூபா எட்டு பைசா.”

“எட்டு பைசா என்னய்யா எட்டு பைசா? கொசுறா?”

“சரி ரவுண்டாக் கொடுங்க.”

“ரவுண்டுன்னா 119 ரூபா 5 பைசாவா?”

“உங்க இஷ்டம்.”

“நூத்திப் பத்தொன்பது ரூபாய் தான் தருவேன். கொடுப்பியா?”

“சரி கொடுங்க… எட்டு பைசாவை ரைட்டாஃப் செஞ்சுடறேன்.”

பையிலே கையைவிட்டேன். பாம்புப்புற்றுக்குள்ளே கையை விட்டால் ரெம்ப சுகமாக இருக்கும். ஜிலுஜிலு என்று பேரானந்தம் உடம்பில் ஏறும். நித்திரை சுகதுக்கமற்ற நித்திரை. மூட்டை பூச்சிக் கடியில்லை. என்ன தொல்லையிது. தோள்பட்டை வரையில் கை உள்ளே போகிறது. மேலே போக கை நீளமில்லை. அட ஆண்டவனே? என்னமோ கையில் தட்டுப்படுகிறது. ஏதோ கடித்ததுபோல் இருந்தது. வெடுக்கென்று வெளியில் இழுக்கிறேன். பெண்டாட்டி கழுத்துச் சங்கிலி.

“இது ரெண்டு பவுனய்யா?”

“பணமா கொடுங்க சார்.”

“இது பணமில்லையாங்காணும்? பவுனய்யா பவுன். ரெண்டு பவுன். இருபத்திரெண்டு காரட், மாமியார் வூட்டுலே செஞ்சு போட்டது.”

“…”

“என்னய்யா ஊமை மாதிரி உட்கார்ந்து இருக்கிறிர்? எங்க அம்மா செய்தது இல்லைங்காணும். மாமியார் வூட்டுலே செஞ்சது. பதினாலு காரட் இல்லே, ஸ்மக்ளிங் கோல்ட், திருட்டுத்தனமாக ஆசாரியை அடுப்பங்கரையிலே கொண்டு வந்து செய்யச் சொன்னது.

“…”

“கொஞ்சம் இமைச்சுப் பாருங்க. பயமா இருக்குது. பொணமும் தெய்வமும்தான் கண்ணை இமைக்காது. நீங்க பொணமா இல்லை தெய்வமா சொல்லுங்க? எனக்குப் பயமா இருக்குது. ஓகோ. பதினாலு காரட்டுன்னு சந்தேகமா? அதான் மாமியார் செஞ்சதுங்கிறனே. பதினாலு காரட்டுன்னு அவ எனக்குப் பெண்டாட்டி இல்லேங்காணும், அவ அம்மாவுக்கு மக!”

நகையை வாங்கிப் பையிலே போட்டுக்கிட்டான். ரெண்டு தாளை எடுத்தான். அதை வெட்டி இதிலே ஒட்டி. இதை வெட்டி அதிலே ஒட்டுனான்.

“என்னாய்யா இது?”

“டிக்கட்.”

“இதுதான் டிக்கட்டா?”

“ஆமாம்.”

“ஆட்டைத் தூக்கி மாட்டுலே போடு. மாட்டைத் தூக்கி ஆட்டிலே போடுங்கறததான் டிக்கட்டா?”

“ஆமாம்.”

“இதை நான்தான் செய்யனுமா?”

“ஆமாம்.”

“நீ செஞ்சு குடுத்தா என்ன?”

“நீ தானே ப்ளேனுக்குப் போகணும்?”

“ஆமாம்.”

“அப்போ ஒட்டு.”

அடதெய்வமே! அதில் பாதியை வெட்டி இதிலே ஒட்டுகிறேன். இதில் பாதியை வெட்டி அதிலே ஒட்டுகிறேன்.

“சரியாப்போச்சா?”

“சரிதான்.”

“இப்பவே வயசு முப்பது அய்யா… இன்னும் எத்தனை வருஷம் காத்துக்கிட்டு இருக்கணும். ப்ளேனுக்க நேரம் ஆச்சா”

“இன்னும் நாப்பது நிமிஷத்திலே ப்ளேன்.” “முப்பது வருஷமா காத்துக்கிட்டு இருந்தேனே இன்னும் நாப்பது நிமிஷந்தானா?”

“ஓடு ஓடு நேரமாச்சு. ஓடு”

“இங்கேருந்து ஏரோட்ரோம் வரைக்குமா?”

“இல்லே…வழியிலே டாக்சியெ புடிச்சுக்க” ஓடுகிறேன். வேட்டி அவிழ்ந்து போச்சு… ஒரு முனையை கையிலே புடிச்சுக்கிட்டு ஓடுகிறேன்.

“டாக்கி… டாக்சி!”

நிறுத்தாமே போறானே! இன்னும் ஓடுவோம். வழி குறுகுமே.

“டாக்சி…டாக்சி!” –

பய நிறுத்தமாட்டானா? வேட்டி அவுந்து தரையிலே புரளுது.

“டாக்சி, டாக்சி” கண்ணெல்லாம் ரோட்டு மேலேயா? அட போகட்டும். காதெங்கே போச்சு… அடைச்சுப் போச்சா… மனிதாபிமானமே மரத்துப் போச்சா… இங்கே ஒருத்தன் காட்டுக் கத்தலா கத்தறது காதிலே கேக்கலையா?

“டாக்சி.டாக்சி”

‘பசங்க நிறுத்த மாட்டானுங்க… அவன் அவன் பாடு அவனவனுக்கு. நிறுத்த மாட்டானுங்க. வேட்டி அவுந்து ரோட்டிலே போச்சு… அட போகட்டுமே… போனா போகட்டுமே… ப்ளேனே போகப் போகுதாம். வேட்டி போனாக்க என்னவாம்’

‘டாக்சி… டாச்சி’

எனக்குப் பின்னே வந்து எத்தனை பய முன்னே ஓடிப்பூட்டான். என்னை ஏத்திக்கிட்டுப் போனா என்ன? குடியா முழுகிப்பூடும்? சும்மாத்தான போறான். அவன்கிட்டே கார் இருக்குங்கற துணிச்சல்லே போறானா?

“டாக்சி… டாக்சி”

அவனுங்க எங்க நிறுத்தப் போறானுங்க… முப்பது வருஷம் -இருபது நிமிஷம் ஆச்சு. நேரம் குறுகிப் போச்சு.

நேரம் குறுகினா வழியும் குறுகணும் இல்லே. ஆனா வழி குறுகல்லியே. நீண்டுக்கிட்டில்லே போகுது. குறுக்கு வழியாப் போனால் என்ன?

புஞ்சையிலேருந்து ஆக்கூருக்குப் போற பாதை குறுக்கு வழி. நிலமெல்லாம் வெடிச்சுக் கிடக்கு. எலி புடிக்க வரப்பெல்லாம் வெட்டிக் கிடக்கு. புழுதி உழுத நிலம் கட்டியும் முட்டியுமாய் பரவிக் கிடக்கு. வரப்பிலே துவரை வெட்டிய அடிக்கட்டை ஈட்டி ஈட்டியா நீட்டிக் கொண்டு நிக்குது. செருப்பு கிழிந்து போச்சு. ரத்தமும் சதையுமா வழியுது. பக்கத்திலே பெரிய திடல், ஸ்பெயின் தேசத்துக் காளை விளையாட்டு நடக்குது அங்கே. காளையை ஈட்டியாலே மேலெல்லாம் குத்தி இருக்கான்கள். ஈட்டி குத்திக்கொண்டு மேலே தொங்குது. எதிரிலே நின்னுக்கிட்டு கலர் துணிய காண்பிச்சு மிரட்டறான். இதுவா மீனம்பாக்கத்துக்குப் போற பாதை? இது ஆக்கூர் பஸ் ஸ்டாண்டுக்குப் போகிற பாதையில்லையா? இதிலே போனா பொறையார் பஸ்ஸைத்தானே புடிக்கலாம். இல்லே- இல்லே. இது குறுக்குப்பாதை. மீனம்பாக்கம் இன்னும் தொலைவில் இல்லே. தெரியாத பாதையிலே போறதை விட தெரிஞ்ச பாதையிலே போறது நல்லது இல்லையா? போற இடத்துக்கு சிக்கிரம் போகலாம். மீனம்பாக்கம் ரொம்பத் தொலைவில் இல்லே. முப்பது வருஷம் முப்பத்தொன்பது நிமிஷம் ஆச்சு.

“டாக்சி…டாக்சி”

எங்கே போறானுங்க இப்படி? “யோவ் நான் ப்ளேனுக்குப் போகணும் ஏத்திக்கிட்டுப் போங்கய்யா!”

“போய்யா.போய்யா கிண்டிலே ரேசய்யா!”

“இந்த அர்த்த ராத்திரியிலேயா?”

“ஆமாய்யா ரேசு… நேரமாச்சு போறேன்.”

“நிறுத்துங்கய்யா நானும் வரேன். மீனம்பாக்கத்திலே கொண்டு விட்டுடுங்க.”

“போய்யா போய்யா… கிண்டிலே ரேசய்யா”

“ரேசுன்னா என்னய்யா… இப்பிடி குடல் தெரிக்க ஓடுறே. குதிரையா ஓடுது.. இல்லே நீயே ஓடுறெயா?”

“பணம் கொட்டிக் கிடக்குது அள்ளிக்கிட்டு வரப்போறேன்.”

“பணமா?”

“என்னய்யா வாயைப் பொளக்கிறே. நீயும் ஓடி வா. அள்ளிக்கிட்டு வரலாம்.”

“எப்பிடியய்யா பணம் கொட்டிக்கிடக்கும். குதிரை கொள்ளைத் தின்னுட்டுப் பணம் பணமா லத்தி போட்டுக்கிட்டே ஓடுமா?”

“ஆமான்னு வைச்சுக்க… பணம் கொட்டிக்கிடக்குது. கறுப்புக் குதிரையில்லே ஓடுது அங்கே.” –

“டாக்சி டாக்சி. காரைப் புடிச்சுக்கிட்டே நானும் வரேன்யா.”

“டாக்கி டாக்சி.”

முப்பது வருவடிம் முப்பத் தொன்பது நிமிஷமாச்சு. இன்னும் ஒரே நிமிஷம். ஒரே ஒரு நிமிஷந்தான். மீனம்பாக்கம் தொலைவில் இல்லே. ப்ளேனைப் புடிச்சிடலாம்.

‘டாக்சி டாக்சி.’

நாயைப் போல இறைக்குது. கண்ணை இருட்டுது. அதோ… அதோ… ஒரே உந்தல். ஒரே ஓட்டம். கொய்ங்குன்னு சப்தம் காதைத் தொளைக்குது. அடக் கடவுளே! ப்ளேன் கிளம்பிப் போச்சா. எத்தனை வருஷமா ஓடுறேன். முப்பது வருவடிம் நாற்பது நிமிஷம் அதுக்குள்ளே ஆச்சா. தலைக்கு நேரே… மேலே… மேலே கொய்ங்கின்னு பறக்குதே. கண்ணுக்குத் தெரியுதே. ஏணி வெச்சாலும் இனிமே எட்ட முடியாதே. அடக்கடவுளே! மேகத்துக்குள்ளே பூந்து மறைஞ்சு போச்சே.

கண்ணை இருட்டுது. காதை அடைக்குது. நாக்கு வரண்டு போச்சு. இமையைப் பாரமாய் அழுத்துவது வாழ்வு. இமைக்கதவை நீக்கி வெளியிலே பார்க்கிறேன். இருட்டு… ஒரே இருட்டு. ப்ளேனோட சத்தம் அடிவானத்தில் போய் அழுந்திப் போச்சு.

அடக்கடவுளே! இதற்குக் கூடவா நான் கொடுத்து வைக்கவில்லை. நான் அன்றாடம் காய்ச்சி அவனெல்லாம் குதிரிலே மொத்தமாய்க் காய்ச்சிக் கொட்டிக்கொண்டு வைக்கோல் கருணையைப் பிடுங்கிவிட்டு வாய்வைத்துக் குடிக்கிற பயல்களா? அவன் கடைவாயில் ஒழுகுகிறதை நீ நக்கிக் குடிக்க அனுமதி கொடுத்தானா? நீ அவன்களுக்கே துணை போகிறாயே!

எனக்கு யார் துணை?

ந.முத்துசாமி

1936ஆம் ஆண்டு பிறந்த ந. முத்துசாமி தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள புஞ்சை என்றும் கிராமத்தைச் சேர்ந்தவர். எழுத்து பத்திரிகை மூலம் நவீன இலக்கியவாதியாக அறிமுகமானவர்.

‘நாற்காலிக்காரர்’ ‘சுவரொட்டிகள்’ ஆகிய இவருடைய நாடகங்கள் நவீன நாடகத்துறையில் முன்னோடி முயற்சிகள். தெருக்கூத்து, தமிழர்களின் பண்டைய தியேட்டராக இருந்திருக்க முடியும் என்பது இவர் கருத்து.

சென்னையில் ‘கூத்துப்பட்டறை’ என்ற அமைப்பில் மூலம் நவீன நாடகத்தை மேடையேற்ற முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வரும் கலைஞன்.

புதியதலைமுறை எழுத்தாளர் பலர் கையில் மெளனியின் பாதிப்பு இருந்தது உண்மையாயினும், மெளனியையும் தாண்டிய Anti-short story எல்லையில் எழுத முற்பட்டவர்களில் ஒருவராக ந.முத்துசாமியைக் குறிப்பிடலாம்.

‘சிறுகதை வடிவத்தை நன்றாய் அமைத்துவிடுவதில் முத்துசாமி ஓரளவு வெற்றியடைந்திருக்கிறார். மெளனியைவிட மிகவும் நுணுக்கமாகவே உளவியல் பகுப்பாய்வு விஷயங்களைக் கையாண்டிருப்பது கவனிக்கத்தக்கது. கதை சொல்லும் போது அதன் பின்னணியில் காணப்படும் விவரங்களை அடுக்கடுக்காக சில சமயங்களில் அதிகமாகவும், எடுத்துக் கூறுவது முத்துசாமி கதைகள் எல்லாவற்றிலும் காணப்படும் ஓர் அம்சம். அந்த அளவுக்கு மிஞ்சி விவரங்களை கதையில் நிரப்புவது வடிவத்தைப் பாதிக்கிறது…’ இப்படி சிட்டி-சிவபாதசுந்தரம் கூறுவது கவனத்துக்கு உரியது.

‘யார் துணை’ கதையில் … புஞ்சையிலேருந்து ஆக்கூருக்குப் போற பாதை, குறுக்கு வழி. நிலமெல்லாம் வெடிச்சிக் கிடக்கு. எலி பிடிக்க என்று வரப்பெல்லாம் வெட்டிக் கெடக்கு. புழுதி உழுத நிலம் கட்டியும் முட்டியுமாய் பரவிக் கிடக்கு… ‘தான் பிறந்த ஊரைப் பற்றி சொல்லும் போது நாமும் அந்த ஊரில் கால் பதிக்கிற சந்தோஷத்தில்…’

– தஞ்சைச் சிறுகதைகள், தொகுப்புரிமை: சோலை சுந்தரபெருமாள், முதற் பதிப்பு: டிசம்பர் 1999, காவ்யா வெளியீடு, பெங்களூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *