மின்னொளிக்காக ஏங்கும் மினாராக்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 8, 2023
பார்வையிட்டோர்: 2,965 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மருதவயல் முஸ்லிம் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கும் வைபவம் மிகவும் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.

விசேஷ அதிதியாக இப்பிரதேசத்து முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காகப் போராடிவரும், ஒரு பிரபல சங்கத்தின் தலைவர் வந்து கனெக்ஷன் கொடுப்பார்…”

நீண்ட இடைவெளிக்குப் பின் சிராஜ் எழுதிய நிருபத்தின் ஆரம்ப வரிகளே இது.

அத்துடன் ஓர் அழைப்பிதழ் அது மருதவயல் கிராமத்தைச் சார்ந்த உத்தியோக பூர்வமான அழைப்பு.

இரண்டையும் மாறி மாறிப் படித்துச் சிராஜ் எழுதிய வரிகளில் ஊறித்திளைத்து அன்றெல்லாம் எனது ‘மூட்’ கிராமத்திலேயே மூழ்கிப் போய்க் கிடந்தது.

அக்கிராமத்து அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் கடமை புரிந்த, அந்தப் பசுமையான கால கட்டத்தை மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்க்கும் போது –

கிராமத்தின் வயலோரக் காற்றில் உலாவி – தேசத்தின் அரசியல், சமூக, கலை, இலக்கியம் தொடர்பாக கலந்துரையாடிய நாட்கள் எப்படியெல்லாம் அலை மோதுகின்றன.

அந்தப் பிரதேசத்தில், மிகப் பிரபலமான நகரிலிருந்து ஐந்து மைல் தொலைவில் அமைந்திருப்பது தான் இந்த மருத வயல் கிராமம். அங்கு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. அது புராதன கட்டிடம். அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ள அதன் மினாரா எடுப்பாகத் தோற்றமளிக்கிறது.

அந்தக் கிராமத்திற்கும், அங்குள்ள பொதுக் கட்டிடங்களுக்கும், பொதுக் கட்டிடங்கள் என்ற வகையில் அந்தப் பள்ளிவாசலுக்கும் மின்சாரம் வழங்கல் என்பது…. சிராஜ் அப்புனித பிரதேசத்தைச் சார்ந்தவர். அங்கு பின்னிப் பிணைந்துள்ள கிராமங்களைப் பற்றி வரலாற்று ரீதியாக, முழுமையாக அறிந்து வைத்திருப்பவர்.

ஐந்து வருடங்கள் மட்டுமே ஏதோ ‘மானுட நேய பூர்வமான சேவை’ என்று ஊரார் உள்ளங்களில் முத்திரை குத்திவிட்டு, பின்னர் அவர்கள் எவ்வளவோ தடுத்தும், கொஞ்சம் சுயநலம் கலந்த பிடிவாதத்தால் தலை நகருக்கு இடமாற்றம் பெற்று விட்ட பிறகு தான் அக்கிராமத்தின் அருமை பெருமை எனக்குப் புரிந்தது. பின்னர் நண்பரும் நகரின் மகாவித்தியாலத்திற்கு மாற்றம் பெற்றுவிட்டார். தனது இல்லத்திலிருந்து ஐந்து நிமிட நடை தூரம்.

மருதவயல் கிராமத்திலுள்ள முக்கிய கட்டிடங்களுக்கு எல்லாம் மின்சாரம் வழங்கப் போகும் அப்புனித வைபவத்தைப் பற்றி சிராஜ் சற்று மிகைப்படுத்தி விபரித்துள்ளார்.

முதன்முதலில் மின்சாரத் தொடர்பு கொடுக்கும் பிரமுகருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு, நகரத்தின் மகளிர் கல்லூரி மாணவிகள் ‘பேன்ட்’ வாத்தியம் முழங்க , மகாவித்தியாலய மாணவர்கள் தேசிய கீதம் இசைக்க…… பள்ளிவாசல் தர்ம கர்த்தாக்கள் ‘அல்லாஹு அக்பர்’ கோசத்துடன் மதிப்பிற்குரிய பிரமுகர் முக்கிய கட்டிடங்களுக்கு மின்சார ஒளி ஏற்றி வைப்பதை நினைத்துப் பார்க்கும் போது மனம் சிலிர்த்துப் போகின்றது.

சுற்று வட்டார பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அரசியல், வியாபார பிரமுகர்கள். பொது மக்கள்……. இப்படியான ஜன வெள்ளம் புடை சூழ்ந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர்.

சிராஜின் கடிதத்தை வாசித்து முடித்ததும் கிராமமெங்கும் நூறு வால்ட் பல்ப்கள் பிரகாசிப்பது போலவும், பள்ளிவாசலின் முகப்பு – மினாரா உச்சி, மின் குளிப்பில் பளிச்சிடுவது போலவும் மனதில் சித்திரமொன்று விரிந்தது.

காலங்காலமாய் இருளோடிப் போய்க் கிடந்த கட்டிடங்கள் அவை.

மருதவயலின் முன்னேற்றம் கண்டு என் உள்ளத்தில் ஒரு புத்தொளி பிறந்திருந்தது.

“கட்டாயம் வாருங்கள், எங்கள் இருவரையும் சந்திப்பதில் கிராம வாசிகள் பூரித்துப் போய்விடுவார்கள்.”

சிராஜ் வலியுறுத்தி மடலை முடித்திருந்தார்.

அழைப்பு வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு விழாவிற்குப் போக ஆயத்தமாகிவிட்டேன்.

நானும் நண்பரும் கிராமத்து முஸ்லிம் வித்தியாலயத்தின் வாயிலுக்கு வெளியேயும் கிராம முன்னேற்றத்திற்கு சரிசமமாகப் பங்களிப்புச் செய்துள்ளோம்.

சுமார் இரு தஸாப்தங்களாக கிராமத்தின் டிரஸ்டிமார்’ இருவரின் முற்றிலும் தனிப்பட்ட குரோதங்களுக்காக ஊர் இரண்டு பட்டிருந்தது. ஆயினும் பெண் கொடுப்பதிலும் மாப்பிள்ளை எடுப்பதிலும்’ கனிந்த ஒரு புதிய உறவு, இரு டிரஸ்டிமார்களையும் இணைத்துவிட்டது.

பணமும் பணமும் ஒன்று சேரும் போதும், பிளவுபடும் போதும் மோதப்படும், சில்லறைகள், தாம் சிதறிப் போய்விடுகின்றன. இது மரபு.

பிளவு பட்டிருந்த கிராமத்தில் ஒருமைப்பாட்டுணர்வை ஊட்ட நாம் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளன.

கிராமத்தின் முக்கிய கட்டிடங்களும், இதயத்தானமாக விளங்கும் பள்ளி வாசலும் உட்பட முழுக்கிராமமுமே மின்சார வெளிச்சத்திற்கு வருவது எவ்வளவு பெருமை.

இவ்விழிப்புணர்ச்சிக்கு வித்தியாலய ஆசிரியர்கள் ஆற்றிய மகத்தான சேவையும் மெருகேற்றியுள்ளதே! என்று எண்ணும் போது ஆசிரியப் பெருமக்கள உட்பட கிராம முன்னேற்றத்திற்கு பங்காற்றிய அனைத்து உள்ளங்களும் புளகாங்கிதம் அடையாமல் இருக்க முடியவில்லை.

அதனால் தான் என்னவோ பல வருடங்களுக்குப் பின்னும் பொறுப்புணர்வுடன் அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள். அதனை உதாசீனம் செய்யாமல், ஒருவகைப் பெருமையுடன் விழாவில் கலந்து கொள்ளப் புறப்பட்டேன்.

பன்னிரண்டு மணித்தியாலங்கள் தலைநகரின் இரைச்சல்களிலிருந்து விடுதலையாகிக் கிராமிய அமைதியில் சுற்றிச் சுழலவே மனம் அவாவுகிறது.

முதலில் சிராஜின் இல்லத்திற்குச் செல்ல வேண்டும், என்பதால் காலை ஏழு மணிக்குச் சன நெரிசல் இல்லாமல் நின்றிருந்த ‘எக்ஸ்பிரஸ்’ பஸ்ஸில் ஏறிச் சீற் பிடித்துக் கொண்டேன். சரியாகத் தொடங்கினால் இரண்டு மணித்தியாலங்களில் சிராஜின் இல்லத்தை அடைந்து விடலாம். ஒரு சில முக்கிய இடங்களில் மட்டும் தரிக்கும்.

“முதலில் நீங்கள் எங்கள் வீட்டுக்கு வருகிறீர்கள். ஓய்வு கலந்துரையாடல் முதலியவற்றிற்குப் பிறகு மதிய போசனம். விழா மாலை நான்கு மணிக்குத் தான் ஆரம்பம். பிரமுகர் நாலரைக்கு வருவார். நாங்கள் மூன்று மணிக்கு பஸ் எடுத்தால் போதும்…”

சிராஜ் திட்டமிட்டு கருமமாற்றும் பேர்வழி. எக்ஸ்பிரஸ் சுவாரஸ்யமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இடையில் மற்றுமொரு முக்கியமான நகரில், அரை மணி நேரம் தாமதித்தபோது கொஞ்சம் போரடித்தாலும், அப்புறம் வண்டி அசுர வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. மனமோ மின்சார வேகத்தில் மருதவயலில்’ உலாவிக் கொண்டிருந்தது.

கிராமம் மின்சாரத்தால் பொலிவடைந்ததும், ஒரு தனி மௌசு பிறந்துவிடும். இதுவரைக்கும் எத்தனையோ கட்டிடங்கள் இருந்தும் வெளிச்சமின்றி அவை சோபையற்றுக் கிடந்து விட்டன. மக்களும் இருளிலேயே வாழ்ந்து விட்டார்கள். ஆனால் இனித்தான் அவர்களது அன்றாடத் தொழிற்றுறைகளிலும் அபிவிருத்திகளை எதிர்பார்க்கலாம்.

சரியாக ஒன்பதே முக்காலுக்குச் சிராஜின் இல்லத்தை அடைந்து விட்டேன்.

அந்த அமைதியான சூழலில் அதே சிறிய தென்னந் தோப்பில், தோற்றத்தில் மிகவும் எளிமையாகக் காட்சியளித்த, விசாலமான அறைகளைக் கொண்ட அந்தக் கல்வீட்டின் நீண்ட விறாந்தையில் நண்பர் சிராஜ் ஏதோ ஒரு நூலில் மூழ்கிப் போயிருந்தார். எனது வருகை சட்டென்று அவரது பார்வையில் விழுந்ததும் –

“அஜ்மீர் வாருங்கள், உங்களைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.”

அவரது மனைவி மக்களுடன் வழக்கமான சம்பிரதாயக் குசலம் விசாரித்தலில் தொடங்கிப் பேச எவ்வளவோ இருந்தன.

மதிய உணவு முடிந்ததும், நீண்ட நேரம் தாமதிக்காமல், நின்று நின்று செல்லும் ‘லோக்கல்’ பஸ் ஏறினோம். இன்று சேவை விஸ்தரிக்கப் பட்டிருக்கிறது. சிராஜ் பழமையையும் புதிய மாற்றங்களையும் சுட்டிக் காட்டினார்.

பாதையில் பள்ளங்கள் திருத்தப்பட்டு ஆங்காங்கே தார்பூச்சுக்கள் மின்னுகின்றன.

பஸ்ஸிற்குள் நீண்ட காலதிற்குப் பிறகு பல தெரிந்த முகங்களின் தரிசனங்கள்.

தரிப்புகளில் நின்று, நின்று பிரயாணிகளை ஏற்றிய வண்ணம் ஊர்ந்து கொண்டிருந்தது வண்டி. என்னைப் பொறுத்த வரையில் சலிப்புத் தட்டவில்லை .

கிராமத்தின் நுழைவாயிலில் அலங்காரம் பிரமாதமாகக் கண்களுக்கு விருந்தளித்தது. ஒரு புறம் ஒலிபெருக்கி அலறிக் கொண்டிருந்தது. முழுக் கிராமமுமே பெருநாட்கோலம் பூண்டிருந்தது.

ஒரு கிராமத்திற்கு மின்சாரம் வழங்கல் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான விடயம். முதன் முதலில் பள்ளிவாசலுக்கு என்று தொடங்கி, வசதியுள்ளவர்களும் எடுத்துக் கொள்வார்கள். பின்னர் பொதுக் கட்டிடங்கள் ஒவ்வொன்றுக்கும். காலப்போக்கில் அதில் ஒன்றும் புதுமை இராது. அனைவரும் மின்சாரம் பெற்றுக் கொள்வார்கள்.

‘மினாராக்கள்’ எனும் பள்ளிவாசலின் தூபிகள் வெளிச்சம் குளிக்கக் காத்திருக்கின்றன.

சரியாக மாலை மூன்று முப்பதுக்கு, அவ்விடத்தில், பல்லாண்டுகள் மக்களுக்குச் சேவையாற்றிய பிரமுகருக்குச் செங்கம்பள வரவேற்பிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

விவசாயிகள் அன்று வேலைக்குப் போகவில்லை. சிறு ஊதியத்தைப் பெறும் தொழிலாளர்களும் அன்றைய வருமானத்தைத் தியாகம் புரிந்து ஆங்காங்கே ஒவ்வொரு பணிகளிலும் பொறுப்புகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ப

பஸ்வண்டியை விட்டிறங்கித் தொடர்ந்தும் இனிய முக தரிசனங்களுடன் நடந்து கொண்டிருந்தோம். நண்பர் சிராஜ் உரையாடிக் கொண்டே வந்தார்.

பத்துப் பன்னிரண்டு வயதினராய் இருந்த மாணவர்கள் இளைஞர்களாய் வளர்ச்சியுற்றும் பலருக்கு எம்மை இனங்காண முடியாமலும், கிராமத்திற்கே உரிய தனித்துவமான சங்கோஜ பாவத்துடனும், கனிவுடனும், பணிவுடனும் எம்மை அணுகினார்கள்.

“சேர்மாருக்கு அஸ்ஸலாமு அலைக்கும்… உங்களுக்குத் நினைவிருக்கும் என்று என்று நினைக்கிறேன்……. நான் உங்கள் பழைய மாணவன் ரிஸ்வி”

தென்னை மரம்போல் நெடிது வளர்ந்து, பளிச்சென்று வெள்ளை சாரனும் சேர்ட்டும் அணிந்திருந்தான். உற்றுப் பார்த்த நான், “ஓ… நல்லா தெரியுமே…” என்றேன். —

“சிராஜ் சேரையும் நீண்ட நாளா சந்திக்கல்ல……. எங்க வாப்பா போன மாசம் மௌத்தாப் போனார்…. அவருக்கு பதிலா என்னை பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டியிலும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திலும் சேர்த்திருக்கிறாங்க.”

“அப்படியா…அதுதான் எங்களுக்கெல்லாம் அழைப்பு வந்திருக்கு….”

“அப்படி ஒன்றும் இல்ல சேர்…உங்கள எல்லாம் இந்த ஊர் மறக்காது…”

ரிஸ்விக்குப் பக்கத்தில் உறுதுணையாக ஜெமீல், சவாஹிர், ரிசான் போன்ற இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். எல்லாருமே தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டார்கள்.

“எப்படியோ…கிராம முன்னேற்றத்திற்கு உங்களைப் போன்ற இளைஞர்கள் தான் முன் வந்து பொறுப்போடு தொண்டு செய்ய ணும்…..”

“நன்றி சேர்…நிறைய வேலை இருக்கிறபடியால உங்கள விழா முடிஞ்சி சந்திக்கிறம்..சேர் இராச் சாப்பாடு, எங்கட வீட்டில ஒழுங்கு செய்யிறன்…” என்று அன்புடன் அழைத்த ரிஸ்வி எங்கள் பதிலுக்குக் கூட, நில்லாமல் நண்பர்களுடன் பறந்துவிட்டான்.

பள்ளிவாசலில் விஷேட ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன.

பாடசாலையின் ஒன்பதாம் ஆண்டு மாணவர்களின் ‘களிம்பு’ விளையாட்டுக் கவர்ச்சியாக இருந்தது. மாணவர்கள் தமது கை வண்ணத்தைப் பள்ளிவாசல் முன்றலில் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

பொதுக் கூட்டம் நடைபெறவிருக்கும் வித்தியாலயப் பிரதான மண்டபம் வெகு விமரிசையாகக் காட்சியளித்தது.

“அஸ்ஸலாமு அலைக்கும் மாஸ்டர்” மற்றுமொரு அன்புக்குரல்.

“வ அலைக்கும் சலாம்…… யாரு அப்துல்லாவா? எப்படி………?”

அப்துல்லா கிராமத்தில் ஒரு சாதாரண தொழிலாளி. சற்று நேரம் உரையாடியதிலிருந்து, எம்மிடம் கல்வி கற்ற அவன் மகன் ரஹ்மான் இப்பொழுது வெளிதேசத்தில் நல்ல தொழிலில் இருப்பதாக அறிய முடிந்தது.

தான் பிறந்த மண்ணில் பொதுக் கட்டிடங்கள் மின்சாரம் பெற்றுப் புத்தொளி பெறட்டும் என்ற பரந்த நோக்கில் அவன் அனுப்பிய நன்கொடையைப் பரிபாலன சபை பரிசீலிக்கும் என்பதையும் தெரிவித்தான். ரிஸ்வி உறுதியளித்திருந்தான். அவன் மூலம் அது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப் படும் என்ற நம்பிக்கை அப்துல்லாவுக்கு இருந்தது.

ரிஸ்வி உறுதியளித்ததோடு ஒரு பொருத்தமான யோசனையையும் அப்துல்லாவிடம் முன் வைத்திருந்தான்.

அப்துல்லாவின் மகிழ்ச்சிக்கு ஓர் அளவே இருக்கவில்லை. எப்படியும் ஒரு சாதாரண தொழிலாளியின் பணத்தைக் கொண்டு பொதுக் கட்டிடங்களுக்கு மின் இணைப்புக்கள் கொடுத்துவிட்டால் அவனது புகழ் பரவி கிராமத்தில் நிலைத்துவிடும். நாளைக்கு அவன் டிரஸ்டியாகவும் வந்துவிடுவான். அப்புறம் எங்கள் பாடு…?

அண்மையில் ஒன்றிணைந்த இரு டிரஸ்டிமாருக்குத் தலையிடி! தட்டிக் கழிக்கவே திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

எமது மாணவர்களான ரிஸ்வி, ரஹ்மான், ஜெமில் போன்றவர்கள் பாடசாலை நாட்கள் தொட்டே இணைபிரியாத சிநேகிதர்கள்.

பள்ளிவாசலுக்கு வெளியே கோலாட்டமும், இன்னிசைகளும் முழங்குகின்றன. தூபிகளெல்லாம் அதிருமாப் போல. அவற்றுள் நடமாடும் இரு பழம் பெரும் தூபிகளுக்கு இருப்புக் கொள்ளவில்லை . அன்றைய நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்கள் வெற்றிகரமாக முடியும் வரைக்கும் அவற்றின் நெஞ்சங்களும் கோலாட்டம்’ போலத்தான். பட் பட் பட்டென்று அடித்துக் கொள்ளும்.

மாணவிகளின் பான்ட்’ ஓசை அவற்றுடன் இணைந்து கேட்போர் உள்ளங்களில் கிளுகிளுப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

வரவேற்பாளர்கள் எம்மை விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

வாணவெடியொன்று வானைப் பிளந்தது. விஷேட அதிதி சரியான நேரத்திற்கு வந்துவிட்டாராம்.

எங்கும் ஒரு வகைச் சுறு சுறுப்பு. விஷேட அதிதி இன்னுமொரு வைபவத்திற்குச் செல்ல வேண்டிய தர்மசங்கடமான நிலையில் இருப்பதாக வரவேற்பாளர்கள் தெரிவித்தார்கள்.

கோஷங்கள் உச்சக் கட்டத்தை அடைந்து விட்டன. பிரமுகருக்குப் பின்னால் காக்காய் பிடிக்கவே ஒரு பெருங்கூட்டம்!

பொதுத் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு மேலாக ஓடியோடிக் களைத்துப் போன குதிரையை ஓய்வெடுக்க விடாமல் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தவே பிரமுகர் ஆலாய்ப் பறக்கிறார்.

சம்பிரதாய பூர்வமான வரவேற்புபசாரங்களை முடித்துக் கொண்டு பிரமுகருடன் மற்றவர்களும் மண்டபத்தினுள் நுழைந்து இருக்கைகளில் அமர, பிரமுகரின் கழுத்திலிருந்து தலையையும் பார்வையையும் மூடிக் கொண்டிருந்த வண்ண மாலைகளை மேசை மீது இறக்கி வைக்கப் பெரும் பாடு பட்டார். மேலும் மேலும் மாலைகள் குவிந்த வண்ணம் இருந்தன.

விழாத் தலைவர், மௌலவியின் கிறாத் ஓதல்……. என்று குறிப்பிட்டதும் எங்கும் நிசப்தமே நிலவியது. பின்னர் தலைவர் தொடக்கி வைத்தல், வரவேற்புரை முதலிய சம்பிரதாயங்களை நிறைவேற்றிய பின், பிரமுகர் தமது சிறப்புரையை ஆரம்பிப்பதற்கு முன், ஒரு விசையைத் தட்டினார்.

மண்டபத்திலும் அக்கம் பக்கத்துப் பெரிய வீடுகளிலும் மின்சார ஒளிப் பிழம்பு பளீரென்று பாய்ந்தது.

மக்களின் கரகோசம் மண்டபத்தை நிறைத்தது. பிரமுகர் சிறப்புரை முடிந்ததும் மன்னிப்புக் கோரலுடன் பரிவாரங்கள் முன்னும் பின்னும் தொடர வெளியேறினார்.

“அவருக்காக வேறொரு வைபவம் காத்துக் கொண்டிருக்கும்…” என்றார் சிராஜ்.

கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஆறுமணிக்குப் பிறகு நடைபெறவிருக்கும் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க அவகாசம் இல்லை .

எங்களுக்கு பஸ்ஸைப் பிடிக்கும் பரபரப்பு. ரிஸ்வியும் நண்பர்களும் வந்து நின்றனர். இராப் போசனத்திற்காக அவனது இல்லத்திற்கு பலதும் பத்தும் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தோம்.

பெரிய பங்களாக்களில் மின் விளக்குகள் இருளை விழுங்கி, பகல் வேஷம் போட்டுக் கொண்டிருந்தது.

நடந்து கொண்டிருந்த ரிஸ்வி சட்டென்று நின்று –

“சேர் பள்ளிவாசலைப் பார்த்தீர்களா..?” என்று ஒரு புதிரைப் போட்டான். நானும் சிராஜும் பள்ளிவாசலை எட்டிப் பார்த்தோம்.

அப்படியே, திகைத்துப் போய்விட்டோம்.

அரைவாசி வயரிங் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொங்கிக் கொண்டிருப்பதை சிராஜுக்குக் காட்டினேன்.

தற்காலிக மின் இணைப்புக்களை கழற்றிக் கொண்டிருந்தார்கள். தூபிகளை அண்ணாந்து பார்த்தோம். அவை எம்மைப் பார்த்துச் சிரிப்பது போல் ஓர் உணர்வு.

பள்ளிவாசலுக்கும் பாடசாலைக்கும் தர்மகர்த்தாவின் வீட்டிலிருந்து தற்காலிக மின் இணைப்பு தான் போடப் பட்டிருந்தது.

ரிஸ்வியின் குரலில் அழுத்தம் தோய்ந்திருந்தது.

“அப்ப அப்துல்லாவின் மகன் ரஹ்மான் அனுப்பிய நன்கொடை…? அது ஒன்றே போதுமே…” என்றேன் சற்று உணர்ச்சிவசப்பட்டு.

“புதிய நிதியாண்டு தொடங்க இன்னும் மூன்று மாதகால அவகாசம் இருக்கு சேர்…”

தொடர்ந்து விளக்கம் கூறினான் ரிஸ்வி.

“இன்னும் மூன்று மாதங்களில் பள்ளிவாசல் நிர்வாக சபையில் மாற்றங்கள் வரலாம்…”

பல்லாண்டுகள் ஓடிக் களைத்த குதிரைகளுக்குக் கட்டாய ஓய்வு நிச்சயம். பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திலும் புதிய முகங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும். அப்படியே நாங்கள் நிர்வாக சபைகளுக்கு வந்துவிட்டால், மிக்க ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் போட்டி போடும் பழைய விடாக்கண்டர்களுக்கு ஓட இடமிராது…

“உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்…”

“நன்றி..”

“நிதானம் தவறாமல் திட்டமிட்டு வேலை செய்வதில் குருவை மிஞ்சிய சிஷ்யர்…” என்று மெள்ள, நண்பர் சிராஜிடம் கூறினேன்.

“அத்தோடு அவர்களின் மறை முகமான முயற்சியால் எவ்வித விளம்பரமோ ஆரவாரமோ இல்லாமல் அப்துல்லாவின் மகன் ரஹ்மான் அனுப்பிய நன்கொடையைக் கொண்டு ஊர்ப் பாடசாலைக்கு மின்னொளி கொடுக்க ஒழுங்குகள் நடக்குது… பள்ளிவாசலுக்கு எப்படியும் கொடுக்கத்தானே வேணும்’ என்றார் நண்பர் சிராஜ்.

ரிஸ்வியின் வீட்டில் இராப் போசனத்தை முடித்தவுடன் வெளியேறினோம்.

புதிய தலைமுறையினர் நிதானமாகச் சிந்தித்து வெளிச்சத்திற்கு வர எத்தனிக்கிறார்கள். நிச்சயமாய்க் கிராமத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் தென்படுகிறது.

அவர்களை வரவேற்பதற்காகப் பள்ளிவாசலில் வழக்கமான அகல்விளக்குகள் கண்சிமிட்டிப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. எம்மை ஏற்றிச் செல்வதற்காகப் பஸ் வந்து கொண்டிருந்தது.

– வீரகேசரி 28-04-1996.

– நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2003, மல்லிகைப் பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *