மாறுதல் இல்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,527 
 

எங்கள் வீட்டுக்கு எதிரில்தான் அந்த மாரியம்மன் மைதானம் இருந்தது. ஒரு பெரிய மனிதருக்கு ஒரு பெரிய காரியத்தைச் சாதித்துக் கொடுத்ததன் பயனாக அந்த மைதானத்தை மாரியம்மன் ‘சன்மானமாகப் பெற்றிருந்தாள். சாதாரண மனிதர்களிடமிருந்து எந்தக் காரியத்தைச் சாதித்துக் கொண்டாலும் அந்தப் பெரிய மனிதர் ஏதாவது ‘கூலி’ கொடுத்துவிடுவது வழக்கம். பாவம் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட மாரியம்மனும் அந்த வழக்கத்துக்கு ஆளாக வேண்டியிருந்தது. ஒரு வேளை மன்னாதி மன்னர்களை யெல்லாம் ஆட்கொண்டிருந்த மண்ணாசை, ஜகன் மாதாவாகிய மாரி யம்மனைக்கூட ஆட்கொண்டிருந்ததோஎன்னமோ, யார்கண்டார்கள்

‘நடமாடாத தெய்வ’த்துக்குச் சொந்தமாயிருந்த அந்த மைதானத்தில் எத்தனை ‘நடமாடும் தெய்வ’ங்கள் குடியிருந்தன. அவர்கள் ஒவ்வொருவரும் ஆள் ஒன்றுக்கு ரூபாய் இரண்டு, மூன்று என்று மாதந்தோறும் வாடகை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த வாடகை நிலத்துக்கு மட்டுந்தான்; குடிசைகளெல்லாம் அவரவர்கள் சொந்தச் செலவில் போட்டுக் கொண்டவை. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அற்பர்களின் பிச்சைக்காசைக் கொண்டுதான் ஆனானப்பட்ட அந்த மாரியம்மன் தேர் என்றும், திருவிழா என்றும் தன்னைப் பற்றித் தானே தம்பட்டம் அடித்துக்கொள்ள வேண்டியிருந்தது!

அந்த மைதானத்தில் குடியிருந்தவர்களில் செங்கண்ணனும் ஒருவன். அவனும் அவன் மனைவி கண்ணாத்தாளும் கொத்தனார்களுக்கு உதவியாகச் சிற்றாள் வேலை செய்பவர்கள். தினசரி பொழுது விடிந்ததும், அவர்கள் இருவரும் தங்கள் சின்னஞ்சிறு குழந்தைகளுடன் குறிப்பிட்ட ஒர் இடத்தை நோக்கிக் கிளம்பிவிடுவார்கள். அங்கே தான் அவர்களைப் போன்ற தொழிலாளிகள் பலர் தினந்தோறும் வந்து வேலைக்காகக் காத்துக் கொண்டிருப்பது வழக்கம். கட்டிட வேலைக்கு ஆட்களைத் தேடிக்கொண்டு வருபவர்களும் அங்கே வந்துதான் தங்களுக்குத் தேவையான ஆட்களைப் பொறுக்கி அழைத்துக் கொண்டு போவார்கள்.

இம்மாதிரி இடங்கள் அநேகமாக எல்லா ஊர்களிலும் கடைத் தெருவைச்சார்ந்துதான் இருக்கும். இப்படியிருப்பதில் ஒரு விசேஷப் பொருத்தமும் இருக்கத்தான் செய்தது; காசு கொடுத்தால் நமக்கு வேண்டிய சாமான்கள் கடைத் தெருக்களில் கிடைக்கிறதல்லவா? அதேமாதிரி கட்டிடக் காண்ட்ராக்டர்களுக்கும் கூலி கொடுத்தால் அங்கே வேண்டிய ஆட்கள் கிடைப்பார்கள்.

அங்கே நிற்பவர்கள் அனைவருக்கும் தினசரி வேலை கிடைக்கும் என்பது நிச்சயமில்லை; ஒரு சிலருக்குத்தான் கிடைக்கும். மற்றவர்கள் சூரியன் உச்சி வானத்துக்கு வரும் வரை கால் கடுக்க நின்றுவிட்டு, ஏமாற்றத்துடன் வீடு திரும்புவார்கள். அவர்களில் சிலர் அன்று அநேகமாக அரைப்பட்டினி இருக்கவேண்டி யிருக்கும்; இன்னும் சிலர் முழுப் பட்டினி இருக்க வேண்டி யிருக்கும். இது ஒன்றும் அவர்களுக்குப் புதிதல்ல; தலைமுறை தலைமுறையாகவே அவர்களைத் தொடர்ந்து வரும் வழக்கம். இதில் வியப்புமில்லை; திகைப்புமில்லை!

செங்கண்ணனும் கண்ணாத்தாளும் தங்கள் இருவருக்கும் ஒரே இடத்தில் வேலை கிடைக்க வேண்டுமென்று எப்பொழுதுமே விரும்புவதில்லை. வெவ்வேறு இடங்களில் வேலை கிடைத்தாலும் அவர்கள் மனம் கோணாமல் செல்வார்கள். இரவு வீடு திரும்பியதும் மறுநாள் மத்தியானத்துக்கும் சேர்த்தாற்போல் சமையல் வேலை நடக்கும். பொழுது விடிந்ததும் கையில் கட்டுச் சாதத்துடன் அவர்களுடைய வயிற்றுப் பிரயாணம் ஆரம்பமாகும். வீட்டைப் பற்றியோ அந்தத் தம்பதிகளுக்குக் கவலையில்லை. ஏனெனில் திருடன் பயம்தான் அவர்களுக்குக் கொஞ்சம் கூடக் கிடையவே கிடையாதே!

* * *

செங்கண்ணன் தம்பதிகளுடைய குடிசைக்கு அடுத்தாற்போல் நாங்கள் நாலுபேர் சேர்ந்து ஒரு வாசக சாலை ஆரம்பித்திருந்தோம். இந்த வாசகசாலை பொதுஜன செளகரியத்துக்காக ஏற்படுத்தப்பட்டது என்று சொன்னால் நாங்கள் பொய் சொன்னவர்களாவோம். ஒண்டுக் குடித்தனம் இருந்த எங்களுக்குச் சிறிது நேரமாவது நிம்மதியுடன் காலம் கழிக்க ஏதாவது ஒர் இடம் வேண்டியிருந்தது. அதற்காக ஆரம்பிக்கப்பட்ட அந்த வாசகசாலையில் எங்களுக்கு இனாமாகப் பல பத்திரிகைகளை வாசிக்கும் வசதி கிடைத்தது. இதற்குக் காரணம் எங்களுடைய கஞ்சத்தனம் அல்ல; கண்கண்ட தெய்வமான காசில்லாத கஷ்டந்தான். சாயந்திர வேளைகளில் அநேகமாக என்னை அந்த வாசக சாலையில் பார்க்கலாம். ஏதாவது ஒரு தினசரிப் பத்திரிகையைப் பிரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். என்னையும் என்னுடைய நண்பர்களையும் தவிர, வேறு யாரையாவது அந்த வாசக சாலையில் பார்ப்பது அபூர்வம். ஆமாம், உலகச் செய்திகளைத் தெரிந்து கொள்வதில் அங்கிருந்தவர்களுக்கு அவ்வளவு ஆர்வம் இருந்தது.

எந்தக் கவலை எப்படியிருந்தாலும் செங்கண்ணன் மட்டும் நான் பத்திரிக்கை படிக்கும்போதெல்லாம் என்பக்கத்தில் வந்து உட்கார்ந்து விடுவான். அவனுக்கு உலகச் செய்திகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இல்லாவிட்டாலும், ஊர்ச் செய்திகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு.

நான் பத்திரிக்கையைப் பிரித்ததும் பிரிக்காததுமாக யிருக்கும்போதே “என்னங்க, இன்னிக்கு என்ன சேதிங்க?’ என்று கேட்டான் அவன்.ஆவலுடன்.

“நமக்குத்தான்சுயராஜ்யம் வந்துடுத்துன்னு உனக்குத் தெரியுமே! இனிமேல் நம் தலைவர்கள் ஒன்று செய்யப் போகிறார்களாம். அதாவது, உன்னைப் போன்ற ஏழைத் தொழிலாளிகளுக்கு முதலாளிகள் தங்களுக்கு வர லாபத்திலே பங்கு கொடுக்க வேணுமென்று சட்டம் செய்யப் போகிறார்களாம்”

“ம்….விட்டுத் தள்ளுங்க! என்னை யொத்தவங்க பிழைப்புத்தான் தினம் ஒரு முதலாளியைத் தேடிக்கிட்டுப் போறதா யிருக்குதுங்களே? நாங்க எந்த முதலாளியைக் காணப்போறோம், எந்த லாபத்தைக் காணப்போறோம்?”

“அப்புறம் இன்னொரு சேதி, நம் இந்தியாவின் மதிப்பு ஐரோப்பாவிலே வர வர உயர்ந்து கொண்டே இருக்கிறதாம்….”

“சரி இங்கேதான் உயரலே; அங்கேயாவது உயரட்டும்!”

“என்ன செங்கு, இதெல்லாம் உன்னைப் போன்றவர்களுடைய நன்மைக்குத்தான் என்று உனக்குத் தெரியமாட்டேன் என்கிறதே! – சரி, இன்னும் ஒரே ஒரு சேதி கேளு; உனக்குப் பின்னால் உன் பெண்டாட்டி, பிள்ளை எப்படிப் பிழைக்குமென்று நீ கவலைப்படுகிறாயா இல்லையா?”

“ஆமாங்க!” 

“அதற்கும் ஒரு வழி செய்யப் போகிறார்கள். அதாவது உங்களை யெல்லாம் கட்டாயமாக இன்ஷ்யூரன்ஸ் செய்து கொள்ளச்சொல்லப் போகிறார்கள்!”

“அப்படின்னா…?”

“நீ திடீரென்று செத்தால் உன் பெண்டாட்டி பிள்ளைகள் பிழைத்துக் கொள்வதற்கு ஏதாவது பணம் கிடைக்கும்.”

“உசிராயிருக்கிறப்போ…”

“ஒன்றும் கிடைக்காது!”

“சரி, அப்படின்னா அதையும் விட்டுத் தள்ளுங்க”

“சரிசரி நீ இப்படியே பேசிக்கொண்டு போனால், நான் உன்னையே விட்டுத் தள்ள வேண்டியதாய்த்தான் இருக்கும்!” என்பேன் நான்.

செங்கண்ணன் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவான்.

* * *

அன்று எதிர்பாராதவிதமாகச் செங்கண்ணன் தம்பதிகளுக்கு குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்குக் குறைவில்லாத வேலை கிடைத்தது. அவர்களுக்கு மட்டும் என்ன? அங்கிருந்தவர்கள் எல்லோருக்குமே கிடைத்தது. பிரபல காண்ட்ராக்டரான கச்சாபகேசனின் ஆட்கள் வந்து அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார்கள். செங்கண்ணன் சந்தோஷத்துக்குக் கேட்க வேண்டுமா? “அப்பாடா! ஆறு மாசத்துக்குக் கவலையில்லை!” என்று எண்ணி அவன் ஒரே ஆனந்தத்தில் மூழ்கி விட்டான்.

அந்த ஆனந்தம் அன்று மாலை அவன் என்னைச் சந்திக்க வந்தபோதும் இருந்தது. வந்ததும் வராததுமாக “இந்தாங்க, நாலணா!” என்று அவன் என்னிடம் ஒரு நாலணாக் காசை எடுத்துக் கொடுத்தான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை; “இந்தக் காசு எதற்கு?” என்று கேட்டேன்.

“சும்மா வச்சி வையுங்கோ இப்படித் தினந் தினம் ஒரோரு நாலணாவா உங்ககிட்ட கொடுத்துக்கிட்டு வரேன்; எல்லாத்தையும் சேர்த்து நான் கேட்கிறப்போ மொத்தமாகக் கொடுங்க! எங்க குடிசை ரொம்ப நாளா வானத்தைப் பார்த்துக்கிட்டு நிற்குது; மழை பேஞ்சா உங்க வாசக சாலையைத் தேடி ஓடிவரவேண்டி யிருக்குது. அதைப் பிரிச்சுக் கட்டணுமில்லே; அதுக்குத்தான் இந்த நாலணாக்காசு! அதில்லாம எனக்கு ஒரு வேஷ்டி, என் பெண்டாட்டிக்கு ஒரு புடவை, குழந்தைக்கு ஒரு சட்டை எல்லாம் வாங்கணும். எத்தனையோ நாளுக்குப் பிறகு இன்னிக்குத்தான் எங்க ரெண்டுபேருக்கும் நல்ல வேலையா ஒரு ஆறு மாசத்துக்கு கிடைச்சிருக்குதுங்க! எனக்கு ஒரு ரூபா கூலி, கண்ணாத்தாவுக்கு முக்கா ரூவா கூலி. ஒண்ணரை ரூவாயிலே சாப்பிட்டுக்கிட்டு மிச்சம் நாலணாவை உங்ககிட்ட சேர்த்து வைக்கலாம்னு பார்க்கிறோம்!’ என்றான் அவன்.

“சரி!” என்றேன் நான்.

ஆனால் அவனுடைய உறுதி ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை. ஐந்தாவது நாளே அவன் என் வீட்டைத் தேடி ஓடோடியும் வந்து, ‘என் எண்ணத்திலே மண் விழுந்து போச்சுங்க! கல்லு வரலேன்னு எங்களுக்கு இன்னிக்கு வேலையில்லை; அந்த ஒரு ரூ வாயைக் கொடுங்க, சாப்பாட்டுக்கு’ என்றான். நானும் கொடுத்துவிட்டேன்.

இப்படியே அவன் நாலைந்து நாட்கள் என்னிடம் நாலணா கொடுப்பதும், ஐந்தாவது ஆறாவது நாள் வந்து சேர்த்ததை வாங்கிக்கொண்டு செல்வதுமாக இருந்தான். விதியை வெல்லப் பார்க்கும் அவனுடைய முயற்சிக்கு இவ்வளவு சோதனையா!’ என்று எண்ணி என் மனம் வருந்தும். ஆனால் அவனுக்கு ஏதாவது உதவி செய்வதன் மூலம் அந்த வருத்தத்தைப் போக்கிக் கொள்ளும் சக்தியை நான் பெற்றிருக்கவில்லை; ஆண்டவனும் எனக்குக் கொடுத்திருக்கவில்லை.

* * *

இந்த நிலையில் ஒரு மாசத்துக்குப் பிறகு ஒரு நாள் அவன் என்னிடம் வந்து, “என்னங்க, உங்களாலே எனக்கு ஒரு உதவி செய்ய முடியுங்களா?” என்றான்.

“என்ன உதவி….?: என்றேன்.

“எனக்கு ஒரு குழந்தை இருக்குது பாருங்க. அதாலே ரொம்பத் தொந்தரவா யிருக்குதுங்க! நேத்து வேலை சமயத்திலே அது ‘வாள், வாள்’னு கத்தித் தொலைச்சுது. பெத்தவளுக்கு மனசு கேட்குமா? சித்த எடுத்துக் கொஞ்சம் பால் கொடுத்தா. அந்தச் சமயம் பார்த்து எசமான் வந்துட்டாரு. அப்புறம் என்ன? ‘குழந்தைக்குப் பால் கொடுக்கிறதுன்னா நீ வீட்டிலேயே இருந்துக்க, இங்கே வரவேணாம்’னு சொல்லிப்பிட்டாரு!”

“அப்படியானால் அந்தச் சின்னஞ் சிறு சிசுவோடு வேலைக்கு வந்து வயிறு வளர்க்க வேண்டியிருக்கும் உங்களுடைய கதியைப் பற்றி அவர் கவலைப்படவில்லை; குழந்தைக்குப் பால் கொடுப்பதால் தன் வேலைக்குக் குந்தகமாய்ப் போய்விடுகிறதே என்றுதான் கவலைப்பட்டாரா!”

“ஆமாங்க!”

“அதற்கு நீ என்ன சொன்னாய்?”

“கோவிச்சுக்காதிங்க, எசமான் நாளையிலேருந்து குழந்தையை வீட்டிலே விட்டுட்டு வந்துட்றோம் னு சொன்னேன். எங்க வயிற்றிலே பாலை வார்த்தாற் போல ‘சரி’ன்னாரு. ஆனா இப்படிச் சொல்லி அந்தச் சமயம் தப்பிச்சுட்டோமே ஒழிய, நாளைக்குக் குழந்தையை எங்கே விட்டுட்டுப் போறதுன்னு தெரியலே – குழந்தையும் அப்படி ஒண்ணும் சின்னக் குழந்தையில்லே; பெரிய குழந்தைதான். யாராச்சும் வேளா வேளைக்குப் பால் வார்த்து வச்சிருந்தா பேசாம இருக்கும்….”

“அப்படியென்றால் உன்னுடைய குழந்தையை என் வீட்டிலே விட்டுவிட்டுப் போகிறேன் என்கிறாயா?”

“ஆமாங்க….!”

“அதற்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால்…?”

“அப்படி ஏதாச்சும் நேர்ந்தாத்தான் ரொம்ப நல்லாதாப் போச்சுங்களே!”

இதைச் சொல்லும்போது அவன் குரல் கம்மியது; என்னுடைய நெஞ்சம் நெகிழ்ந்தது.

இருந்தாலும் “எனக்கென்னமோ சம்மதந்தான்! ஆனால் என் வீட்டுக்காரி ஒப்புக் கொள்ள வேண்டுமே; கணவன் – மனைவியாயிருந்தாலும் நான் வேறு, அவள் வேறாகவல்லவா இருக்கிறோம். எதற்கும் நீ கொஞ்ச நேரம் இங்கேயே இரு; நான் அவளைக் கேட்டுக் கொண்டு வந்து சொல்கிறேன்!” என்றேன் நான். “அப்படியே செய்யுங்க!” என்றான் அவன்.

நான் உள்ளே சென்று என் சகதர்மினியிடம் நடுங்கும் குரலில் விஷயத்தைச் சொன்னேன். அத்துடன், “இம்மாதிரி ஏழைகளுக்கு இரங்குவது ஏகாதசி விரதம் இருப்பதைக் காட்டிலும் சிறந்தது” என்றும் சொல்லி வைத்தேன்.

அவ்வளவுதான்; ஆண் சிங்கங்களெல்லாம் வெட்கித் தலை குனியும்படியாக அந்தப் பெண்சிங்கம் என்னை ஏறிட்டுப் பார்த்தாள். நான் தலை குனிந்து வெளியே வந்தேன். என் முகபாவத்திலிருந்தே செங்கண்ணன் விஷயத்தைத் தெரிந்து கொண்டு விட்டான். “என்னாலே உங்களுக்கு ஏனுங்க வருத்தம்? நாளையிலேருந்து நான் அவளை வேறே எங்கேயாச்சும் வேலை பார்த்துக்கிடச் சொல்றேன்” என்று கூறிவிட்டு அவன் போயே போய் விட்டான்.

* * *

மறுநாள் முதற்கொண்டு கண்ணாத்தா பழைய இடத்துக்கே போய் நிற்க ஆரம்பித்தாள்; வேலை கிடைத்த போது செய்தாள்; கிடைக்காதபோது வீடு திரும்பினாள். செங்கண்ணன் மட்டும் காண்ட்ராக்டர் கச்சாபகேசனிடமே வேலை பார்த்து வந்தான். ஆனால், தினசரி நாலணா மிச்சப்படுத்த வேண்டுமென்ற அவன் மனோரதம் மட்டும் கடைசிவரை நிறைவேறவேயில்லை.

ஆறு மாதங்களுக்கு மேலேயே ‘அந்தி பவனம்’ என்று அந்த அழகான பங்களாவின் வேலை நடந்தது. ‘பிளான்’ வரைந்து கொடுத்தவர் ‘பீஸை’ப் பெற்றுக் கொண்டு போய்விட்டான்; செங்கண்ணனைப் போன்றவர்கள் சேற்றிலும் சகதியிலும் உழன்றனர்; கண்ணாத்தாவை போன்றவர்கள் கல்லையும் காரையையும் சுமந்தனர். கொத்தனார்களோ பதை பதைக்கும் வெய்யிலில் கரண்டியும் கையுமாகக் கற்களைக் கணக்காக அடுக்கினர். தச்சர்களோ உளியும் கொட்டப்புளியுமாக உட்கார்ந்து, வியர்வை சொட்டச் சொட்ட மரத்தைப் ‘போடு, போடு’ என்று போட்டனர். இவர்களையெல்லாம் மேஸ்திரி என்னும் ஒரு கூலி, தானும் அவர்களைப் போல் ஒரு கூலி என்பதையே அடியோடு மறந்து, அடிக்கடி மிரட்டிக் கொண்டிருந்தான்.

அவ்வளவு எஜமான விசுவாசமுள்ளவன்போல் நடித்து அவன், ஆளுக்கு ஓரணா இரண்டனா ‘தண்டக்காசு’ அழும்போது மட்டும் அக்கம் பக்கம் பார்த்து வாங்கிப் பையில் போட்டுக் கொண்டான்!

அவன் ‘பார்வை’ போதாதென்று எண்ணியோ என்னமோ, அடிக்கடி வந்து தன் விலையுயர்ந்த பார்வையை அந்தி பவனத்தின் மீது செலுத்தி வந்தார் கச்சாபகேசன். கட்டிட வேலை முடிந்தது; கடைசியில் கணக்குப் போட்டுப்பார்த்தார்; எல்லாம் போக ரூபாய் ஏழாயிரத்துச் சொச்சம் மிச்சமென்று தெரிந்தது.

அடுத்த சில நாட்களுக்கெல்லாம் அவர் தம்மிடமிருந்த பழைய ‘போர்டு மாடல்’ கார் ஒன்றை விற்றுத் தொலைத்தார். அத்துடன் ‘அந்தி பவன’த்தின் வாயிலாகக் கிடைத்த ரூபாய் ஏழாயிரத்துச் சொச்சத்தையும் சேர்த்து ஒரு பேஷான ‘ப்யூக்’ கார்வாங்கி மகிழ்ந்தார்.

இது அந்தி பவனத்தின் மூலம் கச்சாபகேசனின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சிறு மாறுதல்.

ஆனால் அந்த ‘அந்தி பவன’த்தின் சிருஷ்டி கர்த்தாக்களான செங்கண்ணன், கண்ணாத்தா முதலியவர்களின் வாழ்க்கையிலோ….?

எந்தவிதமான மாறுதலும் இல்லை!

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *