(1946-50ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவள் ஒழுக்கம் தவறியவள். மோக்ஷ வீட்டை நோக்கிச் செல்லும் மனித வர்க்கத்தின் ஞானப் பாதையில் குறுக்கே படம் விரித்தாடும் கொடிய விஷசர்ப்பம். ஒன்றுமறியாத ஆண்மகனைத் தன் மாயா சக்தியால் வலிந்து இழுத்து மீட்சியில்லாத காமப் படுகுழியில் வீழ்த்தும் காந்தச் சுழல். அருவருத்து ஒதுக்கப்பட வேண்டிய வாழ்க்கை ரசத்தின் அடிமண்டி ….சீ!
ஆமாம்! அவள் நிலை தவறியவள் தான். ஆனால் ஏன்?
அவளுடைய நடத்தையைக் கண்டனம் செய்த சுத்தப் பிரமுகர்களால் இந்தக் கேள்விக்கு மட்டும் விடை கண்டு பிடிக்க முடியவில்லை. தங்களுடைய இருதயத்தின் மேல் கையை வைத்துத் தங்க ளுடைய மனச் சாட்சிகளைப் பரிசீலனை செய்யவும் அவர்களுக்குத் தைரியமில்லை. மற்றவர்களைக் கண்டனம் செய்யும் பொழுது மட்டும் தாங்கள் நன்னடத்தையின் சித்திரங்கள் என்பதுவே அவர்களுடைய நினைப்பு. அதுதான் மனித இயற்கை போலும்!
அந்த வார்த்தையின் பூர்ணமான பொருளில் அவள் ஒரு மானம் வெட்கமற்ற வியபிசாரிதான். தன் உடலைப் பொது உடைமைப் பொருளாகக் கருதுபவள். வெறும் தசை உணர்ச்சியா அல்லது பொருளாசையா? இரண்டும் அல்ல; தன் உடலையும் உயிரையும் ஒன்றாக வைத்துக் காப்பதற்கு அவளுக்குத் தெரிந்த வழி அது ஒன்றுதான்.
மரியா மதலேனா ஒரு பெரிய கப்பல் வியாபாரியின் மகள். பொருட்செல்வம் அளிக்கக்கூடிய போகங்களை எல்லாம் அவள் அனுபவித்தாள். நாளைக்கு என்ற கவலை கிடையாது அவளுக்கு. அவளுடைய வாழ்க்கைக் கிண்ணத்தில் சுவை மிகுந்த மதுரசம் நிரம்பியுள்ளது.
குழந்தைப் பருவம் ஓர் இன்பக் கனவுபோல் மறைந்தது. திடீரென்று ஒருநாள் அவளுடைய தந்தை கடலில் கலம் கவிழ்ந்து மாண்டுபோனான். அவன் தேடி வைத்த செல்வங்களையெல்லாம் தாயாதிகள் கைப்பற்றிக் கொண்டனர். மரியா தன் இளமையின் முழுமலர்ச்சியில் ஆதரவற்ற அநாதையாக விடப்பட்டாள். சமூக ஏணியின் முதற்படியில் கர்வத்தோடு நின்றவள் இப்பொழுது நிலத்தில் கிடந்து துடிக்கிறாள். விதியின் கொடிய விளையாட்டு அது.
நாலு திசைகளிலிருந்தும் வாழ்வின் சண்டமாருதங்கள் குமுறிக் கொண்டு வந்தன – வறுமை, தனிமை, சன்மார்க்கம், யௌவனத்தின் தூண்டுதல், அவற்றின் சீறுதல்களை எதிர்த்து ஒரு திசையிலும் அடியெடுத்து வைக்கமுடியவில்லை அவளால். நின்ற நிலையிலே பாதாளத்தில் இறங்கிவிட வேண்டியதுதானா?
போகத்தில் வாழ்ந்தவள் மீண்டும் போகத்தை விரும்பினாள். உண்பதற்கு ரஸம் மிகுந்த உணவு, அணிவதற்கு ஒய்யாரமான உடைகள், வதிவதற்கு நல்ல வீடு ஆகியவை வேண்டும். அதற்கு என்ன வழி? அவளை மானமாக மணம் செய்துகொள்வதற்கு ஒரு வாலிபனும் முன்வரவில்லை. அழகு மட்டும் இருந்தால் போதுமா, பணப்பை வேண்டாமா?
வழி தவறிய ஓர் ஆன்மா அலைவது போல, எவ்வளவு காலத்திற்குத்தான் ‘இடம்’ தேடிக் கொண்டிருக்கமுடியும்? கடைசியாகத் தனக்குத் தெரிந்த சுலபமான வழியில் இறங்கிவிட்டாள். முதற் பிழை இரண்டாம் பிழைக்கு இடம் கொடுத்தது. சிறுதுளிகள் பெருவெள்ளமாகி அவளைப் பிரவாகத்தோடு அடித்துக் கொண்டு போய்விட்டன. பிறகு கழிவிரக்கத்திற்கு இடம் இல்லாமற் போய்விட்டது.
நல்வழிப் போதகர்களின் போதனைகள் அவளுடைய செவிகளில் ஏறவில்லை. அவை அர்த்தமற்ற வெறும் வார்த்தைக் குவியல்கள்தாமே! மோஸஸ் யாத்த சட்டங்களுக்குக் கூட அவள் அஞ்சவில்லை .
ஆனால் அவளுடைய நெஞ்சத்தின் உள்ளே ஏதோ ஒரு தீனமான குரல் “நீ பாபி” என்று கூறிற்று.
எத்தனை நாட்களுக்குத்தான் சட்டத்தின் கழுகு நோக்கத் திற்குத் தப்பி இருக்கமுடியும்? ஒருநாள் அகப்பட்டு விட்டாள்.
அக்காலத்தில் இப்பொழுது இருப்பதுபோல் நாகரீகமான சட்டங்கள் கிடையாது. பல்லுக்குப் பல்லு, ரத்தத்திற்கு ரத்தம் என்று பழிதீர்த்துக் கொள்ளும் சட்டமே வழங்கி வந்தது.
ஏசுநாதரின் ஞானஒளி சிறிது சிறிதாகப் பாமர இருளை ஒட்டிக்கொண்டு வந்தது. அவருடைய தேன் பொதிந்த ஞான வாசகங்களை ஏழை ஜனங்கள் ஆவலோடு போற்றி வந்தனர். ஆனால், அவரை வெறுப்பவர்கள் பல்லாயிரக்கணக்காக இருந்தனர். ராஜாங்கமே அவரைக் கண்டித்தது. அவர் இன்னும் ஒரு ‘கிராமச் சாமியார்’ ஆகவே இருந்தார்.
சில பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து, ஒருநாள் மரியாவைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் ஏசுநாதர் முன் விட்டார்கள். “ஆண்டவனே, இவள் ஒரு வியபிசாரி; பாபி; கையும் மெய்யுமாக அகப்பட்டிருக்கின்றாள். மோஸஸ் நிர்மாணித்த சட்டத்தின்படி இவளைச் சந்தியில் நிற்க வைத்துக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். அதுதான் வியபிசாரத்திற்குச் சரியான தண்டனை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
அவர்கள் இப்படிக் கேட்டது ஏசுநாதரைத் தங்களுடைய தலைவராகக் கருதியோ அல்லது அவருடைய அபிப்பிராயத்தில் உண்மையான மதிப்பு வைத்தோ அல்ல. அவருடைய நியாயத் தீர்ப்பில் பிழை கண்டுபிடித்து அவரைத் தாழ்வுபடுத்துவதுதான் அவர்களுடைய நோக்கம். அது அவருக்கும் தெரியும். அதனால் தான் அவர்கள் கூறியதைக் கேளாதவர் போலக் கீழே குனிந்து நிலத்தில் விரலால் ஏதோ கீறிக் கொண்டிருந்தார்.
அவர்கள் இரண்டாம் முறையும் தாங்கள் கூறியதையே திருப்பிக் கூறினார்கள்.
ஏசுநாதர் அவர்களை நிமிர்ந்து பார்த்து, “உங்களில் யாரொருவன் தான் ஒரு பாவச் செயலையும் செய்யவில்லை என்று மனமார நினைக்கிறானோ, அவன் முதற்கல்லை அவள் மேல் விட்டெறியட்டும்” என்று கூறிவிட்டு மறுபடியும் கீழே குனிந்துகொண்டார்.
அவர் கூறிய வசனம் இறகு முளைத்த பாணம்போல் சென்று அவர்களுடைய இருதயங்களைத் தாக்கி அவற்றில் நிறைந்திருந்த குப்பைகளை வெளியே வாரி இறைத்தது. அவர்களுடைய பாவங்கள் எல்லாம் அவர்களுடைய கண்களின் முன் விசுவரூபம் எடுத்து நின்றன. நினைக்க முடியாத கோரக் காட்சிகள் எல்லாம் அம்மந்திர வார்த்தைகளின் சக்தியால் தோன்றி மறைந்தன.
ஆதரவற்ற ஏழைப் பெண்மேல் குற்றம் சாட்டிய மனிதர்கள் தங்களுடைய மனச்சாட்சியே பயங்கரமான வடிவம் கொண்டு தங்களைக் குற்றம் சாட்டுவதை உணர்ந்தார்கள். அவர்களுடைய அங்கங்கள் நடுங்கின. இதுதான் ஆன்மாக்களின் கடைசியான தீர்ப்பு நாளோ? பேசாமல் ஒவ்வொருவராக, வைகறையின் ஒளியின் முன் கலையும் இருள் போல, அவ்விடத்தைவிட்டு அகன்றார்கள்.
ஏசுநாதர் தலைநிமிர்ந்து பார்த்தார். மரியா தனியே நின்றாள். முடியிழந்த கோபுரம் போல் நிலைகுலைந்து நின்றாள்.
“பெண்ணே, உன்மேல் பழி சுமத்தியவர்களெல்லாம் எங்கே? ஒருவனாவது உன்னைத் தண்டிக்கவில்லையா?”
“எல்லாரும் போய் விட்டார்கள்.”
அவளுடைய குரலில் கழிவிரக்கம், வெட்கம், பரிதாபம், கெஞ்சும் பாவம் எல்லாம் நிறைந்திருந்தன. குனிந்த தலை நிமிரவில்லை, ஏசுநாதருடைய கருணை ததும்பும் கண்கள், அவளுக்குத் தன் பாவங்களைப் பிரதிபலிக்கும் இரு கண்ணாடிகள் போல் தோன்றின.
“நானும் சேர்ந்து உன்மேல் பழிசுமத்த மாட்டேன். நீ உன் வீட்டிற்குப் போ. இனிமேல் பாவம் செய்யாதே” என்று தேன் சொட்டுவது போற் கூறினார்.
அந்த வார்த்தைகள் அவளுக்கு என்றுமில்லாத ஒரு நம்பிக்கையையும், மனவுறுதியையும் கொடுத்தன. தன் ஆன்மா பரிசுத்தமாக்கப்பட்டதாக உணர்ந்தாள். அன்று தொட்டுத் தன் வாழ்க்கையிலே ஒரு புதுப்பருவத்தை உண்டாக்கி விடுவதென்ற திடசித்தத்தோடு அவ்விடத்தை விட்டு மெல்ல நகர்ந்தாள்.
மரியா மதலேனா இப்பொழுது முழுதும் மாறிவிட்டாள். பாவம் நிறைந்திருந்த வாழ்க்கையில் பரிசுத்தம் நிறைந்தது. போதனைகளும் ராஜதண்டனையும் செய்து முடிக்கமாட்டாத ஒன்றை ஏசுநாதருடைய கருணைப் பிரவாகம் ஒரு கணப்பொழுதில் செய்து முடித்துவிட்டது. ஏசுநாதருக்குத் தொண்டு செய்வதிலும், அவருடைய போதனைகளைச் சாதனை செய்வதிலும் மரியாவிற்குப் பரமானந்தம்; ஆன்மாவிற்குச் சாந்தி. அவள் அவருடைய உண்மையான சிஷ்யையாகி விட்டாள்.
அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரால் மஞ்சன மாட்டித் தன் நீண்ட மெல்லிய கூந்தலால் சுத்தி செய்வதில் மரியா விற்கு விவரிக்கமுடியாத ஓர் உவகை ஏற்பட்டது. ஏசுநாதரும் அதை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.
ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு ஆவி நீத்தபின் ஜோஸப் என்ற அவருடைய உத்தம சிஷ்யன் ஒருவன் பைலேட்டிடம் உத்தரவு பெற்று அவருடைய உடலை எடுத்து ஒரு கல்லறையில் அடக்கம் செய்தான். மூன்றாம் நாள் வைகறையில் மரியா அக்கல்லறையின் சமீபமாக வந்து பார்த்தபொழுது அதன் மூடி நீக்கப்பட்டிருப்பதைக் கண்டாள். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. யாராவது யூத நாஸ்திகர்கள் கல்லறையை அசுத்தப் படுத்திப் பிணத்தை அகற்றி விட்டார்களா?
ஓட்டமாக ஓடி பீட்டரிடமும் இன்னுமொரு சிஷ்யரிடமும் விஷயத்தைத் தெரிவித்தாள். அவர்களும் பிரமிப்படைந்து கல்லறையை நோக்கி விரைந்து வந்தார்கள். கல்லறையின் உள்ளே சென்று பார்த்தபொழுது பிணம் காணப்படவில்லை. பிணம் சுற்றப்பட்டிருந்த துணிகள் மட்டுமே அலங்கோலமாகப் புரண்டு கிடந்தன. அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . செயலற்றுத் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்று விட்டார்கள்.
ஆனால் மரியா மட்டும் அவ்விடத்தில் அழுதுகொண்டே நின்றாள். அழுதுகொண்டே சமாதியின் உள்ளே நோக்கினாள். ஆ! என்ன ஆச்சரியம்! அங்கே ஏசுநாதரின் உடல் கிடந்த இடத்தின் தலைப்புறத்திலும் காற்புறத்திலும் இரண்டு தேவதூதர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுடைய உதடுகள் அசைந்தன.
“பெண்ணே! ஏன் அழுகின்றாய்?”
“என் ஆண்டவனைக் காணவில்லையே? அவரை நான் எங்கே தேடுவேன்?”
இப்படிக் கூறிவிட்டுப் பின்புறம் திரும்பினாள். அங்கே ஏசுநாதர் நின்றுகொண்டிருந்தார். ஆனால் அவளுக்கு அடையாளம் புரியவில்லை அவரை யாரோ தோட்டக்காரன் என்று நினைத்து, “ஐயா! என் ஆண்டவனை எங்கே கொண்டு போய் வைத்திருக்கிறீர்; கூறும், நான் அவரை எடுத்து அடக்கம் செய்கிறேன்” என்று கேட்டாள்.
“மேரி!”
ஆ! அதே மதுரம் சொட்டும் குரல்தான்; மேரிக்கு அடையாளம் புரிந்துவிட்டது.
“என் ஆண்டவனே!” என்றாள், தாயின் குரல் கேட்ட புனிற்றிளம் கன்று போல. அவளுக்கு மயிர்க்கூச்செறிந்தது. அவளுடைய அந்தராத்மாவில் இன்பப்புனல் கரை புரண்டோடியது.
ஏசுநாதர், “மேரி, என்னைத் தொடாதே. நான் இன்னும் சுவர்க்கத்திலிருக்கும் என் தந்தையிடம் போகவில்லை. ஆம்! அவர் உனக்கும் தந்தைதான். உலகம் எல்லாவற்றுக்குமே தந்தை. நான் இப்பொழுது அங்கேதான் போகிறேன். இதை எல்லாம் நீ என் சிஷ்யர்களிடம் கூறி விடு” என்றார்.
அவர் மறைந்துவிட்டார்.
மரியா உன்மத்தம் கொண்டவள் போல் வெறும் வானத்தைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
– 1946-50, வெள்ளிப் பாதசரம், முதற் பதிப்பு: ஜனவரி 2008, மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ், சென்னை.
– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.