மறக்க முடியாதவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 19, 2022
பார்வையிட்டோர்: 3,460 
 
 

“குட்மார்னிங் சார்” மலையாளம் கலந்த குரல் கொடுத்தபடியே காம்பவுண்ட் கேட்டை திறந்து உள்ளே வந்தான்

“குட்மார்னிங் பாபு” அப்பொழுதுதான் தூக்கத்தில் இருந்து விழித்திருந்தாலும் பதிலுக்கு குரல் கொடுத்தேன்.

நேரம் காலை ஆறு மணியாக இருக்கலாம், என் அனுமானம். ஏனென்றால் சரியாக ஆறு மணிக்கு இவன் ஆஜராகி விடுவான். ஆரம்ப காலத்தில் எனக்கு இவன் வருகை எரிச்சலூட்டினாலும் போக போக இவன் வருகை என்னையும் விடியலில் நேரத்தில் எழுப்பி விட்டுவிட்டது.

ஒரு மாதமாகத்தான் வந்து கொண்டிருக்கிறான். வீட்டின் பின்புறம் கூடிய விரைவில் ஓய்வு பெற போவதால் என் சேமிப்பு முழுவதும் எடுத்தும், அது போக அங்கு இங்கு கடன் வாங்கி ஒரு கட்டிடம் எழுப்பும் வேலையை இவனது முதலாளியிடம் ஒப்படைத்திருக்கிறேன். அவரிடம் இவன் நீண்ட நாட்களாக வேலை செய்து கொண்டிருக்கிறான்.

காலை ஆறு மணிக்கு வேலையை ஆரம்பித்து விடுவான், கல், மணல், சிமிண்ட இவைகளை தேவையான அளவு எடுத்து வைத்து நேற்று வரை கட்டிய கட்டிடத்துக்கு தண்ணீர் விட்டு விடுவான்.

முதல் நாள் மட்டும் தண்ணீர் விடுவதற்கு மோட்டார் எப்படி இயக்குவது என்று கேட்டான். எங்களது மோட்டார் கொஞ்சம் தண்ணீர் ஊற்றினால்தான் வேலை செய்யும். அதன்படி சொல்லி செய்து காட்டினேன்.

மறு நாளில் இருந்து அவனே எல்லா வேலைகளையும் செய்து மோட்டாரையும் நிறுத்தி விடுவான். அதற்கு முன்னார் எங்களுக்கு தேவையான தண்ணீரையும் தொட்டியில் நிரப்பி வைத்து விடுவான்.

மற்றபடி முதலாளி அனுப்பும் ஆட்களை ஒழுங்கு படுத்தி எங்களை தொந்தரவு செய்யாமல் கூடுமான வரையில் அவனே செய்து விடுவான். வேலை செய்யும் சித்தாள்களிடம் சிந்திய கலவைகளை எடுத்து சுத்தம் செய்து கொடுத்தும் சென்று விடுவான்.

இதனால் நான்கைந்து ஆட்கள் கச கசவென்று வீட்டிற்கு பின்னால் அதும் ஒரு காம்பவுண்டுக்குள் வேலை செய்து கொண்டிருப்பது மனதுக்கு எரிச்சலாய் இருந்தாலும் இவன் ஒருவன் எல்லா பொறுப்பையும் எடுத்து செய்வதால் நிம்மதியாக இருந்தது.

பக்கத்து வீட்டுக்காரர் ஒரு முறை காலையிலயே வந்து வேலை செய்யறயையே? கேட்டதற்கு தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், ஒரு பெண் கல்லூரியிலும், இன்னொரு பெண் பள்ளியிலும் படிக்கிறார்கள், அவர்களுக்கு படிப்பு கட்டணம் கட்டுவதற்காத்தான் இப்படி வேலை செய்வதாக தெரிவித்தான்.

அக்கம் பக்கம் நண்பர்கள் கூட “பரவாயில்லை உங்களுக்கு கட்டிட வேலை செய்யற ஆளுங்க ஆறு மணிக்கெல்லாம் “டாண்ணு” வந்து வேலைய ஆராம்பிச்சிடறாங்க, இப்படி என்னிடம் சொன்னபோது எனக்கும் கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

ஒரு கட்டுமாண தொழிலாளி, தினமும் மண் வெட்டியும் கடப்பாறையும் வைத்து கடினமாக உழைத்து கொண்டிருப்பவன், தன் மகள்களின் படிப்புக்காக உழைக்கிறான் என்று தெரிந்ததும் இன்னும் அவன் மீது மதிப்பு கூடியது.

அவன் முதலாளி கூட அவனையே நம்பி இருப்பதாகத்தான் எனக்கு பட்டது. காலையில் வந்து “பாபு இந்த வேலை எல்லாம் செஞ்சு முடிச்சிடு” இப்படி சொல்லிவிட்டு என்னிடமும் வந்து சிறிது நேரம் பேசி விட்டு (பொதுவாக பண விஷயம், செலவுகள், இவைகளை சொல்லி ) புலம்புவார், அடுத்து கிறிஸ்துவ மதத்தில் தான் ஒரு கடமை தவறாத வழிபாட்டாளர் என்பதற்கு ஒரு சில செயல்களை சொல்லுவார். மற்றபடி எல்லா வேலைகளும் பாபுதான். அவருக்காகட்டும், இந்த கட்டிட வேலைகளினால் பக்கத்து வீட்டார் என் மீது கொள்ளும் கோபங்களை சமாளிக்கவும் இந்த பாபுதான் தேவைப்பட்டான்.

அக்கம்பக்கம் எல்லார் வீட்டுக்கும் வேலை செய்து தருவான். இதனால் என் மீது அவர்கள் கொள்ளும் அதிருப்தியையும் அவர்களால் வெளியில் காட்டி கொள்ளாமல் பார்த்து கொள்வான்.

மூன்று நான்கு மாதங்கள் ஒடியிருந்தது. கட்டிடம் முழு வடிவம் ஆனாலும் இன்னும் பூச்சு வேலைகளும், மின்சார வேலைகளும், தண்ணீர் இணைப்புகளும் கொடுக்காமல் இருந்தது.

ஒரு நாள் பாபு வரவில்லை, வேலைகள் கொஞ்சம் மெதுவாக நடந்ததாக எனக்கு தெரிந்தது. அவனது முதலாளி எனக்கு போன் செய்து சார் பாபுவுக்கு இன்னைக்கு ரம்ஜான், அதனால் வரமாட்டார் என்றார்.

அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது பாபு “முஸ்லீம்” என்று. அதுவரை ஒரு கட்டிடம் கட்டுவதற்கு இந்து மதத்தில் என்னென்ன சடங்குகள், செய்வார்களோ அதை எல்லாம் அருமையாக செய்து கொடுத்திருந்தான் பாபு.

பரவாயில்லையே நம் வீடு மும்மதத்தை சேர்ந்தவர்களால் கட்டப்படுகிறது என்கிற ஆத்ம திருப்தி கூட எனக்கு வந்தது.

ரம்ஜான் முடிந்த பின்னால் கூட பாபு வரவில்லை. இரண்டு மூன்று நாட்கள் கழிந்து நானே அவன் முதலாளியிடம் கேட்டுவிட்டேன்.

என்ன ஆச்சு பாபுவுக்கு ஆளே வரலை?

அவரு வரமாட்டாரு, மெல்ல சொன்னார் முதலாளி.

என்ன சொல்றீங்க? திகைப்புடன் கேட்டேன்.

ஆமா சார் அவருக்கு “ஆம்பளையாளு” சம்பளம் கொடுக்கறொம், நானே மேஸ்திரி சம்பளம் வாங்கினாலும் நாளொன்னிக்கு ஆயிரம் ரூபாய் வாங்குவேன். இவருக்கு நாளொன்னிக்கு “எழுனூற்றைம்பது”, அது போக “நூறு பேட்டா”, இதுல காலையில வந்து வேலை செய்யறதுனால “பாதி நாள் சம்பளம் கூட”, ஆக மொத்தம் நாளொன்னிக்கு “ஆயிரத்து இருநூறுக்கு” மேல வரும், இவ்வளவு சம்பளம் இனிமேல இந்த கட்டிடத்துக்கு கொடுக்க முடியாது. அதனால அவரை கூப்பிடலை. எனக்கு இரண்டு “சித்தாளு” போதும், இரண்டு “மேசன்” போதும், பூச்சு வேலைதானே. சமாளிச்சுக்குவோம்.

அவர் சொன்னது சம்பள கணக்குப்படி நியாயமாக தெரிந்தாலும், எனக்கு ஒருவனாய் பாடுபட்டு, கட்டிடம் பிரம்மாண்டமாய் வளரும் வரை தன் உழைப்பை கொடுத்து விட்டு, இனி மேல் உன் உழைப்பு தேவையில்லை என்று நிராகரிக்கப்படும்போது மனம் படும் வேதனை..

நாமும் இது போலத்தானே, ஒரு நிர்வாகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறோம், இனி உன் சேவை இங்கு போதும் என்று சொல்லி நம்மை வேண்டமென்று சொல்லும்போது ஏற்படும் வலி இருக்கிறதே..

அந்த கட்டிடம் தன் பூச்சுக்களால் முழுமை அடைந்து கொண்டிருந்தாலும் என்னை பொறுத்தவரை மனதுக்குள் பாபுதான் நின்று கொண்டிருக்கிறான், “குட்மார்னிங் சார்” என்ற குரலுடன் உள்ளே வந்ததும், கவலைப்படாதெங்க சார் கட்டிடம் முடியும்போது உங்களுக்கு எல்லா வேலையும் செஞ்சு கொடுத்துட்டுத்தான் போவேன், அவன் சொல்லியிருந்த உறுதி மொழி. இவைகள் அடிக்கடி மனதுக்குள் வந்து வந்து சோகப்படுத்தி கொண்டிருக்கின்றன.

உலகத்தில் கட்டுமாண வேலைகள் எப்பொழுது ஆரம்பித்ததோ அப்பொழுது முதல் இப்படி எத்தனை பேர்களின் உழைப்புக்கள் மறைந்து போயிருக்கிறது என்று என் மனம் நினைத்தாலும் நாமும் கூட இப்படித்தான், நிர்வாகம் நம்மை வேண்டாமென்றால் வேண்டாம் தானே..! உண்மை மனதுக்கு பட, கொஞ்சம் மனசு வலிக்கத்தான் செய்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *