மாடு சிரித்தது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 10, 2021
பார்வையிட்டோர்: 3,502 
 
 

பல நாட்களுக்குப் பிறகு வண்டிக்காரக் கார்த்திகேசுவை மறுபடியும் சந்தித்தேன். ரயிலடிக்கு யாரையோ கொண்டுபோய் விட்டுவிட்டு வெறும் வண்டியோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் என்னைக் கண்டதும் வண்டியை நிறுத்தி என்னை ஏறிக்கொள்ளச் சொன்னான். 4 1/2, மைல் தூரத்துக்கும் கால் – கோச்சில் போக நடந்து கொண்டிருந்த நான் இந்த வசதியைத் தப்ப விடுவேனா? ஏறிக் கொண்டேன்.

கார்த்திகேசுவின் வண்டியில் ஏறினால் என்னால் பேசாமலிருக்க முடிவதில்லை. வண்டியில் உட்கூடாரத்திலே ஒரு ஓரமாக ஒட்டியிருந்த எலக்ஷன் நோட்டீஸ் ஒன்று கண்ணில் பட்டதும் பேச்சைத் தொடங்கினேன்.

“ஓஹோ! கௌன்சிலுக்கு ஆள்பிடி வேலை வெகு மும்முரமாக நடக்கிறது போலிருக்கிறதே! நீ யார் பக்கம் அண்ணே? உன்னுடைய குறிச்சியில் இந்த அமளிகள் எப்படியிருக்கிறது?” என்று இரண்டு மூன்று கேள்விகளோடு பேச்சை ஆரம்பித்து வைத்தேன்.

மடியிலிருந்த புகையிலையில் ஒரு துண்டைக் கிள்ளி உருட்டி வாய்க்குள் குதப்பிக் கொண்டு ஓர் அலட்சியமான சிரிப்போடு, “பக்கமாவது, பரிசாவது தம்பி, எங்களுக்கு இதைப்பற்றியெல்லாம் என்ன தெரியும்? பரியாரியார் என்ன சொல்லுகிறாரோ அந்தப்படி செய்கிறதுதான். அவர்தான் இந்த நோட்டீஸைக் கொண்டு போய் ஒட்டச் சொல்லித் தந்தார். அவர் எனது நெற்றியிலே ஒட்டச் சொன்னாலும் ஒட்டிக்கொள்ளுவேன். புண்ணியவான் கனகாலம் இருக்க வேண்டும்!” – என்று இரண்டு கையும் எடுத்து மேலே பார்த்துக் கும்பிட்டான்.

அவன் பராக்காயிருப்பது அவனுடைய மாடுகளுக்கு எப்படியோ தெரிந்து விட்டது. அவை சற்றே உல்லாச நடைபோடத் தொடங்கின. கார்த்திகேசு எனக்குப் பதில் சொல்லிவிட்டு முன்னே குனிந்து அவைகளுக்குச் சத்தம் காட்டி மறுபடியும் முறுக்கி விட்டான். வண்டி கடகடத்துக்கொண்டு சென்றது.

“யார் அது, கந்தையாப் பரியாரியார்தானே? உனக்கும் அவருக்கும் அதிகம் கடமை உண்டு போலே” என்று மெல்லக் கிளறினேன். “கடமையாவது கடமை , தம்பி நீங்கள் எல்லாரும் சின்னப் பிள்ளைகள் உங்களுக்கு அந்த மனுஷரைத் தெரியாது. பூலோகத்திலே பரியாரியாரைப் போல ஒருத்தர் இரண்டு பேர் இருக்கிறபடியால் தான் மழை பெய்கிறது, என்று நினைத்துக் கொள். கார்த்திகேசு இன்றைக்கு உயிரோடிருக்கிறது அந்தப் பிரபுவாலேதான். இல்லாவிட்டால் இவ்வளவுக்குச் செத்த இடத்தில் புல்லுக்கூட முளைத்துப் போயிருக்கும்!”

“ஓகோ, அப்படியோ? அவ்வளவு பெரிய காரியமா அதென்ன?”

“எனக்கு ஒன்றுமில்லை, தம்பி, என்னுடைய பெண்சாதிக்குத்தான் ஒருமுறை ஒரு வருத்தம் வந்தது. வருத்தமாவது வருத்தம். இரண்டு வருஷத்துக்கு முன்னம் என் பெண்சாதிக்கு வந்த வருத்தத்தைப் போல உலகத்திலே யாருக்கும் வந்து நான் பார்க்கவில்லை. வைத்தியர்மார் எல்லோருமே கைவிட்டுவிட்டார்கள். மானிப்பாயிலே கூட வீட்டுக்குக் கொண்டு போகச் சொல்லி விட்டார்கள். வீட்டிலே ஏழு நாளாய் அடுப்பு மூட்டவில்லை. பிள்ளை குட்டிகள் எல்லாம் எங்கிப்போய்க் கிடந்தன. வீட்டுக்கு லட்சுமிபோல இருந்தவள். அவளுக்கு இப்படி ஒன்று என்றால் எனக்குப் பாதிப் பிராணனே போய்விட்டது போலிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயிருந்த சமயத்தில்தான் இந்தப் புண்ணியவாளன் வந்து சேர்ந்தார். அப்பா ஒரு நாளை மருந்து. ஒரே ஒருநாளை மருந்து தம்பி. ஒரு கிழமை அறிவு நினைவில்லாமல் கிடந்த என் பெண்சாதி அந்த முன்று நேர மருந்துக்குப் பிறகு கண்முளித்துப் பார்த்து என்னைக் கூப்பிட்டால் , தம்பி! ஆகா! அதை மறக்க முடியாது. தெய்வம்தான் வந்துவிட்டது போலிருந்தது எனக்கு. இருந்த ஆனந்தத்தில் மற்றநாள் பரியாரியார் வீட்டுக்கு வந்தபோது அவரை விழுந்து கும்பிட்டேன், தம்பி. என்ன இருந்தாலும் அந்தக் காலத்துப் பரியாரிமார்கள் தெய்வப் பிறவிகள்தான் செத்துப் போனாலும் அவர்கள் பூங்காவனத்தில் தான் இருப்பார்கள்…”

அவனது நா தழதழத்தது. கண்கள் கலங்கின. பழமை உணர்ச்சியில் ஆழ்ந்து போய் விட்டான். பாவம்!

எனக்கு அவனைப் பார்க்க ஒரு பக்கம் வருத்தமாயுமிருந்தது. அவனைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாலோ சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது.

கொஞ்சத்தூரம் வண்டி போன பிற்பாடு பேச்சைச் சாவகாசமாகத் தொடங்கினேன்.

“அப்போ இந்தக் கௌன்சில் அடிபிடியிலே நீ பேரம்பலம் பக்கமுமில்லை, பெரியண்ணர் பக்கமுமில்லை, பரியாரியாரியின் பக்கம் என்று சொல்லு” என்று தூண்டினேன்.

“ஏன், பரியாரியார் பெரியண்ணர் பக்கம்தானே வேலை செய்கிறார்! தெரியாதோ?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

“அந்த நோட்டீஸைப் படித்துப் பார்த்தால் அவர் யார் பக்கமென்று தெரியும்” என்றேன்.

அதை நான் படித்துப் பார்க்கவில்லை தம்பி, எனக்குத் தெரியும், எப்படியும் பரியாரியார் பெரியண்ணர் பக்கம்தான் வேலை செய்வார் என்று? “அதெப்படி?” என்று வெகு ஆவலோடு கேட்டேன்.

“நீ என்ன தம்பி எடுத்ததுக்கெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாய்? உலகத்திலே நடக்கிறது ஒன்றுமே உனக்குத் தெரியாது போலிருக்கு. கொஞ்ச நாளைக்கு முந்தி நடைபெற்ற அந்த வேலைக்காரப் பெண் கொலை வழக்கில் – பெரியண்ணர் அப்புக்காத்து, அவ்வளவு பாடுபட்டு சட்டவித்தை பேசி வெல்லாவிட்டால் பரியாரியார் செய்த வேலைக்கு அவர் கழுத்தில் கயிறு அல்லவா மாட்டியிருப்பார்கள் கோட்டில்?”

“ஒகோ, அதற்காகவா? அப்படியானால் அவர் நிற்பது சரிதான். பெரியண்ணர் செய்த உதவிக்கு இதுவும் செய்யலாம், இன்னமும் செய்யலாம்” என்று அவனோடு சேர்ந்து பாடிவிட்டேன்.

இப்படி நான் சொன்ன போது என்னுடைய முகத்தில் எதைக் கண்டு கொண்டானோ தெரியாது தன்னுடைய பிரசாரத்தை என்னிடமுங் கொஞ்சம் காட்டத் தொடங்கி விட்டான்!

“ஏன் தம்பி, பெரியண்ணர் மகாகெட்டிக்காரரும் நல்லவரும் என்று சொல்லுகிறார்களே. நீ அறியவில்லையா? யுத்த காலத்திலே ஏழை மக்களுக்கு அநேகம் உதவிகள் செய்திருக்கிறாராம். தீனி இல்லாமல் சாகக்கிடந்த மாடுகளுக்குச் சீமையிலேயிருந்து பருத்திக் கொட்டையும் பிண்ணாக்கும் எடுப்பித்துக் கொடுத்தாராம். நாங்கள் அவருக்கு எவ்வளவோ கடமைப் பட்டிருக்கிறோம். பரியாரியாருடைய மகனுக்கு கொழும்பில் வேலையாக்கி விட்டது யார் என்று நினைக்கிறீர்? என்னுடைய பொடியனையும் நெடுகப் படிப்பிக்கச் சொல்லியிருக்கிறார் பரியாரியார்” என்று மேலும் பேச இழுத்தான்.

“அடடே உனக்கும் இதெல்லாம் தெரிந்துவிட்டது போலிருக்கே. எங்கே அந்த நோட்டீஸை இங்கே எடு பார்ப்போம்” என்று அதைக் கேட்டு வாங்கிப் பார்த்தேன். எனக்குப் பெரும் வியப்பாயிருந்தது, ஏன்?

அது பெரியண்ணருக்கு மாறாக அவரது எதிர்க்கட்சியினர் அவர் மீது வசை புராணம் பாடி வெளியிட்ட நோட்டீஸ்!

“என்ன அப்பா இது? யார் பக்கத்து நோட்டிஸ் நீ கொண்டு திரிகிறாய்?” என்று கேட்டதும் கார்த்திகேசு திடுக்கிட்டு விட்டான். நான் விஷயத்தைச் சொன்னேன்.

“அடடா மாறிவிட்டேன் போலிருக்கிறது. வண்டியில் இதையாரோ கொண்டு வந்து விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள். அதைக் கிழித்தெறிந்து விடு தம்பி!” என்று பரபரப்பாக என்னிடம் வாங்கி தூள் துளாகக் கிழித்தெறிந்தான்.

“கார்த்தி அண்ணே! நீ பள்ளிக்கூடம் போனதில்லையா சிறுவயசில்?” என்று அவனை நான் கேட்கவில்லை. மாட்டின் கழுத்திலிருந்த சலங்கைகள் கலகலத்தன. அது மாடு சிரித்தது போலிருந்தது எனக்கு! ஏன் சிரித்தது?.

– மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு. குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அனமச்சு, திருகோணமலை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *