கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 8, 2023
பார்வையிட்டோர்: 2,851 
 
 

(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பார்வதிபுரம் எக்ஸ்டென்ஷன் காலனியில் சுமார் நானூறு, நானூற்றைம்பது வீடுகள் வரை இருக்கலாம். எல்லாக் காலனி வாசிகளுக்கும் அதன் தொடக்க காலத்தில் உள்ள சாலை வசதியின்மை, தண்ணீர் தட்டுப்பாடு போன்ற மனத் தாங்கல்கள் இங்கேயும் உண்டு. ஓர் இடத்தில் ஏதாவது அஸோஸியேஷன் உண்டாக வேண்டுமானால் ஒன்று அளவுக்கதிகமான குறைகள் இருக்க வேண்டும். அல்லது பரிபூரணமான வசதிகள் இருக்க வேண்டும். குறைகள் இருந்தால் ‘காலனி வெல்ஃபேர் அஸோஸியேஷன்’ என்றும் நிறைகள் இருந்தால் சங்கீத சபா அல்லது ரெக்ரியேஷன் கிளப் என்றும் ஏதாவது ஒரு சங்கம் தோன்றலாம். தோன்றுவதற்கு நியாயம் உண்டு.

இங்கேயும் பார்வதிபுரத்தில் இன்னும் நிறைவுகள் ஏற்படாததால், முதல் வகையைச் சேர்ந்த காலனி வாசிகளின் சங்கம் ஒன்று இருந்தது. அந்தச் சங்கத்தின் விசேஷக் கூட்டம் ஒன்றை உடனே வருகிற ஞாயிற்றுக்கிழமை காலையில் நடத்தியாக வேண்டும் என்று கமிட்டி உறுப்பினர்களில் ஏழு பேர் தமக்கு எழுதியிருப்பதாக அஸோஸியேஷன் காரியதரிசி வெங்கடராகவன் தலைவர் சாமிநாதனுக்குத் தகவல் கூறினார்.

“கூட்டம் நடத்தறதைப் பற்றி எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை. ஆனால் கூட்டத்துக்கு அஜெண்டா என்ன?”

“இம்மாரல் டிராஃபிக் இன் காலனி”

“என்னது? என்னது? இனனொரு தரம் சொல்லேன்.”

வெங்கடராகவன் அஜெண்டாவின் ஒரே அயிட்டத்தை இன்னொரு முறை சொன்னான்.

“வெறும் ‘டிராஃபிக்’குக்கே இங்கே ரோடுகள் சரியாயில்லே?. நீ சொல்ற ‘டிராஃபிக்’ வேற இருக்கா?”

“இருக்கும் போலத்தான் தோணறது சார்.”

“யார் சொன்னா அப்பிடி?”

“கூட்டத்தைக் கால் ஃபார் பண்ணி எழுதியிருக்கிற ஏழு பேரும் நிரூபிக்கத் தயாராயிருக்கா சார்.”

“எந்தத் தெருவிலே இருக்காம் அது?”

“நம்ப அஸோஸியேஷன் டிரெஷரர் அனந்தாச்சாரி வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலேயே இருக்காம் சார்.”

“அனந்தாச்சாரி வீணா மனசை அலட்டிக்கிறார்… தப்பா நினைச்சு யார் பாவத்தையாவது கட்டிக்கணுமா, என்ன?”

“நேத்து ராத்திரி அவர் வீட்டிலேயே வந்து யாரோ கதவைத் தட்டிக் கலாட்டா பண்ணிட்டாங்களாம்.”

“சரி எனக்கென்ன வந்தது? ஞாயிற்றுக்கிழமை மீட்டிங்குக்கு சர்க்குலர் அனுப்பிடு ஆனா அஜெண்டாவிலே “இம்மாரல் டிராஃபிக்”னு போடாதே. சில முக்கிய விஷயங்கள்’னு மட்டும் போட்டு அனுப்பு, போதும்.”

“சரி சார். அப்படியே போட்டு அனுப்பறேன். நீங்க அன்னிக்குக் கண்டிப்பா வந்துடனும்.”


ஞாயிற்றுக்கிழமை காலை காலனி அஸோஸியேஷன் அறையில் கூட்டம் கூடியது. தலைவர் சாமிநாதன் அமைதியாக இருந்தார். கூட்டத்தை வேண்டிக் கடிதம் எழுதிய அனந்தாச்சாரி முதலியவர்கள் உணர்ச்சிவசப்பட்டுச் சத்தம் போட்டார்கள். அனந்தாச்சாரி மிகவும் கோபமாக முறையிட்டார்.

“இப்படியே விட்டுட்டா இந்தக் காலனியிலே ஒரு குடும்பஸ்தன்கூட மானமா நடமாட முடியாது. ராத்திரி பகல்னு பாராமே ஸ்கூட்டர்லியும், டாக்ஸியிலுமாக ஆள்கள் வராங்க. சிலர் குடிவெறியிலே வந்து எந்த வீடுன்னு தெரியாமே அக்கம்பக்கத்து வீட்டிலே கதவைத் தட்றாங்க ரசாபாசமா இருக்கு இதை உடனே போலீஸ் கமிஷனருக்கு எழுதியாகணும்.”

“இந்தத் தொல்லையை ஒடுக்க முடியாட்டா நம்ம அஸோஸியேஷன் இருந்தே பிரயோசனம் இல்லே.”

“நம்ம தலைவர் சாமிநாதன் இதுக்கு ஏன் இவ்வளவு தயங்கணும்னுதான் புரியலை.”

“நீங்க சொல்றபடி இருந்தா அதைப்பற்றிக் கமிஷனருக்கு எழுதறதுலே எனக்கு ரெண்டாவது அபிப்பிராயம் கிடையாது. ஆனா நாம ஓர் அட்ரஸைக் குடுத்து அந்த அட்ரஸிலே தப்பு நடக்கறதுன்னும் எழுதி அங்கே அது நடக்கலைன்னா அதுனாலே யார் யார் மனசு புண்படும்னும் பார்க்கணும்.”

“அவா மனசு புண்படுமோ இல்லியோ உங்க மனசு இப்பவே புண்படறதாகத் தெரிகிறது.”

இதைக் கேட்டுச் சாமிநாதனுக்குக்கூடக் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. அவர் கறாராக ஆனால் அதே சமயத்தில் பதறாமல் பதில் சொன்னார்.

“வீண் பேச்சு எதற்கு? நான் நம்ம அஸோஸியேஷன் சார்பில் உடனே போலீஸ் கம்ப்ளெயின்ட் தரத் தயார், ஆனால் அதுக்கு முன்னே அந்த 123 பி மாடிக்கு ஒரு தடவை போய்ப் பார்த்து உறுதிப்படுத்திக்காம அதைச் செய்யக்கூடாது. எத்தனை பேர் என்னோட வர்றீங்க?”

எல்லோரும் முகத்தைச் சுளித்தார்கள்.

“புகை வர இடத்திலே தீ இருக்கான்னு போய்ப் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கனுமோ?”

“ஆமாம் தெரிஞ்சுக்கணும். ஏன்னா நீங்கபடற சந்தேகம் எனக்கு இல்லே.”

“அப்ப நீங்களே போய்ப் பார்த்துட்டு வாங்கோ.”

“நான் பார்த்துட்டு வந்து சொன்னா அதை நீங்க நம்பணுமே, ஐயா?”

“அந்த வீட்டுலே ஒரு மலையாளத்துக் கிழவன் இருக்கான்! அவன்தான் இதை நடத்தறானாம்.”

“நான்கூட மலையாளத்தான்தான் கிழவனுக்கு ஆகிற வயசு எனக்கும் ஆச்சு.” என்றார் சாமிநாதன்.

“நீங்களும் மலையாளம், அவாளும் மலையாளம். அதான் உங்களுக்குக் கரிசனை வந்திட்டது போலிருக்கு.”

“நோ, நோ, சட்னு இப்படிச் சொல்லப்படாது நீங்க.. இதோ இப்ப மணி பத்து. பத்தரை மணிக்கு இப்படியே தாம் எல்லோருமா அந்த 123 பி மாடிக்குப் போவோம். அங்கே நீங்க சொல்றபடி இருந்தா உடனே நானே போலீசுக்கு போன் பண்றேன்.”

சாமிநாதனின் சவாலை மற்றவர்கள் ஏற்றேயாக வேண்டியிருந்தது. பத்தரை மணிக்கு எல்லோருமாகப் புறப்பட்டார்கள். போகும்போதே அங்கே இருக்கும் இரண்டு மலையாள யுவதிகள் பற்றியும் அவர்கள் தளுக்குவது, மினுக்குவது பற்றியும் ஆத்திரத்தோடு சொல்லிக் கொண்டு வந்தார் அனந்தாச்சாரி. சாமிநாதன் பதில் பேசவே இல்லை. அனந்தாச்சாரிக்குச் சாமிநாதனின் மெளனம் கோபமூட்டுவதாயிருந்தது.

“நான் இவ்வளவு சொல்றேனே சார் அசையறாரா பாருங்களேன்..? நம்ம காலனியிலே இப்படி ஒண்னு இருக்கும்னு அவர் நம்பவே தயாராயில்லே”

இதற்கும் சாமிநாதன் மறுமொழி எதுவும் கூறவில்லை. 123 பி மாடிப்படிக்குத் தெருவிலிருந்தே கதவு இருந்தது. சாமிநாதனைத் தவிர மற்றவர்கள் வீதியிலேயே தயங்கினர். கதவில் குருவாயூரப்பன் படம் ஒட்டியிருந்தது. சாமிநாதன்தான் கதவைத் தட்டினார்.

அனந்தாச்சாரி சொல்லிய இரண்டு மலையாள யுவதிகளில் ஒருத்தித்தான் வந்து கதவைத் திறந்தாள்.அவள் நெற்றியில் மெல்லிய சந்தனக்கீற்று, அந்த நெற்றியின் பொன் நிறத்தோடு பொருந்தியிருந்தது. நீராடிய கூந்தல் மேகமாய் முதுகில் அலைய வெண்நிற நேரியல் கட்டியிருந்தாள் அவள் கையலகச் சரிகைக் கரையுடன் கூடிய அந்த வெள்ளை முண்டு அவளுடைய அழகுக்கு அழகு செய்வதாயிருந்தது.

சாமிநாதன் மலையாளத்தில் அவளிடம் ஏதோ விசாரித்தார். அவள் அவர்களை உள்ளே அழைத்துக்கொண்டுசென்றாள்.சாமிநாதன் முதலிலும் மற்றவர்கள் தயங்கித் தயங்கிப் பின்னாலுமாகப் படியேறினார்கள். மாடி முகப்பு ஹாலில் வரிசையாகப் போட்டிருந்த சோபாக்களில் அவர்களை உட்காரச் சொல்லிவிட்டுச் சாமிநாதன் மட்டும் உள்ளே போனார். போனவர் சற்று நேரத்துக்கெல்லாம் நெற்றியில் சந்தனக்கீற்றோடு திரும்பினார்.

“நீங்களும் வாருங்கள்” என்று அவரே மற்றவர்களை அழைத்தார்.

எல்லாரும் முகம் கோணியபடி சாமிநாதனைப் பின் தொடர்ந்தார்கள். சாம்பிராணி ஊதுவத்தி வாசனை கோயிலில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

சாமிநாதன் அவர்களை அழைத்துச் சென்ற இடம் பூஜையறை. அதில் அந்த மலையாளத்துக் கிழவர் அமர்ந்து பூஜை செய்துகொண்டிருந்தார். சிவப்பழமாக அமர்ந்திருந்தார் அவர் எல்லாரும் மறு பேச்சுப் பேசாமல் பன்னிர் இலை மேல்வைத்து அவர் கொடுத்த சந்தனத்தை வாங்கிக் கொண்டார்கள்.

“ஏண்டா சாமீ. இத்தனை வருஷத்து விரோதத்துக்கு அப்புறம் இன்னிக்காவது இங்க வர வழி தெரிஞ்சுதா உனக்கு?” என்று கிழவர் தொடங்கியதும் மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விழித்தார்கள். சாமிநாதன் கூறினார் :

“மன்னிக்க வேண்டும், மிஸ்டர் அனந்தாச்சாரி! இவர் என் சிற்றப்பா சந்திரசேகரன். ரொம்ப காலமாக என் தகப்பனார் நாளிலிருந்து எங்கள் குடும்பங்களுக்குள் பகை இருந்தது. இவர் சமீபத்தில் இங்கே குடிவந்த பின்பும் நாங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. இவர் இங்கே வந்திருப்பது தெரிந்தும்கூட நான் இவரைப் பார்க்க வரவில்லை. இவருக்குத் தொழில் ஜோஸியம். இரவு பகல் பாராமல் நிறைய வியாபாரிகளும், நண்பர்களும் வாடிக்கைக்காரர்களும் ஏதாவது பிரசனம் கேட்க இவரிடம் வருவார்கள். பெண்கள் இருவரும் இவருடைய குழந்தைகள். தாயில்லாக் குழந்தைகளாக இவரால் வளர்க்கப்பட்டவர்கள். அவர்களுக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. உங்களால்தான் இன்று நாங்கள் சந்திக்கவும் பேசவும் நேர்ந்திருக்கிறது. இதை ஈசுவர கிருபை என்றுதான் சொல்ல வேண்டும்”

அனந்தாச்சாரிக்கும் மற்றவர்களுக்கும் முகத்தில் அசடு வழியத் தொடங்கியது. அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தபின் பெண்கள் இருவரிடமும், பெரியவரிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டார் சாமிநாதன். கீழே படியிறங்குகிறவரை பெண்கள் வழியனுப்ப வந்தார்கள். யாரோடும் யாரும் பேசிக் கொள்ளவில்லை. தெருமுனை திரும்பியதும், அனந்தாச்சாரி சாமிநாதனை நெருங்கி “என்னை நீங்க ரொம்ப மன்னிக்கணும். நான் அடிமுட்டாள். பெரிய பாவம் பண்ணிப்பிட்டேன்” என்று நா தழுதழுக்க ஆரம்பித்தார். பதில் சொல்லாமல் சாமிநாதன் புன்னகை பூத்தார். சிறிது நேர மெளனத்துக்குப் பின்பே அவரிடமிருந்து பதில் வந்தது.

“சில விஷயங்களை நாம் மிகைப்படுத்தியே நினைக்கப் பழகி விடுகிறோம். திரித்து நினைக்கவும் பழகிவிடுகிறோம்.அதனாலே வர வினை இது. நம்ம மனசு சரியாயிருந்தா எல்லாம் சரியா இருக்கும். நம்ம மனசிலேயே ‘இம்மாரல் டிராபிக்’ ஏற்பட்டுட்டா சுத்தி ஒழுங்காவே இருக்கிற எல்லாத்தையுமேகூட ‘இம்மாரலா’ நினைக்கத் தோன்றுகிறது” என்று ஆத்திரமில்லாமல் சுபாவமாகப் பதில் சொன்னார் சாமிநாதன். அவருடைய நிதானமும், தெளிவும் மிகையில்லாத அம்சங்களாயிருந்தன. 123 பிக்குப் புறப்பட்டு வரும்போது எப்படிச் சுபாவமாக வந்தாரோ அப்படியே சுபாவமாகத் திரும்பியபடியே நண்பர்களிடமும் பேசிக் கொண்டு வந்தார் அவர். முதலில் அனந்தாச்சாரியின் பரபரப்பு எப்படி மிகையாயிருந்ததோ அப்படியே இப்போது மெளனமும் மிகையாயிருந்தது.

– கல்கி, தீபாவளி மலர், 1972, நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *