எழுதியவர்: ஜோதிரிந்திர நந்தி
ஒரு மரம். வெகுகாலத்து மரம். அது அழகாயிருக்கிறதா இல்லையா என்று யாருமே கேள்வி கேக்கவில்லை.
மனிதன் தலைக்கு மேலே வானத்தையும் மேகத்தையும் பார்ப்பதுபோல் அவர்கள் தங்கள் கண்ணெதிரில் அந்த மரம் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்கள் — மாலை நேரத்தில், நண்பகலில், காலையில் பார்த்தார்கள், வெறுங் கண்களால் பார்த்தார்கள். இதயத்தால், உணர்வு பூர்வமாகப் பார்க்கவில்லை, புரிந்து கொள்ளவில்லை.
அப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று யாருக்கும் ஒரு நாளும் தோன்றவுமில்லை.
நாட்கள் கழிந்தன, பருவங்கள் கடந்தன, ஆண்டுகள் சென்றன. மரம் தன் இடத்தில் நின்று கொண்டிருந்தது.
மழைக்காலத்தில் அந்த மரத்தின் இலைகள் பெரிதாக, தளதளவென்று ஆகும்; சரத் காலத்தில் அவை தடிமனாகும்,அவற்றின் பச்சை நிறம் இன்னும் அழுத்தம் பெற்று ஏறக்குறையக் கறுப்பாகிவிடும்; பின்பனிக் காலத்தின் நடுப்பகுதியில் இந்தப் பசுமை – கருமை மங்கிப் போய்விடும். பிறகு குளிர்காலத்தில் அந்த இலைகள் சோகை பிடித்த கர்ப்பிணியின் வெளிறிய முகம் போல் பழுத்துப்போய் உதிர்ந்துவிடும். மரத்துக்கு எரிச்சலாயிருக்கும்.
அப்போதும் மரம் மரந்தான். ஆனால் அது பார்ப்பதற்கு வெறும் கட்டை போலிருக்கும் — சிறிய கட்டை, பெரிய கட்டை, மெல்லிய கட்டை, மனித விரல்போல் சின்னஞ் சிறிய, எண்ணற்ற கள்ளிகள், கட்டைகளாலான ஒரு சிக்கலான கட்டுமானம்..
ஆனால் அதற்காக யாரும் அதன்மேல் கோபித்துக் கொள்வார்களா? இல்லை. காரணம், அந்த மரம் மேகங்கள்கவிந்த ஆகாயத்துக்குக் கீழே தானே ஒரு காடு போல் அடர்த்தியாக நின்றிருக்கும்போது மனிதர்கள் அதை எப்படிப் பார்த்தார்களோ, அதே மாதிரிதான் அது குளிர்கால வானத்துக்குக் கீழே கட்டைகளையும் சுள்ளிகளையும் சுமந்துகொண்டு நிற்கும் போதும் பார்த்தார்கள். அதனால்தான் இது மேலெழுந்தவாரியான பார்வை, மனதால் புரிந்து கொள்வது அல்ல என்று சொன்னேன். ஜனங்கள் அதைப் புரிந்துகொண்டிருந்தால் மாசி மாதத்தில்அதன் சிவப்பும் இளம் பச்சையும் கலந்த கொழுந்துகளின் செழுமையைப் பார்த்து ஆடிக் குதித்திருப்பார்கள். சித்திரை பிறந்ததும் அது கொத்துக் கொத்தாய்ப் பூக்களைச் சுமந்து கொண்டு ரோஜா நிற ஒளியை வானமெங்கும் பரப்பும்போது அவர்கள் மகிழ்ச்சி மேலிடக் கத்துவார்கள்.
அவ்வாறு யாரும் செய்வதில்லை, இதுவரை செய்ததில்லை.
இரண்டு மூன்று வீடுகளுக்கு முன்னால் உள்ள நிலத்தில் ஒரு மரம் கப்புங் கிளையுமாக நின்று கொண்டிருப்பதால் ஒரு வசதி ஏற்பட்டிருக்கிறது என்று மட்டும் அவர்களுக்குத் தெரியும். அந்த வீடுகளில் இருப்பவர்களும் அவ்வப்போது இந்த வசதியை அனுபவிக்க வருவார்கள். காலை வேளைகளில் வயது முதிர்ந்தசிலர் செய்திப் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டுவந்து மரத் தடியில் அமர்ந்து அரசியல், சமூகம், பொருளாதாரம் பற்றி விவாதிப்பார்கள். பிற்பகலில் அந்தப் பக்கத்துக் கிழவிகளும் நடுத்தர வயதுப் பெண்களும் மரத்துக் கீழே மெல்லிய பச்சைக் கம்பளமாய் விரிந்திருக்கும் புல்லின்மேல் கால்களைப் பரப்பிக் கொண்டு சமையல், தையல், யார் வீட்டிலோ குழந்தை பிறந்தது, யாருக்கோ குழந்தை பிறக்காதது இவற்றைப் பற்றியெல்லாம் பேசிப் பொழுதைக் கழிப்பார்கள். மாலை நேரம் வந்ததும் சிறுவர் சிறுமியர் அங்கே விளையாட ஓடி வருவார்கள். மரத்தைச்சுற்றி ஓட்டம், மரத்தின் மேலேறி இலை பறிப்பது, கிளைகளை ஒடிப்பது, சில நாட்கள் மரக்கிளையில் கயிற்றைக் கட்டி ஊஞ்சலாடுவது.. இவ்வாறு ஒரே கூச்சலும் கும்மாளமுமாயிருக்கும்.
சிலர் குளிர்காலப் பகல் நேரத்தித கொண்டில் மர நிழலில் தலை வைத்துக்கொண்டு உடம்பு வெயிலில் படும்படி நீட்டிக்கொண்டு கதைப் புத்தகம் படிப்பார்கள், கோடைகால இரவுகளில் ஐந்தாறு பேர் மரத்தடியில் ஜமுக்காளத்தை விரித்துக் கொண்டு அதன் மேலமர்ந்து சீட்டாடுவார்கள்.
மனிதர்கள் நடமாட்டமில்லாத நேரத்தில் ஆடுமாடுகள் மரத்தடியில் ஆனந்தமாகப் புல் மேய்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
மேலே பறவைகளின் கீச்சு மூச்சு ஒலி, சிறகுகள் படபடக்கும் அரவம், அலகோடு அலகு உரசிக்கொள்ளும் ஒலி. இடையிடையே காற்றில் கிளைகள் ஆடும், இலைகள் அசையும்.
சில சமயம் பறவைகளே இருக்காது. காற்றில் சலனமும் இருக்காது. மரம் அசைவற்று நிற்கும் – நிலத்தின்மேல் அடர்ந்த நிழலைப் பரப்பிக் கொண்டு – யுகயுகமாய் — எல்லையற்ற காலத்தின் சாட்சியாகத் தன்னந்தனியே நின்று கொண்டிருக்கும். அப்போது ஒரு தத்துவ ஞானி மௌனமாக, சலனமின்றி உலகத்தைப் பார்ப்பது போலிருக்கும். வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள், பாவத்தின் வெற்றி, புண்ணியத்தின் தோல்வி, இவற்றை யெல்லாம் பார்த்துத் திகைத்து வியக்கும் தத்துவ ஞானியாகக் காட்சியளிக்கும் அது.
சிந்தனை வயப்பட்ட மனிதன்போல் அந்த மரமும் இருந்தது. சிந்தனை வயப்பட்ட மனிதன் மௌனமாயிருக்கிறான். சில சமயம் மரத்தையும் அப்படிப்பட்ட மனிதனாகக் கற்பனை செய்யத் தோன்றும். அப்போது அதன் நாற்புறமும் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், காற்று இவற்றின் நடமாட்டத்தைப் பார்த்தால் மனதுக்குக் கஷ்டமாக இருக்கும்.
யாரோ ஒருத்தி மரத்தை இந்த மாதிரி கற்பனை செய்திருக்கிறாள் போலும். அது இதுவரை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. மரத்துக்கு ஞானப்பார்வை இருந்திருக்க வேண்டும். கிழக்குப் பக்கத்தில் ஒரு வீட்டின் பச்சை நிறச் சாளரத்தினருகில் உட்கார்ந்து கொண்டு ஒரு பெண் தன்னை உற்றுப் பார்ப்பது மரத்துக்குத் தெரிந்து விட்டது. முன்பெல்லாம் அவள் மரத்தில் தளிர்கள் அரும்புவதையும் பழுத்த இலைகள் உதிர்ந்து விழுவதையும் மற்றமனிதர்கள் போலவே சாதாரணமாகப் பார்த்து வந்திருக்கலாம். இப்போது அவளுடைய கண்கள் வெளுப்பாக இல்லை, மை தீட்டப்பட்டு நல்ல கறுப்பாயிருந்தன. குட்டைப் பின்னலை ஆட்டிக்கொண்டு, சட்டை காற்றில் அசைந்தாட அவள் ஓடித் திரிந்த காலத்தில் அங்கு நின்று கொண்டிருப்பது மரந்தானா அல்லது மூங்கில் கம்பா என்றுகூடக் கவனித்திருக்க மாட்டாள் அவள். இப்போது அவளது அமைதியான, கம்பீரமான தலையில்இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கும் கொண்டைபோல் அவளது மனமும் நிதானம் பெற்று எப்போதும் அந்த மரத்தைஜாக்கிரதையாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது,. அவள் மரத்தைப் பற்றிச் சிந்திக்கிறாள். சிந்திக்கச் சிந்திக்க ஒருநாள் அவள் பார்வையில் பயம் தோன்றியது. இப்போது அவளுடைய கண்ணிமைகள் அசையவில்லை, கண்மணிகள் அப்படியே உறைந்து போய் விட்டன. ஏதோ ஒரு பயங்கரக் கவலை அவளைப் பீடித்திருக்கிறது. அந்தக் கரிய, இமைகள் சூழ்ந்த கண்களின் பார்வையில் பயத்தோடு வெறுப்பும் கலந்திருக்கிறது என்றுமரத்துக்குப் புரிந்து விட்டது. பகல் வெளிச்சத்தில் மட்டுமல்ல. இரவின் இருளிலும் அந்தச் சாளரத்தருகில் இரு விழிகள் தன்னை உறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை யுணர்ந்ததும் மரத்துக்குப் பயம் ஏற்பட்டது. அது ஒரு தெளிவற்ற நிழலுருவமாகத் தன்னை இரவின் ஆழ்ந்த இருளில் மறைத்துக் கொண்டாலும் அந்தப் பார்வையிலிருந்து தப்ப இயலவில்லை. அந்தப் பெண் பயத்தை மட்டுமல்ல. பிடிபிடியாக வெறுப்பையும் அதன் மேல் வீசியெறிந்து கொண்டிருந்தாள்.
பிறகு இந்த விஷயம் எல்லாருக்கும் தெரிந்து போய் விட்டது.அந்தப் பெண்தான் இதை மற்றவர்களிடம் சொல்லியிருக்க வேண்டும்.
‘இந்த மரம் கெட்டது, இது ஒரு பிசாசு. இதை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்!’
அக்கம் பக்கத்து மனிதர்கள் உஷாரானார்கள். மனிதர்கள் போல் மரமும் பிசாசாகி மக்களிடையே உலவமுடியும் என்று அவர்கள் முதல் முறையாகக் கேள்விப்பட்டார்கள், தெரிந்து கொண்டார்கள்.
கிழவர்கள் மரத்தடியிலமர்ந்து அரசியல் பேசுகிறார்கள்; இளம் பெண்களூம் கிழவிகளும் அங்கே உட்கார்ந்து கொண்டு குழந்தை பிறப்பது, பிறக்காதது பற்றியெல்லாம் விவாதிக்கிறார்கள்; மரம் பிசாசாக இருந்தால், அதற்குக் கெட்ட எண்ணமிருந்தால் மக்களுக்கு எவ்வளவு ஆபத்து!
“இதை வெட்டிவிடணும்! எரிச்சுடணும்! வேரோடு பிடுங்கினால் நல்லது! இல்லேன்னா இந்த மரத்தாலே என்ன ஆபத்து வருமோ தெரியாது!” என்றாள் இறுக்கமான கொண்டையில் வெள்ளைப் பூக்களாலான மாலையை வைத்துக் கொண்டு சாளரத்தருகே அமர்ந்திருந்த பெண்.
எல்லோரும் அவள் சொன்னதைக் கேட்டார்கள். சிறுவர்கள் அந்த மரத்தடியில் விளையாடுகிறார்கள். மரக்கிளையொன்று முறிந்து அவர்கள் மேல் விழலாம்.மரத்தின்மேல் இடி விழுந்தால் மரத்தடியில் அந்த நேரத்திலிருப்பவர்களெல்லாரும் உயிரிழப்பது திண்ணம். மரமே இடியை வரவழைக்கும் பிசாசு என்னதான் செய்யாது?
இதைக்கேட்டு மக்களின் கண்கள் பயத்தால் விரிந்தன.
அந்தப் பச்சைச் சாளரத்துப் பெண் சும்மா இருக்கவில்லை மரத்தைப் பற்றி இதுவரை கவலைப்படாதிருந்தவர்களிடம் அவள் மரத்தைப் பற்றிச் சொல்லிப் பயமுறுத்தினாள்.
மரப் பிசாசு இடியை மட்டுமல்ல, மனிதனைக்கூட நள்ளிரவில் தன்னருகே இழுத்துக் கொண்டு வரலாம். மறுநாள் காலையில் அந்த மனிதன் ஒரு கிளையில் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்குவதை எல்லோரும் காண்பார்கள் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள மரக்கிளை மிகவும் வசதியானது என்பது எல்லாருக்கும் இப்போது நினைவு வந்தது.
இந்த மரத்தை வேரோடு பிடுங்கியெறிய வேண்டும், சுட்டுப் பொசுக்க வேண்டும்!
மரத்துக்கு மேற்குப்புறத்தில் இன்னொரு வீட்டின் சிவப்பு நிறச் சாளரத்தருகே அமர்ந்துகொண்டு ஒருவன் தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை அது வெகுகாலம் கவனிக்கவில்லை. அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்த மரம் திகைத்தது, பிறகு மகிழ்ந்தது. அந்த மனிதனின் கண்கள் அழகாயிருந்தன. அவற்றில் பயமோ வெறுப்போ பகைமையோ சிறிதுமில்லை; அன்பும் பாசமும் அனுதாபமுமே இருந்தன.
இது மரத்துக்கு வியப்பளித்தது. ஏனென்றால் சில நாட்களுக்கு முன்னால் கூட அந்த மனிதனின் பார்வையில் சஞ்சலம் நிறைந்திருந்தது. அவனது நடையுடை பாவனையில் அமைதியின்மை வெளிப்பட்டது. அரை நிஜார் அணிந்த சிறுவனாக இருந்த காலத்தில் அவன் நினைத்த போதெல்லாம் மரத்தடிக்கு ஓடி வருவான், மரத்தின் மேல் கல்லெறிவான், மரத்திலேறி இலைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பறவைக் கூடுகளைத் தேடிப் பிடித்துச் சிதைப்பான், கிளைகளில் கயிறு கட்டி ஊஞ்சலாடுவான். இப்போது அவன் ஒரு கண்ணியமான மனிதன். இப்போதெல்லாம் அவன் தன் மஸ்லின் ஜிப்பாவின் கைகளை முழங்கைகளுக்கு மேல் மடித்து விட்டுக் கொண்டு,சாளரத்தையடுத்த மேஜைக்கு முன்னால் அமர்ந்து, மோவாயை உள்ளங்கைகளால் தாங்கியவாறு மரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவாறு மேஜையிலுள்ள மலர்க் கிண்ணத்திலிருந்த ஒரு ரோஜாவை யெடுத்து முகர்கிறான். மரத்தைப் பார்க்கப் பார்க்க, எதையோ சிந்திக்கச் சிந்திக்க அவன் மகிழ்ச்சியடைகிறான், திருப்தியடைகிறான். மரத்தைப் பற்றிய அவனது சிந்தனைக்கும் ரோஜாவுக்குமிடையே ஏதோ ஓர் ஆச்சரியமான தொடர்பு இருக்கும் போலும்! அவனது பார்வையில் மரமும் ரோஜாவைப்போல்அழகாகத் தோன்றியிருக்கலாம்.
மரத்துக்கு நிம்மதி ஏற்பட்டது, அதன் பயம் தெளிந்தது.
இந்த மனிதன் மரத்தைப் பற்றி முற்றிலும் வேறு விதமாகப் பேசினான்.
“இந்த மரம் கடவுளின் ஆசியால் நம்மிடையே நிற்கிறது. இதைக் காப்பாற்றி வைத்துக்கொள்ள வேண்டும், நாள் முழுதும் இந்த மரத்தடியில் மனிதர்கள் கூடுகிறார்கள். ஒரு மனிதனை வேறொரு மனிதனிடம் இணைக்கிறது இந்த மரம்–அதாவது மனிதனுக்கு சமூக உறவைக் கற்பிக்கிறது. இது இருப்பதால்தான் இதனடியில் சிறுவர்கள் கூடி விளையாடுகிறார்கள். இந்த மரம் ஒரு தாய்போல் குழந்தைகளுக்குப் பாசத்தையும் மகிழ்ச்சியையும்பகிர்ந்தளிக்கிறது.
உண்மையில் இந்த மரம் அழகானது. இதன் நிழலழகு மிக அழகு. ஆகையால்தான் கள்ளங் கபடற்ற அழகிய பறவைகள் இதில் அடைக்கலம் பெற்று கீச்சுக் கீச்சு ஒலி எழுப்புகின்றன, வண்ணத்துப் பூச்சிகள் நடனமாடுகின்றன..”
அக்கம் பக்கத்து மனிதர்கள் புதிய விதமாகச் சிந்திக்கத் தொடங்கினார்கள்.
மேற்குப் பக்கத்து சிவப்புச் சாளரத்து அழகிய மனிதன் அத்துடன் நிற்கவில்லை. அவன் சொன்னான்…
“இரும்பு, செங்கல், சிமெண்ட்டாலான கட்டிடங்களில் வசித்து வசித்து நமக்கு அலுப்பு ஏற்பட்டுவிட்டது. நம் கண்களுக்கு முன்னால் ஒரு பச்சைமரம் இருப்பதால்தான் நம்மால் இயற்கையை நினைவுறுத்திக்கொள்ள முடிகிறது. இந்த மரத்தின் தயவால்தான் நாம் இன்னும் முற்றிலும் செயற்கையாக ஆகாமல் இருக்கிறோம். இந்த மரம் இருக்கத்தான் வேண்டும். சோர்வும் அலுப்பும் மிக்க நமது வாழ்க்கையில் இந்த மரம் ஒரு கவிதை..”
சிவப்புச் சாளரத்து மனிதன் ஒரு கவியோ?–சிந்தித்துப் பார்த்தது மரம். அவன் இரவில் மேஜை முன் அமர்ந்து ஏதோஎழுதுகிறான், எழுதாத நேரத்தில் மௌனமாகச் சாளரத்துக்கு வெளியே மரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
மனிதன் கெடுதலான சொற்களைக் கேட்டுச் சஞ்சலமடைகிறான்; அதுபோல் நல்ல வார்த்தைகளைக் கேட்டு அமைதியடை கிறான், மகிழ்ச்சியுறுகிறான்.
ஆகவே ஒருத்தி மரத்தைத் தூற்றியபோது கேட்டுக் கொண்டிருந்தவர்கள் நிதானமிழந்தனர்; இப்போது அவர்கள் மரம் பாராட்டப் பெற்றது கேட்டு அமைதி பெற்றனர். மரத்தைப் பற்றிய அவர்களது கவலை தீர்ந்தது. மரம் நிலைத்து நின்றது.
ஆனால் கிழக்குச் சாளரத்துப் பெண் சும்மா இருக்கவில்லை. யாரும் தனக்கு உதவாவிட்டால் தானே கோடாரியெடுத்து அந்த மரத்தை வெட்டிவிடுவதாக அவள் பற்களைக் கடித்துக் கொண்டு சபதம் செய்தாள். தன் கண் முன் அந்த மரம் நிற்பதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, எப்படியாவது அந்தப்பிசாசை அகற்றிவிடப் போகிறாள் அவள்.
அவளுடைய சபதத்தைக் கேட்டு மரம் வருத்தப்பட்டது; அதே சமயம் அது தனக்குள் சிரித்துக் கொண்டது. அது கிழக்குச் சாளரத்துப் பெண்ணைக் கூப்பிட்ட அவளிடம் சொல்ல விரும்பியது — உன் கொண்டையிலணிந்த பூச்சரம் அழகாயிருக்கிறது. கண்களில் மையும், நெற்றியில் குங்குமமும் அழகு செய்கின்றன; உன் கை விரல்கள் சம்பக மொட்டுப்போல் அழகாயிருக்கின்றன. இந்த அழகான மிருதுவான கைகளில் கோடாரி எடுத்துக்கொள்வாயா?”
இந்த பேச்சு மேற்குச் சாளரத்து மனிதனின் காதுக்கெட்டியது. அவனுடைய அழகிய விரல்கள் இறுகிக் கொண்டன. தேவைப் பட்டால் அந்த விரல்களுக்கு எஃகு போல் இறுகத் தெரியும் என்பது மரத்துக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இப்போது அவன் எந்தக் கையால் கவிதை எழுதுகிறானோ, ரோஜாப்பூவைத்தடவிக் கொடுக்கிறானோ அதே கையால் அவன் ஒரு காலத்தில் கல் விட்டெறிந்து பறவைக் கூடுகளைச் சிதைத்திருக்கிறான். கிளைகளை முறித்திருக்கிறான், இலைகளைக் கிழித்திருக்கிறான். ருத்திரன் போல் கயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டு ராட்சசத்தனமாக ஊஞ்சல் ஆடியிருக்கிறான். ஆகவே அவன் தன் முஷ்டியை மேலே உயர்த்தி எப்படியாவது மரத்தைக் காப்பாற்றுவதாக சபதம் செய்தான். மரத்தை அழிக்க முயல்பவர்யாராக இருந்தாலும் அவரை மன்னிக்க மாட்டான் அவன். வாழ்க்கையிலிருந்து கவிதையை விரட்டிவிடக் கூடாது. மரத்தை அழிக்க வருபவரை அவன் தன் கடைசி இரத்தத் துளி இருக்கும் வரை எதிர்ப்பான். மரத்துக்கு எவ்விதத் தீங்கும் ஏற்பட விட மாட்டான்.
மரத்துக்கு இப்போது ஒரு புதிய பயம் பிடித்துவிட்டது.. தன்னை முன்னிட்டுக் கிழக்குச் சாளரக்காரிக்கும் மேற்குச்சாளரக்காரனுக்குமிடையே சண்டை வந்துவிடுமோ?
அன்று பிற்பகல் கழிந்துவிட்டது. ஒரு வெள்ளாடு தன்னிரு குட்டிகளுடன் மரநிழலில் புல் மேய்ந்தது. மாலை நேரமானதும் குழந்தைகள் விளையாடத் தொடங்கின. எண்ணற்ற பறவைகளின் கீச் மூச் ஒலி தீவிரமாகி, சிறிது நேரத்துக்குப் பிறகு குறைந்து நின்றுபோய் விட்டது. இரவு வந்தது. மேகமற்ற கருத்த வானத்தில்எண்ணற்ற தாரகைகள் தோன்றின. மெல்லிய காற்றில் இலைகள் சலசலத்தன. அன்றாட நிகழ்ச்சிதான் இது. நாற்புரமும் இருந்த வீடுகளில் விளக்குகள் எரிந்தன, பலவகை ஒலிகள் எழுந்தன. பிறகு இரவு வளர வளர ஒவ்வொரு வீடாக அரவம் குறைந்தது, விளக்குகள் அணைந்தன. பிறகு நாற்புறமும் அடர்ந்த இருள் சூழ்ந்து கொண்டது. அடர்ந்த இருள், அளவிட முடியாத நிசப்தம். தலைக்குமேல் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்ஒளிர மௌனமாக நின்று கொண்டிருந்தது மரம். பிறகு காற்றும் நின்றுவிட்டது. மரத்தின் ஓரிலைகூட அசையவில்லை.
அந்த நேரத்தில்..
அந்த அடர்ந்த இருளிலும் பட்டப் பகல்போல் தெளிவாகப் பார்க்க முடிந்தது மரத்தால். கிழக்கிலிருந்து வந்து கொண்டிருக்கிறாள் அந்தப் பெண். அவள் தன் முந்தானையை இடுப்பில் இறுகச் செருகிக் கொண்டிருக்கிறாள். பூச்சரத்தைக் கொண்டை யிலிருந்து எடுத்தெறிந்து விட்டாள். போரிட வந்திருக்கிறாள் அவள். இப்போது அவளுக்குப் பூமாலை தேவையில்லை. அவள் கையில் கோடரி. மரம் நடுங்கியது.
அதே சமயம் மறுபுறத்திலும் மனிதனின் காலடியோசை கேட்டது. மரம் அந்தப் பக்கம் பார்த்தது. அதற் நிம்மதிஏற்பட்டது. மேற்குச் சாளரத்து மனிதன் வந்விட்டான். இப்போது அவன் கையில் பேனா இல்லை, தடி உடம்பில் ஜிப்பா இல்லை, முண்டா பனியன். அவனது தாடை இறுகியிருந்தது. பார்வையில் கடுமை. இந்தக் கணமே கர்ஜனை செய்யப்போகிறானென்று தோன்றியது.
மரம் காது கொடுத்துக் கேட்டது.
சோகம் கலந்த நிசப்தம், முடிவு தெரியாத வேளை.
மரத்தின் உச்சியில் ஒரு பறவை கீச்சொலி எழுப்பியது பெயர் தெரியாத மலரொன்றின் மணம் எங்கிருந்தோ மிதந்துவந்து வானத்து மூலையிலிருந்த ஒரு தாரகையை நோக்கி விரைந்தது. காற்று மெல்ல வீச, மெல்லிய சிறு கிளைகள்அசையத் தொடங்கின.
மரம் இதை எதிர்பார்த்திருந்தது போலும். அது அதிகம் ஆச்சரியமடையவில்லை. புடைவையணிந்த இளம் பெண்ணின் இதழ்களில் சிரிப்பு மலர்ந்தது.
மேற்குச் சாளர மனிதனின் இறுகிய தாடை மிருதுவாகியது. இடிக்குரல் எழுப்பவில்லை.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள். அந்த ஆழ்ந்த இருளிலும் அவர்கள் ஒருவர் முகத்தைமற்றவர் தெளிவாகப் பார்க்குமளவுக்கு அவ்வளவு அருகருகே நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் விடும் மூச்சுக் காற்றை மற்றவர் கேட்கும்படி அவ்வளவு நெருக்கம்.
“கையில் கோடரி எதுக்கு?”
“மரத்தை வெட்டப் போறேன்.”
“அதிலே என்ன லாபம்?”
“இந்த மரம் ஒ பிசாசு!”
“இல்லே, இந்த மரம் ஒரு தேவதை!”
“பிசாசைத் தேவதைங்கறவன் ஒரு முட்டாள்!”
“தேவதையைப் பிசாசா நினைக்கறவன் ஒரு பாவி! அவன் மனசில் குத்தம் இருக்கு, இதயத்திலே பொறாமை இருக்கு. அதனாலதான் அவன் வெள்ளையைக் கறுப்பாகப் பார்க்கிறான். வெளிச்சத்திலேகூட அவன் கண்ணுக்கு இருட்டுதான் தெரியுது.”
“அப்படியானால் உலகத்திலே இருட்டே இல்லையா? கறுப்பே இல்லையா?”
“இல்லை”
“அதெப்படி?” பெண்ணின் கையிலிருந்த கோடரி நழுவி விழுந்தது. அவள் சிந்திக்கத் தொடங்கினாள். மரத்துக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒருவர் கோடரியைக் கீழே எழிந்து விட்டதையும் மற்றவர் தடியை எறிந்து விட்டதையும் அது கவனித்தது.
“அதெப்படி சாத்தியம்?” என்று சிந்தித்தவாறே அந்தக் கிழக்குச் சாளரப் பெண் தலை நிமிர்ந்து மரத்தின் இலைகளுக்கிடையே ஒளி வீசும் நட்சத்திரங்களைப் பார்க்கத் தொடங்கினாள். பிறகு அவள் முணுமுணுத்தாள், “எல்லாம் வெளிச்சம், எல்லாம் அழகு; கறுப்பு இல்லை, இருட்டு இல்லை–இதெப்படி சாத்தியம்?”
“தனக்குள்ளேயே வெளிச்சம் பிறந்தால் இது சாத்தியந்தான்.”
“அந்த வெளிச்சம் என்ன?”
“அன்பு.”
பெண்ணின் கண்ணிமைகள் துடித்தன. அவள் நீண்ட பெருமூச்சு விட்டாள். அவளது குரலில் ஏக்கம் தொனித்த.
“என்னுள்ளே அன்பு பிறக்காதா?”
“அதற்கு அன்பைப் பயில வேண்டும். அன்பு செய்யக் கற்க வேண்டும்” அழகாகச் சிரித்துக் கொண்டு சொன்னான்இளைஞன்.
“நீ எனக்கு அன்பைக் கற்றுக் கொடு.”
மரம் கண்களை மூடிக்கொண்டது. அதற்குத் தூக்கம் வந்து விட்டது. மரங்களும் தூங்கும். அ பல நாட்களாகக் கவலையால் தூங்காமலிருந்தது.. அல்லது வேண்டுமென்றே பார்க்காமலிருந்திருக்கலாம். மனிதன் சில சமயம் மரத்தைப் பொருட்படுத்தாமலிருப்பதுபோல், சில சமயம் மரமும் மனிதனைக் கவனிக்காமலிருக்க வேண்டும் என்ற உண்மையை அனுபவம்மிக்க அந்த மரத்துக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை..
ஜோதிரிந்திர நந்தி (1912 – 1982)
இரண்டாவது உலகப்போருக்குப் பிற்பட்ட நடுத்தர, கீழ் மட்டத்து மக்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பதில் தேர்ந்தவர். சிந்தனைச் செல்வரான இந்த எழுத்தாளர் உள்ளத்தின் உணர்ச்சிகளை ஆராய்வதில் தனித்தன்மையைக் கையாள்கின்றார். இவருடைய மொழி நடையும் தனித்தன்மை வாய்ந்தது. உணர்ச்சிப் போராட்டங்களைச் சித்திரிப்பதில் திறன் வாய்ந்தவர். இவருடைய கதைகள், நாவல்களில் சமகால சமூகத்தின் தவறுகள் மட்டுமின்றி, மனித வாழ்க்கையில் இயற்கையின் அழுத்தமான தாக்கமும் இடம் பெறுகிறது. இந்த விஷயத்திலும் தனித்தன்மை வாய்ந்தவர் இவர்.
– ‘அம்ருத’ புத்தாண்டு இதழ், மே 1970.
– அனைத்திந்திய நூல் வரிசை, வங்கச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1997, தொகுப்பு: அருண்குமார் மகோபாத்யாய், வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.