மாங்காச்சாமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 31, 2023
பார்வையிட்டோர்: 2,062 
 
 

புரட்டாசி மாத கிருஷ்ணன் கோயில் மைக் அலறல்களில் தெருவிற்கே காது கேட்காமல் போய்விட்டது. பேச முடியாமல் சைகைகள் மட்டும் காட்டமுடிகிறது. குளிரில் காதடைக்கும் இந்த‌ ஓசைகள் பெரும் இடைஞ்சலாக‌ இருப்பது மட்டுமல்லாமல் சுவரில் கைவைத்தால் அதிர்வது போலிருப்பதும்‌ சற்று கவலையளிப்பதாக இருக்கிறது. மகன் ஏற்படுத்திக் கொண்டு வந்துவிடும் சின்ன காயங்கள் போல பலவருடங்களுக்குப்பின் மீண்டும் வந்துவிட்ட சொந்த வீட்டிற்கு நேரும் எதுவும் சங்கடமாகத்தான் இருக்கிறது. இரு நாட்களில் வீட்டை பற்றியும், அதைச் சுற்றிய நினைவுகளும் தவிர‌ வேறு நினைப்பே மனதில் இல்லை எனலாம். வாசலிருந்து கொல்லைவரை நடந்து நடந்து கால்வலி வந்துவிட்டது. கொல்லையிலிருந்து வாசலில் யாராவது வருகிறார்களா என்று பார்ப்பது ஒரு வாடிக்கையாக மாறிவிட்டது.

முன்பு இம்மாதச் சனிக்கிழமைகளில் வாசலில் சமாராதனைக்காகப் பிச்சை கேட்டு நிறைய பேர் வருவார்கள். சின்னப் பையனாக நானும், தங்கை சுதாவும் ஒட்டுத் திண்ணை தூணைப் பிடித்து கொண்டு தெருவின் இருபக்கமும் பார்த்தபடி இருப்போம். அரிசியை யார் போடுவது என்று இருவருக்குள் சண்டைகள் வரும். கொடுக்கும் அரிசியில் ஒவ்வொரு கோஷ்டியில் உள்ள நபர்களுக்கு சரியாக பகிர்ந்து அளிக்க வேண்டும். அதிகம் குறைவாகப் போட்டாலோ கடைசி நபருக்கு இல்லை என்றோலோ அது பெரும் குற்றமாகிவிடும். யாருக்கும் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. கிருஷ்ணன் பாடல்கள், கீர்த்தனைகள் என்று இருக்கும் ஒவ்வொரு கோஷ்டியிலும் குறைந்தது நான்கு அல்லது ஐந்து நபர்கள் இருப்பார்கள். அதில் ஒருவர் தனியாக வருவார். அவருக்கு நாங்கள் மாங்காச் சாமி என்று பெயர் வைத்திருந்தோம்.

கோவில்லா, கோவில்லா, கோ….வில்லா என்று அவர் கூறவதை கேட்க வேடிக்கையாக‌ இருக்கும். எங்கள் விளையாட்டுகளில் கூட அந்த சாமி ஒரு பாத்திரமாக வருவார். சின்ன வயதுதான் இருக்கும் அவருக்கு. அவரின் அதீத வளர்ச்சியின் காரணமாக அவரின் வயதை கணிக்க முடிந்ததில்லை. காலையிலிருந்து அவருக்காக‌ காத்திருப்போம். அவர் சத்தம் கேட்டதும் வீட்டிற்குள்ளிருந்து வாயை இருகையாலும் பொத்தி அவருக்குத் தெரியாமல் இருக்க‌ இதே நடைவழியில் இருக்கும் சுவரோரம் சாய்ந்து சிரிசிரி என்று ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொள்வோம். அவர் வருவதற்கு முன்பு சத்தம் போட்டு விளையாடுவதும், குழறலாக வார்த்தைகளைப் பேசிக் கேலி செய்வதுமாக அன்றைய தினம் மகிழ்ச்சியாக கழியும். யார்ரா அது என்று அப்பாவின் சத்தம் கேட்டதும் ஓடி ஓளிந்துகொள்வோம். இத்தனைக்கும் அப்பாவிற்கு எதைப்பற்றி கேலி செய்கிறோம் என்பது தெரியாது. ஒருவேளை நாங்கள் அவரைத்தான் சொல்கிறோமென நினைத்துக் கொண்டிருப்பார்.

எவ்வளவுதான் கேலியாக நாங்கள் சிரித்து கொண்டாலும் அரிசி போடும்போது அருகில் மாங்காச் சாமியின் கண்களில் தெரியும் சாந்தமும், பற்றின்மையும் எப்போதும் பரவசமும், குதூகல‌த்தையும் அளிக்கக் கூடியன. தோள்களைச் சுருக்கிக் கண்களைப் பலமாகக் கொட்டி, கோணல் வாயோடு அவர் சொல்லும் ஒரு வார்த்தையையோ அல்லது செய்கையையோ அந்த‌ வாரம் முழுவதும் பேசிக்கொண்டிருப்போம்.
மாங்காச்சாமி எங்களுக்கு மட்டுமேயான செல்லப் பெயர்களில் ஒன்று. போடா மாங்காச்சாமி என்றோ, போடி மாங்காச்சாமி என்று கோபமான சமயங்களில் திட்டிக்கொள்வோம். அப்படித் திட்டப்படுவதை நாங்கள் விரும்பினோம் என்றுதான் நினைக்கிறேன். அக்காவிற்கு அதிக ஆர்வமில்லை என்பது அவள் பேச்சிலே தெரியும், என்றாலும் அவ்வப்போது அவளும் கலந்துகொண்டு கேலி செய்வாள்.

ஆனால் இப்படியே நீடிக்கவில்லை, அடுத்தடுத்த வருடங்களில் வீட்டுக் கஷ்டத்தால் அரிசி போடுவது கொஞ்ச கொஞ்சமாக‌ குறைந்தது. ‘அரிசி விக்கிற விலையில யாராவது போடுவாங்களா’ என்று அம்மா கொஞ்சம் காசுகளை மேஜைமீது வைக்க ஆரம்பித்தார். ஆனால் மாங்காச்சாமிக்கு மட்டும் கண்டிப்பாக‌ அரிசி போட வேண்டுமென்று சொல்லியிருந்தார் அப்பா. அவருக்கு மட்டும் தனியாக டம்ளரில் அரிசி இருக்கும். ஓடிவந்து அரிசி போட வந்ததும் வாங்கி போட்டுக்கொண்டு அம்மாகிட்ட கொலுத்துலு.. என்று நின்று சிரித்துக் கொண்டிருப்பார். சரி என்று தலையாட்டும் வரை நின்று பார்த்துவிட்டு, நேர்க்கோட்டில் வராத கால்களுடன் ஆடிஆடிச் செல்வார்.

மாங்காச்சாமி எப்போது மஞ்சள் நிற உடைகளே அணிந்து வந்ததாக நினைவு. நெற்றியில் நல்ல அகலமான நாமம். நன்கு துவைக்கப்பட்ட பழைய வேட்டி ஆனால் தாறுமாறாக கட்டியிருப்பார் அல்லது கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கலாம். விரல்களால் சரியாகப் பிடிக்கப்படாத பாத்திரம். அது நிரம்பியதும் போட்டுக்கொள்ள தோளில் தொங்கும் ஒரு பெரிய துணிப்பை. விரிந்த ஆனால் அவ்வப்போது சுருங்கும் கண்கள். கோணலாக உதடுகள் பிளந்திருக்கும் வாயில் சிவந்த ஈறுகளுடன் செங்கல்போன்ற பற்களை காட்டி சிரிப்பார். அகலமுகம் லேசாக குழிவிழுந்த நெற்றி மேலே உயர்ந்து பின்னால் சட்டென முடிந்துவிடும்; பார்க்க மாங்காய்போல் காட்சிதரும் சின்ன தலை. ஆகவே அப்பெயர் அவருக்கு சரியாக பொருந்திப் போனது.

குடும்பக் கஷ்டத்தில் வீடு ஒத்திக்கு விடப்பட்டு வேறு ஒரு சின்ன‌ வீட்டில் இருந்த சமயங்களிலும் மாங்காச்சாமி பெயர் எங்கள் விளையாட்டுகளில் இருந்தது. தாத்தாவின் வழியாகக் கைமாறி வந்த‌ வீடு அந்தத் தெருவின் ஒரே மாடிவீடாக அப்போது இருந்தது. கடன்காரர்களுக்குப் பயந்து கொஞ்ச காலம் வேறு ஊரில், தலைமறைவு வாழ்க்கைபோல வாழ வேண்டியிருந்தது. கஷ்டப்பட்டுப் படித்து அக்கா தங்கையின் திருமணங்கள் முடிந்து, வேலைக்காக மீண்டும் வேறு ஊர் சென்று, கீழ்மட்டத்திலிருந்து எல்லா வேலைகளையும் செய்து சம்பாதித்து, திருமணம் ஆகி ஒத்தி பணத்தைக் கொடுத்து வீட்டை மீட்டு மீண்டும் இப்போது வந்தபோது, நாங்கள் முன்பு அமர்ந்திருந்த திண்ணை எடுக்கப்பட்டிருந்தது. வண்டிகள் வைக்க மாடி வீட்டிற்கு செல்ல என்று திண்ணையின் ஒரு பகுதி சமதளமாக்கப்பட்டு செட்டாக மாறியிருந்தது. ஆனாலும் வீட்டில் முன்பிருந்த‌ அதே அழகும், ஐஸ்வர்யம் கூடிய அமைதியும் கொண்டு எப்போதும்போல தரையில் ஒருவித குளிர்ச்சியுடன் காட்சியளிப்பதாகத்தான் தோன்றுகிறது.

வந்த‌ இரண்டு நாட்களில் அப்பாவிற்கு என்ன மாதிரியான சந்தோஷம் இருந்தது என தெரியவில்லை. அம்மாவிற்கு மிகுந்த சந்தோஷம் அவளின் பனிபடர்ந்தது போன்ற கண்களின் ஊடே தெரியும் தடுமாற்றம், கைபிடித்து எதுவும் கேட்டால் அழுது விடுவாள் போலிருந்தாள். மனைவிக்கும் மகனுக்கும் சொந்த வீட்டிற்கு வந்ததில் ஆனந்தமும் கிளர்ச்சியுமாக இருக்கிறது. எந்தச் சாமானை எங்கே வைக்கவேண்டும் என்று, அடுப்படியை எப்படி மாற்றலாம் என்று பல கேள்விகள் அவளுக்கு. திருமணமாகிப் போன சுதாவிற்குகூட‌ சொந்தவீடு திரும்ப கிடைத்ததில் பெரிய மகிழ்ச்சிதான். ஓடிப் பிடித்து அந்த மாடிப்படி மறைவில் மறைந்து விளையாடியது, ஊஞ்சலில் எந்நேரமும் ஆடியது என்று வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் நினைவுபடுத்திக் கூறினாள்.

இறங்கிக் கொஞ்ச தூரம் நடந்துவர வேண்டும் என தோன்றியது. தெருவில் நடந்தபோது மகன் அருண்கூட வந்து இணைந்து கொண்டான். புதிய நண்பர்கள் கிடைத்த மகிழ்ச்சி அவனுக்கு. சுதா அத்தை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக அவனுக்கு உறுதியளித்திருந்தேன். ஆனால் நான் என் சித்தப்பாவின் வீட்டிற்குச் செல்லவே ஆசைப்பட்டேன். அவரிடம் பேச இந்த வீட்டைப்பற்றிப் பகிர்ந்து கொள்ள நிறைய இருப்பதாக தோன்றியது.

அவர் வீட்டிற்குப் போன‌போது சித்தப்பா ஒரு வேட்டி பனியனில் மேலே ஒரு துண்டோடு யாரோ வருகைக்கு காத்திருப்பது போல் நின்றிருந்தார். முகமெல்லாம் மலர்ச்சியும் உள்ளத்தில் கனிவுட‌ன் இருந்ததை உள்ளே அழைத்துச் செல்லும்போது அவர் குனிந்த முதுகு நடையில் உணரமுடிந்தது. முதலில் சம்பிரதாயமும் தயக்கமுமாக ஆரம்பித்த அவரது பேச்சு, சிறிது நேரத்தில் மழைக்கால அருவி போல‌ உற்சாகம் கொண்டுவிட்டது. வயது வித்தியாசங்களை கடந்து உற்சாகம் தொற்றியதும் வீடே அதிரும்படி அவர் சிரித்தது சித்திக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கும்.

என்னுடைய இருப்பு அவருக்கு பழைய மகிழ்தருணங்களை நினைவுபடுத்திக் கொண்டு இருந்தது போலும். ஒன்றின் தொடர்ச்சியை எந்த இடையூறும் இல்லாமல் தொடர்புடைய வேறு ஒன்றில் கொண்டு செல்ல பெரும் ஆவல் கொண்டிருந்தார். ஆமாம் என்பதையும், சின்னத் தலையசைப்பையும் பெரிய அங்கீகாரமாக நினைத்தார். அருண் சித்தியுடன், மற்றக் குழந்தைகளுடன் விளையாடச் சென்றிருந்தான். சித்தப்பாவின் வெடிச் சிரிப்போடும் பேச்சோடும் மெதுவாக‌ திண்ணை வந்து அமர்ந்த போதுதான் பேச்சு எங்கே தொடங்கப்பட்டது என்பது தெரியாமல் இருப்பதை உணர்ந்தோம்.

சித்தப்பாவிற்கு ஒரு பழக்கம் உண்டு. பேச்சில் உற்சாகம் வரும்போது உள்ளங்கைகளை தேய்த்து கொண்டே பேசுவார். அவரின் பேச்சுத்துணை இன்மையும், விலகி போயிருந்த‌‌ நீண்டநாள் தனிமையும், அந்த வயதிற்கே உரிய கர்வங்கள் இழந்த‌‌ மகிழ்ச்சியும் தன்னை மறைந்தவராக பேசிக் கொண்டேயிருந்தார். வேறு ஒரு சமயமாக இருந்தால் கேட்டுக் கொண்டிருக்க முடியாது என தோன்றியது. இது மகிழ்ச்சித் தருணம், பேசுவது யாராக இருந்தாலும் கேட்டுவிட‌முடியும். பேச்சுகள் பலவாறு சுற்றித் திரிந்தாலும் கடைசியில் குடும்பப் பின்னணியை வந்து சேரும், எல்லாம் விதிப்பா என்பார்.

ஒரு உற்சாகப் பின்னணியோடு மீண்டும் தொடங்குவார். ‘எப்போ பாகப்பிரிவினை ஆச்சு, சித்தப்பா,’ என்றேன். அப்படி கேட்டிருக்ககூடாது என்று தோன்றினாலும் என் மனம் அதைத்தான் விரும்புகிறது என நினைத்தேன். அதைப்பற்றி கேட்காமல் அந்த பேச்சு முழுமையடையும் என தோன்ற‌வில்லை. என்னை ஒரு முறை பார்த்தார். விளையாட்டாக அல்லது வேடிக்கையாக‌க் கூட‌ கேட்கிறேனா என நினைத்திருக்கலாம். உள்ளங்காலில் கையை தேய்த்தபடி வானத்து பின்னணியில் எதையோ கண்டுவிட்ட‌ புன்னகையுடன் பேச ஆரம்பித்தார்.

‘அப்ப நீ சின்னக் குழந்தையா இருந்த, உன் அக்காளும் கொஞ்சம் சின்னப் பொண்ணுதான். முதல்ல கடை பெரிய கடைத்தெருவிலதான் இருந்துச்சி. அது உன் தாத்தா கடை. அகலத்துல நாலு அம்பாசிடர் கார் நிறுத்தலாம் பாத்துக்க‌, அவ்வளவு பெரிய கடை. தாத்தா போனோன்ன நாங்க மூணு அண்ணந்தம்பிகளும் அந்த கடைய நடத்தினோம். அண்ணந்தான், உங்கப்பாரு, கல்லாவுல உக்காருவாரு. எங்கப்பாவுக்குகூட அப்படி ஒரு தேஜஸ் இருந்ததில்ல. மண்டபத்துல உட்காந்திருக்கிற ராஜா மாதிரி, அப்படி இருப்பாரு. வெள்ளவேட்டி, வெள்ள முண்டா பனியன் தெரியிற‌‌ வெள்ள மல்லுச‌ட்டை, பவுடர் பூசுன‌ முகத்துல குங்குமபொட்டு, உதட்டுல வெத்தல செவப்பு,. க‌ழுத்துல செயின்லாம் போட்டு அப்படி கம்பீரமா இருப்பாரு. வியாபார நுணுக்கங்கள் அத்தனையும் அத்துபடியா இருந்துச்சி அவருக்கு. எல்லோரையும் அனுசரிச்சு அவரு பண்ண வியாபாரமே ஒரு அழகுதான்.’

‘எப்போ பிரிஞ்சிங்க சித்தப்பா?’ என்றேன். அவரிடம் கேட்க நினைத்திருந்த ஒன்றை அப்போது அறிந்ததுபோல் கேட்டது எனக்கும் சற்று அதிர்ச்சியாக‌ இருந்தது. ஆனால் அவர் அதை கேட்காதவர்போல, அதில் சுவாரஸ்யமற்றவர் போல கடந்து சென்றார்.

‘அது வேற கத. ஓரு நாளைக்கு எவ்வளவு சரக்கு வரும் தெரியுமா? ஆனா எங்க என்னன்ன‌ சரக்கு இருக்கு, எவ்வளவு போயிருக்கு, இப்ப என்ன பாக்கியிருக்கு, அடுத்து என்ன பண்ணனும், எல்லாம் தெரியும் அவருக்கு. எனக்கும் தங்கராசு சித்தப்பாவுக்கும் அவ்வளவா புரியாது, ஆனா உங்கப்பன் முன்னாடியே வந்து, இத முதல்ல பாருடா, இந்த வேலய முதல்ல முடிச்சுடு, அது பிரச்சனையாக வரதுக்குள்ள கண்டுபிடிச்சு கரெக்டா எங்ககிட்ட சொல்லிடுவாரு. வேலை செய்றவங்க கிட்ட எப்படி வேல வாங்குறது, அத எப்படி சரியான ஆளுக்கிட்ட கொடுக்கிறது பத்தி ஒரு கணக்கு அவருக்கிட்ட இருக்கும். ஒரு தப்பு வராது. மத்தவங்க தப்பா பண்ணினாகூட கோபமோ வருத்தமோ அவர்கிட்ட வராது. அமைதியா ஒரு பார்வை பாப்பாரு அவ்வளவுதான்.’

‘மூணுமுறை கடைய மாத்திட்டிங்கல்ல சித்தப்பா?’ என்றேன். ஒவ்வொரு முறை மாற்றப்பட்டபோதும் அப்பாவின் மனதில் அவர் உடலில் என வெளிப்படையாக தெரிந்த மாற்றங்களை கவனித்திருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் யாருடனும் பேசமாட்டார். சிரிப்பது முழுமையாக குறைந்து தனக்குள் பேசிக்கொள்பவராக மாறிப்போனார்.

‘ஆமாமமா, நாங்க பிரிஞ்சோன்னயே பெரிய கட தெருவில நடத்த முடியாம வித்துட்டு கும்பேஸ்வரம் கோயில் கிட்ட போச்சி, அப்புறம் உங்கப்பன் திருவாலுரு போயிட்டு திரும்பிவந்தப்ப கீழசந்து தெருவில வந்துச்சு. அப்பவே ரொம்ப ஒடிஞ்சிட்டாரு, கடைக்குன்னு ஒரு பேரு இருக்குல்ல! அத விட்றகூடாது, எப்படியும் பெரிசாக்கிடனும்னு நினைச்சாரு புதுசா என்னென்ன‌மொல்லாம் பண்ணி பாத்தாரு. ஆனா முடியல‌. ஆனாலும் அப்ப நடந்த எந்த குடமுழுக்கு, மண்டகப்படிக்கு அவர்தான் வரணும் இருந்திச்சு. அப்படி ஒரு அந்தஸ்து.’

‘மகேஷ் அந்தசமயத்துல தானே சித்தப்பா பிறந்தான்,’ என்றேன்.

அதுவரை இருந்த மகிழ்ச்சியில் சின்ன மாற்றம் கொள்வதை சித்தப்பாவின் முகத்தில் தெரிந்தது. முகத்தை மறைப்பதைபோல கொசுக்களை அவசரமாக‌ விரட்டினார். அத்தனை நேரம் இருந்த கொசுக்களை அப்போதுதான் கண்டவர்போல‌ அவரின் கைகள் தேவையற்ற அசைவுகளைக் கொண்டிருந்தது.
இடையில் இறந்துவிட்டதால் என்னவோ மகேஷ் பற்றிய சித்திரம் எப்போது என்னிடம் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். என் பால்யத்தை அவனுடன் இணைத்தே நினைத்துக்கொள்கிறேன். சற்று திடமானவர்போல மாறுபட்டவராக‌ தொடர்ந்தார்.

‘உன் தங்க சுதா பிறந்த கொஞ்ச நாள்ல‌, உன் சித்தி கடயநல்லூர்ல்ல அவ அம்மா விட்டுல இருக்கைல பிறந்தான். பிறக்கிறப்பவே ஒரு மாதிரியாதான் இருந்தான், அப்பவே கொஞ்சம் தெரிஞ்சு போச்சு, ரொம்ப சின்னதா இருந்தானா, தல வேற சின்னதா இருந்துச்சி. வளரப்ப எல்லாம் சரியாயிடுவான்னு சொன்னாங்க. வளர்ந்தும் பேசல, நட‌க்கல, ரொம்ப லேட்டாதான் நடந்தான். வாயில்லாம் எச்சி ஒழுவிகிட்டு கிடக்கும். ராத்திரியில வேற தூங்கமாட்டான், ரொம்ப கஷ்டப்பட்டான். கஷ்டமும் படுத்தினான். கூட்டு குடும்பத்துலேயும் சரி, வெளியிலயும் சரி அவனால அவமானம்தான். இப்ப இருக்குறமாதிரி அப்ப ஜனங்க புரிஞ்சுக்கல‌. எல்லோரும் அவன கேலி பண்ணிக்கிட்டே இருந்தாங்க.’

‘சொத்த பிரிக்கிறதுக்கு அவனும் ஒரு காரணமா சித்தப்பா.’ என்றேன். கண்கள் ஒரு வினாடி சந்தித்துக்கொண்டன. இப்போது நான் வளந்திருக்கிறேன், இன்னும் சிறுவனாக என்னை நினைக்க வேண்டுமா என‌ அவர் மனம் ஊசலாடுவதாக‌ இருந்தது.

‘ஆமா, அவனாலதான் சொத்த பிரிக்க வேண்டியதாப் போச்சு. அவனோட மருத்துவ செலவுக்கு கடைக்கணக்குல எடுத்துக்கிட்டிருந்தேன். இது எப்பயும் சாதாரணமா நடக்குறதுதான். அண்ணன் எதுவுமே சொல்லல. ஆனா மாசா மாசம் செலவு அதிகமாயிட்டே போனதால ‘தம்பி கடைக்கணக்குல வேண்டாம், வீட்டு கணக்குல வெச்சுகுவோம்ன்னாரு,’ என‌க்கும் சரின்னு பட்டிச்சு, ஆனா உங்க சித்தி இருக்காளே அவ ஒத்துக்கல. வீட்டு கணக்குல எடுத்தா அண்ணி, ஓரகத்தி, அப்புறம் அத்தை ஒருத்தி இருந்தா எல்லோருக்கும் தெரியும் பேச்சா போகும்ன்னு, தனியா போறதா சொல்லி முன்னாடியே சண்டையப் போட்டுட்டா… எனக்கும் ஒரு சமயத்துல, இவன் மகேஷ் இருக்குற நிலமையில, தனியா பிரிஞ்சு போய்டுவோம்னு தோணிச்சு…’

‘தனிகுடித்தனம்னு சொன்னோன்ன, முதல்ல சரி, பின்னாடி எப்படியும் பிரியத்தானே வேணும்னு நினைச்சாரு, கடைய பிரிக்கணும்னு சித்தி சொன்னோன்ன, ரொம்ப சங்கடப்பட்டுட்டாரு.’

‘அப்பவே கடைய பிரிச்சிடீங்களா சித்தப்பா?’

‘கொஞ்ச நாள்ல‌ பிரிச்சிட்டோம். அண்ணனுக்கு ரொம்ப கோவம் அப்பதான் வந்திச்சு. தம்பிங்க ரெண்டு பேரும் சொல் பேச்சு கேக்கலையேன்னு கோவம். அண்ணி, அதான் உங்கம்மா, எவ்வளவோ சொல்லிப்பார்த்தாங்க. ‘வேண்டாம் தம்பி, உங்களுக்கே தெரியும் மாமாவுக்கு அப்புறம் இப்பதான் கடை ஒரு நிலைக்கு வந்திருக்கு கொஞ்சம் பொருத்துக்கங்க, நா அண்ணங்கிட்ட சொல்லிகிறேன்’ னாங்க, ஆனா உங்க சித்தி கேக்கல‌. அண்ணிக்கிட்டயே சண்டைக்கு போனா.’

‘பிரிஞ்சதுலேந்து என்கிட்ட பேசுறத நிறுத்திட்டாரு. பிரிச்சும் வீடும் கடையும் அவர்பேர்லதான் போச்சு, நெலம் வேற சில வீடெல்லாம் எங்க பேர்ல வந்துச்சி. பணமெல்லாம் கொடுத்து கையிருப்பு இல்லாம, கொள்முதல் பண்ணமுடியாம, இருந்த சரக்க மத்தகடைக்கும் கொடுக்க முடியாம ரொம்ப பெரிய நட்டம் வந்துபோச்சு அவருக்கு. நானும் தம்பி சின்னாவும் தனியா இருக்குறதே போதும்னு, கணக்கு எழுதப் போயிட்டோம். அவரு நினைச்சிருந்த கனவு அந்த கடை. அண்ணன் என்னன்னமோ பண்ணிப்பாத்து முடியாம எங்க எதிரியான கன்னையாகிட்ட கடையக் கொடுத்துட்டு, கும்பேஸ்வரன் கோயில் தெருவுல சின்னதா கடைய போட்டாரு.’
‘நாகூட பார்த்திருக்கேன்… கோயில் எதிர் சுவருல பின்புற‌மா ஒட்டுனமாதிரி வரும்.’

‘ஆமா, ஆனா கட தெருவுக்குத் தள்ளி இருந்ததால சரியாப் போகல. ரொம்ப கஷ்டப்பட்டு நடத்தினாரு, வீட்ட அடமானம் வெச்சு, அண்ணி நகைய அடமானம் வெச்சு பலதும் பண்ணிப் பாத்தாரு, முடியல… கடைசில கட‌ன்காரங்களுக்கு பயந்து ஊரவிட்டு ஓடிப்போயி, திருவாரூர்ல வீரா சன்ஸுன்னு ஒரு கடை இருக்கு அங்க கண‌க்குபுள்ளையா சேர்ந்து கொஞ்ச நாள் இருந்தாரு. அண்ணியும் புள்ளைங்களும் இங்க இருந்தாங்க, அப்புறம் அண்ணியையும் உங்களையும் கூட்டிகிட்டு போனாரு. மகேஷ் சாவுறத்துக்குக் கொஞ்சநா முன்னாடிதான் இங்க வந்தாரு…’

‘மகேஷ் எப்படி சித்தப்பா செத்தான்?’

‘அதுவா, அது பெரிய கதயில்ல, அவனுக்கு அப்பப்ப வலிப்பு வரும். கொஞ்சம் மந்தமா வேற இருந்தானா, அப்பப்ப வெளியில நட‌ந்து போயிடுவான். ஒரு மழ நாள்ல ரோட்டுல இறங்கி, நடந்து போக ஆரம்பிச்சுட்டான். வீட்டுல யாரும் கவனிக்கல, அப்ப பத்து வயசுதான் அவனுக்கு.’

‘இப்படியே நடந்து போயி அரசலாத்துல இறங்கிட்டு இருக்கான். தண்ணின்னா அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அவன் சிரிச்சுக்கிட்டே இறங்குனத, ரவிராஜுன்னு ஒருத்தர் ராணுவத்துல இருந்தவரு, பாத்துட்டு குப்புச்சாமி கிட்ட சொல்லியிருக்காரு, குப்புச்சாமிய தெரியுமில்ல பெரிய நீச்சல்வீரன், காவேரி வெள்ளத்துல சோருவல் எல்லாம் அடிப்பான். பய எறங்கி தண்ணியில கிடக்கான்னு சொல்லியிருக்கிறாரு அங்க வந்து அவனத் தேடிப் பாத்திருக்காங்க மகேஷ் கிடைக்கல. ரெண்டு மையில் தூரத்துல இருக்கிற அணைக்கட்டுல தேடி கண்டுப்பிடிச்சு அவன் பொணத்த எடுத்து வந்தான்.’

‘அவன் சாவுறதே சரின்னு ஒரு சம‌யத்துல நினைச்சுப்பேன். அவன் இருந்து கஷ்டப்பட்றதவிட சாவறதே மேல் இல்லயா. ஆனா அண்ணன் சாவுக்கு வரல்ல‌. அவனுக்கு வாய்க்கரிசிகூடப் போட வரல, அதுதான் ரொம்ப வருத்தமா இருந்துச்சு. என்ன பண்ணாலும் வருத்தப்பட்டு அண்ணன் ஒரு வார்த்த கூட என்கிட்ட சொன்னதில்ல. அவரு இப்படி பண்ணிட்டாரேன்னு வருத்தம்தான். ஏன்னா அவரு இழந்த கவுரவம், வீடு, பணம் எல்லாத்துக்குமே ஒரு வகையில மகேஷூம் என்குடும்பமும் காரணம்னு நினைச்சாரு. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு குடும்ப‌த்துக்கும் உறவு விட்டுபோச்சு. போன வருசம் சித்தியோட அக்கா செத்தப்ப அண்ணிதான் வந்தாங்க. அண்ணன் வரல‌. அப்பலேந்து உறவு கொஞ்சம் பரவாயில்லாம இருக்கு.’

இருட்டிவிட்டிருந்தது. இறங்கி ரோட்டில் நடந்தபோது மிச்சமிருந்த வானத்து வெளிச்சம் உடலில் பரவியது.. சட்டென‌ ஒளிர்ந்த பல்புகளின் ஒளி வாசலைத் தாண்டி ரோட்டில் சதுரமாக எல்லா வீடுகளிலும் கிடந்தது. அதை கடக்கும்போது வீட்டிற்கு சென்றுவந்தது போலிருந்தது. தேவையற்று அருணை அணைத்துக் கொண்டேன். அது எப்போதும் போன்றதாக இல்லை. அவனின் செல்ல சிணுங்கல்கள் பிடித்திருந்தது. எப்போதும் மனதை அரித்துகொண்டிருக்கும் சில விஷயங்கள் மெல்லத் தெளிவு பெறும்போது கிடைக்கும் இன்பம் எதிர்பார்த்ததைவிட வேறுமாதிரி இருந்தது.

சட்டென மின்சாரம் போய்விட்டது. தினம் ஒன்பது மணிக்கு ஐந்து நிமிடம் போகும். அதுவரை காணமுடியாத நட்சத்திரங்கள் இருளில் தெரிய தொடங்கின. நிலாவும் அப்போதுதான் கவனத்திற்கு வந்தது. அதுகூடவே வரும் வேகம் பிரம்மிப்பாக இருந்தது.

அப்பா செய்தது தவறு என்று தோன்றியது. எப்போதும் அதிர்ந்து பேசாத அவர் எப்படி இப்படி நடந்துக் கொண்டார் என்று தெரியவில்லை. இந்த வீடு திரும்பக் கிடைத்தது குறித்து அவருக்கு ஏதும் தெரிந்திருக்குமா தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும் வெளிபடுத்துவாரா என்பதும் தெரியவில்லை.

மீண்டும் மின்சாரம் வராமல் இருந்தால் அந்த இருளிலேயே மறைத்துக் கொள்ளலாம் என தோன்றியது. ஆனால் வீட்டின் படியில் கால்வைத்ததும் வந்துவிட்டது. அருண் இறங்கி ஓடினான்.

கட்டிலில் எழுந்தமர்ந்திருந்தார் அப்பா. அவரைக் கண்டதும் எதுவும் அவசரம் என்று தோன்றவில்லை. ஐந்து நிமிட இடைவெளிக்குபின் தொடர்ந்த‌ இந்த மாத மைக் அலறல்கள் அவரை எழுப்பியிருக்க வேண்டும். வயதானவர்களின் கஷ்டங்கள் அவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை.

அப்பா கையை பிடித்து ‘பாத்ரூம் போகணுமா, வாங்க,’ என்றேன். பிடித்த கையையும் என்னையும் மலங்க மலங்க பார்த்தார். அவர் பாத்ரூம் போக எழவில்லை என்பது போலிருந்தது. அம்மாவும் மனைவியும் அடுப்படியில் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இது என்றும் நிகழும் அசுவாரஸ்ய நிகழ்ச்சிதான்.

‘எதாவது சாப்பிடறீங்களா, தண்ணி வேணுமா,’ என்றேன். அருணிடம் ‘தாத்தாவுக்கு தண்ணி எடுத்துவாப்பா’ என்றேன்.

அப்போதும் அவர் நிலைக்கு வரவில்லை. எப்போதாவது இப்படி செய்யும் போது எரிச்சலாக இருக்கும். முக்கியமாக பேசும்போது பேசாமல் பார்த்துக் கொண்டிருப்பார். ஒருவேளை மனதுக்குள் பேசிக்கொண்டிருப்பார்.

திடீரென நாக்கு குளறலாக ஏதோ சொன்னார். அது தண்ணீரைக் கொப்புளித்து துப்புவது போலிருந்தது. ‘என்ன’ என்றதும்

‘அம்மாகிட்ட சொல்லு, போயிடப்போறான் மாங்காச்சாமி வந்திருக்கான் பாரு சீக்கிரம் போ,’ என்றார். உளறலாக புரியாத மொழியில் கூறுவதாகத்தான் இருந்தது. ஆனால் அவர் கண்கள் தீர்க்கமாக‌ என்னையே கவனித்துக் கொண்டிருந்தன‌.

– சொல்வனம், இதழ்-125, மார்ச் 29, 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *