புதுமைப்பெண்களடி!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 8,109 
 

நெடுஞ்சாலையின் கிழக்கே செல்லும் கப்பி சாலை, தார்ச் சாலையாகிக் கொண்டிருந்தது. முருகேசன் நளினி டீக்கடையில் அரை மணிக்கொரு தரம் டீ வாங்கிக் குடித்துக் கொண்டு சாலை போடும் தொழிலாளர்களை விரட்டிக் கொண்டிருந்தான்.

பத்து லட்ச ரூபாய் ஒப்பந்த அடிப்படையில் சாலைப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிஞ்சிப் போனால் ஏழு லட்சம் தான் செலவாகும். பாக்கி மூன்று லட்சம் அரசுப் பணத்தில், யூனியன் சேர்மனுக்கு ஒரு லட்சம். பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு தலா ஐந்தாயிரம் போக ஒன்றரை தேறும்.

புதுமைப்பெண்களடிபஞ்சாயத்துத் தேர்தலுக்கு ஏழெட்டு லட்சம் வரை செலவு செய்து, அக்கா சுந்தரியை தலைவியாக்கி, தம்பி முருகேசன்தான் ஆட்சி புரிகிறான். தமிழ்நாடு அரசு ஜீப் வந்து நின்றது. முருகேசன் ஊதிக் கொண்டிருந்த சிகரெட்டை தூர எறிந்துவிட்டு, கட்சிக் கறை வேட்டியை அவிழ்த்துவிட்டபடி ஜீப் அருகே ஓடினான். சேர்மனும் அதிகாரியும் ஜீப்பிலிருந்து இறங்கினார்கள்.

“”என்னப்பா… இன்னும் எத்தனை நாளாகும்?” சேர்மன் கேட்கவும், முருகேசன், “”ரெண்டு நாள்ல முடிஞ்சிடும் அய்யா” என்றான்.

“”அக்காவ வரச் சொல்லு, இதுல ஒரு கையெழுத்துப் போடணும்” சேர்மன், அரசு முத்திரையிடப்பட்ட தாள்களைக் காண்பிக்க,

“”இதோ ஒரு நிமிஷத்துல வந்துட்டேன்யா… ” என்றதும் புளிய மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹீரோ ஹோண்டாவில் உறுமியவாறு பறந்தான்.

சாலை போடும் தொழிலாளர்களைக் கண்காணி சுறுசுறுப்பாக்கிக் கொண்டிருக்க… அந்த இடமே கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

இரண்டு வளைவுகள் திரும்பி, மூன்றாவதாக வந்த நேர்ச்சாலையில் பயணித்து அந்த பழைய ஓட்டு வீட்டின் முன் நின்றான்.

“”அக்கா… அக்கா…” கூடம், சமையற் கட்டு என ஓடி, கொல்லைப்புறம் நின்றிருந்தாள் சுந்தரி.

“”என்னடா?” எதிர்ப்புறமாய் உட்கார்ந்தவாறே சுந்தரி குரல் கொடுக்க,

“”சேர்மன் உன்னைய கூட்டிட்டு வரச் சொன்னாரு. ரோடு போடறதுக்கு உங்கிட்டே கையெழுத்து வாங்கணுமாம்”

“”இரு. மீன் கழுவிக்கிட்டிருக்கேன். இப்படியேவா வர முடியும்? ”

“”ஐயோ அக்கா… ஆபிசிரு வேற வந்துருக்குறாரு”மடித்துக் கட்டிய வேட்டியை அவிழ்த்துத் திரும்பவும் மடித்துக் கட்டி அவளை அவசரப்படுத்தினான். சுந்தரி எழுந்தாள். மீனைக் கழுவியதும் கழுவாததுமாய் மூடினாள். வீட்டினுள் எடுத்து வந்து அடுப்பு மேடையில் மூடி வைத்தாள்.

கைகளை “விம்’ பார் சோப்பில் கழுவி முகர்ந்து பார்த்துவிட்டு, புடவைத் தலைப்பில் துடைத்தாள்.

“”இப்பிடியே வரவா? வேற சீலையைக் கட்டிக்கிட்டு வரவா?”

“”ஒனக்குப் புத்தி பேதலிச்சுப் போச்சா? ஆபீசரு வந்துருக்குறாரு. கொஞ்சம் நாகரீகமா வா”

அடிக்குரலில் சத்தம் போட சுந்தரி பீரோவின் அருகில் ஓடினாள்.

ஆங்காங்கே மினுமினுப்பாய்த் திகழ்ந்த கரு நீலப் புடவையை உடுத்தி, தலை வாரினாள்.

முருகேசன் கதவைத் தாழிட்டான். சுந்தரி தம்பியின் மோட்டார் சைக்கிளில் ஏறி அமர்ந்தாள்.

மோட்டார் சைக்கிளை ஜீப் அருகே நிறுத்தினான்.

“”கும்புடு” அக்காவின் காதருகே கிசுகிசுத்தான்.

“”வணக்கம் அய்யா” – கும்பிட்டாள்.

“”வாங்கம்மா… இதுல ஒரு கையெழுத்துப் போடுங்க” ஆபிசர் அருகில் வந்ததும் அவர் நீட்டிய காகிதங்களில் த.சுந்தரி எனக் கையெழுத்திட்டாள்.

“”அக்கா என்ன படிச்சிருக்காங்க?” ஆபிசர் வினவவும், “”அஞ்சாவது சார்” என்றான்.

“”தம்பி, நாம் போறண்டா.. மீனு நாறிப் போயிடும்” என்றாள். சேர்மனும் ஆபிசரும் சிரித்துக் கொண்டார்கள்.

“”வா… வா…” அக்காவை மீண்டும் அழைத்துப் போய் வீட்டில் விட்டு வந்தான். சுந்தரி கதவைத் திறந்து வீட்டினுள் சென்றபோது பூனை ஒன்று நாக்கால் வாய் முழுவதும் நக்கியபடி அவளெதிரே வந்து வேகமெடுத்து ஓடியது.

சுந்தரி அடுப்பு மேடையை நோக்கி ஓட… மண் சட்டி கீழே விழுந்து உடைந்து கிடந்தது. ஆங்காங்கே சிறு சிறு மீன் முட்கள் கிடந்தன. சுந்தரிக்கு அழுகை வந்தது.

சுந்தரி பஞ்சாயத்து தலைவியானது அதிர்ஷ்டவசத்தால்தான். ஊரில் ரேஷன் கடைக்குச் சொந்தமாகக் கட்டிடமில்லை. நெடுஞ்சாலை ஓரம் இடம் பார்க்க, சுந்தரியின் மூன்று சென்ட் நிலம் கண்ணில் பட்டது. முருகேசன் அக்காவிடம் பலவாறாக எடுத்துச் சொல்லி நிலம் கொடுக்க சம்மதம் பெற்றான். சுந்தரியின் கணவன் ஆறு வருடத்துக்கு முன் சாலை விபத்தில் பலியாக, அரசு கொடுத்த நஷ்ட ஈட்டில் வாங்கியதுதான் அந்த இடம்.

சுந்தரிக்கு ஒரே பெண். தோப்பு, துரவு என ஐந்து ஏக்கர் நிலம் உண்டு. அதில் வரும் வருமானத்தைக் கொண்டு மகளைச் சென்னையில் கம்ப்யூட்டர் என்ஜினியராக்கிக் கொண்டிருக்கிறாள். தம்பிதான் எல்லா உதவியும் செய்கிறான்.

இடையில் வந்த உள்ளாட்சித் தேர்தல் சுந்தரியை ஊராட்சி மன்றத் தலைவியாக்கி பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. முருகேசன் தேர்தலின் போது நிறையவே பணத்தை வாரியிறைத்ததால்தான் சுந்தரி வெற்றி பெற முடிந்தது. அவனுடைய அரை ஏக்கர் நிலத்தை விற்றுத்தான் சுந்தரியை வெற்றி பெற வைத்தான்.

சுந்தரி வெளி விபரம் தெரியாதவள். தம்பி முருகேசன் எதைச் சொல்கிறானோ அதைக் கேட்பாள். முருகேசனைப் பொறுத்தமட்டில் போட்ட பணத்தை எடுத்துவிட வேண்டும்.

******

“”இங்க யாரும்மா சுந்தரிங்கறது?” கான்ஸ்டபிள் ஒருவர் போலீஸ் வாகனத்திலிருந்து கொண்டே கேட்டார்.

கூடை மெழுகிக் கொண்டிருந்த சுந்தரி எழுந்து வந்தாள்.

“”என்ன சார் வேணும்?”

“”போய்… பிரசிடென்ட் அம்மாவை வரச் சொல்லும்மா…” பீடாவை மென்று கொண்டே கான்ஸ்டபிள் சொல்லவும்,

“”நாந்தாய்யா பெரசெரேண்ட்” என்றதும் கான்ஸ்டபிள் விழிகள் விரிய அவளையே பார்த்தான்.

“”உங்களப் பார்த்தா அப்பிடித் தெரியலையே”

“”கொம்பு மொளச்சத்தான் நம்புவீங்களோ”

பக்கத்திலிருந்த இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் சிரித்தார்கள்.

“”சரி, நேத்து இந்த ஊர்ல நிலத் தகராறாமே… சுப்பிரமணியனுக்கும் பழனிவேலுக்கும் சண்டையாமே”

“”ஆமா, அதுக்கென்ன இப்போ? ”

“”சுப்பிரமணியன் எங்களுக்குத் தகவல் குடுத்திருக்காரு. பழனிவேலு அவரைக் கொல பண்றதுக்கு முயற்சி பண்ணாராமே”

இன்ஸ்பெக்டர் விசாரிக்க, பக்கத்திலிருந்தவர் எழுதிக் கொண்டிருந்தார்.

“”நீங்க எதா இருந்தாலும் தம்பிக்கிட்டே கேட்டுக்கங்க”

“”நீங்கதானே ஊராட்சி மன்றத் தலைவி”

“”சார் அக்காவைக் கேக்காதீங்க சார். அதுக்கு எதுவுமே தெரியாது”

மோட்டார் சைக்கிளில் எங்கிருந்தோ வந்த முருகேசன் மூச்சிரைக்கச் சொன்னான்.

கான்ஸ்டபிள் ஒருவரையும் இன்ஸ்பெக்டரையும் பக்கத்தில் அழைத்துப் போய் தலையையும், கைகளையும் ஆட்டியவாறு பேசிக் கொண்டிருந்தான் முருகேசன்.

சிறிது நேரத்தில் காவல்துறை வண்டி புறப்பட்டுச் சென்றது. சுந்தரி தம்பியிடம் ஓடி வந்தாள்.

“”எதுக்குடா வந்தவொ?” என்றாள்.

“”ஒனக்கு என்னத்துக்கு அதெல்லாம்? எல்லாரையும் சமாளிச்சு வந்துடலாம் போலருக்கு. உன்னய எப்பிடிச் சமாளிக்கப் போறனோ, தெரியலையே”

முருகேசன் முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டான்.

“”நீ என்கிட்டே எதையுமே சொல்ல மாட்டேங்கிறே… அதுனாலதான் எனக்கு எதுவுமே தெரியமாட்டேங்குது” அப்பிராணித்தனமாய்ச் சொன்னாள் சுந்தரி.

“”போ. போயி வேலயப் பாரு. இதுக்குத்தானே அந்தக் காலத்திலேர்ந்து ஆம்பிளைங்கள ஊராட்சித் தலைவராப் போட்டது” என்றான்.

***

தண்ணீர் வற்றிப் போய் நடுக்குளத்தில் மட்டும் காகம் குளிக்கும் அளவுக்கு அந்தக் குளத்தில் தண்ணீர் இருந்தது.

அதில் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் மீன் பிடித்து முடித்திருந்தார்கள். ஜேசிபி ஒன்று குளத்தைச் சுற்றிலும் மண் வெட்டி டிராக்டர்களில் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச் செல்ல பக்கத்து ஊர்களிலிருந்து டிராக்டர்கள் வரத் துவங்கி இருந்தது.

முருகேசனும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் அங்கே கூடியிருந்தார்கள். பகல் உச்சிப் பொழுது. வெயில் கடுமையாகி உச்சந் தலையைப் பிளந்தது.

முதலில் இருநூறு டிராக்டர்கள் மண் வெட்டுவதாகத்தான் பேச்சு. அரசு அனுமதியின்றி வெட்டப்படுவதால் யாராவது வெளியிலிருந்து ஆபீசர் வந்தால் அவர்களுக்கு “வாய்க்கரிசி’ போட வேண்டும். அதனால் 500 டிராக்டர்கள் மண் வெட்டுவதாக முடிவு செய்யப்பட்டது. அவரவர்க்கு கமிஷன் எவ்வளவு என்றும் பங்கிட்டு ஒருவித புரிந்துணர்வுக்கு வந்திருந்தார்கள்.

டிராக்டர்களின் சத்தம் ஊரையே இரண்டு படுத்திக் கொண்டிருந்தது. முதலில் முருகேசனின் வீட்டிற்குத்தான் மண்ணைக் கொண்டு வந்து கொட்ட ஆரம்பித்தான்.

ஊரில் எத்தனை சாலைகள் இருந்ததோ அத்தனை தார்ச் சாலைகளையும் டிராக்டர்கள் படுத்திக் கொண்டிருந்தன.

சுந்தரி எதுவும் தெரியாமல் தன்பாட்டிற்குப் புளியம்பழம் உடைத்துக் கொண்டு தோலை நீக்கிக் கொண்டிருந்தாள். அப்போது வாசலில் டிராக்டர் சத்தம்… மண் நிரப்பிய டிராக்டர்,

“”அக்கா… முருகேசன்ணே உங்க வீட்டுக்கும் பத்து ட்ரக்கு மண்ணு போடச் சொன்னாரு” டிரைவர் டிராக்டர் சத்தத்தை மீறி இரைந்தான்.

“”எனக்கு என்னத்துக்குடா” சுந்தரி டிராக்டரின் எதிரே போய் நின்றாள்.

“”சும்மாதானக்கா மண்ணு கெடைக்குது. போங்க. போயி மண்ணு கொட்ற இடத்தைச் சுத்தம் பண்ணுங்க”

“”எனக்குத்தான் வேண்டாங்கிறேனே…” சுந்தரி டிராக்டருக்கு இன்னும் அருகில் வந்தாள்.

டிரைவர் வேறு வழியின்றி டிராக்டரைக் கோபமாய்த் திருப்பி வேகமெடுத்து ஓட்டத் துவங்க… கோபத்தில் கட்டுபாடற்று ஓடி… எதிரே சைக்கிள் ஒட்டப் பழகிக் கொண்டிருந்த ஏழு வயதுப் பெண்ணை இடிக்க, சைக்கிள் டிராக்டரின் சக்கரத்தில் சிக்கியது. அவள் நசுங்கிதுள்ளத் துடிக்க இறந்து போனாள்.

இறந்த சிறுமி அவளது தாய்க்கு ஒரே பெண். தகப்பன் இல்லை. கூலி வேலை செய்து பிழைக்கும் குடும்பம்.

சில நிமிடங்களுக்குள் அங்கே கும்பல் கூடிவிட்டது. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் போலீஸ், ஆம்புலன்ஸýக்குப் போன் செய்தார்கள்.

உறவினர்களின் அலறல் அந்த இடத்தையே உலுக்கிக் கொண்டிருந்தது. சுந்தரியும் கதறி அழுது கொண்டிருந்தாள். சிறுமியின் தாய் எங்கேயோ வெளியூர் சென்றுவிட்டாளாம்.

கொஞ்ச நேரத்திலேயே தாய் அந்த இடம் வந்து சேர்ந்தாள். அவள் அலறிய அலறல் நெஞ்சைப் பிளந்தது.

முருகேசன் கூட்டத்தினுள் அக்காவைத் தேடினான். அவள் ஒப்பாரி வைத்து சிறுமியின் தாயைக் கட்டியழுது கொண்டிருந்தாள்.

ஆம்புலன்ஸ், போலீஸ் எனக் குவிய பெண்கள் கூட்டம் சற்றே குறைய ஆரம்பித்தது.

“”யாரும்மா ஊராட்சி மன்றத் தலைவர்?” எஸ்ஐ அழைக்கவும், முருகேசன் சுந்தரி அருகில் ஓடினான்.

“”அக்கா நான் சொல்றதை அப்படியே போலீசுக்கிட்ட சொல்லணும். டிராக்டரு அந்தப் புள்ள மேல ஏறல. அந்தப் புள்ளதான் சைக்கிளை டிராக்டருக்குள்ள விட்ருச்சு ”

சுந்தரி அவன் சொல்வதைக் காதில் வாங்கினதாகத் தெரியவில்லை.

போலீஸ், ஆம்புலன்ஸ் அருகில் பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றாள்.

“”திருட்டுத்தனமா மண்ணு வெட்டனாய்ங்க சார்” என ஆரம்பம் முதல் சொல்ல ஆரம்பித்தாள்.

– மே 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *