கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,606 
 
 

சென்ற நூற்றாண்டிலே மரக்கவிப்புலவர் என்று ஒருவர் வாழ்ந்தார். அவர் எதனைப் பாடினாலும் மரத்தை வைத்துப் பாடுவது வழக்கம். – –

ஒருமுறை, மன்னர் ஒருவரைப் பார்த்துப் பாடிப் பரிசில் பெறஎண்ணிச் சென்றார். அப்போது மன்னர் அங்கு இல்லை. வேட்டைக்குப் போயிருந்தார். மன்னர் திரும்பி வரும்வரை காத்திருந்த புலவர், அவர் வந்த பின்பு தாம் இயற்றிய கவிதையைப் பாடினார்.

‘மரமது மரத்திலேறி மரமதைத் தோளில்வைத்து
மரமது மரத்தைக் கண்டு மரத்தினால் மரத்தைக்குத்தி
மரமது வழியே மீண்டு வன்மனைக் கேகும்போது

மரமதைக் கண்ட மாதர் மரமொடுமரம் எடுத்தார். அரசனும் கேட்டு மகிழ்ந்தான்.

பொருள் தெரியாமல் புலவர்கள் விழித்தனர். அரசனோ பெரும்பொருள் பரிசாக அளித்து, மரக்கவிப் புலவரை மரியாதை செய்து அனுப்பிவைத்தான்

பொருள் தெரியாமல் விழித்து, பொறாமையால் வெதும்பி நின்ற மற்றப் புலவர்களை அழைத்து, அவர்கள் அறியாமை நீங்க மரக்கவிப் புலவரின் பாட்டுக்கு அரசனே பொருளை விளக்கினான்.

மரமது மரத்திலேறி அரசன் குதிரை மீது ஏறி
(அரசமரம் – மா மரம்)

மரமது தோளில்வைத்து – தோமரத்தைத் தோளில் வைத்து
(தோமராயுதம்)

மரமது மரத்தைக் கண்டு – அரசன் வேங்கையைக் கண்டு
(வேங்கை மரம்)

மரத்தினால் மரத்தைக் குத்தி – தோமரத்தால் வேங்கையைக் குத்தி

மரமது வழியே மீண்டு – அரசன் சென்ற வழியே திரும்பி

வன்மனைக் கேகும்போது – அரண்மனைக்கு வந்த போது

மரமதைக் கண்ட மாதர் – அரசனைக்கண்ட பெண்கள்

மரமொடு மரம் எடுத்தார் . (ஆல் – அத்தி) ஆலத்தி எடுத்தார்கள்.

அக்காலத்து மன்னர்கள் தாம் புலவர்களாக இருந்த தோடு, புலவர்களை வாழவைக்கும் புரவலர்களாகவும் இருந்தனர் என்பதற்கு இஃது ஒரு சான்றாகும்.

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *