கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 6, 2023
பார்வையிட்டோர்: 1,983 
 

மீன் அறுப்பதற்கு இடம் கிடைக்காமல் கிருஷ்ணன் மிதி வண்டியில் போய்க்கொண்டிருக்கும்போது அந்த கால்வாயை பார்த்து நிறுத்தினான். இடைச்செருகலாக நிறைய புற்கள். சரிவில் நிறைய குப்பைகள். பிளாஸ்டிக் பைகள் மிதந்து போனது அந்த தண்ணீ,ரில். தண்ணீருக்கு மேலே களிமண் போல சேறு அப்பிக்கிடந்து இவனை யோசிக்க வைத்தது. இவனுக்கு அந்த இடத்தில் நிற்க பிடிக்கவில்லை. தூரத்தில் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்த குழாயில் நான்கைந்து நாய்கள் எதிரும் புதிருமாக நின்றபடி பொம்மைகள் மாதிரி பார்த்துக்கொண்டிருந்தது. மனைவி கிளம்பும்போதே ‘பாத்து வாங்கிட்டு வா மீன’ என்று பீதியாக சொல்லியனுப்பியிருந்தாள். இவன் மறுபடியும் அந்த இடத்தை கவனித்து சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு மீன் பையை தூக்கிக்கொண்டு கால்வாய் ஓரமாக நடந்தான். வழியில் பொதபொதப்பாக புற்கள் அவனுக்கு சில்லென்று கால்களில் தடவி இதமாக இருந்தது. அந்த குழாயை நெருங்கும்போது ஒரு பெண் தெரிந்தாள். நாய்கள் இன்னொரு பக்கமாக காய்ந்திருந்த நிலத்தில் இறங்கி ஓடியது. அந்த பெண் இவனை பார்ப்பதை தவிர்த்து புடவையை இழுத்து கீழே மறைக்கும்போதுதான் அவள் ஏதோ வேலை செய்துக்கொண்டிருக்கிறாள் என்று இவனுக்கு பட்டது. இவன் கிட்டத்தில் நெருங்கியபோது புழுதி அடித்து பச்சை இலைகள் பரப்பி தெளிந்த சேற்றோடு இருந்த வயலை கவனித்து நடுவில் ஓடும் பெரிய மிதக்கும் பூச்சிகளை கவனித்தவாறு இருந்தான். அந்தப்பெண் சட்டென்று பின்வாங்கி ‘என்னா வேணும் உங்களுக்கு?’ என்றபோது இவன் பையை காட்டி ‘மீன கழுவனும்’

‘எங்க?’

‘இங்கதான்’ என்றபோது அவள் அதை விரும்பாதவள் போல ‘இங்கெல்லாம் கழுவப்படாது’

‘வீட்ல தண்ணிப் பிரச்சன’

‘இருந்துட்டு போகட்டும்’ என்றபோது சற்று தூரத்தில் கால்வாய் தண்ணீர் பிரிந்து இன்னொரு பக்கமாக போகும் இடத்தை காட்டி ‘அந்த தண்ணி வேற எங்கேயோ போகுது. அங்கன கழுவிக்கறேன்’

‘சொன்னா புரியாதா உங்களுக்கு?’

‘அப்ப சரி’ என்று திரும்பும்போது அவள் ‘எங்க அப்பச்சி இப்ப வந்துரும். என்னைய திட்டும்’ என்றபோது இவன் நடந்தபடியே ‘நான் போறேன்’

‘என்னா மீனு அது?’

‘கெண்ட’

‘உயிரோட இருக்கா?’

‘இல்ல’

‘செத்த மீனவா சாப்புடுவாங்க?’ அவள் சிரிப்பது கேட்டது. இவன் பதிலுக்கு சிரிக்காமல் தன்னுடைய சைக்கிளை பார்த்து நடந்தான். நடப்பது மறுபடியும் சுகமாக இருந்தது. அந்த புற்கள் நீண்டு வளர்ந்து பசுமையாக இருந்தது. சலசலப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஓடைத் தண்ணீர். பக்கவாட்டில் சேற்றோடு நகர்ந்துக்கொண்டிருக்கும் பூச்சிகள். இடதுப்பக்கம் பச்சிலை வாசத்தோடு நடவுக்கு தயாராக விரிந்திருக்கும் நெல் வயல்கள். நடுவில் நெல் நாற்று போட்ட பயிர்கள் கூட்டமாக வளர்ந்து ஒரு இடத்தில் வேலியும் போட்டிருந்தார்கள். பை கனத்தது. மீன் வாசனை தூக்கலாக இருந்தது. செத்த மீன்தான். ஆனால் வாங்கும்போது மீன்கள் நெளிந்த மாதிரி நினைவு. வழக்கமாக கொடுக்கும் மீன்காரன் இல்லாமல் பக்கத்தில் மீசைக்காரனிடம் வாங்கியபோது ‘ஐஸ் மீனு இல்ல இது’ என்று உத்தரவாதம் கொடுத்தவன் விடாமல் ‘உயிரோட இருக்குது பாருங்க’ என்று வாயோரம் திறந்து செதில்கள் ஆடுவதை காட்டினான்.

‘எல்லாம் சரி. பத்து ரூபாய கொறைச்சுக்கறது..?’

‘கட்டுப்படி ஆகாதுங்க’

‘பைல போட்டிருங்க’

‘அறுக்கலையா. கிலோவுக்கு பதனஞ்சு ரூபாதான்’

‘வீட்ல பண்ணிக்கறேன்’ கிளம்பும்போது மீன் அறுக்கிறவன் இவனை பார்த்து தலையாட்டின மாதிரி இருந்தது. இவன் பதிலுக்கு சிரித்து ‘பெக்க.. பெக்க’ என்றபோது என்ன சொல்ல வருகிறான் என்று இரண்டு பக்கமும் புரியாமல் சைக்கிளில் மாட்டிக்கொண்டு கிளம்பினபோதுதான் மனைவி சொன்னது நினைவுக்கு வந்தது.

‘வழியில காவாய்ல கழுவிட்டு வந்திரு அப்படியே’

‘கத்தி வேணும்’

‘சைக்கிள்ள வச்சுருக்கேன்’ 

‘இன்னைக்கும் தண்ணி பிரச்சனையா?’

‘வராது’

‘அது தெரியுது. அதனாலதான் கேக்கறேன்’

‘தெரியல’

‘உக்கும்..’ என்று முறுக்கிக்கொண்டவன் மனைவியின் இறுக்கமான பதிலை எப்போதும் விரும்பாதவன் போல இப்போதும் ‘அவ ஒரு கம்முனாட்டி’ என்று முனகிக்கொண்டான். அவனது முதுகு மீது வார்த்தைகள் மறுபடியும் வந்து விழுந்தது. அவளேதான் பலமாக சிரித்துக்கொண்டே சொல்லுவது போல ‘இன்னும் ஒரு வாரத்துக்கு தண்ணி வராதாம். என்னா செய்யப்போறீங்க?’ என்றபோது இவன் ஒரு கனம் நின்று மனைவியை நினைத்துக்கொண்டான்.

அவள் சொன்னது சரிதான். அவளை திட்டக்கூடாது. வீட்டை கவனித்துக்கொள்கிறவள் அவள்தான். இவன் சின்ன புத்திக்காரன். அவள் பேசுவதெல்லாம் சில சமயம் இவனுக்கு புரியாது. தாமதாக ஒரு சில நாட்கள் கழிந்து புரியும்போது மனைவியை உள்ளுக்குள் புத்திசாலியாக நினைத்துக்கொள்வான். அவனுக்கு பிடிக்காதது அவள் புரிகிற மாதிரி ஏன் பேசுவதில்லை என்பதுதான். அது இவனுடைய தவறாக கூட இருக்கலாம் என்று தோன்றும்போது இவனுக்கு இவனே திட்டிக்கொள்வான்.

‘சரியான கம்முனாட்டி பய நானு’

சைக்கிள் பக்கம் வந்து நின்று பையை சைக்கிளில் மாட்டும்போது முன்புறம் கூடையில் அந்த கத்தியை கவனித்தான். வெடுக்கென்று பையில் ஒரு அசைவு தெரிந்தது. மீன் குழம்பு வாசனையும் காரமான மிளகு வறுவல் மீனும் ஒரு நொடி அவனுக்கு அந்த கத்தியின் மீது அவனை கை வைக்க செய்தது.

கத்தியோடு பையை தூக்கிக்கொண்டு திரும்ப நடந்தான்.


அந்த பெண் இப்போது மறுபடியும் புடவையை நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டு இவனைப் பார்த்து இன்னொரு பக்கமாக நகர்ந்து இவனுக்கு முதுகு காட்டியபடி கைகளை உயர்த்தி ‘ஏய்ய்ய்ய்…மன்னாருருரு…’ என்றாள். கிருஷ்ணன் அப்போதுதான் அதை கவனித்தான். முன்புறம் நான்கைந்து கழனிகளை தாண்டி ஒரு மேடு. அதன் மீது வரிசையாக கருவேல மரங்கள். ஒரு மரத்தின் அடியில் ஒருத்தன் படுத்தபடி வானத்தை பார்த்தபடி இருந்தான். இவள் கத்தினது காதில் விழாமல் அல்லது அதற்கு பதில் தராமல் தொடர்ந்து வானத்தை பார்த்தபடி இருந்தபோது இவன் ‘தூங்கிட்டாரு போல’ என்று அவளை தாண்டி நடந்தான். பிறகு சட்டென்று திரும்பி அந்த கத்தியை காட்டி ‘கத்தி எடுத்தாற போனேன்’ என்றபோது அந்த முகத்தில் இருந்த கடுகடுப்பை கவனித்து தொடர்ந்து நடந்தபோது அவள் மறுபடியும் கத்தினாள்.

‘மன்ன்னாருருரு..’

‘என்னா..?’ என்கிற சத்தம் கேட்டாலும் தலை வானத்தை பார்த்த மாதிரிதான் இருந்தது. அடுத்து இந்தப்பெண் கத்தியது.

‘இந்தப்பக்கமா பாரு…ரு..’ அவள் கத்தினது தொண்டையில் மாட்டிக்கொண்டு ஆனால் அதை சிரமப்பட்டு மறுபடி இழுத்து வெளியே எறிந்தாள்.

‘இந்தப்பக்கமா பாரு’ என்றபோது அந்த தலை திரும்பிப் பார்த்தது. இவன் பையை கீழே வைத்து தெளிந்து ஒடும் அந்த தண்ணீரை கவனித்து அந்த இடத்தில் உட்கார ஏதுவாக ஒரு பலகைக் கல்லும் இருப்பதை கவனித்து பையை கீழே வைத்து கத்தியை தரையில் எறிந்து நிமிர்ந்து பார்த்தபோது அந்த ஆள் படுத்தவாக்கில் திரும்பி இவனை பார்ப்பது தெரிகிறது.

‘ஏஏஏஏ…ய்.. யாருய்யா அது?’ என்றபோது இவன் திரும்ப கத்த முயன்று ஆனால் கத்தாமல் அந்த பெண்ணை கவனித்தான். அவள் குழாயருகே சென்று முகத்தில் தண்ணீரை தெளித்துக்கொண்டு திரும்பிப் பார்த்து ஏதோ சைகை செய்தாள். படுத்திருந்த அந்த ஆள் இப்போது வெடுக்கென்று எழுந்து இந்தப்பக்கமாக வர ஆரம்பித்தான். நடையில் வேகமும் பார்வை இவனை பார்த்தபடியே வருவதுமாக இருந்தது. இவன் சாவகாசமாக கீழே அந்த கல்லின் மீது உட்கார்ந்து அந்த பையை எடுத்து கீழே மீன்களை கொட்ட முயன்றபோது எதிர் பக்கமிருந்து அந்த சத்தம் வந்தது உரக்கமாக.

‘ஏய்ய்.. எழுந்திருச்சு போய்யா அங்கிருந்து’


கிருஷ்ணன் அந்தாளை கவனித்தபடியே இருந்தான். நல்ல உயரம். தாடி வெளுத்து ஆனால் தலையில் கருப்பு தெரிந்தது. உயரமான கால்கள். குறுக்கே தாண்டி தாண்டி வந்தான். உதட்டில் எரிச்சலும் கண்களில் கோபமும் தெரிந்தது. நடுவில் ஒரு குழியை தாண்டும்போது தடுமாறி கீழே சரிய இருந்தவன் சமாளித்து மறுபடியும் கால்களை எட்டப்போட்டு வேகமாக வந்தான். பின்புறமிருந்து ஒரு ஆடு ஓடி வந்தது. அப்போதுதான் குழாயில் தண்ணீர் கொட்டும் சத்தம் நன்றாக கேட்டது. அந்தப்பெண் பின்புறம் வந்து நிற்பது அவளது வாசனையிலிருந்து தெரிகிறது. கிருஷ்ணன் அந்த பையிருந்து மறுபடியும் வாலை அடித்துக்கொள்ளும் சத்தத்தை கேட்டான். அந்தாள் பக்கத்தில் வந்து நின்று உரக்க சொல்லுகிறவன் போல ‘எழுந்திருய்யா மேல’

‘தண்ணி பிரச்சனைங்க. கழுவிட்டு போயிடறேன்’

‘அதெல்லாம் ஆகாது’

‘தண்ணி காவா தண்ணிதானே?’

‘அதுக்கு?’

‘எல்லாருக்கும் பொது’

‘யோவ்;’ கிட்டே வந்து கையை ஓங்கினவன் ‘அடிச்சுபுபோடுவேன் பாத்துக்க’

‘அடி பாப்போம்’

‘எழுந்திருய்யா மேல’ கீழே கிடந்து மீன் பையை தூக்கி பின்புறமாக எறிந்தான். இவன் கையில் கத்தி இருப்பதை பார்த்து ‘அறுத்துட்டு கழுவறதுக்கு இந்த எடம்தான் கெடைச்சதா உனக்கு?’

‘அப்ப சரி’ இவன் எழுந்து கத்தியை ஒரு முறை கவனித்தான். சின்னதாக கைப்பிடி அகலமாக மழுங்கி உள்ளங்கைக்கு அடக்கமாக இருந்தது. தீட்டாமல் மொன்னையாக இருந்த கத்தி. நுனியில் வளைந்து கூர் இல்லாமல் வழுவழுப்பாக இருந்தது. எப்போதோ ஏதோ சந்தையில் வாங்கினது. இவன் பார்ப்பதை கவனித்து கால் நீண்டவன் ‘போய்யா சீக்கரம். இங்க வந்து அசிங்கப்படுத்திக்கிடு எல்லாரும்’ என்றவன் அவளை கவனித்து ‘போயிட்டு உன் வேலைய பாரு’ என்று உதறினான்.

மறுபடியும் திரும்பிப்போக முயன்றபோது சட்டென்று திரும்பி கால் நீண்டவன் ‘எங்களுக்கும்தான் தண்ணிப் பிரச்சன’ என்றவன் அவளை பார்த்து ‘நீ சொல்ல மாட்டியா இதையெல்லாம்?’

‘நான் சொன்னேன்’

‘என்னான்னு?’

‘இங்க மீன் கழுவாதீங்கன்னு’’ என்றதும் கால் நீண்டவன் தலையில் அடித்துக்கொண்டு இவனிடம் ‘ஒரு வாரமா வெளிய வாங்கித்தான் குடிக்கறோம். இங்கதான் குளிக்கறோம் நாங்க. எங்க தெருவுல நேத்துதான் போராட்டம் பண்ணாங்க. முனிசிபாலிட்டில இருந்து நாலு பேரு வந்து ஏதோ சொன்னாங்க. கூட்டத்த கலைச்சுட்டு போயிட்டாங்க. பத்து நாளா தண்ணி வரலையேன்னு அவங்க முகத்துல எந்த வருத்தமும் தெரியல’ என்றவன் முகத்தை சிணுங்கிக்கொண்டு சைக்கிள் நின்றிருந்த இடத்தை காட்டி ‘இந்த தண்ணி பொதுவுதான். நாங்க பிரிச்சு எங்க நிலத்துக்கு விட்டுட்டு இருக்கோம். நீங்க இருக்கற எடம் எங்களது. நீங்க உங்க சைக்கிளு இருக்கற இடத்துல கழுவிக்கோங்க. அதெல்லாம் பொது இடம்தான்’ திரும்பிப்பார்க்காமல் அவன் அதே மாதிரி கால்களை அகலமாக வைத்தபடி நடந்தான். பின்புறமாக வேடிக்கை பார்த்தபடி இருந்த அந்த ஆடு இப்போது அவன் பின்னாடியே போனது.

‘பேபேபே….மேமே’ சத்தம் வேறு. இந்த பெண் ‘ஏய் சாமுண்டி. போயிட்டு புல்லு மேயறது பாரு’ என்று அதை பார்த்து சத்தம் போட்டு சொன்னவள் இவனை பார்த்து ‘அது சொன்னா கேக்கும். ஆனா அந்தாளு சொன்னா அவன் சொல்லறததான் கேக்கும்’ என்றவள் குரலை கிசுகிசுத்து ‘அது என் வூட்டுக்காரன்தான். அங்க போயிட்டு ஆட்டுக்காரிக்கிட்ட தம்மு அடிச்சுட்டே பேசிட்டு இருப்பான் தடியன்’ என்றபோது இவன் பார்வை எதிர்ப்பக்கமாக சென்றது. ஒரு மரத்தின் பள்ளத்தில் அந்த ஆட்டுக்காரி தலை மட்டும் தெரிவது கண்டு இவள் ‘பாக்கறத பாரு முண்டச்சி. எப்ப பாரு இங்கன வந்து அந்த தடியன்கிட்ட பேசிட்டு’ என்றவள் ‘நீங்க அப்பால போயிருங்க’

இவன் கத்தியை பார்த்தபடியே இருந்தான். மொன்னை கத்தியாக இருந்தாலும் அந்த கத்தியை அவனுக்கு பிடிக்கும். சந்தையில் கத்தி வாங்கும்போது அந்த பெண் குழந்தை அம்மாவின் கையிலிருந்து வாங்கி சிரித்தபடியே இவனிடம் தந்தது நினைவுக்கு வந்தது. எப்போது சந்தைக்கு போனாலும் அந்த இடத்தில் அந்த குழந்தை அம்மாவின் மடியில் உட்கார்ந்தபடி வேடிக்கை பார்ப்பதை இவன் கவனித்திருக்கிறான். சில சமயம் மடியில் தூங்கியபடி. முன்புறம் இரும்பு பொருள்கள்தான் இருக்கும். கத்தி..அருவா..கரண்டி..தவா..வாணலி இப்படி. அந்தம்மாள் ஒரே மாதிரி நாள் பூராவும் உட்கார்ந்திருக்கிற மாதிரி தெரியும். அதுவும் அந்த குழந்தையோடு. கத்தியை வாங்கும்போது குழந்தையிடம் சிரித்தபடியே கேட்டான்.

‘நல்லா சீவுமா இது?’ என்றபோது சிரித்தபடியே கன்னத்தில் குழி விழுந்தபடி கண்களை அகலமாக விரித்து உதடுகளை குவித்து சொன்னது.

‘உம்…’

கிருஷ்ணன் மறுபடியும் அந்த கால்வாயை பார்த்து நடந்தான்.


‘ஏய்ய்ய்ய்’ என்ற சொல் இப்போது வந்தபோது அந்த குரலுக்கு முன்னே உயரக்காலன் திரும்ப ஓடி வந்தான். இவன் குனிந்து அந்த தண்ணீரை எடுத்து குடித்தபோது ஓடி வந்த காலன் சட்டென்று நின்று இவனையே பார்த்தபடி இருந்தான். கிருஷ்ணனுக்கு அந்த தண்ணீரின் கசப்பு லேசாக பிடிக்காமலிருந்தாலும் மேலே தெளிவாக அதே சமயம் குடிக்கும்போது நாக்குக்கு தேவை என்கிற மாதிரி இருந்தது. மீன் பையை கீழே சாய்த்து இன்னொரு முறை அள்ளிக்குடிக்கும்போது பெருத்த ஏப்பம் வந்தது. மறுபடியும் குடித்தான்.

மறுபடியும்……

பெரிய ஏப்பமாக இன்னொன்று. அந்த உயரக்காலன் தன்னுடைய கால்களை இடம் மாற்றி வைத்து கீழே முருங்கைக்காய் மாதிரி தொங்கிக்கொண்டிருந்த கைகளை தலைக்கு பின்புறமாக அணைத்தபடி இவனையை பார்த்தபடி இருந்தவன் இவன் இன்னொரு முறை ‘ஏவ்வ்வ்…வ்வ்வ்…’ என்றபோது ‘அய்யே..யே’ என்று முகம் சுளித்தான்.

அவனோடு அந்த பெண்ணும் சேர்ந்துக்கொண்டாள். ஜோடிப்பொருத்தம் கிருஷ்ணனுக்கு தமாசாக தோன்றியபோது ‘வெக்க்க்…’ கென்று ஒரு சிரிப்பும் வந்து அதற்கு உயரக்காலன் கோபமாக ‘இப்ப என்னா செஞ்சே நீ?’ என்று அருகாமையில் தாவினான். கிருஷ்ணன் அவனது கால்களை பார்த்து ‘நீ காலுக்கு பிறந்தவன்’ என்றான். பையிலிருந்து மீன்கள் வெளியே வந்தது. கத்தியை பிடித்த லாவகத்தில் ஒரு மீனின் உடல் மீதிருந்த செதில்கள் அவன் சீவிய சீவலில் உதிரியாய் ஒரு பக்கம் பறந்து விழுந்தபோது சட்டென்று தலையை உயர்த்தி ‘ஆனா மீன் கழுவற தண்ணியில எப்புடி என்னைய மாதிரி அடுத்தவங்க தண்ணிய குடிப்பாங்க?’ என்றாலும் வேலையை நிறுத்தவில்லை.

உயரக்காலன் ஒரு பக்கமாக காதை தடவியபடி ‘என்னா சொன்னே?’

‘மீன் கழுவ…’

‘இல்ல.. இல்ல.. அதுக்கு முன்னாடி.  என் கால பத்தி?’

‘நீ காலுக்கு பிறந்தவன்னு’

‘அப்புடீன்னா?’

‘உன் வீட்ல எல்லாரும் உசரம். உங்கப்புச்சு குள்ளம். ஆனா உங்கம்மா உயரம்’ என்றதும் ‘அய்ய்ய்..’ என்றபடி அந்த பெண்ணை பார்த்து ‘பாத்தியா கோயிந்து. அண்ணாச்சிக்கு ஜோசியம் வரும்போல’

‘ஜோசியமா?’

‘ஆமா. நீ சொன்னது சரிதான்’ என்றவன் அவன் அடுத்த மீனின் செதிலையும் ஓரத்தில் துடுப்புகளையும் சீவுகிற வேகத்தை பார்த்து ‘எனக்கு மீன சாப்புட மட்டும்தான் தெரியும்’

அந்தப் பெண் ‘எனக்கும்தான்’

இவன் ‘அத விடுங்க..’ நெஞ்சை தடவியபடி ‘இப்பத்தான் நிம்மதியா இருக்குது. தண்ணிய குடுச்சேன் பாருங்க’

‘யோவ்..வ்.. இந்த தண்ணி ஏரித்தண்ணி. அழுக்கு அசிங்கமெல்லாம் கலந்து வரும். கூடவே சாக்கடையும். எனக்கு என்னாவோ ஆகப்போகுது’ என்றபோது இவன் சிரித்து அடுத்த மீனின் வாலை ஒரு வித உத்தியுடன் கீழை வைத்து நறுக்கி ‘ஏரித்தண்ணி எங்கயிருந்து வருகுது’

‘மழத்தண்ணி’

‘மழத்தண்ணி வரும்போது?’

‘சுத்தமான தண்ணி’

‘ஏரிய சுத்தி என்னா கெடக்குது?’

‘மரம்.. செடி.. விவசாய நெலம்.. தோட்டம்.. மாட்டுப்பண்ண கூட ஒண்ணு இருக்குது’

‘அசிங்கம் எங்கயிருந்து ஆரம்பிக்குது?’ என்றதும் உயரக்காலன் யோசிக்காமல் ‘நீ சொல்ல வர்றது புரியாம இல்ல. ஆனா நீ தண்ணிய குடிச்சது என்னால ஜீரணிக்க முடியல. குமட்டிக்கிட்டு வருகுது. எம் பொண்டாட்டிக்கு கூட’ என்றவன் அவளை பார்த்து ‘ஆமாதானே..?’ என்றான். அவள் விழித்தபடி பதில் சொல்லாமல் ஆனால் நாக்கை வெளியே நீட்டி ‘உவ்வ்வ்…வேவே..’ என்றபோது கூடவே சிரிப்பும் வந்து ‘ஆடு மாடுங்க மட்டும்தான் இந்த தண்ணிய குடிக்கும்’

இவன் மீன் அறுப்பதை நிறுத்து அவர்களை திரும்பி பார்த்து ‘அப்பறம்.. நாய்..? பூன..? பன்னி..? கழுத..?’

‘எல்லாமே’

‘தண்ணிய குடுச்சு எத்தன நாளாகுது வீட்ல?’

‘பத்து நாளைக்கு மேல’

‘தண்ணிக்கு என்னா பண்ணறீங்க?’

‘வாங்கறோம்’

‘குளிக்க..? கழுவ..? தொடைக்க?’

‘அதையும் வாங்கறோம். டிராக்டர்ல வந்து கொட்டிட்டு போறானுங்க. டௌன்ல எந்த இடத்துல இருக்கீங்க?’

‘மில்லத் நகர்’

‘முஸ்லீமா?’

‘இல்ல’ என்றவன் அடுத்த மீனை பதம் பார்த்தபடி ‘நீங்க பணக்காரங்க போல’

‘எப்புடி?’

‘தண்ணிய வாங்கி சமாளிக்கறீங்க’ என்றவன் மறுபடியும் திரும்பி அவர்களை பார்த்து ‘இதே ஏரித்தண்ணி எங்க நகர சுத்தித்தான் வருகுது. குளிக்க செய்ய அங்கிருந்துதான் தண்ணிய காவாய்ல இறங்கி கொண்டாறோம் கொடத்துல. குடிக்கற தண்ணிக்குதான் பிரச்சன. முனுசுபாலிட்டில டிராக்டர்ல வந்து இறக்கறானுங்க. ஒரே நாத்தம். அதுக்கு ஒரு போராட்டம் பண்ணிச்சு. பேப்பர்ல கூட வந்துச்சே’ என்றவன் அவர்களை தொடர்ந்து அவ்வபோது பார்த்தபடி ‘இந்த டௌன்ல இருக்கறவங்கள தண்ணி பிரிச்சிருச்சு. நமக்கு தண்ணி கெடைச்சா போதுமுன்னு நினைக்கறாங்க. இதுல அம்சி வாட்டர்காரடன் ஜோரா அள்ளுறான் பணத்த. அந்த தண்ணிய குடுச்சா தண்ணி மாதிரியே தெரியல. ஆனா பணக்காரங்க மட்டுமில்லாம எங்க தெருவுலேயும் சப்ளை நடக்குது. ஏரிக்கு பக்கத்துல ஏரியோட இடத்துல கொழாய போட்டு அவனால பல வருசமா இந்த தண்ணி விக்கறத செய்ய முடியுதுன்னா..’ நிமிர்ந்து பார்த்து உதட்டை பிதுக்கி ‘அந்த தண்ணிய எங்களுக்கு புடிக்காது. ஒரு மாதிரி மருந்து வாசன’ என்றபோது உயரக்காலன் சிரித்து ‘இந்த தண்ணி புடிக்குமாக்கும்’

‘எங்க ஏரியாவுல சாக்கட நாத்தமடிக்கும். இங்க தெரியல’ என்ற கிருஷ்ணன் கடைசி மீனின் செதில்களை சீவியபடி ‘நமக்கு கெடைக்கற கொழாய் தண்ணி சுத்தமான தண்ணின்னு நான் நம்பறதில்ல’ என்றவன் இப்போது முதலிலிருந்து மீனின் ஓரத்தில் கிழித்து குடலை தள்ளினான் வெளியே. அது மண்ணோடு கலந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரோடு கலந்து ஒரு வித வாசனையோடு மிதந்தபடி போனபோது மறுபடியும் அந்த பெண் வாயில் கையை வைத்து ‘உஉஉவ்வ்…வேவே’ என்றாள்.

கிருஷ்ணன் சிரித்தபடி வேலையில் மும்முறமாக இருந்தான். ஆடுகள் கத்தும் சத்தம். அந்த உயரக்காலன் திரும்பி மெதுவாக நடக்கும்போது ஏதோ முனகியபடியே நடந்தான். அந்த பெண் திரும்பி நடந்து குழாய் தண்ணியை நிறுத்துவது தெரிகிறது. தண்ணீர் குறைந்து சட்டென்று நின்றுவிடும்போது இவனுக்கு அந்த தண்ணி உப்பு தண்ணீராக இருக்கலாம் என்று தோன்றியது. ஒரு வித அமைதி அந்த இடத்தில் தோன்றி ஆடுகள் கத்தும் சத்தம் தவிர யாரோ அருகாமையில் பேசிக்கொண்டிருப்பது போலவும் கேட்டது. குடல்களை தள்ளி அறுப்பு போட்டு தண்ணீரில் சுத்தமாக கழுவி விரல்களை விட்டு அலசி இரண்டு முறை குடல் பகுதியில் மறுபடியும் கழுவி எல்லாவற்றையும் கத்தியோடு எடுத்து பைக்குள் போட்டுக்கொண்டு நிமிரும்போது அந்த உயரக்காலன் அங்கிருந்து கத்துவது கேட்டது.

‘ஏம்பா மீனு..?’

‘சொல்லுங்கோ’

‘தண்ணி வருதாம் ஊருக்குள்ளாற’


அந்தப்பெண் தன் புடவையை சரி செய்துக்கொண்டு ஓடியது இவனுக்கும் ஓடவேண்டும் என்று தோன்றியது. வெய்யிலுக்கு நெற்றியில் இறங்கிய வியர்வையை துடைத்துக்கொண்டு முன்புறம் மீன் பையை தூக்கிக்கொண்டு வேகமாக நடந்தபோது ஆடுகள் கத்தும் சத்தம் மறுபடியும் கேட்டது. இவன் தன்னுடைய சைக்கிளை பார்த்து நடந்து அந்த கால்வாயின் குறுக்காக தாண்டி கீழே விழாமல் தடுமாறி பாதைக்கு வந்து சைக்கிளை பிடித்து முன்புறம் பையை வைத்துக்கொண்டு திருப்பி ஏறி உட்கார்ந்து அழுத்தி…

மூச்சு வாங்கியது அவனுக்கு. அந்த சிறு நகரத்தின் உட்புறம் தன்னுடைய சைக்கிளை மிதித்தபோது வழியில் குழாய்களை கவனித்தான். காந்தி சிலை அருகே இடதுபுறம் திரும்பி வலதுபுறம் திரும்பி வேகமெடுத்து வழியில் மீண்டும் குழாய்களை கவனித்து அதெல்லாம் வெறுமையாக இருப்பதை கவனித்து நான்கு பக்க தெருவின் இடதுப்பக்கம் வளைந்து புசுபுசுவென்று மூச்சு வாங்கியபடி மறுபடியும் வலதுபுறம் திரும்பியபோதுதான் கவனித்தான். அந்த தெருவின் நான்கைந்து குழாய்களிலும் வரிசையாக குடங்களோடு பெண்களும் ஆண்களும் நின்றிருப்பதை.

இவன் இரண்டாவது குழாயருகே நின்றபோது அந்த சைக்கிளை ஒட்டி தன் மனைவி வந்து நிற்பதை கவனித்து அவசரமாக இறங்கியபடி ‘சீக்கரம் கொழம்ப வைய்யி. சாப்புட்டு போயிடறேன் வேலைக்கு’

‘மணி பத்தாகப்போகுது’

‘பத்தா?’

‘தண்ணிய விட்டிருக்கான்’ என்றபடி சைக்கிளை பிடித்துக்கொண்டு அந்த பெண்கள் வரிசையின் நடுவில் பாட்டியம்மாவை காட்டி ‘அவங்க பக்கத்துல நில்லு. வந்துடறேன்’ என்று மீன் பையை வாங்கிக்கொண்டு திறந்துப்பார்த்து ‘பரவாயில்லையே. கழுவிட்டு வந்திருக்கே’ என்றபடி குடத்தை அவன் கைகளில் திணித்தாள்.

கூட்டம் அடைச்சலாக இருந்தது. நடுவில் ஒரு ஆட்டோ வந்துக்கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் ஆண்கள் நகர்ந்துக்கொண்டிருந்தார்கள். டைலர் வேட்டியை இழுத்து சொருகிக்கொண்டு வரிசையிலிருந்து எட்டிப்பார்த்து ‘பத்து நாள் கழிச்சு வருது. ஆனா வாசன வருதாம்பா தண்ணியில’ என்றபோது பின்புறம் ஒரு சின்ன சச்சரவில் நான்கைந்து ஆண்கள் குடத்தை அங்கேயே கீழே வைத்துவிட்டு கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பித்தார்கள். பக்கத்திலிருந்த பெண்கள் வரிசையில் அதை கவனித்து ஆனால் முன்புறம் பார்த்தவாறு ‘நிறைய வாசன வருதாக்கும் தண்ணியில?’

‘ஆமா. இதப்பாரு’ அருகில் நடந்துப்போன ஒரு பெண்ணின் குடத்திலிருந்து தண்ணீரை கையால் வாரி முகர்ந்தபோது ‘அய்…யே..யே’

‘என்னாம்மா?’

‘தாங்கல. அதுவுமில்லாம தண்ணியோட கலர பாருங்க’ என்றதும் கெட்ட வார்த்த ஆண்கள் நிறுத்தி இவர்களை கவனிக்கும்போது குடத்தோடு இருந்த பெண் ‘செவப்பு கலர்ல வருகுது’

‘செம்மண் வாசன’

‘இதாச்சும் கெடைக்குதே’ என்றபோது அந்த கெட்ட வார்த்தை ஆண்களில் ஒருத்தன் அந்த தெருவின் முனையில் நகராட்சி ஆள் வருவதை பார்த்து ‘தோ.. வர்றானுங்க. விடப்படாது அவனுங்ள’

கிருஷ்ணன் பேந்த பேந்த மனைவியை கவனித்தபோது அவள் பையுடன் வீட்டை நோக்கி நடந்தபடி ‘இன்னைக்கு உனக்கு வேலைக்கு அம்போ. சாப்புடாம கெளம்பு. தண்ணிய நான் பாத்துக்கறேன். வழியில இட்லி சாப்புட்டுக்கோ. கொடத்த பாட்டியம்மாவுக்கு முன்னாடி வச்சுட்டு போ. அதுதான் கணக்கு’

கிருஷ்ணன் சைக்கிளை ஒரு பக்கமாக நிறுத்தியபோது அந்த வீட்டுக்காரர் ‘நாத்தம் அடிக்குதுய்யா தண்ணி’ என்று முகம் சுழித்தவர் நகராட்சி ஆளை பார்த்து இவனிடம் ‘அங்க நட. அவனுங்களோட பேசிக்கிடலாம்’

‘நான் பாட்டியம்மாவுக்கு முன்னாடி கணக்கு’

‘பாட்டிக்கிட்ட சொல்லிட்டு வந்துடு’ என்றபடி அவர் நகர்ந்தபோது இவன் மறுபடியும் பேந்த பேந்த விழித்தான். ஆனால் அவனுடைய பார்வை இன்னொன்றை கவனித்தது. வழியில் அந்த அம்சி குடிநீர் ஆட்டோ நின்று உள்ளிருந்து நான்கைந்து தண்ணீர் கேன்கள் வெளியே இறங்கி எதிர்வீட்டுக்கு போனது. ஏழெட்டு நபர்கள் சட்டென்று அங்கே போய் நின்றார்கள். ஒரு பெண் ‘ஏம்பா. என்னா இம்புட்டு வெல சொல்லறே?’ என்று வாயை மூடியபடி சொன்னாள்.

‘தண்ணி இல்லம்மா’ உள்ளிருந்து வேட்டி கட்டிய ஆள் இறங்கி கேனுக்கு அம்பது ரூப்பா. இன்னிக்கு தண்ணி வந்துருச்சு பாருங்க. நாளைல இருந்து தினமும் தண்ணி வந்துரும். முனிசிபாலிட்டில சொன்னாங்க’ என்றவன் திரும்பி அந்த வீட்டு பெண்ணிடம் ‘உங்களுக்கு நாப்பது. மொத்தமா எட்டு கேனு எடுக்கறதால. இங்க இன்னமும் நிறைய கேக்கறாங்க. சீக்கரம் பணத்த கொடுங்க. போயிட்டு வரனும்’ என்றபடி மறுபடியும் முன்புறம் திரும்பி எதிர்ப்பக்கம் பார்த்தவாறு ‘அதா. முனிசிபாலிட்டில இருந்து வந்துட்டாங்க. போயிட்டு பேசுங்க’

அந்த பெண் விடாமல் ‘ஒண்ணு கொடுத்துட்டு போப்பா. நாப்பதுக்கு’

‘எதுவும் இல்ல. மறுபடியும் வரனும்’

‘மறுபடியும் வந்துதான்’ என்றபோது பின்புறமிருந்து  சத்தம் வந்து அவர்கள் திரும்பி பார்த்தபோது அந்த நகராட்சி ஆளை எல்லோரும் சுற்றிக்கொண்டு படபடத்துக்கொண்டிருந்தார்கள். அவன் தலை தெரியாமல் ஆனால் கையை மேலே நீட்டி ஏதோ பேசுவது கேட்டது. தண்ணீர் பிடித்து ஓரமாக போய்க்கொண்டிருந்த ஒரு பெண்ணிடமிருந்து குடத்தை பிடுங்கி அந்த கெட்ட வார்த்தை ஆண்கள் கை மாற்றி ஏதோ சொல்லியபடியே உள்ளே இடித்தபடி நகர்ந்து குடத்தை அந்த ஆளின் மீது கவிழ்த்தார்கள்.

தெருவின் எதிர் முனையில் வளையுமிடத்தில் நகராட்சி ஜீப் தெரிந்தது.


உடன் வேலை செய்துக்கொண்டிருந்தவன் கிருஷ்ணனை நிமிர்ந்து பார்த்தான். கண்களுக்கு வெல்டிங் கண்ணாடி அணிந்து நடுவில் வேலையை நிறுத்தி காப்பு கம்பியுடன் அந்த சட்டத்தின் வெல்டிங் வாசனையோடு ‘அப்பறம்?’ என்றான் வேகமாக.

கிருஷ்ணன் ஒரு தகரத்தை நிமிர்த்துக்கொண்டிருந்தவன் அந்த சத்தமில்லாத நேரத்தில் வெல்டிங் கண்ணாடியை கவனிக்காமல் சின்னதாக ‘ஜீப்பு திரும்ப போயிருச்சு’

‘என்னாது?’

‘ஆமா. போயிருச்சு. அந்த தண்ணியில குளுச்ச ஆளு முனிசிபாலிட்டில தினக்கூலிக்கு வேல செய்யறவனாம். ஒப்பந்த வேலக்காரன். ஆனா வெளிய ஜம்முன்னு காட்டிக்குவான். அதுதான் இன்னைக்கு வேல செஞ்சிருச்சு. ஜீப்பு திரும்பி போனத பாத்து பேந்த பேந்த முழுச்சான். அவன் மேல பரிதாபம் வந்துட்டுது எல்லாருக்கும். பத்து நாளு ஏதோ பெரிய கொழாயில பிரச்சனைன்னு கண்டுபுடுச்சு சரிப்பண்ணி இன்னைக்கு சோதனைக்குதான் விட்டிருக்காங்க. எங்க ஏரியாவுல மட்டும். அந்த தண்ணிய புடிக்காதீங்கன்னு சொல்லறதுக்குதான் வந்திருக்கான்’ நிறுத்தி வெல்டிங்கை கவனித்தபோது அவன் கண்ணாடிக்குள் சிரிப்பது தெரிந்தது.

‘அப்பறம்?’

‘அவனுக்கு பிஸ்கட்டு வாங்கி கொடுத்து அனுப்புச்சாங்க’

‘அது கெடக்குது. எனக்கொரு சந்தேகம்?’

‘என்னா?’

‘பத்து நாளா எப்புடி சமாளிச்சே? அம்சி தண்ணியா?’

‘அது குடிக்க மட்டும்தானே. ஆனா அதக்கூட நாங்க வாங்கல’

‘பின்ன?’

‘நீயும் இதே ஊர்தானே?’

‘ஆமா’

‘நீ என்னா பண்ணே?’

‘அம்சி தண்ணிதான்’

‘அது குடிக்க. மத்ததுக்கு?’ என்றதும் லேசாக சிரித்து ‘நாங்க போர் போட்டிருக்கோம்’

‘எங்களுக்கு இல்ல’

‘அப்பறம்?’ என்றதும் இவன் யோசித்தான். ஏதும் பேசாமல் வேலையை தொடருவது போல செய்தபோது கண்ணாடி ‘அப்பறம்?’ என்றான் மறுபடியும். தான் குடித்த கால்வாய் தண்ணீரின் வாசனையும் லேசாக மிதந்தபடி போன தாமரை பூண்டின் நினைவும் வந்தது. அந்த பெண் சொன்னதும்.

‘உவ்…வ்வ்…வே’

‘அந்த தண்ணியத்தானே அம்சி கம்பனிக்காரன் சுத்தம் பண்ணித் மருந்தடிச்சு தர்றான்’ என்றான் வேகமாக. கண்ணாடி தரையை கவனித்து ஆனால் திருப்தி வராதவன் போல ‘நான் குளிக்கறத பத்தி பேசல. குடிக்கறதுக்கு?’

‘அதுவா?’ தாடையை லேசாக கீறிக்கொண்டு ‘முனிசிபாலிட்டில குளிக்க கழுவன்னு டிராக்டர்ல வந்து இறக்கினாங்க. ஆளுக்கு பத்து பத்து கொடமுன்னு’

‘ஆமா. எங்க இடத்துல கூட’

‘அதைத்தான் குடுச்சோம்’


கிருஷ்ணன் வீட்டுக்கு திரும்பியபோது மீன் குழம்பு வாசனை அடித்தது. பெரிய பாப்பா சாப்பிட உட்கார்ந்து ஒரு மீனின் உடம்பில் சதையை பத்திரமாக தேடிக்கொண்டிருந்தது .சின்னவன் அம்மா எடுத்து தந்த மீனோடு சோற்றையும் சேர்த்து வாயில் குதப்பிக்கொண்டிருந்தான். அவன் உட்கார்ந்திருந்தது அழகாக இருப்பதை கவனித்து இவன் தன்னை நகர்த்திக்கொண்டு போய் மனைவியில் அருகில் இருக்க வைத்து கீழே உட்கார்ந்து அந்த மீன் வாசனையை அனுபவித்தபடி ‘அப்பறம் என்னாச்சுது?’ என்றான்.

அவள் திரும்பி பார்க்காமல் ‘அந்தாளுக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்து அனுப்புச்சாங்க’

‘அப்பறம்?’

‘நாளைல இருந்து தண்ணிய விடுவாங்களாம்’

‘அப்பறம்?’

‘இன்னிக்கு குடிக்கற தண்ணிய டிராக்டருல கொண்டாந்தாங்க’

‘அப்பறம்?’

‘வழக்கம்போல அதுல பிளீச்சிங் வாசன’

‘ஒரே தண்ணியத்தான் குடிக்கறதுக்கும் குளிக்கறதுக்கும் கொடுக்கறானுங்க. பவுடரு போட்டா நல்ல தண்ணி.. ம்.. அப்பறம்?’

‘குளிக்க செய்யன்னு கொடுத்த தண்ணில இன்னைக்கு சமைக்கல. எனக்கு பயமா போச்சுது. பசங்களுக்கு ஏதாச்சும் தண்ணியால ஆயிடப்படாது பாரு’ என்றதும் இவன் அமைதியாக இருந்தான். பிறகு வேகமாக ‘அப்பறம்?’ என்றபோது அவள் பையனுக்கு இன்னொரு முறை முள் இல்லாத மீனை ஊட்டியபடியே சொன்னாள்.

‘அம்சி தண்ணிய வாங்கிட்டேன் இன்னைக்கு’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *