பொருள் மிக்க பூஜ்யம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 1,812 
 
 

அந்த கன்றுக்குட்டி, புலிப்பாய்ச்சலில் காட்டைக் கிழித்தும், காற்றைப் பிடித்தும், பறப்பதுபோல் பாய்ந்து கொண்டிருந்தது.

ஒரே மலையை, இரு மலையாய்க் காட்டும் மடிப்பு வெளி: மரித்ததுபோல் இறங்குமுகமும், மறுபிறவி எடுத்ததுபோல் ஏறுமுகமும் கொண்ட மலைப்பூமி, இந்த இரு முகங்களுக்கு இடையேயான மலைத்தொட்டில். பூமிப்பெண்ணின் மார்பகமாய் விம்மிப்புடைத்த அந்த மலைப்பகுதியின் ரூபத்தையும், அதற்குத் தாவணி போட்டது போன்ற மேகத்தையும், முக்காடான ஆகாய அரூபத்தையும், எவரும் தத்தம் கற்பனைக்கேற்ப வேறு வேறு வடிவங்களாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம். அப்படிக் கற்பித்துக் கொண்டால், மலைகளே துரளியான அந்தத் தொட்டிலில், ஒரு அசுரக் குழந்தை படுத்திருப்பதாகப் பார்க்கலாம். அப்படிப் பாவித்தால், மண்டிக் கிடக்கும் மரங்களே அந்தக் குழந்தையின் தலைமுடி. நெற்றியே, அதன் சமவெளி. புருவங்களே அதன் புல்வெளி. அருவிகளே அதன் கசியும் கண். வாயே அதன் நீர்ச்சுனை. அதன் மூச்சே பெருங்காற்று.

கனைக்கின்ற அந்த வனத்திற்குள், அந்தக் காட்டு மாட்டுக் கன்று “ம்மா… ம்மா என்று கத்தியபடியே, காதுகளை சிலிர்க்கவிட்டு, கால் போட்டுத் தாவியது. அதற்கு ஏற்ப தாளலயமான ஒலிகளும், சுருதிபேத கூக்குரல்களும் கூடவே எழுந்தன. குயில்களின் செல்லச் சத்தம், வானம்பாடியின் கானச் சத்தம்… பருந்துகளின் பயமுறுத்தும் சத்தம்… ஆந்தைகளின் அலறல்… அத்தனை சத்தங்களும் சுயத்தை இழக்காத கலவைச் சத்தங்களாகவும், சுயம்கலந்த கூட்டுச் சத்தங்களாகவும், இறுதியில் அத்வைத அசரீரி குரலாகவும் ஒலித்தன. அந்த சப்தா சத்தம் காதில் ஏறாமலும், சந்தன வாடையும், ஐவ்வாது வாடையும் மூக்கில் நுழையாமலும், . அலறி அடித்து ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு தாவர மண்டியின் அடிவாரத்திலுள்ள மந்தையிலிருந்து, தன்னந் தனியாய் பிரிந்து தாவித்தாவி பாய்ந்து, பதினாறு வயது மனிதக் குட்டிகளாலும் ஒட முடியாத பாய்ச்சல் போட்ட அந்த மாட்டுக்குட்டியை, எங்கே போகிறாய் என்பதுபோல் மூங்கில்கள் வலிந்தும் வளைந்தும் கேட்டன. ‘போகாதே’ என்பதுபோல் கற்றாழை வழிமறித்துக் கேட்டது. ஆனாலும் அந்தக் கன்று, மூங்கில்களிலிருந்து விலகி, கற்றாழைகளைத் தாண்டி, காட்டுக் கொடிகளை அறுத்து கவனாய் நின்ற இரட்டை மர இடைவெளிகளில் புகுந்த முகத்தை விலக்கி, காட்டுப் பூக்களை மிதித்து, மரக் குவியலுக்குள் புகுந்து, தேக்குமரத் தொகுப்பிற்குள் திசைமாறி, செவ்வாழைகளின் அணிவகுப்பில் ஊடுருவி, குழம்படி இல்லாத அந்த அடர்காட்டிற்குள் தன்க்குத்தானே ஒரு பாதையை ஏற்படுத்திக் கொண்டு பேய்த்தனமாய் ஓடியது. இதன் அவலத்தை புரிந்ததுபோல், மரங்களில் சிறுத்தைகள் ஏறுகின்றனவா என்று கண்காணித்த குரங்குகள், இதை எச்சரித்துக் குரலிட்டன. தொலைவில் தெரியும் காட்டெருமைகள் மேலுதடுகளை விலக்கி திப்பிழம்பு வாயில் வெள்ளொளியாய் பற்கள் தெரிய பார்க்கின்றன. ஆனால் இந்தக் கன்றோ…

ஒவ்வொரு மரமும் ஒரு முட்டுக்கட்டையாக, ஒவ்வொரு கொடியும் ஒரு மூக்கணாங்கயிராக, அத்தனை தடைகளையும் தாண்டித் தாண்டி ஓடியது. சிலம்பாடிய மரங்களையும், கிளை பின்னி, இலைவேய்ந்து அந்தக் பகுதியையே ஒரு வீடாக காட்டும் காட்டுச் சங்கமத்தில், மஞ்சள் வெயில் சிந்திய ஒளியையே வழியாக்கியபடி, பாசம், பயத்தைத் துரத்த, வேகம் கால்களைத் துரத்த விரைந்தது. அந்தச் சமயத்திலும், அதன் காலடி அதிர்வுகளால் வெளிக்கிளம்பும் பூச்சிப் புழுக்களைப் பிடிப்பதற்காக, இரண்டு காட்டுக் குருவிகள் அதன் முதுகில் அமர்ந்தன. வேறாரு சமயமாக இருந்தால், அந்தப் பறவைகளின் கால் உராய்வை, முதுகுச் சொறியலாக ரசிக்கக்கூடிய அந்தக் கன்று, இப்போது உடனடியாக நின்று, முகத்தைப் பின்திருப்பி, வாலை முன்திருப்பி அந்தக் குருவிகளைத் துரத்திவிட்டு, முன்கால்களும் பின்கால்களும் ஒரே காலானது போல் மீண்டும் தாவியது.

இந்தக் கன்று வழக்கம்போல், ஆல விழுதுகளே திரைச்சிலையான மலைப்பாறைக்கு அருகே ஒவ்வொரு மரமும் ஒரு தோப்பானது போன்ற பெருமரக் கூடாரத்தில், இதர கன்றுகளோடு கன்றாய் துள்ளித்தான் திரிந்தது. அவற்றைப் போலவே அம்மா வரும் திசையையே ம்..மா…ம்மா…’ போட்டு பார்த்தது. கன்று சகாக்களின் கூட்டுக்குரலில் தன் குரலை சங்கமிக்கவிட்டது. ஆனாலும், மாலை வேளையில் அத்தனை மாடுகளும் திரும்பிவிட்டன. இதன் அம்மாவைத்தான் காணோம். கூடிநின்ற கன்றுகளும், அவற்றின் அம்மாக்களும், ஒன்றை ஒன்று தேடிப்பிடித்து ஒருமைப்பட்டபோது, இந்தக் கன்றுக்குட்டி அங்குமிங்குமாய் பார்த்தது. அத்தனை பசுக்களும், அகலக் கால் விரித்து தத்தம் கன்றுகளை, பால் பொங்கிய மடிகளை பற்றவிட்டன. ஆயிரங்கால் மண்டபம் போன்ற அவற்றின் காலடி வழியாக இந்தக் கன்று குனிந்து பார்த்தது. என் அம்மா எங்கே என்பதுபோல் கத்திக் கேட்டது.

அந்த மாட்டுக்கூட்டமோ பாசப்பெருக்கை பால் பெருக்காய் காட்டி, குடும்பப்பாங்காய் நின்றனவே தவிர, சமூகப் பாங்காய் நிற்கவில்லை. இப்படி இந்த சின்னம்மாக்களும், பெரியம்மாக்களும், பொதுவான அப்பாக்களும் இதைக் கண்டுகொள்ளாதபோது, இந்தக் கன்று துள்ளிப் பாய்ந்தது. உச்சந்தலையில் ஒரு முத்தமிட்டு இளங்கொம்புகளின் இடைவெளியில் முகம் சாய்த்து எச்சரிக்கையாய் இரு என்று எச்சரித்து சென்ற தாயைக் காணவில்லை. அம்மாவைப் பார்த்தாக வேண்டும். எங்கே நின்றாலும் சரி…

அந்தக் கன்றின் முகத்தில் மூங்கில் செதில்கள் ரத்தக் கசிவை ஏற்படுத்தின. நெறிஞ்சி முட்கள் காலைக் கவ்வின. ஆனாலும், இந்த நரகவேதனையை, பாசவேதனை விழுங்க, ஒவ்வொரு இடையூறிலும் ஒவ்வொரு விதமாய் வேகப்பட்டு, எப்படியோ அந்தக் காரிருள் காட்டில் இருந்து வெட்டவெளிக்கு வந்துவிட்டது. களையான புல்லே பயிரான வெளி… ஜோதிப் பாளங்கள் மாதிரியான காளான்கள். அசுர விசிறியான பனைமரங்கள். அவற்றைத் தழுவிய ஈச்சம்பனைகள். இவற்றின் இடுப்பில் வேரெடுத்து தோளைச்சுற்றிய ஓணான் செடிகள். தாவர மயிலான கல்வாழைகள். மற்றபடி பெருவெளி.

அந்தக் கன்று நின்றது. நிமிர்ந்தது. ஒரு கரிச்சான்குருவி ஒரு காகத்தை நெத்தியடி போல் “இறக்கை அடி” கொடுத்துக் கொண்டிருந்தது. மூங்கில் சிதறல்களும், பன்னாடைகளும் நிறைந்த கூட்டிலிருந்து ஒரு காகத்தை ஒரு ஆண்குயில் வம்புக்கு இழுத்து, ஆகாய வெளியில் போராடப் போவது போலவும், பயந்தது போலவும் பாசாங்காய் பறந்தபோது, அந்த மூடப் பறவை அதை நம்பி அதைத் துரத்தியபோது, பெண்குயில் ஒன்று அதன் கூட்டிற்குள் சென்று முட்டையிட்டது. ஆனாலும்

அந்தக் கன்று, இந்த அருகாமைக் காட்சிகளை பார்க்காமல் தொலைநோக்காய் பார்த்தது. பார்க்கப் பார்க்க அதன் பரபரப்பு பரவசமானது. அதோ அம்மா வருகிறாள். ஒடி வருகிறாள். ம்மா… ம்மா… இங்கே நிக்கேம்மா..

அந்தக் காட்டுக் கன்றுக்குட்டி, அம்மாவை நோக்கிப் பாய்ந்தது. இரண்டும், ஒன்றையொன்று அந்த வினாடியே பார்க்கவேண்டும் என்பதுபோல் துடியாய் துடித்து கால்கள் தரையில் பாவாமல் தாவ, எதிர் எதிராய் சந்தித்தன. புதிர் புதிராய் பார்த்தன. இரண்டுக்கும் ஏமாற்றம். தாய்க்கு அது பிள்ளையில்லை. பிள்ளைக்கு அது தாயில்லை.

அந்தக் காட்டுப் பசு, துக்கி வைத்த முன்கால்களை தரையில் போட்டபடியே மீண்டும் ஓடியது. இந்த இடைவெளியில் அந்தக் கன்றுக்குட்டியும் யோசித்துப் பார்த்தது. அம்மா வருவாளோ மட்டாளோ… இந்த இரவை இந்த “சித்தியோடு” போக்கலாம். நாளைக் காலையில் அம்மாவை தேடலாம். ஒருவேளை இவளே, அம்மா இருக்கும் இடத்தைக் காட்டலாம்.

அந்த இளங்கன்று, மூச்சைப் பிடித்து, தத்தலும் தாவளலுமாய் அந்த பசுவின் பின்னால் ஓடியது. வேகவேகமாய் ஓடி, பிறகு அதற்கு இணைாய் ஓடி, அதன் கழுத்தில் முகம் போடப் போனபோது –

அந்தப் பசுவோ, உடனடியாக நின்றது. இதை எரிச்சலோடு பார்த்தது. ‘உன்னைக் கூட்டிப் போனால் என் குட்டி என்னாவது சரியான மூதேவி… என் நம்பிக்கையை நாசமாக்கிட்டே…

அந்தக் காட்டுப் பசு, தன் கால்களுக்குள் அடைக்கலம் தேடிய அந்த கன்றை முட்டப்போனது. ஆனாலும் மனம் கேட்கவில்லை. தலைகீழாய் கவிழ்த்த முகத்தை நிமிர்த்தி, மீண்டும் ஓடியது. அந்தக் கன்றும் விடவில்.ை அதன் பின்னால் ஓடியது. இதுவும், பசுபோன திசையில் பாய்ந்தபோது, அது திசையை மாற்றியது. இது நெடுக்காய் ஒடும்போது அது குறுக்காகவும், குறுக்காய் ஒடும்போது, நெடுக்காகவும், போக்குக்காட்டி ஓடியது. நிற்கும்போது ஒடியும் ஒடும்போது நின்றும், அந்தக் கன்றிடம் கண்ணாமூச்சி காட்டியது. பயணிகள் கைகாட்டும்போது நிற்பதுபோல் பாவலா காட்டி அவர்கள் நிதானப்படும்போது காலன் வேகத்தில் பாயுமே பல்லவன் பேருந்துகள். அதைப் போலவே .

இந்தக் காட்டுப்பசுவும், இந்த அந்நியக் கன்றை பார்த்த ஏமாற்றமும், ஈன்றெடுத்தக் குட்டியைப் பார்க்கப் போகும் எதிர்பார்ப்பும், இரட்டை வேகமாக எங்கோ ஒடி, எங்கேயோ மறைந்தது,

இந்தக் கன்றுக்குட்டிக்கும் புரிந்துவிட்டது. அது புரியப் புரிய அதன் கால்கள் நடுங்கின. கண்கள் நனைந்தன. மூச்சு ஒலி எழுப்பி ஒலமிட்டது. அதன் உடம்பின் ஒவ்வொரு அணுவும் சக்தி விரயத்தால் துடித்தது. கொம்புகள் தலையை அழுத்தும் முட்கம்பிகளாயின. கால்களுக்கு உடம்பே பாரமானது.

குதிரையின் முன்பக்கச் சாயலும், கோதுமை நிறமும் செஞ்சிவப்புக் கால்களும் கொண்ட அந்த சின்னஞ்சிறு கன்று, பொன்வண்டு ஒன்று இறக்கைகளை கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாய் பெருவடிவம் பெற்றது போன்ற நேர்த்தி கொண்ட அந்தப் பொன்குட்டி, இப்போது தன்னைத்தானே வீழ்த்திக் கொண்டு தரையில் சாய்ந்தது. பூஜ்யம் போல் பொருள்மிக்க அந்தக் காட்டுச் சூன்யத்தில் கண்களை மூடிக் கொண்டு, திக்கிழந்து, திசையிழந்து செயலிழந்து கிடந்தது. என்ன ஆனாலும் ஆகட்டும் என்ற விரக்தி. ஏகாந்தத்தின் எதிர்உணர்வு. எது வந்தும் அடித்துத் தின்னலாம் என்று விடுத்த மரண அழைப்பு அறைகூவல் வாழ்வு கசந்த கசப்பில், மரணம் இனித்தே திரும் என்ற எண்ணமோ என்னமோ… உடம்பில் மொய்த்த கொசுக்களை வாலால் அடித்துத் துரத்தவில்லை. எறும்பு மொய்த்த வி லாவை இம்மிகூட நகர்த்தவில்லை. வாழ்வு-சாவு எல்லைக்கோடுகள் அழிந்து போன மரணப் பரப்பில் முடங்கியது.

திடீரென்று ஊனை உருக்கும் சத்தம்… லொள்… லொள்… ஒன்றே பலவாய். பலவே ஒன்றாய் ஒலித்த ஆங்கார ஒலித் திரள்…

அந்தக் காட்டுக்கன்று மிரளாமலே தலை புரட்டிப் பார்த்தது. அப்படிப் பார்க்கப் பார்க்க தலையே துண்டிக்கப் பட்டது போன்ற ‘முண்டத்தனம்’… சிறிது தொலைவில் கட்டிழந்து ஓடிய காட்டாற்றின் அருகே, பெருத்த உடம்பும் சிறுத்த இலைகளும் கொண்ட வாகைமரத்தின் அடிவாரத்தில், அதன் அம்மாவின் தலையை மட்டும் அடையாளம் காணமுடிகிறது. அதன் எஞ்சிய உடம்பு ரத்தம் விரவப்பட்ட சதைக்கூழாய் தெரிந்தது. பதினைந்து, இருபது காட்டு நாய்கள்.அம்மாவின் இடுப்பளவு உயரம் கூட இல்லா அற்ப ஜீவிகள்.அவளை சதைசதையாய் எலும்பு எலும்பாய் தின்று கொண்டிருக்கினறன. அங்கே ஒரு பெரிய போராட்டமே நடந்திருக்க வேண்டும். இரண்டு நாய்கள் கிழே விழுந்து குடல் சுரியக் கிடக்கின்றன. கழுகுகளும், நாரைகளும், எச்சில் மாமிசத்திற்காக பயபக்தியோடு காத்து நிற்கின்றன.

அந்தக் கன்றுக்குட்டியால் தாளமுடியவில்லை. புருவ மத்தியில் குங்குமம் வைத்தது போன்ற வட்டப் பொட்டும், பச்சை குத்தியது போல் பிடரிப் பசுமையும், மரகதக் கல் மாதிரியான மோவாயும் கொண்ட அம்மாவைப் பார்க்கப் பார்க்க அதன் பார்வை நீரில் மிதந்தது. காட்டுப் புலிகள் வரும்போதுகூட, இதர மாட்டுக் கூட்டத்தோடு நின்று, தன்னையும் வயிற்றுக்குள் அடைக்கலமாக்கிக் கொண்டு, அந்தப் புலிப் பகைக்கு எதிர்ப்பகையாய் கொம்பு சாய்த்து சவாலிட்ட தாய், இப்போது குப்புறக் கிடக்கிறாள். என்ன செய்யலாம் இந்த ரவுடிகளை?

அந்தக் கன்று நாய்க் கூட்டத்தை முட்டப் போவது போல் போகப் பார்த்தது. முடியவில்லை. பிஞ்சுக் கொம்புகளால் தரையைத் துழாவியது. கிழே போன தலையை மேல்ே நிமிர்த்த முடியாத தளர்ச்சி. அதே சமயம் அம்மாவை சித்ரவதை செய்து கொன்ற அந்தக் கொடியவர்களை கொல்ல வேண்டுமென்ற வேகம். பழிக்குப் பழி வாங்க நினைக்கும் பார்வை. அப்போது

அந்தக் காட்டுக்கே மதம் பிடித்தது போன்ற சத்தம் அருகிலேயே போர்ப்பரணி மாதிரியான பெருஞ்சத்தம். யானைகளின் பிளிறல்… அந்த கஜராஜாக்களின் குட்டி ஒன்றை ஏதாவது ஒரு புலியோ அல்லது சிறுத்தையோ திருட்டுத்தனமாக கொன்றிருக்க வேண்டும் அல்லது குற்றுயிரும் கொலையுயிருமாய் ஆக்கியிருக்க வேண்டும். குட்டியை பறிகொடுத்த தாய் யானையுடன், இப்போது அத்தனை யானைக்கூட்டமும் சேர்ந்து போர்ப் பிரகடனம் செய்தன. எங்கே இருக்கிறாய் பகையே? இங்கே வா பேடியே…”;

அந்த பிளிறலால் காட்டுநாய்க் கூட்டம் நெல்லிக்காய் குவியலாய் சிதறுகின்றன. உயிர் பிழைத்தால் போதும் என்பதுபோல் ஓடின. அதே சமயம் –

இரண்டு நாய்கள் இந்தக் குட்டியின் பக்கம் எதேச்சையாய் வருகின்றன. எதிர்பாராத உணவைப் பார்த்த மகிழ்ச்சியில் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்கின்றன. பிறகு இரண்டும் சேர்ந்து இந்தக் குட்டியை ருசியோடு பார்க்கின்றன. எந்தக் குறைப்பும் இல்லாமல் அழுத்தம் திருத்தமாய் கால்களை நகர்த்துகின்றன.

அந்தக் கன்றுக்குட்டி வீறாப்பாய் நிற்கிறது. அதே சமயம், ஒரு சிந்தனை மாற்றம். இந்தக் கொடுங்கோலர்களிடம் சிக்கினால் ஒரேயடியாய் கொல்லாமல், சிறுகச் சிறுகச் கொன்று சித்திரவதை செய்வார்கள். அம்மாவைக் கொன்ற இவற்றின் வாயில் விழக்கூடாது. இவற்றிற்கு இரையாகி அவற்றை மேலும் சந்தோஷமாக்கக் கூடாது. கடவுள… கடவுளே… இந்த உயிர்க் கொல்லிகளுக்கு என்னால் எமனாக முடியலியே… முடியலியே.

அந்தக் கன்று, உடல்வாதையும், உயிர்வாதையும் ஒருசேர, அவற்றையே வேகமாக்கி, ஒரே துள்ளாய் துள்ளி, சிறிது தொலைவில் உள்ள பாறைக்குவியல் பக்கம் விழுகிறது. இப்போது கொலையாய் குறைக்கும் நாய்களை சினந்து பார்க்கிறது. அப்புறம் அந்தப் பாறைக் குவியல்களின் எல்லை விளிம்பில் மெல்ல நடந்து ஒரு புதர்ப் பக்கம் போகிறது. சத்தம் கேட்டு நிமிர்கிறது. மேலே புன்னை மரங்களில் அமர்ந்த மயில்கள் அந்தப் பக்கம் போகாதே என்பதுபோல் குரலிடுகின்றன. ஒடிப்போ ஓடிப்போ என்பது போல் சிறகடித்து மாரடிக்கின்றன. பிறகு, சில காட்டுப் பூனைகள் தங்களுக்கே உலை வைக்க மரமேறுவதைப் பார்த்துவிட்டு, ஒரே பாய்ச்சலாய் பறந்து பாறைக் குவியலின் மேல் அமர்ந்து, அந்தக் குட்டியை மீண்டும் எச்சரிக்கின்றன.

அந்தக் கன்றுக்குட்டிக்கும் ஏதோ புரிந்துவிட்டது. அதைக் காட்டுவது போல் மோவாயை முன்னும் பின்னும் ஆட்டியது. ஆனாலும், உயிர்ப் பயம் அற்றுப் போய், தட்டுத் தடுமாறி அந்தப் புதர்ப்பக்கம் போய் விட்டது. குகைச் சுவரான மரக்கிளைகள். பின்னப்பட்டது போன்ற மூங்கில் இடுக்குகள். வேலி போன்ற காட்டுச் செடி. அவற்றின் இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் வரிக்கோடுகள். அங்குமிங்குமாய் அசையும் கோடுகள். முள்போல் காட்டும் நகங்கள்.

அந்தக் கன்றுக்குட்டி நிர்ப்பயமாய், நிர்க்குணமாய், அந்தப் புலியின் அருகே போய் விழுகிறது. பதுங்காமல், படுத்துக் கிடக்கும் அந்தப் புலியோ அந்தக் குட்டியைப் பார்த்ததும் பார்க்காதது போல் முகத்த்ை திருப்பிக் கொண்டது. ஐந்தாறு நாட்களுக்கு முன்பு உருமிய புலிதான் இது. தன்னை விட பலமடங்கு பெரிய காட்டெருமை கூட்டங்களில் ஊடுருவி அவற்றில் ஒன்றே ஒன்றை நேருக்கு நேராய் சாய்க்கும் பழக்கம் கொண்ட புலிதான்… ஒரு கஜராஜாவைக் கூட சேதப்படுத்திய காட்டுராஜாதான். ஆனாலும், இப்போது அது பசிப்பிணியாலும் பாசப்பிணியாலும் தவித்தது. ஒரு வாரத்திற்கு முன்பு, இந்தப் புலி தனது குட்டியோடு திரிந்தபோது, காட்டு நாய்க்கூட்டம், இதை வளைத்துக் கொண்டன. வட்ட வியூகத்திற்குள் இதை ஒரு மையப் புள்ளியாக்கி, இரண்டு நாள் பட்டினி போட்டன. பிறகு அந்த நாய் வட்டம், வியூகத்தை நெருக்கி நெருக்கி, தளர்ச்சியான இந்தப் புலியை தாக்கப் போனது. ஆனால் இந்தப் புலி நான்கைந்து நாய்களைக் கொன்றுவிட்டு, அந்த வட்டத்தில் இருந்து மீண்டது. குட்டியை அனைத்துக் கொண்டுதான் பாய்ந்தது. என்றாலும் அம்மாவைப்போல் வெளியேறும் அர்ஜுன வியூகம் தெரியாத, அந்த அபிமன்யு புலி அந்த நாய்களின் வாய்களுக்கு மாமிசமானது.

அந்தப் புலியால் இப்போது நினைக்கவும் முடியவில்லை. நினைக்காமலும் இருக்க முடியவில்லை. கேவலம், ஒரு உருமலுக்கு பொறுக்காத காட்டுப் பொறுக்கிகளிடம் மானமிழந்ததை அதனால் தாங்கமுடியவில்லை. குட்டியைக் காக்க முடியாமல் பேடியாய் ஓடிவந்த அவமானம். ஆகையால் இரைதேடப் போகாமல், அல்லாடிக் கிடந்தது. தன்னம்பிக்கை அற்று தவித்துக் கிடந்தது.

சும்மாவே கிடக்கும் அந்தப் புலியை, அந்தக் கன்றுகுட்டி ஆச்சரியமாய் பார்த்தது. இந்தப் புலியைப் பாருங்கள் என்பது மாதிரி கண்ணில் படும் சைவ மிருகங்களிடம் சுட்டிக்காட்டப் போவது போல் அது எதிர் திசையைப் பார்த்த ஒரு நிமிடத்தில் மிரண்டது. பிறகு அந்தத் திசையை கனன்று பார்த்தது. எதிர்த் திசையில் அதே இரண்டு காட்டு நாய்கள் குத்துக்காலிட்டு உட்கார்ந்துள்ளன

நாக்குகள் வாய்களுக்கும் காலிருப்பதுபோல் தொங்குகின்றன.

அந்தக் கன்றுகுட்டிக்கு மீண்டும் ஆத்திரம். அந்தப் புலியைக் கேள்வியோடு பார்த்தது. ஆனாலும் அந்த கிழட்டு ராஜா சும்மா இருப்பதைப் பார்த்து விட்டு. யதேச்சையாகவோ அல்லது ஏதோ ஒரு தற்கொலை அல்லது தாக்குதல் உணர்விலோ, அந்தப் புலியின் அருகே நெருக்கியடித்து சென்றது. அதன் வாயில் முகம்படும்படி புரண்டது. இழப்புக் குள்ளான மனிதருக்கு உணவை வாயில் ஊட்டினால், அவர் இறுதியில் எப்படி அதை உண்பாரோ, அப்படி அந்தப் புலியும் மாறியது. அந்தக் கன்றுக்குட்டியின் ரத்தக்கசிவு வாயில் பட்டதால் பசிப்பிணி, பாசப் பிணியை துரத்திவிட்டது. உடனே, அந்தக் கன்றின் கழுத்தை கவ்வி அதற்கு உயிர் விடுதலை கொடுத்தது. பின்னர், அதை அவசர அவசரமாக தின்று கொண்டிருந்தது.

அந்த நாய்கள் இப்போது எச்சில் சதைக்காக காத்து நின்றன. இரை தின்னும் புலி, தங்களைத் தாக்காது என்ற அனுமானத்துடன் நெருங்கி வந்தன. அந்தப் புலியும் அவற்றைப் பார்த்து விடுகிறது. பெற்று வளர்த்த குட்டியைக் கொன்ற அந்தக் காட்டுநாய் பிரதிநிதிகளை காணக் காண, அதன் கண்கள் கொதித்தன. கன்றுக்குட்டியின் ரத்தம் வேறு அதற்கு ஒருவித சாராய போதையைக் கொடுத்து பாச உணர்வையும், பழி உணர்வையும், கொலை உணர்வாய் ஆக்கியது. ஏற்கனவே அந்த நாய்களின் வயிறுகளை, தனதுச் செல்லக் குட்டியின் சுடுகாடாய் பார்த்த அந்த தாய்ப்புலிக்கு கூடுதல் ஆவேசம்…

அவ்வளவுதான்.

அந்தப் புலி, ஒரே தாவாய் தாவி ஒரு நாயின் வயிற்றைக் கால்களால் கிழிக்கிறது. இன்னொன்றை வாயால் கவ்வி கழுத்தைத் துண்டிக்கிறது. பின்னர், அந்த மாமிசப் பிண்டங்களின் மீது ஏறி நிற்கிறது. தக்காரும், மிக்காரும் இல்லாதது போலவும், தானே தானாய், தான் ஒரு தானாய், அந்தக் காட்டையே ஆளுவது போல கர்வப்படுகிறது.

அந்தக் கர்வத்தைக் காட்டுவதுபோல், உருமிக் காட்டுகிறது. ஆனாலும் அந்த உருமல் சத்தம் அதன் வயிற்றுக்குள் பூஜ்ஜியமாய் போன அந்தக் கன்றுக்குட்டி சிரிப்பது போல் ஒலிக்கிறது.

– இந்தியா டுடே, இலக்கிய ஆண்டு மலர் 1995 – சமுத்திரக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர், 2001, ஏகலைவன் பதிப்பகம், சென்னை – 600 041

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *