கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 26, 2021
பார்வையிட்டோர்: 4,385 
 

சந்தடிமிக்க சாலையிலிருந்து. அருணாசலத்தின் வீடிருந்த தெருவுக்கு வந்த உடனேயே தெருவின் மறுமுனைக்குத் தாவிய மாணிக் கத்தின் கண்கள்… வெறிச்சோடிப் போய்க்கிடந்தது.

அப்படியென்றால், அதற்குள் எடுத்துச் சென்றுவிட்டார்களா?

கைக்கடிகாரத்தைப் பார்த்த போது எண்கள் சரிவரத் தெரிய வில்லை. செய்தி அறிந்து வீட்டிலிருந்து இறங்கிய அவசரத்தில் கண்ணாடி எடுக்கவில்லை. கண்ணாடி இல்லாமல், இப்போதெல்லாம் ஒன்றுமே வாசிக்க முடிவதில்லையே… இருந்தும் இன்னும் மணி மூன்று கூட ஆகவில்லை என்பதை யூகிக்க முடிகிறது. ‘பையன் ரெண்டரை மணி ஃப்ளைட்டில் வருகிறான். எடுக்க எப்படியும் ஐந்து மணி ஆகிவிடும்’ என்று தன்னிடம் சொன்னதெல்லாம்…?!

வீட்டுக்குள் போகத் தோன்றவில்லை. இப்போது அங்கே போய் யாரைப் பார்க்க?

தெருவில் ஆங்காங்கு எடுத் தெறியப்பட்டிருந்த அரளிப்பூக் களில் கவனம் சென்றபோது. இப்பத் தான் எடுத்துக்கிட்டுப் போயிருப் பாங்க போலிருக்கு. பக்கத்தில் தானே என்ற எண்ணத்துடன், திரும்பி நடக்கலானார்.

வேகமாய் நடக்க முடியவில்லை. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. அறுபது என்பது சின்ன வயசா? அருணாசலத்துக்கு தன்னைவிட ரெண்டு வயசாவது கூடுதல் இருக்காதா?

ஆல மரமூடு, அதைத்தாண்டி கசாப்புக் கடை. சிறிது நீங்கி முடி திருத்தும் சலூன், அதன் எதிரில் இடப்பக்கம் திரும்பும் சிறு சந்து. கரடு முரடாய் தார் விலகி – இந்தப் பாதையில் எத்தனையோ தடவை அருணாசலத்தின் கூட முன்னால் செல்லும் பாடையைப் பின் தொடர்ந்து நடந்து வந்த நாட்கள்…

இப்போது. அவன் முத்தி விட்டான்…

தான் மட்டும்…

மேல் கீழாய்ச் செல்லும் இந்த குறுகிய சந்தில் இங்கிருந்து பார்த் தால் பளிச்சென்று வலப்பக்கம் தெரியும் நம் சாதியினரின் மயானம்… வாழும் போதிருந்த சாதி சமூகம் எரியும்போதும் தொடர்கிறது. இந்தச் சந்திலேயே தனித் தனி காம்பவுண்டுச் சுவர்களுக்குள் கலப் படமாக விடாமல் பாதுகாக்கப் படும் வெவ்வேறு சாதியினரின் எரிக்கும் இடங்கள். வீட்டு நடையில் கண்டதைப் போல் சூன்யம். வெறிச்சோடிப் போய்…

அப்படியென்றால் ஃபோனில் அருணாசலத்தின் மாப்பிள்ளை சொன்னது…

இல்லை இறக்கமான சந்தில் நடந்து கீழே வந்தபோது. சந்தில் ஓரம் சேர்ந்து கிடக்கும் வாகனங்கள்… புதுசாய் வந்திருக்கும் வலப்பக்க கான்க்ரீட் கட்டிடத்திற்குள்ளேயும். வெளி முற்றத்திலும், சந்திலும் நிறைந்து வழியும் பந்து ஜனங்கள்…

இது நகரசபையின் பொது எலக்ட்ரிக் க்ரிமிட்டேறியமல்லவா, இங்கே வைத்தா?

நெஞ்சுக்குள் ஓர் அதிர்ச்சி…. கூடவே, சாதி பாகுபாட்டை மீறி பொதுவான இடத்தில் அந்திம க்ரியை நடைபெறுவதால், ஏன் துணுக்குற வேண்டும். சந்தோஷப் படவல்லவா வேண்டும் என்ற சுய குற்றச்சாட்டுணர்வும்!

யாரையோ எதிர்பார்த்து வெளியில் பார்த்துக்கொண்டு நிற்பதைப் போல் தோற்றம் தரும் தெரிந்த, தெரியாத முகங்கள்… அவர்கள் இடைவழி மெல்ல நடந்து. படியேறி உள் புகுந்ததும்…

சடக்கென்று அனுபவமான உஷ்ணம்…. இந்த முழு ஹாலே மின்சாரத்தால் தகனம் செய்யும் சூளையா?

“இதென்ன அபசகுனமோ. கரண்டு இல்லே… இனி எப்ப வருதோ என்னமோ… அது வருதுக்குள்ளே நாமெல்லாம் வெத்து வெண்ணீறாயிடுவோம் போலிருக்கு…. ஹும்…. அருணாசலம் அண்ணாச்சி பாடு சொகம்….!”

– இவ்வளவு பணம் செலவழிச்சு இதெல்லாம் இங்கே செஞ்சிருப்பவங்களுக்கு ஒரு ஜனரேட்டர் கூட இங்கே வச்சிருக்கலாம்… கவர்மெண்ட் மின்சாரத்தை நம்பி செய்யக் கூடிய காரியமா இது? அது எப்ப காலை வாருதுண்ணு சொல்ல முடியுமா? பாதி வெந்துகிட்டிருக் சிறப்பொ போயிடுச்சின்னா.”

பக்கவாட்டில் முணு முணுக்கும் குரல்கள்…

வாசல் பக்கம் தலைவைத்து உள்ளே மொலயிக் தரையில் மல்லாந்து படுக்க வைத்திருக்கும் அருணாசலத்தின் பூத உடம்பு இரண்டு மூன்றடி முன் வந்து அந்த முகத்தைப் பார்த்து ஒன்றிரண்டு கணங்கள், மௌனமாய்….

மூக்கிலும் செவியிலும் தென் பட்ட பஞ்சு இல்லாதிருந்தால் உயிரற்ற முகம் என்று சொல்ல முடியாது. கண்மூடி நிம்மதியாய் அயர்ந்து தூங்கும் தோற்றம்.

மெல்ல உள்ளே நடந்து ஹாலின் மறுகோடி மேடை அருகில் வந்த போது மேடை மீது தென்பட்ட மின்தளவாடம், பக்கவாட்டில் ஸ்விட்ச் போர்டு…. லைட் ஃபேன்களடக்கம் எல்லாமே செத்துப் போய்க்கிடந்தன.

மேலே சட்டையில்லாது. இடுப்பு வேஷ்டியுடன் கடைசி கர்மம் செய்யும் கோலத்திலிருந்த அருணா சலத்தின் மகன் பக்கத்தில் வந்தான்.

அவன் கண்கள் கலங்கியிருந்தன…

“நீ எப்போவப்பா வந்தே?”

ரெண்டரை மணி ப்ைைளட்டில் வந்தேன் அங்கிள்… ஏதோ குயஸைட் கேஸ் இங்கே வந்துக் கிட்டிருக்குது. உடனடி வராட்டி அது முடிஞ்சப்பபுறம்தான் தமக்குண்ணு அறிஞ்சு உடனடியாக இங்கே வந் துட்டோம். ஆனா… கரண்டில்லே. லைன்மேனை கூட்டிகிட்டு வர ஆள் போயிட்டாங்க, இப்ப வந்துடும்….. உட்காருங்க…”

“பரவாயில்லே …”

இரும்பு நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர்களின் இடைவழி பக்க வாட்டு வாசலுக்கு வந்தபோது ஓர் ஆசுவாசம். சற்று காற்றோட்டமாக இருந்தது..

சத்தின் மறுபக்கத்தில் மோனத் துயிலில் ஆழ்த்திருக்கும், தன் பாட்டி. அப்பா, அக்கா, மேலும் எத்தனை எத்தனையோ… பத்து மித்திரர்கள் இறுதியாய் எரித்தடங்கிய பழைய சுடுகாடு…

மண்திட்டாக சற்று உயர்த்திருக்கும் சுடும் இடத்துக்கும், பாடையின் கூட வந்து. மழித்தல், வாய்க் கரிசியிடல், குடமுடைப்பு, கொள்ளி வைப்பு எல்லாம் செய்து முடிப்பது வரை கவர்வம்புப் பேசியிருக்கும் ஊர்க்காரர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கும் எல்லாம் சமீபத்தில் தானே, வெயில் மழையிலிருந்து பாதுகாக்க கூரை அமைத்து ஆஸ் பெஸ்டாஸ் ஷீட் போடப்பட்டிருக் கிறது… அதோ தெரியும் அந்த வெட்டில், ஊர்க்காரர்கள் புடைசூழ. தனியாவும், இந்த அருணாசலத்தின் கூடவும் உட்கார்ந்து, கடைசி கர்மங்களுக்கு சாட்சியம் வகித்த நாட்கள்.

‘அந்த மாதிரி கட்டங்களில்தான், ஊர்க்காரர்களுக்கு புதுசு புதுசாய் ஆக்கபூர்வமான ஐடியாக்கள் உருவாகும். அப்படி உருவான ஐடியாக்களின் கூட்டான செயலாற்றல் தானே இப்போது அங்கே தெரியும் வசதிகள் ஒவ்வொன்றும்…!

முன்பெல்லாம் நாலு பக்கமும் திறந்தே கிடந்தன.

வேலையில்லா வீணர்களின் சூது விளையாட்டு. அடிக்கடி கை கலப்பு, குத்து வெட்டு, கள்ளச் சாராயப் பாட்டில்கள் ஒளித்து வைப்பது. ஊற்றிக்கொடுத்து விற்பனை, பட்டப்பகலில் கூட ஆண், பெண் விபச்சார விளையாட்டுக்கள்.

எப்பவாவது சாவு கர்ம கைங் கரியங்களுக்கு சாட்சியம் வகிக்க வந்து உட்கார்ந்திருக்கும் போது உதய மாகும் திட்டங்கள், மயான வைராக்கிய மாய் பிறகு கரைந்து போய்க் கொண்டிருந்தன வெகுகாலம்….

அப்படியிருக்கையில், ஒருமுறை அங்கே உட்கார்ந்திருக்கையில்தான் திட்டங்களை நடைமுறையில் கொணர பிள்ளையார் சுழி போட்டான் அருணாசலம்.

– நாளைக்கு வேலை ஆரம்பிக்க வேண்டும்…. இதோ என் பங்கு நூற்றியொரு ரூபாய்….

அப்படி, இங்கு வைத்து வசூலானது போக, வீடு வீடாய் ஏறி இறங்கி பணம் வசூல் செய்து சுற்றி இதோ தெரியும் காம்பவுண்டு சுவர்கள், வெளியில் கேட் பூட்டு. எரிக்க, உட்கார்ந்திருக்க என்று ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்து சுற்றி சுவர்கள் இல்லாது திறந்திருக்கும் இரண்டு சிறு ஷெட்கள்…

“என்ன ப்ெபடி ஒதுக்குப்புறமா வந்து நின்னுட்டீங்க.”

திரும்பிப் பார்த்தபோது அருணாசலத்தின் மாப்பிள்ளை ….. தான் வெளியில் பழைய சாதா சுடுகாட்டைப் பார்த்துக்கொண்டு நிற்பதை கவனித்துதானோ என்ன வோ அவனே தொடர்ந்து சொன்னான்.

“அந்த நம்ம ஊர்வகை சுடு காட்டுக்கு மாமா இனிஷியேட் பண்ணியதால் வந்த சீரமைப்பெல்லாம் மாரில் எல்லோருக்கும் தெரிஞ்சது தானே….. அதனால் அங்கேதான் எடுத்து போயிருப்போம். ஆனா… நேத்தைக்கு கடைசி நேரத்தில், இங்கே கொண்டுவந்தா போதுமுன்னு மாமா சொன்னதால்தான் இங்கே கொண்டு வந்தோம்.”

நிஜமாக இருக்குமா, நம்பவே முடியவில்லையே… ஆனால் இந்த விஷயத்தில் அவன் எதுக்கு பொய் சொல்லப் போகிறான்!

தோளில் கிடந்த துண்டால் முகத்தைத் துடைத்தவாறு அங்கே வந்த டிரஸ்டி சொன்னார்.

“அருணாசலம் என்னவோ நல்ல உத்தேசத்துடன்தான் சொல்லியிருப் பார். ஆனா… இந்த கரண்ட் எப்ப வந்து எப்ப வேலையை முடிச்சி கிட்டு நாம் வீடு போய்ச் சேருவது. அதுதான் தெரியல்லே …”

“இல்லே இப்ப வந்துடும். ஆளு வந்தாச்சு, டிரான்ஸ்பாமர் பக்கம் போயிருக்கான்… நானும் போய் பார்க்கட்டுமா…?”

அருணாசலத்தின் மாப்பிள்ளை அவசரப்பட்டுக்கொண்டு விரைந்து சென்றான். டிரஸ்டி சிரித்தவாறு சொன்னார்.

“அருணாசலம்சொன்ன சீரமைப்பெல்லாம் செஞ்சும்கூட, கடைசியில் அவர் அங்கே வராமல் இங்கேதான் வந்திருக்கார்….. நீங்க சொன்ன விஷயத்தை இன்னும் செய்ய முடியல்லே… நீங்க எப்படியோ.” சில மாதங்களுக்கு முன்….

பொன்வாணிபக் கடை வைர முத்துவின் பாடையை ஊர் சுமந்து வரும்போது… நல்ல வெயில் காலம். அதோடு வைரமுத்து முதலாளியின் தொப்பையும் கொழுகொழுவென்ற இரட்டைதாடி உடம்பும் தோள் சுமந்து வந்தவர்களை வெலவெலக்க வைத்துவிட்டது. அதைக்கண்டு பொறுக்காமல், கூட நடத்துவரும் இந்த டிரஸ்டி. அருணாசலம், ஏனைய ஊர்க்காரர்கள் கேட்க, தான் அபிப்பிராயப்பட்டது.

ஒல்லிகளான என்னை , அருணாசலத்தையெல்லாம் தூக்கி வருவது கஷ்டமில்லே … இந்த வைரமுத்து முதலாளி, நம்ம டிரஸ்டி இப்படி பஞ்சமறியா உடம்புகள் விஷயத்தில், செத்த பிறகும் இப்படி சாபம் வாங்கிக் கொடுக்கணுமா? ஊரில் பணம் திரட்டி ஒரு ஆம்புலன்ஸ் வாங்குவோம். இல்லாட்டி கன் கேரியேஜ் போல் டயர் சக்கிரம் போட்டு ஒரு வண்டி தயார் செய்தால் என்ன, பாடையை அதன் மீது வச்சு எல்லோருமா இழுத்துகிட்டு இங்கே கொண்டுவர வசதியா இருக்கும். நாமெல்லாம் என்னதான் பாவிகளா இருந்தாலும் கடைசி யாத்திரையாவது. யார் முணு முணுப்பும், சாபமும் இல்லாமல் சுமுகமா இருப்பதல்லவா நல்லது…

அதன்பிறகு இன்றுவரை எத்தனையோ பேர்கள் இங்கு பயணம் வந்து விட்டார்கள், பழையது போல் தோளேறித்தான்! ஏனோ இன்றுவரை தான் சொன்னது கைகூடவில்லை…

இப்போது பளிச்சென்று லைட்டுகள் வந்துவிட்டன. மின் விசிறிகள் முழங்கியவாறு சுழலத் தொடங்கி விட்டன… எல்லோர் முகங்களிலும். அப்பாடா என்று ஆறுதல். மகிழ்ச்சி.

கடைசி கர்மங்களுக்கான ஆயத்தங்கள் சுறுசுறுப்பாய் ஆரம்பமாயின…

டிரஸ்டியின் கூட மேடைப் பக்கம் நடக்கும் போது மாணிக்கம் நிதானமாகச் சொன்னார்.

“நான் சொன்னது பழைய சுடு காட்டுக்கு மட்டுமில்லே. இதுக்கும் பொருந்தும்….. இங்கே வந்து சேருகிற விஷயமாச்சே! அப்புறம். ஒவ்வொருத்தர் கடைசி நேரம் எங்கே வச்சு. எப்படி சம்பவிக்கப் போகுதுண்ணு யார் கண்டாங்க? தூக்கிக்கிட்டு வந்தாலும் சரி, வண்டியில் வச்சு இழுத்துக்கிட்டு வந்தாலும் சரி, இங்கே ஆனாலும் சரி, அங்கே ஆனாலும் சரி, கூடிய மட்டும் பிறத்தியாருக்கு அதிக சிரமம் கொடுக்காமலிருக்க வேண்டும். நான் ஆசைப்படுவதெல்லாம் அவ்வளவுதான்”.

– ஆகஸ்ட் 1994

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *