பைரவ தரிசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 2,366 
 
 

மஸ்கட்டில். இருந்து வந்த வாசகர் அன்பளித்துச் சென்ற ஸ்மார்ட் ஃபோன் நோண்டிக்கொண்டிருந்தார் கும்பமுனி. அப்படி எல்லாம் கொடுப்பார்களா என்று கேட்டால் என்னத்தைச் சொல்ல? ‘வேணும்னா சக்கை வேரிலேயும் காய்க்கும்!’ முல்லைக்கொடிக்குத் தேர் ஈந்த பாரியை வள்ளல் என்பதுதானே தமிழ் மரபு. மனதில்லாதவன் தானே அதை மடத்தனம் என்பான். மேலும் கொடை மடம் என்றும் உண்டே தமிழில்!

“விடிஞ்சா எந்திரிச்சா இப்பம் இது ஒரு தீனமாட்டுல்லா ஆகிப் போச்சு ஒமக்கு! எப்பப் பாத்தாலும், நடக்கத் தொடங்கின ஆம்பிளைப் பிள்ளையோ குஞ்சாமணியைப் புடிச்சுக்கிட்டே நடக்கது மாதிரி…” என்று முனகியவாறு, கட்டஞ்சாயா கிளாசை ‘டொக்’ கென்று யன்னல் விளிம்பில் வைத்தார் தவசிப்பிள்ளை.

“ஒமக்கு என்னவே மூலத்துல காந்துகு?” என்று அனிச்சையாக இடது கையால் சாயா கிளாசை எடுக்கப் போனார் கும்பமுனி. கை தடுக்கி ‘மடார்’ என விழுந்து உடைந்து கொதிக்கும் கட்டஞ்சாயா கும்பமுனியின் கால் படத்தில் தெறித்தது.

“காலனாப் போவான்… காலு அவிஞ்சு போச்சுவே!” என்று கத்தினார்

“கிளாசும் ஒடச்சுட்டு எங்கிட்ட எதுக்கு எரிஞ்சு விழுகேரு? பாத்து எடுக்கப் பிடாதா? அதென்ன பாட்டா, புதுப் பொண்டாட்டி மாதிரி அந்த எளவையே ராப்பகலா தடவித் தைவரல் செய்துக்கிட்டு கெடக்கேரு?”

கும்பமுனியிடம் பழங்காலத்துப் பாண்டம் பிடித்த ஓட்டை உடைசல் செல்ஃபோன் ஒன்றிருந்தது. கால் வந்தால் பட்டனை அழுத்தி ‘அல்லோ’ சொல்லிப் பேசுவார். எவனையாவது அபூர்வமாக அழைக்கவேண்டும் என்றால், அழுக்கடைந்த விளிம்பு மடங்கிய எண்ணெய்ப் பிசுக்கு ஏறிய பழைய டைரி எடுத்து எண் தேடி எடுத்து செல்ஃபோன் பட்டன்களைக் குத்துவார். கவண்கல் எறிந்தவனிடம் ஏ.கே.47 கொடுத்தது போல இப்போது கும்புமுனி கையில் ஸ்மார்ட் ஃபோன். அவர் பாடு புதுப்பாம்பைப் பயிற்றும் பிடாரன் போலிருந்தது.

“சரி! போட்டும், இதோட 639 கிளாஸ் உடைச்சாச்சு… நல்ல கடுப்பம் கூட்டி, புதுசா ஒரு சாயா போட்டுக் கொண்டாரும்” என்றார் கும்பமுனி.

“இதேதான் சோலி! வேலையத்த அரசாங்கம் கழுதைக் கணக்கெடுப்பு நடத்துன மாதிரி…” என்றொரு பஞ்ச் டயலாக் வீசிவிட்டுப் போனார் தவசிப்பிள்ளை ,

கால்களை மடக்கி சற்றே சாய்வான கால் நாற்காலியில் தூக்கி வைத்துக்கொண்டு கௌபீணம் அணியாத காரணத்தால் வடசேரி கைத்தறி ஒற்றை வேட்டியை ஒதுக்கி மறைத்துக்கொண்டு கருமமே கண்ணாயிருந்தார் கும்பமுனி. திடீரென முகத்தில் ஆன்மீக தேஜசும் அருள் வெள்ளமும் பாய, குதூகலத்துடன் நிமிரவும் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை மறுபடியும் கட்டஞ்சாயாவுடன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

பெரும் பரவசத்துடன் தவசிப்பிள்ளையை ஏறிட்டுப்பார்த்தார். “வே! கண்ணுவிள்ளே! அப்பிடியே எனக்குப் பொறத்த வந்து நில்லும் சாயா கிளாஸ் கையிலேயே இருக்கட்டும்” என்றார்.

‘எழவெடுத்த முடிவான் என்னத்துக்குச் சொல்லுகாம்ணு தெரியலையே’ என்று யோசித்தவாறு, ஆரல் நாற்காலிக்குப் பின்னால் போய் நின்றார். நின்றவர், கும்பமுனி கையில் இருந்த மொபைல் ஃபோனைப் பார்த்தார். முன்னால எல்லாம் தட்டட்டிக்குப் பாவப்பட்ட சுடு செங்கலு போல இருக்கும். இப்பம் சிலேட் கேணக்க கொண்டாந்துட்டான்’ என்று நினைத்தார். அப்படியே, கொதிக்கும் கட்டம் சாயாவைக் கும்பமுனி தலையில் கவிழ்க்கலாமா என்றும் தோன்றியது. கும்பமுனி மூத்த எழுத்தாளர். சாகாவரம் பெற்ற கவிதைகள் படைக்கிறவர். மேலும் போக சாஸ்த்திரத்திலும் கொஞ்சம் அப்பியாசம் உண்டு.

“வே! நினைச்ச மாதிரி செஞ்சிராதீரும்!” என்றார் கும்பமுனி.

“என்ன, தமிழ் சினிமா டயலாக் பேசுகேரு, செஞ்சிருவேன்னு?” என்றார் தவசிப்பிள்ளை.

மொபைலை நோண்டிக்கொண்டிருந்த கும்பமுனி, ஏதோ ஒரு புள்ளியில் தொட்டார். ஏதோ Gspot தொட்டுவிட்ட அனுபூதி இருந்தது. அவர் முகத்தில் ‘க்றிச்’ என்று அணில் கொறிக்கும் சத்தமும் வந்தது மொபைலில்.

“இப்பம் முன்னால வாரும் வே” என்றார் கும்பமுனி. இன்னமும் சாயா கிளாசைக் கையில் ஏந்திய சித்திரப்பதுமையாக நின்றிருந்த தவசிப்பிள்ளை, முன்னால் வந்தார். கும்பமுனி அவரிடம் மொபைல் போனைக் காட்டினார். கும்பமுனியின் பின்புறம், கையில் சாயா கிளாசுடன், வலிச்சம் காட்டுவது போல் முகம் வைத்துக்கொண்டு தவசிப்பிள்ளை நிற்கும் படம் மொபைலில் தெரிந்தது. பண்ணைத் தலைவர் பின்னால் நிற்கும் மொண்ணைத் தலைவர் போல.

“அட… பாட்டா! கொள்ளாமே ஒண்ணுமே தெரியாத பாப்பா ஓர்மையாப் போட்டாளாம் தாப்பாங்கிற கதை மாதிரியில்லா இருக்கு! போட்டோ எடுக்கப் படிச்சுக்கிட்டேரே!” என்றார் தவசிப்பிள்ளை.

“இது போட்டோ இல்லவே!”

“பின்ன ?”

“செல்ஃபி”

“செல்ஃபிண்ணாடி”

“அதாம் பாத்தேருல்லா”

“ஓ! இதானா அது?”

“என்ன இதானா?”

“காலம்பற கோணவில் எஃப்எம்லே ஒரு பாட்டு வைப்பான் பாட்டா… செல்ஃபி கண்ணு உம்மா, உம்மா… செல்ஃபி கண்ணு உம்மா, உம்மா அப்டீண்னு … அதான இது?”

“இந்த வயசுக்கு அந்த மாதிரிப் பாட்டுத் தேவை தான் உமக்கு…..”

“ஆனாலும் சரியாப் புடிச்சிட்டேரே!”

“செல்ஃபி எடுக்கணும்னா இந்த மாதிரி ஃபோன் வேணும்வே! பேப்பர்லே படிக்கலியா நீரு? படமெடுத்த பாம்புக்கு முத்தம் குடுக்கது போல ஒருத்தன் செல்ஃபி எடுத்து அது அவனைப் போட்டுத் தள்ளீட்டுண்ணு போட்டிருந்தானே!”

“முத்தம் குடுக்கதை எல்லாமா செல்ஃபி எடுப்பான்?”

“நீரு ஒருத்தர்… சேரமான் பெருமாள் காலத்து ஆளு… அண்டர்வேரு கூடப் போடாம செல்ஃபி எடுத்து காதலன் காதலிக்கும், காதலி காதலனுக்கும் பரிமாறிக்கிடுதாங்களாம் …”

“ஏன் அதுக்கு போட்டோ எதுக்கு? நேரிலே காட்னாப் போதாதா…?”

“போட்டோ எடுத்தா தானவே பேஸ்புக்ல போட முடியும்?”

“அது என்னது? நீரு எழுதப்பட்ட… பொஸ்தகம் போலயா?”

“அதெல்லாம் பொறவு சொல்லுகேன்… எல்லாம் ஒரேடியாச் சொன்னா ஒமக்கு மனசிலாகாது…”

“அதும் அப்பிடியா? மொதல்ல நீரு மனசிலாக்கிக்கிடும். பொறவு எனக்குச் சொல்லும்… அது கெடக்கட்டும் பாட்டா… இப்பம் நீரு யாருகூட செல்ஃபி எடுத்து என்ன செய்யப் போறேரு?’

“உமக்குத் தெரியாது வே! பாரதப் பிரதமர் கூட செல்ஃபி எடுக்கலாம்… கவர்ச்சி நடிகை கூட எடுக்கலாம்.. நாட்டுக்குப் பல விதத்திலேயும் கடும்பணியாற்றிப் பெருந்தொண்டு செய்து பத்மவிபூஷன் வாங்கிய சூப்பர் ஸ்டாரு கூட எடுக்கலாம்…”

“செத்துப்போன தலைவர் பொணத்தோட எடுக்கலாம்… கோயில் கொடைக்கு ஆராசனை வந்து ஆடப்பட்ட சொள்ளமாடன், கழுமாடன், புலமாடன், முத்துப்பட்டன், சங்கிலிப்பூதத்தான் கூட எடுக்கலாம். தெனமும் காலம்பற பேண்ட பீக்குக் கூட வேணும்னாலும் எடுக்கலாம்…”

“சே… அசிங்கம் புடிச்ச மனுசன்… என்ன பேச்சுப் பேசுகேரு? வயசுதான் ஆகு… ரசனை கூட மாட்டங்கே வே…”

“ஆமாமா.. ஒம்ம ரசனை பதினெட்டுப்பட்டிக்கும் நாட்டாமை பண்ணுது… அது கெடக்கட்டும்… இப்பிடி பதினேழு வயசுப் பிள்ளையோ மாதிரி மொபைலப் போட்டு நோண்டுகதுக்கு, உக்காந்து நாலுபக்கம் என்ன எழவாம் பின்னவீனத்துவம் கீச்சித் தள்ளப்பிடாதா பாட்டா? அகத்தியர்ட்டே இருந்து தமிழ் பொறந்தது மாதிரி அவனவன் தன்னிடம் இருந்துதான் பின்னவீனத்துவம் புறப்பட்டதுண்ணு பொலம்ப ஆரம்பிச்சாச்சு… மூணுமாசமா ஒரு செக்கும் வரல்லே மணியார்டரும் வரல்லே… ஆன்லைன்லே என்னவாம் துட்டு டிரான்ஸ்பர் ஆச்சுண்ணா வாயே தொறக்க மாட்டங்கேரு…” என்றார் தவசிப்பிள்ளை.

“ஒமக்கென்ன புத்தி முட்டு வந்திற்று இப்பம்? கஞ்சிக்கு சம்பாப் புழுங்கலரிசிக் குறுணை கெடக்கு… தொவையலுக்கு காணம், பொரிகடலை, சிறுபயறு கெடக்கு… நெத்துத் தேங்கா கெடக்கு… சாயாப்பொடிக்கும் பஞ்ச சாரைக்கும் மட்டும் துட்டு பாக்கணும்…”

“ஒமக்கு எழுதுகதுக்கு ஏகப்பட்ட ஊருக் குசும்பு கெடக்கு… பாட்டா, எனக்கொரு சம்சயம், கேக்கட்டா?”

“நீரு கடவுளைப் பாத்தாலும் காரியமாட்டு என்னமும் கேக்க மாட்டேரே! சந்தேகம் தான கேப்பேரு… கேளும்!”

“அது கடவுளு நேருலே வரப்பட்ட காலத்திலே பாத்துக்கிடலாம்… அவுரு எந்த எழுத்தாளருக்கு குசினிக்காரருக்கு தாம் காட்சி கொடுத்திருக்காரா பாட்டா? அது போட்டும்… எந்த எழுத்தாளருக்காவது காட்சி. கொடுத்திருக்காரா? சொல்லுமே பாப்போம்!”

“ஏம் வே? காரைக்காலம்மைக்கு ஞானசம்பந்தருக்கு எல்லாம் காட்சி கொடுக்கலியா?”

“வேண்டாம்… சொன்னாக்கேளும்… பொறவு என் வாயிலேருந்து என்னமாம் வந்திடும்… ஞானப்பாலு குடிச்ச பிள்ளையும் நீலகண்டனே அம்மைண்ணு கூப்பிட்ட அம்மையும் நீரும் ஒண்ணாவே? ஒம்ம யோக்கியதை கெடந்து அழுக்குக் கோமணம்போல காத்துல பறக்கது எனக்குல்லா தெரியும்!”

“சரிவே/ விடும் அந்தால… கூடப் பொறந்தே கொல்லப்பட்ட ரோகம்ணு சொல்லுகது சரியாத்தான் இருக்கு….”

“சரி! கடவுளே ஒம்ம முன்னால வந்து நிண்ணா என்ன கேப்பேரு நீரு? ஒரு பாரத ரத்னா கேப்பேரா? அப்பிடி ஒரு நெனப்பிருந்தா அதுல நாய் பறிச்ச மண்ணை வாரிப் போடும்… அதெல்லாம் கடவுளாலயும் தரமுடியாது… ரஜினி காந்தும் நீரும் ஒண்ணா பாட்டா? மத்திய மந்திரி அஞ்செட்டுப் பேரு ஒம்ம பொறத்தால அலையதுக்கு? வேணும்னா கடவுள் கூட ஒரு செல்பி எடுத்துக்கிடலாம்…” படபட என்று வந்தது தவசிப்பிள்ளைக்கு.

கும்பமுனி தனது படைப்பாளுமையின் ஞானக்கண்கொண்டு பார்த்தார், சற்றே சாய்வான கால் நாற்காலியில் கும்பமுனி வீற்றிருக்க, அவர் பின்னால் இடப வாகனத்தின் மேலமர்ந்த பொன்னார் மேனியன். (இந்த இடத்தில் பொன்னார் என்றால் பொன்.இராதாகிருஷ்ணன் எனும் மத்திய அமைச்சர் அல்ல) புலித்தோலை அரையில் உடுத்து, கழுத்தில் விட நாகம் பூண்டு, கையில் பினாகம் எனும் வில் அல்லது முச்சூலம் தரித்து, சடையில் பிள்ளை மதி சூடி, தலையில் கங்கை அணிந்து, கண்டத்தில் ஆலகால விடத்தின் நீலத் தழும்புடன் மாலையாய்க் குளிர்கொன்றை… கும்பமுனி மனதில் திரு நேரிசைத் தேவாரம் ஒன்றும் பாய்ந்தது.

” நங்கையைப் பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரியை வைத்தார்
தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே!”

காட்சியில் மெய்ம் மறந்து திளைத்து மோனத் துயில் புரிந்தார்.

‘கௌவனுக்கு என்ன எளவோ ஆகிப்போச்சு’ என்று யோசித்த தவசிப்பிள்ளைக்கு, கடவுளைக் கனாக்கண்டு கொண்டிருப்பாரோ என்றும் தோன்றியது.

பக்கத்து வளைவில் இருந்து எதையோ கவ்விக்கொண்டு வந்த வெள்ளையும் கறுப்பும் மிடைந்த நிறமுடைய தெருநாயொன்று, கும்பமுனியின் பின்பக்கப் படிப்புரையின் கைப்பிடிச்சுவரில் குதித்து ஏறித் தனது வழக்கமான பைரவர் கோலத்தில் நின்றது. கருத்தும் காட்சியும் சங்கமிக்க, தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை மதனமோகன மந்தகாசப் புன்னகை ஒன்று சிந்தினார். அரைக்கண்ணில் அறிதுயில் கலைந்த கும்பமுனி கேட்டார், வெடுக்கென்று.

“என்ன வே? எல்லாம் பத்திரமா மூடித்தாலா இருக்கு? என்னத்துக்கு இப்பம் ஊமைச் சிரிப்பாணி?”

“பாட்டா… நீரு இப்பம் கடவுள் காட்சிப் படுவது பற்றி நெனைச்சேரா?” “ஆமா! எதுக்குக் கேட்டேரு?” “அப்படியே அசையாம இரியும்… பொறத்த சாட்சாத் பழைய பரமசிவமே வந்து நிக்காரு… திரும்பாதையும்…”

பரவசமும் மெய்சிலிர்ப்புமாக, உடம்பை சுடலைமாடனுக்கு ஆடும் கோமகூத்தாடி போலக் குலுக்கிக் கொண்டு, கும்பமுனி,

“உள்ளதா வே? சொக்கனி பேசுகேரா, இல்ல, கண்டதைச் சொல்லுகேரா?” என்றார் கன்னத்துக் குழிகளினுள் கவுசலம் கரந்து கொண்டு, தவசிப்பிள்ளை சொன்னார்.

“இதுல போயி வெளையாடுவேனா பாட்டா? நீரே பாடும்! எனக்கு உடம்பெல்லாம் முள்ளம்பன்னி போல மயிரு சிலுத்து நிக்கதை…”

“சரியாப் பாத்துச் சொல்லு டே! புதுமைப்பித்தன் கந்தசாமிப் பிள்ளைக்குக் கடவுள் காட்சிப் பட்டதைப் போலவா?”

“எனக்கு புலமைப்பித்தன், கவிப்பித்தன், பாரதிப்பித்தன் ஒருத்தனையும் தெரியாது! கந்தசாமி தேவரா, நாடாரா, கவுண்டரா, நாயக்கரா, கோனாரா, செட்டியாரா… ஒண்ணும் தெரியாது…”

“நல்லாப் பாரும் வே… திரிசூலம் விட நாகம், கங்கை, இளம்பிறை, கொன்றை, இடப்பாதியிலே உமை, வாகனமாகக் காளை எல்லாம் இருக்கா?”

“எல்லாம் தத்ரூபமா இருக்கு பாட்டா…”

“அப்பம் ஒரு காரியம் செய்யும்… இந்தா இந்த ஸ்மார்ட் போனை வாங்கி ஒரு போட்டோ பிடியும்.. உடனே பேஸ்புக்ல போடணும்… கொறயப் பேருக்கு நாம யாருண்ணு காட்டணும்…”

“இரியும் பாட்டா… நானும் ஒம்ம பொறத்த போயி நிக்கேன் நீரே செல்ஃபி எடுத்திரும்…”

கும்பமுனிக்கு எழுத்தாள அகங்காரம் ஏறி அடித்தது.

“பேசாம கெடயும்… சொன்னதை மட்டும் செய்யும் என்னா? ஒரு சிருஷ்டி கர்த்தாவுக்குப் பொறத்த இன்னொரு சிருஷ்டி கர்த்தா… நீரு எங்கேருந்து எடையிலே வருவேரு? இந்தாரும்… இதைப் பிடியும்… நானும் தில்லைச் சிதம்பர நடராசனும் காளை வாகனம் உட்பட எல்லாம் கிளியரா வரணும்… பாத்து… இந்தா இந்தப் பட்டனை மாத்திரம் தொட்டாப் போதும் என்னா? சிரத்தையாப் பண்ணணும்… ஆலமுண்ட சிவன் இன்னொரு மட்டம் வரமாட்டாரு… இது சும்ம காணத் தொவையலு அரைக்கப்பட்ட காரியம் இல்ல பாத்துக்கிடும்… கேட்டேரா…?”

“அதெல்லாம் செய்திருவேன்… நீரு சலம்பாம அதைக் கொண்டாரும்…” என்று கேட்டு வாங்கி, படம் பிடித்தார் தவசிப்பிள்ளை. எதற்கும் இருக்கட்டும் என்று மேலும் இரண்டு படங்கள் எடுத்துக்கொண்டார். கடவுள் கோலங் களைந்துவிடப்போகிறார் என்று அஞ்சி, கும்பமுனி பழைய தமிழ் சினிமாவின் கதாநாயகி, முதலிரவுக் காட்சியில் பால் செம்பு ஏந்தி நிற்பது போன்று, அனங்காமல் உட்கார்ந்திருக்கிறார்.

வாயில் கவ்வி வந்ததைச் சத்தமின்றித் தின்று முடித்த பைரவர், அரவமின்றிக் குதித்து, அவசர சோலியாய் அடுத்த வளவுக்குள் ஓடியது. தவசிப்பிள்ளை , சிரிப்பதைத் துறந்த யோகிபோல, செல்போனைக் கும்பமுனியிடம் நீட்டிவிட்டு, வாய்விட்டுச் சிரிக்க என்று அடுக்களைக்குள் ஓடினார். ஆவலை அடக்க முடியாத கும்பமுனி நேரில் இறைப்பரவசம் உணர்வதற்காகத் தலையைத் திருப்பினார்.

‘உடல் குழைய என்பெலாம் நெக்குருக
விழிநீர்கள் ஊற்றென வெதும்பி ஊற்ற.’

அந்தக் காட்சியைக் காண விழைந்தார். காலங்காலமாய்க் கணக்கற்ற சிவனடியார்களுக்கு அருளப்பட்டிராத காட்சி. மேலும் சமகாலத் தமிழ்நாட்டு அரசியல் பற்றியும் நவீனத் தமிழ்க் கவிதை பற்றியும் கும்பமுனிக்கு சிவனாண்டியிடம் கேட்கச் சில சந்தேகங்கள் இருந்தன.

ஆனால், ஐயகோ, என்ன பரிதாபம்! கும்பமுனி, ‘கண் காட்டும் நுதலானை, கனல் காட்டும் கையானை, பெண் காட்டும் உருவானை, பிறை காட்டும் சடையானை, பண் காட்டும் இசையானை, பயிர்காட்டும் புயலானை, வெண்காட்டில் உறைவானை, விடை காட்டும் கொடியானைக் கண்டார் இல்லை ! படிப்புரைச் சுவரின் பின்புறம் எடுக்கலை மூடும் பீநாறிச் செடிகளும் மற்றும் ஏக வெளியும்….

வாய்த்த கைலாயம் வாய் நழுவிப் போன மருட்சி. அவசரமாக செல்ஃபோனை நோண்டி, தவசிப்பிள்ளை எடுத்த படங்களைத் தடவி மீட்டெடுத்தார். தன் பிறகு வசம், வறட்டுச் சொறிப்பட்டி எதையோ கடித்து மென்று நின்றிருந்த காட்சி. மூத்த பின்நவீனத்துவத் தமிழ் எழுத்தாளனின் பழுதுபட்ட கிழட்டு இருதயம் படபடவெனத் துடித்து, சற்று நேரம் நின்று, பின்பு சீராக அடிக்கத் துவங்கியது.

– மணல் வீடு – ஏப்ரல் 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *