பூனையின் காதல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 2, 2023
பார்வையிட்டோர்: 2,525 
 
 

மணிக்கு பூனை என்றால் கொள்ளைப்பிரியம். சிறுவயதில் தமது தோட்டத்து கூரை வீட்டில் குடும்ப உறுப்பினர்களைப்போலவே பூனையும், நாயும் தான் படுக்கும் பாயில் வந்து தன் அருகில் படுத்துக்கொள்வதும், தன் கைகளை அதன் பற்களால் செல்லமாக நடித்துக்கடிப்பது போல் பாசாங்கு செய்வதும் இனம்புரியாத ஆனந்தத்தைக்கொடுக்கும்.

தான் சாப்பிடும் உணவில் சிறிது எடுத்து தான் சாப்பிடுவதற்கு முன் போடுவது தவிர நாயும், பூனையும் சாப்பிட தனியாக தாமாகவே தாய் சமையலறையில் இல்லாத போது உணவைத்தயாரித்து சுத்தமான தட்டில் போட்டு சாப்பிட வைப்பதைப்பார்த்து பெற்றோர் திட்டுவதைப்பொறுத்துக்கொள்வான். சாப்பிட்ட பின் அத்தட்டுக்களை சுத்தமாக கழுவி வைத்து விடுவான். ஒரு நாளும் தான் சாப்பிட்ட மீதத்தை, எச்சைச்சோற்றைப்போடமாட்டான். இதனால் அவை வெளியில் எங்கும் உணவைத்தேடிச்செல்லாமல் கட்டி வைக்காமலேயே அவனது கட்டுப்பாட்டுக்குள் வளர்ந்தன.

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த பத்து வயது மணி நிமி பூனையையும், ரமி நாயையும் காணாமல் பித்துப்பிடித்தவன் போல் அக்கம்பக்கமெல்லாம் சுற்றித்தேடினான்.

இருண்ட பின்னும் அவை வீட்டிற்கு வராமல் போக இரவு உணவை வெறுத்து, உறக்கம் தொலைத்து கண்ணீர் சிந்தினான்.

மறுநாள் காய்ச்சலால் மணியின் உடல் நடுங்கக்கண்ட பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதோடு உறவினர் வீட்டிற்கு கொடுத்து விட்ட பூனையையும், நாயையும் கொண்டுவரச்சொல்லியிருந்ததால் மருத்துவமனையிலிருந்து வீடு வந்தவனுக்கு தன் செல்லப்பிராணிகளைக்கண்டதும் காய்ச்சல் காற்றாய் பறந்தது, சோர்வு சொல்லாமல் சென்றது, கவலை இல்லாமல் போனது. நாயும், பூனையும் மணியின் மீது தாவித்தாவி அன்பைப்பொழிந்தன.

‘கீரியோடு பாம்பும், நாயோடு பூனையும் நட்பு கொள்ளாது’ எனும் இயற்க்கையின் விதியை நிமி பூனையும், ரமி நாயும் மாற்றியது போல் ஒன்றாக உண்டு, உறங்கி, விளையாடி மகிழ்ந்தன.

இப்படி நாட்கள் கடந்த நிலையில் திடீரென ஒரு வாரமாக சரியாக சாப்பிடாமல் இருந்த ரமி, மருத்துவர் வந்து ஊசி போட்டு மருந்து கொடுத்தும் பலனளிக்காமல் இறந்து விட, கதறி, கதறி அழுத மணி அதற்கு மாலை போட்டு முறையாக மண்ணைத்தோண்டி தங்கள் தோட்டத்திலேயே புதைத்ததுடன் மண்ணால் செய்யப்பட்ட நாயின் உருவ சிலையை வாங்கி வந்து புதைத்த இடத்தில் வைத்து வணங்கினான்.

தொழிலுக்காக நகரத்துக்கு வந்து திருமணமாகி குழந்தைகள் வந்த பின் தன்னைப்போலவே தன் மகளும் பூனை வளர்க்க ஆசைப்படவே நண்பரிடம் சொல்லி பூனைக்குட்டி வாங்கிக்கொண்டு வந்தவுடன் தானும் அதனுடன் சிறுவயது மணியாக மாறி ‘நிமி’ என சிறு வயதில் வளர்த்த பூனையின் பெயரையே வைத்ததோடு அதனுடன் விளையாடி மகிழ்ந்தார்.

“நான் கடுவன் குட்டிதான் கேட்டேன். இது பொட்டக்குட்டி. பொட்டக்குட்டினால என்ன பிரச்சினைன்னா அடிக்கடி குட்டி போட்டுட்டே இருக்கும். அத சமாளிக்க முடியாது. ம் இது தான் நம்ம வீட்டுக்கு வரோனும்னு விதி போலிருக்கு. இருக்கட்டும்” என மகளிடம் கூறிவிட்டார். 

வீட்டில் உள்ள மற்றவர்களை விட மணியிடம் நன்றாக பழகியது நிமி. பசிக்கு கத்தினால் உடனே கருவாடு, பால், உணவு என தேவையறிந்து கொடுத்ததால் அவர் மடியில் ஏறிப்படுத்துக்கொள்வதும், அருகில் படுத்து உறங்குவதும், செல்லமாக நடித்துக்கடிப்பதுமென குடும்பத்தில் ஒரு குழந்தையாக வளர்ந்தது பூனை.

ஒரு நாள் நிமி பூனை எப்போதும் போல் காலைச்சுற்றி வராமல் தன்னை விட்டு விலகி, விலகிச்செல்வதைக்கண்டவர் துரத்திச்சென்று எடுத்து மடியில் வைக்க, நிஜமாகவே முன்பு போல் நடிக்காமல் கடிக்க கையில் சிறு காயம் பட்டதும் ஆடிப்போனார்.

‘நிமியின் இந்த மனநிலைக்கு என்ன காரணம்?’ என்பதை பூனையை அடிக்காமல் ஆராய்ந்தபோது, ஒருநாள் பக்கத்து வீட்டு ஆண் பூனை நிமிக்கு வைத்த பாலைக்குடிக்க வர, அதை நிமி எதிர்க்காமல் இடம் கொடுக்க, அதை தான் அடித்து விரட்டியது ஞாபகத்துக்கு வந்தது.

அதன் பின் மதில் மேல் ஏறி நின்று நிமியைப்பார்க்க அந்தப்பூனை அடிக்கடி வருவதும், தான் விரட்டியதும் தான் நிமிக்குப்பிடிக்கவில்லையென்பதையும், இதன் காரணமாக தன் மீது வெறுப்பாகி தன் கையை காயம்படக்கடித்ததையும், காருக்கு கீழே அந்த பக்கத்து வீட்டு பூனை நிமியை அடிக்கடி சந்தித்து மகிழ்வதையும் பார்த்த போது கடித்த காரணத்தை இறுதியாக உறுதி செய்து கொண்டார்.

அதன் பின் நிமி மீது தம்மையே அறியாமல் கோபம் அதிகமாகிட, ஒரு நாள் ஸ்கூட்டி பெட்டிக்குள் பிடித்து உள்ளே வைத்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சென்று மனதைக்கல்லாகி தூக்கி தூரமாக வீச, பாசமாக வளர்த்த பூனை மரண பயத்துடன் வேலிக்குள் ஓடி மறைந்தது.

வீட்டில் யாரிடமும் உண்மையைச்சொல்லாமல் ‘பூனையைக்காணவில்லை’ என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டார் மணி.

சில நாட்களுக்குப்பின் ஒரு நாள் இரவு உறக்கம் வர மறுக்க, வாசலுக்கு வந்தவர் மின் விளக்கை எரிய விட்டு நடக்கச்சென்ற போது கீழே ஒரு பாம்புக்குட்டி கடிக்கப்பட்டு இறந்து கிடந்ததைப்பார்த்து அதிர்ந்தார்.

‘இந்த வேலையை நிமியைத்தவிர வேறு பூனை செய்திருக்காது’ என உறுதியாக நம்பினார். இதற்க்கு முன் பல முறை பல்லி, பாம்புகளை நிமி தன் கண் முன் கடித்துப்போட்டதைப்பார்த்துள்ளார். ‘பூனை திரும்பவும் வந்து விட்டது. இனி கொண்டு போய் விட வேண்டாம். என்ன நடந்தாலும் சரி. குட்டிகளைப்போட்டாலும் சரி. இருந்து விட்டுப்போகட்டும்’ என முடிவு செய்து விட்டு உறங்கச்சென்று விட்டார்.

ஆனால் நிமி பூனை பாலூற்றி வளர்த்த பாசத்துக்காக வாசலில் யாரும் இல்லாத போது புழு, பூச்சிகளை கடித்துப்போட்டு விட்டு மறைந்து கொள்வதும், மறைந்திருந்து குடும்பத்தினரை மனிதர்களைப்போல் பாசத்துடன் பார்த்துச் செல்வதுமாக இருப்பதை மணியும், பூனைக்குத்தெரியாமல் மறைந்திருந்து அதிசயமாகப்பார்த்தார்.

பக்கத்து வீட்டு ஆண் பூனையுடன் வெளியில் ஒன்றாக சுற்றித்திரிவதைப்பார்த்த போது மனிதர்களைப்போல காதலுக்கு வசியமாகி, எதிர்க்கும் பெற்றோரை குழந்தைகள் வெறுப்பது போன்ற அதே நடவடிக்கை பூனையிடமும் இருப்பதைப்பார்க்கும் போது உருவம் வேறாக இருப்பினும் உள்ளச்செயல்பாடுகள் அனைத்து ஜீவராசிகளுக்கும் மனிதர்களைப்போல ஒன்றுதான் என புரிந்து கொண்டதோடு, காதலையும் விட முடியாமல், பாசத்தையும் விட முடியாமல் வெளியே கொண்டு போய் விட்டதின் கோபத்தால் வீட்டிற்குள்ளும் வராமல், ஊற்றும் பாலையும் குடிக்காமல், அதே சமயம் வளர்த்த நன்றிக்கடனுக்காக விச ஜந்துக்களிடமிருந்து வீட்டினரைக்காப்பதுமான கடமையுணர்வுடன், நன்றி மறவாமல், வைராக்யமான அதன் செயல்பாட்டையும் கண்டு ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே சென்றார் மணி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *