மனித உரிமைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 9,253 
 
 

டாக்டர் சொல்லிக்கொண்டிருப்பது எதுவும் அவனின் தாய்க்கு விளங்கியிருக்காது என்பது அவனுக்குத் தெரியும்..

உத்தியோக தோரணையில், தனது தமயன் பற்றிய வைத்திய விளக்கங்களை அந்த டாக்டர் அமைதியாகச் சொல்வதை ஒரளவு கிரகித்துக்கொண்ட அவனது தந்தையின் கண்கள் நீர்க்குளமாவை அவன் அவதானிக்கிறான்.அவனது இதயம் வெடிக்கும்போல் வேதனை அழுத்துகிறது.

ஓன்றாகப் பிறந்த நான் படும்பாடு இப்படியென்றால்,பெற்று வளர்த்து.தன் தமயனைப் பெரியவனாக்கிய தந்தை தாயின் துயர் எப்படியிருக்கும் என்று அவனாற் கற்பனையும் செய்ய முடியாது.

தான் சொன்ன விளக்கத்தை இவர்கள் விளங்கிக்கொண்டார்களோ இல்லையோ அந்த டாக்டர், தனது வைத்திய விளக்கத்தை முடித்து விட்ட மெல்லிய புன்முறுவலுடன் அவர்களை விட்டு நகர்கிறார்.

தாய் ஏங்கிய விழிகளுடன் தனயனைப் பார்க்கிறாள்.’ரஞ்சித்,என் அன்பு மகனே,என் சகோதரனைப்பற்றி என்ன சொன்னார் டாக்டர்,அதை எனக்கு விளக்கிச் சொல்லேன்’; என்று அவள் பார்வை கெஞ்சுகிறது. தாயை நேருக்கு நேர் பார்த்து சஞ்சலப் படாமல் அவன் எங்கேயோ பார்க்கிறான்.

தகப்பன் முன்செல்ல, தாயும் தனயனும் அவரை மௌனமாகப் பின் தொடர்கின்றனர்.

‘என்ன ரஞ்சித் பேசாமல் இருக்கிறாய்? உன் தமயனின் நிலை பற்றி டாக்டர் என்ன சொன்னார்’ அந்தத் தாய் தனது கணவரைத் தொடரும் அவளின் கடைசி மகனின் கையைப் பிடித்துக் கண்ணீர் மல்கக் கேட்கிறாள்.

அவர்களின் மூத்த மகன் வைத்தியசாலையில் இருக்கிறான்.

அவனின் நிலை எப்படியிருக்கிறது என்று அவளுக்குத் தெரியாது.தனது அன்பு மகன் ஏன் ஏகப்பட்ட மெஷின்களுடனும், சேலைன், இரத்த ட்ரிப்புக்களுடனும் பொருத்தப் பட்டிருக்கிறான் என்பதைப் பற்றிய முழு விளக்கமும் அவளுக்குத் தெரியாது.

‘ரஞ்சித், உன் தமயன் நிலை பற்றி டாக்டர் என்ன சொன்னார்?’அவள் விடாமற் நச்சரிக்கிறாள்.

ஆங்கிலம் தெரியாத தனது அறியாமைக்குத் தன்னிலேயே அவளுக்கு ஆத்திரம் வருகிறது.

டாக்டர் என்ன சொன்னார் என்று கேட்கும் தாய்க்கு என்ன மறு மொழி சொல்வது? ரஞ்சித் பெருமூச்சு விடுகிறான்.;

‘தமயனின் மூளையின் பெரும்பகுதி சேதமடைந்து செயலிழந்து விட்டது,எவ்வளவு சேதம் என்று சரியாகத் தெரியாது.’ அந்த டாக்டர் சுற்றி வளைத்துச் சொன்ன வைத்திய விளக்கத்தின் சாரமது.

தாய்க்கு அவன் என்ன சொல்வான்? ‘அண்ணாவின் உயிருக்க ஒரு ஆபத்துமில்லை, ஆனால் அவன் இனி வாய் பேசாத,நடக்க முடியாத வெறும் பிண்டமாகக் கட்டிலிற் கிடக்கப் போகிறான் என்பதைத் தாய்க்கு அவன் எப்படிச்சொல்வான்?

தகப்பன், தனயனிடம் கேள்வி கேட்கும் மனைவியுடன் வெறித்த பார்வையுடனிருக்கும் மகனுடனும்; பேசாமல் நிற்கிறார்.

கடந்த இரு நாட்களாக அவர்கள் குடும்பத்தினரின் நிலை இப்படியாகத்தானிருக்கிறது.

தகப்பனின் கண்களில் வேதனை தேங்கி நிற்கிறது.அவரிடம் ரஞ்சித் ஒன்றும் கேட்கமுடியாமலிருக்கிறது.

அவரின் மூத்த மகன் அரைகுறை மனிதனாய் ஆஸ்பத்திரில் படுத்திருக்கிறான்.இளையமகன்,பொலிஸ் ஸ்ரேசனில் அடைபட்டிருக்கிறான்.

மூன்றாவது மகன் தாயையும் தகப்பனையும் எப்படித் தேற்றுவது என்று வேதனையிற் துடிக்கிறான்.

அமைதியும், நேர்மையுமான அவர்களின் வாழ்க்கையில் இப்படியான ஒரு கொடுமையான திருப்பம் வருமென்று அவர்கள் கனவிலிலும் நினைத்திருக்கவில்லை.

‘ உகண்டாவிலிருந்து வெளியேற வேண்டிய கட்டம் வந்தபோது பேசாமல் இந்தியாவுக்குத் திரும்பிப்போவோம் என்று சொன்னேன் நீங்கள் கேட்கவில்லை.இந்த நாடு எங்களுக்குச் சரிவராது என்று நான் சொன்னதை யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை’ தாய் மெல்லிய குரலில், பக்கத்திலிருக்கும் வெள்ளைக்காரர்களுக்குக் கேட்கக்கூடாதமாதிரி தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள்.

1972ம் ஆண்டில் உகண்டாவின் கொடுமையான ஜனாதிபதியான இடி ஆமின் ,இந்தியர்களை நாட்டைவிட்டு வெளியேறச் சொன்னதால் இங்கிலாந்துக்கு வந்த காலத்திருந்து,அவர்கள் வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்கும் ஒவ்வொரு தடவையும் அவள் இப்படித்தான் முணுமுணுப்பாள்.

அவள் பிறந்து வளர்ந்த உகண்டா நாட்டின் பச்சைப் பசேல் என்ற பசும்புற்தரைகளை நினைத்துப் பெருமூச்சு விடுவாள். இளவயதில் ஒருதரம் மட்டும் அவள் பிரயாணம் செய்த குஜராத் பிரதேசத்தின் அழகைப் பற்றிச் சொல்லியழுவாள்.

‘இந்தியா எவ்வளவு அழகான நாடு, ஓரு வசதியான வாழ்க்கைக்காக இப்படி நாடோடியாகி விட்டோமே’ தாயார் பெருமையுடன் சொல்லும் இந்தியாவைப் பற்றி ரஞ்சித்துக்கு ஒன்றும் தெரியாது.

‘இந்தியனே ஓடிப்போ’ என்று இடி அமின் உறுமியபோதுஅவர்கள் வாழமுடியாமல் ஓடிவந்த உகண்டா நாட்டை அவனுக்குப் பெரிதாக ஞாபகமில்லை.ஒன்றிரண்டு ஞாபகங்களை நினைவில் எடுக்கவும் அவன் விரும்பவில்லை.

அவன் அப்போது சின்னப் பையன். அவனுக்குத் தெரிந்தது லண்டன் வாழ்க்கை மட்டுமே. தங்களின் உயிரையும் பிரிட்டிஷ் பாஸபோர்ட்டையும் தவிர கைகளில் ஒன்றுமில்லாமல் விரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான இந்தியர்களில் அவர்களது குடும்பமும் ஒன்று.

அவர்கள் வந்த காலத்தில், லண்டனில் ஆசிய நாட்டார்களுக்கு எதிராக நடந்த பல ஊர்வலங்கள் அவனது ஞாபகத்துக்கு வருகின்றன.

‘ஆசியனே திரும்பிப்போ’ உடுத்த உடையுடன் உகண்டாவிலிருந்து வந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தால்,விறைக்கும் குளிரில் வெளிவந்த காலத்தில் அவர்கள் கேட்ட கோஷம் அவை.

தகப்பன் தன் குடும்பத்தை சோகத்துடன் அணைத்துக் கொண்டது ஞாகபத்திற்கு வருகிறது.’ திரும்பிப் போகட்டாம்!’

எங்கே போவதாம்?

அவர்களின் தாய்தகப்பன் பிறந்தது இந்தியாவில்.அவர்களும் அவர்களின் குழந்தைகளும் பிறந்தது உகண்டாவில். மூன்றாவது தலைமுறையாகத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட நாட்டிலிருந்து அகதிகளாகத் துரத்தப் பட்ட துர்ப்பாக்கியவாதிகள் அவர்கள்.

உகண்டாவில் வாழ்ந்த இந்தியர், ஆங்கிலேயர்களால் அங்கு கொண்டுபோகப் பட்டதால்,அவர்களை இடி அமின் துரத்தியபோது, ‘நீங்கள் விரும்பினால் பிரிடடிஷ் பாஸ்போர்ட் எடுத்துக் கொள்ளலாம்’ என்று பிரித்தானியா சொன்னதால் அவர்கள் இங்கிலாந்துக்கு பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுடன் வந்தார்கள்.

இனவாதம் பிடித்த சில ஆங்கிலேயர்கள், அவர்களைக் காரசாரமாத்திட்டினார்கள்.வைதார்கள் வசை பாடினார்கள்.

‘எளிய இந்தியனே அழகிய எங்கள் நாட்டை அசுத்தமாக்காதே’ என்று கத்தினார்கள்.

பட்டேல் குடும்பத்தைப்போல் பல்லாயிரம் இந்தியர் இந்த இனவாதக் கோஷங்களைக் கேட்டுத் திடுக்கிட்டார்கள்.

ஆங்கிலேயர்கள்,தங்கள் செல்வ விருத்திக்குத் தாங்கள் அடிமைகொண்ட நாடுகளிலிருந்து வேறு வேறு நாடுகளுக்கு ஏற்றிச் செல்லப் பட்ட மனிதக் கூட்டங்களில் பட்டேல் பரம்பரையும் ஒன்று.

‘அழுகல் கறுப்பனே இங்கு கால் வைக்காதே’

பட்டேல் குடும்பம் இந்த வரவேற்புடன்தான் உகண்டாவிலிருந்து இங்கிலாந்தில் கால் வைத்தது.

இங்கிலாந்துக்கு வந்த நாட்களில் அவர்கள் பட்ட சோதனைகளும் வேதனைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.

வந்தவுடன் ஒரு அகதி முகாம், அதைத் தொடர்ந்து பல இடங்களில் குடியிருப்பு. புதிய நாடு,புதிய சூழ்நிலை,ஐந்து குழந்தைகளும் பெற்றோரும் பட்டபாடு எத்தனையோ.

புதிய வாழ்க்கையில் அடி வைத்த பட்டேல் திணறினார்.அவர் உகண்டா நாட்டின் தலைநகரான கம்பாலாவில் ஒரு துணிக்கடை வைத்துச் சுமாரான பொருளாதார வசதியுடன் வாழ்ந்தவர்.

; தனது குடும்பத்தின் உயிர்கள் தப்பினாற்போதும் என்ற தவிப்புடன் லண்டனில் வெறும் கையுடன் வந்து இறங்கியவருக்கு ஆங்கிலம் பெரிதாக வராது.அதனால் லண்டனில் ஒரு வேலையெடுப்பது சிம்ம சொப்பனமாகவிருந்தது. ஓரு பாக்டரியில் ஏதோ தொட்டாட்டு வேலை ஆரம்பத்திற் கிடைத்தது. காலக் கிரமத்தில்,இரவு பகலாகக் கடுமையாக உழைத்து அந்த இடத்துக்குச் சுப்பவைசராகப் பதவியுயர்ந்தபோது குடும்பமே பெரிதாகக் கொண்டாடியது.

அவரின் பெரிய மகன் ரமேசுக்கு அப்போது பதினாறு வயது. அவனுக்கு ஒரு பாக்டரியில் வேலை கிடைத்தது. அதைத் தொடர்ந்து சில வருடங்களில் இரண்டாவது மகனுக்கும் ஒரு பாக்டரியில் வேலை. கிடைத்தது.

அவர்களின் குடும்பம் தலைநிமிர குடும்பத்தில் அத்தனைபேரும் ஏதோ ஒரு விதத்தில் உழைத்தார்கள். தங்களுக்கென்று ஒரு வீடுவாங்கியபோது, அவர்கள் பெருமைப் பட்டார்கள்.

ஐம்பது வயதுக்கு மேலான தந்தை தங்கள் குடும்பத்துக்காகப் பட்ட கஷ்டங்கள் ரஞ்சித்தின் மனதில் நிழலாடுகின்றன.

இரவுபகலாக அவர் பட்ட கஷ்டங்களை அவன் அறிவான்.

அவர்கள் இப்போது பிரயாணம் செய்யும் பஸ் இந்தியா டொக் என்ற இடத்தைத்தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது. அந்த இடத்தைத் தாண்டும்போது,இன்று ஹாஸ்பிட்டலில் அரைகுறை மனிதனாகக் கிடக்கும் அவனின் தமயன் ரமேஷ் சொன்னவை ஞாபகத்துக்கு வருகின்றன.

‘இன்று ஏன் இந்த வெள்ளைக்கார இனவாதிகள் எங்களைத் தாக்குகிறார்கள் என்றால், விழுந்து விட்ட அவர்களின் பொருளாதார நிலையைப் புரிந்துகொள்ளாத கோழைத்தின் பிரதிபலிப்புத்தான் அது. அவர்கள் உலகில் பல பகுதிகளை அடிமைகொண்டு ,அந்த நாடுகளின் செல்வங்களைக் கொள்ளையடித்து ஆடம்பரமாக வாழ்ந்த காலம் ஓடிவிட்டது.இன்று உலக வங்கிகளில் கடன் வாங்கி ஊதாரித்தனமாகச் செலவிடுகிறார்கள்.எத்தனை நாளைக்குக் கடன் வாங்கிச் சீவிக்கமுடியும்? கஷ்டப்பட்டு உழைக்க விரும்பாத காடையர்கள்,கடுங்குளிரிலும் பனியிலும் கண்ணீர் விட்டு உழைத்து முன்னேறும் அயல் நாட்டார்களைத் தாக்குகிறார்கள். லண்டனில் வந்தான் வரத்தான் வசதியாக வாழ்வது அவர்களாற் தாங்க முடியாதிருக்கிறது. நாங்கள் அவர்களது செல்வத்தைக் கொள்ளையடிப்பதாகப் பொறாமைப்படுகிறார்கள்.அதுதான் கண்ட கண்ட இடங்களில் அயல் நாட்டாரை அவர்கள் தாக்குவதற்குக் காரணம்’.

ரஞ்சித்; பெருமூச்சு விடுகிறான். அழிந்து உடைந்து கிடக்கும் இந்தியா டொக் என்ற அந்தத் துறைமுகம் மாதிரி அவர்களின் வாழ்க்கையும் உடைந்து தகர்கிறதா?

வெள்ளையினவாதிகளின் தேவையற்ற ஆத்திரத்துக்கு எங்கள் குடும்பம் பலியாவதா?

அண்ணா ரமேஷ் இவர்களுக்கு என்ன செய்தான்?அவன் வந்த நாளிலிருந்து கடின உழைப்புடன் குடும்பக் கடமைகளைச் செய்கிறான். அவன் எந்த சோலி சுரட்டுக்கும் போனது கிடையாது. கடந்த வருடம், லுவிஷாம் என்ற இடத்தில் வெள்ளைக்கார முற்போக்குவாதிகளால்,கறுப்பர்களை ஆதரித்து நடந்த ஊர்வலத்துக்குக்கூடப் போக மறுத்துவிட்டான்.

‘கோழைபோல் ஏன் ஒளிந்து வாழவேண்டும்? இருட்டிலும், தனியிடங்களிலும் எங்களை அவர்கள் மறைந்திருந்து தாக்கிவிட்டு ஓடுகிறார்கள். அதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் சக்திகளுடன் ஏன் நாங்கள் சேர்ந்து எங்கள் எதிர்ப்பைக் காட்டக்; கூடாது? என்று இளைய அண்ணா கூறியபோதுகூட அண்ணா சொன்னான்,’ நாங்கள் இந்தியர்கள்.அஹிம்சையுடன் எந்த வித சோதனையையும் தாங்கப் பழகத்தான் எங்கள் கலாச்சாரம் படிப்பித்திருக்கிறது’.

அண்ணா அஹிம்சை பேசுகிறான்.

அப்படிச் சொன்னவனை, அவர்களின் சொந்த வீட்டுக்கு முன்னால், அவன் அவர்களின் சொந்தமான வாகனத்தைப் பழுதுபாhத்துக்கொண்டிருக்கும்போது,தெருவால் வந்த சில வெள்ளையினவாதிகள் அண்ணாவைக் காடைத்தனமாகத் தாக்கி அவனின் எதிர்காலத்தை அழித்துவிட்டிருக்கிறார்கள்.

அண்ணா இனி ‘அண்ணாவாக’ இருக்கமாட்டான். பேசமுடியாத, பார்வையில் வெறுமையுடன், தன்னைப் பாதுகாக்கும், கவனித்துக்கொள்ளும் எந்த லாயக்குமற்ற ஒரு நடைப்பிணமாக,வாழ்க்கை முழுதும் படுக்கையிற்; கிடக்கப்போகிறான்.அவன் அன்பானவன். அடுத்தவனுக்குத் துன்பம் செய்யாதவன், தனது குடும்பத்தைத் தவிர மற்றவர்களுடன் தேவையற்ற உறவுகள் வைத்துக்கொள்ளாதவன்.

அவன் ஒரு அன்னியன், இங்கிலாந்தில் வாழும் இந்தியன், நிறவேறுபாடால் ‘கறுப்பன்’ என்று வெள்ளையினவாதிகளால் கணிக்கப் படுபவன்.இப்படியான காரணங்களுக்காக, அவன் தாக்கப் பட்டு அரைகுறை மனிதனாகப் படுத்திருக்கிறான்.

ரஞ்சித் தன் பற்களை நற நறவெனக்கடிக்கிறான்.

‘அண்ணா நீ இனிப் பேசுவது சந்தேகம் என்று டாக்டர் சொன்னார்,அப்படியில்லாமல்,ஏதும் அற்புதங்கள் நடந்து நீ பேசுவாயானால், அஹிம்சை என்றால் என்ன என்று உன்னை நான் கேட்பேன். ஆங்கிலேயப் போலிசார் என்ன சொன்னார்கள் என்று உனக்குத் தெரியாது,உன்னைத் தாக்கிய காடையர்களைத் தடுக்க முனைந்த சின்னண்ணாவை,தெருவாற் சென்றவர்களைத் தேவையில்லாமல் தாக்கியதாகச் சொல்லிப்; போலிசார் கைது செய்திருக்கிறார்கள்.உன்னை அந்த வெள்ளையினத்தார் தாக்கியதற்கு எந்த சாட்சியும் இல்லையாம்.வழியாற் போனவர்களுடன் நீயும் சின்னண்ணாவும் சண்டை பிடிக்கும்போது நீ தடுமாறி விழுந்து, தெருவிற் கிடந்த பெரிய கல்லில் அடிபட்டு உனது மூளை காயப்பட்டதாம்.இளைய அண்ணா, தனது கார் திருத்தும் கனமான ஆயதத்தால் வழியாற் போனவர்களை வம்புக்கிழுத்து படுகாயப் படுத்தியதால் போலிசில் வைத்து நாட்கணக்காக விசாரிக்கிறார்களாம்.

நீP தனியாக இருந்து கார் திருத்தும்போது, தெருக்களில் கறுப்பரைக் கண்டபாட்டுக்குத் தாக்கும் இனவெறியர்களின் கொலைவெறித் தாக்குதலால் அலறியபோது தோட்டத்திலிருந்து ஓடிவந்து,அண்ணாவைக் காப்பாற்றப் போராடியது உண்மை. அவர்களின் கூற்றுப்படி,நீங்கள் இருவரும் அவர்கள் வருகைக்குத் திட்டமிட்டுக் காத்திருந்து அவர்களின் உயிருக்கு ஆபத்து வரும்வரை தாக்கிக் காயமுண்டாக்கினீர்களாம்;’.

அண்ணாவை நினைக்கும்போது ரஞ்சித்தின் கண்களில் நீர் வடிகிறது. ஜன்னல் பக்கம் திரும்பி, தாய் தகப்பனுக்குத் தெரியாமல் விம்முகிறான்.அவனுக்குப் பக்கத்திலிருந்த ஆங்கிலேயமாது, இவனது விம்மலைப் பொருட்படுத்தாமல் இருக்கிறாள்.அவர்கள் நாகரிகமானவர்கள். தங்களுக்குச் சம்பந்தம் அற்ற விடயங்களில் தலையிடாதவர்கள். இவர்களுக்கு மற்றவர்களின் துயருக்கு மதிப்புக்கொடுக்கத் தெரிந்திருந்தால் பல்வேறு வழிகளிலும் உலகின் பெரும் பகுதியை அடிமை கொண்டிருக்க முடியாது.

‘எனது விம்மல் மட்டுமல்ல, என்னைப் போல கோடிக்கணக்கான சிறுபான்மையினத்தவரின் விம்மல்களையும் சோகத்தையும் பொருட்படுத்தத் தேவையற்றவர்கள்.தங்கள் நலத்திற்கு, எத்தனை கோடி மக்களை விலங்குகள் பூட்டிய மிருகங்களாகக் கப்பல்களில் ஏற்றித் தங்கள் தோட்டங்களில் கூலியற்ற வேலையாளர்களாக்கினார்கள். அவை நாகரிகத்தின் வளர்ச்சியாக,பொருளாதார மேன்பாடாகக் கருதப்படுகிறது’.

ரஞ்சித்,அந்த பஸ்ஸில் தனக்கு முன்னாலிருக்கும் தாயைப் பார்க்கிறான்.

அவளின் முதுகுப் பக்கத்தில் அவன் பார்வை நிலைக்கிறது. அம்மா காயத்திரிக்கு ஆங்கிலம் தெரியாது.தனது குடும்பத்தின் நன்மைக்கு ஓயாது உழைப்பவள் அவள்.

காயத்திரி,இரு நாட்களுக்கு முன்,ஒரு மாலை நேரம்,கிட்டத்தட்ட இருள் பரவும் நேரம்,இரவு வேலைக்குப் போகும் தனது மூத்த மகனுக்குச் சப்பாத்தி செய்து கொண்டிருந்தாள். அவள் கணவர்,இன்னும் வேலையால் வரவில்லை. மூத்த மகன் வெளியில் தனது காரில் பழுதுபார்த்துக்கொண்டிருந்தான். இளைய மகன், முன்தோட்டத்தில் ஏதோ வேலையாக இருந்தான்.அவனக்கு மலர்கள் செடிகள் என்றால் மிகவும் விருப்பம்.

மூன்றாவது மகன் ரஞ்சித் தனது இரண்டு தங்கைகளுடனும் முன்னறையில் டி.வி பார்த்துக்கொண்டிருந்தான்.

கண்மூடித்திறப்பதற்குள் அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது.

வெளியில் ஏதோ அலறல் கேட்டு ஓடிவந்தவள், இரத்தவெள்ளத்திற் கிடக்கும் மூத்த மகனையும்,மூன்று காடையர்களைத் துரத்திக்கொண்டோடும் இளைய மகனையும் கண்டு திடுக்கிட்டாள்.அவளுக்குத் தன் இருதயமே சட்டென்று நிற்பது போன்ற பிரமை.

இரத்தம் வழிந்தோட உயிருக்குப் போராடும் தனது மூத்த தனயனைத் தாங்கிக் கொண்டு கதறினாள்.

என்ன நடந்தது என்றே அவளுக்குத் தெரியவில்லை. தன்னைச் சுற்றி நடப்பதெல்லாம் கனவாகத் தெரிந்தது.

மகனை ஹாஸ்பிட்டலுக்குக்கொண்டுபோக ஆம்புலன்ஸ் வந்தது. போலிஸ் கார்கள் மளமளவென்று வந்தன. அந்தத் தாயின் இருமகன்களும் இரு திசைகளில்,இரு தரப் பட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டார்கள்.

பெரிய மகன் ஹாஸ்பிட்டலில். அவனின் மூளைக்கு எவ்வளவு சேதம் என்று சொல்ல முடியாது என்ற டாக்டர் சொல்கிறார்.இளைய மகன் போலிஸ் ஸ்ரேசனில். இனவாதக் காடையர்கள் மூத்த மகனின்; உயிரை அரைகுறையாக ஊசலாட விட்டு,அவன் எதிர்கால வாழ்வை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

இருள் பரவும் நேரத்தில், அக்கம் பக்கம் அதிகம் சனநடமாட்டம் இல்லாத நேரத்தில்,அவன் தனியாக இருந்து கார் திருத்தும்போது தாக்கியிருக்கிறார்;கள். சாட்சிகள் காணாத குற்றத்தைச் செய்து விட்டார்கள்.

அவர்களுக்கு எதிராக எந்த சாட்சியும் இல்லையாம்!ஆனால் இளைய அண்ணா துரத்திப்போய்த் தாக்கியதை அயலார் கண்டார்களாம்!அவன் இரண்டு நாட்களாகப் போலிசில் இருக்கிறான்.

‘நான் அண்ணாவைத் தேடி போலிஸ் ஸ்ரேசன்போனபோது என்னையும் ஒரு கிரிமினல் மாதிரிப் பார்த்தார்கள. ஆபாயமான குடும்பம் என்று எங்கள் குடும்பத்திற்கு அவர்கள் லேபல் போட்டிருக்கலாம்’ ரஞ்சித் தகப்பனுக்குச் சொல்லி விம்மினான்.

பஸ்; அவர்களின் வீட்டருகே உள்ள ஒரு தரிப்பில் நிற்கிறது.

காயத்திரி தட்டுத் தடுமாறி இறங்குகிறாள். கடந்த இரு தினங்களாக வாரப்படாத அவளது தலையும், மாற்றிக் கொள்ளாத உடையும், கண்ணீர் வழியும் முகத்தையும் ஒரு ஆங்கில மாது ஏறிட்டுப்பார்த்து தனது முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். அவர்களைப் பொறுத்தவரையில் மற்றவர்களுக்கு முன் அழுவது நாகரீகமல்ல.பகிரங்கமான இடத்தில் கலைந்த தலையும் கசங்கிய உடுப்புடன், வாரப்படாத தலையுடன் திரிவது மிகவும் அநாகரிகமான விடயம்.போதாதற்கு அவள் தனது குஜராத்தி மொழியில் பக்கத்தில் இருப்போரைப் பற்றிக் கவலைப்படாமல் புலம்பிக் கொண்டேயிருக்கிறாள். ‘இவர்களுக்கு எங்கள் மொழியான இங்கிலிஷில் பேசமுடியாவிட்டால்; எங்கள் நாட்டில் இவர்களுக்கு என்ன வேலை?’ என்பதுபோல் சிலர் அவர்களை முறைத்துப் பார்க்கிறார்கள்.

ஹாஸ்பிட்டலால் குடும்பத்துடன் வீடுவந்து சேர்ந்த தகப்பன், வந்ததும் வராததுமாக, அடுத்த மகனைப் பார்க்கப் போலிஸ் ஸ்ரேசன் செல்ல அவசரப்படுகிறார்.அங்கு,அவர்களின் வீட்டுக்கு,அவர்களின் வழக்கறிஞர் வருவதாச் சொல்லியிருந்தார். அத்துடன் சிறுபான்மை இனத்து மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் சில குழுக்களின் பிரதிநிதிகளும் வருவதாக இருந்தார்கள்.

காயத்திரிக்கு இதெல்லாம் பிடிக்காது. உயிருக்கப் போராடும் தனது பெரிய மகனும், போலிசில் அடைபட்டுக் கிடக்கும் இளைய மகனும் அவள் நினைவை உறுத்திக் கொண்டிருக்கும்போது, அயலவர்கள்களின் வருகை அவளை எரிச்சல் படுத்துகிறது.அத்துடன் பெண் பிள்ளைகள் இருக்குமிடத்தில் ஏன் இந்தக் கூட்டங்கள் என்ற அவள் முணுமுணுக்கிறாள்.

‘நான் கெதியாக இளைய மகனைப் பார்க்கப் போகவேண்டும்’ கணவர் அவசரப் படுகிறார். வழக்கம்போல்,காயத்திரி, யாரும் பார்க்காத இடமான சமயலறைக்குள் போய் நின்றழுகிறாள்.

இளைய மகன்!

இரண்டு நாட்களாகப் போலிஸ் ஸ்ரேசனில் என்ன பாடு படுத்தியிருப்பார்களோ!

‘ கடவுளே, நாங்கள், முக்கியமாக எனது குழந்தைகள் யாருக்கும் எதுவும் செய்யவில்லை.இருந்தாற் சாப்பாடு இல்லையென்றால் பட்டினி என்ற கஷ்டகாலத்திலும் நாங்கள் நேர்மையாக வாழ்ந்தோம்.ஏன் எங்களுக்கு இந்தத் துன்பங்கள்?’ அவள் கடவுளிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

‘என் குடும்பம் என்னவாகப்போகிறது?’

‘அம்மா’ காயத்திரியின் சிந்தனை கலைகிறது. ரஞ்சித் வருகிறான்.

‘அம்மா, அண்ணாவுக்கு நடந்த விடயத்தைப் பற்றிப் பேசுவதற்காக ஆட்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்… தேனிர் போட முடியுமா?’

முன்னறையிலிருந்த அவனது தங்கைகள் இருவரும் மேல் மாடிக்குப் போகிறார்கள்.

வீட்டுக்கு, வந்திருந்த கூட்டம், ரமேசுக்கு நடந்த தாக்குதலின் உண்மையான விபரத்தை என்னவென்று போலிசார் நம்பும்படி சொல்வது என்று விவாதிக்கிறது.

ஓரு பாவமுமறியாத இரு இந்திய வாலிபர்கள், இனவெறி பிடித்த வெள்ளையினக் காடையினரால் அவர்களின் வீட்டுக்கு முன்னால் வைத்துத் தாக்கப் பட்டிருக்கிறார்கள்.அதில் ஒருத்தன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறான், அடுத்தவன் அநியாயமாகப் போலிசில் அடைபட்டிருக்கிறான். ஆனால் போலிசாரின் பார்வையில் அவர்கள் குற்றவாளிகளாகக் கணிக்கப் பட்டிருக்கிறார்கள்.இந்தச் சிக்கலை எப்படி அவிழ்ப்பது? உண்மையை எப்படி நிருபிப்பது?

தகப்பன் பெருமூச்சு விடுகிறார். தனக்கு முன்னால், தனது மகன்களைப் பற்றி நடக்கும் விவாதத்தால் அவர் கண்கள் கலங்குகின்றன.

‘நாங்கள் யாருக்கு என்ன கொடுமை செய்தோம், யார் உடமையை நாசம் செய்தோம்,என் குழந்தைகள், எங்கள் வீட்டுக்கு முன்னால் தங்கள் பாட்டுக்குத் தங்கள் வேலையைச் செய்துகொண்டிருக்க உரிமையில்லாத அளவுக்கு இந்த நாட்டில் அநியாயம் மலிந்து விட்டதா?’

தகப்பன் மேலே பேசமுடியாமல் உணர்ச்சி வசப்பட்டுக் கேவிக்கேவியழுகிறார்.

‘ஒரு சில முட்டாள்கள் செய்யும் இனவாத வேலைக்கு ஆங்கில நாட்டையே குறை சொல்வது சரியில்லை’ வந்திருந்த உள்ளு+ர்ப் பிரமுகர் அதிருப்தியுடன் உபதேசிக்கிறார்.தங்கள் பகுதியில் ஒரு இந்தியக் குடும்பம் தாக்கப்பட்டதற்கு அனுதாபம் சொல்லவந்திருக்கிறாராம் அவர்.

தனது அருமையான நேரத்தில் இவர்களுக்கு அனுதாபம் வந்ததைக் காட்டத் தன் கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக்கொள்கிறார் அவர்.

‘ஜேர்மனியிலும் ஒன்றிரண்டு இனவாதிகள்தான், யூதர்களுககெதிரான பிரசாரத்தையும் வன்முறைகளையும் தொடங்கினார்கள்.அது ஒரு இனத்தையே கொடுரமாக அழிக்கும்வரை பரவ அதிகம் வருடங்கள் எடுக்கவில்லை.அந்த சில மனிதர்களின் ஆரம்பவேலை, ஆறுகோடி யூத மக்கின் உயிரை அழித்தததை நாம் ஞாபகப் படுத்தவேண்டும்’

வந்திருந்தவர்களில் ஒரு இடதுசாரி உறுமுகிறார்.

‘நீங்கள் உங்கள் அரசியல் ரீதியான சண்டையில் எனது குடும்பத்தைப் பகடைக் காயாதாக்காதீர்கள்.எனது பெரிய மகன் இறந்துகொண்டிருக்கிறான். இளையமகன் விசாரணைக்காக அடைக்கப் பட்டிருக்கிறான்.எங்கள் குடும்பம் சமுக விரோதிகள் பட்டியலில் போடப்பட்டிருந்தாலும் ஆச்சரியமில்லை.தயவு செய்து எனது இளைய மகனை வீட்டுக்குக்கொண்டுவர உதவி செய்யுங்கள’ தகப்பனின் குரலில் கெஞ்சல்.

கூட்டம் பல விவாதங்களின் பின் வெளியேறுகிறது.

ரஞ்சித்தும் தங்கைகளும் முன்னறையில் உட்கார்ந்திரக்கிறார்கள்.

‘ரஞ்சித் அண்ணா, பெரியண்ணாவின் நிலை எப்படியிருக்கிறது?’

தங்கை ஒருத்தி கேட்கிறாள்.

‘அண்ணாவின் நிலை எப்படியா? அவனின் மூளை இனி இயங்காது.அரைகுறை மனிதனாக உலகத்தைப் புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் தயவில் அவன் உயிரோடு இருக்கலாமாம்’ ரஞ்சித் வேதனையுடன் தனது தங்கைக்கு விளக்கி விட்டு முன்னறையை விட்டு வெளியேறுகிறான்.

இரண்டு நாட்களுக்கு முன் தமயன் திருத்தத் தொடங்கிய காரைப் பழுது பார்க்க அவன் விரைகிறான்.

‘அண்ணா கவனம், இருளப்போகிறது.யாரும் உங்களுக்கு என்ன செய்தாலும் எங்களுக்குச் சாட்சி சொல்ல யாரும் கிடையாது.

தங்கை சொல்வதைக் கேட்டபடி அவன் வெளியே வருகிறான்.

கடைசித் தங்கை nடிலிவிஷனைப் போடுகிறாள். அதில் அரசியல் விவாதம் நடக்கிறது.

ஹெல்ஷிங்கி என்ற நகரத்தில் வைத்து,மேற்கத்திய நாடுகளும் இரஷ்யாவும் செய்துகொண்ட ஒப்பத்தந்தின்படி,இரஷ்யாவில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை இரஷ்சிய அரசு கொடுக்காமற் தடுக்கிறது என்று மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் கண்டனத்தைப் பற்றிய விவாதம் அது.

கார் திருத்தத் தேவையான சாமான்களை எடுக்க உள்ளே வந்த ரஞ்சித்தைத் தங்கை கேட்கிறாள்,

‘அண்ணா ஹெல்ஷிங்கி ஒப்பந்தம் என்றால் என்ன?’

ரஞ்சித் ஒருகணம் பேசாமல் நிற்கிறான்.

என்ன மறுமொழி சொல்வது அந்தப் பிஞ்சு மனதுக்கு?.

மனித உரிமைகள் பற்றி வெறும் மயக்கவாதங்களைப் பற்றி அவளுக்கு எப்படி விளங்கப் படுத்துவது?

‘நான் இருக்கும் வீட்டின் முன் நிற்கவே எனக்கு உரிமையிருக்கிறதா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. என் தங்கை மனித உரிமைகள் பற்றிக் கேட்கிறாள், என்ன மறுமொழி சொல்வது?’

(இக்கதை 1972ம் ஆண்டுக்குப்பின் உகண்டாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் பிரிட்டனுக்கு வந்தபோது அவர்களுக்கெதிராக நடந்த்த இனவெறித்தாக்குதல்களை அடி;படையாக வைத்து எழுதிய கற்பனைக்கதை)

லண்டன் ‘பனிமலர்’; பிரசுரம்- 1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *