மாயத்தூண்டில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 6,530 
 
 

இரண்டு விடயங்கள்தான் இப்போது என்னைக் கடைந்துகொண்டிருக்கின்றன. ஆறுமாதமாக பணியில்லை. வேலையில் இல்லை என்பதை நான் சமாளித்தாலும் வெளியில் என்னைக் காண்பவர்களுக்கும் போனில் குடையும் மற்றவர்களுக்கும் இதுவே முதன்மையான பேசுபொருளாகவும் பிரச்சனையாகவும் இருக்கிறது.

இப்போதான் ஆடத்தொடங்கியிருக்கும் முதற்பல்லை நாக்கால் நிமிண்டிக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு “ உங்களுக்கு ஏம்பா வேலை ” என்றான் கடைக்குட்டி கந்தன்.

“ வேலைக்குப்போனாத்தானே மகன் காசுகிடைக்கும் ”

“ அய்யோ அய்யோ, எதுக்கப்பா சும்மா மெனெக்கெட்டு வேலைக்கெல்லாம்போய்………. நேராய் பாங்குக்குப்போய் பேப்பரில கீறிட்டுக்குடுங்கோ………… காசுதருவாங்கள் ”

ஐந்தாவது படிக்கும் அருவியோ மடிக்கணினியை எடுத்துவைத்துகொண்டு “ உங்களுக்கு இன்னா ஜொப் வேணும் சொல்லுங்கோ……………நான் பிடிச்சுத்தாரேன்பா” என்கிறாள்.

ஏதாவது செய்துதான் ஆகணும். எனக்கான வேலையை பத்திரிகைகளிலும், இணையங்களிலும் கடுகித் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்காவிட்டால் ஏதாவது சுயதொழிலாவது இறங்கவேண்டும். சுயதொழில், வியாபாரம்போன்ற சதுரங்கங்களில் இணைவி சாதனாவுக்கு அத்தனை இஷ்டமில்லை.

ஊரிலிருக்கும் என் ஒன்றிவிட்ட சகோதரி தமயந்திக்கு 2 ஆண்களும், 3 பெண்களுமாக ஐந்து பிள்ளைகள். ‘அவர்களுள் ஒருத்தியையாவது கரைசேர்த்துவிடு அண்ணா’ என்று சொல்லி அவளும் பிலாக்கணம் வைத்துக்கொண்டிருக்கிறாள். அவள் பெண்களுள் பெரியவள் ஜெயதாகினியை இப்போ ஆறுமாதத்துக்கு முன்பதாகத்தான் இங்கே இறக்குமதி செய்து வைத்திருக்கிறேன். நல்ல சூட்டிகையான பெண். யாழ் பல்கலையில் பொருளாதாரம் இளநிலை முடித்திருக்கிறாள், கணனி தெரியும். இப்போ ஜெர்மன் தீவிரக்கற்கைநெறியில் சேர்த்துவிட்டிருக்கிறேன். விரைவில் எதையும் பிடித்துக்கொண்டுவிடுவாள். என்னிடமும் சாதனாவிடமும் பிள்ளைகளிடமும் அப்படியொரு ஒட்டுதலும் பாசமும்.

நானாகவும் தெரிந்தவர்களிடம் சொல்லிவைத்தும் அவளுக்குப் பொருத்தமான ஒரு பையனையும் அதே கதியில் தேடிக்கொண்டிருக்கிறேன். முதலில் எது கிடைத்தாலும் சந்தோஷந்தான்.

**

பத்திரிகைகளிலும், இணையங்களிலும் தொடர்ந்த என் தேடலில் அந்த விளம்பரம் கண்ணில் பட்டது PFAFF COMPANY ஒன்று விற்பனைக்கு. குறிப்பிட்ட அவ்விற்பனை நிலையத்தின் முகவரி எங்கள் வீட்டிலிருந்து ஒரே சுரங்கத்தொடருந்தில் அடையக்கூடிய இடமாக இருந்ததால் ஆர்வம் அதிகமாகி அவ்விளம்பரத்தை திரும்பவும் முழுவதுமாகப்படித்தேன். மெல்லமெல்ல உள் மண்டையுள் குறுகுறுப்பு ஏற்படத்தொடங்கிற்று. சாதனாவிடமும் விஷயத்தைப் பகிரலாமெனத்தான் எண்ணினேன். என்ன முதலில் வேண்டாமென்று முன்மறிப்பாள். எனது இத்தகு பரிசோதனை முயற்சிகளை அவள் மறுப்பதற்கான நியாயமும் இல்லாமல் இல்லை. ஒரு ரொட்டியைக்கூட கருகாமல் பதமாகச்சுட்டு எடுக்கத்தெரியாத நான் உணவகம்சார்ந்த வியாபாரத்தில் இறங்கலாமா? Gastronomy யின் அரிச்சுவடியோ, சூட்சுமங்களோ புரியாமல் உணவகம் ஒன்றுக்குள் நீளமாகக்காலைவிட்ட என் முதல் அனுபவம், என்னை எழுந்திருக்க முடியாதவகையில் ஆழஅமிழ்த்தியது. வியாபாரத்தில் தொடர்நஷ்டம், ஒரு பக்கம் அதைமீள விற்கமுடியாத அவஸ்தை, மறுபக்கங்களில் வங்கியும் வட்டியும், காப்பீட்டுக்குழுமமும், ஆதனமுகவரும் (Real Estate) சங்கிலேறி நசுக்க வாஷ்மெஷினுள் தானாய் நுழைந்து மாட்டிக்கொண்ட பூனையாய்த் திணறினேன். அவ் அனுபவம்கூடவே அச்சகடயோக ஓரையில் மாமனிதர்கள் பலரின் சொரூபங்களைத் தரிசிக்க வைக்கவும், வேண்டாமடா சாமியோ வியாபாரம் என்றானது.

முதலில் போய் இந்நிலையத்தைப்பார்ப்பது, எமது கணிப்பீட்டுக்குள். அமைந்து வரக்கூடியதாயின் சாதனாவுடன் கலந்து அவளைச் சமாதானப்படுத்தி ஒரு முடிவுக்கு வரலாம் என்கிற எண்ணத்துடன் அடுத்தநாள் நேரில்போய் அவர்களைப் பார்த்துப் பேசினேன்.

ஆகப்பெரிய நிலையம் என்று சொல்லமுடியாது, நீளப்பாங்கான கட்டமைப்பில் அமைந்த வியாபாரஸ்தலம். பின்பக்கமாக அலுவலகமும் கழிப்பறை, காப்பி-மளிகறை (Pantry) என்பன இருந்தன. வீதிப்பக்கமுள்ள சுவர் முழுவதும் ஒரு ஷோறூமுக்குகந்த வகையில் கண்ணாடியால் அமைக்கப்பட்டிருந்தது. PFAFF ஐவிடவும், இதர ஜாதிகளைச்சேர்ந்த தையல் இயந்திரங்களுமாக மொத்தமும் 50 இயந்திரங்கள் வரையில் அங்கிருந்தன. காலனித்துவ நாட்டினரான நமக்கு காரென்றால் AUSTIN, பேனாவென்றால் PARKER, மிதியுந்தென்றால் RALEIGH, கைக்கடிகாரமென்றால் ROMER, என்பதைப்போல் தையல்மிஷினென்றால் SINGER தான் முதலில் எமக்குத் தெரிய வந்ததும் உசத்தியானதுமான இனம்.

என் சின்னவயதில் சாவகச்சேரி- சுன்னாகம் வீதியில் எமது வீட்டைக்கடந்து SINGER குழுமத்தின் பேருந்துகள் எப்போதாவது செல்லும். சில விளம்பரவாசகங்கள் கவிதையின் தரத்தில் இரசிக்கும்படியாக இருக்கும். அப்பேருந்துகளின் பின் பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் விளம்பரவாசகம் ஒன்று நிஜமானதாகவும் எனக்குப் பிடித்ததாகவும் இருந்தது.

‘WE TAUGHT THE WORLD TO SEW’ என்பதே அது.

எங்கள் அம்மாவிடமும் காலால் இயக்கும் வகையிலான SINGER மிஷின் ஒன்று இருந்தது, அது தாத்தா அவருக்கு சீதனமாகத் தந்தது என்பதில் அம்மாவுக்கு ஏகப்பட்ட பெருமை. அந்த மிஷினுக்கேயுரியதும் அதுக்கான மெல்லிய மசகெண்ணை வாசமும் நெடுங்காலமாக அது கிடந்த அறையில் இருந்தன. அம்மா பெண்களுக்கான சட்டைகள், பூவேலைப்பாட்டுடனான குழந்தைகளுக்கான ஆடைகளை அழகாகத் தைப்பதில் சுற்றுவட்டத்தில் பெயரெடுத்திருந்தார். ஆறு ஏழுவயதுவரையிலும் அம்மா தைத்துத்தந்த முதுகில் வார்வைத்த தோரணச்சட்டையைத்தான் [Sunsuit] மேலே பெனியனோ, டீ-ஷேர்ட்டோ இல்லாமல் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போனேன். அம்மா தைப்பது பாட்டிக்கு மட்டும் பிடிக்காது. பெண்கள் சதா தைத்துக்கொண்டிருந்தால் அது வாழ்மனையின் ஐஸ்வர்யத்தை ஊதிவிட்டுவிடுமாம். இதைப்போல் தொன்மங்கள் பலவற்றிலும் பல நுண்ஆய்வுகள்செய்து வாழ்மனைக்கு ஆகாதபல சாங்கியங்களைக் கண்டுபிடித்து யாரும் எதிர்க்கேள்விபோடாதபடிக்கு அவரது பரிபாலனத்தில் அமுல்படுத்திருந்தார், அவ்விதிகளின்படிக்கு இன்னும் எவரும் சதா நாவல்கள் படித்துக்கொண்டிருப்பது, சீட்டாடுவது, கொக்கான் வெட்டுவது, ஒற்றைக்காலில் நிற்பது, முட்டிபோட்டிருப்பது, தலையில் கைவைப்பது, சத்தமாக கொட்டாவிவிடுவது, விரல்சொடக்குப் போடுவது, நெட்டிமுறிப்பது, நெல்லைப்பொரிப்பது, பாற்கஞ்சி காய்ச்சுவது, அந்திக்கருக்கலில் சாப்பிடுவது, இரவானபின் நகம் வெட்டுவது, காசு முட்டை உப்பு கடன்கொடுப்பது எல்லாம் தடைசெய்யப்பட்டிருந்தன.

நான் அந்த PFAFF குழுமத்துள் நுழைந்ததுவுடன் எங்கள் வீட்டின் SINGER மிஷினில் இருந்து வரும் சுகமான கந்தம் நாசியைத்தாக்கவும் எனக்கு அம்மாவே ‘மகன் இதுதான் உனக்கான இடம், வாங்கடா இக்கம்பனியை’ என்று ஆசீர்வதிப்பதைப்போல் இருந்தது. நேராகப்போய் அதன் முகவரைப் பார்த்தேன்.

நடுவயதிலிருந்த அந்த ஜெர்மன்காரர் என் கண்களை நேர்கொண்டு பார்த்துப்பேசியவிதம் பிடித்திருந்தது. அவரிடம் தில்லுமுல்லுகள் இருக்காதெனவும் சொல்லியது. குழுமத்தை விற்கவிரும்புவதன் உண்மையான காரணத்தை அவராகவே சொன்னார்: குடும்பத்தில் மணமுறிவு, மனைவி என்னுடன் இல்லை. அதனால் இந்த உழைப்பும், ஓட்டமும் இனி எனக்கு வேண்டியதில்லை, என் கிராமத்தில்போய் ஓய்வாக வாழவிரும்புகின்றேன்.

நான் கேட்கத்தயங்கிய அந்த ஆண்டுக்குரிய வியாபார விபரங்கள், விற்பனைக்கமைய வரிசெலுத்தியமைக்கான அத்தாட்சிகள் என்பவற்றைத் தன் கணினியிலிருந்து காட்டினார். “நீங்கள் விரும்பினால் அமய அல்லது நிபந்தனை ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டு எம்முடன் ஒரு மாதம் இருந்து வியாபாரத்தை நேரடியாகக் கண்காணிக்கலாம், ஒன்றும் அவசரமுடிவுகள் எடுக்கவேண்டியதில்லை” என்றார். அந்தப்பேரத்திலும் ஒரு கண்ணியமும் நெகிழ்வுத்தன்மையும் இருந்தன.

அது ஒரு வசந்தகாலம். சராசரியாக வாரத்தில் 5 மெஷின்கள்தான் விற்பனையாகுமென்று அம்முகவர் சொல்லியிருந்தும் அம்முதல் வாரத்தில் 6 மெஷின்கள் விற்பனையாயின. மெஷின்களின் விற்பனை வருஷத்தின் எல்லாமாதங்களும் ஒரேமாதிரி இருக்காது, மாறுபடும். சிறப்பாக டிசெம்பர் பண்டிகை மாதமாதலால் உழைக்கும் மக்களுக்கு விஷேட விழாக்கால சிறப்புப்படிகள் கிடைக்கும். அநேகமானோர் பழைய பண்டங்களைத்தூக்கிக் கடாசிவிட்டுப் புதியவற்றை நுகர்வுறும் காலமும் அதுதான், ஆதலால் விற்பனையிலும் சற்றுத்துடிப்பு இருக்கும்.

வசந்தம் முடிந்து கோடை விடுமுறைக்காலம் ஆரம்பித்துவிட்டிருந்தது, அநேகமான பெற்றோர்கள் பிள்ளைகளுடன் வெளிநாடுகளுக்கோ வெளியூருக்கோ சென்றிருப்பர். வியாபாரமும் மிகவும் சோர்வாக இருந்தது. அவ்வாரம் 3 மெஷின்கள் விற்கமுடிந்தாலே சிலாக்கியம் போலிருந்தது. ஒரு நாள் மதியம் கணினியில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது திடுப்பென ஒரு இளைஞன் நிலையத்துள் நுழைந்து ‘Guten Tag’ என்றான். பார்வையில் தமிழன் என்று தெரிந்தது. இருந்தும் கேட்டுவைத்தேன்.

“Guten Tag…………. தம்பி தமிழா ”

“ ஆமாண்ணே ”

“ மெஷின் ஏதும் பார்க்கிறீங்களா ”

“ இல்லேண்ணே…………… என்பெயர் மோகனரமணன் பாட்ஸிலர், அதோட தற்சமயம் நான் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்………… இப்படிப்போய்க்கொண்டிருந்தனா இங்கே ஒரு கருப்புத்தலை தெரிஞ்சுது நுழைஞ்சுட்டேன் ”

“தம்பி நானும் மூன்று மாசமாய்த்தான் இந்த நிலையத்தை ஒரு நிபந்தனை ஒப்பந்தத்தோட எடுத்துப் பரிசோதனை செய்துகொண்டிருக்கிறேன், முன் அனுபவம் இல்லாமல் முன்னரும் ஒருமுறை Gastromie field இல காலைவிட்டுச் செமையடிபட்டுக்கொண்ட அனுபவமும் இருக்கு.”

“ எப்பிடிப்போய்க்கொண்டிருக்கு ”

“ மாஜின்லதான் நிக்குது………… இன்னும் இம்புறூவ் பண்ணவேண்டும், புறோகிறெஸ் இருந்தால்தான் தொடர்ந்து செய்யலாம்”

“ எல்லாம் வெல்லலாம் அண்ணை, வெல்லுவம் என்று நம்பிக்கை வையுங்கோ”

“ எதை வைச்சுச்சொல்லுறீர் ”

“ இங்கே ஹேர் சலூனும் இறைச்சிக்கடையும் வைத்திருக்கிற நம்ம ஆட்கள் எல்லாம் என்ன ஊரில ட்றெயினிங் எடுத்திட்டே வந்தவை…………. ஆரம்பத்தில தட்டுத்தடுமாறி நடந்து பிறகு மெல்ல எழும்பி நிற்கேல்ல. முதல்ல இப்படி ஊ-பாண் வாசலோட பிஸினெஸுக்கான ஸ்பொட்டில ஒரு இடம் கிடைச்சிருக்கிறதே அதிஷ்டம் , ஒருநாளைக்கு கடை எத்தனைபேருடைய கண்ணில படக்கூடிய வாய்ப்பிருக்கு……… எனக்கொரு சான்ஸ் தந்துபாருங்கோ, நிச்சயமாய் மேலே கொண்ணந்து காட்டுறன் ”

மிகவும் தன்னம்பிக்கையுடன் பேசினான்.

“ மனத்தில இருக்கிறதை தெளிவாய்ச் சொல்லும் ”

“ என்னை குறைந்தபட்ஷ சம்பளத்தில உங்கட சேல்ஸ் அசிஸ்டென்டாய் இரண்டொரு மாதம் வைத்திருந்து பாருங்கோ………… ஏதும் என்னால புறோகிறெஸ் வந்திச்சா தொடர்ந்து வைச்சுக்கொள்ளுங்கோ, இல்லேன்னா நானாவே கழன்டிடுவன் ”

“ இந்தமாதிரியான பிஸினெஸில உமக்கு முன் அனுபவம் ஏதாவது இருக்கா………. குறைந்தது துணியில நேராகத்தைக்கவாவது தெரியுமா ”

“ என்ன அண்ணே இப்பிடிச்சொல்றியள்…………… வந்தபுதிதில லுண்டாவில (Flohmarkt) வாங்கின Stapler மாதிரியான Hand held Sewing மெஷினால சாரம் தைத்து உடுத்திருக்கிறேன், இந்தமாதிரி மொடேர்ண் எலெக்டிறிக் மெஷின்ஸ் பற்றியெல்லாம் தெரியாது, ஊரில கொஞ்சம் மோட்டோர்பைக் றிப்பேருகள் செய்திருக்கிறன், தவிரக்கொம்பியூட்டரும் கொஞ்சம் வரும் ”

நிஜமாக ஒரு பெண்விற்பனை உதவியாளர் இருந்தால் வாடிக்கையாளர்களுடன் தொடர்பாட நன்றாயிருக்குமென்று என் மனதிலும் ஒரு எண்ணம் இருந்தது. மீறி வந்த அசட்டுத்துணிச்சலில் அவனைச் சேர்த்துக்கொண்டேன்.

முதல் நாள் அங்கே இருந்த மெஷின்கள் அனைத்தினதும் திருத்தக்கையேடுகளையும் புரட்டிப்படித்தான். சில மெஷின்களில் நூலைக்கோர்த்துத் தைத்தும் பார்த்தான். எட்டுப்பத்து நிறத்தில் நூல்களைப்பொருத்தி எம்ப்ராய்டறி வேலைகள் செய்யக்கூடிய மெஷின்களிலும் அவனது ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. புதியனவற்றை அறியவேண்டும் என்கிற வேகமும் தேடலும் அவனது செயற்பாடுகளில் இருந்ததைக்கண்டுகொண்டேன்.

அன்று ஒரு நடுத்தரமாது உள்ளே வந்தாள். அவளைக் கவனிக்கச்சொல்லி ஜாடை காட்டினேன். மோகனரமணன் குரலில் எக்ஸ்டிரா இனிமையச் சேர்த்துக்கொண்டு அவளுக்கு ‘Guten Tag’ (வந்தனம்) சொல்லி உள் இழுத்தான்.

“ அல்ட்றா மொடேர்ண் PFAFF மெஷினுகள் வந்திருக்கு பார்க்கிறீங்களா மெடம் ”

அவனை அவள் பின் தொடரவும் ஒவ்வொரு மெஷினையும் காட்டிச்சொல்லலானான்.

தற்போது சந்தையில் கிடைக்கும் மெஷின்களில் PFAFF தான் அதிசிறந்ததென்று உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை, அதிலும் பாருங்கோ இந்த ஆண்டில வந்திருக்கிற மொடலுகளில என்ன சேஞ்ஜ் என்றால் அவற்றின் பொடியை அவர்கள் இப்போ பியூட்டர் மெட்டலுக்கு மாற்றியிருக்கிறதால பழைய மொடெல்களைவிடவும் இவற்றின் நிறை 12.5 வீதம் குறைக்கப்பட்டிருக்கு, தூக்கிறதோ அல்லது இடம்மாற்றி வைக்கிறது சும்மா குஷன் தலையணைகளைத் தூக்கிறமாதிரி அத்தனை லேசாக இருக்கும் மெடம்.

“ ஓ………….நிஜமாகவா ”

“ இரண்டாவதாய்ப் பார்த்தீங்கன்னா இவற்றின் உள்ளேயுள்ள பற்சக்கரங்கள் எல்லாம் ஐம்பதுக்கு : ஐம்பது இப்போ வழுக்குந்தன்மை அதிகரிக்கப்பட்ட பொலி எதிலீனால் பிரதியீட்டப்பட்டிருக்கிறதால அவற்றின் பகுதிகளின் தேய்மானமும் , இரைச்சலும் பாதியாக்கப்பட்டு உங்க ஆயுசுக்கும் மேலாக உழைக்கப்போகுது ”

“ இதில கிடைக்கிற இன்னொரு முக்கிய அனுகூலம் என்னவென்றால் ”

என்றுவிட்டு நிறுத்தவும் அவரது கண்களில் ஆர்வமும், முகத்தில் மலர்ச்சியும் அரும்பின. “ இம்மெஷினுக்குரிய மின்நுகர்வு பாதியாக்கப்படுது மெடம், இன்றைக்கு சிக்கனமும் முக்கிய விஷயமல்லவா……………. ”

இப்போது அவரது மலர்ச்சி தணிவதற்கிடையில் மின்னல்வேகத்தில் சில Zig-Zag தையல்களை அவன் போட்டுக்காட்டவும் மனது குளிர்ந்த மாது ஒரு மெஷினை வாங்கினார்.

மெஷினைக் கொண்டுபோய் அவரது வண்டியுள் மோகனரமணன் வைத்துவிட்டுவரவும் கேட்டேன்: “ இந்த மெஷினைப்பற்றி இத்தனை விபரங்கள் உனக்கு எப்படி அப்பனே தெரியும்”

“ அண்ணே இப்பவெல்லாம் தையல்மெஷினுகளை வார்ப்பிரும்பில் எந்தக்கொம்பனியும் செய்யிறேல்ல. எங்க ஆச்சிமார் வைத்துத்தைத்த சிங்கர், ஊஷாவோட அந்தக்காலம் மலையேறிவிட்டுது. இப்போவெல்லாம் பியூட்டர் மெட்டலும், அலுமினியமும் பிளாஸ்டிக்குந்தான். அதைத்தான் ஒரு புதிய விஷயம் மாதிரி எடுத்து கஷ்டமருக்குச்சொன்னன். எதையாவது ஒரு விஷயத்தைப் புதிதுபோலச் சொல்லிக் கஷ்டம்ரைக் கொஞ்சம் குழப்பிவிடுதல் முதல் வியாபார உளவியல்.

லைஃபோய் சோப் விளம்பரத்தில கேட்டிருப்பியள் நுண்ணுயிர்களைக் கொன்றுவிடும் முதல் கார்போலிக்சோப் இது என்று……………………உலகின் எல்லா சோப்புக்களுமே கார்போலிக் அசிட்டுக்களில்தான் தயாரிக்கப்படுபவை………………….”

“ ……..……..பொறு பொறு நீயும் ஏதோ பொலி-எதிலீன் என்றியே அது என்னப்பனே ”

“ அது வேறொன்றும் இல்லை, பிளாஸ்டிக்தான் பொலி எதிலீன், அதையே கொஞ்சம் மாற்றிச்சொன்னால் அது ஏதோ விஷேசமான பொருள் என்று சனம் நினைக்கும், நினைக்கட்டன் நாம பொய்சொல்லலையே, இருந்தாலும் எம் ஐயன்தான் சொல்லிட்டாரே பொய்மையும் வாய்மையுடைத்து புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின், நாமெதுக்குப் பயப்பிடோணும்”

“ உண்டு உண்டு உண்டு ”

“ வாடிக்கையாளர்களின் கண்களில் வந்தவுடன படுகிற மாதிரி நாலைந்து சாமான்களின் விலையை குறைச்சு வைக்கவேணும், அதுகள்ல இலாபம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அப்போதான் மற்ற இடங்களிலும் பார்த்துவிட்டு வருகிறவர்களுக்கு ‘இங்கே பொருட்கள் மலிவுதான்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் சின்ன டெக்னிக் அது.” என்றான்.

சில நூல்வகைகளையும், சற்றில்கள், பொபின்கேஸ்கள், கோலங்கள்வெட்டும் கத்திரிகள் போன்ற தையல் வேலைக்கான பிற உபகரணங்கள் சிலவற்றின் விலைகளையும் குறைத்து வைத்தோம்.

“அண்ணை நாங்கள் இரண்டுபேரும் நிறப்பட்ஷியள், பார்த்தவுடன வெளிநாட்டுக்காரர் என்று கஸ்டமருக்குத் தெரியத்தான்போகுது, இரண்டொரு எங்கட நாட்டுச்சாமானுகளையும் பக்கத்தில வைத்தால் என்ன.”

“ என்ன வையன்ன, சினா, குனா சுருட்டுப்பெட்டிகளைப் பரவிவைக்கலாம் என்கிறீரோ ”

“ இல்லை பாரை, பொம்பிலி, மாசிக்கருவாடுகள் என்றால் இன்னும் எடுபடும், கொஞ்சம் வாசமாயும் இருக்கும்”

நான் முறைக்கவும் “ ஒரு கோப்பி, தேயிலை, கொக்கோ, கறுவா, வனிலா, ஏலக்காய், கராம்பு இப்படி”

அழகான பெண்ணொருத்தி தோட்டத்தில் தேயிலை கொய்யும் படமொன்றையும், மரங்கள் அடர்ந்த கோப்பித்தோட்டத்தின் படம் ஒன்றையும் கடையின் இருபக்க உட்சுவர்களிலும் பொருத்திவைத்த பின் முதல்தரத்திலான கோப்பியையும், தேயிலைகளையும், கோக்கொபவுடர் பெட்டிகளையும் விறாக்கைகளில் வைத்தோம்.

எம் நிலையத்துக்குள் வந்த ஒவ்வொரு கஸ்டமருக்கும் அவர் கொஞ்சம் ஊசிகளோ, பொபினோ, கலர்நூலோ வாங்கவந்தவராயினும் அவர்களுக்கு சூடாக ஒவ்வொரு கிளாஸ் பால்கலந்த தேநீரை வழங்கிவிட்டு அது அவர்கள் தொண்டையைத்தடவி உள்ளிறங்கவும் அவர்களிடம் குறிப்பாக பெண்களிடமும் கொஞ்சம் மிதமாகவே இலங்கைத்தேயிலையின் மகாத்மியம் பாடினான். ‘எம் தேயிலையின் சுவை தனித்துவமானதாகவும், இதரநாட்டுத் தேயிலைகளைவிடவும் அதிகமாகவும் இருப்பதன் காரணம் அவை 3700 – 4900 அடிகள் உயரமான உயிர்ச்சத்துக்கள் செறிந்த ஈரமலைச்சரிவுகளில், அச்செடிகளுக்கே உவப்பான சீதோஷ்ணநிலையில் இயற்கையாக மதாளித்து வளர்வதுதான், நாம் நீர்ப்பாய்ச்சுவதோ, செயற்கை உரமிடுவதோ இல்லை’ என்றான்.

இவன் சொல்லும் கதைகளை அங்கார்ந்து ரசிக்கும் வாடிக்கையாளர்கள் கடைசி அரைக்கிலோ தேயிலையாவது வாங்கியே செல்வார்கள்.

**

இன்று சாதனா இராசவள்ளிக்கிழங்கு அவித்திருந்தாள். மாமாவுக்கு சூடாகக்குடிப்பதுதான் பிடிக்கும், சுவையாகவும் இருக்குமென்று ஜெயதாகினி அதை ஒரு தேமோ பொக்ஸில் வைத்து சுரங்கத் தொடருந்தில் எடுத்துவந்து தந்தாள். மோகனரமணன் கண்கள் கஸ்டமர்களோடு அவள்மீதும் மீதும் படர்வதைக்கண்டேன்.

அடுத்தவாரம் ஜெயதாகினியின் பிறந்தநாள் வந்தபோது எம்நிலையத்தின் பிரதான அங்கமாகிவிட்ட மோகனரமணனைத் தவிர்த்துவிடாமல் அவனையும் அழைத்தோம். அன்று அவன் அவளுக்கு ஒரு ஸ்மார்ட்போனைப் பரிசளித்தான்.

பொதுவாக ஜெர்மன்காரர்களுக்கு தங்களது உற்பத்திகளை உயர்வாகச்சொன்னால் மனங்குளிரக்கேட்பார்கள். விதிவிலக்காக அன்றைக்கு கோலங்கள் மற்றும் வரைகலைவடிவுகளைத் தைக்கும் மெஷினை வாங்கவந்த ஒருவர் ‘இல்லை NECCHI மெஷின்கள்தான் உயர்ந்தவை’ என்று விவாதித்தார்.

விவாதங்களில் ஜெயிப்பது எமது நோக்கம் அல்லவே. மோகனரமணன் குரலில் மேலும் தண்மை கலந்துகொண்டு தாழ் ஸ்தாயியில் அவரைச் சமாளித்தான்.

“ எங்களிடம் PFAFF மெஷின்கள் அதிகம் இருப்பதால் NECCHI மெஷின்களின் தரத்தை குறைமதிப்பீடு செய்வது எமது நோக்கமல்ல. அவையும் சிறந்த தயாரிப்புக்கள்தான், ஆனால் வரைகலை, கோலங்கள், எம்பிராய்டரி வேலைகளை தைப்பதற்கு NECCHI மெஷினில் பயன்படுத்தப்படும் மெகனிஸம் மிகவும் புராதனமானது. புறொப்பெல்லர் விமானங்களைப்போல , முன்னே அவற்றில்தானே பறந்தோம். ஆனால் அவற்றில் ஓடி உராய்ந்து இயங்கும் பாகங்கள் அதிகமிருப்பதால் தேய்மானமும் அதிகம், எளிமையாகச் சொன்னால் அவை பழுதடைந்தால் திருத்துவதற்கு நேரமும் செலவும் அதிகமாகும். PFAFF , SINGER மெஷின்களில் நவீன எலெக்ரோணிக்-மெகனிஸம் புகுத்தப்பட்டிருக்கிறது. ஜெட் விமானங்களைப்போல. கணனியின் பிறின்டர்களிலுள்ள MEMORY-CHIPகள் கணனிகள் கொடுக்கும் தகவல்களை உள்வாங்கிக்கொண்டு எப்படி வித்தியாசமான மொழிகளையும், கோலங்களையும், சித்திரங்களையும் பிரதி எடுத்துத்தருகின்றனவோ அதேவகையில்தான் எம் நவீன தையலியந்திரங்களில் அமைக்கப்பட்டுள்ள MEMORY-CHIPகளும் உங்கள் விருப்புகளை உத்தரவுகளை உள்வாங்கிக்கொண்டு வேண்டியவிதத்தில் வேண்டிய வடிவத்தில் அவை தைத்துத்தருகின்றன. ஏதாவது பழுதடைவதானால்கூட அநேகமும் அவை MEMORY-CHIPகளாகத்தான் இருக்கும், அவற்றை இலகுவிலும் சிக்கனமாகவும் மாற்றியமைத்துவிடலாம்”

கண்களை சேர்ச்லைட்டுக்கள் மாதிரிப் பலகோணங்களிலும் சுழற்றி யோசித்தார்.

“மின் மோட்டோர் மிஷினைப் பட்டியால் இழுத்து இயக்கும் வகையிலான மெகனிஸம் இருந்த காலத்தில் அந்தப்பட்டிக்கே 10 வருஷம் உத்தரவாதம் கொடுத்தவர்கள் PFAFF. ”

நான் அவன் காதோடருகி “அது எப்பிடிப்பா உனக்குத்தெரியும்” எனவும் என்பக்கம் அலட்சியமாகத் தலையைத் திரும்பி பிரியங்கா சோப்ரா பாணியில் கண்ணடித்தான்.

குழம்பித்தெளிந்தவர் கடைசியில் ஒரு PFAFF AMBITION எனும் நவீன மெஷினையே வாங்கிச்சென்றார்.

ஜெயதாகினி இப்போதெல்லாம் “ இந்த ஸ்டேசனைத்தாண்டிப்போனேனா அதுதான் மாமா என்ன செய்கிராறென்று பார்க்கலாமென்று சும்மா இறங்கிவந்தேன்” என்பதுபோன்ற சின்னச்சின்னச் சும்மா ரகச் சாட்டுகள் நேரத்துக்கொன்றாக வைத்துக்கொண்டு அடிக்கடி இங்கே வருகிறாள். அவள் வரும்போதெல்லாம் நம் இருவருக்கும் அவள் கைப்பக்குவத்தில் தேநீரோ கோப்பியோ அமிர்தமாகப்போட்டுத்தருவாள். அவளாக வீட்டில் பாதாம் ஹல்வாவன்ன ஸ்வீட் ஏதாவது புதிதாகப்பண்ணினாலும் தவறாது மோகனரமணனுக்கும் தனியாக எடுத்துவருகிறாள்.

**

அன்று நாலைந்து வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் வந்துவிட குஷியாகிப்போன மோகனரமணன் பலவகையான பீடிகைகளுடனும், குரலை வெவ்வேறு தினுசாக மாற்றிப் பண்பேற்றிக்கொண்டும் ஒரு விரிவுரையாளரைப்போலப் பேசலானான்.

“ இங்கிலாந்தின் தொழிற்புரட்சிக்காலத்தில் தயாரிக்கத் தொடங்கப்பட்ட SINGER உம், ஜெர்மனியின் PFAFF தையல் இயந்திரங்களுந்தான் உலகம் முழுவதும் ஆதியில் பரவலாக அறியப்பட்ட இனங்களாகும். அண்மையில் PFAFF, SINGER இரண்டுமே தத்தம் 150 ஆண்டு நிறைவைக்கொண்டாடியுள்ளன. முதலாவது உலகமகாயுத்தம் முடிந்தபின்னால் எழுந்த பெருவாரியான சந்தைவாய்ப்பைக்கருதி இத்தாலி SINGER இயந்திரங்களின் அப்பட்டமான பிரதியெடுப்பாக NECCHI மெஷின்களைத் தயாரித்துச் சந்தைப்படுத்தியது. இறுக்கமான தனிக்காப்புரிமைச் சட்டங்களெல்லாம் அப்போது கிடையாதலால் அது சாத்தியமாயிற்று. இப்போது ஜப்பான், தென்கொரியா, கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும் பெருவரியான மெஷின்வகைகள் சந்தைக்கு வந்திருக்கின்றன. ஆனாலும் எங்கள் மெஸ்டெஸ்பென்ஸ், பி.எம்.டபிள்யூ, ஔடி கார்களைப்போலும் எம் மெஷின்களின் தரத்தையும் தனித்துவத்தையும் இன்னும் எவரும் விஞ்சிவிடவில்லை. அதிலும் இப்போ அதிநவீனமாக Poly Vinyl Polymeric Propylene என்றொரு சேர்மத்தினால் மெஷின்களின் Case hardening என்கிற புதிய தொழில்நுட்பத்தால் பியூட்டர், பித்தளை உலோகச் சக்கரங்களின் தேய்வடையக்கூடிய பகுதிகளை வைரமேற்றிவிடுகிறோமா அவற்றின் உருளும், வழுக்கும் உராயும் உள்ளகப்பகுதிகள் எவையும் தேய்வடைவதே இல்லை. அதனால்தான் எம் மெஷின்களுக்கு இப்போதெல்லாம் துணிந்து 10 வருஷங்கள் உத்தரவாதம் வழங்குகிறோம்…………………………….” என்று அங்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் அவ்வாடிக்கையாளர்களை நழுவவிடாதும் லாவகமாகவும் தன் மாயவலையைத் தொடர்ந்து வீசிக்கொண்டிருக்கிறான்.

மாலைச்சூரியன் வழுக்கி உயர்ந்த கட்டிடங்களுக்குப்பின்னால் ஒளித்துவிட அவற்றில் பட்டுத்தெறிக்கும் கதிர்களின் பிரவாகம் வானத்துக்குப் பலவர்ணங்களை மெழுகிக்கொண்டிருக்கிறது.

ஜெயதாகினி சிக்கென்று அழகாக உடுத்திக்கொண்டு தோளில் போட்ட பெரிய லெதர் பையினுள் சிறிய எவர்சில்வர் பாத்திரத்தினுள் பாலுஷகியோ, பாதாம்ஹல்வாவோ எடுத்துக்கொண்டு மோகனராகவன் மாட்டப்போகும் மாயத்தூண்டிலுடன் படிகளில் ஏறி வந்துகொண்டிருக்கிறாள். அவளிடமும் அதற்கான நளினமும், சாதுர்யமும் இருக்குமென்றால் என்ன நானா வேண்டாங்கறேன்?

– ஆக்காட்டி மே- ஜூன் 2015 இதழ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *