முதலாளிகள்..!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 27, 2019
பார்வையிட்டோர்: 5,784 
 
 

இன்றைக்கு வேலைக்கு சேர்ந்து முதன் முதலாக புதுக் கம்பெனி முதலாளியை வைத்து இனோவா காரை ஓட்டிக்கொண்டிருந்த கணேசனுக்கு ஹாரனில் கை வைக்கவே நடுக்கமாய் இருந்தது.

அதிலும்…. ‘கம்பெனி அருகில் செல்லும்போது கண்டிப்பாய் ஹாரன் அடிக்கும் சந்தர்ப்பம் வரவேக் கூடாது !’ என்று வேண்டிக்கொண்டு வண்டியை ஓட்டினான்.

இவன் வேண்டுதலுக்குக் காரணம்….அல்லல், அனுபவம்.

ஒருவாரத்திற்கு முன்வரை ஐந்து ஆண்டுகளாக இவனுக்கு நிர்மல்-விமல் கம்பெனியில்தான் வேலை. உண்மை ஊழியன்.

அந்த கம்பெனியில் இவன் வேலைக்குச் சேர்ந்த புதிது. முதல் வாரத்தில் முதல் நாள். வழக்கத்திற்கு மாறாக முதலாளி வீட்டைவிட்டு ஒருமணி நேரத்திற்கு முன்பாக கிளம்ப… எப்போதும் போல் சத்தம் போடாமல் காரைக் கொண்டு கம்பெனி வாசலில் நிறுத்தினான்.

பீடி பிடித்துக்கொண்டிருந்த கூர்க்கா வாயில் புகை. வேலை செய்யாமல் கூடி பேசி இருந்த தோட்டத் தொழிலாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம்.

அவ்வளவுதான் அவருக்கு மூக்கு மேல் கோபம்.

வண்டியை விட்டு இறங்கிய அடுத்த விநாடி அவர்கள் அனைவரையும் கணேசனை விட்டே அழைத்துவரச் செய்தார்.

வந்தவர்களை எதிரில் நிறுத்தி….

”உங்க மொத்தப் பேர்களுக்கும் இந்த மாதம் ஒருநாள் சம்பளம் பிடித்தம் !” – அதிரடியாய் அறிவித்தார்.

”சார்!…” அவர்கள் அலற……

”எந்த மன்னிப்பு, சமாதானமும் கிடையாது. நீங்க போகலாம்.”

கறாராய்ச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார். அங்கு ஐந்தாறு பேர்கள் மேல் ஒழுங்கு நடக்கை அறிவிக்கை.

அன்றிலிருந்து கம்பெனி கப்சிப். நான்கு நாள் கழித்து தொழிற்சங்கத் தலைவர் இவனைத் தனியே அழைத்தார்.

”தம்பி! தொழிலாளிங்க மேல் குத்தம இல்லே.. மொதலாளி மேலுயும் குறை இல்லே. ஆனா இந்த நடவடிக்கைகளுக்குக் காரணம் நீங்க” வெடியைப் போட்டார்.

”என்ன சார் சொல்றீங்க ?” கணேசன் அதிர்ந்தான்.

”மொதலாளி கார் கம்பெனியை நெருங்கி காம்பௌண்டைத் தொடும் முன் ரெண்டு ஹாரன் அடிங்க. சரி இல்லாத தொழிலாளிகளெல்லாம் சரியாகிடுவாங்க. இப்படித்தான் பழைய டிரைவர் தொழிலாளிகளுக்கு உதவி செய்தார். நீங்களும் உதவுங்க. நாம தொழிலாளிங்க.” சொன்னார்.

தொழிலாளிகள் எப்போதும் சரியாக வேலை செய்வது சாத்தியமில்லை. முதலாளி இல்லா சமயம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்வார்கள். தலைவர் சொல்வது நூற்றுக்கு றூறு சரி. வேண்டுகோலும் நியாயம்.

தொழிலாளிகளுக்கு ஒரு நாள் கூலி என்பது குடும்பத்திற்குப் பெரிது. அதில் மண்ணைப் போடுவதோ அவர்கள் கஷ்டப்படுவதோ சரி இல்லை. உணர்ந்தான்.

”செய்யுறேன் சார்.” சொன்னான். அப்பயே செய்யவும் செய்தான்.

கம்பெனிக்கு முதலாளியுடன் எத்தனைத் தடவை, எந்த நேரம் வந்தாலும் ஹாரன் அடிப்பான். எல்லாரும் சரியாய் இருப்பார்கள்.

இதை கவனத்தில் கொள்ளாத முதலாளி ஒரு நாள் விழித்தார்.

”அநாவசியமா இப்படி ஏன் ஹாரன் அடிக்கிறே ? ” கேட்டார்.

”இ…இல்லே சார் காம்பௌன்ட் உள்ளே இருந்து ஆள் வருவாங்க. ஆக்சிடென்ட் ஆகாம இருக்க முன்னெச்சரிக்கை. ” சொன்னான்.

”அதெல்லாம் இல்லே. நான் ஒரு வாரமா கவனிக்கிறேன். நீ தொழிலாளர்களுக்கு முதலாளி வருகையைத் தெரிவிச்சு எச்சரிக்கைக் கொடுக்கிறே ?” குற்றம் சாட்டினார்.

”இ…இல்லே சார்” என்று இவன் எவ்வளவு மன்றாடியும்…… டிஸ்மிஸ்.

ஒரு வாரம் நாயலைச்சல் பேயலைச்சருக்குப் பிறகு இதோ வேலை. வண்டி, முதலாளி., ஹாரன்.! அடிக்க எப்படி மனம் வரும்.???

கம்பெனி நெருங்க நெருங்க…. கணேசனுக்குள் அனிச்சையாகவே உதறல் வந்தது. உள்ளங்கைகள் வேர்த்தது.

”டிரைவர் !” பின்னால் இருந்த முதலாளி அழைத்தார்.

”சார் !” இவன் காதில் வாங்கி வண்டி ஓட்டினான்.

”தொழிலாளிங்க அப்படி இப்படி இருப்பாங்க. நாம கம்பெனிக்குள் நுழையறதுக்கு முன் நாலு முறை ஹாரன் அடிச்சிடுப்பா சரியாகிடுவாங்க.” சொன்னார்.

”சார்ர்ர்….” லேசாய் அதிர்ந்தான். பழசு தெரிந்து விட்டதோ ! பயந்தான்.

”பயப்படாதே ! நமக்கு வேண்டியது வேலை. ஒழுக்கம். அதிகாரிங்க, முதலாளி இல்லாத சமயம் தொழிலாளிங்க கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிறது சகஜம், மனித இயல்பு. நீ ஹாரன் அடிச்சுடு,” சொன்னார்.

கணேசனுக்கு முதலாளி மகானாகத் தெரிய…மனசு குளிர்ந்தது.

ஹாரனை நான்கு முறை சந்தோசமாக அழுத்தினான்.

என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *