புத்தரின் கடைசிக் கண்ணீர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 4,216 
 
 

புத்தருக்கு அந்த ஏழை கொடுத்த விருந்தில் நச்சுக் காளான் கலந்திருப்பது தெரிந்தாலும் அவன் அன்பை எண்ணி, அவனின் பரிசுத்தமான மனதை எண்ணி, அதை உண்ணுபதால் அவன் பெறப் போகும் ஆனந்தத்தை எண்ணி, அமிர்தத்தின் அமிர்தமாய் புத்தர் அந்த ஏழை சமைத்துக் கொடுத்த காளான் உணவை அருந்தினார். ஆனந்தனுக்கு அந்த உணவில் நச்சுக் காளான் கலந்திருப்பது தெரியாது. தெரிந்திருந்தால் புத்தரைப் புத்தராகாமல் தடுத்திருப்பான். புத்தருக்கு நச்சுக் காளான் உணவில் கலந்து இருப்பது தெரிந்தும் அந்த ஏழையின் ஆனந்தத்தை மாத்திரம் மனதில் எண்ணியதால் புத்தர் சூரியனைப் போலப் புத்தரானார். இருக்கும் போதும் இறக்கும் போதும் இயலுமானவரை மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும், மற்றவரைத் துன்பப்படுத்துதல் கூடாது என்பதை அவர் அப்போதும் வழுவாது கடைப்பிடித்தார்.

உணவை அருந்தியதும் விசக் காளான் வேலை செய்யத் தொடங்கியது. அதற்குப் புத்தர் என்றோ வன்முறையாளன் என்றோ எந்தப் பாகுபாடும் கிடையாது. புத்தர் தன்னைப் பற்றி எப்போதும் “உங்களைப் போல் நானும் ஒரு சாதாரண மனிதன்.” என்று கூறியதற்கு ஏற்ப நச்சுக் காளான் எல்லா மனிதருக்கும் செய்வதைப் புத்தருக்கும் செய்தது. புத்தரால் அதற்கு மேல் நிமிர்ந்து இருக்க முடியவில்லை. தலை சுற்றியது. உடல் வியர்த்தது. கண்களால் கண்ணீர் வழிந்தது. அந்தக் கண்ணீருக்கு அவரிடம் இரண்டு காரணங்கள் இருந்தன. விசக் காளானின் விசம் ஒரு காரணம். மற்றைய காரணம் அருக்கு மட்டும் தெரிந்திருந்தது. அது அவரை விசக் காளானைவிட வலுவாக அப்போது வருத்தியது.

புத்தர் ஆனந்தன் மடியில் சாய்ந்தார். ஆனந்தனின் கண்களிலும் கண்ணீர் மடை திறந்தாகப் பெருகியது. அது அவனுக்குக் கவலையால், துறவியானாலும் துறவியாகாது ஒளிந்திருக்கும் பாசத்தால், சக மனிதனை… இல்லை மாமனிதனான புத்தரைப் பிரிந்து விடுவோமோ என்கின்ற பயத்தால் வழிந்த கவலைக் கண்ணீர். ஆனந்தன் கோபம் கொண்டான். அந்த ஏழை மீது… அதை உண்ட புத்தர் மீது… இந்த உலகத்தின் மீது… என்று அது அவன் காவிக்கு எதிராக, எதிர்காலத்துக் காவிகளின் காமம் போல வளர்ந்து சென்றது.

“நீங்கள் ஏன் இதைச் சாப்பிட்டீர்கள்?” என்று புத்தரைப் பார்த்து ஆற்றாமையோடு அவன் கேட்டான். இருவர் கண்களிலும் இடைவிடாத கண்ணீர். ஆனால் இரண்டிற்கும் வேறு வேறு வித்தியாசமான காரணங்கள்.

“ஆனந்தா… அவன் ஒரு ஏழை. அன்பால் அவன் ஒரு சக்கரவர்த்தி. எனக்காக உணவு பரிமாற அதிக காலம் காத்திருந்தான். நான் உண்பதைப் பார்த்து மகிழ என்றும் நினைத்திருந்தான். அவன் காத்திருப்பு இன்று நிறைவு பெறும் நாள். ஏழையான இவன் தன்னிடம் இருந்ததை அன்போடு சமைத்தான். அவனுக்கு அதில் விசக் காளான் கலந்திருந்தது தெரியாது.

தெரிந்திருந்தால் அவன் இன்று எனக்கு அதை அளித்திருக்க மாட்டான். வேதனையோடு இன்னும் ஒரு நாளுக்காகக் காத்திருந்திருப்பான். நான் இந்த உலகிற்கு மேற்கொண்ட பயணம் முடிய வேண்டிய காலம் வந்துவிட்டது. அது எனக்குத் தெரியும். என்னால் செய்ய முடிந்த செயல்கள், செய்ய முடியாத செயல்கள் பற்றியும் எனக்கு விளங்குகிறது. அதனால் எனக்கு இந்த நிகழ்வில் எந்தவித கவலையும் இல்லை. அவன் அன்பு என்னை இப்போதும், எப்போதும் குளிர வைக்கும். எனக்குத் தந்த உணவில் நச்சுக் காளான் கலந்து இருந்தது என்றால் அவனுக்கு யாரும் தீங்கு செய்யலாம். அதனால் நீ வெளி மக்களிடம் சென்று புத்தருக்கு இறுதி உணவு அளித்த பாக்கியவான் இவன் என்றும், இவன் என்றும் மதிக்கப்பட வேண்டும் என்றும் மக்களிடம் கூறு.” என்றார் புத்தர்.

“என்னதான் இருந்தாலும் நஞ்சு என்பது தெரிந்தவுடன் நீங்கள் உண்பதை நிறுத்தி இருக்கலாம் அல்லவா? ஏன் நீங்கள் இப்படிச் செய்தீர்கள்? எதற்காக எங்களை விட்டு இப்போது பிரிந்து செல்லுகிறீர்கள்?” என்றான் ஆனந்தன் பதற்றத்தோடு.

“அவன் சமைத்து அன்போடு பரிமாறி, ஆவலோடு நான் அருந்துவதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, அவன் மனதை என்னால் எப்படி நோகடிக்க முடியும்? ஏற்கனவே கூறியது போல என் பயணம் முடியவேண்டிய காலம் வந்துவிட்டது. நான் பிரபஞ்சத்தோடு கலக்க வேண்டிய நேரம் அண்மித்து விட்டது. நான் உன்னுடன் இருக்கும் வரைக்கும் நீயும் உண்மையான ஞானத்தைப் பெறமாட்டாய் என்பதும் எனக்குத் தெரியும். எனது பிரிவே உனக்கான ஞான தரிசனத்தை திறந்து வைக்கும் வாசல். நான் இங்கு இருந்தவனும் அல்ல. இருப்பதற்கு வந்தவனும் அல்ல. பயணம். சில அலுவல்கள். வாழ்வைப் பற்றி புரிந்துகொள் ஆனந்தா.” என்றார் புத்தர்.

“என்னதான் நடந்தாலும் நீங்கள் எங்களை விட்டுப் போகக்கூடாது.” என்று கூறிய ஆனந்தன் குலுங்கிக் குலுங்கி அழுதான்.

“ஆனந்தா… நீயே இப்படி அறிவீனத்தோடு அழுவதா? இதற்காகவா நான் இவ்வளவு காலமும் பாடுபட்டேன். நாங்கள் வருகிறோம், போகிறோம். எங்களுக்கு ஆரம்பம் அழிவு என்று எதுவும் கிடையாது. எதற்காக நீங்கள் அழுகிறீர்கள்? பல பயணங்கள் செய்கிறோம். அதில் இது ஒரு பயணம். ஏன் நான் தந்த ஞானத்தை நீங்களே தூக்கி எறிந்தீர்கள்? சொல்லு ஆனந்தா… இதுதான் எனக்கு நீங்கள் தரும் இறுதி மரியாதையா?”

“சரி… நான் செல்கிறேன். உங்களுக்கு இறுதி உணவு தந்த பாக்கியவான் பற்றி அறிவித்து வருகிறேன். எம்மையும் நாம் இனி மாற்றிக் கொள்கிறோம். உங்கள் சொற்களை என்றும் மதிக்கிறோம். இவ்வளவு உறுதி நான் தந்த பின்பும் உங்கள் கண்களில் எதற்காகத் தொடர்ந்தும் கண்ணீர் வருகிறது?” என்று ஆனந்தன் கேட்டான்.

‘அதுவா. இது உங்களால் வந்தது அல்ல. எனது நிலையில் இருந்து எதிர்காலத்தைப் பார்த்ததால் வந்தது. வரும் காலம் கொடுமையாக இருக்கப் போகிறது. என்னை வைத்தே எனக்கு விருப்பம் இல்லாத சிலைகளும் தூபிகளும் வியாபிக்கும். என் மார்க்கத்தைச் சொல்ல வெறியோடு அலையும் பௌத்த நாடுகளையும், பௌத்தர்களையும் நான் பிறந்த தேசத்தைச் சுற்றிப் பார்க்க முடிகிறது. அவர்கள் சக மனிதர்மேல் அன்பு காட்டது இருந்தால் கூடப் பருவாய் இல்லை. பௌத்தத்தின் பெயரால் கொலை வெறி கொள்ளப் போகிறார்கள். சக மனிதர்களை ஈவு இரக்கம் இன்றிக் கொல்லப் போகிறார்கள். துன்பம் இளைக்கப் போகிறார்கள். எந்த அளவுக்கு நான் சாந்தத்தைப் போதித்தேனோ அதற்கு எதிர் மாறாக அவர்கள் வன்முறை பயிலப் போகிறார்கள். அதிலே புத்தராக யாரும் இல்லாத துர்க் காலம் எனக்குத் தெரிகிறது. பௌத்தம் என்பது அவர்கள் கையில் ஆயுதங்களாக, மனதில் வெறியாகத் தெரிகிறது. என் பயணம் முடிந்தாக வேண்டி காலம் வந்துவிட்டது. இருந்தும் என் பயணத்தை நினைத்து எனக்குப் புண்ணீர் கண்ணீராக வருகிறது. அதனால் என் கண்கள் தொடர்ந்தும் நீரைச் சொரிகின்றன. பௌத்தர்கள் இந்த உலகிற்கு வருங்காலத்தில் தேவையில்லை. புத்தர்கள் மட்டும் இருந்தால் போதும் என்று சொல்லு ஆனந்தா. என்னால் அது முடியலில்லை. உன்னால் முடியுமா ஆனந்தா?’

‘முயற்சிக்கிறேன். முயற்சிக்கிறேன்.’ என்றான் ஆனந்தன்.

புத்தர் கவலையோடு கண்ணை மூடினார். உலகத்தில் பௌத்தர்கள் மட்டும் உயிர்த்துக் கொள்ளப் புத்தர்கள் தொலைந்து போயினர்.

– ஒக்ரோபர் 18, 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *