பொய்முகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 9,499 
 

என்ன சமையல் இன்னிக்கு?

புதினாக் கீரையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, குரல்கேட்டு, நிமிர்ந்தேன். வீட்டுக்காரர் கன்னியப்பன், நின்று கொண்டிருந்தார்.

புதினா சாதம் செய்யலாம்னு இருக்கேன். வேலைக்குப் போகலையா?

இல்லேங்க. குடலுருவி மாரியம்மன் கோவில்ல குண்டம் இறங்கறாங்க, அங்கதான் போறேன். ரெண்டு நாள் லீவு சொல்லிட்டேன். நாளைக்கு, எங்க அக்காவீட்ல, குலதெய்வம் கோவிலுக்குக் கிடா வெட்டுறாங்க, அங்க போகணும். நீங்களும் வாங்களேன்.

இல்லேங்க, நாளைக்கு எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ஆதரவற்றவங்களுக்குச் சாப்பாடும், துணியும், குழந்தைகளுக்குப் பென்சில், பேனா, புத்தகங்களும் தர்றோம். முடிஞ்சா நீங்க அங்க வாங்க.

எம்.ஜி.ஆர்தான் செத்துப் போயிட்டாரே, இன்னும் ஏன் அவரைப் புடிச்சுக்கிட்டு, பொழைப்பைக் கெடுத்துக்கறீங்க?

கன்னியப்பனுடைய அறியாமையை நினைத்துக் கோபம் ஏற்பட்டாலும், அவர் வீட்டுக்குக் குடிவந்து, சில நாட்களே ஆனபோதும், அவர் பொது அறிவில் பூஜ்யம் என்பதைப் புரிந்துகொண்டதால், பேச்சைத் திசைமாற்றினேன்.

ஏங்க பெரியார் மறைஞ்சிட்டாலும், அவரோட லட்சியம் நிறைவேறினதாலதானே, நாம ரெண்டுபேரும், என்ன ஜாதின்னு விசாரிச்சுக்காம, இப்படிப் பேசிக்கிட்டிருக்கோம்! சாதாரண மனிதர்கள்தான் மறைகிறார்கள். மகான்கள் மறைவதில்லைன்னு அறிஞர் ஒருத்தர் சொல்லியிருக்கார். லட்சியவாதிகளுக்கு ஏது மரணம்? அவங்க எப்பவும் நம்மகூட இருந்து வழி நடத்திட்டு இருப்பாங்க.

நீங்க பேசறதப் பார்த்தா, கோவிலுக்கெல்லாம் போக மாட்டீங்க போலிருக்கே?

மத்தவங்களுக்குத் துன்பம் தராம, முடிஞ்சவரை உதவி செஞ்சுட்டு இருந்தாலே, போதும்னு நினைக்கறவன் நான். இந்த ஊர்ல, வீதிக்கு ரெண்டுகோவில் இருக்கு. ஆனா மொத்த ஊருக்கும், ஒரு பொதுக்கழிப்பிடமோ, கட்டணக் கழிப்பிடமோ இல்லை. ஜனங்க, எத்தனைக் கஷ்டப்படுறாங்க? எது அவசியமோ அதவிட்டுட்டு, மத்ததையெல்லாம் செஞ்சு, என்ன பிரயோசனம்?

கடவுள் இல்லேன்னு மட்டும் சொல்லாதீங்க. நீங்க இவ்வளவு புத்திசாலியா இருந்தும், ஏன் கஷ்டப்படுறீங்க? உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாததாலதான்.

மேற்கொண்டு பேசுவது மனக்கசப்பை உண்டாக்கும் என்பதால், எழுந்துபோய்ச் சமையல் வேலையைக் கவனித்தேன். கன்னியப்பன் சில நிமிடங்கள் நின்று பார்த்துவிட்டுப் போய்விட்டார்.

அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால், அறையைப் பூட்டிவிட்டு, நூலகத்திற்குச் செல்ல, மாடியிலிருந்து இறங்கினேன். என்னைப் பார்த்ததும், கீழே குடியிருந்த விஜயா, பட்டென எழுந்து வீட்டுக்குள் போய்க் கதவைப்படாரென அடித்துச் சாத்தினாள். எனக்குக் குழப்பம் ஏற்பட்டது. வெளிக்கதவைத் தாண்டும்போது, குளியலறையிலிருந்து வெளியே வந்த சூர்யா, என்னைப் பார்த்ததும் காறித் துப்பிவிட்டு நகர்ந்தாள். என்ன ஆயிற்று, இந்தப் பெண்களுக்கு? அவமானத்தால் கூனிக் குறுகி நடந்தேன்.

அந்தச் சம்பவத்திற்குப்பின் அக்கம்பக்கத்திலிருந்த எல்லோருடைய பார்வையிலும், வெறுப்பும், விரோதமும் கலந்திருந்தது. காரணம் புரியாமல், மன உளைச்சலால், நிம்மதி தொலைந்து, உறக்கமிழந்தேன். சொந்த உபயோகத்திற்கு வீடு வேண்டுமென்பதால், வேறு வீடு பார்த்துக்கொள்ளும்படிக் கன்னியப்பன் சொன்னபோது, என்னைச் சுற்றி என்னதான் நடக்கிறது என்று புரியாமல் , தலை சுற்றியது. கன்னியப்பனிடம் வீடு காலி செய்ய ஒரு வாரஅவகாசம் கேட்டுக் கொண்டேன்.

டேவிட் லீன் இயக்கிய லாரன்ஸ் ஆப் அரேபியா என்ற மிக நீளமான ஆங்கிலப்படத்தைப் பார்த்துவிட்டுத் தாமதமாகப் படுக்கச் சென்றதில், மறுநாள் எழமுடியாமல் அசதியில் கிடந்தபோது, வெளியே கூச்சலும், குழப்பமுமாய் இருந்தது.

சோர்வாக எழுந்து வெளியே வந்தேன். பக்கத்துக் காம்பௌண்டிலிருக்கும் சரசா, என் அறைக்கு நேர்கீழே இருக்கும் சூர்யாவிடம், அச்சிடமுடியாத ஆபாச வார்த்தைகளைக் கூறி, ஆவேசமாகக் கத்திக் கொண்டிருந்தாள்.

என் அறைக்குப் பக்கத்திலிருக்கும் சத்யாவிடம் என்னம்மா சத்யா என்ன சண்டை? என்று கேட்டேன்.

அண்ணா, சூர்யாவோட பையன் கண்ணன், பொம்பளைங்க குளிக்கும்போது, சுவத்துமேலே தொத்திட்டு எட்டிப் பார்த்துட்டு இருந்திருக்கான். கதவு ஓட்டை வழியாவும், பார்த்திருக்கான். இத்தனை நாளா, யாரோ பார்க்கறாங்கன்னு தோணும். ஆனா, யாருனு தெரியாம குழம்பிப் போயிருந்தோம். இப்பக் கையும் களவுமா, மாட்டிக்கிட்டான். தினம் கோவிலுக்குப் போய் அர்ச்சனைபண்ற கண்ணனை இன்னிக்குச் சரசா அர்ச்சனை செய்யறா?

சில நாட்களாக, என்னைச் சூழ்ந்திருந்த இருள் சட்டென விலகியது. கண்ணன் செய்த தப்புக்கு, நான் வீணாகப் பழி சுமந்திருக்கிறேன். எல்லோருமே என்னைச் சந்தேகித்ததால்தான் வெறுப்பான பார்வைகளும், வீட்டைக் காலிசெய்யச் சொல்லி உத்தரவும் பிறந்திருக்கின்றன.

ஆமா சத்யா, இந்தக் காம்பௌண்ட்லே ஒரு வயசான அம்மா, எப்பவும் திண்ணையிலே படுத்துட்டு இருக்கறாங்களே, அவங்க யாரு? அவங்களுக்கு யாருமில்லையா?

அது, வீட்டுக்காரர் கன்னியப்பனோட அம்மாதாங்கண்ணா. கன்னியப்பன், அவங்கம்மாவ, எப்பவும் திட்டிக்கிட்டும், அடிச்சுக்கிட்டும் இருக்கும். அந்தம்மாவுக்குச், சாப்பாடும் போடறதில்லை. தான் மட்டும் ஓட்டல்லே வாங்கிச் சாப்பிட்டுக்கும். பாவம், நாங்கதான் அப்பப்ப ஏதாவது கொடுப்போம்.

சத்யா சொல்லிமுடிக்கும் போது, மேலே வந்த கன்னியப்பன், சார் நீங்க வீடு காலிசெய்யவேண்டாம். நீங்க சாமியெல்லாம் கும்பிடறதில்லையா, நீங்கதான் தப்பா நடந்துக்கிட்டீங்கன்னு நாங்க நினைச்சுக்கிட்டோம். நீங்க எவ்வளவு காலம் வேணுமின்னாலும் இங்கேயே இருக்கலாம்.

இல்லேங்க நான் இன்னிக்கே வீட்டைக் காலி செய்துக்கிறேன். கடவுள் நம்பிக்கை இருக்கறவங்க எல்லாம் புனிதமானவங்க, மத்தவங்க எல்லாம் அயோக்கியர்கள்னு எல்லோரும் நினைக்கறமாதிரியே, நீங்களும் நினைக்கறீங்க. எத்தனை சாமியார்களைப் பத்திப் படிச்சாலும், தொலைக்காட்சியில் பார்த்தாலும் உங்க அபிப்ராயத்தை மட்டும் மாத்திக்கவே மாட்டீங்க. எல்லா நோய்களைவிடவும், அறியாமை நோய்தான் ரொம்பக் கொடுமையானது. கணக்குப் பார்த்து அட்வான்சைக் கழிச்சிட்டு மீதியக்கொடுக்கிறீங்களா?

கன்னியப்பன் கீழே இறங்கிப்போனதும், சத்யாவிடம் சொன்னேன்,

சத்யா, என் அறையிலிருக்கற மளிகைச் சாமான் எல்லாத்தையும் தர்றேன். கன்னியப்பன் தர்ற பணத்தையும் தர்றேன். கன்னியப்பனோட அம்மாவுக்கு வாய்க்கு ருசியா செஞ்சு கொடுங்க.

– ஜூன் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *