மக்களின் தேசம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 10,137 
 
 

அலுவலகம் விட்டு வரும்போதுதான், அந்தக் காட்சிகளைப் பார்த்தேன்.
நெஞ்சம் கனத்தது.

மரங்கள் அடர்ந்த தெரு அது. ஒரு தெரு அல்ல… வரிசையாக நான்கைந்து தெருக்கள். அரசு, நெட்டி, கொன்றை என்று, வலுவான அடர் மரங்கள் நிறைந்த அந்தப் பகுதியில் நடந்து வருவது, மாலை வேளைகளில் எனக்கு மகத்தான அனுபவம். பறவைகளின் உற்சாகக் கூவல்களும், கூடு வந்தடையும் தாய்ப் பறவைகளும், காற்றின் தாளத்திற்கு நாட்டிய மாடும் கிளைகளும் இலைகளுமாக, ஒரு புது உலகத்திற்கு வந்ததைப் போலிருக்கும்.

மக்களின் தேசம்

அதிலும், அந்த கடைசித் தெரு இன்னும் சிறப்பானது. அடர்ந்த, கரும்பச்சையான பூவரச மரங்களின் ஊடாக, ஏழை மக்களின் குடிசை களும், அவற்றை ஒட்டி ஓடும் கிளியாறும், அந்தக் குழந்தைகளின் விளையாட்டு குதூகலங் களுமாக, மனது, கடின உழைப்பிற்குப் பிறகான நல்லதொரு இதமான மனநிலையைக் கொடுக் கும்.

இன்று, அவை எல்லாமே பாழாகிக் கொண்டிருந்தன!

மரங்கள் வெட்டப்பட்டு, சாலையின் குறுக்கே கிடந்தன. அவற்றிலிருந்து வெளிப் பட்ட பச்சை வாசனை, ஏதோ மாமிச மார்க்கெட்டுக்குள் நுழைந்ததைப் போலி ருந்தது. இலைகளும், கிளைகளும் மவுன மொழியில் ஓவென்று கதறியழுவதைக் கேட்க முடிந்தது. அடுத்த அதிர்ச்சியாக, குடிசைகள் புல்டோசரால் இடிக்கப்பட்டு, அலுமினிய பாத்திரங்கள், துணிகள், கெரசின் டின், அடுப்பு என்று, அந்தக் குடித்தனங்கள் அலறிக் கொண்டிருந்தன. நடு வீதிக்கு வந்திருந்தன.

“பறக்கும் ரயில் வரப்போகுதாம். இந்த வழியாத்தான், டபுள் ட்ராக் போகுதாம். கவர்மென்ட் உத்தரவு!’ என்று சொன்னார்கள்.

மானுடத்தின் விடிவிற்காக வந்த மரங்கள் வெட்டப்பட்டுக் கிடப்பதைப் பார்க்க சகிக்கவில்லை. தினக்கூலி நாற்பதோ, அறுபதோ பெற்று, அன்றாட உழைப்பாளியாக, வாழ்வின் விளிம்பு நிலையில் நிற்கும் மனிதர்களை, இன்னும் 30 கி.மீ., தள்ளி குடியமர்த்த நினைக்கும் அரசின் திட்டத்தை கேட்க சகிக்கவில்லை.

பாறையாக கனத்துப்போன நெஞ்சுடன் வீடு வந்து சேர்ந்தபோது, அப்பா கூடலூரிலிருந்து வந்திருந்தார்.

தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

லாப்டாப்பில், ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் பற்றி எதையோ ஆராய்ந்து கொண்டிருந்த தீபக்கிடம், காபியை நீட்டினேன்.

“”அப்பா போன் பண்ணினாரா?”

“”ஆமாம்மா… காம்ப் நாளைக்கு முடிஞ்சு, நாளை நைட் புறப்படறாராம்…”

“”சாப்பிட்டியாப்பா?”

“”யெஸ்மா… மாங்காய் பருப்பும், காரட் சாலட்டும் பிரமாதம்… தாத்தா வந்தாச்சு… பாத்தியா?” என்றான்.

“”பாத்தேன். முகம் சரியா இல்லே… பயணக் களைப்பா இருக்கும்… உனக்கு மெயில் வந்துதா? ஐ.ஐ.எம்., ஆமதாபாத் என்ன சொல்றான்?” என்று, டம்ளரை வாங்கிக் கொண்டேன்.

“”ஆமதாபாத், கோல்கட்டா, பெங்களூரு மூணுமே, மெயில் மேல மெயில் அனுப்பிட்டுதான் இருக்கும்மா… எனக்குதான் கொஞ்சம் குழப்பம்…”

“”குழப்பமா… ஏன்? என்ன குழப்பம்?” என்று அப்பா வந்தார்.

“”ஐ.ஐ.டி.,ல டாப் டென்ல இவன் ஒருத்தன்பா… இவன் கேட்கிற குரூப்புக்கு, லேப் பெசிலிட்டி, இந்த மூணுல எதுல நல்லா இருக்குன்னு பார்க்க வேண்டாமா? அதுசரி… டூர் எப்படி இருந்தது? சரியா சாப்பிடலையா? சித்தி எப்படி இருக்கா?” என்று அவர் கையிலும் காபியை வைத்தேன்.

“”தீபக்…” என்றார் அழுத்தமாக அவனைப் பார்த்து.

“”என்ன தாத்தா?”

“”இந்த தேசமே வேண்டாம்ப்பா… ஐ.ஐ.எம்., – எம்.ஐ.டி.,ன்னு போட்டு குழப்பிக்காதே… உன் மார்க்குக்கு, ஸ்டான் போர்டே கிடைக்கும்பா… லண்டன், அமெரிக்கான்னு போயிடு… இது நாசமாப் போன சிஸ்டம்… வேண்டாம்பா…” என்றார். சடாரென்று முகம் வெந்து, உதடுகள் துடித்தன.

“”நானும் அப்படித்தான் நினைக்கிறேன்…” என்றேன் கவலையுடன்.

“”என்னம்மா சொல்றே?” என்று அவன் குழப்பத்துடன் பார்த்தான்.

“”மொதல்ல தாத்தா சொல்லட்டும்…”

“”ஊட்டி…” என்றார்; கண நேரத்தில் கண்கள் கலங்கி விட்டன.

அவரையே பார்த்தேன்… தீபக் எழுந்து வந்தான்.

“”ஊட்டி, கூடலூர் எல்லைப் பகுதியில இருக்கிற வீட்டைப் பாக்கத்தான் போனேன். பூர்வீக வீடு; என் தாத்தா கட்டின வீடு. பாட்டி, கன்றும், மாடும் வெச்சு வளர்த்த வீடு. அப்பா அதை கோவில் மாதிரி பாதுகாத்தார். சர்ச் பக்கத்து ஏழைக் குழந்தைகளுக்கு, அந்த வீட்டுலதான் இலவசப் பாடம் எடுத்தார். அம்மா, ஏழைகளுக்காகவே பயிர் பண்ணி, சகாய விலைக்கு கொடுத்தாள். என் கைக்கு அந்த வீடு வந்தபோது, இலவச லைப்ரரியா மாத்தினேன்… தெரியுமில்லையா?” என்றார்.

“”தெரியாம என்ன தாத்தா?” என்று தீபக் அவர் கையைப் பற்றினான். “”ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை, மன நிறைவோட போய் அந்த வீட்டைப் பாத்துட்டு வருவீங்களே… பத்து புஸ்தகமாவது புதுசா கொண்டு போய் சேர்ப்பீங்களே…”

“”இனிமே எதுவும் இல்லடா தீபக்…” என்று, அவன் கைகளில் முகம் பற்றி அழுது விட்டார்.

“”ஆயிரம் அடி உயரத்துல இருந்து சரிந்த மண்ணும், பாறையும், வழியில் கிடைச்சதை எல்லாம் வழிச்சு எடுத்திருக்கு. நானூறு இடங்கள்ல நிலச்சரிவுகள். விடாமல் அடிச்ச பெருமழை மட்டுமா காரணம்? இல்லப்பா… மனிதன் செஞ்ச குற்றங்கள்… மழை, வெள்ளத்தை, எந்தத் தடையும் இல்லாம அதன் போக்குலயே விட்டிருந்தா பிரச்னை இல்லையே…

“” தண்ணி போகிற பாதை முழுக்க, எக்கச்சக்க வீடுகள், காட்டேஜ்கள், உணவு விடுதிகள், ஓட்டல்கள்ன்னு ஆக்கிரமிச்சிருக்கு. தடுப்புகள் இருக்கும்போது, தண்ணீர் எப்படி வழிந்து ஓடும்? தேங்கி மண்ணுக்குள் இறங்கும். மெல்ல சகதி ஆகிடும். மறுபடி, மறுபடி, தேங்கி, மண் அரிக்கப்பட்டு, பிடிமானம் இளகி நிலம் சரிஞ்சுது.

“”காளான்களாக, கல்குவாரி முளைசிருக்கு. போதாதற்கு, சட்டத்திற்கு புறம்பா மலைகளை வெட்டித் தள்ளுறது, நீலகிரி முழுக்க நடக்குது. நம்ம வீடு, பூமிக்குள்ள புதைஞ்சு போச்சு சியாமளா…” சிறுவனைப் போல விம்மல் தெறித்து அழுதார் அப்பா.

“”சரிப்பா… ப்ளீஸ்… அழாதீங்க… நீங்க சொன்னது போல, மனிதத் தன்மை இல்லாம, ஏன், ஜீவகாருண்யம் இல்லாம, குறைஞ்சபட்ச சுற்றுச்சூழல் உணர்வு கூட இல்லாத இயந்திர உலகத்துல வாழ றோம்பா… வேற என்ன வழி இருக்கு நமக்கு, இதுல இருந்து தப்பிச்சு போகி றதுக்கு?” என்று கரகரத்தேன்.

“”தீபக்குக்கு இருக்கே… அவன் தப்பிக் கலாமே… இந்த நாடும் வேண்டாம்; ஜனங்களும் வேண்டாம்டா தீபக். நீ அமெரிக்கா போ… உன் திறமையும், புத்திசாலித் தனமும், இந்த தேசத்துக்கு பயன்படக் கூடாது. நன்றி கெட்ட மிருகங்கள். தீபக்! நீ கிளம்புப்பா…” என்று அப்பா கர்ஜித்தார்.

ஊமை அழுகையாக மனது கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது. ரோஜாவை அரைத்து குல்கந்து செய்யும் உலகம் இது என்று விம்மிக் கொண்டிருந்தது.

“”என்னம்மா… நீயும் பாக்கலே, நானும் பாக்கலே… ஊட்டுல என் பொண்ணுதான் எண்ணிப் பாத்து சொல்லிச்சு… பாரு, ரெண்டு நோட்டு கூடுதலா கொடுத்திருக்கே…” என்று தேவானை வந்து நீட்டினாள்.
காலையில் அவளுக்கு, ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்திருந்தேன். எண்ணிக் கொடுக்கவில்லையா?

“”சார்… நடேசன் சார்…” என்று யாரோ அழைக்க, வாசலுக்கு சென்றாள்.
மெலிந்த உருவம். ஐம்பது வயது மதிக்கலாம் போன்றவர். முகத்தில் இவ்வளவு வலி ஏன் என்று தெரியவில்லை.

“”என் பேர் வரதன்… பெரியவர் இருக்காரா?” என்றார்.

“”உட்காருங்கள். இதோ கூப்பிடறேன்…” என்று, உள்ளே போய் அப்பாவிடம் சொன்னேன்.

“”வரதனா… யாரது? அந்த பெயர் நினைவில் இல்லையே?” என்றபடி அப்பா வந்தார்.

உட்கார்ந்திருந்தவரை ஒரு நிமிடம் பார்த்து, ஞாபகத்திற்கு கொண்டு வந்து விட்டார்.

“”வாங்க… வாங்க… பெண்ணுக்கு ஆபரேஷன் முடிஞ்சுதா? நல்லா இருக்காளா?” என்று புன்னகைத்தார்.

வந்தவர் முகத்தில் புன்னகை தோன்றவில்லை. தலை மெல்ல குனிந்து நிமிர்ந்தது; உதடுகள் ஒரு நிமிடம் துடித்தன.

சட்டைப் பைக்குள் கைவிட்டு, ஆயிரம் ரூபாய் தாளை எடுத்தார்.

“”என் மகள் சாந்திக்கு, இதய ஆபரேஷன் செய்ய என்னிடம் பணமில்லை. உங்களை மாதிரி ஈர மனசுக்காரர்கள்கிட்ட மடிப்பிச்சை கேட்டு, லட்ச ரூபாய் சேர்த்து அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனேன். போகிற வழியிலேயே அவள் போயிட்டாள் சார். இந்த பணத்திற்கு தேவையே இல்லாமல் போய் விட்டது. யார்கிட்டே, எவ்வளவு வாங்கினேன்னு, பேர், அட்ரசோட எழுதி வெச்சிருக்கேன். இது, நீங்க கொடுத்த ஆயிரம் ரூபாய் சார்… உங்க நல்ல மனசுக்கு நன்றி. அம்மா, பெரியவரை நல்லபடியா பாத்துக்குங்க… வரேன் சார்…”

கையெடுத்து கும்பிட்டார்.

அப்பாவும், நானும் விக்கித்து நின்றோம்.

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.

“”ஆமதாபாத் பெஸ்ட்டுன்னு ரகு சொல்றாம்மா… அங்கயே படிக்கிறேன்…” என்று தீபக் வந்து நின்றான்.

கதவைத் திறந்து, போனவரையே பார்த்துவிட்டு எங்கள் பக்கம் திரும்பினான்.

“”எல்லா ஊர்கள்லயும், எல்லா தேசத்துலயும், நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு தாத்தா… நம்ம ஊர் சிஸ்டம், நியாயத்தின் பேர்லயும், தர்மத்தின் பேர்லயும் உண்டாக்கப்பட்டது தான். ஆனா, அதை கண்காணிக்க வேண்டிய மனிதர்கள் குறைபாட்டோட இருக்கிறதால, எல்லாம் பாழாகிட்டிருக்கு…

“”ஆனால், எல்லாரும் அப்படி இல்லே தாத்தா… தர்மபுத்திரர்களும், பீஷ்மர்களும் உங்க வடிவுல, இதோ வந்துட்டுப் போறாரே இவர் வடிவுல வாழ்ந்துகிட்டுதான் இருக்காங்க… அமெரிக்கா, லண்டன்ல மட்டும் குற்றங்கள், குறைகள் இல்லையா தாத்தா? வியட்னாம், கியூபா, ஈரான், ஈராக், ஆப்கன்னு, நாடு நாடா ஊடுருவி, ஆயுதங்கள், ஆயில்ன்னு அமெரிக்கா வம்புச் சண்டைக்கு அலையலையா?

“”ஸ்கூல் பையன்கள்ல முக்கால்வாசி பேர், துப்பாக்கிகளோட அமெரிக்காவுல சுத்தறதில்லையா? வாட்டர்கேட் ஊழல், மோனிகா லெவன்ஸ்கின்னு வெள்ளை மாளிகை களங்கப்படலையா? லண்டன் அரண்மனை, எத்தனை நாடுகள்ல காலனி அமைச்சது? நம்மளையே, நானூறு வருஷம் அடிமைப்படுத்தி வெக்கலையா? தாத்தா… நம்பிக்கையோட இருக்கலாம்… நாம நல்லவர்களா இருப்போம் தாத்தா… சூழலையும் நல்லதா ஆக்குவோம்… காலப்போக்குல எல்லாமே கம்பீரமா நிமிர்ந்து நிற்கும் தாத்தா…”

தீபக்கை, அப்பா கண்ணீருடன் அணைத்து, சம்மதத்துடன் தலையாட்டினார்.
அந்தக் காட்சியை மறைத்து விடக்கூடாதே என்று, என் கண்ணின் ஈரத்தை வேகமாக துடைத்தேன் நான்.

– ஜூலை 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *