மஞ்சுவிரட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 10,622 
 
 

ஒரு பச்சைக்கலர் தகரப்பேட்டி, கண்கள் குழிக்குள் கிடக்கிற பசி, துணைக்குச் சித்தப்பா. பஸ்ஸிலிருந்து இறங்கியபோது அந்த ஊர் இன்னும் வறட்சியாகத் தெரிந்தது. வழி நெடுகக் கடந்து போன பொட்டல் காடுகளும் வேலிக்கருவேல மரங்களும் அது வரை பதிவு செய்யப்பட்ட சினிமாக் கிராமங்களை கிழித்துப் போட்டிருந்தது. வேலைக்கான உத்தரவு கையில் கிடைத்ததிலிருந்து அவன் வேற்று மனிதனாகிப் போனான். ஊதாரி, உருப்படாதவன் என்கிற பிம்பம் உடைந்து அரசாங்க முத்திரை குத்தப்பட்ட மரியாதை அவன் மேல் பதிந்தது. ரெட்டைப் போஸ்ட்டுக்கு வழியனுப்ப வந்த எட்டுப்பேரில் ஆறுபேர் அவனோடு திருட்டுப் புகை பிடித்தவர்கள். அவனுக்காக கடிதம் கொண்டு போனவர்கள். ராத்திரி பணிரண்டு மணிக்குமேல் பக்கத்தூருக்குப் போய் கோழி திருடி அதை சுடுகாட்டுக்குப் பக்கத்திலே வதக்கி தின்ற கூட்டம். சந்தோசம், கேலி, விளையாட்டு, பசி எல்லாவற்றையும் பகிர்ந்து கிடந்த நாட்கள் இறுகி, கண்ணீர் கடந்த அந்த நேரம் ஆறு பேரும் முகம் திருப்பிக் கொள்ளப் பேருந்து நகர்ந்தது.

இருபத்திமூனு வருசம் தரிசுக்காட்டில் நீளக்கயிரில் கட்டிப்போட்ட மாட்டைப்போல் சூரங்குடியை மட்டுமே வட்டமடித்து வந்தவன், இரு நூறு கிலோ மீட்டர் தாண்டிய மற்றொரு கிராமத்துக்கு முதன் முதலாக இடம் பெயர்ந்தான். சாயங்காலம் வரை உடனிருந்து விட்டு சாந்தாம்மா மெஸ்ஸிலும், பெருமாள்சாமியிடமும் நல்ல வார்த்தை சொல்லி ஒப்படைத்து விட்ட திருப்தியில் அவனது சித்தப்பாவும் ஊருக்குப் போய் விட்டார். அந்த நிமிடத்திலிருந்து அங்கு எதிர்ப்படுகிற செட்டி நாட்டு மண்ணும், மனிதர்களும் பிரம்மாண்ட வீடுகளும் மிரட்சியை உண்டு பண்ணியது. இரண்டொரு மாதங்களில் கண்மாய்த் தண்ணீரை வடிகட்டிக் குடிக்கவும், பக்கத்துக் கண்மாயில் குளிக்கவும் பழகிக்கொண்டான். இளநீரை விடவும் சுத்தமான பம்பு செட்டில் குளித்ததும், கிணற்று நீரில் பல்டியடித்து விளையாண்டதும் பழைய காலங்களாகிப் போனது. புதிய மனிதர்கள் புதிய பழக்க வழக்கங்கள், அரசாங்க உத்யோகக்காரன் என்கிற புதிய அடையாளம், சார் போட்டுக் கூப்பிடுகிற மரியாதை எல்லாம் கைபழகுவதற்கும், ஏற்றுக்கொள்ளவும் கூச்சமாகவே இருந்தது. அதேபோல் ஒரு பொய் மரியாதையை எந்த நேரமும் பையில் வைத்திருக்க வேண்டுமென்றும், உயர் அதிகாரிகளைக் கண்டதும் அதை உடலெங்கும் பூசிக்கொள்ள வேண்டுமென்றும் மூத்த ஊழியர்கள் சொன்னதும் லேசுக்குள் பழக்கத்துக்கு வரவில்லை. சாயங்காலப் பொழுதுகளில் இலங்கை வானொலியில் பாட்டுக் கேட்பதுவும், நிலாக்காலங்களில் மொட்டை மாடியிலிருந்து நிலவொளியில் நனைகிற தனிமையும் மட்டும் பழமை மாறாமலிருந்தது.

இரண்டாம் நாள் சாயங்காலம் உள்ளாடை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. பெருமாள் சாமிதான் கூட்டிக்கொண்டு போனார். அது ஒரு இரும்புக்கடை, போகிற வழியில் தெரிந்த நண்பரைப் பார்க்கப் போகிறார் என்று நினைத்துக் கொண்டான். அவனை கடைக்காரருக்கு அறிமுகம் செய்து வைத்தார். கொஞ்ச நேரம் பழமை பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பத் தயாரானான். ”ஜட்டி வாங்கவில்லையா” என்று கேட்டார். ”அதான் ஜவுளிக் கடைக்குப் போவோம்” என்று விளக்கம் சொன்னான். ஆனால் அந்த இரும்புக்கடைக்குள்ளிருந்து பத்திருவது வெளிநாட்டு ஜட்டிகளைக் கடைப்பையன் கொண்டு வந்ததை அவன் எதிர்பார்க்கவில்லை. அந்த ஊர் கடலுக்கு அருகில் உள்ள சுத்துப்பட்டிகளின் சந்திப்பாக, வாரச்சந்தை கூடுகிற இடமாகவும் இருந்தது. எண்பதுகளின் துவக்கத்தில் இலங்கைத்தமிழர் பிரச்சினை கனன்று கொண்டிருந்த நேரம். ரானுவ லாரிகளில் வந்து நகரங்களிலும், கிராமங்களிலும் தமிழர் விடுதலைக்குழுக்களின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் அனுதாபமும் நன்கொடையும் சேகரித்தார்கள்.

தூத்துக்குடியிலிருந்து எம் வி எம் சிதம்பரம்மென்ற கப்பல் போக்குவரத்து தடை செய்யப்படாமலிருந்தது. அது போலவே ராமேஸ்வரம் தொடங்கி வேம்பார் வரையிலான கடலோரங்களில் இரவு நேரக் கள்ளத்தோணிகள் மிகக்குறைந்த சிரமத்தில் இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் பயணப்பட்டுக் கொண்டிருந்தன. எனவே வருடத்தின் கால்பகுதி காலங்களில் விவசாயம் பண்ணவும் எஞ்சிய காலங்களில் ஒரே நபர் நான்கு கடவுச்சீட்டுக்கள் வைத்துக்கொண்டு திரைகடல் தாண்டி திரவியம் கொண்டுவரவுமான தொழில்களை பிரதானமாகக் கொண்டிருந்தது அந்த கிழக்கு ராமநாதபுரம் பகுதி. ஜட்டி முதல் தங்க பிஸ்கட் வரையிலான வெளிநாட்டு மோகத்தை, வரி செலுத்தியும் வரி செலுத்தாமலும் அவர்கள் தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்தார்கள். உள்ளூர் லக்ஸ் சோப்பை விட வெளிநாட்டு லக்ஸ் கூடுதலாக மணத்தது. இரண்டையும் ஒரே சோடா உப்பில் தான் தயாரிக்கிறார்கள் அதுவும் லீவர் லிமிடெட் என்கிற ஒரே பன்னாட்டுக் கம்பெனி என்பது அந்த உறையில் உள்ள மிக நுண்ணிய எழுத்தைப்போல மறைபொருளாகவே இன்னும் இருக்கிறது. எனவே மருந்துக்கடைகளில் மலேசிய ஹவாய் செருப்புகளும் வெளிநாட்டு சிகரெட்டுகளும் கூடக் கிடைத்தது. பெருகிய கண்மாய்த் தண்ணீரை பங்கு போட்டுக் கொள்ள வெட்டுக்குத்து வரை போகிறதும், விடிய விடிய முழித்திருந்து நெல்லுக்கு நீர் பாய்ச்சுவதையும் பார்த்துப் பழகிப்போன அவனுக்கு, புழுதி விதப்பாடு என்று சொல்லிக் கொண்டு மானாவாரியில் நெல் விதைக்கிற விவசாயமும் அதிசயமாக இருந்தது.

பழைய சினிமாவில் பார்த்த மஞ்சுவிரட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் எல்லாம் நேரடியாகப் பார்க்கக் கிடைக்கிற அந்தப் பகுதியில் எருது கட்டு என்று ஒரு வீர விளையாட்டும் புழக்கத்திலிருக்கிறது. டெட்ரக்ஸ் சட்டை போட்டுக் கொண்டு சிங்கப்பூர் செண்டடித்துக் கொள்கிறவர்களும், தலைக்கு வேப்பெண்ணெய் தட்விக் கொள்கிறவர்களும் ஒரே கிராமத்துத் தெருவில் வசித்தார்கள். ஒரு மாலை வேளையில் காட்டுக்குள் காலார நடந்து போய்க் கொண்டிருந்தபோது, இரவும் பகலும் சந்திக்கிற வசீகர நேரம் உப்புக்குறைந்த குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. தூரத்தில் நான்கைந்து சிகரெட்டுக் கங்குகளும் சன்னமான பேச்சுச்சத்தமும் கேட்டது. மாலைப் பொழுதில் வாலிபர்கள் திருட்டுப்புகை பிடிக்கிறார்கள் என்பதான யூகத்தில், வேலவர், எம் ஜி, வள்ளிமுத்து எல்லோரையும் நினைத்துக்கொண்டே கடந்து போனான். எதேச்சையாக அவர்களைப் பார்க்க நேர்ந்தபோது தூக்கிவாரிப் போட்டது. வட்டமாய் உட்கார்ந்து சீட்டு விளையாடுவார்கள். ஆனால் அருகருகே வட்டமடித்து உட்கார்ந்து வியாபாரக் கதைகள் பேசியபடி மலம் கழித்துக் கொண்டிருந்த வயது வந்த ஆடவர்களை அங்கு தான் பார்த்தான். அது பரவாயில்லை சில பேர் ஊரை அடுத்த தார் சாலையின் ஓரத்தில் வேட்டியைத் திரைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதும் அந்த வழியே போகிற பால்காரப் பெண்கள் சங்கோஜத்தோடு ஒதுங்கிப் போவார்கள் – அப்போது அவர்களை வழியக் கூப்பிட்டு குசலம் விசாரிப்பதும் ரொம்ப சாதாரணம். மூன்று மாடி நான்கு மாடியில் நவீன வீடுகளும், அரை ஏக்கரில் பழங்காலத்து புராதன வீடுகளும் இருக்கும் அங்கே கழிப்பறை என்பதே கிடையாது.

இந்தக் கதைகளோடும் சம்பளப் பணத்தோடும் எதாவது பொருள்களோடும் இரண்டு மாதங்களுக்கொரு தரம் ஊர் திரும்புகிறதுமாக இரண்டு வருடங்கள் ஓடிப்போனது. அந்த இரண்டு வருடங்களில் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களுக்குள் காரியார்த்தமானவர்களையும் ஆத்மார்த்தமானவர்களையும் பிரித்துப் பார்ப்பதில் சிரமிருந்தது. சென்னையில் மட்டுமே மையங்கொண்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளால் மிச்சமுள்ள தமிழகத்துக்கு எந்தப் பாதிப்புமில்லாமலிருந்த காலம் அது. அப்போது எல்லோருக்குமான ஈர்ப்பும் பொழுது போக்கும் சினிமா மட்டுமாக இருந்தது. ஒரு வரிக்கதைகளைச் சினிமாவென நம்பிக்கொண்டிருந்த மக்களிடம், கேள்விகளை முன்வைக்கிற படங்கள் பெருவாரியாக முளைத்து வந்ததும் அதற்கு பணம் செலவழிக்கிற தயாரிப்பாளர்கள் உயிரோடிருந்ததும் அதிசயம். கண்சிவந்தால் மண்சிவக்கும் பார்த்து விட்டு பல இரவுகள் தூங்க முடியாமல் அலைக்கழிக்கப்பட்டான். அந்த அவஸ்தையை வடிக்க ஒரு குயர் நோட்டு வாங்கி பக்கம் பக்கமாகக் கிறுக்கினான். ராணுவ லாரிகளில் வந்து இனப்படுகொலை அவலத்தைக் கடைவிரித்த புகைப்படக் கண்காட்சியைப் பார்க்க விடுப்பெடுத்துக்கொண்டு காரைக்குடிக்குப் போனான்.

அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் சுத்தளவில் எங்கு ரேக்ளா வண்டிப்பந்தயம் நடந்தாலும் முதல் பத்திரிக்கை பேங்கைத் தேடி வந்து விடும். கல்யாணம் காது குத்து நடத்தும் பிரமுகர்களின் பிரதான விருந்தாளிகளாகவும் ஆனார்கள். எல்லா இடங்களிலும் தெரிந்த முகங்கள் இருந்து வணக்கம் சொல்லும்போது மரியாதை கூடியது. அது சில நேரங்களில் ஆகாசத்தில் பறப்பது போலிருந்தது. தாத்தா வயசிருக்கிற முனியாண்டிப் பெரியவர் போன்றவர்கள் பேருந்து நெரிசலில் எழுந்து இடங்கொடுக்கிற போது மனசு ப்¢சைகிற அவஸ்தையாகவுமிருந்தது. அவன் இப்போது சாதாரண ஜனங்களுக்கு மேல் நிற்கிற ஒரு வங்கி ஊழியன். கடைக்கு சிகரெட் வாங்கப் போனாலும் காத்துக்கிடக்கிற கூட்டம் விலக்கி உடனே வெளியேறுகிற முதல்மரியாதைக்குரியவன்.

அவன் தங்கியிருந்த அறைக்கு எதிரே கிருஷ்ணன் கோயிலிருந்தது. விசேச காலங்களிலும், மார்கழி மாதங்களிலும் மைக்செட் போட்டு பஜனைப்பாடல்கள் போடுவார்கள். அந்த விடிகாலைக்குளிரில் இடுப்பில் துண்டு கட்டிகொண்ட ஏழெட்டுப்பேர் பதினாறு சுதிகளில் ஆண்டாள் பாசுரங்கள் பாடிக்கொண்டு வருவார்கள். ஆர்மோனியப்பெட்டி, மிருதங்கம், கஞ்சிரா சத்தங்களுக்கு ஊடாக பொக்கை வாய்க்குரலில் பாடுகிற அயோத்திராமச்செட்டியாரின் குரல் அலாதியாகக் கேட்கும். அந்தக்கோயில் பற்றியதான நினைவுகள் வரும்போதெல்லாம் அந்தக் கோயிலுக்குப் போய் கருவறையும் சிற்பங்களும் பார்க்க உள்ளூர ஆசை வந்துபோகும். மொட்டைப்பனை, குத்துக்கல், துருப்பிடித்த சூலாயுதம் இவைகளே சாமியாகவும், பன்னிக்கூடு அளவு இருக்கும் ஒரு ஓட்டுச்சாய்ப்பு மாரியாத்தாவின் கோவிலாகவும் அறிமுகமாகி அருகிருந்தது. ஆபரண பூஜியதையாய் அருளொளிரும் கண்களோடு காட்சி தரும் சிலைக்கோலம் பார்க்கிற பாக்கியம், பேர் சொல்லி நட்சத்திரம் இணைத்து காத்திருக்கிற பவ்யம், பிரகாரம் சுற்றிக்காலோய்ந்து உட்காருகிற ஆசுவாசமான தருணம் எல்லாமுமே இன்னொரு உலகமாக இருந்தது.

ஒரு வருடம் ஓடிப்போனது. அந்த ஊரின் மனிதர்களும் மூலை முடுக்குகளும் சிநேகமாகிப்போனது. ஊரின் கீழ்கோடியில் ஒரு புதிதாகக் கட்டப்பட்ட கோயிலுக்கு கும்பாபிசேகம் நடந்தது. முந்திய நாள் சிறப்பு பூஜைக்காக ஊரின் பிரமுகர்களோடு இவனும் அழைக்கப்பட்டிருந்தான். தூரத்திலேயே ”கற்பூர நாயகியே கனகவல்லி” பாட்டுக் கேட்டது. அதே சாயலில் ஹனீபாவின் ”தீனோரே ஞாயமா மாறலாமா” இருக்கும். இந்த இரண்டின் மூலப்பாடலாக ”ஆதாஹே சந்த்ரமா ராத்து ஆஜி” என்றொரு ஹிந்திப்பாடல் இருப்பதைச் சொல்லிக்கொண்டே நாகராஜோடு நடந்தான். வயரிங் பிளம்பிங் வேளைகள் இல்லாதபோது மேனேஜருக்கு எடுபிடி வேளைகள் செய்வதன் மூலம் அன்றைக்கான சாராயத்துக்கோ, ஒரு கால் பாட்டில் சீமைச்சாராயத்துக்கோ உத்திரவாதம் பண்ணிக்கொள்ளும் நாகராஜுக்கு மேனேஜரின் இடத்தில் அவனிருந்தான். கோயிலை நெருங்கும்போது ஊதுவத்தி, சாம்பிராணி, சந்தனத்தோடு பூமாலைகளின் வாசம் வந்து கொண்டிருந்தது. ஆட்கள் பூஜைக்கான பொருள்களோடு போவதும் வருவதுமாக எதிர்ப்பட்டார்கள். இருட்டில் அடையாளம் கண்டுகொண்டு ”மீசக்கார மேனேஜர் வல்லையா” யாரோ கேட்டுக்கொண்டு கடந்து போனார்கள்.

ஏற்கனவே அரை போதையிலிருந்த கோயில் முக்கியஸ்தர்களில் ஒருவர் நாகராஜை உரிமையோடு இழுத்துக்கொண்டு போனார். ”டே ஆறுமுகம் பூஜை இருக்குடா” என்று சொல்லிக்கொண்டே பின்னால் போனார் ”ஏ குட்டச்சாமி இதுவும் பூஜைதயா, மில்டரி சரக்கு”. அவர்களிருவரும் அந்த மிலிட்டரிச் சரக்கைப் பற்றியும் போன பொங்கலுக்கு குடித்த இதுபோன்றதொரு தருணத்தைப்பற்றியும் பேசிக்கொண்டு அந்த இடத்தினின்றும் கடந்துபோனார்கள். இப்போது அவன் மட்டும் அந்த திருவிழா பரபரப்பில் தனித்து விடப்பட்டிருந்தான். சிலை வந்து சேருவதற்கு தாமாதமாகியிருந்ததால் மின்சார வெளிச்சத்தில் பீடத்தை அப்போதுதான் கட்டிமுடித்துப் பூசிக்கொண்டிருந்தார்கள். பூசிமுடித்தவுடன் வெள்ளையடிக்க தயார் நிலையில் சுண்ணாம்புப்பால் வாளிகளில் காத்திருந்தது. மறு நாள் அன்னதானத்திற்கான சமையல் வேலைகள் துரித கதியில் நடந்தேறிக் கொண்டிருந்தது. உரலிடிக்கிற, மாவாட்டுகிற, காய் நறுக்குகிற வேலைகளுக்கு ஊடாக எடுப்பான பெண்களின் பின்னால் மைனர்கள் அலைந்தார்கள். ”அப்பச்சி ஆத்தாகிட்டா சொல்லிருவேன்” என்று சொல்லி சாராய நெடியின் வாசத்தை எட்டிப் போகச் செய்தார்கள்.

தர்மகர்த்தா வந்து ஒரு நாற்காலி ஏற்பாடு செய்து அவனை உட்காரச் சொல்லிவிட்டு ”இருங்க இன்னுஞ் செத்த நேரத்தில் பூஜை ஆரம்பிச்சுரும்” என்று சொல்லி விட்டுப்போனார். நேரம் மந்தமாக நகர்ந்துகொண்டிருந்தது. ரூமுக்கு போய்விட்டு வரலாமா என்று யோசனை பண்ணினான். அதற்குள் நாகராஜ் வந்துவிட்டான். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, வழக்கம்போல பெண்கள் பற்றிய பேச்சை ஆரம்பித்தான். திருவிழாக்காலங்களுக்கென ஒரு குதூகலம் இயல்பிலே அமைந்துபோகும். எல்லா வயதினருக்குமான எல்லாம் அங்கே நிறைந்திருக்கும். பூ மஞ்சள் வாசனைப்பவுடர் எல்லாம் கலந்தொரு வாசம் மிதந்துகிடக்கும். அது மிக மிக அலாதியானது. மசாலை இடிக்கிற கீழ்குடியிருப்புப் பெண்ணைக் காண்பித்து அவன் சொன்னவைகள் இரவு ஒன்பது மணிக்காட்சிக்கு காண்பிக்கிற மளையாளப் படங்களுக்கு இணையானது.

ஒலிபெருக்கியில் சிவனுக்கிசைந்தது பாடல் நிறுத்தப்பட்டு உய்ய்ங்க் என்ற சத்தம் சரிசெய்யப்பட்டது, ”ஹலோ, ஹலோ, மைக் டெஸ்டிங் ஒன் டூ த்ரீ உங்கள் மத்தியில் ஒலிபெருக்கிக்கொண்டிருப்பது” என்று கடகடத்தமிழில் விளம்பரம் நடந்தது. அப்புறம் வேற்றுக் குரலில் ”சிறப்பு பூஜை ஆரம்பிக்க இருப்பதால் மேளக்காரர்கள், சமையல்காரர்கள், சுத்தக்குறைவானவர்கள், தீட்டுப்பட்டவர்கள், கீழ்சாதிக்காரர்கள் எல்லோரும் கோவில் வளாகத்தை விட்டு வெளியேறும்படிக்கு கும்பாபிசேக கமிட்டியார் கேட்டுக் கொள்கிறார்கள்” என்று பிரகடனப்படுத்தப்பட்டது. திரும்பவும் பக்திப்பாடல் ஒரு நிமிட இரண்டு நிமிட இடைவெளியில் அறிவிப்புமாக தொடர்ந்தது. எல்லோரும் போய்விட்டார்கள். பூஜைக்கான பொருட்கள் அடுக்கப்பட்டுத் தயாராயிருந்தது. மீண்டும் அறிவிப்பு ஒலித்தது. பீடத்தைச் சுற்றிப்பெருக்கிக் கொண்டிருந்த ஆளை, ”நீ இன்னுமா போகல” என்று உரிமையோடு விரட்டினார்கள். நாகராஜ் இவன் முகத்தை உற்றுப் பார்த்தான். அதற்கு எதோ அர்த்தம் இருப்பது போலிருந்தது.

ஊதுவத்தி, சாம்பிராணி, சந்தன வாசனைகள் மங்கிப்போய் புழுங்கல் நாற்றமடித்தது. இவனது உருவம் கரைந்து கொண்டிருந்தது. நாகராஜ் இவனது கையைப் பற்றியிருந்தபோதும் அத்துவானக் காட்டிலிருப்பது போலிருந்தது. கொஞ்சம், உயரத்தில் ஏறிப்பார்த்தால், இருநூற்றி ஐம்பது கிலோமீட்டருக்கு ஆளரவமே இல்லாதது போலிருந்தது. கோயில் வளாகத்தை விட்டு வெளியேறினான்.

தூரத்தில் கோயிலின் வெளிச்சம் தெரிந்ததும் அவன் திரும்பிப் பார்க்கவில்லை. ஒலிபெருக்கி வழியே மந்திரச்சத்தம் கிணற்றுக்குள்ளிருந்து வருவதுபோலச் சன்னமாகிக் கொண்டிருந்தது. அவனுக்குச் சற்று முன்னால், மேளக்காரர்கள், சித்தாள், சமையலுக்கு ஒத்தாசை பண்ணியவர்கள், பெரும் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். சிரிப்பும், சத்தமுமாக ஏதேதோ பேசிக்கொண்டு கோயிலினின்றும் ஒதுக்குப்புறமாகப் போய்க்கொண்டிருந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *