(1969 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அணையப் போகும் விளக்கு ஒருமுறை சுடர்விட்டுப் பிரகாசிப்பதைப் போன்று கீழ்வானில் செம்பிழம்பு தன் முழுப் பலத்தையும் ஒன்றுதிரட்டி வானவெளியை எழிலூட்டிக் கொண்டிருந்தது. அந்த எழிலைத் துரத்தி விட்டு உலகைத் தன் ஆதிக்கத்தின் கெடுபிடிக்குள் கொண்டு வரவேண்டும் என்ற இறுமாப்பில் இருள் மெல்ல மெல்ல விரைந்து கொண்டிருந் தது. பொழுது புலர்வதும் பின் இருள் கவிலும் பிரபஞ்ச அமைப்பின் நித்திய கருமங்களோ?
அதைப் பற்றிய கவலை இம்மியும் இல்லை அவனுக்கு!
காலையில் எப்போதாவது விழித்துக் கைத்தடியும் தகரக் குவளையும் சகிதம் புறப்பட்டானென்றால் நகருக்கு ஒதுக்குப் புறமாக அமைந்துள்ள அந்தப் பாழடைந்த கட்டட முகப்பிற்கு வந்து சேர இருட்டிவிடும்.
“ஐயா! கண்ணு தெரியாத குருடன், ஏதாவது குடுங்க, கோடி புண்ணியம் கிடைக்கும்!” என்று தீனக்குரல் எழுப்பிச் சில்லறைக் காசுகளை வசூல் பண்ணும் போது, பலர் அவன் மீது கழிவிரக்கங் கொள்வதுண்டு. அந்தப் பச்சாதாபம் அவன் பிறவிக் குருடனாக இருக்கின்றானே, என்ற அனுதாபத்தினால் மட்டும் ஏற்பட்டதல்ல! கடவுள் இவனுக்கு நல்ல அழகையும் வாலிபத்தையும் வழங்கிவிட்டு, இரண்டு விழிகளை மாத்திரம் கொடுக்க மறுத்து விட்டாரே! என்ன கொடுமை! என்ற தத்துவ விசாரணையாகும். குருடனாய்ப் போய்விட்டதாலே ஒன்றும் அவன் பெரிதாய் கவலைப்படவில்லை.
அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, இரவுக்கும் பகலுக்கும் அதிக வேற்றுமை இருக்க முடியும், என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பிரதான பஸ்நிலையம் பிரயாணிகளுக்கு மாத்திரம்தான் உதவி புரிகிறது என்று சொல் வதற்கில்லை . அதன் இதயம் மிக மிக விசாலமானது. இல்லாவிட்டால், அழகாக உடையணிந்து கொண்டு அப்பாவிகளின் சட்டைப் பையோடு உறவாடும், அயோக்கியர்களையும் அவனைப் போன்ற பிறவிக் குருடர்களையும், இன்னும் பலரை யும், பாரபட்சமின்றி அரவணைக்கும் மாபெரும் தொழிற் கேந்திரமாக அது விளங்க முடியுமா? அவனது இருபத்தைந்து வருட அனுபவத்தில் தொழில் வருவாய் மூலம், ஐந்து சதமாவது மிச்சம் கிடையாது.
முதல் போடாத வியாபாரமானபடியால், சேமிக்கவில் லையே என்ற கவலையும், கடுகளவிற்காவது கிடையாது. மூன்று வேளையும் சாப்பிட வேண்டும். நெஞ்சார புகையை ஊதித் தள்ளவேண்டும். இதைத் தவிர வேறு உலகத்தையோ வேறு வாழ்க்கையையோ காண வேண்டும், என்ற தாற்பரியம் அவனுக்கில்லை . பகல் நேரம் பூராவும் சந்தடியும் ஜனக்கும்ப லும் நிறைந்த பஸ் நிலையத்தில், இரவுப் பொழுதோ….. அந்தப் பாழடைந்த கட்டட ஸ்த்தோப்பில்.
லொக்… லொக், லொக் என்று பயங்கரமாக இருமி விட்டு, கிழவர் நேரே மூச்சை இழுத்து இதயத்தை ஆஸ்வாசப் படுத்திக் கொண்டார். இருமலும், கிழவரும், எப்படிப் பிரிந்திருக்க நியாயமில்லையோ, அதேபோல்தான் கிழவரும், பீடியும்.
‘இப்ப என்ன பீடியா சுத்துரான்கள்? முந்தி எல்லாம் இந்தியாவில் இருந்துவார பீடியைக் குடிச்சிப் பாக்கனும். அதட வாசம் ஒண்டு, போதுமே! ‘லொக்… லொக்…!’ கிழவர் மீண்டும் இருமித் தொலைத்தார். அந்த பாழடைந்த திண் ணையை நீண்ட நாட்களாகத் தங்கள் வாசஸ்தலமாக்கிக் கொண்டிருந்த காரணத்தால், குருட்டு இளைஞனும், இருமல் கிழவனும், பரஸ்பரம் அன்புள்ள நண்பர்களாயினர். கிழவர் தன் இளமைக் காலத்து வெறியாட்டங்களைப் பற்றி, கதை கதையாகச் சொல்வார்.
கிழவரின் சிருங்கார ரசனைமிக்க பேச்சுகளைச் சுவைப்ப தில், அவனுக்கு அலாதி விருப்பம். அது மட்டுமா? திரைப்ப டத்தைப் பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்தும், அதில் வரும் நாயகியைப் பற்றி அளவிற்கதிகமாய் கற்பனை செய்து, உறக்கமில்லாது கூரைமுகட்டை வெறிக்கும், சில அசட்டு வாலிபர்க ளைப் போல், கிழவர் உறங்கிய பின்னும், நடுச்சாமம் வரை யில், அவரது பேச்சை அசை போட்டுப் பார்ப்பதில் அவனுக்கு அலாதி விருப்பம். பெண்கள் பற்றிய சிந்தனைகள் எப்போதா வது ஏற்பட்டால், விரக்தி கலந்த நெடுமூச்சொன்று அவன் அடிவயிற்றிலிருந்து கிளம்பும். அவனது இதயத்தை புழுவாய்க் குடைந்து கொண்டும், நெருப்பாய் கனன்று கொண்டிருக்கும் பிரச்சினை இதுதான்.
‘பெண் எப்படியிருப்பாள்?’
மிக அருகில் நின்று பெண்கள் பேசுவதைக் கேட்டிருக்கி றான். வெறும் பேச்சுக் குரலைக் கேட்டதனால் மட்டும், பெண்ணைப் பற்றிய முடிவிற்கு வந்து விடமுடியுமா? அப்படி யென்றால், எப்படித்தான் அறிந்து கொள்வது? பிறவிக் குருட னான அவனை, ஏற்பதற்கு யார்தான் முன்வருவார்கள்? அவ னது சிந்தனைகள் இரண்டு ஆண்டுகள் முன்நோக்கிச் செல்கின் றன. பெண் எப்படி இருப்பாள்?, இந்தக் கேள்விக்கு அனுபவ பூர்வமாக விடை காணப்போய், அவஸ்தைப்பட்ட சம்பவம், மன அரங்கில் புயலாய் சலசலத்தது.
அந்த ஊரில், பிச்சையெடுப்பவர்கள் சயனிப்பதற்கென்றே அவர்களால், ஆக்ரமிக்கப்பட்ட மாதா கோயில் முன்வாசல். அங்கு சுமார் பத்து பதினைந்து பேர், நித்திரை கொள்வது வழக்கம். அவர்களுள் நடுத்தரப் பிச்சைக்காரக் குடும்பமும் ஒன்று. ஒருநாள் ஊர் உறங்கும் நடுச்சாமத்தில், அந்தப் பிச்சைக் காரக் குடும்பத் தலைவியை, குருட்டு இளைஞன் தொட்டு ஸ்பரிசிக்க, பெரும் ரகளையாயிற்று.
அவள் சத்தமிடவே, மற்றவர்கள் விழித்துக் கொண்டு, குருட்டு இளைஞனைப் பிடித்து, நன்றாக அடித்து விட்டார் கள். அன்று அந்த ஊரை மறந்தவன்தான். அதன் பிறகு, அந்தத் திசையை ஒருபோதும் எட்டிப் பார்க்கவேயில்லை! அந்தச் செயலுக்காகப் பல நாட்கள், தன்னையே நொந்து கொண் டான். இனி இப்படியான தவறான வழிகளில் போகக் கூடாது, என்ற வைராக்கிய உணர்வு, இது கால வரையில் மேலோங்கித் தான் இருந்தது.
ஆனால் இந்தக் கிழவரின் சகவாசத் தோஷத்தால், அவரது ரசனைமிக்க கதைகளால், அவனது உணர்ச்சிகள் கிளர்ந்து விழித்தெழுந்து, சதா சித்திரவதை செய்தன.
‘பெண் எப்படி இருப்பாள்…?’ நிறைவேறாத எண்ணங்க ளோடு போராடுவதால் தானோ, மனித வாழ்க்கை, துன்பப் பெருவெளியாய் காட்சி தருகிறது? அவன் குருடன்தான்! ஆனால் மனிதன். சராசரி மனிதனுக்குள்ள அத்தனை உணர்வுக ளும், நிர்விசாரமாய் அவனிலும், எழுவது இயற்கை. சமூகத் தில், பலவீனமானவர்களின் நிராசைகள் பற்றியோ அவர்களது நியாயமான உணர்ச்சிகள் பற்றியோ யார் கவலைப்படுகிறார்கள்?
அவனது இதயத்தில் குமைந்து கனக்கும் வேட்கைகளை, யாரிடம் கூறிப் பரிகாரம் பெறுவது என்ற கேள்வியில் இரை யுண்ட பாம்பாக, சீரணிக்க முடியாமல், தவித்தான். கிழவரின் குறட்டை ஒலி பயங்கரமாக, அவனது காதில் விழவே, அவர் நித்திரை கொண்டு அதிக நேரம் ஆகியிருக்க வேண்டும், என்ற முடிவிற்கு வந்தவனாக, அழுக்குத் துணியால், உடலை நன்றா கப் போர்த்திக் கொண்டு உறங்குவதற்கு முயற்சி செய்தான்.
உறக்கம் எளிதில் வந்தால்தானே? இரண்டு பூனைகளின் பயங்கரக் கத்தலில், அந்த நடுஇரவின் அமைதி குலைந்து கொண்டிருந்தது. வேகமாக வந்த கார் ஒன்று, அந்த செம்மண் ஒழுங்கையில், ஓசை எழுப்பிச் சென்றது. மீண்டும் சில நிமிடங்களுக்குப்பின்…? அதே காரின் ஓசை, ஓங்கி ஒலித்துப் பின், தேய்ந்தது. சிறுநீர் கழிப்பதற்காக, கைத்தடியை ஊன்றிய வாறு, தட்டுத்தடுமாறி, அந்தத் திண்ணையை விட்டு கீழே இறங்கினான். ஊதல் காற்று பட்டு அவனுடல் குளிர்ச்சியால் சிலிர்த்துக் கொண்டது.
கொஞ்ச தூரம் நடந்தான். காலில் ஏதோ தட்டுப்படுவதை உணர்ந்து, துணுக்குற்று நின்றான். கண்ணால் பார்க்கும் சக்தியைத்தான் இழந்தானே தவிர, கைத்தடியால் தடவிப் பார்த்து எந்தப் பொருளையும், அனுமானிக்கும் வித்தையில், கெட்டிக் காரனாக இருந்தான்.
“குடிச்சுப் போட்டு கண்ணு மண்டு தெரியாம ரோட்டில வுழுந்து கிடக்கிறியே! எழும்பிப் போய் அந்த திண்ணையில படுத்துக்கோ !” என்று கூறிவிட்டு, பதில் ஏதும் வராததால், கீழே குனிந்து, உடலைத் தொட்டு அக்கறையோடு எழுப்பி னான். அடுத்த கணம்…? ஆச்சரியத்தால் அவன் உடல் நடுங்கி யது. உள்ளம் படபடக்க, அந்த உருவத்தின் உடலைத் தடவிப் பார்த்தான்.
ஆ! பொண்ணு…? ஆம்புளகள் தான் குடிச்சிப் போட்டுத் திரியிராங்க எண்டா, இந்தப் பொம்பளைகளுமா இப்படி? அவனது கைகள் அந்த உடலின் அனைத்துப் பாகங்களையும், வேட்கையுடன் தடவின. அவனது நெஞ்சில் நீண்ட நாட்களாய் ஒலித்துக் கொண்டிருக்கும் கேள்விக்கு இன்று, விடை கண்டு விடலாம் என்ற நினைப்பே பூரித்துச் சிலிர்த்து, உடலெங்கும் புளகாங்கிதம், அடையச் செய்தது. கிழவரின் இருமல் ஒலி கேட்காததால் அவர் தூங்கியிருப்பார் என்ற நம்பிக்கையும் சேர்ந்து அவனுக்கு வலுவூட்டியது. அவன் சாவதானமாக கைத்தடியை, நிலத்தில் வைத்துவிட்டு, பக்கத்தில் ஆர்வத் தோடு அமர்ந்து கொண்டான். அவனது நடுங்கும் கரங்கள் மீண்டும் பெண்ணின் மேனியை அர்த்த புஷ்டியோடு, தொட் டுப் பார்த்தன. அந்த மிருதுவான முகத்தைத் தடவுவதில் பூரித்துப் போனான்.
“எவ்வளவு மெதுவான மொகம்…!”
ஆண்களின் கரடு முரடான முகத்தை எண்ணி, உள்ளூர வெறுப்படைந்தான். அந்தப் பெண்ணின் முகத்தில் இழைந்த மென்மையை, தான் விரும்பி உண்ட, பட்டர் பனீசின் மிருதுத் தன்மையோடு ஒப்பிட்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டான். பொண்ணா எப்படி இருப்பாள் என்ற புதிருக்கு, சில வினாடிக ளில் விடை கிடைத்துவிடும் என்பதை நினைக்கையில் எல்லை யில்லாத குதூகலத்தில் மிதந்தான்.
மீண்டும் கிழவரின் ஞாபகம் வரவே, தன் புதிய அனுப வத்தை கிழவருக்கும் சொல்ல வேண்டும், என்ற உந்துதலில் மெல்ல எழுந்து கிழவரை நோக்கிச் செல்கிறான். குருட்டு இளைஞன், நண்பரான கிழவரை எழுப்ப, அவருக்கு . நண்பரான இருமல், காலம் நேரம், தெரியாமல் விழித்துக் கொள்ள அவர் அவஸ்தைப்பட்டார். விஷயத்தை ஒருவாறு கிழவரின் காதில் போடவே, ருசி கண்ட பூனை நிலையின்றி தவித்துத் தடுமாறியது. மலர் பொடி
தலையணைக்குக் கீழிருந்த மெழுகுவர்த்தியை பற்ற வைத்துக் கொண்டு, கிழவர் முன் தொடர்ந்தார். புதையல் கண்டுவிட்ட தெம்பில், குருட்டு இளைஞன் உற்சாகமாய் பின் தொடர்ந்தான். மெழுகு வர்த்தி சிந்திய ஒளியில், பெண்ணின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார் கிழவர். அவளது நெற்றியிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. உடலைத் தொட்டுப் பார்த்த கிழவருக்கு தூக்கி வாரிப் போட்டது. மூக்குத் துவாரங்களில் கைவைத்துப் பார்த்து விட்டு, நீண்டதொரு பெருமூச்சு விட்ட வாறு, தனது சகாவை வெறுமையாகப் பார்த்தார். எவ்வித சலனமும் இன்றி, நிர்விசாரமாய் இருந்த அவனை உற்சாகமி ழந்த குரலில் விளித்தார்.
‘தம்பி! இது பொம்பளதான். ஆனா… பொணம்! எந்த கொலைகாரப் பாவிகளோ, இவளை கொன்னு போட்டு இங்க கெடத்தியிருக்கான்கள். நாங்க இங்க நின்னோமின்னா, போலிஸ் வந்து நம்மளைப் பிடிச்சி உள்ள தள்ளிருவானுவ. விடியறதுக்கு முந்தி நாம்ப , இந்த ஊரை விட்டே போயிடனும்!’
பிணம் என்றதும், குருட்டு இளைஞனின் தேகாந்திரம் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.
இருளைத் துளாவியவாறு கொட்டும் பனியில் இருவரும் பீதியுடன் நடந்தார்கள்.
– வீரகேசரி (25.1.1969) – மீறல்கள், மல்லிகைப் பந்தல் வெளியீடு, முதற்பதிப்பு: நவம்பர் 1996