மனிதனும் ஒரு மாடர்ன் ஆர்ட்தான்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 6,146 
 
 

வளைவு வளைவாகச் சில கோடுகள்; மேலே வைணவர்கள் நெற்றியில் கானப்படும் பட்டை நாமம். இப்படி ஒரு ஓவியம். சுமார் பத்துப் பேர் ஓவியத்தின் முன் நின்று ஏதோ பேசிக்
கொண்டிருந்தார்கள். ஒருவர் “ஹா!”என்றார்; இன்னொருவர், “அடடா!” என்று பிரமித்த பாவனையில் முகத்தில் வியப்பு காட்டினார்.

ஆறுமுக நாவலர் மேனிலைப் பள்ளி வாளாகத்தில் ஓவியர் முனிரத்தினமும் அவருடைய மாணவர்களும் நடத்திய ஓவியக் கண்காட்சி அது. ஒரு வாரமாக ஊரில் மூலை முடுக்கெல்லாம்
ஃபிளெக்° பேனர்கள் நின்று அந்த நவீன ஓவியக் கண்காட்சியைப் பற்றியே முரசறைந்து கொண்டிருந்தன.

எழுத்தாளர் முகிலன் அழைத்ததால், வேண்டா வெறுப்பாய் விஷால் அந்தக் கண்காட்சிக்குப் போனான். ஏராளக் கூட்டம். பாரதி ஹால் என்ற அந்த அரங்கில் விதம் விதமாய், வண்ண
வணணமாய் ஏதேதோ ஓவியங்கள். இவனுக்கு ஒரு ஓவியத்தின் அர்த்தம் கூடப் புரியவில்லை; எரிச்சலாக இருந்தது. டாவின்சி, பிக்காஸோ, மைக்கேல் ஏஞ்சலோ, ரெம்ப்ராண்ட் என்று
புகழ்பெற்ற ஓவியர்கள் பெயரையெல்லாம் நினைவுபடுத்திச் சிலர், தங்கள் பக்கத்திலிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

“மாடர்ன் ஆர்ட்டுங்கற பேர்ல இது ஒரு °நாபரி. ஏமாத்து வேலை! ஒரு படமாவது அர்த்தம் புரிய மாதிரி இருக்கா பாருங்க?” என்று பொருமினான் விஷால். முகிலன் சிரித்தார். “அப்படியில்லை விஷால், கொஞ்சம் யோசிச்சு, மூளையைக் கசக்கி, அந்த ஓவியத்தின் வெளிப்பாட்டைக் கண்டு பிடிக்க முயற்சி பண்ணுங்க. இதுல ஒண்ணுமில்லன்னா ஏன் இத்தனை பேர் வேலையை விட்டுட்டு இங்கே வந்து ஓவியங்களை ரசிக்கிறாங்க, சொல்லுங்க!”

“நீங்கதான் சார் மெச்சிக்கனும். ஓவியம்னா பார்த்தவுடன் நம்மைக் கவரணும். மனசுக்கு ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கணும். எல்லாத்துக்கும் மேலாப் புரியணும். படம் வரைஞ்சவருக்கு மட்டும் புரியறதுக்கு இந்த மாதிரிக் கண்காட்சி எதுக்கு? இவங்க எல்லாரும் புரியற மாதிரி நடிக்கிறாங்க.. அவ்வளவுதான்!” என்று வெறுப்போடு சொன்னான் விஷால்.

எழுத்தாளர் முகிலனுக்கு. 50 வயதிருக்கும். கல்லூரியில் படிக்கும் விஷால், 22 வயது இளைஞன். எதிர் எதிர் வீடுகளில் வசிக்கும் இருவரும் விஷாலுக்கிருந்த எழுத்து ஆர்வத்தின் அடிப்படையில் அடிக்கடி சந்திப்பது வழக்கம். இளைஞன் என்றாலும் அவனுக்குப் புரிகிறதோ இல்லையோ பல இலக்கிய விஷயங்களைச் சலிக்காமல் சொல்லுவார் முகிலன். அவனும் ஆர்வத்தோடு கேட்பான். இலக்கியக் கூட்டங்களுக்கு இவனை முகிலன் அழைத்துச் செல்லுவார். இருவரும் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களைப் பற்றி அலசி விவாதிப்பார்கள்.

ஒருநாள். “விஷால், இன்னிக்கு சாயங்காலம் `ஜன்னல் தேவதை’ பத்திரிகை ஆசிரியர் ராமேசனின் மகள் திருமண ரிசப்ஷன் இருக்கு. கீழவீதி பழனியப்பா கல்யான மண்டபத்துல. நாம ரெண்டு பேரும் அங்கே போறோம்…” என்றார் முகிலன்.

“நான் எதுக்கு சார் அங்கே? எனக்கு ராமேசனைத் தெரியாது. அவர் பத்திரிகையும் கொடுக்கலை” என்று இழுத்தான்.

“எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர் அந்த ராமேசன். பத்திரிகை கொடுக்கறது, குடும்பத்தாரோடு வாங்கன்னு அழைக்கறதா அர்த்தம். என் ஒய்ஃப், பிள்ளைகள் ஊர்ல இல்லை. உன்னை நான் வரச் சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்கு விஷால். கல்யாணம் நடத்துகிற ராமேசன், இன்னிக்கு தமிழ்ப் பத்திரிகையுலகில் பிரபலமான மனிதர். அவர் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்பதால் நிறைய எழுத்தாளர்கள் அங்கே வருவாங்க. நீ வந்தால் அவங்களை உனக்கு அறிமுகம் செஞ்சு வைப்பேன்!” என்றார். விஷால் திருமண வரவேற்புக்கு முகிலனுடன் வர ஒப்புக் கொண்டான்.

கடந்த இரண்டு தினங்களில் விஷால் முகிலனிடம், “சார்! அன்னிக்கு ஓவியக் கண்காட்சிக்குப் போனோமே, அந்த நாமம் போட்ட ஓவியத்துக்கு ஏதும் அர்த்தம் இருக்கா? நீங்க அதை ரொம்ப நேரம் பார்த்துகிட்டு நின்னீங்க. எனக்கு ஒரு மண்ணும் புரியலை. ஏதோ கிறுக்கி ஏமாத்தறாங்க இந்த மாடர்ன் ஆர்ட்டிஸ்ட்டுகள் என்கிற கருத்து வலுப்பட்டுகிட்டேயிருக்கு!” என்று பலமுறை கூறிச் சலித்துக் கொண்டு விட்டான்.

“அப்படிச் சொல்லக்கூடாது விஷால். நீ யோசிச்சுப் பார். கொஞ்சம் ஆழமாகச் சிந்திச்சால் உனக்கு அங்கே இருந்த எல்லா ஓவியங்களுக்கும் அர்த்தம் புரியும்..” என்று திரும்பத் திரும்பச்
சொன்னார் முகிலன்.

அன்று மாலை, பழனியப்பா திருமன மண்டபத்துக்கு இவனுடைய பல்ஸர் வாகனத்தில் இருவரும் சென்றார்கள். பக்கவாட்டு மேடையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. முன்வரிசையில் இவர்கள் அமர்ந்தனர். முகிலன் பிரபலமான ஓர் எழுத்தாலர் என்பதால் பலர் அவரைப் பார்த்து கரம் கூப்பி வணங்கினார்கள். சிலர் அவரிடம் பணிவாக ஏதோ பேசினார்கள். முகிலன், விஷால் இருவரை ஒட்டியும், பின்வரிசைகளிலும் பல பிரபல எழுத்தாளர்கள் அமர்ந்து ஒருவரோடு ஒருவர் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

“விஷால், பேய்க்கதை மன்னர் ராம்குமாரைப் பார்க்கணும் பார்க்கணும்னு சொன்னியே, இவர்தாம்பா அவர்!” என்று சிரிப்புடன் ஒரு ஒல்லிக் குச்சி உடம்புக் காரரை அறிமுகம் செய்தார் முகிலன். ஏமாற்றத்துடன் கும்பிடு போட்டான் விஷால். “காதல் தீவுன்னு ராஜா பத்திரிகைல தொடர் எழுதறாங்களே, டாக்டர் பரிமள சுந்தர் அது இவங்கதாம்பா!” என்று ஒரு குண்டுப் பெண்மணியை அறிமுகம் செய்து, “இவர் விஷால். இளம் எழுத்தாளர்!” என்று இவனையும் அவர்களுக்கு அறிமுகம் செய்தபோது விஷாலுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கிட்டத்தட்ட
எல்லா எழுத்தாளர்களையும் முகிலன் இவனுக்கு அறிமுகம் செய்தார்.

மணமக்களை கியூ வரிசையில் போய் வாழ்த்திவிட்டு, விருந்து உண்ணும் அரங்குக்குப் போனார்கள். அங்கே விஷாலுக்கு ஒரு வியப்பு காத்திருந்தது.

முகிலன் விருந்து சாப்பிட்ட முறைதான் அது. இலையில் போடப்பட இனிப்பு வகைகளை இரண்டு மூன்று முறை கேட்டு வாங்கினார். சாதம், கூட்டு, அவியல் அப்பளம் எல்லாவற்றையும் ஒருமுறைக்கு இரண்டு மூன்று முறை கேட்டு வாங்கினார். ஆனால், ஆசை ஆசையாகக் கேட்டு வாங்கி இலையை நிரப்பினாரே ஒழிய, அவரால் அவற்றைச் சாப்பிட முடியவில்லை. பேராசைதான் மிச்சம்! அம்பாரமாக இலையை நிரப்பிவிட்டு, அப்படியே மூடிவைத்து விட்டுத் தன் வயிற்றைத் தடவிக் கொண்டார். “வயிற்று வலி போலும்!. அப்படியிருக்கும்போது இந்த ஆசாமி எதற்கு வேண்டி வேண்டி இனிப்புகள், சாதம், காய்கறிகளைக் கேட்டு வாங்க வேண்டும்? வீணடிக்க வேண்டும்? சுத்த அல்பப் பேர்வழி!” என்று மனதுக்குள் அவரைப் புரட்டி
எடுத்தான்.

விருந்து முழ்்து கல்யாண வீட்டார், தெரிந்தவர்கள், நண்பர்களிடம் விடை பெற்றுக் கொண்டு விஷாலும் முகிலனும் கிளம்பினார்கள். விஷால் திருமண மண்டபத்திலிருந்து வெளியேறிச் செல்லும் வாசலை நோக்கிப் போனான். கேட்டருகே தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு அடங்கிய தாம்பூலப் பையை வெளியேறுபவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தனர். இவன் நெருங்கிய போது, கூடையில் இருந்த தாம்பூலப் பைகள் தீர்ந்து போயிருந்தன. “ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க சார்!. °டோர் ரூமிலிருந்து தேங்காய்ப் பை எடுக்க ஆள் போயிருக்கு. இதோ வந்துடும்!” என்று அங்கிருந்த இளைஞர் சொன்னார். “இட்° ஆல்ரைட்!” என்று கூறிவிட்டு விஷால் மண்டபத்திலிருந்து வெளியேறினான்.

வீதிக்குப் போய்த் திரும்பிப் பார்த்தபோதுதான் அவனுடன் முகிலன் வராதது புரிந்தது. மண்டபத்தினுள் பார்வையை ஓட விட்டான். முகிலன் தேங்காய்ப் பை கொடுக்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். “சே, இந்தத் தேங்காய்ப் பையைக் காத்து நின்று வாங்காவிட்டால்தான் என்ன? சரியான அல்பமாக இருக்குதே பெரிசு?” என்று வாய்விட்டு முனகினான். ஒரு ஓரமாக அவர் வருகைக்காகக் காத்து நின்றான், எரிச்சலுடன்.

முகிலன் சிரிப்புடனும் கையில் இரண்டு தேங்காய்ப் பையுடனும் வந்தார். “கொடுக்கலைன்னா விட்டு விடுவேனா? விஷால்! உன் பையையும் சேர்த்து நான் வாங்கிட்டு வந்திட்டேன்ல!” என்று போரில் வெற்றி கண்ட மன்னன் போலச் சிரித்தார்.

“இந்த அல்பத் தேங்காய்ப் பைக்காகவா அவ்ளோ நேரம் நின்னுகிட்டிருந்தீங்க? எனக்கு வேணாம் சார். நீங்களே என்னுடையதையும் வெச்சிக்குங்க!” என்றான் விஷால், கசப்புடன்.

“ஓகே, ஓகே!” என்றபடி இரு தேங்காய்ப் பைகளையும் கையில் பத்திரமாகப் பிடித்தபடி அவனுடன் நடந்தார் முகிலன். இவன் தன் பல்சர் வாகனத்தை நிறுத்தி வைத்த இடத்தை நோக்கிப் போனபோது, முகிலன் கல்யாண மண்டபத்தை ஒட்டிய சந்துப் பக்கம் போனார்.

அங்கே கூடை கூடையாகக் கொண்டு வந்து கொட்டப்பட்ட விருந்து முழ்்த பந்தி இலைகளை சுமார் பத்துப் பேர், குறவன் குறத்திகள், பரம ஏழைகள் என்று ஒரு கூட்டத்தினர் எச்சில் இலைகளைப் பிரித்து அதில் இருந்த மிச்சம் மீதிகளை வழித்துத் தங்களிடம் இருந்த பாத்திரங்கள், டப்பாக்களில் சேகரித்துக் கொண்டிருந்தனர். அங்கே நின்று கண்கள் கசிய அக்காட்சியைப் பார்த்த முகிலன், அங்கு விளையாடிக் கொண்டிருந்த குறவர் இனச் சிறுமிகள் இருவரைக் கூப்பிட்டு ஆளுக்கு ஒரு தேங்காய்ப் பையை நீட்டினார். அதை வாங்கிக் கொண்டு, “ஹையா! தேங்கா! தேங்கா!” என்று மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து அவர்கள் ஓடினர்.

வாகனத்தைத் தள்ளிக்கொண்டு திரும்பிய விஷால் அக்காட்சியைப் பார்த்து முதுகுத் தண்டு சில்லிட, அப்படியே நின்றான். அவனை யாரோ சவுக்கால் சுளீரென்று அடித்தது போல் வலி, அவன் உடம்பில் கோடுகளாய் இறங்கியது.

“ஹா! எழுத்தாளர் முகிலன் விருந்துப் பந்தியில் உருளைக் கிழங்குக் கறியும், கோ° கூட்டும், இனிப்பு வகைகளையும் கேட்டுக் கேட்டு வாங்கினாரே, சாதத்தைப் பலமுறை கேட்டு வாங்கி இலையை நிரப்பி, ஆனால் அவற்றை முழுமையாகச் சாப்பிடாமல் எழுந்து வந்தாரே, எல்லாம் இந்த ஏழைகளுக்காகத் தானா? தேங்காய்ப் பை வாங்க அல்பமாக நிற்கிறார் என்று அவர் மீது எரிச்சல் பட்டேனே, அது இந்த ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காகத்தானா? ஐயோ! எத்தனைக் கேவலமாக அவரை மதிப்பிட்டு விட்டேன்?”

“இந்த மனிதர் கூட ஒரு மாடர்ன் ஆர்ட்தானோ? புரியாதவரை புதிராக இருந்த இவரின் குணம், புரிபடத் தொடங்கிய கணத்தில் எத்தனை உயர்வாகத் தோற்றமளிக்கிறது? இவர் எவ்வளவு பெரியவர்!” என்று மனசுக்குள் சிலாகித்தான் விஷால். அந்தக் கணத்தில் சில தினங்களுக்கு முன்பு அவன் சென்று திரும்பிய நவீன ஓவியக் கண்காட்சி நினைவுக்கு வந்தது. அவன் அங்கு கண்ட ஒரு ஓவியம்… வளைவு வளைவான் கோடுகள். அவற்றை எண்ணிப் பார்த்தது கூட இப்போது ஞாபகம் வந்தது. மொத்தம் ஏழு வளைவுக் கோடுகள். அட..! இப்போது அவனுக்கு அதன் பொருள் பளிச்சென்று புரிந்தது. கோட்டின் ஏழு வளைவுகள் ஏழு மலைகலையும் அதன் மீது வரையப்பட்ட பெரிய நாமம் ஏழுமலைகளின் உச்சத்தில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ வெங்கடாசலபதியையும் அவனுக்குப் புரிய வைத்தது.

அந்த ஓவியத்தைக் கிறுக்கல், ஏமாற்று வேலை, ஸ்னாபரி என்றெல்லாம் வசை பாடியது இப்போது இவனைக் கூனிக் குறுக வைத்தது. “புரியாத எதையும் விமரிசிக்கும் தகுதி நமக்கு ஏது?” என்று முகிலன் ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.

வண்டியை °டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, முகிலனின் அருகில் சென்றான். அவர் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒத்திக் கொண்டு, “அந்த ஓவியக் கண்காட்சியில் பார்த்த ஓவியங்கள், இன்றைக்கு நான் பார்த்த நீங்கள் எல்லாம் மாடர்ன் ஆர்ட்டுகள்தான்!. புரியாத எதையும் விமர்சிக்க நமக்குத் தகுதி இல்லைதான்…சார், என்னை மன்னிச்சுடுங்க!” என்றான் தழுதழுத்த குரலில்.

ஒன்றும் புரியாமல் அவனை ஒரு மாடர்ன் ஆர்ட்டைப் பார்ப்பது போலப் பார்த்தார் முகிலன்.

(மயன் வார இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *