மாற்றங்களும் ஏற்றங்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 6,183 
 
 

எழும்பூரில் ரெயில்வே குவார்ட்டர்ஸில் வசித்து வந்த எங்களுக்கு ரெயில்வேயில் பணி புரிந்து வந்த எங்கள் தாத்தா பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் தான் வாழ்க்கையில் மாற்றங்கள் ஆரம்பித்தன. பாட்டி கூடத்தில் கால் நீட்டி அமர்ந்து தன் நீண்ட கூந்தலைப் பின்னி பிச்சோடாவாக முடிந்து கொள்வாள். ஒரு நாள் மாலை கூடத்தில் போட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடியபடியே தானும் தாத்தாவும் கும்பகோணத்தில் வீடு வாங்கிக் குடியேறப்போகும் உத்தேசத்தை பொதுவாக வீட்டில் அறிவித்தாள். அந்த நொடி அம்மா முகம் பயத்தில் வெளிறியது. மூன்று சின்னக் குழந்தைகளை வைத்துக் கொண்டு மெட்ராசில் தனிக்குடித்தனம் எவ்வாறு செய்யப் போகிறோம் என்கிற மலைப்பு அம்மா முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

அப்பாவுக்கு எக்மோரில் வேலை என்பதால் பாட்டியே புரசைவாக்கத்தில் முத்தியால் செட்டித் தெருவில் ஒரு வீட்டைப் பார்த்து எங்களைக் குடித்தனம் வைத்தாள். ஒற்றை அறை. அதிலிருந்து பிரிந்து போகும் சிறிய சமையலறை. அவ்வளவு தான் போர்ஷன். அதில் விறகு அடுப்பை மூட்டி விட்டால் அம்மா மட்டுந்தான் உள்ளே போக முடியும். இப்படியாக ஐந்து வயதுக் குழந்தையான என்னுடைய வாழ்க்கையில் முதல் கட்ட வீடு மாற்றம் ஏற்பட்டது. மூன்று குழந்தைகளோடு அந்த வீட்டிற்குக் குடித்தனம் வந்த அம்மாவுக்கு இன்னும் இரண்டு குழந்தைகள் அந்த வீட்டில் பிறந்து நாங்கள் ஐவரான போது அந்த வீட்டிற்குக் குடி வந்து ஏழு வருடங்கள் ஓடி விட்டிருந்தன.

வீட்டு உரிமையாளர் ஒரு நாள் வந்து, தான் வீட்டை இடித்துக் கட்டப் போவதால் உடனே நாங்கள் காலி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார். வீடு நிச்சயமாக இடித்துக் கட்ட வேண்டிய வீடு தான். அவ்வளவு ஓட்டை உடைசல்கள் இருந்தன. இத்தனை வருடங்களில் விலைவாசி எவ்வளவோ ஏற்றங்களைக் கண்டிருந்தது. சத்தியமாக அதே முப்பது ரூபாய் வாடகைக்கு வேறு வீடு கிடைக்காது என்று வீட்டிற்காக அலைந்து திரிந்தபோது அப்பா தெரிந்து கொண்டார். அப்பா சைக்கிளில் தான் அலுவலகம் செல்வார் என்பதால் வேறு எந்த ஏரியாவிற்காவது மாறினால் கூட சமாளித்து விடுவார். சின்னம்பி மட்டுந்தான் பள்ளி செல்லும் வயது வராத குழந்தை. ஆனால் வருட நடுவில் எங்கள் நால்வருடைய பள்ளிப் படிப்பு கெடாமல் இருக்க வேண்டும் என்பதால் புரசைவாக்கத்திலேயே வீடு பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அம்மா தான் மிகவும் கவலைப் பட்டாள், பழகிய இடத்தை விட்டுச் செல்ல வேண்டுமே, வாடகை வேறு கூடுதலாகக் கொடுக்க வேண்டியிருக்குமே என்று. ஆனால் அப்பா அம்மாவை சமாதானம் செய்தார். வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் தான் நம்மை அடுத்த கட்ட முன்னேற்றத்துக்குக் கொண்டு செல்லும் என்று.

அறுபதுகளின் நடுவில் மேகலா தியேட்டருக்கு வெகு அருகில் பார்த்தசாரதி முதலித் தெருவில் ஐம்பத்தைந்து ரூபாய் வாடகைக்குக் குடித்தனம் போனோம். புதிதாகக் கட்டிய வீடு, தளம் போட்ட வீடு என்பதால் அந்த வாடகை நியாயமானது தான் என்று அப்பா ஒத்துக் கொண்டார். பழைய பாடாவதி ஓட்டு வீட்டில் மழைக்காலத்தில் சுற்றி வர பாத்திரங்களை ஒழுகும் இடங்களில் வைத்துக் கொண்டு இரவு தூங்கியதை மறக்க முடியுமா? முதன் முதலில் மேஜை மின்விசிறியை இந்த வீட்டில் தான் அப்பா வாங்கினார். மின் விசிறி என்ற ஒன்றையே நாங்கள் கண்ணால் பார்த்தது இப்போது தான். போட்டிப் போட்டுக் கொண்டு எல்லோரும் அதன் எதிரே உட்கார்ந்து கொண்டு ஆனந்தமாகக் காற்று வாங்குவோம்.

மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர். படங்கள் மட்டுந்தான் வரும். புதுப்படம் வந்தால் வாசலில் ‘ஸ்பீக்கர்’ வைத்து அந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் நாள் முழுவதும் திரும்பத் திரும்பப் போட்டுக் கொண்டேயிருப்பார்கள். வேறு வழியில்லை. தெருக்காரர்கள் எல்லாம் கேட்டுத் தான் ஆக வேண்டும். வீட்டில் சிறு குழந்தைகளான என் தங்கைகள் தம்பிகள் எல்லோரும் பாடல்கள் ஒலிப்பரப்பப்படும்போது கூடவே பாடுவார்கள். காவல்காரன் படத்தின் ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது!’ பாடல் அட்சரம் பிசகாமல் இன்றும் எனக்கு நினைவில் இருப்பதற்கு அந்த அனுபவம் தான் காரணம். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட தப்பு இல்லாமல் பாட முடியும். அவ்வளவு தடவைகள் கேட்டு அவ்வளவு தடவைகள் திரும்பப் பாடிய பாட்டு! எம்.ஜி.ஆர் படம் ஒன்றில் வரும் ‘ஒத்தையா, ரெட்டையா எத்தனை பேர் வாரீங்க? நாந்தாண்டி காத்தி!நல்லமுத்து பேத்தி!’ என்ற பாடலை அர்த்தம் ஒன்றும் புரியாமல் ஆனால் ஸ்ருதி சுத்தமாக, அனுபவித்துப் பாடும் என் எட்டு வயதுத் தங்கையை அப்பா சிரித்துக் கொண்டே கேலி செய்வார், “நீ நல்லமுத்து பேத்தி இல்லைடீ!. ராமநாதன் பேத்தி!” என்று.

அநேகமாக மேகலா தியேட்டரில் வரும் படங்களை நாங்கள் பார்த்து விடுவோம். டிக்கெட் வாங்கி வந்து இருக்கையில் உட்கார்ந்தால் படம் ஆரம்பிக்கும் வரை மின்விசிறி போட மாட்டார்கள். வேர்த்து விறுவிறுத்து திரையையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். சிறு பையன்கள் வியர்த்து ஒழுகுவதால் மேல் சட்டையைக் கழற்றி விட்டு அதாலேயே விசிறிக் கொண்டு உட்காந்திருப்பார்கள். தியேட்டரில் திரை தூக்குவதற்கு முன்னால், “உள்ளம் உருகுதையா முருகா உன் அடி காண்கையிலே!” என்ற பாட்டு தவறாமல் போடுவார்கள். அந்த தியேட்டருக்குப் போய்ப் போய் அந்தப் பாட்டு மனப்பாடம் ஆகிவிட்டிருந்தது எல்லோருக்கும். அந்த பாட்டு வந்தவுடனேயே சுறுசுறுப்பாகிவிடுவோம். எந்த நிமிடமும் திரை தூக்கப்பட்டு விடுமே? பயபக்தியோடு திரை தூக்குவதை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்போம்.

திரை தூக்கப்பட்டவுடனேயே விசில் தூள் பறக்கும். விளம்பரங்கள், செய்திச் சுருள்.. கட்டைக்குரலில், “பீகாரில் வெள்ளம்! 40 பேர் இறப்;பு” போன்ற முக்கியமான அரசு செய்திகளை கண்கொட்டாமல் பார்த்து கொண்டே இருந்தோமானால் திடீரென்று எம்.ஜி.ஆர் திரையில் சிரித்தபடி “வெற்றி! வெற்றி1” என்று வசனம் பேசிக் கொண்டே வர சினிமா ஆரம்பிக்கும். நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து கொள்வோம். இப்போதும் நாலா பக்கமும் விசில் பறக்கும். மேகலா தியேட்டரை சுற்றி இருப்பவர்கள் யாவரும் அநேகமாக அன்றாடக் கூலித் தொழிலாளிகள், கட்டிட வேலை செய்பவர்கள். அவர்களைத் தப்பாமல் தியேட்டரில் பார்க்கலாம். அந்த காலத்தில் வேறு என்ன பொழுது போக்கு? கையில் 51 பைசா இருந்தால் போதும். சினிமாவுக்கு வந்து விடுவார்கள். கதாநாயகனும் கதாநாயகியும் அழும்போது கூடவே அழுது மூக்கைச் சிந்தி, அவர்கள் சிரிக்கும்போது எஒலோரும் கூடவே புன்னகைத்து ஒருவழியாக சுபம் போட்டு திரை விழுந்தவுடன் தான் சீட்டை விட்டு எழுந்திருப்போம். 51 பைசா கொடுத்திருக்கோமில்லையா?

51 பைசா டிக்கெட் தான் கடைசி டிக்கெட்! அதுவும் மூன்று வயதுக்கு மேல் தான் டிக்கெட் என்பதால் எங்கள் வீட்டுக் கடைக்குட்டி, இன்னும் மூன்று வயது நிரம்பாத சின்னம்பியை எல்லா சினிமாக்களுக்கும் தூக்கிக் கொண்டு போய் விடுவோம். கொஞ்ச நேரம் விஷமம் செய்யாமலிருப்பான், அவனுக்கும் பொழுது போகும் அம்மாவுக்கும் வீட்டு வேலை ஆகும் என்பதால்.

சினிமா ஆரம்பித்ததும் யாராவது சாப்பிடுவது போல சீன் வந்தால் போதும் “இந்த நிமிஷம் எனக்கும் அந்த மாமா சாப்பிடறா மாதிரி ஐஸ்கிரீம் வேணும். முறுக்கு வேணும் மாம்பழம் வேணும்” என்று அழுது அமர்க்களம் செய்ய ஆரம்பித்து விடுவான். அவனை சமாளித்து மேய்த்துக் கட்டிக் கொண்டே சினிமா பார்க்க வேண்டும். ஆனால் சிறிது நேரத்தில் தூங்கிப் போய்விடுவான். சினிமா சுவாரஸ்யத்தில் நான் என் மடியில் அவனைப் படுக்கப் போட்டு, விடாமல் முதுகில் கை வலிக்கத் தட்டிக் கொண்டேயிருப்பேன். அழும் கைக்குழந்தைகளை மடியில் போட்டு சமாதானப்படுத்திக் கொண்டு தரையிலேயே உட்கார்ந்து படம் பார்க்கும் பெண்களும் அங்கே இருப்பார்கள். தரையிலேயே தூங்கிப் போகும் குழந்தைகள் போகும் மூத்திரம் மடை திறந்த வெள்ளம் போல முன்னோக்கி ஓடும்.

பார்த்த சாரதி முதலித் தெரு வாழ்க்கைக்கும் ஒரு முடிவு வந்தது. வீடு நன்றாக இருந்த போதிலும் அந்தத் தெரு முழுவதும் திறந்த சாக்கடை. கொசுத்தொல்லை. ஒருவர் மாற்றி ஒருவர் உடம்புக்கு வந்து படுத்துக் கொண்டோம். டாக்டருக்குக் கொடுத்துக் கொடுத்து கட்டுபடியாகவில்லை. நிறைய யோசித்து சுத்தமான தெருவான சுப்ரமண்ய முதலித் தெருவில் அறுபதுகளின் இறுதியில் அம்மா அப்பா ஏழு குழந்தைகளோடு குடியேறினபோது வாடகை நூறு ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இங்கே கூடம், சமையலறையைத் தவிர கூடுதலாக ஒரு படுக்கையறை இருந்தது. இங்கே குடி வந்தபோது அம்பி கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்திருந்தான்.

புரசைவாக்கத்தில் கடுமையான குடி தண்ணீர் தட்டுப்பாடு வந்து விட்டது. நள்ளிரவில் மட்டுந்தான் தெருவில் இருக்கும் ‘அடி பம்ப்’ காலியாக இருக்கும் என்பதால் அம்பி இரவு பன்னிரண்டு மணிக்குப் போய் பம்ப்பில் அடித்து அடுத்த நாள் தேவைக்கான தண்ணீரைக் கொண்டு வருவான். நாலு பேர் வரிசையில் நின்று ஒருவர் கை மாற்றி மற்றொருவர் தண்ணீரை வாங்கி வாசலிலிருந்து நீள வராந்தா வழியாக எங்கள் போர்ஷனுக்குள் கொண்டு சேர்ப்போம்.

ஒரு கட்டத்தில் தண்ணீர் கஷ்டம் சமாளிக்க முடியாமல் போய்விடவே இப்பவும் மிகவும் யோசித்து அப்பா பெஸன்ட் நகரில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் மத்திய அரசு அலுவலகக் குவார்ட்டர்ஸ§க்கு விண்ணப்பித்தார். எழுபதுகளின் ஆரம்பத்தில் அலுவலகத்தில் யாரும் பெஸன்ட் நகர் போன்ற வனாந்திரப் பகுதிக்குச் செல்ல விருப்பப்படாததால் அப்பாவுக்கு வெகு எளிதாக இடம் கிடைத்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் அங்கே குடி போயாகிவிட்டது. இரண்டு படுக்கை அறைகள், ஒரு பெரிய கூடம், சமையலறை. முக்கியமாக வீட்டுக்குள்ளேயே குளியலறை, கழிப்பறை. குழாயைத் திறந்தால் கொட்டும் தண்ணீர்! ஏதோ சொர்க்கத்திற்கு வந்ததைப் போல எங்கள் அனைவரின் உணர்வும் இருந்தது. எல்லா அறைகளிலும் தலைக்கு மேலே சுழலும் மின்விசிறிகள். ஆனால் அதை உபயோகப்படுத்தத் தேவையேயில்லாமல் அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கடற்கரையிலிருந்து காற்று நேரே எங்கள் வீட்டில் அடிக்கும் அளவுக்கு குவார்ட்டர்ஸை சுற்றியிருந்த பகுதி வெட்ட வெளியாக இருந்தது. அங்கே போய் எல்லோருக்கும் வாழ்வில் அடுத்த கட்ட முன்னேற்றங்களான மேல் படிப்பு, வேலை, திருமணம் போன்ற எல்லா சுப காரியங்களும் நடக்க ஆரம்பித்தன.

வாழ்க்கையில் இத்தனை ஏற்றங்களோடு கூடிய மாற்றங்களை எங்களுக்குக் கொண்டு வந்த எங்கள் முதல் வீடான அந்த முத்தியால் செட்டித் தெரு வீடு இப்போது எப்படியிருக்கிறது என்று பார்க்க எங்களுக்கு மிக்க ஆவல் ஏற்பட்டது. முப்பது வருடங்களுக்குப் பின் நானும் என் சகோதர சகோதரிகளும் ஒரு நாள் அங்கே போனோம். இதற்குள் எங்கள் வீட்டில் எனக்கு, இரண்டு சகோதரிகளுக்கு, ஒரு சகோதரனுக்குத் திருமணம் முடிவடைந்திருந்தது.

அடடா! என்ன இது? அந்த வீடு அப்படியே இன்னும் சிதிலமடைந்த நிலையிலேயே இருந்தது.. என்னவோ சட்டச் சிக்கலாம். வாரிசுதாரர்களுக்கிடையே தகராறாம். பாதி இடிக்கப்பட்ட நிலையில் நாங்கள் முப்பது வருடங்களுக்கு முன் குடித்தனம் போனபோது எப்படி இருந்ததோ அந்த சாயல் மாறாமல் அப்படியே இருந்தது. எங்களை அங்கேயிருந்து கௌப்பி எங்கள் வாழ்க்கையில் இத்தனை மாற்றங்களை உண்டாக்கி, எங்கள் ஏற்றங்களுக்கு சாட்சியாக இருக்கும் அந்த வீடு, தான் மட்டும் மாறாது காட்சியளித்தைப் பார்த்த போது நலிவுற்ற நிலையில் இருக்கும் நெருங்கிய சொந்தக்காரர் ஒருவரைப் பார்ப்பது போன்று சொல்லவியலாத சோக உணர்வு என் மனதில் எழுந்தது.

– லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2018

Print Friendly, PDF & Email
சிறு குறிப்பு சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்ற்ருக்கிறார். இலைக்கிய பீடம் சிறுகதைப் போட்டியில் இரு முறை பரிசு, கலைமகள் சிறுகதை போட்டி, மற்றும் குறுநாவல் போட்டியில் பரிசு கிடைத்துள்ளது. இலக்கிய சிந்தனை அமைப்பின் மாதப் பரிசினை, இரு முறை வென்றிருக்கும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *