கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 26, 2024
பார்வையிட்டோர்: 2,577 
 
 

அன்று டிசம்பர் 1 ம் தேதி அவனுக்கு மதியம் 2 மணிக்கு ஐஐடி நுழைவுத் தேர்வு இருந்தது. அதனால் வீட்டில் இருந்து விரைவாகக் கிளம்பி கொண்டிருந்தான். பேருந்து நிறுத்தத்திற்கு சென்று நின்று கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு பேருந்து வந்தது அதில் ஏறினான். ஏறி அருப்புக்கோட்டையில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் இறங்கினான்.

அங்கிருந்து மாட்டுத்தாவணி செல்வதற்கு ஒரு பேருந்தில் ஏறினான். பேருந்து மெதுவாகச்சென்று கொண்டிருந்தது. ஜன்னலோர சீட்டில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மனதிற்கு ஒரு சந்தோசமாக இருந்தது.அப்படி அவனுடைய பையில் உள்ள புத்தகத்தை எடுத்து தயார்படுத்திக் கொண்டிருந்தான். பிறகு மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு அங்கு வந்ததுவிட்டது. அவன் அங்கிருந்து இன்னொரு பேருந்தை தேடிக் கொண்டிருந்தான்.

“அண்ணா மேலூர் வழியாக போகும் பஸ் எந்த இடத்தில் நிற்கும்?“

“இங்கே நில்லுங்க தம்பி அடுத்து மேலூர் பஸ் வரும் அதுல ஏறுங்க கரெக்ட்டா நீங்க போற காலேஜ்ல உங்களை இறக்கிவிடுவாங்க “

“நன்றி அண்ணா ” என்று சொல்லிவிட்டு பேருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு மேலூர் செல்லும் பேருந்து வந்தது. அதில் ஏறினான் .மிகவும் கூட்டமாக இருந்தது. அந்தக் கல்லூரி பெயரை சொல்லி நடத்துனரிடம் ஒரு பயணச்சீட்டைப் பெற்றுக் கொண்டான்.பேருந்து நகர்ந்து கொண்டிருந்தது.ஒரு முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு அந்தக் கல்லூரி வந்தது. உடனே நடத்துனர் இறக்கி விட்டார். அங்கிருந்து கல்லூரிக்குள் உள்ளே மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தான்.

அங்கு ஒரே கூட்டம் அவனை போல் நிறைய மாணவர்களும் தேர்வு எழுத வந்திருந்தார்கள். மதியம் ஒன்றரை மணி வீட்டில் இருந்து கொண்டு வந்த சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடுவதற்காக ஒரு நல்ல இடத்தைப் பார்த்தான். ஒரு மரத்தின் நிழலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

அப்பொழுது ஒரு மாணவனும் அவனுடைய அப்பாவும் ஒன்றாக வந்து அனது அருகில் அமர்ந்தார்கள் .அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“நீங்கள் எங்கிருந்து வர்றீங்க தம்பி ?”

“நான் அருப்புக்கோட்டை பக்கத்திலிருந்து வாரேன்.”

” நீங்க எங்க இருந்து வர்றீங்க ?”

“நாங்க மதுரை தான்”

“ஓ அப்படியா ? ரொம்ப நல்லது”

”பரீட்சை எப்பொழுது தொடங்கும் தம்பி”

”பரீட்சை 2 மணிக்குனு சொன்னாங்க அதுக்கு முன்னாடி வந்து வெரிஃபிகேஷன் பாக்கணும்னு சொல்லி இருந்தாங்க”

”அப்படியா? சரி வாங்க நேரம் ஆச்சு நம்ம போய் வெரிஃபிகேஷன் பாக்குற இடத்துக்கு போவோம். “

அப்படியே சாப்பிட்டு முடித்தவுடன் அவனுடைய டிபன் பாக்ஸை கழுவி பேக்கில் வைத்துவிட்டு வெரிஃபிகேஷன் பார்க்கும் இடத்தை நோக்கி சென்றான். அங்கு அவனுடைய சான்றிதழ்கள் எல்லாம் சரிபார்த்துவிட்டு நுழைவுச்சிட்டையும் சரி பார்த்து விட்டு உள்ளே அனுப்பினார்கள் .தேர்வு நடந்து கொண்டிருந்தது. குமார் தேர்வை எழுதிக் கொண்டிருந்தான். நேரம் கடந்து கொண்டிருந்தது. 5 மணி ஆனது .

“உங்களுடைய தேர்வு முடித்து விட்டால் நீங்கள் கிளம்பலாம்” என்று தேர்வறையாளர் கூறினார். அவனும் தேர்வறையிலிருந்து வெளியே வந்தான்.

வந்து மீண்டும் பஸ்ஸிற்காக கல்லூரியின் நுழைவு வாயில் நின்று கொண்டிருந்தான். அப்பொழுது பேருந்து வந்தது. மாட்டுத்தாவணி செல்வதற்காக ஏறினான். பேருந்து சென்று கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் வந்தடைந்தது.

பேருந்தை விட்டு இறங்கி மெதுவாக பிளாட்பாரத்தில் நடந்து கொண்டிருந்தான். அந்த பிளாட்பாரத்தில் அப்பொழுது திடீரென ஒரு இளைஞன் அவன் முன்னாடி வந்து நின்றான். அவன் கையில் CT ஸ்கேன் அடையாளம் போட்ட ஒரு பையும் இருந்தது. அவன் அந்த பையில் இருந்து ஒரு சில மெடிக்கல் ரிப்போர்ட் அதை அவனிடம் காட்டினான்.

பிறகு அவனிடம் பேசத் தொடங்கினான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை?

“ஹலோ ப்ரோ கொஞ்சம் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”

“உங்களுக்கு என்ன வேணும்?”

“எனக்கு எய்ட்ஸ் இருக்கு ப்ரோ நானும் என் தங்கச்சியும் ட்ரீட்மென்ட்காக மதுரை ஜி. ஹெச். க்கு வந்தோம். எனக்கு ரொம்ப பசிக்குது கையில இருந்த காசு செலவு ஆகிடுச்சு எனக்கு கொஞ்சம் ஒரு பால் மட்டும் வாங்கி தாறீங்களா? குடிக்கிறதுக்கு பால் வாங்கி தாங்க ப்ரோ ரொம்ப பசிக்குது!”. என்று அவனிடம் கேட்டான் .

அவர்களைப் பார்த்தவுடன் அவனுக்கு மிகவும் கவலையாக இருந்தது. இந்த சிறு வயதிலேயே இந்த நோயை பெற்றுக் கொண்டு இப்படி அவதிப்படுகிறார்கள். என்பது அவனுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அவர்கள் தப்பான வழிக்குச்செல்பவர்கள் இல்லை என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது. அருகில் உள்ள கடைக்கு சென்று இருவருக்கும் பால் மற்றும் பிஸ்கட்டுகளை வாங்கி கொடுத்தான்.

“செலவுக்கு இந்த 500 ரூபாய் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள்!” என்று கையில் கொடுத்தான்.

“இது என்னால் முடிந்தது!”என்றான் .

“நாங்களும் கடந்த மூன்று மணி நேரமாக ஒவ்வொருவரிடமும் ஏதாவது வாங்கிக் கொடுங்கள்! என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். யாரும் எங்கள் பக்கத்தில் வந்து கூட பேச தயாராக இல்லை! நீங்கள் வந்து எங்களுக்கு உதவியது ரொம்ப சந்தோசமாக உள்ளது”. என்று கூறி இருவரும் கண் கலங்கினர்கள்.

அவர்களிடமிருந்து பிரியாவிடைபெற்று குமார் ஊருக்கு செல்ல பேருந்தை நோக்கிப்புறப்பட்டான்.

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட அந்த அண்ணன் தங்கை இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

“நாட்டில் ஒரு சில இடங்களில் இவரைப் போன்ற மனிதர்களால் மனிதம் மலர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்று…”

– நீரோடை மின்னிதழ் மார்ச் 2024

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *