பொய் சொல்லத் தெரியாமல்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 3,911 
 
 

அவனுக்கு ஒரு பாவமும் தெரியாது. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல அந்த நிகழ்ச்சி நடந்திருந்தது. கல்லூரி முழுவதும் அவனை ஆதரித்து அவனுக்காகப் போராடக்கூடக் காத்திருந்தது. ஆனாலும் அந்த ஆதரவையும், அனுதாபத்தையும் ஏற்று வசதியாக அவற்றில் குளிர்காய அவனுக்கு மட்டும் விருப்பமில்லை.

அவனுக்கு – அதாவது, சுகுமாரன் என்கிற சுமனுக்குத் தன்னைத் தப்பச் செய்து கொள்ள வேண்டுமென்றோ, காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றோ கூட எண்ணமிருந்ததாகத் தெரியவில்லை. தனக்கு ஏற்பட்ட இரண்டு சோதனைகளிலும் அவன் அப்படித்தான் நடந்து கொண்டான். எப்படியாவது அதிலிருந்து தப்ப வேண்டும் என்ற முனைப்பை அவனிடம் காணமுடியவில்லை. அவனைத் தப்புவித்துவிட வேண்டும் என்று எண்ணியவர்களோடு அவன் ஒரு சிறிதும் ஒத்துழைக்கவில்லை. அழகை இரசிக்கும், அமைதியை விரும்பும், சௌந்தரிய உபாசகனாகிய அவன் கொலைகாரனாகவும், கலகப் பேர்வழியாகவும் சித்தரிக்கப்பட்ட போதுகூட, அவற்றை மறுத்துத் தன்னை நிரபராதியாகக் காட்டிக் கொள்ள அவன் முனையவில்லை. முயலவில்லை.

‘எப்பப் பார்த்தாலும் சொப்பனத்திலே மூழ்கிக் கிடக்கிற மாதிரி இருப்பானே சுமன், அவனைப் பத்தியா இந்தக் கம்ப்ளெயின்ட்? நம்ப முடியவில்லையே?’

‘யாரு சுகுமாரனா? ஒரு ஈ எறும்பைக் கொல்லக்கூடப் பயப்படறவனாச்சே?’

‘பேசறதுக்கே கூச்சப்படறவன் பொம்பிளைன்னாலே ஏறிட்டுப் பார்க்கறதுக்குக் கூட வெட்கப்படறவன் இதைச் செஞ்சிருப்பான்னே நம்ப முடியாது.’

‘யார் கண்டாங்க? எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ? நம்ப முடியாதுப்பா !’

‘இவனா? இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா?’

இப்படி எல்லாம் பேசிக் கொண்டார்களே ஒழிய, ‘ஊமைக் கோட்டான் மாதிரி இருந்துக்கிட்டு இப்படிப் பண்ணிட்டானே?’ என்று யாரும் துணிந்து அவன்மீது குற்றம் சாட்டத் துணியவில்லை. விவரம் தெரிந்த எவரும் அவனைக் குற்றம் சாட்ட முன்வரவில்லை.

ஆனால், கல்லூரி முதல்வர், விடுதி வார்டன், கரஸ்பாண்டெண்ட் ஆகிய மூவர் அடங்கிய விசாரணைக் குழுவின் முன்னால் சுமன் விசாரணை செய்யப்படும் நாளை எதிர்பார்த்துக் கல்லூரியே காத்திருந்தது. எதிர்பார்த்திருந்தது.

இரண்டு குற்றச்சாட்டுக்களிலும் தடயங்களாகக் கிடைத்த கையெழுத்துப் பிரதிகள் இரண்டுமே சுமனின் சொந்தக் கையெழுத்தில் தான் இருந்தன. அதில் தான் சிக்கலே உண்டாயிற்று.

அந்தக் கல்லூரியில் காமர்ஸ் கற்பிக்க ஆண் பேராசிரியர்கள் யாரும் கிடைக்கவில்லை. திருமணமாகாத முப்பது வயதுக்கு மேலான சுமதி என்ற பெண் காமர்ஸ் பேராசிரியையாகச் சேர்ந்திருந்தாள். அவள் ஒரு மெண்டல் கேஸ். சுகுமாரனின் மேல் அவளுக்கு ஒரு கண். ஏதோ காமர்ஸ் புத்தகம் தருவதாக ஒரு நாள் வீட்டுக்கு அவனை வரச் சொன்னாள்.

காப்பி, சிற்றுண்டி உபசாரம் எல்லாம் செய்து அவனுடைய கவிதைகளை வானளாவப் புகழ்ந்தாள். சுகுமாரன் தன் கவிதைகள் எதையும் அவளிடம் படிக்கக் கொடுத்ததில்லை. படிக்காமலே தன் கவிதைகளை அவள் எப்படித் துணிந்து புகழ முடியும் என்று அதிர்ச்சியடைந்தான் அவன்.

முதலில் இருந்தே அவள் வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்தது உபசரித்தது எல்லாமே சற்று மிகையாயிருப்பதை உணர்ந்த அவன், ஏதோ காமர்ஸ் புத்தகம் தரப் போவதாகச் சொல்லி அவள் தன்னை அங்கே வரச்சொன்னது ஒரு சாக்குத்தான் என்பதைப் புரிந்து கொண்டான்.

“மேடம்! என் கவிதைகளை நீங்கள் எப்போது படித்தீர்கள்? அவை எல்லாமே கையெழுத்துப் பிரதியாக என்னிடம் தானே இருக்கின்றன!”

“கவிதையைப் படிக்காவிட்டால் என்ன? உன்னை மாதிரி அழகாகவும் இளமை – யாகவும் இருக்கிற ஒருவர் எழுதுகிற எல்லாமே அழகாகவும், இளமையாகவும் தான் இருக்கும்!”

சுகுமாரனுக்கு அவள் இப்படிப் பேசியது பிடிக்கவில்லை. அவளுடைய சிரிப்பு, பார்வை – அதில் தென்பட்ட சபலம் எதையும் அவன் இரசிக்கவில்லை. அவன் மனத்தில் அவள் தன் ஆசிரியை என்பது மட்டும் நினைவிருந்தது. அவள் மனத்திலும், கண்களிலும், பேச்சிலும், எல்லாவற்றிலும் அவன் தன் மாணவன் என்பது நினைவில்லாததோடு வேறுவிதமான ஆசைகள் தலை நீட்டின.

“என் கவிதை நன்றாக இருக்கிறது என்று நீங்கள் சொல்ல வேண்டுமானால் முதலில் நீங்கள் அவற்றைப் படித்தாக வேண்டும் மேடம்! போலிப் பாராட்டு எனக்குப் பிடிக்காது! முகமன் வார்த்தைகளை நான் நம்புவதில்லை…” என்று கூறிக் கொண்டே தனது கவிதைகள் தன் கையெழுத்திலேயே எழுதப்பட்டிருந்த நோட்டுப் புத்தகத்தை அவளிடம் எடுத்து நீட்டினான் சுகுமாரன், தன் கவிதைகளைப் படிக்காமலே வேறு காரணங்களுக்காக ஒருவர் தன்னைப் பாராட்டுவது அவனது சுயமரியாதையைப் பாதிக்கக் கூடியதாயிருந்தது.

சிறிது நேரம் பக்கங்களை முன்னும் பின்னுமாகப் புரட்டிவிட்டு, அவன் எதிர்பாராத நிலையில் சில தாள்களைத் தனியே கிழித்து எடுத்துக் கொண்டு விட்டாள் அவள்.

“ஏன் தனியே கிழித்து எடுக்கிறீர்கள்?”

“இவை எனக்கு மிகவும் பிடித்த கவிதைகள்! என்னிடமே வைத்திருந்து திரும்பத் திரும்ப ஆசைப்படுகிற போதெல்லாம் எடுத்துப் படிக்க விரும்புகிறேன்.”

அவன் அந்தக் கவிதைகளின் மூலப் பிரதி தன்னிடம் தனியே இருந்ததனால், ‘தொலைந்து போகிறது’ என்று அவள் அடாவடித்தனத்தைப் பொருட்படுத்தாமல் விட்டு விட்டான்.

‘கவிதைக் காதலிக்கு அந்தரங்கக் கடிதம்’-‘ஒரு நிலாக்காலத்து முன்னிரவில் நீயும் நானும்’ – என்ற தலைப்புக்களில் அவன் எழுதியிருந்த கவிதைப் பிரதிகளைத்தான் அவள் கிழித்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

அதன் பின்பும் இரண்டொரு முறை அவள் அவனை வீட்டுக்குக் கூப்பிட்டாள். காப்பி, சிற்றுண்டி உபசரணை செய்தாள். மெல்லத் தான் ஆக்கிரமிக்கப்படுவதுபோல் உணர்ந்தான் சுகுமாரன். அவள் தனது சபலங்களுக்கும், ஆசைகளுக்கும் அவனைப் போன்றதோர் இளந்தளிரைப் பலியிட முயல்வது புரிந்தது. அவன் திமிறினான். கோபித்துக் கொண்டு வெளியேறினான். துணிந்து அவளைப் புறக்கணிக்க முற்பட்டான்.

அவள் அடிபட்ட புலியாக மாறினாள். சீறினாள். எங்கே அவன் முந்திக் கொண்டு தன்னைப் பற்றி உள்ளதை உள்ளபடி வெளியே சொல்லி மானத்தை வாங்கிவிடப் போகிறானோ என்று பயந்து, நயவஞ்சகமான தற்காப்பு உணர்ச்சியுடன், “டியூஷன் டியூஷன் என்று என் வீட்டுக்குத் தேடி வந்து என்னிடமே கன்னா பின்னா என்று காதல் கவிதை எழுதி நீட்டிக் கையைப் பிடித்து இழுத்தான்” என்று கல்லூரி முதல்வரிடம் அவனைப் பற்றிப் புகார் செய்துவிட்டாள். சாட்சியங்களாக அவன் கையெழுத்திலேயே இருந்த அந்தக் கவிதைகளையும் இணைத்துக் கொடுத்துவிட்டாள்.

ஏறக்குறைய இதே சமயத்தில் மற்றொரு முனையிலிருந்து இன்னொரு பயங்கரமான புகாரும் சுகுமாரன் மீது வந்தது.

தீவிரப் புரட்சிக் கருத்துக்கள் அடங்கிய கவிதைகளை அவன் எழுதியிருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை, அவனுடைய ரூம் மேட் அடிக்கடி எடுத்துச் சென்று, இரவில் மாந்தோப்பில் நடக்கும் அதி தீவிர மாணவர் குழுவில் படித்துக்காட்டிவிட்டு வருவான். சுகுமாரன், நண்பனின் இந்தச் செயலைத் தடுக்கவில்லை. பக்கத்து ஊரில் விவசாயிகளைக் கொடுமைகள் மூலமும், வட்டிக் கடன் கொடுப்பதன் மூலமும் கசக்கிப் பிழிந்து வந்த ஒரு பணமுதலையைக் கொலை செய்துவிட்டார்கள். அந்த இடத்தில் சுகுமாரனின் கவிதை நோட்டுப் புத்தகமும் சிதறிக் கிடந்தது. பிரித்துக் கிடந்த பக்கத்தில் இருந்த கவிதையிலோ,

“பொங்கு புதுப்புனல்
போல் புரட்சிப் பெருக்கெடுத்துத்
தங்கு தடையற்ற
சமதருமம் உருவாக
அங்கங்கே தடையாக
அறிவற்றோர் முன்வந்தால்
தங்காமல் தயங்காமல்
தகர்த்திடுவாய் தவிர்த்திடுவாய்!”

என்ற வரிகள் இருந்தன. கொலைக்குத் தூண்டியவை இந்தக் கவிதை வரிகளே என்று குற்றப்பதிவு ஆயிற்று.

சுமனைக் கல்லூரியை விட்டு வெளியேற்றியபின் போலீஸ் வழக்கு மேற்கொண்டு தொடரும். அவன் தண்டனைக்கோ, அபராதத்துக்கோ உள்ளாவான்.

அவனைப் போன்ற சூதுவாதறியாத ஓர் இளங்கவிஞனைக் காப்பாற்றிவிட முயன்ற சில பேராசிரியர்கள், தேர்ந்த கிரிமினல் வக்கீல்கள் சிலரைக் கலந்தாலோசித்து, அவனைத் தப்பித்து விடுவதற்காகச் சில யோசனைகளைச் சொன்னார்கள்….

“மேக நெடுங்குழற் காட்டில்
தோன்றும்
மோக மின்னலடி உன்
மதி வதனம்’ என்றும்;
‘நின் கரங்களைத் தீண்டுங்கால்
கவிதையெனும் அமுதமணிப்
பொன் தருமோர் கற்பகத்தைப்
புகழ் தருமோர் நற்சுகத்தை ”

– என்ற வரிகளையும், கொடுங்கோல் நிலக்கிழாரைக் கொல்லத் தூண்டிய வரிகளையும் நான் சுயமாக எழுதவில்லை. யாரோ எழுதிய அந்தக் கவிதைகளை என் தமிழ்க் கையெழுத்து முத்து முத்தாய் அழகாயிருக்கும் என்பதற்காக என்னைப் பிரதி எடுத்துத் தரச் சொன்னார்கள். மற்றபடி அவற்றுக்கும் எனக்கும் எந்தவிதச் சம்பந்தமுமில்லை’ என்று கல்லூரி விசாரணை, நீதிமன்ற விசாரணை எல்லாவற்றிலும் ஒரு சீராகக் கூறுமாறு யோசனை சொல்லிக் கொடுத்தார்கள். மற்றதை வக்கீல் கவனித்துக் கொள்வார். தண்டனைகளிலிருந்து நீ தப்பிவிடலாம்’ என்ற திட்டத்தை அவன் ஏற்கவில்லை , மறுத்தான்.

“இந்தக் கல்லூரி முழுவதும் சல்லடையில் போட்டுச் சலித்துத் தேடினாலும், காதல் கவிதைகளையும், புரட்சிக் கருத்துக்களையும் இவ்வளவு சிறப்பாகப் பாடும் கவிஞன் வேறெவனையும் நீங்கள் காண முடியாது !” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கர்வம் பொங்கும் குரலில் பதில் சொன்னான் சுகுமாரன். அவர்கள் அதைக் கேட்டு அவனைக் கண்டித்தார்கள்.

“அதெல்லாம் சரிதாம்ப்பா! இப்போ அந்தக் கவித்திறமைதானே உனக்கு உலைவைத்து, உன்னை உள்ளே தள்ளிக் கம்பி எண்ண வைக்கப் போகுது! அதனாலேதான் சொல்றோம். தப்பிக்கிறத்துக்காகத் தற்காலிகமாக ஒரு பொய் சொல்லிக்கோ! கவி எழுதற திறமையே எனக்குக் கிடையாதுன்னு நீ சொல்லிட்டாப் போறும்…”

“அதெப்படி முடியும்? நமக்குக் கெடுதல் வருதுங்கிறதுக்காக நம்ம திறமையை மறைக்க முடியாது. நம்மை நாமே கொலை பண்ணிக்கிறதுங்கிறது அடுத்தவனைக் கொல்றதைவிட மோசமான காரியம். நான் அதைச் செய்யமாட்டேன்..”

அவன் பிடிவாதமாயிருந்தான். அவன் மேல் அனுதாபமுள்ளவர்களாலே கூட அவனைத் திருத்தவோ, மாற்றவோ முடியவில்லை.

கல்லூரி டிபார்ட்மெண்டல் என்குயரி, போலீஸ் என்குயரி, நீதி விசாரணை, எல்லாவற்றிலும் அவன் தனது பிடிவாதப்படியே அந்தக் கவிதைகளை எழுதியவன் தானே என்று கர்வத்தோடு நிமிர்ந்து நின்று சொந்தம் கொண்டாடினான். அடித்துச் சொன்னான். நிரூபிக்கக்கூட முற்பட்டான்.

வக்கிர குணமுள்ள பேராசிரியை அவனை வம்பில் மாட்டி வைத்ததோ; எப்போதோ அவன் எழுதிய புரட்சிக் கவிதையை யாரோ யாரையோ கொலை செய்த இடத்தில் கண்டது அவன் குற்றமில்லை என்பதோ வெளிப்படவே வழி பிறக்கவில்லை. பேராசிரியையிடம் முறைகேடாக நடந்து கொண்டதற்காகவும்; ஒரு கொலைக்குத் தூண்டியதற்காகவும் அவன் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றான். விலங்கு மாட்டி அவனை இழுத்துச் சென்றார்கள்.

அவன் ஜெயிலுக்குப் போனான். தலை நிமிர்ந்து கர்வத்தோடு போனான். பத்து ஆண்டுகளுக்குப் பின் அவன் மறுபடி விடுதலையாகி வெளியே வருகிறபோது இந்நாட்டுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், அவனை ஒரு மகாகவியாக வரவேற்கத் தெரிந்து கொண்டிருக்கும். அதிர்ஷ்டம் இல்லாவிட்டால் அதற்கு அவன் என்ன செய்ய முடியும்? நாட்டின் எத்தனையோ பல துரதிர்ஷ்டங்களில் அதுவும் ஒன்றாயிருக்கும்.

(சிறுகதைக் களஞ்சியம், 1986)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *