மறை பொருள் மயக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 19,796 
 
 

மங்கையைச் சந்திப்பதற்காகப் பாரதி முதல் தடவையாக அவள் வேலை பார்க்கும் கந்தோருக்கு வந்திருந்தாள். அவளை நேரிலே சந்திப்பதென்பது அவ்வளவு எளிதான,காரியமல்ல.அதற்குமுன்அனுமதி பெற்றுத்தான் வரவேண்டும். எனினும், நட்பின் நிமித்தம்,அனுமதியின்றியே உள்ளே நுழையக்கூடிய சலுகையை மங்கை வழங்கக்கூடும் என்ற நம்பிக்கையிலேயே, பாரதி வந்திந்தாள்

ஒருகாலத்தில் அவளைச் சந்திப்பதற்காக மங்கை அவள் வீட்டிற்கு வந்து போனதை அவள் மறந்திருக்கமாட்டாள் என்றே பாரதி நம்பினாள்.இது அவளின் நினைவு.

நினைவுகளே வாழ்க்கை ஆகிவிடுவதில்லை, யதார்த்தத்தில் இப்போது அவளின் நிலைமை வேறு. மங்கை யார் என்பதைப்பட்டை தீட்டியே உலகம் அறிந்திருக்கும். அப்படியொருபெரும் புள்ளி அவள். நன்கு படித்துப்பெரும் பதவியிலிருக்கிற அவளின் நிலைமை என்ன?.அவளுக்கு நான் யார்? எப்பவோ நடந்து முடிந்த சினேகபூர்வமான நட்பை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு இனம் புரிந்து கொள்வாளென்று எப்படி நம்புவது?

ஒருவேளை அவள் வேண்டுமானால் இதை மறந்திருக்கலாம். எனக்கு மறக்கவில்லை ஆத்மார்த்தமாகவே நேர்ந்த, இந்த உண்மையான நட்பைச்சாட்சிபூர்வமாக நிரூபிக்க வேண்டியவள் அவளே. பார்ப்போம். என்ன நடக்கப்போகிறது? பாரதிக்குப்பெரும் மன உளைச்சலாக இருந்தது. மனம் ஒரு நிலையில் நிற்காமல் .,தடுமாறுவது இதுதான் முதல் தடவை. உண்மையில் அவளின் நிலைமை வேறு..உணர்ச்சிகளால் பங்கமுற்றுப்போகாத, உறுதியான ஆன்ம பலம் கொண்ட, உயர் மனம் அவளுடையது..

அவளுக்கே இயல்பான ஒரு குணம், எதிர் முரணான, அனுபவங்களை மனம் சலிக்காமல் மென்று விழுங்கி ,விடுவாள். அவள் பாதம்பட்டால், புல்லும் நோகாது..எவரையும் நோக வைத்து அறியாமல், புறச்சூழலாக நிறைய, அனுபவங்கள், கிடைத்தாலும், அதிலிருந்து, பிரிந்து வாழ்கிற் ஆத்மார்த்தமான, ஒருகலைஞானி அவள். கலையே, வாழ்க்கையாகக் கொண்டிருப்பவள்.

அவள் கவிதை வடித்தால், கல்லும், கனியும். அப்படியொரு கனிவு நிலைக்காளாகியே, மங்கையுடனான இந்தத் தொடர்பு, அவளுக்கு நேர்ந்த்து.. எதிர்பாராமல், நேர்ந்த இந்தத் தொடர்புக்கு, முதல் தடம் எடுத்து வைத்த மானஸீக உறவுக்கு, அவளே பொறுப்பாவாள். அது இன்று அவள் வரையில் பொய்த்து விட்ட ஒரு பழங்கதை போல் தோன்றினாலும், பாரதியைப் பொறுத்த வரை, அப்படி அவர்கள் உறவு கொண்டு. தழைத்து நின்றது, வெறும் பொய்யான ஒரு புறந்தீட்டு ,ஞாபகமல்ல. உயிரைச் செதுக்கி வார்க்க, வந்து ,போயும், மறக்கமுடியாமல் இருக்கிற ஒருசிரஞ்சீவி ஞாபகமே அது.

நிலைமை மாறும் போது,மானஸீக வாழ்வு பற்றிய, ஞாபகங்களும் ஒருகனவு போல், மறந்துதான் போகும். .இதுசகஜம். மங்கை இப்போதிருக்கிற நிலைமையில் பாரதி கூட வெறும் துரும்புதான். ஏனென்றால், அவள் நிலைமை அப்படி. கைநிறையப்பணம் புரளும் ,ஒரு பெரிய அதிகாரியல்லவா அவள். அந்த அதிகார மயக்கம், உண்மையில் இருந்தால் அவள் முன்னால், தன் நிழல் கூட எடுபடாதென்று பாரதிக்குக் கவலையாக இருந்தது. அவள் நிழலைப் பார்ப்பாளோ,? மனதைப் பார்ப்பாளோ?அதுவும் தெரியவில்லை. மனம்தான் பிடிபடுமென்றால், அவள் அதிர்ஷ்டக்காரிதான். மங்கை முகம் நிமிராமல், பைல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு விழுந்து விழுந்து, சேவகம் செய்ய, இருமருங்கிலும், சேவகர்கள். அவள் வெளியே வராந்தாவில், கால்கடுக்க, வெகு நேரமாய் நின்றுகொண்டிருந்தாள். நீண்ட தூரம் இருபஸ்கள் ஏறிவந்ததால், மூச்சுமுட்டுகிற களைப்பு வேறு. மகளின் வேலை விண்ணப்பத்திற்காக. ஒருகையெழுத்து மங்கையிடம் வாங்க வேண்டியிருந்தது. அவளின் ஆங்கிலக் கையெழுத்து எப்படியிருக்குமோ தெரியாது. தமிழில் முத்து முத்தாக எழுதுவாள். முதலில் அவர்களின் நட்பு ஒரு கடித மூலமாகத்தான் ஆரம்பமானது.

பாரதியை நன்கு அறிந்த எவர் மூலமாகவோ விலாசம் பெற்று, அவள்
போட்ட முதல் கடிதம். காலத்தின்கறைகளைத் துடைக்க வந்த ஒரு பொன்னான மடலாகவே பாரதியின் கையில் திகழ்ந்தது..ஒரே பாதையில் பயணிக்கும் பெரும் இலட்சியவாதிகளான இவ்விரு பெண்களும் மானஸீகமாக. மனதைத் திறந்து பேச முடிந்தது,,அவள் போட்ட முதல் கடிதம் மூலமாகத்தான் உயிரின் தடம் மறந்து போகாத ,கலை வழிபாடான வாழ்க்கையில் பாரதி போல இன்னுமொருத்தி..பாரதி கேளாமலே, அவளின் காலடிக்கு வந்து சேர்ந்த மங்கையின் உயிர்த்தரிசனம் கொண்ட கலைப்பார்வை கறைகளை எரிக்கும் சத்தியப்பிழம்பாகவே பாரதியை மேலும் பற்றிக்கொண்டது.

அது வெகு நாள் வரை அணையாத சோதியாகவே அவர்களை வாழ்வித்த போதிலும், நடைமுறை வாழ்க்கை ,அனுபவங்களுக்கு, ஏற்ப அவர்களும் மாற வேண்டி இருந்த்து பாரதியைப் பொறுத்தவரை நடை முறை வாழ்க்கை ஒட்டவில்லை .அதனோடு பங்கமுற்ருப் போகாத இன்னும் காலத்தால் கருகி அழியாத ஒருதனிப்பிழம்பாகவே அவள் இருக்கிறாள். மங்கையின் நிலைமை வேறு. அவள் பட்டங்கள் பல
பெற்று, ஒருபடிப்பு மேதையாகி எட்டாத உயரத்தில் இருக்கிறாள். அவளுடன் தொடர்பு கொண்ட காலத்திலேயே, அவளொரு ,பல்கலைக்கழக மாணவிதான். பாரதி ஏட்டுப்படிப்பாய் படித்தது ,குறைவு. வாழ்க்கைக் கல்வி ,அவளுக்கு, நிறையக் கற்றுக் கொடுத்திக்கிறது உள்ளே மங்கையின் குரல் கேட்டது

“அந்த லேடியைக் கூப்பிடுங்கோ“

முன்பென்றால் அவள் இலக்கண சுத்தமாகத் தமிழ்தான் பேசுவாள். கடித உறையிக் கூட ஆங்கிலத்தைக் கொண்டு வராமல், பெறுநர், தருநர் என்றே தமிழில் குறிப்பிட்டு எழுதுவாள் .இப்போது அதெல்லாம் ,மறந்து போன மாதிரி ஏன் இந்த வார்த்தை இடறல்? தன்னை லேடி ,என்று அழைப்பது பாரதிக்கு என்னவோ போலிருந்தது. அவள் தன்னைக், கண்டு கொள்ளவில்லையென்பதே,,அவளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

எனினும் அவள் அதை வெளிக்காட்டாமலே இயல்பாக உள்ளே வந்து சேர்ந்த போது, அவள் எவ்வித பாவனையுமின்றி ஒரு கதிரையைக் காட்டி இருங்கோ என்றாள்

“என்ன மங்கை ?நான் ஆரென்று தெரியேலையே?“

“நான் அப்ப்டிச் சொல்லேலையே, தெரிந்தபடியால்தானே, முன் அனுமதியின்றி உங்களுக்கு இந்தச்சலுகை அப்பா அம்மா இருக்கினமே?“ என்று
கேட்டாள் ஒன்றையும் மறக்காமல்.

“அவையள் இப்ப இல்லை ..நீங்கள் ஒன்றையும் மறக்கேலை என்று உணரும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்குத் தெரியுமா?“

அதிலேயும் ஒரு நெருடல். எங்களுக்கிடையே நிறைய வேறுபாடுகள் இருக்கு.
நான் உங்களைப் போல் அதிகம் படிக்கேலை. ஆனால் மனசளவில் கலைத்துவமாக ஒன்றுபட்ட ஓர் ஒற்றுமை அப்ப இருந்தது. இப்ப அதிலேயும் ஒருசிறு நெருடல், நீங்கள் மாறிப் போனியள். நீங்களா இதைச் செய்தியளென்று, நான் திகைச்சுப், போனன்.

“அப்பவெல்லாம் ஒரு முழு ஆளாய், எங்கடை வீட்டிற்கு, வந்த போது, உங்களை நான் எவ்வளவு ஆத்மார்த்தமான நம்பிக்கையோடு,வரவேற்றேன் தெரியுமா? நான் போட்ட அந்த மனக்கணக்கு, ஏன் பிழைத்துப் போனது? இது வெறும் வடை பாயாசத்தோடு முடிந்து,போன நட்புத்தானென்று,,அப்ப எனக்குத் தோன்றேலை .நீங்கள் என்னைஉண்மையாகவே ,நேசித்திருந்தால், இப்படி யெல்லாம் ,நடந்திருக்குமா?. நீங்களா ,இதைச் செய்தியளென்று ,என்மனம் கிடந்து துடிக்குதே“.

“எதை?“

“நான் இதை வெளிபடையாகக் கேட்டால், நீங்கள் கோபிக்கமாட்டியளே?”

“இல்லை.கோபிக்க மாட்டன்“..“உங்களுக்கு, அந்த உரிமை இருக்கு“.

“எப்படிக் கேட்கிறதென்று,,எனக்குப்புரியேலை. அப்ப உங்களுக்குக் கல்யாணத்திலே உடன்பாடில்லை என்று, சொல்லி விட்டு, இப்படித் தடம் புரண்டு போனியளே, ஏன் இப்படி? சொல்லுங்கோ மங்கை. அதுவும் ஒரு நெறி தவறிய கல்யாணம். பிறர் சொத்தைத் திருடுவது போல“

நான் “அப்படி நினைக்கேலையே! எனக்குக் கல்யாணத்திலே ,உடன்பாடில்லையென்று அப்ப மட்டுமல்ல, இப்பவும் சொல்லுறன்..ஒருசமூக அங்கீகாரம் பெறுவதற்காக, உடலாலே மட்டும் உறவு கொண்டு வாழ்ந்து மடிவது தான் அந்தக் கல்யாணம். நான் செய்தது அப்படியல்ல பொய்யாகவும், வேடம் கட்டி ஆடுவது போலவும், இல்லாமல்,
மனசளவில் மட்டும் ஒருவரை ஏற்றுக்கொண்டு நான் வாழ்கிறேனென்றால், இந்த மானஸீக உறவுக்கு என்ன பெயர்? சொல்லு பாரதி. வீணாக வேறு எதையோ நினைத்துக் கொண்டு, இதைக் கொச்சைப்படுத்திப் பார்க்கிறதிலே என்ன நியாயமிருக்கு? இதனால் ஆருக்கும் பாதிப்பில்லை ஏனென்றால் நான் எவர் மீதும் தங்கியிருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் தனித்துச் சுதந்திரமாக, என்ரை சொந்தக் காலிலே நிற்பவள் நான் பிறரின் விருப்பு வெறுப்புகளை யோசிச்சு ஏன் மாற வேணும்? நான் நானாக இருப்பதே ,பெரிய சந்தோஷம் எனக்கு அதை விடும் “இப்ப நீர் வந்த விடயம்?

“ஒரு கையெழுத்து வேணும்“

“அவ்வளவுதானா? இதோ போட்டுத்தாறனே“.

முத்து முத்தாக அவளின் தமிழ் எழுத்துக்கள் களை கட்டி நிற்கும்.. அதற்குச் சோடை போகாமலே, ஆங்கிலதில் ,அவள் போட்ட கையெழுத்தும் மிக அழகாக இருந்தது. இதையெல்லாம் மீறி அவள் விதி எழுதிய வாழ்வில் விழுந்த கோணல் ஒரு தனிக்கணக்கு என்று நினைத்ததுதான் பெரிய மடமை என்று, பாரதிக்கு உறைத்தது. அவளின் எழுத்து நடை போலவே அவள்கொண்ட வாழ்வின் முடிவும், அப்பழுக்கில்லாத அவள் மனதின் துல்லிய ஒளி வெளிப்பாடாகவே, அதுவும் களை கட்டி நிற்பதாய் பாரதிக்கு உணர்வு தட்டிற்று..

ஒரு கெட்ட கனவிலிருந்து மீண்டு வந்த மாதிரி அவள் பற்றிய அந்த மேலான பிரக்ஞையில், அப்படியே மூழ்கிப்போன போது அவளுக்குப் பேச வரவில்லை. ஒரு நல்லிணக்கமான அவளின் கவிதையை வாசிப்பது போலவே அதுவும் இருந்தது. அதைப் படித்தவர்க்கே, அதுவும் புரியும்.அவள் கவிதை மட்டுமல்ல அதன் உயிரும் கூட..

– ஜீவ நதியில் பிரசுரமானது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *