மாற்றம் செய்வோம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 7,128 
 
 

2040இல் தமிழ்நாடு (இது கனவல்ல நிஜம்)

வல்லரசு இந்தியாவில், வானளவு உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், அனைத்து வகையான ஆடம்பர பொருள்களும் நிறைந்து காணப்படும் வீடுகள், எங்கும் எதிலும் டிஜிட்டல் மயமாக காட்சியளிக்கிறது தமிழகம்.

இலவச வைஃபை வசதி, அதிவேக மெட்ரோ ரயில் வசதி போன்ற அனைத்தும் அமையப் பெற்றிருக்கிறது. தொழில்வளர்ச்சியில் முன்னோடி மாநிலம் என்ற மற்றுமொரு சிறப்பும் கூட தமிழகத்திற்கு. ஆனால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு என்பது மட்டும் கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது தான் வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.

மாதேசுக்கு சொந்த ஊர் மதுரை பக்கம் இருக்கிற குமரன் குடி என்கிற கிராமம். விவசாயியான தன் அப்பாவை ஒன்று மறியா சிறுவயதிலேயே இழந்துவிட்டான். அதன் பிறகு தாயார் தான் இவனையும், இவன் தம்பியையும் படிக்க வைத்தார்கள்.

தற்போது பி.டெக் தகவல் தொழில்நுட்பம் முடித்துவிட்டு இரண்டு வருடங்களாக சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறான் மாதேஷ். அவனோடு சேர்த்து இன்னும் நான்கு பேரும் ஒரே அறையில் தான் தங்கியிருக்கிறார்கள்.

இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் காலையில் தண்ணீர் வாங்கி வருவது மாதேசின் முறை. அதனால் காலையிலேயே தண்ணீர் கேன்களை எடுத்துக்கொண்டு தண்ணீர் பங்க்கிற்கு வந்து வரிசையில் நின்று கொண்டிருக்கிறான். ஒரு லிட்டர் குடிநீர் நூறு ரூபாய். துவைக்க மற்றும் குளிக்க பயன்படுத்தும் உப்பு தண்ணீர் ஐம்பது ரூபாய் தான். அதையும் சுலபமாக பெற்றுவிட முடியாது. அதிகாலையிலேயே கூடியிருக்கும் வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து தான் வாங்க வேண்டும். ஸ்மாட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மாதம் ஒருமுறை அரிசி இருபது கிலோவும், இருமுறை இருபது லிட்டர் குடிநீரும் ரேசன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும். மற்றவர்களின் நிலை எப்போதும் இதுதான்.

சென்னைக்கு வந்த ஆரம்ப காலத்தில், அறையில் உள்ளவர்களோடு சேர்ந்து மாதேசும் சாப்பாட்டிற்கு பதிலாக பசிக்காமலிருக்க ஏபிடைட், சப்ரசண்ட் போன்ற மாத்திரைகளைதான் சாப்பிட்டு வந்தான். பின் உடலுக்கு அது சேராமல் போகவே, இவன் மட்டும் சமைத்து சாப்பிட்டு வருகிறான்.

வாங்கும் சம்பள பணம் வாடகை, சாப்பாடு, தண்ணீர் போன்றவற்றிற்கே செலவாகிவிடும். வீட்டுக்கும் சரியாக பணம் அனுப்ப முடியாது.

அரசாங்கம் தற்போது விவசாயம் பார்ப்பவர்களுக்கு பென்சன், விவசாயிகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை மற்றும் விவசாயத்திற்கு இலவச தண்ணீர் போன்ற சலுகைகளை அறிவித்துள்ளது.

அதனால் இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் தன் கிராமத்திற்கே சென்றுவிடலாம் என முடிவெடுத்திருக்கிறான் மாதேஷ், அதன்படி ஊருக்கே திரும்பி விட்டான். எப்படியாவது 6 மாத அல்லது 1 வருட கோர்ஸ் சேர்ந்து விவசாயம் கற்றுக்கொள்ளலாம் என எண்ணினான். அப்போது தான் ஜீவாவின் ஞாபகம் வந்தது. அவனும், மாதேசும் ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள். கவுன்சிலிங்கில் ஜீவாவுக்கு அக்ரி ஐ.டி. கிடைத்தது. மாதேஷ் ஆயிரத்து நூறு மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்ததால் வேளான் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

அதன் பின்பு தான் பி.டெக் எடுத்து படித்தான். அதனால் ஜீவாவிடம் யோசனை கேட்கலாமென்று போன் செய்தான். ஜீவாவும் ஒரு முகவரியை கொடுத்து இங்கு வா என்று கூறினான். அதன்படி அடுத்த நாள் அவன் கூறிய இடத்திற்குச் சென்றான் மாதேஷ். அங்கே விளம்பரப் படம் ஒன்று எடுக்கப்பட்டு கொண்டிருந்தது. வெளியே நின்று அதை பார்த்துக்கொண்டிருந்தான்.

அதில் ஜீவா தான் பேசிக்கொண்டிருந்தான். ஸ்ரீஹர்சன் லேண்ட் டெவலப்பர்ஸ் வழங்கும் டில்லர் சிட்டி. இப்ப நீங்க பார்த்துக்கிட்டு இருக்கிற இந்த விவசாய நிலம் ஒரு செண்டின் விலை பத்து இலட்சத்திலிருந்து ஆரம்பம்.

அடிப்படை வசதிகளான குளம், கிணறு, ஆறு எல்லாமே நம்ம சைட்ட சுத்தியும் அமைஞ்சிருக்கு.

பேங்க் லோனும் நாங்களே ஏற்பாடு பண்ணி தர்றோம். விவசாயம் பாத்துக்கிட்டே மாதத்தவணை செலுத்தும் வசதியும் உண்டு.

உடனடியாக கிரயம் செய்பவர்களுக்கு பயிர் வளர்ப்பு. மற்றும் வேளாண் பயிற்சிகள் ஆறுமாதத்திற்கு இலவசமாக கற்றுத்தரப்படும்.

இன்னும் ஏன் தாமதிக்கிறீங்க போனை எடுங்க திரையில கீழ போயிட்டிருக்க நம்பருக்கு கால் பண்ணி உங்க விவசாய நிலத்த புக் பண்ணுங்க.

விளம்பரம் முடிஞ்சதும் ஜீவா, எப்படி டா இருக்க, பாத்து ரொம்ப வருஷம் ஆகுது.

நான் நல்லாருக்கேன், நீ எப்படிடா இருக்க என்றான் மாதேஷ்.

நானும் நல்லாருக்கேன், பாத்தியிலே இந்த பிஸினெஸ் தான் இப்ப பண்ணிட்டு இருக்கேன்.

தரிசு நிலத்தை வாங்கி அதுல மண்ணுக்கு ஏத்த மாதிரி விவசாயம் பண்ணி விக்கிறோம். அதுபோக அக்ரி கோர்ஸ் சொல்லிக்குடுக்கிற இன்ஸ்ட்டியூட் ஒன்னும் நடத்திட்டு இருக்கேன். ஆமா, நீயேன்பா பாத்துட்டு இருந்த வேலைய விட்டுவிட்டு வந்த என்றான் ஜீவா.

சம்பள பணம் சாப்பாட்டுக்கும், வாடகைக்குமே சரியாப்போகுது. விலைவாசி வேற அதிகமாயிருச்சு அதான் இங்கேயே வந்துட்டேன்.

ஏன்பா, நதிநீர் பிரச்சினை, மீத்தேன் பிரச்சினை, கடன் பிரச்சினைனு கொஞ்சம் கொஞ்சமா இருந்த விவசாயிகளையும், விவசாயத்தையும் அழிச்சுட்டாங்க. எல்லா பொருளையும் வெளிநாட்டுல இருந்து இறக்குமதி பண்றோம். அப்பறம், விலை ஏறாம என்ன பண்ணும் இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல விலை குறைய வாய்ப்பு இருக்குது, நதிகளை ஒன்றிணைத்து தேசியமயமாக்க அரசாங்கம் ஏற்பாடுகள் செஞ்சுட்டு இருக்கு, அது போக க்ளவுடு சீடிங் (இடூணிதஞீ குஞுஞுஞீடிணஞ்ண்) முறையிலே மழை பொழிய வைச்சு விவசாயம் பண்ண அரசாங்கம் அனுமதி தந்துருக்கே. நாளையிலிருந்து என் வீட்டுக்கு வந்துரு நானே உனக்கு எல்லாத்தையும் சொல்லித் தர்றேன் என்றான் ஜீவா.

ம்ம், சரிடா, நாளைக்கு வீட்டுக்கு வர்றேன் என்று சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தான் மாதேஷ். சாயங்காலம் ஆகிவிட்டது.

வீட்ல டீவி பாத்துட்டு இருக்கும்போது, பக்கத்து வீட்டு பையன் சுபாஷ் வீட்டுப்பாடம் எழுத உதவிகேட்டு மாதேஷ் வீட்டிற்குள் வந்தான்.
உள்ள வாடா தம்பி.

அண்ணா, ஸ்கூல்ல அசைன்மெண்ட் கொடுத்துருக்காங்க. அதான் உங்ககிட்ட கேட்டு எழுதிட்டு போலாம்னு வந்தேன்.

எதைப்பத்திடா எழுதிட்டு வர சொன்னாங்க.

காளை மாடு, பசுமாட்டை பத்திதான். ஆனா இது வேற மாதிரி இருக்கு என்று மாடுகளின் பட ஸ்டிக்கரை காண்பித்தான் சுபாஷ்.

இப்ப இருக்கிற மாடு எல்லாம் வெளிநாட்டுல இருந்து வந்த மாடுங்க. இது தான்டா நம்ம ஊரு மாடுங்க. மாடு வகையில சிறந்த மாடுங்க இந்த நாட்டு மாடுங்க தான். இப்ப இதை வண்டலூர், இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயங்களில் அரிய வகை உயிரினமா வளக்குறாங்க.

அண்ணா, இந்த மாட்டை பாத்திருக்கிங்களா?

எனக்கு உன் வயசு இருக்கும்போது எங்க வீட்டில இந்த மாடுங்க இருந்துச்சு, ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கு தடைபோட்ட இந்த மாட்டோட பயன்பாட்டை குறைச்சுட்டாங்க. அப்புறம் ரெண்டு, மூணு வருஷத்துல எங்க மாமா அந்த மாடுங்களை வித்துட்டாங்க.

ஏன்னா, ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டாங்க?

மாட்டை அடிச்சு துன்புறுத்துறாங்கனு கோர்ட்டுல கேஸ் போட்டு தடை பண்ணிட்டாங்க.

ஏன்னா அதை கொன்னு சாப்பிடுறோம் அதுக்கெல்லாம் ஒன்னும் சொல்லலையா?

சாப்பிடுறது தப்பில்லை, அதை அடிக்கிறதுதான் தப்பாம்.

எங்கள கூட தான் ஹோம் ஒர்க் பண்ணலனா, லேட்டா போனா, இங்கிலீஷ் பேசலனா ஸ்கூல்ல அடிக்கிறாங்க. அப்ப கோர்ட்டுல கேஸ் போட்டா எல்லா ஸ்கூலுக்கும் தடை போட்டுருவாங்களானா?

இல்லடா, உங்கள அடிக்க கூடாதுன்ன சொல்லுவாங்க.

அப்ப அதே மாதிரி மாட்டை அடிச்சு துன்புறுத்தக்கூடாதுன்னு சொல்லிருக்கலாம்ல ஏன்னா தடை போட்டாங்க?

அதுதான் எனக்கும் தெரியலனு மனதுக்குள் நினைத்துக் கொண்டு நீ உன் நோட்டை கொடுத்துட்டுப் போ நானே எழுதி வைக்கிறேன். காலையில் வந்து வாங்கிட்டு போ என்றான் மாதேஷ்.
ம்ம் சரின்னா காலையில வந்து நோட்டை வாங்கிக்கிறேன் என்று புறப்பட்டான் சுபாஷ்.

யாரோ தன்னை தட்டுவது போல் இருந்தது. மெதுவாக கண்ணை திறந்து பார்த்தால் அம்மா நான் எழுப்புகிறார்கள். ஏன்பா, இன்னைக்கு பனிரெண்டாம் வகுப்பு ரிசல்ட்டு வருதுனு சொன்ன. ரிசல்ட்டு பாக்க ஸ்கூலுக்கு போகணும்ல எந்திரிபா.

இப்ப தான் அவனுக்கு புரிஞ்சது இவ்வளவு நேரம் கனவுல தான் இவ்வளவும் நடந்துச்சுனு. சுவரில் மாட்டப் பட்டிருந்த காலண்டரை பார்த்தான் அதில் தேதி மார்ச் 24 2017. சரின்னு கிழம்பி ஸ்கூலுக்கு போயிட்டான்.

சரியாக ஜீவாவும் அப்போதுதான் ஸ்கூலுக்க வந்தான். ரெண்டு பேரும் நல்ல மார்க்.

நீ சொன்ன மாதிரியே பி.டெக் ஐ.டி எடுக்கலாம்டானு சொன்னான் ஜீவா.

வேணான்டா அக்ரி ஐடி எடுக்கலாம்.

ஏன்டா பி.டெக் ஐ.டி எடுத்தா நல்ல எதிர்காலம் இருக்கும்னு நீதாண்டா சொன்ன என்றான் ஜீவா.

விவசாயம் இல்லைன்னா எதிர்காலமே இருக்காது போல என மனதுக்குள் நினைத்தவாறே, அக்ரிக்கும் நெறைய மதிப்பு இருக்குடா என்றான் மாதேஷ்.

சரிடா, ரெண்டு பேரும் ஒரே கல்லூரில சேரலாம், அக்ரி ஐ.டி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *