புறப்பாடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 26, 2022
பார்வையிட்டோர்: 10,954 
 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘தெரியுமா உங்களுக்கு சமாச்சாரம்‌? நம்ம அண்ணாரப்பக்‌ கவுண்டர்‌; ஆள்‌ தீந்துபோயிட்டார்‌!’

சொன்னவனும்‌ சந்தோஷமாகச்‌ சொன்னான்‌, கேட்டவர்களும்‌ சந்தோஷமாகக்‌ கேட்டார்கள்‌.

‘நெசமாத்தான்‌ சொல்லுதயா?’ மத்தியில்‌ ஒரு சந்தேகம்‌.

‘அந்தாப்‌ பாருங்க, பொய்யா சொல்லுதேன்‌; கயத்தாத்து மேளத்துக்கு ஆள்‌ புறப்பட்டாச்சி.’

‘லேய்‌ மக்காளி; மக்காளி’ என்று அவனைக்‌ கைதட்டிக்‌ கூப்பிட்டு, விசாரிச்சித்‌ தெளிவு கேட்டார்கள்‌. மக்காளியும்‌ பல்லைக்‌ காட்டிக்‌ கொண்டே, கவுண்டர்‌ செத்துப்போனது வாஸ்தவந்தான்‌ என்று
சொல்லிவிட்டு வேகமாய்க்‌ காருக்கு நடந்தான்‌.

‘செய்தி’ கொஞ்ச நேரத்துக்குள்‌, ஊர்‌ பக்கத்தூர்‌ எல்லாம்‌ பரவ ஆரம்பித்துவிட்டது. எங்கே கண்டாலும்‌ இதேதான்‌ பேச்சு.

‘நம்ம அண்ணாரப்பக்‌ கவுண்டர்‌; ஆள்‌ குளோஸ்‌’

‘நெசமாவா?’

கிராமத்து ஜனங்கள்‌ இப்படி ஆனந்தமாகச்‌ சொல்லவும்‌ கேட்கவும்‌ போதுமான காரணம்‌ இருந்தது.

அண்ணாரப்பக்‌ கவுண்டரின்‌ கையைப்‌ பிடித்துப்‌ பார்த்த பண்டிதன்‌ சம்முகம்‌, ‘சர்‌’ என்கிறமாதிரி தலையை அசைத்தான்‌. அவன்‌ கையைப்‌ பிடித்து நாடியைக்‌ கவனித்துக்கொண்டிருக்கும்‌ போது, அழவேண்டிய சொந்தக்காரர்கள்‌ அவன்‌ தலையைத்தான்‌ கவனித்துக்‌ கொண்டிருப்பார்கள்‌. சரீ என்று ஆட்டியதும்‌ தொடங்கிவிடுவார்கள்‌.

முதல்காரியம்‌, கிடப்பவனைக்‌ கட்டிலிருந்து கீழே இறக்கிப்‌ போடுவார்கள்‌.

கட்டிலில்‌ படுத்துக்கொண்டு உயிரை விடக்கூடாது; அப்புறம்‌ அந்த ஆவி கட்டிலையே சுற்றிச்‌ சுற்றி வந்துகொண்டிருக்கும்‌ என்று நம்பிக்கை.

அதோடு வீட்டில்‌ வேறு யாருக்கும்‌ உடம்புக்குச்‌ செளகரியமில்லையென்றால்‌ அந்தக்‌ கட்டிலில்‌ படுத்துக்கொள்ள யோசிப்பார்கள்‌. பண்டிதன்‌ சொன்ன பிறகு அண்ணாரப்பக்‌ கவுண்டரையும்‌ கட்டிலிலிருந்து இறக்கிப்‌ போட்டார்கள்‌.

அமாவாசை, பாட்டிமை எல்லாம்‌ கழிந்தது.

கவுண்டர்‌ ஒரு நாள்‌ திடீரென்று கண்விழித்துப்‌ பார்த்தார்‌.

‘எவண்டா என்னைக்‌ கட்டில்லே இருந்து கீழே எறக்கிப்‌ போட்டது.’ என்று சத்தம்‌ போட்டுவிட்டுக்‌ கட்டிலில்‌ ஏறிப்‌ படுத்துக்கொண்டுவிட்டார்‌ ! இந்தச்‌ செய்தி முதலில்‌ பரவியதும்‌ ஊரே சிரிப்பில்‌ குலுங்கியது.

பண்டிதன்‌ சம்முகம்‌ போட்ட ‘தவணை’ யைத்‌ தாண்டிய தில்லை அதுவரை யாரும்‌. ‘இந்தப்‌ பவரணை தாண்டாது’ என்பான்‌. சொல்லி வச்சமாதிரி பெளர்ணமியோ முதல்‌ நாளோகூட ஆட்கள்‌ ‘புறப்பட்டு’
இருக்கிறார்கள்‌.

ஆனால்‌ கவுண்டர்‌ விஷயத்தில்‌ பண்டிதனின்‌ கணிப்பு ஒன்றும்‌ பலிக்கவில்லை.

அண்ணாரப்பக்‌ கவுண்டர்‌, நோய்‌ நொடி என்று ஒன்றும்வந்து படுக்கையில்விழவில்லை. அவருக்கு நல்ல வயசாகிவிட்டது. எவ்வளவு என்று தெரியாது. அவருக்கே தெரியாது. யார்‌ வயசை எண்ணிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. பிறந்த நட்சத்திரம்‌ கூட யாருக்கும்‌ தெரியாது.

பாரவண்டியில்‌ மேலே இருந்துகொண்டு கயிறு இறுக்குபவனைப்‌ பார்த்து ‘டேய்‌, பார்த்து இறுக்குடா தவறிக்‌ கீழே விழுந்தால்‌ நட்சத்திரம்‌ கழண்டுபோயிடும்‌.’ என்று சொல்லுகிறதில்‌ வருகிற ‘நட்சத்திரம்‌’
ஒன்றுதான்‌ தெரியும்‌ அவர்களுக்கு.

அந்தப்‌ பட்டியிலேயே ரொம்ப வயசானவர்‌ அண்ணாரப்பக்‌ கவுண்டர்‌ ஒருத்தர்தான்‌. அவருடைய மூன்று பெண்டாட்டிகளும்‌ இரண்டு தொடுப்புகளும்‌ எப்பவோ செத்துப்‌ போய்விட்டார்கள்‌. மகன்கள்‌ மகள்கள்கூடச்‌ செத்து போனார்கள்‌. பேரன்‌ பேத்திகள்‌ சிலருக்குப்‌ பல்‌ விழுந்துவிட்டது. சிலருக்குத்‌ தலை நரைக்கவும்‌ வழுக்கை விழவும்‌ ஆரம்பித்துவிட்டது. மன்னன்‌ அண்ணாரப்பக்‌ கவுண்டருக்கோ தந்தம்‌ பன்னரிவாள்ப்‌ பல்மாதிரி தேய்ந்துபோனதே தவிர ஒன்றுகூட உதிரவில்லை. ‘நாப்பது நாளைக்குக்‌ கோழிக்கறியும்‌ பச்சை நெல்லுச்சோறும்‌ போட்டா இப்பவுங்கூட ஒரு கல்யாணம்‌ பண்ணிக்‌ காட்டுவேன்‌’ என்று சொல்லுவார்‌. அவரால்‌ இப்பவும்‌ சத்தம்போட்டுக்‌ குரல்‌ நடுங்காமல்‌ பாடமுடியும்‌. ஆனால்‌ பேரன்‌ பேத்திகள்‌ சண்டைக்கு வருவார்கள்‌.

முழு வயோதிகத்தினால்‌ அவருடைய கம்பீரமான உயரமும்‌ உருவமும்‌ வாடிய சருகுபோல்‌ சுருண்டு வளைந்து சிறுத்துவிட்டது. கட்டிலில்‌ மூலை சேர்ந்துவிட்டார்‌, தேய்ந்துபோன கலப்பைமாதிரி.

ஒரு வருஷமாக அவர்‌, இந்தா அந்தா என்று வரகந்தட்டு விளையாட்டில்‌ மறுக்குகிறமாதிரி காலனை மறுக்கிக்கொண்டு பிடிபடாமல்‌ இருந்துகொண்டிருக்கிறார்‌.

‘கவுண்டரின்‌ கணக்கை சித்திரபுத்திரன்‌ தொலைத்துவிட்டான்‌’ என்கிறார்கள்‌ ஊர்வாசிகள்‌. அவருடைய மரணத்துக்காக இப்பொ அழுபவர்கள்‌ யாருமில்லை. இந்தக்‌ கிழடு செத்துத்‌ தொலையமாட்டேங்குதே என்று சத்தம்போட்டுச்‌ சொன்னார்கள்‌.

ஒவ்வொரு பெளர்ணமியையும்‌ அமாவாசையையும்‌ எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தார்கள்‌.

அந்தப்‌ பெரிய உசிர்‌ பிழைக்கவும்‌ முடியாமல்‌ சாகவும்‌ முடியாமல்‌ காலம்‌ தாழ்த்துவதினால்‌, பல வேலைகள்‌ நடக்க முடியாமல்‌ தடைபட்டன. அவருடைய கொள்ளுப்பேத்திக்கு முகூர்த்தம்‌ நிச்சயிக்க முடியவில்லை. பல விவசாய வேலைகள்‌ தடைபட்டன. வந்த விருந்தாளிகள்கூடப்‌ போகமுடியவில்லை.

ஒருநாள்‌ திடீரென்று அவருக்கு நிலைமை மோசமாகிவிட்டது. ரோட்டுக்கடை வைத்தியரைக்‌ கூட்டிக்கொண்டு வந்து காண்பித்தார்கள்‌. நாடி பிடித்துப்‌ பார்த்த வைத்தியர்‌ ‘செய்ய வேண்டிய
ஏதுகாரங்களையெல்லாம்‌ செய்துரலாம்‌; தூர ஊர்களிலுள்ள சொந்தக்காரர்களுக்கு ஆள்‌ அனுப்பிவிடுங்க’ என்று உறுதலாகச்‌ சொன்னார்‌. அதோடு பேரன்‌ பேத்திகளின்‌ ஜாதகங்களைக்‌ கொண்டுவரச்‌
சொல்லி, ஒரு தரத்துக்கு ரெண்டுதரம்‌ நன்றாகப்‌ பார்த்து ‘இந்தத்‌ ‘திசை விடுதியில்‌ ‘கர்மம்‌’ செய்வதற்கு வேண்டிய ‘சட்டம்‌’ இருப்பதால்‌ தப்பாது இந்தத்‌ தடவை’ என்று நிச்சியமாய்ச்‌ சொன்னார்‌.

பந்துக்களுக்கும்‌, தூர பந்துக்களுக்கும்கூட ஆள்‌ அனுப்பி வரச்சொல்லியாகிவிட்டது. பந்தல்‌ போடுவதற்கு, ஊருக்குள்‌ வண்டி வாரிகளையும்‌ வண்டித்‌ தடுக்குகளையும்‌ சேகரித்தார்கள்‌. கவுண்டரின்‌
பெண்வழிப்‌ பேத்திகள்‌ ‘பெண்ணடிப்‌ பாயசம்‌’ காய்ச்சுவதற்காக நெல்லுக்கு ஆள்‌ அனுப்பி, கொண்டுவந்து பச்சரிசி குத்துவதற்கு ஏற்பாடுகள்‌ செய்துவிட்டார்கள்‌.

கவுண்டரைச்‌ சுற்றி உட்கார்ந்து ராத்திரியெல்லாம்‌ முழித்துக்‌ கொண்டு கிடந்தார்கள்‌; தூக்கம்‌ வராமல்‌ இருக்க பலதடவை தேயிலைத்‌ தண்ணிப்போட்டுச்‌ சாப்பிட்டார்கள்‌, ‘வாலி மோட்சம்‌’ கதை படிக்கச்சொல்லிக்‌ கேட்டார்கள்‌.

ஒருநாளா ரெண்டுநாளா, இப்படி எத்தனை நாட்கள்தான்‌ ராத்திரி முழித்துக்கொண்டு தூக்கத்தைக்‌ கெடுத்துக்‌ கொண்டிருக்க முடியும்‌?

‘என்ன, இப்படிப்‌ பிடிவாதம்‌ பண்றார்‌?’

‘கவுண்டர்‌ ரொம்ப பிடிசாதகம்‌ பண்றாரே!’ என்று ஒருத்தருக்கொருத்தர்‌ கேட்டுக்கொண்டார்கள்‌.

விஷயம்‌ தெரிந்த ஒருத்தர்‌ சொன்னார்‌. ‘சிலேப்பனம்‌ கட்டணும்‌ ஐயா. தொண்டையில்‌ சிலேப்பனம்‌ கட்டினாலில்ல ஆள்‌ தீரும்‌.’

‘அப்படியா. சிலேப்பனம்‌ கட்றதுக்கு என்ன செய்யனும்‌? என்று வீட்டுக்காரர்களில்‌ ஒருவர்‌ ஆவலோடு கேட்டார்‌.

‘பஞ்சுப்பால்‌ விடனும்‌’

‘அது விட்டாச்சே எப்பவே’

‘என்ன பால்‌ விட்டீங்க?”

‘பசுவம்‌ பால்‌’

‘எருமைப்பால்‌ சொட்டு விடனும்‌. அதுதான்‌ திக்காய்‌ இருக்கும்‌’

‘திக்காய்‌ இருக்கணும்ண்ணா ஆட்டுப்பால்‌ விடலாமே’

‘சரிதான்‌; ஆட்டுப்பாலையும்‌ பசுவம்‌ பாலையும்‌ விட்டு ஆளை எழுப்பிருவிங்க போலிருக்கே! ஆட்டுப்பால்‌ அம்ருதம்‌! பசும்பாலும்‌ அப்படித்தான்‌, பேசாம எருமைப்பாலையே விடுங்க’

அங்குக்‌ கூடியிருந்தவர்களுக்குப்‌ பளிச்சென்று எருமைக்கும்‌ எமனுக்கும்‌ உண்டான சம்மந்தம்‌ தோன்றவே உடனே அதுக்கான ஏற்பாட்டைச்‌ செய்தார்கள்‌.

‘காய்ச்சுவதா பாலைக்‌ காய்ச்சாமல்‌ பச்சையாய்‌ விடுவதா என்று சில சந்தேகிகள்‌ கிளப்பினார்கள்‌. பச்சைப்‌ பாலை விடுவதே சிலாக்கியம்‌ என்று தீர்மானித்தார்கள்‌.

பேரன்‌ பேத்திகள்‌; கொள்ளுப்பேரன்‌ பேத்திகளும்‌ கூடி எருமைப்பாலில்‌ பஞ்சை முக்கித்‌ தங்களது முத்தாத்தாவுக்கு திறந்திருந்த அவரது வாயில்‌ பஞ்சுப்பால்‌ பிழிந்தார்கள்‌. திறந்தவாய்‌ மூடாமல்‌, தொண்டைக்கும்‌ வாய்க்கும்தான்‌ உயிர்‌ ஊசலாடிக்‌ கொண்டிருந்தது. கண்கள்‌ எப்பவோ பஞ்சடைத்துப்போய்‌ விட்டிருந்தது.

பாலினால்‌ தொண்டையில்‌ சிலேப்பனங்கட்டிக்‌ கொஞ்ச நேரத்துக்குள்‌ உயிர்‌ பிரிந்துவிடும்‌ என்று எல்லாரும்‌ ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்‌. நேரம்‌ மெதுவாக ஆகியது! சொன்னார்‌
ஒருத்தர்‌ ‘அப்பதிக்கு இப்ப ஆள்‌ கொஞ்சம்‌ தெளிச்சியாத்‌ தெரியிர மாதிரியில்லா இருக்கு’

‘ஏ . . . ஆமா!

ஊர்‌ முக்கியஸ்தர்கள்‌ கூடி, இந்த மாதிரியான விசேஷ ‘கேஸ்‌’களுக்குச்‌ செய்கிற வழக்கமான ‘குளுப்பாட்டி படுக்க வைக்கிறது’ என்கிற முறையைக்‌ கையாளத்‌ தீர்மானித்தார்கள்‌. அதன்படி,
விளக்கெண்ணெயைக்‌ கொண்டுவந்து கவுண்டரின்‌ தலையிலும்‌ உடம்பிலும்‌ அறக்கித்‌ தேய்த்துத்‌ தப்பளம்‌ போட்டார்கள்‌.

ராத்திரி நேரம்‌; மணி பன்னிரண்டு இருக்கும்‌. அது தை மாசம்‌. வீட்டுக்குப்‌ பின்னாலுள்ள கிணத்தடிக்குக்‌ கட்டிலோடு கவுண்டரைத்‌ தூக்கிக்கொண்டு போனார்கள்‌. ஒரு ஆள்‌ கவுண்டரைக்‌ கட்டிலிலேயே உட்காரவைத்துப்‌ பிடித்துக்‌ கொண்டான்‌. மூன்றுபேர்கள்‌ ஆளுக்கு ஒரு தண்ணீர்‌ இறைக்கும்‌ வாளியால்‌ கிணற்றில்‌ சேந்திச்சேந்தி கவுண்டரின்‌ தலையில்‌ தொடர்ந்து குளிர்ந்த நீரைக்‌ கொட்டிக்கொண்டேயிருந்தார்கள்‌.

இந்த வைபவத்தைப்‌ பார்க்க ரோட்டுக்கடை வைத்தியரும்‌ வீட்டுக்காரர்களில்‌ முக்கியஸ்தரான கெப்பணக்கவுண்டரும்‌ வெற்றிலை போட்டுக்கொண்டு, அவர்‌ முத்தாத்தா கட்டிய கல்‌ தொழுவைப்‌ பார்வையிட்டவாறே பேசிக்கொண்டே மெதுவாக நடந்து வந்தார்கள்‌.

‘உழவு மாடுகளை இந்த வருசம்‌ மாத்திரனும்ண்ணு சொன்னீளே?’ என்று கேட்டார்‌ ரோட்டுக்கடை. ‘தைப்பூசத்துக்கு கழுகுமலை சந்தைக்குப்‌ போகணும்னு இருந்தேன்‌; இந்தக்‌ கிழடை இப்படிப்‌ போட்டுட்டு எப்படிப்‌ போக. மாடுகளைப்‌ போன வருசமே மாத்தியிருக்கணும்‌, ஒரு வேலையும்‌ நடக்கலை; ஒண்ணுமே ஓடலை. பொன்னுத்தாயிக்கு நிச்சயமாயிருக்கு; மூர்த்தம்‌ வைக்கமுடியலை, என்ன செய்யமுடியும்‌; சொல்லுங்க பார்ப்போம்‌.”

கெப்பணக்‌ கவுண்டர்‌ பேச்சைக்‌ கடேசியில்‌ முடிக்கும்போது இப்படித்தான்‌ முடிப்பார்‌ ‘சொல்லுங்க பார்ப்போம்‌’ என்று.

தண்ணீர்‌ அவர்கள்மேல்‌ தெறித்து விழாதபடி கட்டிலுக்குப்‌ பக்கத்தில்‌ நின்றுகொண்டு அவர்கள்‌ பார்த்தார்கள்‌. வாளிகளால்‌ இறைத்துவிடுவது சரியில்லை என்று நினைத்தார்‌ வைத்தியர்‌. குடங்களில்‌ நிரப்பி வைத்துக்கொண்டு இடைவெளி இல்லாமல்‌ விடணும்‌ என்று தீர்மானித்தார்கள்‌. அதன்படி, குடங்களை வீட்டிலுள்ளது போகப்‌ பக்கத்து வீடு பக்கத்துத்தெரு என்று போய்‌ ஆட்கள்‌ சேகரித்துக்கொண்டு வந்தார்கள்‌.

கட்டிலில்‌ அண்ணாரப்பக்‌ கவுண்டரைத்‌ தாங்கிப்‌ பிடித்துக்‌ கொண்டிருந்த கரியமலை வாடை தாங்காமல்‌ நடுங்கினான்‌. அவனும்‌ தெப்பலாக நனைந்திருந்தான்‌ பாவம்‌. ‘குடத்துத்‌ தண்ணி விடும்போது வேற
யாரையாவது பிடிச்சிக்கிடச்‌ சொல்லுங்க பெரியப்பா; எனக்கு வாடை நடுங்குது; கையும்‌ காலும்‌ குறக்களிச்சிட்டுப்போகுது’ என்று சொன்னான்‌. அவன்‌ தாடை நடுங்கியதில்‌, கீழ்வரிசைப்‌ பல்லோடு கடகடவென்று அடித்துக்கொண்டதைக்‌ கண்ட வைத்தியருக்கு சிரிப்புத்‌ தாங்காததால்‌ உச்சந்தலை வழுக்கையில்‌ உள்ளங்கையால்‌ அடித்துக்கொண்டார்‌;

புகையிலைச்‌ சாறு புரை ஏறிவிட்டது அவருக்கு.

‘என்னா இளவட்டம்டா நீ; சாகப்போற கிழவன்‌; இந்தாபாரு கிணுங்காமல்‌ உக்காந்திருக்கான்‌, நீ என்னடான்னா வாடை நடுக்குதுண்ணா கிடுகிடுண்ணு சாமியாடரே; நல்ல ஆளுதாம்‌ போ’ என்று சொல்லி வேறு ஆள்‌ ஒருத்தனை உட்காரச்சொல்லி, ரெப்பிய குடங்களிலுள்ள தண்ணீரை எடுத்து இடைவிடாமல்‌ மூச்சுவிட இடம்‌ இல்லாமல்‌ மடமடவென்று கவுண்டரின்‌ தலையில்‌ கொட்டினார்கள்‌.

விட்டுக்கொண்டே இருக்கும்போது மத்தியில்‌ ஒரு குடம்‌ தாமதமாகிவிட்டது, கெப்பணக்கவுண்டருக்குக்‌ கோபம்‌ வந்து விட்டது.

இதற்குள்‌, வீட்டுக்கு உள்ளே பொன்னுத்தாயி ஒரு அரைக்கால்‌ ரூபாய்‌ நாணயத்தை எடுத்துப்‌ புளி போட்டு விளக்கினாள்‌. (கால்‌ ரூபாய்க்கு அடுத்து அரைக்கால்‌ ரூபாய்‌ என்று ஒரு வட்ட நாணயம்‌ சுத்தமான வெள்ளியினால்‌ ஆனது – அமுலில்‌ இருந்தது. பெரிய குடும்பங்களில்‌ இப்படிக்‌ காரியங்களுக்கு என்று பந்தோபஸ்தாக வைத்திருப்பார்கள்‌.) விளக்கித்‌ துடைத்த அரைக்கால்‌ ரூபாயை பொன்னுத்தாயி அங்கு கூடி இருந்த பெரிய பெண்களிடம்‌ காட்டினாள்‌. எல்லோரும்‌ அதன்‌ பிரகாசத்தையும்‌ வடிவையும்‌ பார்த்து சந்தோஷமும்‌ திருப்தியும்‌ பட்டார்கள்‌.

ஒருத்தி, நாடிக்கட்டுக்‌ கட்டுவதற்கு என்று வெளுத்த மல்பீஸ்‌ துணியைக்‌ கிழித்து, அளவு சரிதானா என்று தெரிந்தவர்களிடம்‌ காட்டிக்‌ கொண்டிருந்தாள்‌.

தண்ணீர்‌ சேந்தியவர்களும்‌ குடங்குடமாகக்‌ கொட்டியவர்களும்‌ அலுத்துப்போனதால்‌ இவ்வளவுக்குப்‌ போதும்‌ என்று நிறுத்தினார்கள்‌. அண்ணாரப்பக்‌ கவுண்டரின்‌ தலையைத்‌ துவட்டி உடம்பைத்‌
துடைத்தார்கள்‌. வைத்தியர்‌ நாடியைப்‌ பிடித்துப்‌ பார்த்துவிட்டு உள்ளே, கொண்டுபோங்கள்‌ என்று சொல்லிவிட்டார்‌.

வேறு நார்க்கட்டிலில்‌ படுக்கவைத்து, கட்டிலுக்குக்‌ கீழே சாம்ராணிப்‌ புகை போட்டார்கள்‌. பிறகு தரையில்‌ பழைய பாயை விரித்து அதில்‌ கிடத்திவிட்டார்கள்‌. குளிப்பாட்டிப்‌ படுக்க வைத்தபிறகு கவுண்டர்‌ பார்ப்பதற்குச்‌ சுத்தமாக இருந்தார்‌. ஆடைகளைல்லாம்‌ மாற்றப்பட்டிருந்தன. பலநாள்‌ தூக்கமில்லாததினால்‌ எல்லோருடைய கண்பட்டைகளும்‌ வீங்கி இருந்தன. கவுண்டரைச்‌ சுற்றி உட்கார்ந்துகொண்டார்கள்‌. அரிக்கன்‌ லைட்டைத்‌ துடைத்து நன்றாகத்‌ தூண்டிவிட்டார்கள்‌ ஆட்களோடு பக்கத்தில்‌ நின்று வேடிக்கை பார்த்தக்கொண்டிருந்த பல்ராம்‌ நாயக்கரை ‘சித்திரபுத்ர நயினார்‌ கதை’யைப்‌ பாடச்‌ சொன்னார்கள்‌.

மறுநாள்‌ ஆயிற்று. அதற்கு மறுநாள்‌, அதற்கும்‌ மறுநாள்‌, நாட்கள்‌ ஆமையைப்போல்‌ மெதுவாக நகர்ந்து போய்க்கொண்டே இருந்தது. அந்த உடலில்‌, உயிர்‌ இழையோடிக்கொண்டே இருந்தது.

முதலில்‌ பயந்தவர்‌ வைத்தியர்தான்‌ ! கவுண்டரின்‌ மூச்சு அவருடைய நாடி சாஸ்திரத்தைக்‌ கேலி செய்வதாக இருந்தது. வீட்டுக்காரர்களும்‌ சுற்றத்தாரும்‌ உண்மையிலேயே துணுக்குற்றார்கள்‌. என்ன செய்வது என்று தெரியாமல்‌ திகைத்தார்கள்‌.

அவருக்குப்‌ பிடித்தமான பலகார பண்டங்கள்‌ ஏதோ, அதைச்செய்து விநியோகியுங்கள்‌ என்றார்கள்‌. கவுண்டருக்குப்‌ பிடித்தமான பால்‌ கொழுக்கட்டை முதலியவற்றைச்‌ செய்து, குழந்தைகளுக்கும்‌ கொடுத்து அவர்களும்‌ உண்டார்கள்‌.

நெருங்கிய பந்துக்களில்‌ ஒருவரும்‌, வயதானவரும்‌, கவுண்டரோடு நெருங்கிப்‌ பழகியவருமான தொட்டேரப்பக்‌ கவுண்டர்‌, கம்பை இரண்டு கைகளாலும்‌ ஊன்றிக்கொண்டு வந்தார்‌. அவருடைய தலை கழுத்தில்‌ நில்லாமல்‌ கிடுகிடுவென்று ஆடிக்கொண்டே இருந்தது. எல்லோரும்‌ அவருக்கு வழிவிட்டு விலகி நின்றுகொண்டார்கள்‌. முன்‌ வளைந்த உடம்பின்‌ வலதுகை கம்பைப்‌ பிடித்துக்கொண்டிருக்க, இடதுகை விரல்களை விரித்துப்‌ புருவங்களின்‌ மத்தியில்‌ ஒட்டவைத்துக்கொண்டு கொஞ்சநேரம்‌ அண்ணாரப்பக்‌ கவுண்டரையே பார்த்துக்கொண்டிருந்தார்‌. அப்புறம்‌ கொஞ்சம்‌ துக்கத்தால்‌ உணர்ச்சி வசப்பட்டார்‌. பிறகு அதே பார்வையில்‌, கூட்டத்தில்‌ கெப்பணக்‌ கவுண்டரைத்‌ தேடி, இடது கைவிரல்களினால்‌ கிட்டே வரும்படி சைகை செய்தார்‌. எல்லாவற்றையும்‌ கேட்டு நிலவரத்தைத்‌ தெரிந்துகொண்டார்‌. பிறகு தன்‌ நடுங்கும்‌ குரலில்‌ அவர்‌ சொன்ன விஷயமாவது: ‘கெப்பணா, எனக்குப்‌ பெரிய கவுண்டரைத்‌ தெரியும்‌. அவர்‌ அரும்பாடுபட்டுச்‌ சம்பாரிச்ச நிலம்‌ அந்த எருவடிப்‌ புஞ்சை. அந்தப்‌ புஞ்சையின்‌ பேரில்‌ அவருக்கு எவ்வளவோ பிரியம்‌.

அங்கே போயி – நீதான்‌ போகணும்‌ அந்த நிலத்தில்‌ கொஞ்சம்‌ மண்ணை எடுத்துக்கிட்டு வா. அதைத்‌ தண்ணியிலே கரைச்சி அவருக்கு ஒரு சங்கு ஊட்டு.

இந்தப்‌ பேச்சைக்கேட்ட அங்குள்ள மக்களில்‌ பலர்‌ ஒரு சத்தியவாக்குக்‌ கேட்டமாதிரி உணர்ச்சிகொண்டார்கள்‌.

அந்தக்‌ கரிசல்‌ மண்ணைக்‌ கொண்டுவந்து சங்கில்‌ சுண்டைக்காய்‌ அளவு இட்டு அந்த ஊரின்‌ உப்புத்‌ தண்ணீரான குடிநீரில்‌ கரைத்துக்‌ கவுண்டரின்‌ திறந்த வாயில்‌ புகட்டினார்கள்‌.

அந்த மண்ணைக்‌ கரைத்துப்‌ புகட்டியதாலோ அல்லது தற்செயலாகவோ, மறுநாள்‌ பின்னிரவு எல்லோரும்‌ அலுத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது அந்த விவசாயி அண்ணாரப்பக்‌ கவுண்டர்‌
காலமானார்‌.

புஞ்சை மண்ணைக்கரைத்து புகட்டியதும்‌ அவர்‌ இறந்துபோனது சிலருக்கு அதிசயமாகப்பட்டது. சாவு வீட்டில்‌ நிறைந்திருந்த கூட்டத்தில்‌ ஒரு விவசாயிக்‌ கிழவர்‌ சொன்னார்‌, ‘பரம பதத்திலிருந்து தேர்‌ ஒன்று வந்தது; ஒருத்தரை உடம்போடு கூட்டிக்கொண்டு போக வந்து இருந்த தேவதூதர்களிடம்‌ அவர்‌ கேட்டாராம்‌, உடம்போடு நான்‌ அங்கே வர ஆட்சேபணை இல்லை; ஆனால்‌ எனக்கு அங்கே கரிசல்‌ நிலம்‌ எத்தனை ஏக்கர்‌ கிடைக்கும்‌? சொன்ன கிழவர்‌ கரிசல்‌ நிலம்‌ என்பதை அழுத்திச்‌ சொன்னார்‌ ! கேட்டவர்கள்‌ எல்லோரும்‌ சிரித்துக்கொண்டார்கள்‌.

வீடு கொள்ளாததால்‌ தெரு நிழலிலெல்லாம்‌ ஆட்கள்‌ உட்கார்ந்திருந்தார்கள்‌. வீட்டினுள்ளிருந்த கூட்டத்தில்‌ ஒரு நாலுவயசுப்‌ பையன்‌, மேலே ஒரு துண்டு மட்டும்‌ கழுத்தில்‌ ‘வல்லவேட்‌’ போட்டுக்கொண்டு அம்மணமாக வந்துகொண்டிருந்தான்‌. பயல்‌ சிவப்பாய்‌, பார்க்க நன்றாகவும்‌ துடியாகவும்‌ இருந்தான்‌. அவனைப்‌ பார்க்கிறவர்கள்‌ யார்க்கும்‌ அவனோடு கொஞ்சம்‌ ‘வாயாட’ வேணும்போலத்‌ தோன்றும்‌.

கூட்டத்திலிருந்த ஒரு நரைத்த கிருதா மீசைக்காரர்‌, முகத்தில்‌ குறும்பு தோன்ற அவனைத்‌ தன்னிடம்‌ கூப்பிட்டார்‌. அவனும்‌ பயப்படாமல்‌, பழகியவனைப்போல்‌ முகத்தை வைத்துக்கொண்டு கிட்டே வந்தான்‌.

அவர்‌ அவனிடம்‌ கேட்டார்‌; ஆண்‌ குழந்தைகள்‌ அம்மணமாக வந்தால்‌ வழக்கமாக கேட்கும்‌ கேள்விதான்‌. பயல்‌ பளிச்சென்று பதில்‌ தந்தான்‌. கூட்டமே சிரித்து உருண்டது.

கயத்தாற்றிலிருந்து மேளம்‌, ‘ஓடக்கு’ அஆடுகிறவர்கள்‌ பிடாங்கு வேட்டுக்காரன்‌, இவர்களுடைய ‘நல்லது பொல்லது’களில்‌ வாசிக்கிற உருமிக்காரன்‌ முதலிய எல்லாரும்‌ வந்துவிட்டார்கள்‌.

ரொம்ப வயசான கிழடுகள்‌ இறந்துபோய்விட்டால்‌ யாரும்‌ அழமாட்டார்கள்‌ ! அழக்கூடாது என்று சம்பிரதாயம்‌. ஆகையால்‌ இன்னேரவரைக்கும்‌ அணணாரப்பக்‌ கவுண்டரின்‌ புகழ்பற்றியே பேசிக்கொண்டிருந்த கூட்டத்துக்கு கயத்தாத்து மேளம்‌ வந்தது ‘அப்பாடா’ என்று இருந்தது. இந்த மேளத்தில்‌ ஒருவன்‌ பொய்க்கால்‌ குதிரைமேல்‌ இருந்துகொண்டு ஒப்புவைத்து அழுவான்‌ – அதாவது பாடுவான்‌. அதை வாங்கிச்‌ சத்தக்‌ குழல்க்காரனும்‌ கொட்டுக்காரனும்‌ வாசிப்பார்கள்‌. அப்போது பொய்க்கால்‌ குதிரை அந்த இசைப்புக்கு ஏற்றமாதிரிச்‌ சுற்றிச்‌ சுற்றி வந்து ஆடும்‌.

திரும்பவும்‌ அவன்‌ ஒப்புச்‌ சொல்லுவான்‌ ! அவர்கள்‌ வாங்கி வாசிப்பார்கள்‌ !

அவன்‌ ஆடுவான்‌.

முதலில்‌ கொஞ்சநேரம்‌ மேளத்துக்கு ஆடிவிட்டுப்‌ பிறகு பொய்க்கால்‌ குதிரைக்காரன்‌ ஒப்பாரி ஆரம்பித்தான்‌.

‘கத்தரிக்காய்‌ எங்களுக்கு
கத்தரிக்காய்‌ எங்களுக்கு
கைலாசம்‌ உங்களுக்கு’
டண்டணக்கு டண்டணக்கு
டண்டணக்கு டண்டணக்கு’

மேளக்காரன்‌ அடிக்கும்‌ ஒவ்வொரு கொத்து அடிக்கும்‌ குதிரைக்காரன்‌ ‘தாயாரே தாயாரே’ என்று மார்பில்‌ இரண்டு கைகளாலும்‌ மெதுவாக ரொம்ப மெதுவாக வலிக்காமல்‌(!) அடித்துக்கொள்வான்‌. அவன்‌ இப்படி அடித்துக்‌ கொள்கிறதைப்‌ பார்த்த கூட்டத்திலிருந்த ஒரு நடுத்தர வயசுப்பொம்பிளை ‘அப்பா மெள்ளப்பா ! நெஞ்சிலே ரத்தம்‌ கட்டிக்கிடாமெ!’என்று எடக்காகச்‌ சொல்லவும்‌ கூட்டம்‌ கலகலத்தது;
குதிரைக்காரனும்‌ சிரித்துக்கொண்டான்‌.

‘வாழைக்காய்‌ எங்களுக்கு
வாழைக்காய்‌ எங்களுக்கு
வைகுந்தம்‌ உங்களுக்கு
டண்டணக்கு டணக்கு
தாயாரே தாயாரே’

இழவுவீடு கோலாகலமாய்‌ இருந்தது.

கவுண்டரின்‌ உடம்பைத்‌ திரும்பவும்‌ கிணற்றடிக்குக்‌ கொண்டு போனார்கள்‌. பண்டிதன்‌ அவருக்கு முகச்சவரம்‌ செய்தான்‌. மீசையை ஜோராகத்‌ கத்தரித்துத்‌ திருத்தினான்‌. திருக்குற்றாலத்திலிருந்தும்‌,
பாபனாசத்திலிருந்தும்‌ கொண்டுவந்திருந்த அருவித்‌ தண்ணீர்க்‌ குடங்களைக்‌ கொட்டிக்‌ குளிப்பாட்டினார்கள்‌. ‘பயணப்‌ பீசை’ உடுத்தினார்கள்‌. நெற்றியில்‌ திருமண்‌ இட்டு, அரைக்கால்‌ ரூபாயை அதில்‌
பதித்து ஒட்டவைத்தார்கள்‌. நாடிக்கட்டுக்‌ கட்டினார்கள்‌. இரண்டு கைப்பெருவிரல்களையும்‌ சிறிய நூல்‌ கயிற்றினால்‌ இணைத்தார்கள்‌.

கையில்‌ வெற்றிலை வைத்துக்கொண்டிருப்பதுபோல்‌ இருக்க, வெற்றிலையையும்‌ பாக்கையும்‌ கையில்‌ வைத்தார்கள்‌. உதடுகளைக்‌ குங்குமத்தால்‌ சிவப்பாக்கினார்கள்‌. ஒரு பெரிய செவ்வரளி மாலையை அணிவித்தார்கள்‌.

வீட்டின்‌ முன்னால்‌ பந்தலுக்குக்‌ கீழே கூட்டம்‌ நெருக்கியது. எதிரே மைதானத்தில்‌ உடுக்கு ஆட்டம்‌, எதிர்பாராதபோது திடீர்‌ திடீர்‌ என்று பிடாங்கு வேட்டின்‌ உலுக்கி அதிர்ச்சியடைய வைக்கும்‌ சத்தம்‌.

சாவுப்பல்லக்கு அலங்கரிக்கப்பட்டு வீட்டுக்கு முன்னால்‌ தயாராக இருந்தது. அண்ணாரப்பக்‌ கவுண்டரைக்‌ கொண்டுவந்து பல்லக்கிலுள்ள நாற்காலியில்‌ சப்பணம்‌ போட்டபடி உட்காரவைத்து, சாய்மானத்தில்‌ ஒரு அழுக்குத்‌ தலையணையைப்‌ போட்டுச்‌ சாய்த்து வைத்தார்கள்‌. அவரது தலை அண்ணாந்து பல்லக்கின்‌ முகட்டைப்‌ பார்த்தவண்ணமிருந்தது.

பல்லக்கைத்‌ தூக்கி ஒரு கட்டைவண்டியில்‌ வைத்தார்கள்‌. இதனால்‌ அவருக்குப்‌ பின்பககம்‌ நின்றுகொண்டு அவருடைய கொள்ளுப்‌ பேரன்மார்‌ இருவர்‌ நெய்ப்பந்தம்‌ பிடிக்கத்‌ தோதாக இருந்தது. முன்பக்கம்‌ இரண்டு பேரன்கள்‌ தங்களுடைய மேல்துண்டை எடுத்து ஆட்டி ‘வெஞ்சாமரை’ வீசினார்கள்‌.

கூட்டம்‌ வழிவிட்டு விலகி நிற்க, கைதேர்ந்த சிலம்பு ஆட்டக்காரர்கள்‌, கம்பைப்‌ பல கோணங்களில்‌ பிடித்துக்‌ காட்டி, முன்னாலும்‌, பக்கவாட்டிலும்‌, பின்னாலும்‌ அளவோடு எட்டுகள்‌ எடுத்துவைத்து நடந்து
பாவலாச்செய்து கம்பைச்‌ சுழற்றி வீசி அடித்து விளையாடினார்கள்‌.

ஊர்கோலம்‌, முக்குகளில்‌ திரும்பும்போதும்‌, சிலம்பாட்டம்‌ முடிந்து புறப்படும்போதும்‌ பெண்களின்‌ குலவை ஒலி பலமாகக்‌ கேட்டது. வண்ணார்கள்‌ வேகமாக ஓடி ஓடிக்‌ கவுண்டரின்‌ குடும்பத்தார்‌ நடந்துவரத்‌ தெருக்களில்‌ சேலைகளைத்‌ தரையில்‌ நடைமாத்தாக விரித்தார்கள்‌. கடகப்‌ பெட்டிகளில்‌ கனிந்த கதலிப்பழங்களை உதிர்த்து நிறைத்துக்கொண்டு கூட்டத்தில்‌ சூறை போட்டார்கள்‌. மடிநிறைய்ய சில்லறை நாணயங்களாக மாற்றி நிறைத்துக்கொண்டு கூட்டத்தில்‌ வாரி இறைத்தார்கள்‌. ஜனங்கள்‌ அவைகளை ஓடி ஓடிப்‌ பொறுக்கினார்கள்‌.

சவ ஊர்வலம்‌ ஊரைவிட்டு வெளியே வந்தவுடன்‌ கொட்டுக்காரர்கள்‌, வழக்கமாக வாசிக்கிறமாதிரி ‘அடியின்‌ நடையை மாற்றினார்கள்‌; தூரத்திலிருந்து கேட்பவர்கள்‌ இந்த அடிச்‌ சத்தத்தைக்‌ கேட்டு ‘சரி கூட்டம்‌ மயானத்துக்குப்‌ பக்கத்தில்‌ வந்துவிட்டது போலருக்கு என்று யூகித்துவிடுவார்கள்‌. சத்தக்‌ குழல்காரனின்‌ துயரமான இழைப்பு ஒலி; மேளத்தின்‌ அந்தத்‌ தட்டுதலோடு பெண்களின்‌ குலவையும்‌ சேரும்போது சோகம்‌ மனசை அப்பும்‌.

நொடி நிறைந்த வண்டிப்பாதை. லம்பல்‌ அதிகமாக இருந்தது. குடிமகன்‌, முறுக்கிய மாத்தை கவுண்டரின்‌ மேல்நெற்றியில்‌ இறுக்கிய கட்டு கொஞ்சம்‌ நழுவியதாலோ என்னவோ வண்டியின்‌ லம்பலில்‌ கவுண்டரின்‌ தலை இடதுபக்கமாகவும்‌ வலதுபக்கமாகவும்‌ ஆடிக்கொண்டே போனது,

‘மாட்டேன்‌’ ‘மாட்டேன்‌’ என்று சொல்லுவது போலிருந்தது.

– சோதனை, ஏப்ரல்‌ 1973

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *