”குருவே, என் பேச்சை யாரும் கவனிக்க மறுக்கிறார்கள்” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“ஏன், என்னாச்சு?”
“என்னுடைய கருத்துக்களை யாரும் பொருட்படுத்துவதே இல்லை. இதற்கு நான் என்ன செய்வது?” என்று கேட்டான்.
அவனுடைய பிரச்சனையை புரிந்துக் கொண்ட குரு அவனுக்கு ஒரு சம்பவத்தை சொன்னார்.
”இரண்டு நண்பர்கள் ஒரு சாலையில் நடந்துப் போய்க்கொண்டிருந்தார்கள். ரொம்ப பரபரப்பான சாலை. பலர் சென்று கொண்டிருந்தார்கள். நண்பர்கள் இருவரும் உற்சாகமாய் பேசி நடந்து கொண்டிருந்தபோது திடிரென்று ஒரு நண்பன் நின்றான். சற்று தொலைவில் இருந்த புதர் பக்கம் போனான். அங்கே ஒரு பூனைக் குட்டி புதருக்குள் சிக்கி ‘மியாவ் மியாவ்’ என்று கத்திக் கொண்டிருந்தது. பூனைக் குட்டி அருகே சென்ற நண்பன், புதரை விலக்கி சிக்கிக் கொண்டிருந்த பூனைக் குட்டியை விடுவித்தான். பூனைக் குட்டி துள்ளிக் குதித்து ஓடிச் சென்றது.
இதைப் பார்த்த மற்ற நண்பனுக்கு ஆச்சர்யம். ‘இத்தனை பேர் இந்தப் பாதையில் நடந்துச் செல்கிறோம், ஆனால் இந்த சந்தடியில் யாருக்குமே பூனைக் குட்டியின் சத்தம் கேட்கவில்லை. உனக்கு மட்டும் கேட்டது எப்படி?’ என்று கேட்டான்.
அந்தக் கேள்வியை கேட்டதும் சிரித்தான் நண்பன். ’என்னது, இந்த சந்தடியில் பூனை சத்தம் கேட்கவில்லையா? அப்படியெல்லாம் இல்லை. இப்போது பார்’ என்று சொல்லி கொஞ்சம் சில்லறை காசுகளை தரையில் போட்டான்.
அந்த சில்லறை சத்தம் கேட்டதும் அங்கே சென்றுக் கொண்டிருந்த அத்தனை மக்களும் திரும்பிப் பார்த்தனர்.
‘இதுதான் உலகம். அவர்கள் கவனிக்க விரும்புவதைதான் கவனிப்பார்கள். மற்றவற்றை கவனிக்காதது போல் கடந்து செல்லுவார்கள்’ என்று பூனைக் குட்டியைக் காப்பாற்றிய நண்பன் சொன்னான். ”
இந்த சம்பவத்தை குரு சொன்னதும் வந்தவனுக்கு தன்னுடைய பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி: அடுத்தவரை கவரும் விததத்தில் கருத்துக்களை சொல்லுவதுதான் புத்திசாலித்தனம்.
– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)