மங்கிடும் யாவும் மரித்துவிடுவதில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 13, 2014
பார்வையிட்டோர்: 9,016 
 
 

என்னப்பா அப்துல்லா இன்னைக்கு செய்தித்தாள பார்த்தயா? படிச்சயா?
அதுக்குத்தானே இந்தப் பக்கம் ஒதுங்கறது ஆனந்த். சரி சரி நீ ஒரு டீ போடுப்பா. ஆமா அப்படி என்னப்பா சுவாரஸ்யமா இருக்கு இன்னைக்கு?

அட எப்போதும் போல உங்க ஆளுக சமாச்சாரம்தானப்பா.

உம்ம்ம் அதுவா, என்னத்த செய்ய? ஏன் இப்படி செய்றாங்கனுதான் தெரிய மாட்டேங்குது ஆனந்த்.

எனக்கு ஒரு டீ போடுப்பா ஆனந்த்.

அட வாங்க அந்தோனி, இதோ போட்டுடா போச்சு.

என்ன அப்துல்லா பாய், பேப்பர்ல அப்படி என்ன பரபரப்பு.

‘மீண்டும் குண்டு வெடிப்பு, இசுலாமிய தீவிரவாதிகளின் சதி’ இதுதான் அந்தோனி பரபரப்பு செய்தி.

அதுக்கு ஏன் நீங்க ஒரு சோகமா முகம் வச்சுருக்கீங்க.

அப்பறம் என்னத்த செய்றது அந்தோனி, செய்றது எங்க ஆளுக இல்ல.
அப்படி போடு, நீங்களே போதும் போலவே.

ஏன் அந்தோனி இப்புடி சொல்றீங்க.

உம்ம்ம், ஏய் ஆனந்த் செய்திப் பேப்பர்ல வருகிற செய்தி எல்லாமே உண்மை ஆயிடாதுப்பா.

எப்படி இவ்ளோ உறுதியா சொல்றீங்க?

அஸ்ஸலாமு அலைக்கும் ஆலிம்ஷா உள்ள வாங்க, ஏன்பா ஆனந்த் இன்னொரு டீ போடுப்பா.

யாருக்கு அப்துல்லா?

நம்ம ஆலீம்ஷா வந்திருக்காருப்பா, அவருக்குத்தான்.

இதோ போட்டறேன்பா. என்ன அந்தோனி நீங்க சொல்லுங்க.

என்னப்பா கதையா சொல்லிட்டு இருக்கேன் நான் உனக்கு. சரி கேளு; ஆமா குண்டு வெடிச்சது எப்போனு வந்திருக்கு ஆனந்த்?

நேற்று மதியம் இரண்டு மணி இருக்கும்னு போட்டிருக்காங்க.

இதை செய்தது முஸ்லீம்கள்தானு, போலீஸ் எப்போ சொன்னாங்க?

உம்ம்ம் குண்டு வெடித்து சில மணி நேரங்களில்னு பேப்பர்ல போட்டிருக்காங்க அந்தோனி.

ஆக குண்டு வெடித்து சில மணி நேரங்களுல, நம்ம போலீஸ் குற்றவாளிகள கண்டுபிடிக்கறாங்கனா, அப்போவே தெரிய வேணாமா, இது உண்மையா இல்லையானு? ஏன் இப்படி சொல்றேனா, திருட்டு வழக்குல, கைரேகை, நேரில் பார்த்த சாட்சினு இருந்தும் கூட நம்ம போலீஸ் குற்றவாளிய கண்டுபிடிக்க குறைந்தது நாலு, ஐந்து மாதம் ஆகிடுது. அப்படி இருக்கறப்போ குண்டு வைச்சவங்கள சில மணி நேரங்கள் ஆனதும் கண்டுபிடிச்சு, சில சமயம் கைது கூட செய்திடறாங்கனா, எப்படிப்பா நம்பறது. அதுவும் குண்டு வெடிச்ச உடனே அது இசுலாமியர்கள் செய்ததுனு சொல்லிடறாங்களே. இதை அப்படியே பத்திரிக்கைல எழுதிடறாங்க. இதையெல்லாம் யோசிக்காம நாமும் அப்படியே நம்பிடறோம்ல.

சரியா சொன்னீங்க அந்தோனி.

ஏதோ எனக்குத் தெரிந்த,உள்ளத சொன்னேன் ஆலீம் பாய்.

சந்தோஷம் அந்தோனி. இதை நீங்க சொல்லி புரிய வைக்கறீங்க. ஆனா பாருங்க அப்துல்லா ஒரு முஸ்லீம்தான் அவரே நம்பிடறாரு.

அப்படி இல்லை ஆலீம்ஷா, எல்லோரும் முஸ்லீம், முஸ்லீம்னு சொல்றத கேட்க்கறப்போ, மேற்க்கொண்டு எதையுமே பேச முடியறது இல்லையே.
அப்துல்லா, ஆனந்த், ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கோங்க, ;ஒரு உயிரை அநியாயமாக எவர் கொலை செய்கின்றாரோ, அவர் இந்த உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களையும் கொன்றவராவார்’ அப்படினு எங்க குரான் எங்களுக்கு படிச்சு கொடுத்திருக்கு. ஒருவருக்கு அநியாயம் செய்றவன் முஸ்லீம் இல்லைனு அல்லாஹ் எங்களுக்கு கூறியிருக்கறான். இப்படி இருக்கறப்போ, பல உயிர்களை கொலை செய்றவன் எப்படி முஸ்லீமாக முடியும்? அரபியில் பெயர் வைத்திருந்தா மட்டும், ஒருத்தர் முஸ்லீம் ஆகிவிட முடியாது.

அப்பறம் இன்னொனு ரொம்ப முக்கியமா சொல்றேன் கேளுங்க, தீவிரவாதம் என்பதை எந்த மதமும் ஆதரிக்காது. அதனால அதை ஒரு மதத்திற்க்கான உடைமையா சொல்லாதிங்க. அது மனித இனத்திற்க்கு எதிரான செயல். அது ஒரு தனி இனம். அங்கே மதம் என்பது கிடையாது.
சரி, சரி விடுங்க ஆலிம் டீயை குடிக்கீங்க.

ஆனந்தண்ணே, நம்க்கொரு லைட் டீ.

உம் சரி தமிழ் வேந்தரே.

என்னமோ கார சாரமா பேச்சு ஓடிட்டு இருந்துச்சு போல அந்தோனி?
எல்லாம் பேப்பர் செய்திதானப்பா.

ஓஹ், அதுவா!

தமிழ், நீங்க சொல்லுங்க கோவை குண்டு வெடிப்புல இருந்து நேற்று நடந்தது வரைக்கும், முஸ்லீம்கள்தான் செய்தாங்கனு கைது செய்றாங்களே, இது உண்மையா?

ஏனப்பா ஆனந்த், இவ்ளோ நேரம் நாங்க சொல்லிட்டு இருந்ந்தோமே, அதெல்லாம் என்ன கதையா?

கோச்சுகிடாதிங்க ஆலீம், நாமெல்லாம் மதத்தை நம்பறவங்க, ஆனா தமிழ் ஒரு நாத்திகறாச்சே அதான் அவருகிட்டயும் ஒரு கருத்தைக் கேட்கறேன்.

ஆனந்தண்ணே, நீங்க கேட்கறதுல தப்பு இல்லை. நான் என்ன சொல்றேனா, நெருப்பு இல்லாம புகையாது. கோவைல நடந்ததுனா, அதுக்கு முன்னாடி அங்க ஒரு குண்டு வெடிச்சது. அதை யாரு வச்சாங்கனு யோசிக்க வேண்டியிருக்குல. அதோட எதிரொலிப்பாதான் நமக்கெல்லாம் தெரிந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இப்போக் கூட நடந்த உடனே இசுலாமிய தோழர்கள்தானு உறுதியா சொல்லிட்றாங்கனா, அப்போவே தெரியுது உண்மைல யாரு செய்திருப்பாங்கனு. பெரியார் யாரை இந்த மண்ணை விட்டு ஒழிக்கனும்னு சொன்னாரோ, அவங்கள ஒழிச்சப் பின்னாடி பாருங்க, இந்த குண்டு வெடிப்பெல்லாம் இருக்காது.
தமிழ் வேந்தன் நீங்க புதுசா பழியை, ஒருபக்கம் போட்றீங்க.
அண்ணே, அதான் உண்மை. மெல்ல புரியும் பாருங்க.

ஸலாம் ஆலிம் ஷாப்.

வா அலைக்கும் சலாம் பேராசியர். என்ன சமாச்சாரம், ஒரு சோர்வா உட்காந்திருக்கீங்க?

இல்ல ஆலீம்ஷா, நானும் இந்த ஒரு மாசமா வீடு தேடி அலையறேன், கிடைக்க மாட்டேங்குது.

என்ன சொல்றீங்க ஏதும் புரோக்கர்கள வச்சு முயற்சி செய்துபாருங்க ஸார்.
உம் அதெல்லாம் முயற்சி செஞ்சு பார்த்துட்டேன். புரோக்கர்க இல்லாமயே காலி வீடுக இருக்கு. ஆனா எங்க, இந்த நகரத்தில, எங்க போனாலும் பெயர கேட்கறாங்க, மேலேயும் கீழேயும் பார்க்கறாங்க, அப்பறம் யோசிச்சு சொல்றேனு சொல்லிடறாங்க, அதோட அவ்ளோதான்.

நீங்க சொல்றதென்னமோ வாஸ்துவம்தான் பேராசிரியர். இன்னைக்கு சூழ்நிலைல முஸ்லீம்களுக்கு யாரு வீடு கொடுக்கறாங்க.

ஆமா ஆலிம்ஷா. ஒரு அரசு கல்லூரில வேலை செய்ற பேராசிரியர் எனக்கே இந்த நிலைமைனா, ஒரு சாதரண முஸ்லீம்க என்னென்ன அலைச்சலுக்கு உட்படுவாங்க உம்ம்ம்ம்ம்.

சரிதான் பேராசிரியர், சரிதான்.

இதுமட்டுமில்லைங்க, நம்ம சமூகத்துல உயர்கல்வி படிக்கறவங்க ரொம்ப குறைவு. அப்படி படிக்கற கொஞ்ச பேருக்கும் கூட, வேலை கிடைக்கறது இல்லை. அரசு வேலைக்கு போகறதுக்கு போதிய இட ஒதுக்கீடு இல்லை. சரினு தனியார் கம்பெனிக்கு போறதுல பகுதி பேருக்கும் குறைவாத்தான் கிடைக்குது. முஸ்லீம்னு தெரிஞ்சாலே, அனுப்பி விட்டறாங்க. இதைவிட கொடுமை, படிக்கறதுக்குனு கடன் கேட்டு வங்கிப் படி ஏறி ஏறி அலைஞ்சாலும், கடன் கிடைக்கறது இல்லை, காரணம் முஸ்லீம். சரி எப்படியோ கடன் வாங்கி பொறியியல் படிச்சு வெளில வருகிறவங்களுக்கு, வேலை கிடைக்கறது, தொடுவானம் கதையா இருக்கு.

ம்ஹீம்ம், நீங்க சொல்றதெல்லாம் சரிதான் பேராசிரியர். முஸ்லீம்னு பேரைக் கேட்டப் பின்னாடியும் எப்படி கடன் தருவாங்க, வேலை தருவாங்க? அவங்க மேஜை மேலே இருக்கற செய்திப் பேப்பர் செய்தி அப்படிங்க.

இதெல்லாம் என்னைக்குத்தான் மாறுமோ ஆலிம்ஷா?

இன்ஷா அல்லாஹ், துவா செய்யுங்க பேராசிரியர், நீதி இறந்துவிடாது.

***************************************

என்னங்க அந்த தாடியைத்தான் கொஞ்சம் எடுக்கலாம்ல!?

ஏன், இப்போ அதுக்கென்ன வந்துச்சு?

ஆமா, என்னத்த சொல்ல, தண்ணி புடிக்கப் போற இடத்துல எல்லோரும் கேட்க்கறாங்க. ஏன் உங்க வீட்டுக்காரு இவ்ளோ பெரிய தாடி வச்சுருக்காரு? இப்போ குண்டு வைக்கற தீவிராவாதிக மாதிரியே இருக்கறாருப்புல. எதுக்கும் ஒரு சந்தேகமாவே இருக்குனு.
அட அல்லாஹ்வே, இப்படியுமா சோதனை.

ஏய்.. இந்த ஏரியாலதான் நான் பத்து வருசமா மளிகைக் கடை வச்சு பிழைப்பு நடத்திக்கிட்டு இருக்கேன். என்னைப் பத்தி இவங்களுக்குத் தெரியாதா?

அவங்களுக்கு தெரியுதோ இல்லையோ, அவங்க சொல்றத கேட்க்கறப்போ எனக்கே கொஞ்சம் பயமா இருக்குங்க.

அடி போடி, பைத்தியகாரி. காலனா சம்பாதிக்கறதுக்கே இங்க நேரம் போதல, அதுபோக இது நம்ம இசுலாமிய அங்கம்டி, யார் யாரோ சொல்றாங்கனு போட்டு, நம்மை அடையாளத்தை அழிச்சுக்கச் சொல்றயா? யார் தப்பு செய்றவங்கனு எல்லோருக்கும் ஒரு நாள் தெரியத்தான் போகுது.

என்னமோங்க, நமக்குத் தெரியுது செய்றது நாம இல்லைனு. ஆனா இந்த ஊர் சனங்களுக்கு எப்படி புரியப் போகுது.!
*************************************

வணக்கம் தோழர் தமிழ்!

உம்ம்ம் வணக்கம் தோழர் கோபாலன். ஆமா நேற்று இரவு உங்களை வெளில கூப்பிட்டதுக்கு ஏன் அவ்வளவு உறுதியா, வர முடியாதுனு மறுத்துட்டீங்க?

அட என்ன தோழர் நாடு இருக்கின்ற நிலைமையில், இரவெல்லாம் எப்படி வெளியில் வரச் சொல்றீங்க. என் மனைவி ஒரேயடியா வேணாம்னு சொல்லிடறாங்க.

ஏன் அப்படி என்ன நடந்திருச்சு தோழர்?

ஆமா, எங்க பார்த்தாலும் குண்டு வெடிப்பு, கொலை. நேற்று கூட பாருங்க டெல்லியில ஒரு போலீஸ் உயர் அதிகாரியை கொலை செஞ்சிருக்காங்க. இதெல்லாம் படிக்கறப்போ. ஒரு படபடப்பு தோழர். போலீசுகளுக்கே இந்த நிலைமை, அப்பறம் நமக்கெல்லாம் என்ன கதி சொல்லுங்க?

அதென்னமோ சரிதான் கோபலன். என்ன பண்றது, உங்களை மாதிரி ஆளுக இன்னும் மநுதர்மத்தை நம்பிக்கிட்டு இருக்கற வரைக்கும், இதெல்லாம் அனுபவிச்சுத்தான் ஆகனும்.

தமிழ், அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

ஆமா, குண்டு வெடிப்பு, கொலை இதையெல்லாம் செய்யறது யாரோ, அவங்களையே நீங்க தலைல தூக்கி வச்சுக்கிட்டு ஆடறீங்க. உங்களை பிறப்பால ஒதுக்கி வைக்கறவங்களை, நீங்க எஜமானர்களா பார்க்கறீங்க. இதையெல்லாம் மதத்தின் பெயரால் செய்றாங்க அவங்க. நீங்களெல்லாம் இப்படி அறிவற்றவர்களா இருக்கின்ற வரைக்கும்தான் அவங்க வயிறு வளர்க்க முடியும்.

ஆமா போங்க தமிழ், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லைங்கறதுக்காக, தொட்ட தொன்னூறுக்கு அவங்க மேல குறை சொல்லிடுவீங்க.

ஆமா தோழர், அதுதான் உண்மை. நீங்களெல்லாம் மதநல்லிணக்கதோட வாழ்ந்திடக் கூடாது, அப்படி வாழ்ந்தீங்கண்ணா, அவங்களுக்கு ஆபத்து. அதனாலதான் செய்யறதெல்லாம் செய்திட்டு, பழியை முஸ்லீம்கள் மேலே போட்டு, அவங்களை எதிரிகளா காட்டிடு இருக்காங்க தோழர்.
அடடா, வாங்க தோழர் உங்க விஷமத் தனத்துக்கு வந்திட்டீங்களே. அதான் தினம் தினம் பேப்பர்ல, செய்தில வருதே, இசுலாமிய தீவிரவாதிகள்னு அப்போக் கூட உங்களுக்கு நம்பிக்கை வர மாட்டேங்குதா தமிழ்?

அதெல்லாமே பொய் தோழர்.

இதைத்தான நீங்க எப்போ பார்த்தாலும் சொல்றீங்க.

சரி உங்க கிட்ட ஒரு கேள்வி தோழர்.

கேளுங்க..!

நீங்க சொன்னீங்களே ஒரு போலீஸ் உயர் அதிகாரிய கொலை பண்ணிட்டாங்கனு, அவரை ஏன் கொலை பண்ணிருப்பாங்கனு நினைக்கறீங்க?

அது அவ்வளவு உறுதியா எனக்கு தெரியலையே தமிழ்.
உம்ம் சொல்றேன் கேளுங்க. இதே போலீஸ் அதிகாரி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னாடி, நம்ம நாட்டில் நடந்த முக்கிய குண்டு வெடிப்புகளுக்கு காரணம் இசுலாமியர்கள் இல்லை, மாறாக இந்து தீவிரவாதிகள்னு ஒரு உண்மையை சொன்னாரு, அடுத்த கொஞ்ச நாளுலயே கொலை செய்யப்பட்டிருக்கார்.

ஆக, உங்க நோக்கம் இந்துக்கள் மேல பலி போடுறது, அப்படித்தானே தோழர்.

ஒட்டுமொத்தமா இந்துக்கள் மேல இல்லை தோழர், மாறாக இந்து தீவிரவாதிகள்னு சொல்றேன்.

அதென்ன உங்களுக்கு, இந்துக்கள் மேலே இவ்வளவு கோபம், இசுலாமியர்களுக்கு இப்படி வக்காளத்து வாங்கறீங்க. உம்ம்ம் அதுசரி பெரியாரிய கொள்கை உடையவர்தான நீங்க.

அப்படி இல்லை தோழர். இத்தனை நாளா பாருங்க, எத்தனை முஸ்லீம்கள் தீவிரவாதிகள்னு கைது செய்யப்பட்டாங்க. அப்போவெல்லாம் இந்த மாதிரி போலீஸ் அதிகாரிக கொலை செய்யப்பட்டிருக்காங்களா? இல்லையே. இப்போ இந்துக்களிலுள்ள மதவெறி பிடித்த தீவிரவாதிகள்தான் இதை செய்திருக்காங்கனு சொன்னதும், அந்த அதிகாரி கொலை செய்யப்பட்டிருக்கறாரு.

உங்களுக்கு எப்படியோ, ஒரு காரணம் கிடைச்சுக்குது தோழர். போதும் விடுங்க இதுக்குமேல ஏன் வீணா பேசிக்கிட்டு.

வீணா பேசலை தோழர், விசயத்தை ஆதாரத்தோட பேசறேன்.

ஐயா, தமிழ் வேந்தனே என்ன விடுங்க, வேலையை கவனிப்போம்.
உம்ம்ம், அலுவலகம் வந்தா, உங்களுக்கு ஒரு பாடம் எடுக்காம வேலையை தொடங்க முடிய மாட்டேங்குது கோபாலன்.

******************

என்ன பேராசிரியர், பணி முடிந்ததா?

அதற்க்கென்ன நல்லபடியா முடிஞ்சது ஆல்பர்ட்.

அப்பறம் ஒரு சின்ன வருத்தம் பேராசியர்.

ஏன், என்ன வருத்தம்?

ஆமா, இத்தனை நாள் உங்களை நான் ரொம்ப தவறுதலா பேசிருக்கேன். உங்க இசுலாம் மதத்தை தவறா பேசிருக்கேன், அதான்.

அட இதென்ன புதுசா இருக்கு ஆல்பர்ட். நான் தப்பாவெல்லாம் எடுத்துக்கவில்லையே. நீங்க தவறுதலா சந்தேகமா கேட்ப்பீங்க. நான் மறுப்பா பேசுவேன். என்னைக்கு இருந்தாலும் புரிஞ்சுக்க போறீங்கனு மனசுக்குள்ள நினைச்சுக்குவேன்.

ஆமா, பேராசிரியர் அதென்னமோ சரியாத்தான் போயிடுச்சு. எங்க அலுவலகம் முழுக்க இதே பேச்சுதான்.

உங்க அலுவலக நண்பர்கள் பலரும் உங்களை மாதிரியே இல்லையே பேசுவாங்க, அவங்களும் கூடவா?

ஆமா பேராசிரியர். அதான் அடுத்து அடுத்து, வெளிவருதே, இந்தியாவில் தொடரும் குண்டுவெடிப்புகளுக்கு, காவி பயங்கரவாதிகள்தான் காரணம், குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகள் ஒப்புதல் வாக்கு மூலம்னு. இன்னைக்கு அதுக்கு ஏதுவா, இந்திய உளவுத் துறையும், நடந்த குண்டு வெடிப்புகள் பலவும் இசுலாமியர்கள் செய்யவில்லைனு அறிக்கை வெளியிட்டிருக்காங்களே.

ம்ம்ஹீம், சரி எது எப்படியோ ஆல்பர்ட், குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டா போதும்.

**********************************************

ஏனப்பா ஆனந்த், இன்னைக்கு வந்த செய்திய படிச்சயா? ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடியே நான் சொன்னேன நம்பனையாப்பா?
படிச்சேன் அந்தோனி சாமி. ஆனாலும் இப்பவும் ஒரு சந்தேகம்.
கேளுப்பா, உனக்கு எப்படியாச்சும் பொழுது போகனும் இல்லை, கேளு.
அட அப்படிலாம் கிடையாது. அதாவது, அன்னைக்கு முஸ்லீம்கள் பத்தி செய்தி வந்தப்போ, நீங்க என்ன சொன்னீங்க, பேப்பர்ல வரதெல்லாம் உண்மையாயிடுமானு கேட்டீங்களே. அதேமாதிரி ஏன் இதுவும் இருக்காது?

அட…. ஆனந்து….

அந்தோனி நீங்க பொறுங்க இதுக்கு நான் விளக்கம் கொடுக்கறேன்.
இல்லை ஆலீம், நீங்க சொல்றதைவிடவும், நான் சொல்றதுதான் சரியா இருக்கும்.

அப்துல்லா, டீ போட்றதாப்பா?

வந்து வராததும், கேட்ருவியே, கொஞ்ச நேரம் ஆகட்டும்பா.
அந்தோனி சாமி, அதான் ஆலிம் சொல்றேங்கறாருல விடுங்க.
ஏன் ஆனந்து, அவர் எல்லாம் சொல்லி முடிச்சப் பின்னாடி, என்ன இருந்தாலும் நீங்க முஸ்லீம், உங்களுக்கு சாதகமாத்தான் பேசுவீங்கனு சொல்லி ஒரு கொக்கி போடுவ ம்ம்ம்ம்ம்?

அட, அப்படிலாம் இல்லை அந்தோனி, தினம் வர செய்திகளை படிக்கறப்போ என்னால நம்பாமா இருக்க முடியலைப்பா. இதெல்லாம் முஸ்லீம்கள் செய்றாங்கனு நினைச்சுக்கிட்டு இருந்தேன், இப்போ இதெல்லாமே எங்க ஆளுகனு நினைக்கறப்போ மனசு கசப்பா இருக்குப்பா. அதேசமயம் இதெல்லாம் அவ்வளவு உண்மையா இருக்கும்னு நம்பறதுக்கும் மனசு ஒரு ஓரமா உதைக்குதுல.

அட ஆனந்து, தீவிரவாதம் செய்றவங்க தீவிரவாதிக. அதுல நம்ப ஆளுக, உங்க ஆளுகனு எதும் இல்லையப்பா. அதுல மதத்தை இழுக்கக் கூடாது அதை முதலில் தெரிஞ்சுக்கோப்பா.

ஆமா, ஆலீம் நீங்க சொல்றதும் சரிதான். சரி அந்தோனி நீங்களே கொஞ்சம் விவரமா விசயத்தை சொல்லுங்களேன்.

நல்லா கேளுப்பா ஆனந்த், அப்போ நான் பேப்பர்ல வரதெல்லாம் உண்மையாயிடுமானு கேட்டதென்னமோ உண்மைதான். அதே மாதிரி இப்போ அதே பேப்பர் செய்தி உண்மைதானு சொல்றேன்.
எப்படினா?

அன்னைக்கு முஸ்லீம்கள் தீவிரவாதிகள்னு, உடனுக்கு உடன் போட்டாங்க, ஆனா இது அப்படி இல்லையே இத்தனை மாசம் கழிச்சு விசாரனைக்கு அப்புறம்ல சொல்லிருக்காங்க. இன்னொரு சமாச்சாரம் என்னனா, அன்னைக்கு முஸ்லீம்களை தீவிரவாதிகள்னு சொன்ன பத்திரிக்கையும், காவல் துறையும், உளவுத் துறையும்தான் இன்னைக்கு, உண்மையிலயே செய்தது காவி தீவிரவாதிகள்தானு சொல்றாங்க. நீ கேட்க்கற மாதிரி இந்த அதிகாரிகளெல்லாம், இந்துக்கள் இல்லாம முஸ்லீம்களா இருந்தா இதை எதிர்ப்புணர்வு, பொய் அப்படினு சொல்லலாம். ஆனா முக்கிய பதவிகளுலயும், ஆட்சியிலையும் இருக்கறவங்க யாரு இந்துக்கள்தானே, முக்கிய பத்திரிக்கைகளெல்லாம் நடத்தறவங்க யாரு இந்துக்கள்தானே சொல்லுப்பா?

அட ஆமா அந்தோனி சாமி, அதென்னமோ யோசிக்கத்தான் வேணும்.
இதுமட்டும் இல்லை ஆனந்த், காவி தீவிரவாதிகள்தான் குண்டு வைச்சாங்கனு தைரியமா அறிக்கை கொடுத்த, காவல் அதிகாரி உடனடியா கொலை செய்யப்படுறாரு. அப்பறம் முஸ்லீம் தீவிரவாதிகள்னு கொட்டை எழுத்துல முதல் பக்கத்துல போட்ற பத்திரிக்கைகளெல்லாம், இப்போ பாரு அடுத்து அடுத்து நடக்கறதுக்கெல்லாம் முஸ்லீம்கள் காரணம் இல்லைங்கற செய்திய ஒரு ஓரமா, அதுவும் ஒரு நாளுக்கு மேல போட்றது இல்லையே.
இதுவும் சரியாகத்தான் இருக்கு ஆலீம்ஷா. அப்துல்லா பாய் அந்தா ஐயர் போறாப்புல அவரை கொஞ்சம் கூப்பிட்டுவிடுங்களேன்.
சாமி…சாமி…. நம்ம ஆனந்த் கூப்பிடறாப்புல.

என்ன விசயம் ஓய்?

அது ஒன்னும் இல்லை சாமி, நாளைக்கு விசேசத்துக்கு மறந்துடாதீங்க அதை சொல்லத்தான் கூப்பிட்டேன். கையை தொடச்சுட்டு வரதுக்குள்ள போயிடப் போறீங்கனுதான், அப்துல்லாவை கூப்பிடச் சொன்னேன்.
அதெல்லாம் ஷார்ப்பா வந்துட்றேன்.

என்ன ஐயரே, தொடர்ந்து வெடிக்கறதெல்லாம் உங்க பக்கம்னு செய்தி வருது.

அந்தோனி, தப்பு செய்றவா ரொம்ப நாளைக்கு மறைய முடியாது. காலம் காட்டிக் கொடுத்திருச்சு. அப்பறம் மனிசாளுக்கு நஷ்டம் பண்றவா தண்டனை அனுபவிச்சுத்தான் ஆகனும். என்ன சொல்றேள் அஜ்ரத்.
சரியாத்தான் சொல்றீங்க சாமி.

சரி சரி நான் வரேன், நாளி ஆயிடுச்சு.

***************************************

என்னக்கா, தண்ணி இன்னுமா வரலை.

ஆமா பரிதா.

மீனாட்சியக்கா விசயம் கேள்விப்பட்டீங்களா?

என்ன விசயம்னு தெளிவா சொல்லு காமாட்சி.

அதாங்கா நேத்து டீவில காட்னாங்களே, எங்கயோ குண்டு வெடிச்சிருச்சுனு அதைத்தான் சொன்னேன்.

அட நீ ஏன்டி, காலு கடக்க நிக்கற கடுப்புல இருக்கறேன் இதுல நீ வேற….!

அட என்னக்கா இப்படி சொல்லிட்ட?

அப்பறம் என்னடி, வழக்கம் போல யாரு வைப்பாங்கானு தெரியாதா உனக்கு, புதுசா நடக்கற மாதிரி வந்திட்டா.!

ஆமாக்கா, முதல்வன் படத்துல வர மாதிரி இருக்குல இப்போ நம்மை நாட்டோட நிலைமை. இருந்தாலும் ஏன்தான் நம்ம ஆளுக இப்படிலாம் செய்யறாங்களோ… ஹ்ஹ்ஹா…!

காமாட்சி ஏன் இவ்வளவு சடைஞ்சுக்கற?

பின்ன என்ன செய்யறது எங்க ஆளுக இல்லை.

அப்படிலாம் சொல்லாத, தப்பு செய்யறவங்க, மனுஷங்களே கிடையாது. தப்பு செய்ய சொல்லி எந்த மதமும் சொல்லலை. அதனால, தீவிரவாதம் செய்றவங்களை ஏன் நீ உங்க ஆளுகனு சொல்ற. அவங்களெல்லாம் மதம், மனிதம் அப்படிங்கற இனத்துக்குள்ள சேராதவங்க.
ஆமா, ஆமா சரிதான் பரிதா!
************************
மங்கிடும் யாவும் மரிப்பதில்லை
நீதி நிலையாய் உறங்கிவிடாது!
மனிதத்திற்கு எதிரானோர் யாரும்
மதத்திற்கு அப்பாற்ப்பட்டவர்களே!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *