மதங்களின் சங்கமம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,655 
 
 

“”டாக்டர் சார்… கதவைத் திறங்க.”
வாசற்கதவு படபடவென்று தட்டப்பட, சாப்பிட்டுக் கொண்டிருந்த வசந்தன், “”ஜோதி… வாசல்ல யாருன்னு பாரு.”
கதவைத் திறந்தாள் ஜோதி.
“”அன்வர்பாய், கையில் பேரனை தூக்கியபடி நிற்க, அவருடன் இன்னும், நாலைந்து பேர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.
“”அம்மா… டாக்டரை சீக்கிரம் வரச் சொல்லுங்க. நல்லா விளையாடிட்டிருந்த பிள்ளை திடீரென்று கை, கால் வெட்டி, மயக்கமாக கீழே விழுந்துட்டான்.”
கண்களில் கண்ணீர் வழிந்தோட, பதற்றத்துடன் கூறினார் அன்வர் பாய்.
மதங்களின் சங்கமம்!அவசரமாக வெளியே வந்தான் வசந்தன்.
“”பதட்டப்படாதீங்க பாய்… அப்படி பெஞ்சில் படுக்க வைங்க.” சொன்னவன் சிகிச்சையைத் தொடர்ந்தான்.
“”காலைப் பனியிலே ரொம்ப நேரம் விளையாடி இருக்கான். உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு. ஊசி போட்டிருக்கேன். இந்த மருந்து, மாத்திரையை வாங்கிக் கொடுங்க. ஒன்றும் பயப்பட வேண்டாம்.”
“”ரொம்ப நன்றி டாக்டர். அந்த அல்லாவின் பிரதிநிதியாக இந்த கிராமத்திலிருந்து, எங்களுக்காக சேவை செய்யறீங்க. நீங்க நல்லா இருக்கணும் டாக்டர்.”
அங்கிருந்த டேபிளில், சிகிச்சைக்கான பணத்தை வைத்தபடி கூறினார் அன்வர்பாய்.
“”எங்கம்மா கிராமத்தில் பிறந்து, வாழ்ந்தவங்க. அவங்களுக்கு வாக்கு கொடுத்தபடி, படிப்பு முடிஞ்சதும் இந்த கிராமத்தை தேர்ந்தெடுத்து, வந்துட்டேன். இங்க இருக்கிற நீங்களெல்லாம் அன்போடும், பாசத்தோடும் உங்களில் ஒருத்தராக பழகும் போது, நாங்க நிறைவாக வாழ்ந்துட்டிருக்கோம். பேரனை வீட்டில் கொண்டு போய், மருந்து கொடுத்து படுக்க வைங்க. நர்ஸ் வஹிதா வந்ததும், வீட்டிற்கு அனுப்பி, பார்த்துட்டு வரச் சொல்றேன்.”
வசந்தனின் மனம் அறிந்து, ஜோதியும் திருமணமானதும் அவன் விருப்பப்படி கிராமத்திற்கு வந்தாள்.
“ஜோதி… எங்கம்மா தனி மனுஷியாக என்னை வளர்த்து, ஆளாக்கி டாக்டருக்கு படிக்க வச்சாங்க. கடைசி வரை அவங்களை என்னோடு வச்சிருக்கக் கொடுத்து வைக்காமல், ஆண்டவன் அவங்களை அழைச்சுக்கிட்டான். அவங்க ஆசைப்படி, என் மருத்துவ சேவையை கிராமத்தில்தான் செய்யணும்ன்னு விருப்பப்படறேன். உனக்கு இதிலே பூரண சம்மதமிருந்தா மட்டும் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கலாம்.”
பெண் பார்க்க வந்த வசந்தனின் வெளிப்படையான பேச்சு, ஜோதியின் மனதைக் கவர்ந்தது.
அந்த கிராமத்தில், இருநூறு குடும்பங்களுக்கு மேல் இருக்கும். கயிறு திரிக்கும் தொழிலே அங்கு அதிகம். சரிக்குச் சரியாக இந்துக்களும், முஸ்லிம்களும் கலந்து, அந்த கிராமத்தில் அனைவரும் ஜாதி வேறுபாடு இல்லாமல் பழகுவது, மத நல்லிணக்கத்தோடு வாழ்வது ஜோதிக்கு பிடித்திருந்தது.
நர்ஸ் வஹிதா வர, காத்திருந்த நோயாளிகளை பார்த்து முடித்த வசந்தன், வேலாயுதம், சுந்தரமும் வருவதைப் பார்த்து புன்னகையுடன் வரவேற்றான்.
“”ஜோதி… காபி கொண்டு வா.”
உள்நோக்கி குரல் கொடுக்க, “டிவி’யை அணைத்தவள், அடுக்களையில் நுழைந்தாள்.
“”சொல்லுங்க வேலாயுதம்… மும்முரமாக நம்ப கிராமத்தில், பெருமாள் கோவில் கட்டணும்ன்னு ஏற்பாடு பண்றீங்க. ஜோசியரை போய்ப் பார்க்கப் போறதாக சொன்னீங்களே… என்ன ஆச்சு.”
“”அதைப் பத்தி பேசத்தான் வந்தோம். பிள்ளையார் கோவிலும், அம்மன் கோவிலும் நம் கிராமத்தில் இருக்கு. நம்ம காலத்துக்குள் சின்னதாக அந்த ரங்கனை சேவிக்க, பெருமாள் கோவில் கட்டணும்ன்னு, நம்ப ஜனங்க எல்லாருமே ஆசைப்படறாங்க. அதற்காக பணமும் செலவு பண்ண பெரிய மனுஷங்க எல்லாருமே தயாரா இருக்காங்க. இடம் தான் தோதாக கிடைக்கணும். அதுவும் வாஸ்துப்படி அமையணும்ன்னு தீட்சிதரை, ஜோசியரை எல்லாரையும் கலந்துட்டு வர்றோம்.”
“”அப்படியா… என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க.”
“”ஊருக்கு வடக்கு பக்கம், ஆற்றங்கரையையொட்டி நிலமிருந்தா, அங்கே கட்டினா விசேஷம்ன்னு சொல்றாங்க.”
“”வடக்கு பக்கமா… என்ன சொல்றீங்க சுந்தரம். அந்தப் பகுதியிலே முஸ்லிம்கள் குடியிருக்காங்க. அந்த இடத்திலே போய், நாம் பெருமாள் கோவில் கட்டறது சரியா வருமா… ஒத்துமையாக இருக்கிற கிராமத்திலே பிரச்னை வரக் கூடாது. அதுவுமில்லாமல், அப்படி கோவில் கட்ட தேவையான இடம், அந்தப் பகுதியில் இருக்கா… அதை முதலில் தெரிஞ்சுக்கிட்டீங்களா?”
அதற்குள் ஜோதியும், காபி கலந்து எடுத்து வர, வஹிதா அதை வாங்கி அவர்களுக்குக் கொடுத்தாள்.
“”டாக்டர்… இவங்க கேட்கற மாதிரி, கோவில் கட்டற அளவு விஸ்தீரமான இடம், நம்ப அன்வர்பாய்கிட்டே, ஆத்தங்கரை ஓரமாக இருக்கு. அதை, அவர் பேரன் பேரில் வச்சிருக்காரு. எனக்குத் தெரியும் டாக்டர்,” என்று சொன்னாள் வஹிதா.
“”ஆமாம் டாக்டர்… நாங்களும் அதை விசாரிச்சுட்டுத்தான் வர்றோம். அந்த இடம் தாராளமாக கோவில் கட்ட போதுமானதாக இருக்கும். அன்வர்பாய் எங்களை விட உங்க மேலே அதிக மரியாதை வச்சிருக்கிறவரு. நீங்க இதிலே தலையிட்டா நல்லா இருக்கும். அவர் நமக்கு அந்த இடத்தைக் கொடுக்க சம்மதிச்சா, அவர் கேட்கற தொகையை கொடுத்து, இடத்தை கிரயம் செய்துக்கலாம்.”
“”இல்லை சுந்தரம்… எனக்கு இதிலே சம்மதமில்லை. நாம கேட்டு, அவர் மறுத்துட்டா… நமக்குள்ளே மனக்கசப்பு வரக் கூடாது. அதுவுமில்லாம, நாம கோவில் கட்ட தேர்ந்தெடுக்கிற இடமும், அவங்க பகுதியிலே இருக்கு. அதுக்கு அவங்க சமூகத்து ஜனங்க சம்மதிப்பாங்களான்னு தெரியாது. விட்டுடுங்க சுந்தரம்… வேறு இடம் பார்ப்போம். எதுக்கும் நீங்க இன்னொரு தடவை போய், தீட்சிதரையும், ஜோசியரையும் கலந்துட்டு வாங்க.”
“”என்னங்க நீங்க… கேட்காமலேயே ஏன் முடிவு பண்றீங்க. இந்தக் கிராமத்தைப் பொறுத்தவரை இந்து, முஸ்லிம் வேறுபாடு இல்லாமதான் பழகிட்டு வர்றாங்க. கோவில் கட்றது புனிதமான விஷயம். நீங்க அவங்க சொல்றபடி, அன்வர்பாயைப் பார்த்து, அந்த இடத்தைக் கொடுக்க சம்மதமான்னு கேளுங்க. அவர் மறுக்கிற பட்சத்தில், அடுத்து என்ன செய்வோம்ன்னு யோசிப்போம்.” ஜோதி சொல்ல, “”அம்மா சொல்றதும் சரியாதான் படுது. அதுபடி செய்வோம் டாக்டர்.”
சிறிது நேரம் யோசித்தவன், “”சரி… உங்க இஷ்டம். நானும், ஜோதியும் ஸ்ரீரங்கம் போறதாக இருக்கோம். அந்த பெருமாளைத் தரிசனம் செய்துட்டு வந்து, அவர் அனுமதியோடு பேசறேன். அவருக்குத் தெரியும். எல்லாவற்றையும் நல்லபடியாக நடத்தி வைப்பார்ன்னு நம்புவோம்.”
“”வஹிதா… நீ என்னம்மா சொல்ற… உங்க சமூகத்தில், அன்வர்பாய் இடம் கொடுத்தாலும், கோவில் கட்ட சம்மதிப்பாங்களா… தயங்காம உன் அபிப்பிராயத்தைச் சொல்லும்மா,” வேலாயுதம் கேட்டார்.
“”நீங்க செய்ய நினைக்கிறது, நல்ல காரியம். கோவில் கட்டணும்ன்னு எல்லாரும் சேர்ந்து புனிதமான காரியத்தில் ஈடுபட்டிருக்கீங்க… நமக்குள்ளே எந்த பாகுபாடுமில்லாமல், மக்கள் எல்லாம் ஒத்துமையா பழகினாலும், முழுமனசாக சம்மதிப்பாங்களான்னு என்னால சொல்ல முடியலை. டாக்டர் நினைக்கிற மாதிரி தான் நானும் நினைக்கிறேன். அமைதியாக இருக்கிற கிராமத்தில், தேவையில்லாமல் மதக்கலவரம் வரக்கூடாதுன்னு நானும் விரும்பறேங்க.”
ஒன்றும் பேசாமல், மவுனமாக சுவற்றில் இருந்த பெருமாளைப் பார்த்தபடி இருந்தான் வசந்தன்.
அதிகக் கூட்டமில்லாமல், ரங்கனை அமைதியாக சேவித்தது, ஜோதிக்கும், வசந்தனுக்கும் மனசுக்கு திருப்தியாக இருந்தது. வெளிப்பிரகாரத்தில் வந்து உட்கார்ந்து கொண்டனர்.
“”நம்ப கிராமத்தில் பெருமாள் கோவில் கட்டப் போறது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா… சனிக்கிழமை, ஏகாதசின்னு பெருமாளை சேவிக்கிறது எவ்வளவு கொடுப்பினை. ஆரம்பிச்ச காரியம் நல்லவிதமா முடிய, அந்த ரங்கன்தான் துணையிருக்கணும்.”
“”நடக்கும் ஜோதி… ஆனா, நாம் தான் தேவையில்லாமல் முஸ்லிம் பகுதியில் இடத்தை வாங்கிக் கோவில் கட்டணும்ன்னு நினைக்கிறோம். அதுதான் எனக்கு தப்பா தோணுது. நம்ப முதலியார் வீட்டுப் பக்கம் இருக்கிற இடம் கூட விஸ்தீரமானதாக இருக்கு. அதுவும், விலைக்குக் கொடுக்கப் போறதாகச் சொன்னாங்க. அதை விலைபேசி முடிச்சு, நிம்மதியா கோவில் வேலைகளை ஆரம்பிக்கலாம். எனக்கு அதுதான் நல்லதுன்னு படுது. ஒத்துமையாக இருக்கிற கிராமத்திலே, வஹிதா சொன்னது போல், நாமளே மதக்கலவரம் உண்டு பண்ணக் கூடாது. ஊருக்குப் போனதும் இதைத்தான் என் முடிவாகச் சொல்லப் போறேன்.”
கோவில் எழுப்ப வேண்டும் என்பது தான் நம் விருப்பமே தவிர, அடுத்தவர் மனதைக் கஷ்டப்படுத்தி அதைச் செய்யக் கூடாது என்று கணவன் நினைப்பது சரியென்றே ஜோதிக்குத் தோன்றியது.
“”வாங்க அன்வர்பாய்… என்ன விஷயம்? பத்து, பதினைந்து பேர் சேர்ந்து, என்னைப் பார்க்க வந்திருக்கீங்க. உங்க பேரன் எப்படி இருக்கான். மருந்து, மாத்திரை கொடுத்துட்டு வர்றீங்களா?”
“”உங்க கைபட்டு குணமாகாமல் இருக்குமா டாக்டர்… நல்லா இருக்கான். உங்களைப் பார்த்துப் பேசிட்டுப் போகலாம்ன்னு வந்தோம்.”
சொன்னவர், தன்னுடன் வந்தவர்களைப் பார்த்து, எல்லாரும் அப்படி உட்காருங்க. வேலாயுதமும், சுந்தரமும் ஊர் பெரிய மனுஷங்களைக் கூப்பிட்டு வர்றதாகச் சொன்னாங்களே… இன்னும் வரலையா?”
கிராமத்து பெரிய மனிதர்கள் சூழ, அப்போதுதான் உள்ளே நுழைந்த சுந்தரமும், வேலாயுதமும், அன்வர்பாய்க்கு புன்னகையுடன் வணக்கம் செலுத்தினர்.
“”சொல்லுங்க பாய்… கிராமத்து முக்கிய புள்ளிகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, என் வீடு தேடி வந்தது சந்தோஷமாக இருக்கு. என்ன விஷயம்?”
“”உங்க சமூகத்தில் நம்ப கிராமத்தில் பெருமாள் கோவில் கட்டப் போறதாக, முடிவு செய்திருப்பதாக சொன்னாங்க; நல்ல விஷயம். எங்களுக்கும் ஆண்டவன் கோவில் வரப்போறது சந்தோஷம் தான்.”
“”உங்களை மாதிரி பெரியவங்க ஆசியால, நல்லவிதமாக நடக்கும்ன்னு நாங்க நம்பறோம் பாய்.”
“”உங்க கோவில் அமைக்க ஆற்றங்கரை ஒட்டி இருக்கிற என்னோட நிலத்தைக் கொடுக்க நான் தயாராக இருக்கேன் டாக்டர்.”
“”என்ன சொல்றீங்க?” நம்ப முடியாமல் அவரைப் பார்த்தான் வசந்தன்.
“”வஹிதா மூலமாக அந்த இடம் உங்களுக்கு தேவைப்படுதுன்னு கேள்விப்பட்டோம். உங்க தெய்வம் எங்க பகுதிக்கு வர்றது சந்தோஷமான விஷயம்தான். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா டாக்டர். எங்களோட தர்கா அமைந்திருக்கிற இடம், உங்க வம்சா வழியில் வந்த இந்து குடும்பம், எங்களுக்கு கொடையாக கொடுத்தது. மதங்கள்ங்கிறது நம்மை நல்வழிப் படுத்த தானே தவிர, பிரிவினையை உண்டாக்க இல்லை. அதை, இந்தக் கிராமத்து ஜனங்கள் நல்லா புரிஞ்சு வச்சிருக்கோம்.
“”நீங்களும் ஒவ்வொரு வருஷமும், எங்க திருவிழா சமயத்தில், தர்காவுக்கு சதார் போன்றவற்றை காணிக்கையாக்கி மரியாதை செலுத்தறீங்க. உங்க மத தெய்வங்களை வழிபட்டாலும், எங்க மதத்தை மதிக்கிறீங்க. அதே மனப்பான்மை தான் எங்களுக்கும் இருக்கு. தெய்வங்கள் வேறு வேறாக இருந்தாலும், நம்முடைய வழிபாடும், வேண்டுதலும் ஒன்றுதான். குர்ஆனும், கீதையும் அன்பைத்தான் உபதேசிக்குது. நீங்க தாராளமாக அந்த இடத்திலே உங்க கோவிலை எழுப்பலாம். அதற்கு, எங்க முஸ்லிம் சமுதாயம் தேவையான நிதி உதவியை செய்யத் தயாராக இருக்கோம்.”
“”ரொம்ப சந்தோஷம் பாய்… மனிதனுக்கு முதல் தேவை, நல்லது நினைக்கிற மனசுதான்; அது, உங்க கிட்டே இருக்கு. மத நல்லிணக் கத்துக்கு உதாரணமாக நம்ப கிராமம் இருக்கிறது ரொம்ப பெருமையாக இருக்கு. நிச்சயம் இது தொடர ஆரம்பிச்சால், நம்ப நாடே சுபிட்சமாக மாறிடும். அந்த நல்ல நாளுக்காக நாம் அந்த இறைவனை பிரார்த்திப்போம் பாய்.”
நெகிழ்ச்சியுடன் அவர் கைகளைப் பிடித்து கூறினான் வசந்தன்.
“”உங்க மருத்துவ சேவையைப் போல் தான் டாக்டர் இதுவும். மதங்களைப் பாராது, மனுஷங்களை மதித்து, உண்மையான மனிதநேயத்தோடு நீங்க எல்லாருக்கும் சேவை செய்யற அதே மனசுதான் எங்களுக்கும் இருக்கு. பூமி பூஜை போடற அன்னைக்கு, எங்களுக்கும் அழைப்பு கொடுங்க; நாங்களும் அதிலே கலந்துக்கிறோம்.
“”நிச்சயமாக… இது, மதங்களைத் தாண்டி மனித நேயத்தோடு எழுப்பப்படப் போகிற கோவில். இதில், எல்லாருக்கும் அனுமதி உண்டு.”
உண்மையான மனநிறைவுடன் வசந்தன் சொல்ல, சகோதர நேயத்தோடு, ஒன்றாகக் கலந்து அமர்ந்திருந்த இந்து, முஸ்லிம் பெரியவர்கள், ஒருவரையொருவர் அன்பு ததும்ப, புன்னகையோடு பார்த்துக் கொண்டனர்.

– ஆகஸ்ட் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *