பேய்க் காற்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,039 
 
 

மாம்பிஞ்சுகள் விடத் தொடங்கியிருந்தது காலம். மாங்காய்களை கூடை நிறைய எடுத்து வந்து துண்டாக்கி, உப்பும் மிளகாய்த்தூளும் போட்டு, சாப்பிட சுவையாக விற்பாள் மிட்டாய்க் கிழவி. மாங்காயின் புளிப்பு பிள்ளைகளின் நாக்கில் எச்சில் ஊறச் செய்யும். தமிழரசிதான் எப்பொழுதும் தின்பண்டம் வாங்க காசு கொண்டு வருவாள். அவளின் அப்பா பணக்காரர்.

~பணக்காரர்| என்றால் என்னவென்று சுப்ரு கேட்டான்.

“பெட்டி நிறைய காசு வச்சிருக்கிறவங்க பணக்காரங்க…” என்று மருதன் சொன்னதும், “என் அப்பா பெட்டியில கூட நிறைய காசு இருக்கு!” என்றான் சுப்ரு.

தரணியும் மருதனும் சிரித்தார்கள். சுப்ருவுக்கு அப்பாவும் கிடையாது பெட்டியில் காசும் கிடையாது. காசில்லாத அம்மா மட்டும்தான். அவன் ஏழை.

“உன் அப்பா பொட்டியில காசு இருக்காதுடா, தூசுதான் இருக்கும். நீ எழைடா”

ஏழை என்று சொன்னதும் சுப்ருவுக்கு கோபம் வந்துவிட்டது. கரண்ட் கம்பத்தருகே உட்கார்ந்து வெகு நேரம் அழுதான். பரிதாபப்பட்டு தமிழரசிதான் தின்பதற்கு வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்து வைத்தாள். தமிழரசி வாங்கிக்கொடுத்ததைத் தின்ற பிறகும்கூட ஏழை என்று சொல்லிய அவமானம் போகவில்லை. “நாளைக்கு நான் காசு எடுத்தாரேன் பாரு!” என்று அழுத கண்ணை துடைத்துக்கொண்டு வீட்டுக்குப் போனான்.

மறுநாள் அம்மாவிடம் காசு கேட்டு சுடச்சுட முதுகெல்லாம் காசு வாங்கினான். எல்லோர் வீட்டிலும் அப்பாவும், காசு நிறைந்த பெட்டியும் இருக்கும்போது தன் வீட்டில் இருந்த அப்பாவையும் பெட்டியையும் அம்மா என்ன செய்தாள் என்று புரியாமல் புலம்பியபடியே அவன் பள்ளிக்கு வந்தான்.

சுப்ருவுக்காக காத்திருந்த பிள்ளைகள், “காசு கொண்டாந்தியா…?” என்று கேட்டார்கள். இன்று மிட்டாய்க் கிழவியிடம் மாங்காய் வாங்கித் தின்ன ஆசைப்பட்டது அவர்கள் நாக்கு.

சுப்ரு, நிக்கர் பையில் கைவிட்டு இல்லாத காசைத் தேடினான்.

“ வர்ற வழியில மாடு முட்டி கீழ விழுந்துட்டேன். காசு தொலைஞ்சிடிச்சி…” என்றான்.

தரணி, “பொய்யி… பொய்யி!” என்று குதித்தான்.

“மெய்யாலுமே எடுத்தாந்தேன். பாரு இங்க…” என்று தன் முதுகைக் காட்டினான். அம்மா விறகுக் கட்டையில் அடித்தது சிவந்திருந்தது. மாடு முட்டியதாக நம்பி தமிழரசி பரிதாபப்பட்டாள்.

இன்றைக்கு தமிழரசியிடமும் காசு கிடையாது. என்ன செய்வது? மாங்காய் ஆசை பிள்ளைகளை வாட்டியது. மாங்காய் தின்னாமல் பள்ளிக்குப் போவது நரகமாக இருந்தது. சுப்ரு சொன்னான். “எனக்கு மாந்தோப்பு தெரியும். அங்க போனா நிறைய மாங்காய் திங்கலாம்.”

“அய்…யைய்யோ…! நான் மாட்டேன். மாந்தோப்புக்கு பீமன் காவல் இருப்பான். மாங்காய் திருடப் போறவங்கள கட்டிவச்சி மாங்காயாலயே ரத்தம் வர்ற வரையிலும் அடிப்பான்.” தரணி பயந்தான். பீமனைப் பற்றிய அதி பயங்கரமான கதைகளை தரணியின் அம்மா சொல்லியிருக்கிறாள்.

“பெரியவங்க போனாதான் அப்படி. சின்ன பசங்க போனா பீமனே மாங்காய் அறுத்து கை நிறைய தருவானாம்.” சுப்ரு சொன்னான். சுப்ருவுக்கு பயங்கரக் கதைகளை சொல்ல யாரும் கிடையாது. அவனே கதைகட்டிக்கொண்டு சொல்வான்.

பிள்ளைகளுக்கு பயமாகத்தான் இருந்தது ஆனாலும் மாங்காய் ஆசை விடுவதாய் இல்லை. பள்ளிக்கு கிழக்குப் பக்கமாக போக வேண்டியவர்கள், புத்தகப் பைகளை சுமந்துகொண்டு மேற்குப் பக்கத்து மாந்தோப்பிற்கு நான்கு பேரும் நடையை கட்டினார்கள். தோட்டத்திற்கு முன்பாக பீமன் இருந்தான். பிள்ளைகள் பதுங்கினார்கள். பெரிய மீசையும் முட்டைக் கண்களுமாக இருந்தான். சட்டை போடாமல் உருமால் கட்டிக்கொண்டு உயரமாய் பயமுறுத்திக்கொண்டு நின்றான். இவர்கள் பதுங்கினாலும் அவன் பார்த்துவிட்டான். மிரட்டி பக்கத்தல் வரும்படி சொன்னான். வந்து பயந்து நின்ற பிள்ளைகளிடம் பீமன் கேட்டான், “ஸ்கோலுக்கு போகாம இந்தப் பக்கம் எதுக்குடா வந்தீங்க…? உச்சி வெயில்ல பேய் வரும், தெரியாதா?”

தமிழரசியின் பின்னால் ஒளிந்து நின்ற சுப்ரு பீமனிடம் கேட்டான், “பேய் வந்தா நீ இங்க இருப்பியா…? அதெல்லாம் வராது. எனக்கு பேயப் பாத்தாலும் பயம் இல்லை” தைர்யமாக சொன்னான்.

பீமனுக்கு கோபமாக வந்தது. சிவந்த கண்களால் சுப்ருவை முறைத்தான். உச்சி வெய்யிலில் அவன் முகம் வேர்த்து இருந்தது. தன் உருமாலைக் கழட்டி முகத்தை துடைத்துக்கொண்டே, “போடா குள்ளப் பையா? நீ நம்ப மாட்டீயா? தோ… அங்க காத்து சொழன்டு அடிக்கிறது தெரியுதாடா? அங்க பாரு” அடர்த்தியான மாந்தோப்பிற்கு தெற்குப் புறத்தில் இருந்த பொட்டல் காட்டைக் காட்டினான்.

பிள்ளைகள் பார்த்தார்கள். தூரத்தில் மண்ணையும் சறகுகளைஞம் வாரி இறைத்தபடி நட்டுக்குத்தலாய் காற்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தது வெய்யிலில் மினுமினுவென்று தெரிந்தது.

“அது பேருதான் பேய்க் காத்து. அது நடுவுலதான் பேய் வரும். அது நடுவுல யாராவது மாட்டிக்கிட்டாங்க… அவ்ளோதான், செத்துப் போயிடுவாங்க.” பீமன் செத்துப்போன பிணத்துடையதைப் போல கண்களை பெரிதாக்கிக் காண்பித்து நாக்கை முடிந்தவரை வெளியே தள்ளி பயமுறுத்தினான்.

தமிழரசி பயந்து மருதன் கையை பிடித்துக்கொண்டாள். அவள் பயப்படுவதை பார்த்த பீமன் சின்ன சந்தோசத்தில் சொன்னான், “ஆமாண்டி பொண்ணு, பேய்க்கு பொண்ணுங்கன்னா உசிரு. அது உன்ன அலாக்கா தூக்கிட்டுப் போயி, மரத்து மேல உட்கார்ந்து…” எப்படி பேய் தமிழரசியை தூக்கிக்கொண்டு போகும் என்று செய்து காட்டினான்.

தமிழரசி பயத்தில் வெட வெடப்பாகி, “உட்கார்ந்து….?”

“இதோ இங்க நறுக்குனு கடிக்கும்” என்று தமிழரசியின் கழுத்தைக் தொட்டுக் காண்பித்து, பெரிதாய் வாய் திறந்து கடிப்பது போல வந்தான்.

தமிழரசி ~பே…| என்று கத்தியபடி பின்னால் விழுந்தாள். “விழுந்திட்டியா… ஐயோ சாமி, பேய் இப்ப வந்துடும்… இப்ப வந்துடும். ஐயோ நான் ஓடிப்போறேன்” என்று பீமன் பொய் பயத்தில் கத்தினான்.

அதைக் கேட்ட தரணி என்பவன் ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தான். மருதனும் தமிழரசியும் அவன் பின்னால் ஓடினார்கள். பேயைப் பார்த்தால் எனக்கு பயமில்லை என்று சொன்ன சுப்புரு எல்லோருக்கும் முன்பாக ஓடிக்கொண்டிருந்தான். பீமன் பேயைப் போல இடி இடியென சிரித்தான்.

மாதம்மாள் தமிழரசி சொன்னதைக் கேட்டு வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள். “பூதம் கழுத்தை கடிச்சிடுமா… எவன் சொன்னது?” தமிழரசியின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சியபடி கேட்டாள். முப்பது வயது மாதம்மாளுக்கு விளையாடும் பிள்ளைகள்தான் ரொம்பப் பிடிக்கும். அவளை ~கல்யாணமாகத திம்மச்சி| என்று தரணியின் அம்மா திட்டுவாள். அவளிடம் பிள்ளைகள் கொள்ளைப் பிரியமாக இருந்தது. அவள் மடியில் தின்பதற்கு எப்பொழுதும்; ஏதாவது இருந்துகொண்டே இருக்கும். அதுதான் காரணம்.

“புள்ளங்களா… நீங்க மாந்தோப்புக்கு போயி மாங்கா அறுக்கக் கூடாதுன்னுதான் பேய் வரும், பூதம் வரும்னு பயமுறுத்தியிருக்கான் அந்த தடிப்பய பீமன். கட்டாந்தரையில காத்தடிச்சா சருகுங்களும் மண்ணும் மேல பறக்கத்தான் செய்யும். அதுல பேய் வர சூறைக் காத்து என்ன மாட்டு வண்டியா…! அந்த பீமனுக்கு நான் தண்ணி காட்டறேன். என் கூட வாங்க.” என்று அவர்களை திரும்பவும் மாந்தோப்பிற்கு கூப்பிட்டாள் மாதம்மாள்.

மாதம்மாள் இருப்பதால் பேய்க்கு கொஞ்சமாக பயந்த அவர்கள் மாந்தோப்குக்கு கிளம்பினார்கள். மாதம்மாள் கிளம்புவதற்கு முன் கறிக் குழம்பில் இருந்து பொறுக்கி எடுக்கப் பட்ட ஆட்டு எலும்புத் துண்டுகளை ஒரு காகிதத்தில் சுருட்டி மடியில் வைத்துக்கொண்டாள். “பீமனை ஏமாத்த நான் இருக்கேன்… அவன் வளக்கிற நாயை ஏமாத்த இந்த எலும்புத் துண்டு போதும்” என்று சிரித்தாள் மாதம்மாள்.

மிகப்பெரிய மாந்தோப்பு அது. பீமன் ஒரு குடிசைப் போட்டு தோப்பின் முன்பக்கம் ஒரு நாயோடு குடித்தனம் செய்துகொண்டிருந்தான். இவர்கள் தோப்பிற்கு பின்பக்கமாக போனார்கள். காற்று எக்காளமாக சத்தம்போட்டபடி வீசியது. பீமன் காட்டியது போல பேய்க் காற்று அப்பொழுது வீசவில்லை. அது பிள்ளைகளுக்கு ஆறுதலாக இருந்தது.

தோப்பைச் சுற்றிலுமிருந்த முள்வேலியில் கொஞ்சம் இடைவெளி இருந்த இடத்தில் கவனமாக முள்ளை அப்புறப்படுத்திவிட்டு மாதம்மாள் முதலில் மாந்தோப்பிற்குள் போனாள். பிறகு பிள்ளைகள் ஒவ்வொருவராக உள்ளே போனார்கள். மாதம்மாள் கொண்டுவந்திருந்த எலும்புத் துண்டுகளை கொஞ்ச தூரம்போய் பொட்டுவிட்டு வந்து அதற்கு எதிர்புறமாக பிள்ளைகளை கூட்டிப் போனாள். மாந்தோப்பின் முன் பக்கத்துக் குடிசைக்குள் படுத்துக்கொண்டு பீமன் ~என்னடி முனியம்மா கண்ணுல மைய்யீ..யீ…| என்று குடித்துவிட்டு ராகம் இழுப்பது லேசாக கேட்டது. கூடவே நாயும் ~வள்… வள்…| என்று பாடிக்கொன்டிருந்தது.

மாதம்மாள் தாழ்வாய் இருந்த மரத்திலிருந்து மாங்காய்களை பறித்து பிள்ளைகளிடம் தந்தாள். மடியிலும் சட்டை, கால்சட்டைப் பையிலும் அவர்கள் திணித்துக்கொண்டிருந்தார்கள்.

“சீக்கிரம், சீக்கிரம். அவன் வரதுக்குள்ள ஓடிறணும்.” என்று மாதம்மாள் மாங்காய் பறித்து தன் மடியிலும் கட்டிக்கொண்டிருந்தாள். திடீரென்று நாயின் குரைப்புச் சத்தம் பக்கத்தில் கேட்டது. நாய் அவர்களை நோக்கி வருவது மரத்தின் சந்தில் தெரிந்தது. பீமன் அதன் சங்கிலியை பிடித்துக்கொண்டு வந்தான். ஓடிவரும் நாய் தங்களைக் கடிக்கப்போகிறது என்று பயந்து போனார்கள். ஆனால் நாய் மாதம்மாள் கொட்டிய எலும்பிருக்கும் பக்கமாக பீமனை இழுத்துக்கொண்டு ஓடியது.

“வாங்க அது எலும்பைத் திங்கறதுக்குள்ள நாம போயிடணும்” என்று பிள்ளைகளை இழுத்துக்கொண்டு வந்த வேலிச் சந்திற்கு ஓடினார்கள். இரண்டே வாயில் எலும்பை விழுங்கிவிட்டு வேக வேகமாக இவர்கள் பக்கமாக சத்தம்போட்டு கத்தியபடி ஓடிவந்தது நாய்.

“ஓடியாங்க… ஓடியாங்க… அவன் வரான்!” என்று சொல்லியபடி வேலிக்கு அந்தப்பக்கமாக பிள்ளைகளை தள்ளி அனுப்பினாள் மாதம்மாள். நான்கு பிள்ளைகளும் சின்ன சின்ன முள் குத்தலோடு வெளியே வந்துவிட்டார்கள். மாதம்மாள் தலை நுழைத்து வேலி தாண்டுவதற்குள் நாய் வந்து அவள் புடவையை கடித்து இழுக்க ஆரம்பித்தது. மருதனும் தமிழரசியும் பயத்தோடு வேலிக்கு மறுபுறம் நிற்க, சுப்ருவும் தரணியும் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்கள்.

நாயை தடுத்து அடக்கிய பீமன், “யாரு, மாதம்மாவா! ஏம்புள்ள, தடிமாடு மாதிரி வளந்துட்டு சின்ன புள்ளைங்களோட சேர்ந்து மாங்கா திருட வரீயே அசிங்கமா இல்ல?” என்று கேட்டான். வேலி மறைப்பில் உருவம் தெரியவில்லை. மாதம்மாள் இன்னும் மாந்தோப்புக்கு உள்ளே இருந்தாள்.

“எனக்கென்ன அசிங்கம். புள்ளைங்க திங்க ஒரு மாங்கா பறிச்சா அது திருட்டா? நீயே புள்ளைங்களுக்குத் தரணும். அத விட்டு பிசாத்து மாங்காய்க்காக பேயி, பூதம்னு புள்ளைங்கள பயமுறுத்தறீயே. உனக்கு வெக்கமாயில்ல.”

“சரி புள்ள, கோவப்படாத. நீ மட்டும் சரின்னு சொல்லு. மாங்கா திங்கறதுக்கு நான் ஏற்பாடு….”

“ஏய் கைய வுடு. மரியாதை கெடும். ஐயோ! நாய் மாதிரி எதுக்கு கடிக்கிற, வலிக்குது.”

மாங்காய் பறிப்பவர்களை பேய் அடிப்பது இருக்கட்டும், நாய் கடிப்பது இருக்கட்டும் – பீமன்கூட கடிப்பான் என்று என்று தெரிந்ததும் தமிழரசியும் மருதனும் பயத்தில் ஓடிவந்துவிட்டார்கள். அத்தனை பயத்திற்குப் பிறகும் கஷ்டத்திற்குப் பிறகும் பறித்துவந்த மாங்காய் புளிப்பாய் நன்றாகத்தான் இருந்தது.

அதற்குப் பிறகு கொஞ்சம் நாள் சும்மாயிருந்த பிள்ளைகளக்கு மீண்டும் மாங்காய் தின்னவேண்டும் என்று ஆசை வந்தது. “மாங்கா பறிக்கப் போகலாம் தமிழு…”என்று தமிழரசியை சுப்ரு விடாமல் நச்சரித்தான். நாய் பயம், பேய் பயம், வேலி மறைவில் கடிக்கும் பீமன் பயம் எல்லாம்தான் இருந்தது. ஆனாலும் மாங்காய் வேட்டைக்கு கிளம்பினார்கள். உப்பு, மிளகாய்த் தூள் எல்லாம் பொட்டலமாக்கி எடுத்துக் கொண்டார்கள். பீமன் வந்து பிடிப்பதற்குள் மாங்காயை அங்கேயே தின்றுவிடுவது அவர்கள் திட்டம்.

இப்பொழுது பேயைப் பற்றி பயம் கிடையாது, நாயைப் பற்றித்தான் பயம் அதிகம். அந்த நாயை என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார்கள். எலும்புத் துண்டுகூட கொஞ்சம் நேரம்தான். உபயோகமில்லை. நாய்க்கு வேறு என்ன பிடிக்கும்…?

“நாய் கண்ணுல மிளகாயப் பொடி போடலாண்டா, அதுக்கு கண் தெரியாது.” என்றான் தரணி.

“வாய்ல தாண்டா நாயி கடிக்கும். அதனால வாயில போடலாம்…” என்றான் சுப்ரு.

“அப்புறம் மாங்காய்க்கு பொடி வேணுமே…” விசனப்பட்டான் மருதன்.

“நாயி வராம இருக்கனுன்னு சாமி கும்பிட்டுக்குவோம்” என்றாள் தமிழரசி.

பழைய வேலிச் சந்தின் வழியாகவே மெதுவாக மாந்தோப்பு உள்ளே போனார்கள். ~என்னடி முனியம்மா| பாட்டை பீமனும் பாடவில்லை, நாயும் பாடவில்லை. மரம் உயரமாக இருந்தது. மாதம்மாளுக்கு எட்டிய மரம் பிள்ளைகள் யாருக்கும் எட்டவில்;;லை. யாருக்கும் மரம் ஏறத் தெரியாது. மருதன் குனிந்து கொள்ள, தமிழரசி அவன் மேல் நிற்க, அதற்கு மேல் ஏறிய சுப்ரு கிளையை பிடித்து மரத்தில் தொற்றிக்கொண்டான்.

மரத்திலிருந்து எட்டிய மாங்காய்களை அவன் அறுத்துப் போட, பிள்ளைகள் துணியில் பொறுக்கி வைத்தார்கள். நாய் குறைக்கும் சத்தம் கேட்டதுமே ஓடிவிட தயாராக முன்னேற்பாடாகத்தான் இருந்தார்கள். ஆனால் நாய் குறைப்பதற்கு முன்பாக பக்கத்தில் வந்து பீமன் குறைத்தான். “ஏய்… யார்ரா அது? என்னடா செய்யறீங்க..?”

பிள்ளைகள் பயத்தில் உறைந்து போய் ஓடக்கூட முடியாமல் நின்றார்கள். தூரத்தில் இருந்திருந்தால் ஓடியிருக்கலாம். பக்கத்தில் எட்டிவிடும் தூரத்தில் பீமன் வந்து குரல் கொடுத்தான். அவ்வளவு உயர மரத்தில் குள்ளன் சுப்ருவைப் பார்த்ததும் பீமனுக்கு கோபம் வந்துவிட்டது. “டேய் குள்ளா, இங்க வரக்கூடாதுன்னு சொன்னேனில்ல…”

“பந்து விளையாடிட்டு இருந்தோம். மரத்து மேல விழுந்திடுச்சி. அதான் எடுக்க வந்தோம.;” என்றான் சுப்ரு. ஊருக்கும் தோப்புக்கும் ஒரு மைல் தூரம். ஆனால் தப்பிக்க சுப்ரு பேசும் பொய்யிக்கும் வாயிக்கும் ஒரு துளி தூரம் இருக்காது.

“டேய், பொய்யாடா சொல்லற! ஊர்ல வெளையாடின பந்து இங்க வந்து மரத்துல விழுமாடா?” கீழே துணி நிறைய இருந்த மாங்காய்யைப் பார்த்த பீமனுக்கு இன்னும் கோபம் வந்துவிட்டது. “அடப் பாவிகளா! மொத்த மரத்தையும் அறுத்து காலி பண்ணிட்டீங்களா!”

“அதை நாங்க அறுக்கல… காத்துல வந்த பேயீ மாங்காய எல்லாம் அறுத்துப் போட்டுட்டுச்சி. நான் மாங்காயா ஒட்டவெக்கத்தான் மரத்தில ஏறினேன்.” என்று இன்னொரு பெரிய உண்மை பேசினான் சுப்ரு.

“திரும்ப பொய் பேசறியாடா…! எறங்கி வாடா, உன் மண்டைய ஒடைக்கிறேன்..” என்று உடைந்த கிளையை எடுத்து சுப்ருவை மிரட்டினான்.

“எறங்க மாட்டேன்.”

“எறங்கல… அப்புறம் நாய விட்டு கடிக்க வச்சிடுவேன்.”

“நாய காணமே!”

“நாய் கருவாடு வாங்க சந்தைக்கு போயிருக்கு. வந்ததும் கடிக்க விடுவேன்.”

“நாய்க்கு மரம் ஏறத் தெரியுமா?”

“ம், தெரியும். நாய்தான் எனக்கு தென்னை மரத்தில ஏறி இளநி பறிச்சி போடும். மவனே… எறங்கி வாடான்னா கேள்வியாடா கேக்கற.”

சுப்ரு சிரித்துக்கொண்டே, “மாதம்மாதான் அறுத்துட்டு வர சொன்னாங்க…” என்றான். பீமனும் சிரித்துக்கொண்டே, “மாதம்மாவா! அப்ப மரத்தோட பிடுங்கிட்டு போ…” என்று குழைந்து சொல்லி நடித்துவிட்டு, பின் குரலை கோபமாக்கி “மாதம்மா சொன்னா என்னா, ப+தம்மா சொன்னா என்னா… எறங்குடா மொத! ஸ்கோலுக்கு போகாம திருட்டு மாங்காயாடா பறிக்;கறீங்க… படிக்கிற வயசில திருட்டுத்தனம் பண்ணா உருப்புடுவீங்களா. படிப்பு ஏறுமா? எங்க நீ, ஆ… ஈ… ஊ… சொல்லு பாக்கலாம்.” தமிழரசியை மிரட்டினான் பீமன். இப்படி மாங்காய் பறிக்க வந்த இடத்தில் ஆ.. ஈ.. சொல்வதற்கு பேசாமல் பள்ளிக்கே போயிருக்கலாம் அவள்.

தமிழரசி சொல்ல ஆரம்பித்தாள். ஏழு எழுத்திற்கு மேல் தெரியவில்லை. தரணிக்கு பீமன் சொன்ன மூன்று எழுத்துதான் தெரிந்தது. மருதன் முக்கால்வாசி சொல்லி முக்கிக்கொண்டிருந்தான். யாருக்கும் முழுதுமாக சொல்லத் தெரியவில்லை, திணறினார்கள். ஆனால் மரத்தின் மேல் இருந்த சுப்ரு கடகடவென ஒப்பித்தான். சுப்ரு சரியாக சொல்கிறானா தப்பாக சொல்கிறானா என்பது பீமனுக்கு புரிபடவில்லை. உண்மையில் சுப்ருவுக்கு ஆ… ஈ… தெரியாது.

“டேய், இவன் சரியா சொன்னானாடா?” பிள்ளைகளிடம் கேட்டான். அவர்கள் சொன்னதாய் சொன்னார்கள். சரி தப்பு அவர்களுக்கு மட்டும் தெரியுமா?

“செரி, ஸ்கொல்ல சொல்லிக்குடுத்த ஒரு பாட்டை சரியா சொல்லு. இந்த மாங்காய ப+ரா தந்திடறேன்.” பந்தயம் கட்டினான் பீமன்.

மரத்து மேலிருந்த சுப்ரு குசு குசுவென, ~குய்யா, முய்யா.| என்றான்.

“டேய், சத்தமா பாடுடா!”

”குழை கொழையா முந்திரிக்கா… நிறைய நிறைய…”

“டேய் நிறுத்துடா, நிறுத்துடா…! இங்க எதுனா முந்திரித் தோப்பு இருக்காடா. நீ முந்திரி மரத்த பாத்திருக்கியா?”

உடனே சுப்ரு பாட்டை மாத்தினான். “குழை குழையாய்… மாங்காய்…”

“அடப் பாவி… எந்த ஊர்லடா குழையா மாங்கா விட்டிருக்கு? பாட்டாடா பாடறே!” என்று பீமன் மரத்தில் ஏறி சுப்ருவை பிடிக்க ஏறினான். அப்பொழுது தெற்குப் புறத்தில் காற்று சுழன்று வருவது தெரிந்தது. “டேய், அங்க பாருங்கடா… பேய்க் காத்து வருது… சீக்கிரம் ஓடுங்கடா… ஓடுங்க.” என்று சொல்லியபடி ஓட ஆரம்பித்தான்.

வெகு பக்கத்திற்கு ஆக்ரோசமாக சுழன்றடித்து பேய்க் காற்று வந்தது. காய்ந்த சறுகும் மண்ணுமாக வீறிட்டுக் கிளம்பி மரங்களை சுழற்றியது. ஓவென்ற ஓசை எல்லோர் காதிலும் ஒலித்தது. அவர்களைச் சுற்றி ஒரே தூசும் சருகுகளுமாக மண்ணோடு சுற்றியது. கண்களில் மண் விழுந்தது, தூசியில் மூக்கடைத்தது. பிள்ளைகள் கண்களை இறுக்க கைகளால் மூடிக்கொண்டார்கள்.

தூரத்தில் நாயின் ஓலம் கேட்டது. காற்றில் பொத் பொத்தென்று மாங்காய் விழும் சத்தம் கேட்டது. பெரிய மாங்காய் ஒன்று பொத்தென்று விழும் சத்தமும், தொடர்ந்து சுப்ரு “ஐயோ யப்பா…” என்று காட்டுக் கத்தலாய் கத்துவதும் கேட்டது.

பேய்க் காற்று நகர்ந்து சுழன்று சுழன்று மேற்கில் போய் மறைந்து தேய்ந்தது. பிள்ளைகள் கண்ணில் விழுந்த மண்ணை துடைத்துக்கொண்டு பார்த்தார்கள். சுப்ரு மரத்தில் இருந்து கீழே விழுந்துகிடந்தான். சுப்ருவின் கால் தலை கையெல்லாம் அடிபட்டு ரத்தமாக வந்தது. பீமன் “ஐயோ, மவனே…” என்று கத்திக்கொண்டு ஓடிவந்து சுப்ருவை தூக்கினான். அப்பொழுது பீமன் குடிசைக்குள்ளிருந்து கத்தியபடி மாதம்மாள் ஓடிவந்தாள். அவள் பின்னால் ஓங்கி ஓலமிட்டபடி நாய் வந்தது.

சுப்ரு பேச்சு மூச்சற்று மயக்கமாய் இருந்தான்.
எத்தனையோ மாம்பிஞ்சுக் காலங்கள் உருண்டோடிவிட்டது. ப+ப்பதும் காய்ப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. தமிழரசியும் மருதனும் கல்யாணம் செய்துகொண்டு ஒரு பூவை குழந்தையாய் பூத்திருந்தார்கள். வெளிய+ர் போய் வெகு காலம்; கழித்து இந்த மாந்தோப்பிற்கு இப்பொழுதுதான் வந்தார்கள். சின்ன வயதில் பார்த்த அந்த மாந்தோப்பும் அடையாளம் தெரியவில்லை, புருசன் பெண்டாட்டியாய் இருந்த பீமன் மாதம்மாளையும் அடையாளம் தெரியவில்லை. தலை நரைத்து கம்பீரமாய் நின்ற மாதம்மாளிடம் தமிழரசி கேட்டாள், “சுப்ரு எங்க…?”

மாதம்மாள் தலை கவிழ்ந்து தரையைப் பார்த்தாள்.

கீழே சுப்ரு தரையில் தவழ்ந்து வந்தான். அவனுக்குப் பின்னால், அதே பெரிய மீசையும் முட்டைக் கண்களுமாய் பீமன் வந்தான். கூடவே நாய் வந்தது. சுப்ருவுக்கு இடுப்பில் அடிபட்டு இரண்டு காலும் விலங்காமல் போயிருந்தது. பச்சை மரத்தில் ஏறி கீழே விழுந்து பட்டமரமாய் போனான் சுப்ரு. மருதனும் தமிழரசியும் பழைய சந்தோசமும் துக்கமுமான குழப்ப ஞாபகத்தில் தடுமாறினார்கள்.

சுப்ரு சிரித்தபடியே “வாங்க, வாங்க. டேய் மருதா… ஏய் தமிழு! ஆளுங்க அடையாளமே தெரியலையே…” என்று தரையில் இருந்து அன்னாந்து பார்த்தான். காலில்தான் முடம், கண்களில் அதே பழைய சுப்ரு!

தமிழரசியின் கையில் இருந்த குழந்தையை வாங்கி கொஞ்சிய சுப்ரு, பக்கத்தில் வாலாட்டிய நாயிடம், “ஏய் நாயே… தமிழு வந்திருக்கா இல்ல. போயி ரெண்டு இளநீர் பறிச்சிட்டு வா.” என்றான். பீமன் இடி இடியென பேய் போல சிரித்தான். இந்த நாய்க்கும் மரம் ஏறத் தெரியுமா?

“எப்படிடா சுப்ரு இன்னும் அதே குறும்போட இருக்க…”

சுப்ரு சிரித்துக்கொண்டே சொன்னான், “ஆளு போனாதாண்டா குறும்பு போவும். காலுதானே போச்சி. ஒண்ணும் முழுகிப் போயிடலையே. இங்கதானே விழுந்தேன். அதான் இங்கயே எழனும்;னு வைராக்கியம் வச்சேன். இதே மாந்தோப்புல மாமரத்தோட மாமரமா வளந்தேன். தோப்பை குத்தகை எடுத்து இந்த சப்பாணிக் காலோட வேவாரம் செஞ்சி… இப்ப இந்த தோட்டம் யாரோடது? ஐயா சுப்ருவோடது… பாரு நம்ம மாந்தோப்பை. ஓடி ஓடி பாரு…”

அவன் சொல்லும்போது மாந்தோப்பிற்கு தெற்குப் புறத்தில் இருந்த பொட்டல் காட்டின் தூரத்திலிருந்து ஒரு பேய்க் காற்று சுழன்று அவர்களை நோக்கி வருவது தெரிந்தது. இந்த பேய்க் காற்று சுப்ருவை கீழே விழவைத்ததா இல்லை கீழிருந்து எழ வைத்ததா…?

பேய்க் காற்றையே மருதனும் தமிழரசியும் வெறித்துப் பார்த்தார்கள். பல ஏக்கர் மாந்தோப்புக்குச் சொந்தக்காரன், பணக்காரன் சுப்ரு குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்தான். அவன் பேய்க் காற்றை கவனித்ததாகவே தெரியவில்லை.

முற்றும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *