மீண்டும் நேர்ப்பாதையில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2022
பார்வையிட்டோர்: 3,811 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலையில் இருந்தே இன்று எப்படியும் சிநேகிதியைப் பார்த்து விட்டுத்தான் பள்ளிக்குப் போக வேண்டும் என, மனைவி கூறிக்கொண்டிருந்தாள். மூன்று நாட்களாகச் சாக்குப்போக்குச் சொல்லியாகிவிட்டது. இன்று எப்படியும் கூட்டிப்போய்த் தான் ஆகவேண்டும். நேற்று பூபால சிங்கத்தில் வாங்கி வந்த ‘வெளிச்சம்’ மாத இதழைப் புரட்டிக்கொண்டு அடுப்படியைத் திரும்பிப் பார்த்தேன்.

அதனைக் கண்ட ராசாத்தி மூன்று நாட்களாகக் கூறிக்கொண்டிருந்ததைத் திரும்பவும் ஒப்புவித்தாள்.

“எல்லா டீச்சசும் போய் வந்து விட்டார்கள். நாளைக்கு மிஸிஸ் காந்தன் கொழும்புக்குத் திரும்பப் போகிறாள். பள்ளிக்கூடத்தில் சொன்ன வர்கள். முன்பு நான் கொழும்புக்குச் சென்றபோது, தங்குவதற்கு தனது உறவினர் வீட்டில் ஒழுங்கு செய்து தந்தவள். இன்று அதனால் தான் வெள் ளனச் சமைத்தனான்” என்று தொடர்ந்து கதைத்துக் கொண்டிருந்தவள், கொதிக்கும் எண்ணெய்க்குள் கத்தரிக்காயைப் போட்டுக்கொண்டிருந்தாள். தேங்காய் எண்ணெய் சிறிது விலை குறைந்துவிட்டால் போதும், எல்லாம் பொரித்த கறியாகவே செய்வாள்.

எதுவும் பேசாமல் ‘வெளிச்சத் தில்’ வந்த ‘லொங்டன் கியூசின்’ மொழிபெயர்ப்புக் கவிதையில் மூழ்கி யிருந்தேன். அடிமையாக்கப்பட்ட கறுப்பினத்தவரை வைத்து, அருமை யாக ஆக்கப்பட்ட கவிதை அது. கவி தையைப் படித்தபின் இதழை மூடி வைத்துவிட்டு, நேரத்தைப் பார்த்தேன். நேரம் பத்து ஆகி இருந்தது.

நாங்கள் இடம்பெயர்ந்து வந்திருந் தோம். இடம்பெயர்ந்த பாடசாலைகள் பின்னேரங்களில் தான் நடைபெறு கின்றன. இதனால் மனைவி செவ்வாய், வியாழன் ரியூசன்களை இழந்திருந்தாள்; குடிமுழுகி விட்டதுபோல் குழம்பிப்போய் இருந்தாள்.

சமைத்து முடித்து அம்மாவுக்கும் உணவைக் கொடுத்துவிட்டு, ராசாத்தியை அவளது பள்ளியில் இறக்கி விட்டு, மூன்று மைல் தூரத்தில் இருக்கும் எனது பள்ளிக்குப் போகவேண்டும். இன்று வேறொரு வேலையும் சேர்ந்து கொண்டதை நினைக்கும் போது, எரிச்சலாக வந்தது.

திரும்பவும் சமையல் அறையைத் திரும்பிப் பார்த்தேன். அவள் அப்பளம் பொரித்துக் கொண்டிருந்தாள்.

“கொழும்பில் இருந்து வந்தவர் களை ஏன்தான் பார்க்க …?” எனக் கூறி, சட்டென நிறுத்திக்கொண்டு விட்டேன். இன்று காலையில் இருந்து சந்தோசமாக இருந்தவளைக் குழப்ப விரும்பவில்லை. அவளும் அதற்கு மறுமொழி கூறாமல் இருந்தது வியப்பாக இருந்தது.

இன்று, அம்மா தானாகப் போட் டுச் சாப்பிட வேண்டியதுதான். அக் காவும் யாழ்ப்பாணத்துக்கு ஏதோ வங்கி விஷயமாகப் போயிருந்தாள், சென்ற மாதம் மகளுடன் ரெலிபோன் கதைக்கக் கொழும்புக்குப் போனவள், போய் வந்த சிரமங்களை பலமுறை விபரித்துக் கொண்டிருந்தவள், அடுத்த மாதமும் போகவேண்டும் என நேற்றும் கூறிக்கொண்டிருந்தாள். அத்தானையும் மற்றப் பிள்ளைகளையும் எங்கள் பொறுப்பில் விட்டுவிட்டு அவள் கொழும்பு – யாழ்ப்பாணம் என்று போய் வருவதற்கு நாங்கள் இடம் பெயர்ந்து வந்தது மிகவும் வசதியாக இருக்கிறது.

“இப்போது எங்களுடன் சாப்பிடப் போகிறீர்களா?” என ராசாத்தி அம்மாவைக் கேட்டாள்.

“நீ மூடிவைத்துவிட்டுப் போ, ராணி வந்த பின்பு, அல்லது அவள்வர நேரமாகினால் நானே போட்டுச் சாப்பிடுகிறேன்” என்றாள் அம்மா.

பத்து நாற்பத்தைந்துக்கு மதிய உணவு உட்கொண்டாகிவிட்டது. இனி இரண்டு மணிக்குத் திரும்பவும் பசிக்கும். கன்ரீனில் வடையொன்றை கடித்துத் தேத்தண்ணி குடிக்க, எட்டு ரூபா வரை செலவாகும். முன்பெல்லாம் செலவுகளைப் பற்றி நினைப் பதே இல்லை இன்று எதற்கும் ஒருமுறை சிந்திக்கவேண்டி இருக்கிறது.

அத்தான் ஏதோ விஷயமாக ரவு ணுக்குப் போயிருந்தார். ரவுண் என்றதும் மிஸிஸ் காந்தன் பற்றிய வேறொரு நினைவும் சடுதியாக வந்தது. முன்பு எங்கள் பாடசாலையிலேயே அவளது மகளும் படித்து வந்தவள். பின் பாடசாலை இடம் மாறியது. பள்ளி சரியாகத் தன்னை ஆக்கிக்கொள்ள, இரண்டு வாரங்கள் பிடித்தன. இதற்குக்கூட பல பெற் றோர்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை. தங்கள் பிள்ளைகளின் ‘சேர்ட்டிபிக்கற்’றுக்களை எடுத்துக் கொண்டு, வேறு பள்ளிகளுக்கு ஓடி னர். மிஸிஸ் காத்தனுக்கும் அதிபருக்கும் இடையில் அரைமணி நேரம் தர்க்கம். கடைசியில், அவளது ஒரே மகளின் ‘சேர்ட்டிபிக்கற்’றுகளை அதிபர் அவளிடம் கொடுத்தார். அதன்பின் ஒருநாள் மிஸிஸ் காந்தன் எதிரே வரும்போது என்னைப் பார்த்துச் சிரித்தாள். நான் சிரிக்கவில்லை. மகள் நகர்ப் பாடசாலை ஒன்றின்’ரை’யுடன் அவள் பின்னால் வந்து கொண்டிருந்தாள். என்னைக் கண் தும் தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். மிஸ்ரர் காந்தன் கொழும்பில் வேலை செய்கிறார். இவள் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை கொழும்பு சென்று வருபவள். ஒவ்வொரு முறை கொழும்பு செல்லும்போதும் திரும்பி வந்த பின்பும் ராசாத்தியை அவளது வீட்டில் கொண்டுபோய் விட்டு, அவர் களின் செல்லக் கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கவேண்டும். மிஸிஸ் காந் தன் ராசாத்தியின் பள்ளியில் ரீச்சராக இருந்து சென்ற ஆண்டு ஓய்வு பெற்றவள். மாட்டேன் என்றாலும் ராசாத்தி விடமாட்டாள். மிஸிஸ் காந்தனூடாக அவள் கொழும்பைப் பார்த்து வந்தாள். ராசாத்திக்குச் சைக்கிள் ஓடத் தெரியும். அடுத்த மாதம் எப்படியும் ஒரு லேடிஸ் சைக்கிள் வாங்கிவிட வேண்டும். அதன் பின் இவ்வகைத் தொந்தரவுகள் இராது.

கேற்றடியால் வெளிக்கிடும் போது நேரம் பதினொரு மணி ஆகி இருந்தது . வழக்கம்பரையால் சித்தங்கேணிச் சந்திவரை, சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம். எதிரே வசாவிளான் மாஸ்ரர் வந்து கொண்டிருந்தார்.

இளமையில் இருந்தே அவரைத் தெரியும். ‘அல்சர்’ வருத்தம் வேறு இந்தியாவில் ‘அண்ணாமலைப் பல் கலைக்கழகத்தில் இருந்தபோது, அலு மினியப் பாத்திரத்தில் பால் சூடாக் கிக் குடித்ததால் தான் தனக்கு அல்சர் வந்தது என்று, எப்போதும் கூறிக் கொண்டிருப்பார். அண்மைக் கால மாக என்னுடன் கதைப்பதை அவர் நிறுத்தி இருந்தார். முந்திய காலங் களில் அவர் கையில், ஒவ்வோர் வெள் ளிக்கிழமையிலும் ‘சுதந்திரன்’ பேப்பர் இருக்கும். பத்து வருடங்களுக்கு முன் வரை சித்தன்கேணி ‘மாதர் சங்க’த்தில் வயலின் வகுப்புக்கள் நடத்தி வந்தவர். வயலின் சொல்லிக் கொடுத்த போதிலும் சங்கீத மாஸ்ரர்” என்ற பெயரே நிலைத்து இருந்தது. மண மாகியதும் சொந்த ஊருடன் போய் விட்டார். பின் இரண்டாவது ஈழயுத் தத்தின் ஆரம்பத்தில் இடம் பெயர்ந்த போதே, இங்கு திரும்பவும் வந்தார்.

கடந்த பத்து வருடங்களில் வன்முறை கட்கு அதிகம் ஆளானவர். ‘வீடு ஒன்று கிடைக்கும்வரை மாதர் சங்கத்திலே அவரது குடும்பம் தங்கி இருந்தது. அன்று வட்டுக்கோட்டையில் நடந்த தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த மாநாட்டில் முக்கிய பங்காற்றி, அந் நிகழ்வின் வெற்றிக்காக உழைத்தவர். இம்முறை அவர் இடம்பெயர்ந்து வந்தவுடன் அப்படியே மாறாமல் இருப்பார் என்ற நினைவில் அவருடன் நாட்டு நடப்புக்களைக் கதைக்கப் போனேன், பேச்சுத் தடம் மாறிப் போய், அவர் போரின் போக்கினைக் குறைப்பட்டுக் கொள்ள, “போராட்டம் என்றால் கஸ்ரங்களுடன் தான் தொடரும்” என விளக்கங்கள் அளித்தேன். நான் கூறியவைகள் எல்லாம் அவருக்கும் தெரிந் தவைதான். அன்று தலைவர்கட்கு ‘இரத்தத் திலகம்’ வைத்தவர். அந்தத் தலைவர்கள் பின்வாங்கவே அவரும் மாறிவிட்டார் போலும் என நினைத் துக் கொண்டேன்.

அடுத்த நாள் எதிரும், புதிருமாக இருவரும் சந்தித்தபோது அவரைப் பார்த்துச் சிரித்தேன். அவர் தெரியா தவர்போல் எங்கோ பார்த்துக் கொண்டு சைக்கிளில் சென்றுகொண் டிருந்தார். இப்போதும் வேறுபக்கம் பார்ப்பது போல் எங்களைத் தவிர்த்துக் கொண்டார்.

“ஏன் சேர் பார்க்காததுபோல் போகிறார்?” என்றாள் ராசாத்தி. நான் விஷயத்தை விளக்கினேன்.

“உங்களுக்கு வேறு வேலை இல்லை. நான் அந்த மனுசனிடம் வயலின் படித்தவள். மிகவும் நல்லவர் சீ…நீங்கள் இப்பிடித்தான்” என்று ஏதேதோ கூறிக்கொண்டிருந்தாள்.

சைக்கிள் சங்கானைச் சந்தியைத் தாண்டிக் கொண்டிருந்தது. பாபுவும், வேறொருவனும் மோட்டார் சைக் கிளில் வந்து கொண்டிருந்தனர். பாயு எங்கள் உறவினன், ஐந்து வருடமாக ‘இயக்கத்தில் இருப்பவன்’, மெல்லிய சிரிப்புடன் தலையாட்டிவிட்டுப் போனான்.

சங்கானைச் சந்தையைத் தாண்டும்போது மணிக்கூட்டைப் பார்த்தேன். நேரம் 11.10 ஆகி இருந்தது. பத்து நிமிடத்தில் வீட்டில் இருந்து சங்கானைக்கு வந்துவிட்டோம். இனி ‘சேர்ச் ரோட்’டில் உள்ள அவளது சினேகிதி வீட்டிற்குப் போகவேண்டும்.

மல்லாகம் போகும் சந்திக்கப்பால் சிறிது போகவும், சடுதியாக ஆகாயத் தில் பேரிரைச்சல் கேட்டது. முன்பெல்லாம்கூட ஹெலி, பொம்மர், அவ்ரோ இவற்றின் சத்தங்களையும் குண்டுகள் விழுந்து வெடிப்பதையும் நாங்கள் எல்லோரும் அறிந்தவர்கள் தான். ஆனால் இன்றுபோல் அவை இருந்ததில்லை. ‘சுப்பசொனிக்’ விமானங்கள் அரியாலையில், நாவற்குழியில் குண்டு கள் போட்டபோது நான் நேரில் பார்த்ததில்லை. சுப்பசொனிக் விமானங்கள் பேரிரைச்சலுடன் கண் காணாத உயரத்தில் பறப்பதைக் காதால் மட்டும் கேட்டவர்கள், இன்று கண்ணால் இரண்டு விமானங்கள் பறப்பதைக் கண்டார்கள். மிகவும் வேகமாக அவை சுழன்று சுழன்று வந்ததே எல்லோருக்கும் பயத்தை உண்டாக்கியது. கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டன. மண்ணெண் ணெய்க் கடைக்காரர்கள், நடைபாதை வியாபாரிகள் எல்லாம் சாமான்களை அப்படியே விட்டுவிட்டு, பாதுகாப்பான இடங்களை நாடி ஓடினர். ஒருவன் மதகு ஒன்றுக்குள் புகுந்து கொண் டான், அதனைக் கண்ணுற்ற இன்னும் இரண்டு மூன்று பேரும் அதற்குள் புகுந்தனர்.

மனைவி அலறத் தொடங்கிவிட்டாள். “ஐயோ! ஏன்தான் இந்தப் பக்கமாக வெளிக்கிட்டமோ?”, என்று கத்தினாள். ஓர் இளைஞன் நிமிர்த்தியிருந்த சைக்கிள்களை நிலத்தில் கிடத்தி வைத்தான்.

“ஒரு வீட்டுக்குள் போவோம்..” என்றேன்.

“ஐயோ! வீட்டுக்கை யாராவது போவார்களா?” என வளவு ஒன்றுக் குள் ராசாத்தி ஓடினாள்.

“என்ரை சீலையும் சிவப்பு. ஐயோ!” எனக் கத்திக்கொண்டிருந்தவள் “படுங்கோ, படுங்கோ” என்றாள். நானும் விழுந்து படுத்தேன்.

மெயின் ரோட்டால் இருவர் ஓடிக் கொண்டிருந்தனர். விமானங்கள் வட்ட மிட்டுக் கொண்டே இருந்தன. வினோதமான சத்தங்கள் கேட்டன. சாதாரணமாகக் கேட்கும் குண்டுச் சத்தங்களாக அவை இருக்கவில்லை.

“விமானத்தில் இருந்து றொக்கட் தாக்குதல் நடத்துகிறார்கள்” என்றான், பக்கத்தில் படுத்திருந்த இளைஞன், மணியைப் பார்த்தேன். நேரம் 11-30.

“15 நிமிடங்களாக வெறி ஆட்டம் நடத்துகிறார்கள். இந்த நேரம், இதற்கு ஆணையிட்டவன் ஓர் பௌத்த ஆல யத்தில் மலர் தட்டங்களை வைத்து, புத்தரை வணங்கிக்கொண்டிருப்பான் முழங்காலில். எம்மிடம் ஏவுகணைகள் மட்டும் இருந்திருந்தால்…” என்று அந்த இளைஞனிடம் கூறிக்கொண்டிருந்தேன்,

‘பேசாமல் இருங்க, ஒன்றுக்குமே பயப்படாத மனுசன்’ என்று ராசாத்தி எனது வாயை அடைத்தாள்.

திரும்பவும் சுழன்ற விமானங்களில் லிருந்து அதே சத்தங்கள் கேட்டன .

பின் எல்லாம் ஓய்ந்து விமானங்கள் அங்கிருந்து செல்வது தெரிந்தது. மனைவி, “வாங்கோ மானிப்பாய்ப் பக்கமாகப் போவோம். இன்னும் ஒருக்கால் வந்தாலும் வருவான்” என்றாள். சிறிது நின்று பார்ப்போம் என ஓர் வீட்டின் முன்புறமாகச் சென் றோம். பல சைக்கிள் காரர்கள் அவ் வீட்டுக்காரருடன் கதைத்துக் கொண் டிருந்தனர். பள்ளியால் வந்த குழந்தைகள், அவ்வீட்டின் கேற்றடியில் முகத் தில் கலவரத்துடன் நின்றனர். சேத விபரங்கள் பற்றிய வெவ்வேறான தக வல்கள் வந்து கொண்டிருந்தன. சங்கானை யூனியன் அடியில் நடந்ததைத் தான் பார்த்ததாக, ஓர் வயதானவர் கூறினார். “பலர் – உடல் சிதறி இரத்த வெள்ளத்தில் கிடக்கினம்” என்றார். இவ்வளவும் நடை பெற்று முடிந்த பின்னும், அந்த வீட்டு மனிதர் அசையவில்ல ; நிதானமாகப் பதில் கூறிக் கொண்டிருந்தார். ராசாத்தியையும் “பயப்படாதீர்கள்” என்றார். இதற்கு மேலும் வரமாட் டார்கள். அவர்களுக்கும், கீழேயும் ஆயத்தங்கள் நடைபெற்று விடும் என்ற பயம் இருக்கும். இன்று பள்ளிக்கூடங் களும் இராது. வீட்டுக்குப் போங்கோ என்று கூறியபடி, தனது வீட்டிற்குள் போய்விட்டார்.

சண்டிலிப்பாய் – ‘ராஜா ஸ்கூலில் இருந்தும் பிள்ளைகள் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் உயரமான பெண்பிள்ளை, தங்கள் பள்ளிக்கூடப் பக்கமாகவும் சன்னங்கள் விழுந்ததாகக் கூறினாள்.

‘அப்படியானால் இன்று இரண்டும் மூன்று இடங்களில் அடித்தவன்களா? ஓர் பக்கமாக அதுவும் சங்கானைப் பக்கமாகத்தானே சத்தம் கேட்டது’ என்றேன்.

எந்த விதமான பதிலும் வர வில்லை சைக்கிளில் மெயின் ரோட்டால் வந்தவர்களும், சரியான தகவல் எதுவும் சொல்லாமல் போய்க் கொண்டே இருந்தனர்.

“மிஸிஸ் காந்தனைப் பார்க்கப் போகவேண்டுமா?’ எனக் கேட்டேன்.

“இல்லை. அவர்கள் எங்கு ஓடி இருப்பார்களோ தெரியாது. மாமியும் பயந்து இருப்பா. முதலில் வீட்டுக்குப் போவோம்” என்றாள் ராசாத்தி.

சங்கானை யூனியன் அடியில் எது வுமே நடைபெற்றிருக்கவில்லை. அப் படியென்றால், அந்த வயதானவர் சும்மா சொல்லியிருக்கிறார் போலும்! சண்டிலிப்பாயிலும் எதுவும் நடை பெற வில்லை எனப் பின்பு தெரிந்தது.

சங்கானையால் சித்தன்கேணிக்குச் சைக்கிள் ஓடியது. சந்தியில் பெரிய சனத்திரளாக இருந்தது. முதலில் கண்களில் தென்பட்டது, ஓர் ‘எல்ப்வான்’. அதில் ஓர் சிறுவன் தலையிலும் முகத்திலும் இரத்தம் தோய நின்றி ருந்தான். தலையில் காயம் போலும், இரண்டு மூன்று பேரை வானில் ஏற் றிக் கொண்டிருந்தார்கள், டிரைவர் – சீற்றில் பாபு இருந்தான். முன்பு அவனைக் கண்டு 30 நிமிடந்தான் இருக்கும். கடைகள் எல்லாம் மூடப் பட்டிருந்தன. தவம் சந்தியில் நின்றிருந்தான்.

“என்ன நடந்தது?” எனக் கேட்டேன்.

ஒரு நூறு மீற்றர் தூரத்திற்கு றொக்கட்டால் அடித்ததாகவும்சித்தன் கேணியில், வட்டுக்கோட்டை ரோட் டில், மாதர் சங்கத்தடியில் ரொக்கட் தாக்குதல் நடந்த போது, ரோட்டில் வந்து கொண்டிருந்த சனத்துக்குப் பாது காப்பைத்தேட நேரம் கிடைக்க வில்லை. ரோட்டில் ஐந்து பேர், பக் கத்து வீட்டில் ஓர் வயதானவர் ஆகி யோர் இறந்ததாகவும் பத்துப் பேருக் குக் காயம் எனவும், பெடியள் ஆஸ் பத்திரிக்குக் கொண்டு போகிறார்கள் எனவும் சொன்னான்,

“வேறு எங்காகிலும் நடந்ததா?” என்றேன்,

“இல்லை. இங்கு மட்டும் தான்”

தொல்புரத்தில் அம்மா புளியமரத் துடன் ஒட்டியபடி நின்றிருப்பா என, நினைத்துக்கொண்டேன்.

மாதர் சங்கத்தடியில், இரண்டு உடல்கள் வெள்ளைத் துணியால் மூடிய படி வைக்கப்பட்டிருந்தன. சங்கக் கட்டிட வாசலில் சங்கீத மாஸ்ரர் நின்று கொண்டிருந்தார். நானும் மனைவியும் அவர் பக்கமாகச் சென் றோம்.

“அப்போது எங்கே இருந்தனீங்கள்?” என்றேன்.

தாக்குதல் நடந்த அந்த 15 நிமி டமும் சங்கக் கட்டிடத்துள்ளேயே இருந்ததாகவும், இன்னும் அதிர்ச்சி யிலிருந்து தான் முழுமையாக மீள வில்லை என்றும் மாஸ்ரர் கூறினார்.

“எனது அப்பா மட்டும் மயக்கம் அடைத்திருக்கிறார். எனக்கும் அதிர்ச்சியால் கை, கால் எல்லாம் பதறுகிறது. கலட்டிப் பள்ளிக்கூடத்தடியில் இருக்கும் கந்தசாமி டொக்ரரைக் கூட்டி வரவேண்டும். வருவியா ஒருக்கா?” என மாஸ்ரர் கேட்டார்.

“ஓம். அப்படியே வந்துவிட்டு நாங்கள் வீட்டிற்குப் போகிறோம்; பின்னேரம் மறுபடியும் வருவேன்” என்றேன்.

வழியில், ‘இவற்றுக்கு என்ன செய்யலாம் மாஸ்ரர்? கடைசியில் பார்த்தியளா, எங்கட போராளிகளும் பொதுமக்களும் இணைந்து தானே ஆஸ்பத்திரிக்கு காயப்பட்டவர்களைக் கொண்டு போயினம், போராளிகளை யும் மக்களையும் பிரிக்க, என்ன எல் லாம் செய்யினம்? ஆனால், அது அவர்களை மேலும் இறுகப் பிணைக்கிறது” என்றேன்.

“சும்மா ஒன்றும் கதைக்காமல் இருங்க. அவர் எவ்வளவு பயந்து போய் இருக்கிறார்” என்றாள் ராசாத்தி.

“இல்லை….அவர் கூறுவதில் ஏதும் பிழைகள் இல்லை. நாங்கள் எந்த மூலைக்குப் போனாலும் இவற்றில் இருந்து தப்ப முடியாது. இணைந்து போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை. இல்லையென்றால் முழுவதும் அழிந்துவிடுவோம்.”

அவரின் முகத்தைப் பார்த்தேன். கண்கள் கலங்கி இருந்தன.

“பறவையின் நிரையென
வானிடை எழுந்தன
பகைவரின் ஊர்திகளே!
சிறகுகள் துகள்பட
அவை மிசை பறந்தன
தமிழர் கருவிகளே!”

என்ற மீன்பாடும் நகரக் கவி ஞனின் கவிதை வரிகளைச் சொல்லிய படி முன்னை விடச் சிறிது பலமாகச் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினார் மாஸ்ரர்!

– வெளிச்சம் 1993.07

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *