ஜீவாவிற்கு அம்மாவையும், அப்பாவையும் இந்த நாட்டுக்கு எடுத்த பிறகு சாதனை புரிந்தது போல இருக்கிறது. மனதில் நிம்மதி பூக்கத்தான் செய்தது. ஆனால், கிராமத்தைப் போல வருமா?. பழக்கப்படாத கட்டடக்காடாக விரியும், செயற்கையாகப் படைக்கப்பட்ட நகரை நினைத்தால் பயமாக இருக்கிறது. சாலைகளில் பொறுமையில்லாமல் ஓடும் வாகனங்களினால் முதியவர்களே அதிகமாக உதிர்கிறார்கள். அங்கே இயற்கை இவர்களைஅரவணத்துக் கொள்கிறது. இங்கே இல்லை. என்ன தான் பிரச்சனை மனிதர்களிற்கு ?, வடக்கு, கிழக்கில் பொலிஸ் தெரிவையும் ஆள்றதையும் அவர்கள் கையிலேயே கொடுத்து விட்டால்…..அரைவாசி பிரச்சனையே மாயமாகி மறைந்து விடுமே !. இங்கேயும் மகிழ்ச்சியற்று வாழ வேண்டிய அவசியமும் இல்லையே. அங்கே, போரிற்குப் பின்னரான படை அமைப்புகளையே கலைத்து புதுப்பிக்க வேண்டிய அவசியமும் கிடக்கிறது. செய்வார்கள் எனப் படவில்லை. குற்றவாளிகளைக் கொண்டே ஆண்டுக் கொண்டு இருக்கப் போறார்கள்.
இன்று, பஞ்சம், பசி என்றால் அனைவருக்குமே தெரிகிறது. மனிதர்களை மனிதர் நம்புறதால், நம்பினால் தான் சிறந்த வாழ்வு கிடைக்கும். அல்லா விட்டால், வட்டிக்கு வாங்கிற கடன்களே ஏறிக் கொண்டே இருக்கப் போகிறது. பொலிஸ், பயங்கரவாதி என்றே பார்க்கிற பார்வையால் ஒரு நிமிசம் கூட நிம்மதியாக வாழ முடியாத குழப்பம் நிலவினால் எப்படி தமிழரும் விவசாயம் செய்து அவர்களுக்கு உத முடியும்? விவசாயத்தையும், பொருளாதாரத்தையும் வளர விடாது….படையினர் குதறிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.
இங்கே மாமர நிழல் இல்லை,கீச்சூ,கீச்சு என்ற பறவைச் சத்தமில்லை, சுத்தமான நீர்,காற்று…சுகம் காண முடிகிறதா? என்ன. ஒரு ஏலியன் குடியிருப்புக்குள் வந்து இருப்பது போல இருக்கப் போறார்கள்.நகரத்தின் புறப்பகுதியில் கொண்டா மாடிக்குடியிருப்பில் இருக்கிறான். பெல்கணியை அடைக்கலாம் என்ற அனுமதி இருப்பதால் கண்ணாடியால் அடைத்து விட்டிருக்கிறான். அதிலே திரைச்சீலையை இழுத்து விட்டு ஆசையுடன் இரவில் வானத்தையும் சாலையையும் பார்த்துக் பார்த்துக் கொண்டு நிற்பான். விண்மீன்களைத் தான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. அப்பாவிற்கு அதிலே சீலைக்கதிரையைப் போட்டு இருக்க வேண்டும் ஆசைப்படுகிறார்.”அது என்னப்பா சீலைக் கதிரை ?”என்று அவனுடைய வால் ஆறுமுகம் கேட்கிற போது”அது ஈசிச்செயார்”என்றான். ஐஞ்சு வயசாகிற அவனுக்கு விளங்க மாட்டாதே…எனத் தோன்ற கையில் வைத்திருந்த அப்பிள் பலகையில் எடுத்துக் காட்டினான்.”ஒரு பாடியோ கதிரை”. ஒன்லைனில் வாங்கலாம் தான்.உடைந்து விழுகிற அதற்கு விலை அதிகமாகவே போட்டிருந்தது. தமிழ்க்கடைகளில் குறைவாக இருக்கலாம். கிராமத்தில் எல்லார் வீட்டிலேயும் இருக்கிறது.
பழைய அப்பாவை நினைத்துப் பார்த்தான். பள்ளி ஆசிரியரான அவருக்கு அவனைக் கரிச்சுக் கொட்டுறதிலே பொழுது போய்க் கொண்டிருந்தது. அம்மாவும் பத்தாம் வகுப்பு தேறாதவர்.”உன்னைப் போல அவனும் உருப்படியாக மாட்டான்”என்பார். அம்மாவிற்கு ‘சுள்’என கோவம் ஏறி விடும்.”எடியே, இனப்பிரச்சனையில் அவன் படிக்கா விட்டால் ஆசிரியனாக கூட வர மாட்டானடி. பயமாக இருக்கிறதடி” என்பார். அம்மாவிற்கும் யோசனை வந்து விடும். அவனுக்கு பிறகு பபியும், சுமியும் தேறத் தேற…சொந்ததிற்குள்ளே பேசி வர, கல்யாணம் நடக்க ஐரோப்பிய நாடுகளுக்குப் பறந்து போய் விட்டார்கள். இவன் இயக்கத்திற்குப் போய் விட்டான். கழுகு இயக்கம் அவன் இயக்கத்தின் மீதே முதலில் பாய்ந்தது. மண்ணிலே கடைசி வரையில் இருந்து போராடுவோம். தமிழீழம் காணுவோம்”என்ற கனவு உடைந்து போனது. இயக்கப் பெடியன் என்றால் வீடுகளில் மதிப்பில்லை. வேலையும் இல்லை என்றால் துப்பரவாக மதிக்க மாட்டார்கள். அம்மா கவலைப்பட்டு அவருடைய உயிர்த் தோழியான அப்பாட தங்கை கற்பகத்திடம்”என்ன செய்றது என்று தெரியல்லை”என்று கரைந்து கொண்டிருந்தார். அவருக்கு ரமேஸ், குகன் பெடியளும்,சித்திரா…கடைசியும். பெடியளில் மூத்தவன் கப்பலுக்கு போறது என்று போய் கனடாவில் இறங்கி, பிறகு குகனையும் எடுத்து விட்டிருந்தான். அத்தை”சித்திரா அவனுக்குத் தான்டி. கவலைப்படாதே” என்று தேற்றினார். ரமேஸ் “இருவரையும் கொழும்புக்கு கூட்டி வாருங்கள். முகவர்களைப் பிடித்து எடுத்து விடுகிறேன்”என்றான். பதிவு அங்கே நடந்தது. இங்கே தான் கல்யாணம் நடந்தது. இவர்களும் வந்து விட்டார்கள்.
அவன் எளிதாக நினைத்து விட்டான். தமிழ்க்கடை,”விழுந்து போட்டால் ‘சூ’ பண்ணுவினம் என அதை யாருமே எடுக்கிறதில்லையே” என்கிறது. பண்ணிப் போச்சுது. அவனுக்கு ஒன்லைனிலே வாங்க விருப்பமில்லை. பொறுத்துப் பார்ப்போம். இல்லா விட்டால் ஒரு தச்சுக்காரனைப் பிடித்து மாதிரியை கீறிக் காட்டி சுயமாக செய்வது தான்”தீர்மானம் எடுத்தான். விடியிறதாவிருக்கவில்லை. என்ன செய்வம் என முளிக்கிற போதே கார் வானொலியில் ஒரு கடையிலே சீலைக்கதிரை இருப்பதாக விளம்பரம் போய்க் கொண்டிருந்தது.உடனே அலைபேசியில் அழைத்தான். “எங்கட ஊரிலே…இருக்கிறது தானே, இருக்கிறது”என்று ஒரு பெண் பதிலளித்தாள். விலையைக் கேட்டான். அதே விலை தான். நிச்சியம் விலைக்கேற்ற மாதிரி வித்தியாசமாகவே இது இருக்கும் எனப்பட்டது. அடுத்த நாள் வேலையால் வார போது போய் நேரிலே பார்த்தான். இது சாய்வு கதிரையில் துணியைப் பொறுத்தி இருக்கிறார்கள். மூன்று பேர் பிடித்தால் தான்…தூக்கவே முடியும். எப்படியும் வாங்கத் தான் வேண்டும். சித்திராவிடம் பேச வேண்டும்.அவள் கோப்பிக்கடை ஒன்றுக்கு பகுதி நேரமாக வேலைக்குப் போறவள். கதைத்தான். அவள் ரமேஸுக்கு கை பேசியில் அழைத்தாள். அவன்”சனிக்கிழமை நேரம் இருக்குமா ?..கேட்டுச் சொல்”என்றான். அரைநாள் வேலைக்குப் போறவன் விடுப்பு எடுக்க முடியும். குகன் அவனுடனே நேரிலே கதைத்தான்.”மச்சான், ரமேஸ் ஒரு கறி கொண்டு வருவான், நானும் ஒன்று, நீ பியரை வாங்கு…அப்படியே பார்ட்டியையும் கொண்டாடி விடுவோம்”என்றான் உற்சாகமாக.
வெள்ளிக்கிழமை கடையிலே வாங்கிற பட்டியலை சித்திரா தந்தாள். விஜய்ட கடைசியாய் வந்த படமும் இருந்தது. அந்த வீடீயோக் கொப்பியையும் வாங்கிக் கொண்டான். காலையிலே இருவரும் குடும்பங்களுடன் வந்து விட்டார்கள்.சிறுசுகள் கூட்டுச் சேர்ந்து விளையாடத் தொடங்கின. சித்திரா, ரமேஸிட கனிக்கும், குகன்ர விஜிக்கும் குட்டிச் சட்டை தைத்து வைத்திருந்தாள். பிறகென்ன. இவர்கள் கதிரை வாங்கச் ரமேஸிட வானிலேயேச் சென்றார்கள்.அலைபேசியில் ஏற்கனவே சொல்லி வைத்திருந்ததால் சரி பார்த்து பெட்டியை தயாராக வைத்திருந்தார்கள். இவன் தன் கடனட்டையை நீட்ட குகன் மறித்து விட்டு,”சித்திரா சீட்டுக்காசை எடுத்து தருவதாகச் சொன்னாள்” என்று தன் கார்ட்டிலே வாங்கினான். வழியில் பியரையும் வாங்கிக் கொண்டார்கள். வானொலி ஒருபுறம் பாட கதைத்துக் கொண்டே வந்து சேர்ந்தார்கள். பாரம். எலிவேற்றரில் ஏற்றி ஒருவாறு கொண்டு வந்து சேர்த்தார்கள்.
பெல்கணியிலே வைத்து கையிலே ஒவ்வொரு போத்தலுடன் பொறுத்தத் தொடங்கினர். கேள்விகள் கேட்டதுகளை உள்ளே துரத்தி விட்டு…எல்லாம் முடிந்த பிறகு”ராஜாதி ராஜா மாமா வாருங்கள்.பராக், பராக்”என குகன் அழைத்து வந்தான். அம்மா அப்ப தான் பார்க்கிறார். “இது என்ன மாட்டான் கதிரையாய் இருக்கிறதே ?”என்கிறார். ரமேஸ்”இது தான் பாதுகாப்பானது அத்தை”என்கிறான். அப்பா”இது பராவாயில்லை” என்கிறார்.
அன்று, கிராமக்கதையை விட அவர்கள் வேற ஒன்றும் கதைத்திருக்க மாட்டார்கள். அப்படி கதைத்தார்கள், கதைத்தார்கள்…கதைத்துக் கொண்டே இருந்தார்கள்.
தூங்கி வழியும் சிறுவர்களை தூக்கிக் கொண்டு செல்ல, அப்பாவும் தூங்கப் போய் விட்டார். அம்மாவிற்கும் நித்திரை முளிப்பது சரி வராது. அவரும் போய் விட்டார். சீலைக்கதிரை அவனை”வா, வா”என அழைத்தது. அதிலே போய் சரிந்தான். சித்திரா சமையல் அறையில்…கழுறதை கழுவி வைப்பதில், ஒழுங்கு படுத்திறது, குளிர்ப்பெட்டிக்குள் அடையிறதை அடையிறது… என இருந்தாள். நாளை, அவள் விடுப்பு எடுத்திருந்தாள். வேலைக்குப் போகப் போறதில்லை. விடுப்பு பேசுறதில்…அர்த்தம் முழுதாய் மாறி விடுகிறதே. தமிழும் வளமான மொழி தான். தமிழ்ச் சொற்களை அறிய வாசிப்பைக் கூட்ட வேண்டும். சீலைக்கதிரை வந்து விட்டது. சனிக்கிழமையை சிவராத்திரியாக மாற்றலாம். ஆனல், புத்தகத்தைகையில் எடுத்து விட்டால் தூக்கமின்மை என்று அங்கலாயிக்கிறார்களே, அந்த தூக்கம் கண்ணைச் செருகிக் கொண்டு வந்து விடுகிறது. உடற்பியிற்சியைப் போல கண் எரிய, எரிய வாசிப்பு நடை பெற வேண்டும் தான்.
இலங்கையில்,”சிங்களம்”படி என்ற தலைவலி. இங்கே ஆங்கிலம். அகதியாய் போற இடமெல்லாம் ஒவ்வொரு மொழி. சந்தோசமாக வாழ மனிதனுக்கு ஒரு மொழியே போதும். இவையெல்லாம் தேவையற்றத் திணிப்புக்கள் தாம்”அவனுக்கு சலிப்பாக இருக்கிறது. போராட வேண்டி பல பொழுதுகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் இதே எடுத்துக் கொண்டு போய் விடுகிறது. உலகமே கள்ளர் கூட்டமாக மாறி வருக்கிறது. எனவே தான் தப்பிப் பிழைக்க அவர்களுடைய மொழி தேவைப் படுகின்றன. குடித்த ஜேர்மன் பியர் இப்படியும் வேலை செய்கிறது. நம்ம கள்ளை அடித்தால் வேற சிந்தனைகள் வருமா ?. சிரிப்பும் வருகிறது.
எல்லாமே போராட்டம் தான். விமர்சிகர் சிலர், சில புத்தகங்களை வாசிக்க முடிவதில்லை என எழுதுகிறார்கள். ஆனால் எல்லாப் புத்தகத்தையும் வாசிக்கவே முடியும். பஞ்சாகத்தைப் போல ஒரு பக்கத்தை திறந்து வாசிக்கத் தொடங்கலாம். ஒரு பேப்பரில் குறித்து வைக்க வேண்டும். திரும்பவும்…திறப்பு வாசிப்பு. பிறகு விடுபட்டதை வாசிக்கிறது. சில மொழிகளில் கடைசிப் பேப்பரிலிருந்து வாசிக்கிற முறை இருக்கிறது. நாம் அதற்கெல்லாம் போக வேண்டாம். கடைசி அத்தியாயத்திலிருந்து…பின்னாலிருந்து முன்னுக்கு வரலாம். நீங்கள் பல புத்தகங்களை வாசித்து முடித்திருப்பீர்கள். அவனுக்கு மிகவும் பிடித்த ரஸ்ய நாவல்கள் எல்லாம்…இப்படி வாசித்ததில் கிடைத்தவை தான். அவன் இருபது வயதிலே, “தாய்”, “புத்துயிர்ப்பு” நாவல் எல்லாம் வாசித்து விட்டிருக்கிறான். இயக்கம், விடுதலை என… சும்மா போய் விடலாம் என்றா நினைக்கிறீர்கள். அவற்றில் விருப்பு ஏற்பட வேண்டும். புத்தகத்தில் இருக்கிற எழுத்துக் குவியலில் ஒரு செய்தி இருக்கவே செய்கிறது. அது என்ன என்று அறிய வேண்டும். தேடல். வீடியோ கேம் போல ஒரு விளையாட்டு தான்.”தேடல் ஒன்று இல்லா விட்டால், வாழ்வில் சுவாரசியம் இருக்காது. அதைத் தேடித் தேடி தொலைவதே சுகமானது…”என்ற வைரத்தின் கவிதை வரிகள், கேட்டுப் பாருங்கள்”இன்னிசைப் பாடி வரும் காற்றுக்கு உருவம் இல்லை…”என்ற பாடல் உங்களுக்கும் கூடப் பிடிக்கும்.
வேலையை முடித்து விட்டு சித்திரா பெல்கணிக்கு வந்தாள். “படுக்கலையா?” கேட்டாள். “கொஞ்ச நேரம் இருந்து விட்டு வாரன்” என்றான். அவள் அவன் மடி மீது இருந்து வானத்தைப் பார்த்தாள். காதல் என்றால் என்ன என்று நினைக்கிறீர். அது கரைய வைக்கிற அன்பு.”இந்த உக்ரேன்…” என்று தொடங்கினான்.”ஈழம் போய், இந்த தலைவலி வந்து விட்டது”என்று அலுத்துக் கொண்டாள். அவளுக்கும் இந்த நாட்டு சொக்கிலேட் பையன் (தலைவர்), பூக்கொத்துக்களுடன் சென்று போரை நிறுத்தாது, ஆயுதத்தை கொண்டு போய் கொட்டுறது பிடிக்கவில்லை. ‘ அவருடைய அப்பரைப் போல வருவார், பேசிய பெண் விடுதலை, மண் விடுதலை…எல்லாமே பிடித்தவையாய் இருந்தன. அவர் அணிப் பெண்கள், இப்ப வெளிநடப்புகள் செய்து புத்தியைக் காட்டுகிறார்களா ? என்ற கோபத்தையும் ஏற்படுத்துகிறார்கள்.
அவர் உக்ரேனோடு…என்று அலசியதில்…. ‘பேசுவது ஒன்று,செய்வது ஒன்று என்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்களில்’ ஒருத்தராகி மனப்பீடத்திலிருந்து சரிந்ததில் இருவருக்கும் வருத்தம் தான். அவனும் அவருடைய தேர்த்தலைத் தான் விருப்பத்துடன் பார்த்தவன். அவருடைய அப்பரின் தைரியம், அதை வளர்த்தெடுத்திருக்கவே வேண்டும். மகன் என்றதாலே சும்மா வந்து விடாது. எதிர்க்கட்சி உருக்கி விட்டவுடன் முதலில் பேசியது மாறி விடுகிறது. என்ன தான் எல்லைகளை உடைய தனி நாடு, இறைமை என்று பேசினாலும் சில நாடுகளிற்கு அதற்கு முதலே, ரஸ்யா மேலே வெறுப்பே இருந்திருக்கிறது. இப்ப அது வெறியாகி விட்டிருக்கிறது. அவனுடைய நண்பன் நாராயணன் கூறினான். முதலாம் போரில் ஜேர்மனியை நசித்ததாலே, இரண்டாம் போர் வந்தது. இப்ப அதை முடமாகவே வைத்திருக்கிறார்கள். பாதி, பாதியாக இருந்ததை ஒருவாறு ஒட்டி விட்டது. அது முழு நாடாக சுதந்திரமடையவே விரும்புகிறது. அது தான் ஊதி…வெறியாக எரிய விட்டு ஏதோ அரசியல் செய்கிறது”என்கிறான். வரலாற்றில் பிரான்ஸ் ரஸ்யாவை அடித்தது. பிறகு, ஜேர்மனி அடித்தது. பிரிட்டன் ஒன்று தான் பாக்கி. அது இப்ப அடிக்க விரும்புகிறதோ. பிரிட்டன் என்றால் குட்டிப் பிரதேசமில்லை.கனடா,அவுஸ்ரேலியாவையும் சேர்த்தே பார்க்க வேண்டும். அதன் பேச்சில் அத்தனைக் குரோதம் அடிக்கிறது. எல்லா ஐயர்மார்களும் தாம் செய்கிற போது குற்றமில்லை. மற்றவர்கள் (எதிரிகள் தரப்பு) செய்தால் தான் குற்றம். ஒன்றைக் கவனித்தால்…சத்தம் போடுறதெல்லாம் அதிதீவிர வலதுக்கட்சிகள். உக்ரேனிலும் அதே கூட்டம். இலங்கைப் பிரச்சனையில் ஒரு கூட்டு இருந்தது. இங்கேயும் கூட்டு இருக்கிறது”.
ஒரு நாடும் ஒலிம்பிக் கலாச்சாரத்தை பின்பற்ற தயாராக இல்லை, பூக்கொத்தோடுச் செல்லவில்லை.”எந்தப் பிரச்சனையுமே சமாதான மேசைக்கே செல்ல வேண்டும்”என்ற இந்தியாவின் குரலை கேட்கவில்லை. இங்கே மேசையையே காணவில்லை. அமங்களமாகத் தெரிகிறது. போர்க்குற்றம் பற்றி பேசுற நாடுகளைப் பார்த்தால் சிரிப்பே வருகிறது. ஒவ்வொன்றும் சுயத்திலே அண்டாக் கணக்கிலே செய்திருப்பவை. அங்கே இருந்து ஒருத்தர் கூட போர்க்குற்றமேடைக்கு ஏற்றப்பட்டிருக்கவில்லை. என்ன இது ! நான் டூயட் பாடுறதை விட்டு, அரசியலைப் பற்றியே சதா நினைக்கிறேனே. இந்த மாதிரிப்பிறவி வாழ்வில் எப்படி…சந்தோசத்தை துய்ப்பான்.
மக்கள் அனைவருமே இயல்பான வாழ்வை வாழ உரிமை உடையவர்கள். சிலருக்கு சமூகமும், அரசுகளும் ஏற்படுத்துற ஆக்கினைகளால் குறைபாடுடையவர்களாகி….அவை கிடைக்காது போய் விடுகின்றன. அதனாலே, அவன் அதன் ஆணி வேர்களைத் தேடுகிறான். சித்திரா,கண்கள் சொருக”நான் படுக்கிறேன். கெதியிலே வந்து படும்”என்று எழும்பினாள். உள்ளே இருந்து போர்வையை எடுத்து வந்து”குளிருரப்பா, போர்த்திக் கொண்டு இரும்”என்று கொடுத்து விட்டுச் சென்றாள். ஆசையின் அனுங்கல் சத்தம் கேட்கிறது. நம்ம ஆள் விடிய, விடிய முளித்திருக்கவில்லை. அப்படியே நித்திரையாகி விட்டிருந்தான். ஏதோதோ நினைப்புக்கள் கனவில் நடக்கின்றனவா, நிஜத்தில் நடக்கின்றனவா ? என்று அவனுக்கே தெரியவில்லை. சீலைக்கதிரையில் ஏதும் பதுமை ஒளிந்திருக்கிறதோ ?
நித்திரை மயக்கத்தில், காலையில் அம்மா “எடியே குட்டி எழுப்படி” என்று கூறுறது கேட்டது. அவன் சின்ன வயசில் பவிக்கும், சுமிக்கும் அந்த மாதிரி குட்டி இருக்கிறான். சகோதரர்களுக்கிடையில் தலையிடக் கூடாது என்று அம்மா ஒன்றும் கூறுவதில்லை. “ஏலாது அத்தை.எங்களுக்க சண்டை மூண்டு விடும்” என்று சித்திரா பின்னடிக்கிறாள்.”நான் வாத்தியையே குட்டி எழுப்பி இருக்கிறேன்.நான் எழுப்பட்டா ?”.அம்மா குட்டி விட்டு தான் மறுவேலை என தீர்மானமே எடுத்து விட்டார். என்ன நடக்கிறது பார்ப்போம் என முளிக்காது அப்படியே கிடந்தான். தயங்கி கிட்ட வந்த சித்திரா குட்டியே விட்டாள். கள்ளி, மனசிற்கே இவ்வளவு கோபத்தை வைத்திருந்திருக்கிறாள். அட இந்த கைக்கு கூட பலம் இருக்கிறதா? ஆசை “நானும் அப்பாவிற்கு..” என்க, அம்மா தூக்க, குட்டிக் கையால் அதே இடத்திலே நங். அவன் முளிக்க அம்மாவிற்கு நல்ல நகைச்சுவை இருக்கிறது. “மகனே இன்னம் பூலோகத்திலே தான் இருக்கிறாய். இவளிடம் குட்டுகள் வாங்க… இருக்கையில் கொரோனாவால் உன்னை அசைக்கக் கூட முடியாதடா”என்று சிரிக்கிறார். சித்திரா பதறுகிறாள். “நானில்லை…அத்தை தான்..”என்கிறாள்”எடியே பயப்பிடாதடி. அவன் திருப்பி எல்லாம் குட்ட மாட்டான்”என்று அம்மா. கன்னத்தில் முத்தமிட்டால் அவன் ஏன் குட்டப் போறான்?
ஈசிச்செயாரில் அப்பா இருக்க ஜீவா,”இப்ப அறியிற செய்திகள் குழப்பமாக,பதட்டமாக இருக்கிறதே ?”என்று கேட்டான். நாராயண மூர்த்தி புன்னகை புரிந்தார். காலம் எப்படி ஓடுகிறது. கடைசி காலத்தில் அவர்களை…வெளியில் எடுப்பித்து…தோழனாக இருக்கிறான். எல்லாத்திற்கும் மேலே கேள்வி கேட்கிறான்.
“டேய், உன்னை அந்த கரிச்சல் கொட்டினேன் கோபம் ஏற்பட்டதில்லையா ?” என்று நமுட்டுச் சிரிப்புடன் கேட்டார். “அப்பா, உங்களை எனக்குத் தெரியும். கிராமத்திலே வீட்டுக்கு வீடு அடிக்கிறது தெரியுமே. நீங்க… எனக்கு அடித்திருக்கிறீர்களா ?. சிங்களப் பிரச்சனையால்.. அப்பா பயப்படுகிறார்’ என்று அம்மாவும் சொல்லுறதைக் கேட்கிற போது, எப்படியப்பா கோபம் வரும்”என்றவன்”அதை விடுங்கள், இங்கே படிக்க வந்த இந்திய மாணவனைச் சுடுகிறார்களே…அரசியல் இருக்குமோ ?”என்று கேட்டான்.” இங்கே இருப்பவர்களிடம் உள்ளே ஒரு சமயம் தண்ணீர் இருக்கும். இன்னோர் சமயம் எரிமலைக் குழம்பிருக்கும். தெரிந்து கொள்ள முடிவதில்லை. கொரானாவோட வாழ்றது போல எல்லா விசயங்களுடனும்…பழகிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நீ என்ன நினைக்கிறாய்?” என்று திருப்பிக் கேட்டார். “தெரியல்ல!, ஆனால், சிபிஐயை இறக்கி விசாரணையை தொடக்கி விட வேண்டும்”என்றான். அது தான் நல்லது”என்கிறார். ஆனால், சலிப்பாக”இங்கே, போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்க விட மாட்டார்கள். குற்றவாளிகள் பெருகி இருக்க அதுவே காரணம். பழங்குடி மக்கள் பிரச்சனை நாறுது. மூன்று வயதிலிருந்து (குழந்தைகளையும் என்றும் கூறப்படுகிறது) சிறுவர்களை, கொஞ்ச நஞ்சமில்லை ஆயிரக்கணக்கில் கொலை செய்து புதைத்திருக்கிறார்கள். பாரதூரமான குற்றம். வெளியாரை விசாரிக்க அனுமதிக்கவே மாட்டார்கள். இலங்கையைப் போல தாங்கள் தான் விசாரிப்பார்கள். விசாரித்துக் கொண்டே இருப்பார்கள். யாரும் தண்டனைப் பெற மாட்டார்கள்”என்றான்.
மிசியாவில் மூன்று இந்திய மாணவர்கள் செத்த, ஒர் ( கார் ) விபத்து. ஒருவேளை அதுவும் குற்றமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. உளவு அமைப்புகளின் சம்பந்தம் இருக்கலாம். இம் மாதிரியான வேலைகளை செய்பவை. யாராலும் கண்டு பிடிக்க முடியாது. தனி மனிதனாகச் செய்கிற போது கண்டு பிடித்தால் வெளிப்படுத்துகிறார்கள். ரஸ்ய எழுத்தாளர் கூறியது போல குற்றங்கள் கணங்களிலே வெளிப்படுகின்றன. வெளிச்சத்திற்கு வருகிற விபத்து நடை பெறுகிற போது தப்பித்துக் கொள்கிற கூட்டமும் ஏற்பட்டு விடுகிறது. ஒரு வகை ஓட்டம். சில மனம் ஒப்பிச் செய்யப்படுவதில்லை. கத்திமுனைச் சூழல் செய்ய வைத்துவிடுகிறதும் உண்டு. காந்தி, ஒட்டு மொத்தமானவர்களையும் மன்னித்து விட வேண்டும் ‘ என்கிறார். எந்த ஆட்சிகளும் நேர்மையானவை கிடையாது பிறகு, எப்படி, திருந்தி வாழ்வான்?. பைபிளிலே ஒரு வசனம் வருகிறது. நீ…அந்தப் பார்வை பார்த்தாலே கெட்டவன் தான். எனவே, முதலில் ஆராயு. எந்தக்கூறு..அப்படி சிந்திக்க வைக்கிறது?. அதிலிருந்து வெளியில் வந்தாயானால், உன்னை மற்றவர் நேசிக்கா விட்டாலும், நீ, கடவுளின் குழந்தை தான் !. வட இந்தியாவில் தீண்டாதவர்களாக…இருந்தவர்கள் யாரோ ‘சாதியினர்’ என்றே ஜீவா கனகாலமாக நினைத்திருந்தான். ஆனால், அப்பா “காந்தி, ஹரியின் பிள்ளைகள்; “ஹரிஜனர்கள்” என்றது ஆதித்திராவிட மக்களை, தமிழர்களை” என்றதைச் சொல்கிற போது ஆச்சரியமாய் இருக்கிறது.
ஜீவகனுக்கு உக்ரேன் பிரச்சனையில்…நாடுகளின் நடத்தைகளும், ஈழத்து சாதிப்பிரச்சனைகளை நினைவு படுத்துகின்றன. சாதிப்பெயர்கள் தமிழ்ச் சொற்கள். அந்த சொற்களுக்கிடையில் பிரச்சனைகளை இறக்கி விட்டவர்கள், இவர்களாத் (மேற்கு நாடுகளாகத்) தான் இருக்கலாம் என்று தோன்றுகிறது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுடன் பிரித்தாளும் பொறிமுறையைச் சேர்த்தால்…. சிந்தித்துப் பாருங்கள். ஒரு விசயம் தெரியுமா?. எவரும், வேற நாடுகளிற்குச் சென்று…எந்த வித்ததிலும் வர்த்தகம் செய்யலாம். கொள்ளை இலாபம் சம்பாதிக்கலாம். அங்கே பிரச்சனையில் கூட சிக்கலாம். கொள்ளை அடிக்கிறதும் ஏற்கப்படுறதாகப் படுகிறது. அப்பணத்தை…இங்கே தாராளமாக முதலிடலாம். தவறான வழியில் சம்பாதிதது எல்லாம் பார்க்கப் படுவதில்லை. வரிப்பிரச்சனைக்காக அவரிடம் ‘ஃவைன்'( தண்டப்பணம் செலுத்த வேண்டும்) அறவிடப் படும். இங்கே அவரிலே அங்கத்தைய குற்றம் பிரயோகிக்கப்பட மாட்டாது. நழுவியவராக…வாழலாம். இதைக் கையாளுவதற்காக மற்றைய நாடுகளில் ஜனாதிபதி (ஆட்சி) முறை நிலவுறதையே விரும்புகிறார்கள். அதிகாரம் உள்ள ஒரு முட்டாளையை இலகுவாக பணிய வைக்கலாம். அதற்காக நாடாளமன்றம் அறிவு சார்ந்த முறை என்றில்லை. அதற்கு ஒரு நட்டஈடு அழவேண்டியும் வந்து விடலாம். போபால் குற்றவாளிகள்…சுதந்திரமாக வாழ்ந்து சாகவில்லையா ?. தம் கூட்டு நாடுகளின் தலைவர்களின் தொலைபேசியையே ஒட்டுக் கேட்பதும், ஹக் பண்ணுறதும் என கீழே இன்னொரு உலகத்தையும் இயங்க வைத்திருக்கிறார்கள். சாதிப் பிரச்சனையில் இவையனைத்தும் இருக்கிறதில்லையா?
அவனுக்கும் அப்பாவிற்கும் இந்த உக்ரேனை தலையில் சதா வைத்திருக்கிற பிரச்சனையாய் சுமையாய் அழுத்துகிறது. காரின் எரிபொருளின் விலை இறங்க மாட்டேன் என்று ஏறி சண்டித்தனம் பண்ணுகிறது. அதுவும் உக்ரேனை இவர்களோடு கட்டி வைத்திருக்கிறது. முதலில் அவற்றை எல்லாம் இறக்கி தொலைத்தாலே வாழ்வில் சந்தோசங்கள் இருக்கிறதைக் காணலாம், துய்க்கலாம் போலவும் இருக்கிறது. ஆனால், நெடுக இப்படியே தான் இருக்கப் போகிறது. அகதிகளாக நாம் வந்து குடியேறுகிறவை எல்லாம் நாகரீகத்தின் உச்சியில் இருப்பவை என்று நம்பி விடாதீர்கள். இன்றைக்கு உக்ரேன். நாளை, பாதியாகக் கிடக்கிற ஐரிஸ்நாடு அமெரிக்காவோடு சேரப் போறேன் என்கும். சேர்க்கும். வெடித்துச் சிதறும். கியூபெக் பிரான்சோடு சேர்வேன் என்கும். பிறகும் வெடிக்கும். உங்களை நிம்மதியாய் வாழவே விட மாட்டார்கள்.