புதிர் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 4, 2023
பார்வையிட்டோர்: 2,318 
 

(சிறிய புதிர்தான் அழுத்திய எழுத்துக்கு அர்த்தம் கண்டு பிடித்தால் இதுவெல்லாம் ஒரு கதையா என்று எண்ணுவீர்கள்)

அழகிய வேலைப்பாடமைந்த ஒரு வீடு, அந்த வீட்டில் வசித்துக்கொண்டிருப்பவர்கள் ஏகப்பட்ட பேர். எல்லோரும் அவரவர் கடமைகளை பொறுப்பாய் செய்து கொண்டு இருப்பார்கள். இத்தனை பேர் உள்ள இவ்வீட்டில் ஒவ்வொருவருக்கும் பெயர் வைக்க முடியாத காரணத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு எழுத்தை மட்டும் வைத்து கதையை நகர்த்துவோம்.

இந்த கதாபாத்திரங்களிலே முக்கியமானவர், முடிவு எடுப்பதில் முதன்மை பங்கு வகிப்பவர் இவருக்கு “மூ” என்று பெயர் வைத்துக்கொள்வோம். அடுத்த இடத்தில் “இ” என்பவர் பங்கு வகிக்கிறார். என்றாலும், “இ” சில நேரங்களில் “மூ” வை  தாண்டி சில வேலைகளை செய்து மாட்டிக்கொள்ளவும் செய்வார். காரணம் “” செண்டிமெண்டல் நிறைந்தவர், அதனால் அடிக்கடி மாட்டிக்கொள்வார். “மூ” அப்படியல்ல சட்டென எதையும் செய்ய விரும்பாதவர். அதனால் மூ வுக்கும் க்கும் அடிக்கடி மோதல்கள் வரத்தான் செய்கிறது.

இப்பொழுது கூட ஒரு பிர்ச்ச்சினையில்தான் இருவருக்கும் மனஸ்தாபம், “இ” ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்கிறார். “மூ” அதை நிராகரிக்கிறார். “இ” அதை கேட்கும் நிலையில் இல்லை, காரணம் அந்தளவுக்கு அவர் காதல் என்னும் நோயால் பீடிக்கப்பட்டுவிட்டார். இருவருக்கும் காரசாரமாய் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது,

“மூ” இப்பொழுது உனக்கு இந்த காதல் தேவையா? ஆம் தேவைதான், எனக்காக “க” எத்தனை உதவிகள் செய்திருக்கிறான் தெரியுமா? “மூ” “க” வை முறைத்துப்பார்க்க ஐயோ நான் அவன் சொன்னான் என்றுதான் ஒரு சில வேலைகள் செய்து கொடுத்தேன், ஆனால் “வா” தான் மிக ஆழமாக இவர்களுக்கு உதவி புரிந்திருக்கிறான், அவனை விசாரியுங்கள், சட்டென நழுவிக்கொண்டது. இப்பொழுது “வா” நடுங்கி, ஐயோ நான் என்ன செய்வது “இ” சொல்லும் வேலையைத்தான் செய்தேன், அதற்குப்பின்னால் “கா” என்பவன்தான் இவர்களுக்கு அதிகமாக துணை போனான், அவனை கேளுங்கள், அதுவும் நழுவிக்கொண்டது.

“மூ“கா” வை பார்த்து நீயாவது அவனுக்கு புத்தி சொல்லயிருக்க கூடாதா? நான் என்ன செய்வது, சில நேரங்களில் நீ எங்களை கவனிக்காமல் இருந்து விடுகிறாய். அது சமயம் “இ” தான் எங்களை பார்த்துக்கொள்கிறான். அதனால் அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவன் சொல்லும் இடங்களுக்கு சென்று அவர்கள் காதலுக்கு துணை புரிந்திருக்கிறேன். வேண்டுமானால் “கை” இவனிடம் பேசிப்பார், அவன் ஆரம்பத்தில் அவனுக்கு அட்வைஸ் செய்திருப்பதாக ஞாபகம்.

“கை”  அப்பா ஆளை விடுங்கள்,”இ” வுக்கு எத்தனையோ விதத்தில் உதவியிருக்கிறேன். இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் சற்று தடுமாறினேன். என்ன செய்வது? அவன் கேட்கமாட்டேனெங்கிறான். நீயாவது அவனுக்கு புத்தி சொல்.

இத்தனை களேபரத்திலும் “வ” வாயே பேசவில்லை, காரணம் எனக்கு என்னவானால் என்ன? நேரா நேரம் ஏதாவது கிடைத்தால் போதும் அவ்வளவுதான் என்று நினைத்தது.

“மூ” இப்பொழுது “இ” யைப்பார்த்து சொன்னது. தயவு செய்து கொஞ்ச நாள் போகட்டும், இந்த வயதில் இந்த செயல் உனக்கு தேவையில்லை.இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் கழித்து உனக்கு ஒரு பக்குவ நிலை வந்து விடும், அப்பொழுது நீ இதே நிலையில் இருந்தால்

நானும் உன் காதலுக்கு ஒத்துக்கொள்கிறேன்.                                                 

“இ” சற்று நேரம் அசையாமல் நின்றது. மெல்லிய வருத்தத்துடன் முயற்சி செய்கிறேன், இந்த ”க” வையும், “வா”வையும் “கா” வையும்  “கை” இவர்களிடமும் சொல்லி வை, அவர்கள் சில நேரங்களில் என்னை தூண்டுவது போல் நடந்து கொள்கிறார்கள். அதற்கு நீ கூட காரணமாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன்.

“மூ” தயவு செய்து அப்படி சந்தேகப்படாதே, இனிமேல் உன்னை வழி நடத்த நாங்கள் அனைவரும் தயார்.“இ” சோகத்துடன் தலையசைத்தாலும் அதனுடைய நினைவுகளில் இன்றும் அந்த காதல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. நாட்கள் வாரங்களாகி, மாதங்களாகி, வருடங்களாகவும் ஆகி விட்டன. இப்பொழுது அதன் காதல் கைகூடும் என்று தெரிகிறது. காரணம் “மூ” கடினமாக உழைத்து நல்லதொரு உத்தியோகத்தை பெற்று கொடுத்திருக்கிறது. இனி என்ன? எல்லாம் “ஜமாய்தான்”. எல்லாம் அதன் அழகிய வீட்டுக்குத்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *