யாரிடம் சொல்வேன்…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 2, 2021
பார்வையிட்டோர்: 3,653 
 
 

எனக்கு வேடிக்கை பார்ப்பதென்றால் ரொம்ப பிடிக்கும். அதை தவிர வேறு எனக்கு வேலையுமில்லை.. அப்போதெல்லாம் பரபரப்பான காட்சிகள் எதுவும் எனக்கு கிடைக்காது.. மாட்டு வண்டிகள், சைக்கிள்களுக்கு இடையில் வரும் நான்கு மோட்டார் வாகனங்களை அதிசயமாய் பார்ப்பேன். அதை விட அதிசயமாய் தெரியும் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை வரும் டவுன் பஸ்ஸும் அதை பிடிக்க ஓடும் ஆட்களையும் .. இப்பொதெல்லாம் என் கண்களுக்கு ஓய்வே இல்லை இரவும் பகலும் இயங்கி கொண்டிருக்கும் உலகத்தை விட்டு தனியாய் என்னால் நின்றுவிட முடிவதில்லை.

காலம் ரொம்ப மாறி விட்டிருக்கிறது.. எண்ண முடியாத அளவுக்கு இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் பறந்து கொண்டிருக்கிறது. சைக்கிளை எங்காவது அதிசயமாகத்தான் பார்க்கிறேன்.இந்த இயக்கமும் பரபரப்பும் என்னை சுறு சுறுப்பாக வைத்திருந்தாலும் அதையும் மீறி மனம் நெருடலாகத்தான் இருக்கிறது. கனவை சுமந்து பள்ளி செல்லும் குழந்தையிலிருந்து கண் தெரியாத வயோதிகர் வரை கிழித்து போடும் கொடுமைகளை தினம் தினம் பார்க்க சகிக்க முடியவில்லை. வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அது ஒரு சம்பவம்… செய்திதாளில் படிப்பவர்களுக்கு அது ஒரு செய்தி.. எனக்கு? நித்தம் நித்தம் உள் வாங்கி ஜீரணிக்க முடியாமல் யாரிடம் போய் இதை சொல்வேன்.. ஒவ்வொரு நாளும் ரத்தமும், சதையுமாய்.. அழுகைகளும் பார்த்து பார்த்து மனம் இறுகி போய் கிடக்கிறது.

இதோ ஒரு மணி நேரத்துக்கு முன் தான் அந்த காட்சியை பார்த்தேன்… அந்த மனிதன் முகம் பொறுமையாகத்தான் தெரிந்தது.. பின்னால் முதுகை கட்டி கொண்டு அந்த பூங்குவியல்.. அப்பா.. மகளாய் இருக்க வேண்டும். பிஞ்சு உதடுகள் எதையோ சொல்லி கொண்டு வந்தது. அப்பாவின் ஹெல்மெட்டுக்குள் அவை விழுகின்றனவோ என்னவோ திரும்பாமல் மெல்லிதாய் ஒரு தலையசைப்புடன் லாவகமாய் பத்திரமாய்த்தான் அந்த இரு சக்கர வாகனத்தை திருப்புகிறார்.. கண நேரத்தில் கும்மாளமிட்டு வந்த கார் நொடியில் வேகமாய் மோதிவிட்டு செல்கிறது. எனக்கு இது போல் காட்சிகள் தினம் வாடிக்கையான விஷயம் என்றாலும் ஒவ்வொரு முறையும் துடித்துதான் போகிறேன். யாராவது உதவிக்கு வாருங்களேன்… என் குரல் எழும்பும் சத்தம் யார் காதையும் எட்டும்முன்..

இதோ நொடியில் வேடிக்கை பார்க்க கூடி விட்டது கூட்டம்… அந்த பிஞ்சு குழந்தை பொம்மையை பிய்த்து போட்டது போல் கை வேறு உடல் வேறாய் சிதறி கிடந்தது. குழந்தையின் அப்பா ஹெல்மெட் போட்டிருந்ததால் தலையில் அடி படாமல் கால் துண்டித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். யாரோ ஒரு இளைஞன் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தான். அங்கு சிதறி கிடந்த டைரி, செல்போன் என்று துழாவி அவரை சேர்ந்த யாருக்கோ போன் செய்தார்கள்.

போலீஸ் விசாரணை, கேமரா கோணங்கள்.. இதற்குள் அடித்து பிடித்து வந்த அந்த குடும்பம் கதறி துடித்தது.. அந்த இளம்பெண் அவர் மனைவியாயிருக்கும்.. எத்தனை கனவுகளை வைத்திருந்தாளோ? அழுது அரற்றி மயக்கமடைந்தாள். பக்கத்திலிருந்த அந்த சிறுவன் நடந்த கொடுமை தெரியாமல் , “ மாமா.. அம்மா எதுக்கு அழறாங்க…?”

“நம்ம நிம்மி பாப்பா சாமி கிட்ட போய்ட்டா டா..”

“இல்ல நீ பொய் சொல்ற… தாத்தா சாமிகிட்ட போகும் போது தூங்கிட்டுதானே இருந்தாரு.. நிம்மி பாப்பா கை எல்லாம் ஏன் தனியா கிடக்குது.. தலை எல்லாம் ரத்தம்..?

“மாமா.. எனக்கு தெரியும் என்னை விட்டு நிம்மி பாப்பா எங்கயும் போகமாட்டா சாமி கூப்பிட்டப்ப வரமாட்டேனுருப்பா.. அதான் சாமி அவளை அடிச்சி கூட்டிட்டு போயிருச்சா …?”

அந்த பாலகனின் கேள்வியில் அதிர்ந்துதான் போனேன்.

“சாமி.. இந்த பொம்மை எங்கிட்டே நிம்மி பாப்பா கேட்டுட்டே இருந்தா.. நாந்தான் தரலை இப்ப அவ யாருகூட விளையாடுவா? இதையாவது பிச்சி போடாம எடுத்துட்டு போய் நிம்மி கிட்ட குடுத்துரு…” கையிலிருந்த பொம்மையை எடுத்து நடு ரோட்டில் வீசினான்.

ஆயிற்று அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கு எதுவுமே நடந்திருக்காதது போல் எல்லா சுவடுகளும் கலைந்து போயிற்று. வேகமாய் உருமி கொண்டு இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி கொண்டு… சற்று முன் வேடிக்கை பார்த்தவர்களுக்கு இது ஒரு சம்பவம் சில மணிகளில் மறந்து போய் விடுவார்கள்… அந்த குடும்பத்தாருக்கு வலி இன்னமும் மிச்சமிருக்கும். ஆனால் எனக்கு ? நித்தம் நித்தம் ஜீரணிக்க முடியவில்லை… திரும்பவும் மண்சாலையாய் என் மீது மாட்டு வண்டிகளும், நீங்களும் பயணித்த அந்த அமைதியான காலத்திற்கே போவேனா என்று விரும்புகிறேன் மனிதர்களே…! என் பசி உங்கள் இரத்தமும், சதையும் இல்லை.. உங்கள் அழகான பயணங்களும் சிரிப்போசைகளும்தான்!

(பி.கு – இங்கு வரும் கருத்துக்களை பார்த்து இந்த குறிப்பு எழுத வேண்டியதாயிற்று… பொறுக்கவும்…

இங்கு வேலூரில் எங்கள் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள்… மனித உயிர்களுக்கே மதிப்பில்லாதது போல் நடு ரோட்டில் அடித்து போட்டு விட்டு வாகனங்கள் போய்கொண்டே இருக்கிறது. அது முக்கியமான வழி.. இந்த பக்கமும், அந்த பக்கமும் பள்ளிகள் ,வணிக வளாகங்கள், ஆர்.டி.ஒ அலுவலகம் என்று.. அங்கு நெடுஞ்சாலையை கடந்துதான் ஆக வேண்டும். பொது மக்களுக்கு வசதியாக சப்-வே ஒன்றோ மேம்பாலம் ஒன்றோ வேண்டுமென்று எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடந்து இன்னும் இதுவரையில் எந்த பலனும் இல்லை. பொதுமக்களும் இன்னும் என்னதான் செய்வார்கள். ஒவ்வொரு நாளும் இந்த பக்கமும், அந்த பக்கமும் உயிரை கையில் பிடித்து கொண்டு பள்ளி குழந்தைகளும், முதியவர்களும் ஓடுகிறார்கள்.

சாலையில் எப்போதும் படு வேகமாக வாகனங்கள்… நிதானித்து கொஞ்சம் தூரத்தில் வருகிறதே என்று கிராஸ் செய்தால் எங்கிருந்துதான் அத்தனை வேகத்தில் வருவார்களோ… அதுவும் கார்கள் வேகம்தான் எதோ பிளைட் பறப்பது மாதிரி இருக்கும்.( நான் சென்றால் முதியோர் யாராவது இருப்பின் அவர்களை பத்திரமாக அழைத்து கிராஸ் செய்து விடுவேன் என்னால் செய்ய முடிந்தது அதுதான்..!)

நம் நாட்டில் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத போது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலாவது வாகனம் ஓட்டுபவர்கள் வேகம் குறைக்கலாம். இந்த பகுதியில் மாதந்தோறும் நிறைய உயிர்பலிகள்… இதே ஒரு அரசியல் வாதியோ, பிரபலமோ என்றால் உயிரை காப்பாற்ற கோடிகளை செலவழித்து வெளி நாடு வரை செல்கிறார்கள். சாதாரண மனிதன் உயிர் மட்டும் அத்தனை மலிவானதா என்ன? நாட்டின் போக்கு வரத்து கட்டமைப்பு வசதியில் மெத்தனம் காட்டி கொண்டிருக்கும் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் நினைத்தால் கோபம்தான் வருகிறது. இங்கு நான் கோபபட்டு என்ன பிரயோசனம்? ஒவ்வொரு தனிமனிதனும் இவர்களுக்கு பாடம் கற்பிக்க முனைந்தால் ஒழிய மாற்றம் வரப்போவதில்லை.

விபத்தின் வலிகளை பற்றி சொல்லவே இச்சிறுகதை. இதில் சாலை தனக்குள் பேசிக்கொள்வது போல் கொஞ்சம் கற்பனை கலந்துதான் சொல்லியிருக்கிறேன்.

சிறு கதை முடிவில்…

… என் பசி உங்கள் இரத்தமும், சதையும் இல்லை.. உங்கள் அழகான பயணங்களும் சிரிப்போசைகளும்தான்!- என்று சாலை சொல்வது போல் எழுதியிருப்பேன்.

இது கதையாக இருந்தாலும் விபத்தால் பாதிக்கப்படும் உறவுகளின் உணர்வுகள்… வலியை நாம் உணர வேண்டாமா?)

இது ஒரு சாலையின் புலம்பல்…..!

– 25 September 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *