திருநெல்வேலியில் உள்ள கொட்டாரம் கிராமத்தில்தான் சிவசாமி பிறந்து வளர்ந்தார். தற்போது அவருக்கு வயது ஐம்பத்திஎட்டு. பத்தாப்பு வரையும் படித்திருக்கிறார்.
கொட்டாரம் கிராமத்து பள்ளியில் முப்பது வருடங்களாக நேரத்துக்கு மணி அடித்து சமீபத்தில் ஓய்வுபெற்றவர். பள்ளி ஆரம்பிக்கும்போதும், பள்ளி விடும்போதும் சரியான நேரத்துக்கு மரத்தில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் சிறியதாக வெட்டப்பட்ட ரயில் இரும்புப் பாதை மீது, இரும்புச் சுத்தியால் ஓங்கி அடித்து ஓசை எழுப்பி மற்ற நேரங்களில் பள்ளி தோட்டத்திற்கு தண்ணீர் விடுவது மட்டுமே சொற்ப சம்பளத்தில் அவர் வேலையாக இருந்தது.
மிகவும் வெள்ளந்தியானவர். நேர்மையான எண்ணங்களும் செயல்களும்தான் அவருக்குத் தெரியும். சொந்த வீட்டில் வசித்து வருகிறார். பள்ளியிலிருந்து ஓய்வு பெற்றதும் அவருக்கு அந்த சொற்பமான மாதச்சம்பளமும் நின்று போனது.
அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெரிய முருங்கைமரம் இருந்தது. அந்த மரம் நிறைய காய்களை காய்த்தது. அந்தக் காய்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் காசில் அமைதியாக வாழ்ந்து விடலாமே என்று நினைத்தார்.
அதனால் அவர் ஒருநாள் பதமான நல்ல காய்களைப் பறித்துக்கொண்டு அதை ஒரு ஜோல்னாப் பையில் போட்டு எடுத்துக்கொண்டு ஒன்பது கிலோமீட்டர் நடந்து சென்று, பாளையங்கோட்டை மார்க்கெட்டில் இருக்கும் மாடசாமி மூப்பனார் கடைக்குச் சென்றார்.
மாடசாமி மூப்பனார் ஒரு பெரிய மளிகைக்கடையும் அதையொட்டி ஒரு காய்கறிக் கடையும் வைத்து நல்ல லாபத்தில் நடத்திக் கொண்டிருந்தார்.
மாடசாமி, சிவசாமியின் வெள்ளந்தியான பேச்சிலேயே அவரின் நேர்மையைப் புரிந்துகொண்டார். அவரது முருங்கைக் காய்களை வாடிக்கையாக வாங்கிக்கொண்டு அதற்கு பணம்தர ஒப்புக் கொண்டார்.
சிவசாமி மிகுந்த சந்தோஷத்துடன் வாரம் ஒருமுறை பாளை மார்க்கெட் நடந்தே சென்று முருங்கைக் காய்களை கொடுத்துவிட்டு பல சமயங்களில் அதற்கு ஈடாக தன் வீட்டிற்கு வேண்டிய உப்பு, புளி, மிளகாய் போன்றவற்றை பண்டமாற்று செய்துகொள்வார்.
சிவசாமியின் வீட்டுத் தோட்டத்து முருங்கைக்காய் நல்ல சுவையுடன், சதைப் பற்றுடன், நீளமாகவும் தடிமனாகவும் இருப்பதால் அவைகளை ஆர்வத்துடன் அதிகமானோர் வாங்கிச் சென்றனர். அதனால் மாடசாமி மூப்பனார் அவைகளை குறைந்த விலைக்கு வாங்கி, அதிகமான விலைக்கு விற்று நல்ல லாபம் பார்த்தார்.
நாளடைவில் சிவசாமி மிகவும் நம்பிக்கையான ஒரு மரியாதைக்குரிய வியாபாரி ஆகிவிட்டதால் மளிகைக் கடைக்காரர் மாடசாமி முருங்கைக் காய்களை எடை போட்டுப் பார்ப்பதில்லை. சிவசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி, அதற்கு ஈடான மளிகைப் பொருட்களை அவரிடம் கொடுத்து அனுப்புவார். அதற்கு வலுவான காரணம் சிவசாமியின் நேர்மையும், நாணயமும்.
இந்த நம்பிக்கைகள் வருடக்கணக்கில் தொடர்ந்தன.
அன்று ஒருநாள் சிவசாமி பத்து கிலோ முருங்கைக் காய்களை கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக மளிகை பொருட்களை வாங்கிச் சென்றார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில், திம்மராஜபுரத்திலிருந்து ஒரு சமையல்காரர் வந்தார். அடுத்தநாள் திருமணத்திற்கான சமையலுக்கு தனக்கு பத்துகிலோ முருங்கைக்காய் வேண்டுமென்று கேட்டார். உடனே மாடசாமி பத்துகிலோ எடைக்கு எக்கச்சக்க விலை சொல்ல, அதற்கும் சமையல்காரர் ஒப்புக்கொண்டார்.
அவருக்காக மாடசாமி முருங்கைக் காய்களை எடைபோட, அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது.
சமையல்காரர் ஒன்பது கிலோவுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பினார். ஆனால் மாடசாமிக்கு இது பெரிய அவமானமாகப் போயிற்று.
அவர் மனதை அன்று முழுதும் அது உறுத்திக்கொண்டே இருந்தது. இரவு அவருக்கு தூக்கமே வரவில்லை.
சிவசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம் ? அந்த நம்பிக்கையை பொய்யாக்கி தனக்கு துரோகம் செய்து விட்டாரே? இத்தனை வருடங்களும் இவரை நம்பி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காய்களை வாங்கி ஏமாந்து விட்டோமே !
அடுத்தமுறை சிவசாமி வரும்போது அவரை சும்மா விடக்கூடாது…அவர் முன்னாலேயே காய்களை நிறுத்து அவர் மானத்தை வாங்கவேண்டும் என்று கோபத்துடன் மனதில் கறுவிக்கொண்டார்.
அடுத்தவாரம் சிவசாமி மிகுந்த சந்தோஷமாக கடைக்கு வந்தார். நல்ல விளைச்சல் என்பதால் முருங்கைக் காய்களை ஏராளமாக கொண்டு வந்திருந்தார். ‘இந்த தடவை கையும் களவுமாக அவரைப் பிடித்து
அவர் மானத்தை கப்பலேற்ற வேண்டும்’ என்று மாடசாமி உஷாரானார். கடையில் வாடிக்கையாளர்கள் நிறைந்திருந்தனர்.
“எத்தனை கிலோ இருக்கிறது?”
“பத்து கிலோ எடுத்து வந்திருக்கிறேன்.”
மாடசாமி அவர் முன்னாலேயே எடை போட்டுப் பார்த்தபோது ஒன்பது கிலோதான் இருந்தது.
சிவசாமி ‘இது என்ன நமக்கு வந்த சோதனை?’ என்று வியந்தார்.
மாடசாமி கடுங்கோபத்துடன், “ஏன் இத்தனை வருடங்களாக என்னை ஏமாற்றினாய்? நீ ஒரு கிராமத்தான், பரம யோக்கியன் என்று நம்பித்தானே உன்னுடன் நான் வியாபாரம் வைத்துக்கொண்டேன்? நீ என் நம்பிக்கையை இழந்து விட்டாய்.. இனிமேல் என் கடைப்பக்கம் வராதே” என்று பெரிய குரலில் கத்தினார்.
கடையில் இருந்த அனைவரும் சிவசாமியை கேவலமாகப் பார்த்தனர்.
நிலைகுலைந்து போனார் சிவசாமி.
“ஐயா என்னை மன்னிச்சிடுங்க…நான் ரொம்ப ஏழை….எடைக்கல்லு வாங்குற அளவிற்கு என்னிடம் காசு இல்லீங்க. மேலும் நான் விக்குறது முருங்கைகாய் மட்டும்தாங்க. ஒவ்வொரு முறையும் உங்க கடையில வாங்கிகிட்டு போற ஒருகிலோ பருப்பையும், இன்னொரு தட்டுல முருங்கைக் காயையும் வச்சுதான் சமமா எடை போட்டுக் கொண்டு வருவேன்யா. இதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாதுங்கையா…”
மாடசாமிக்கு செருப்பால் அடி வாங்கியதுபோல் இருந்தது. தான் செய்த துரோகம் தனக்கே திரும்பியதை உணர்ந்தார். இத்தனை வருடங்களாக சிவசாமியை ஏமாற்ற நினைத்த மாடசாமியும் அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது. இதைப் பார்த்துக் கொண்டிருதவர்களுக்கும் உண்மை புரிந்து போயிற்று. பலர் கடையைவிட்டு எதுவும் வாங்காமல் வெளியேறினர்.
அங்கிருந்த ஒரு வயதான பெரியவர் “நாம் எதைத் தருகிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும். நல்லதைத் தந்தால் நல்லது வரும்; தீமையைத் தந்தால் தீயதுதான் வரும். ஒருவேளை வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம்……ஆனால் கட்டாயம் வரும். இதுதான் உலக நியதி.
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். ஆகவே நல்லதை மட்டுமே விதைப்போம்.” என்று கனிவுடன் மாடசாமியைப் பார்த்து சொன்னார்.