புகை நடுவே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 26, 2021
பார்வையிட்டோர்: 2,717 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அலைகள் – மடார்மடா ரென்று சிதறி நுரைகளை உதறியபடியே கலைவதும் புரள்வதுமாக இருந்தன. வெளி றிட்ட வானத்திலே பொன்வண் ணம் மெதுவாகப் புரண்டு படியத் தொடங்கிய மாலைப்பொழுது. ஆட்கள் குறைவாகவே தெரிந் தனர். இராணுவ வண்டிகளும் சிப்பாய்களும் அடிக்கடி நெடு வீதியில் அலைவதைச் செல்வ ராசன் ஓரக்கண்ணால் பார்த் துக் கொண்டான். காற்றுக்காக நிற்பவன் போலத் தோற்ற மளிக்க முயன்றவனின் அருகே நடராசாவின் குரல் ஓயாமல் கேட்டது. ‘நீ சொன்னபடியே நான் எந்த இடத்திலும் நிற்க மாட்டன். வேலையை முடித்துக் கொண்டு உடனேயே திரும்பி விடுவேன். பயப்படாதே’ என்று அவனது அச்சுறுத்தலுக்குப் பதில் சொல்லிவிட்டு வந்த போதிலும் நடராசனின் குரல் காதினுள்ளே ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தது. அலைகளின் ஓசைகளுக்கும் மேலான ஸ்தாயியில்,

தோளில் மாட்டியிருந்த பையை கையில் எடுத்தான். இருபது ஆண்டுகளின் முன்னர் இதேகோல் பேஸ் மைதானத்தில் கடற்கரையின் முன்னர் ரணசிங்காவுடன் வந்து மணிக் கணக்கில் செல்வராசன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறான். இருவரும் உள்ளூராட்சி அமைச்சில் ஒன்றாக வேலைக்குச் சேர்ந்தவர்கள். ரணசிங்கா மெல்லிய குரலில் பேசுவான். ஆறுமாத காலமே செல்வராசனைவிட இளையவனாயினும் கனிந்த குரலிலே அண்ணா என்ற சிங்கள அர்த்தப்பட செல்வா ஐயா என்று அழைப்பான். ரணசிங்கா சிங்கள மொழியைச் செல்வராசனுக்கு ஒன்பது மாதங்களில் சொல்லிக் கொடுத்தது போலவே அவனும் ரணசிங்காவுக்கு தமிழைக் கற்றுக் கொடுத்தான். செல்வராசனுக்கு யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் கிடைத்த போது ரணசிங்கா பேச்சற்று, கண் கலங்கி நின்றான். ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன் அவனைச் சந்தித்த போது முகத்தைத் திருப்பிக் கொண்டு போனான். செல்வராசனுக்கு அன்று மிகவும் கவலையாக இருந்தது, அலைகள் ஆக்ரோஷமாக ஒன்றையொன்று அறைந்து கரைந்து மீண்டும் இரைந்தன.

யாரோ தன்னை அழைப்பதை உணர்ந்து திரும்பினான். வீதிமருங்கில் இராணுவ ஜீப். இரண்டு அதிகாரிகள் அவனைச் சைகை காட்டி அழைத்தனர். இரண்டு ரிவால்வர்கள் அவனுக்குத் தெளிவாகக் குறி வைத்திருந்தன. அவர்களை நோக்கி நடந்தான்.

“எதற்காக இங்கே நிற்கிறாய்?” சிங்களக் குரல் அதட்டிற்று.

இன்னொரு அதட்டல்:

“அடையாள அட்டையை எடு…”

பையை விரித்தான்.

“அதை நிலத்தில் வை, ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வை .”

பையை நிலத்தில் வைத்துவிட்டு முதலில் அடையாள அட்டையை எடுத்துக் கொடுத்தான். அதிகாரியின் முகம் பரபரத்தது.

“தமிழன்… யாழ்ப்பாணம்…” என்ற சிங்களச் சொற்களில் முற்றாகக் கவிந்த சந்தேகம். அடையாள அட்டையைத் திரும்பத் திரும்பப் பார்த்தான்.

மூர்க்கமான சந்தேகம் கண்களில், ரிவால்வர்கள் பைக்குக் குறி வைத்திருந்தன. இரண்டு புத்தகங்கள், சிறிய பர்ஸ். அன்றைய தமிழ்த் தினசரி. ஒரு கசங்கிய கைக்குட்டை, சிறிய டயறி.

அதிகாரிகள் ஒருவரையொருவர் – பார்த்தனர். இரண்டாமவன் உதட்டைப் பிதுக்கிக் கொண்டான்.

“சிங்களம் தெரியுமா?’

இந்தக் கேள்விக்காகவே காத்திருந்தவன் போல செல்வராசன் சிங்களத்தில் பதில் கூறத் தொடங்கினான்:

“நான் அரசாங்க நிறுவனத்தில் பணி புரிபவன். மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு இடமாற்றலாகி நேற்றுத்தான் வந்திருக்கிறேன். இன்னும் தங்கியிருக்க இடம் கிடைக்கவில்லை. இப்போது என்னுடைய நண்பனோடு தங்கியிருக்கிறேன். அவன் வீட்டுக்கு வர நேரமாகும் என்பதால் இங்கு நிற்கிறேன். இருபது வருஷங்களுக்கு முன்னால் இங்கேயே வேலை செய்து அடிக்கடி இந்த இடத்திற்கே வருவேன். அந்த நினைப்பில்….”

“ஓ… நீ எங்களைப் போலவே சிங்களம் பேசுகிறாய். நல்லது. ஆனால் இப்போதைய நிலைமை உனக்கும் தெரியுந்தானே? இப்படி இனி நிற்காதே.”

முதல் அதிகாரி, நெட்டையன் அடையாள அட்டையை செல்வராசனிடம் திருப்பிக் கொடுத்தான். மற்றவன் கரகரத்த குரலிலே, “உன்னைப் போல எல்லாத் தமிழர்களும் சிங்களத்தைப் படித்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்தி ருக்குமா? இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?’ என்றான்.

செல்வராசனின் நெஞ்சினுள் தகித்த கோபத்தைச் சட்டென முகத்தில் தெரிய விடாது தடுத்தான். தன்னைத் தாண்டியபடி புன்னகையும் சிரிப்புமாய்ப் போய்க் கொண்டிருக் கிறவர்களைப் பார்த்தான்.. சிங்களக் குரல்கள், சட்டென்று மணிவண்ணன் கண்களில் வந்தான்.

“தூரத்தில் பார்த்த போதே உன்னைத் தமிழன் என்று உணர முடிந்தது. அதுவும் பையுடன் நின்றாய். இது பாதுகாப்பு வலையம். உன்னைப் புலி என்ற சந்தேகத்தில் சுட்டுக் கொன்றிருக்க முடியும். உனக்கு நல்ல காலம். தப்பிவிட்டாய். இங்கே புலிகள் ஊடுருவல் இருக்கிறது. அதுசரி, உனக்குப் புலிகளோடு தொடர்பு உண்டா?”

“இல்லை. எவரோடும் எனக்குத் தொடர்பில்லை. எனக்கு யாரும் இல்லை “

அவனையறியாமலே குரல் கலங்கிற்று.

பரிதாபமாக செல்வராசனைப் பார்த்தான் நெட்டையனான அதிகாரி. “ஏன் உனக்கு யாரும் இல்லை என்றாய்?”

பெருமூச்சோடு சொன்னான் செல்வராசன், “என் வீட்டின் மீது ஷெல் விழுந்து மனைவியும் மகனும் அந்த இடத்திலேயே இறந்து போய்விட்டார்கள். அப்போது நான் வெளியே போயிருந்தேன்.”

மற்ற அதிகாரி கண்களைச் சிமிட்டியவாறே, “ஷெல் அடித்தது புலிகள் தானே?” என்றான்.

செல்வராசன் இல்லையென்று தலையசைத்தான்.

“சரி… நீ போய்விடு. இனி இப்படியெல்லாம் நிற்காதே. அது போகட்டும். நீ இங்கு வசிக்கப் போகிறாய் என்பதை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து விட்டாயா?” என்றான் அதிகாரி.

“நாளைக்குத்தான்…” இழுத்தான்.

அதிகாரிக்குக் கோபம் சீறிற்று, “படித்த முட்டாளாக இருக்கிறாய். எந்தத் தமிழனும் தான் இருக்கிற இடத்திற்குப் பக்கத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தன்னைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும். அல்லாவிடில் அது தண்டனைக்குரிய குற்றம். அதற்காக இப்போதே உன்னைக் கைது செய்ய முடியும். ஆனால் நீ மிக மனக் கஷ்டத்தோடு இருக்கிறாய். உனக்கு சிங்களம் தெரிந்ததால் தப்பினாய். நான் சொன்னபடி நீ நட…”.

செல்வராசன் அங்கிருந்து நடந்தான்.

செல்வராசனுக்கு வெறுப்பாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் வீட்டையும் குடும்பத்தையும் இழந்த போதே தற்கொலை செய்தாவது இறந்து போய்விட முயன்றான். ஆனால் அக்கா சிவகாம சுந்தரி அவனைக் கெஞ்சி மன்றாடினாள். அக்காவின் மகன் மணிவண்ணன் பரிதாபமாக அவனைப் பார்த்து, “வேணாம் மாமா, உயிர் போறதென்றால் அது நல்ல காரணத்திற்காகப் போகிறதென்றால் தான் சரி” என்றான். சொல்லி ஒரு வருஷத்தில் பதினேழாவது வயதில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அவன் வீட்டை விட்டுப் போய்விட்டான். அக்கா இதை எதிர்பார்த்திருந்ததைப் போல மௌனமாகியிருந்த போது அவன் ஆச்சரியமடைந்தான். ஆனால், அவளிடம் எதையும் கேட்க விரும்பவில்லை .

பஸ் தரிப்பில் யோசனையோடு நின்றவன். மின் விளக்குகள் வெளிச்சத்தை உமிழத் தொடங்கிய வேளையிலும் பஸ் ஏதும் வராததால் மனம் குழம்பிப் போனான். அருகே மெல்லிய, மனதைக் கிறங்கடிக்கிற வாசனை கமழ்ந்தது. திரும்பினான். வசீகரமான புன்னகையுடன் அவனைப் பார்த்த அங்கு நின்ற யுவதி சிங்களத்திலே, “இப்போது நேரம் என்ன?’ என்று கிறக்கமான குரலில் கேட்டாள்.

செல்வராசன் நேரத்தை சொல்லிவிட்டு அவளது கையில் கட்டப்பட்டிருந்த மணிக் கூட்டைப் பார்த்தான்.

“நாங்கள் மணிக் கூட்டையும் ஒரு ஆபரணமாகத்தானே கட்டுவோம். அது நின்று போய்விட்டது”

சொல்லியவளின் கண்களும் புன்னகை செய்கிறாற் போல உணர்ந்தான். கழுத்துக்குக் கீழே அவளைப் பார்க்கக் கூச்சமாக இருந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்னே சிங்களத் திரையில் மின்னிய நடிகை சந்தியா குமாரி போல இருந்தாள். அதே கண்கள், பல்வரிசை, புன்னகை, ஆகிருதி.

கொஞ்சம் அருகே வந்தாள், “நீங்க தமிழர்தானே?”

“இல்லை. உன் ஜாதிதான்.”

“பொய் சொல்ல வேண்டாம்.”

நளினமான புன்னகை அவனை உதறிற்று.

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

“சாதாரணமாக நாங்கள் இலக்கணப்படி பேசுவதில்லை. நீங்கள் தமிழர். அழகான ஆள்.”

அவன் திடுக்கிட்டுப் போனான்.

“எனக்கு… எனக்கு… உங்களைக் கட்டிப்பிடிக்க வேணும் போலை…” மோகமூறியிருந்தன வார்த்தைகள்.

அவளின் வார்த்தைகள் தன்னைத் தொட்டாற் போல் அவன் சட்டென்று விலகிப் போனான்.

அவள் சிரித்தாள். அருகே வந்தாள்,

செல்வராசனின் மனதினுள் சட்டென்று அம்பொன்று குத்தி நின்றது. வீட்டில் விழுந்த ஷெல். அதனால் சிதைந்து கிடந்த தங்கத்தின் அழகிய உடல். மகனது துண்டு துண்டான பிஞ்சுத்தேகம். பின்னர் ஷெல்லடியில் இறந்துபோன அவனது

மைத்துனி கலாவதியின் முகம்…….

வழி வழியே சோதனைச் சாவடிகளில் விசாரிக்கும் போதெல்லாம் தம்மை நையாண்டியாகப் பார்க்கிற பெண் முகங்கள். எல்லாவற்றுக்கும் பொதுவாக இவளைச் சிதைக்க வேண்டும். அம்புகள் இன்னுமின்னும் சீறிச் செறிந்தன. இவளைக் குரூரமாகச் சிதைக்க வேண்டும். குரூரமாக.

“என்ன யோசனை?” சொல்லியவாறு அவனோ இழைந்தான்.

“ஹோட்டல் வேணாம். நான் தமிழன். பொலிஸ் பதிவு இல்லை. கைது செய்துவிடுவார்கள்.”

இரக்கமாகப் பார்த்தாள் அவனை.

“மருதானையில் எனது வீட்டுக்குப் போகலாம்.”

“என்னிடம் ஆயிரத்து நூறு ரூபா மட்டும்…. ” இழுத்தான் வார்த்தைகளை.

“போதும்” என்றவள் ஆட்டோவை அழைத்தாள்.

அவள் அவனது கையை மெல்ல வருடினாள். உள்ளங் கைக்குள் தனது ஆட்காட்டி விரலால் வட்டமிட்டுவிட்டு சட்டென்று உள்ளங்கையில் இதழால் தொட்டாள். அவன்

அவளிடமிருந்து கையை எடுத்தான்.

“நீங்கள் திருமணம் செய்தவர்தானே?”

அவன் எரிச்சலோடு அவளைப் பார்த்தான்:

“அதெல்லாம் ஏன்? நான் உன்னை ஏதாவது கேட்டேனா? எனக்கு கேள்வி கேட்கிறது பிடிக்காது.”

“சரி…” மௌனமானாள்.

‘செல்வராசன் அவளைப் பார்த்தான். என்னை, நினைத்தால் உன்னுடைய ஆள் சுட்டுக் கொல்லலாம். என் வீட்டை அழிக்கலாம். மனைவி குழந்தைகளை ஈவு இரக்கமின்றிச் சிதைக்கலாம். தமிழன் என்பவனை புலியென்று சொல்லி

என்னவும் செய்யலாம். இன்னும் கொஞ்ச நேரந்தான். உன்னைக் கொல்லாமல் சிதைக்கிறேன். உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை… எழுந்து நடக்க முடியாமல்… பிறரை வசீகரிக்க முடியாமல்…

ஓட்டோ டிரைவருக்கு வழி காட்டியவள் அவனது காதினுள் கிசுகிசுத்துவிட்டு, “எனது இடம் வந்து விட்டது” என்றாள்.

கதவைத் திறந்தவள், மெதுவாக மூடிவிட்டு அவளோடு இழைந்தான். அவன் அவளைக் கடித்துப் பிய்த்துத் துப்பி எறிய எண்ணினான். பிறகு, இதோடு எல்லாமே முடியக்கூடாது என்று நினைத்தான்.

அவளை மெதுவாகத் தன்னிடமிருந்து விடுவித்தான். மெல்லிய வெளிச்சம் அறையினுள் விழுந்தது. வெறுஞ் சுவர்கள், மூலையிலுள்ள மேசையில் சில புத்தகங்கள், பூச்சாடி, அழகிய நிறங்களில் படுக்கை விரிப்பும் தலையணைகளும், இடது பக்கம் இன்னொரு அறை. வலது புறமூலையில் குளியலறை.

வெள்ளை நிறத் துவாயை அவனிடம் கொடுத்து, “பாத் ரூமிற்குப் போய்விட்டு வாருங்கள் தேநீர் முதலில் தருகிறேன்” என்றாள்.

வக்கிரமாகச் சிரித்தான். சிதையப் போகும் அவளின் ஒவ்வொரு அவயவத்தையும் ஊடுருவிப் பார்த்துக் கற்பனை செய்தான்.

“இடியப்பமும் சீனிச் சம்பலும் பிடிக்குமா அல்லது சொதி வேணுமா?”

“இரண்டும்”

சொல்லியவாறே பாத் ரூமிற்குள் போனான். திரும்பிய போது தேநீரைக் கொடுத்துவிட்டு, உள்ளே போய் குளித்துவிட்டு, ‘நைட்டி’யுடன் வந்தாள்.

“சாப்பிடுங்கள்.”

அவளது கையைத் தொட்டான். “முதலில் சாப்பாடு.”

“வேணாம்.”

“சாப்பிடுங்க…” கெஞ்சல்.

போனவளின் பிருஷ்டத்தில் ஓங்கித் தட்டினான். அவள் துடி துடித்துத் திரும்பினாள். கண்கள் கலங்கின.

“என்ன இது?” அழுகையும் பணிவுமாய் கேட்டாள்.

தன்னைச் சுதாரித்துக் கொண்டான். அவசரப்படக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாய், என்ன இது என்றா கேட்கிறாய்? தங்கம் எப்படி சிதைக்கப்பட்டாள் என்று தெரியுமா? அதை நீ கொஞ்சமாவது அறிய வேண்டும்.

“அடித்த இடத்தைத் தொட்டுப் பாருங்கள்”

உணர்ச்சியற்றவனாய் அவளைப் பார்த்தபடி, அடித்த இடத்தைத் தொட்டான். காயமாகப் புடைத்திருந்தது.

அவள் மௌனமாக தட்டில் இடியப்பம் வைத்துக் கொடுத்தாள்.

“நீ சாப்பிடவில்லையா?”

“வேணாம்.”

“ஏன்?”

பெருமூச்சு விட்டாள்.

தன்னை அறியாமலே அவன் கேட்டான். “நீ திருமணம் ஆனவளா?”

சுவரைப் பார்த்தபடி இருந்தாள். “சொல்லு.”

“ம்ம்…”

“உன் கணவன்?”

“இல்லை .”

“ஏன்?’

“உயிரோடு இல்லை”

அவள் குரல் தளதளத்தது. செல்வராசனின் மனதினுள் மெல்லிய கசிவு. பரிவோடு அவளை ஏறிட்டான்.

“சின்ன வயதில் எப்படி மரணம் வந்தது? உனக்கு விருப்பமென்றால் சொல்லலாம்.”

“அவர் இராணுவத்திலை வேலை செய்தவர். சண்டையில் இறந்து போனார். உழைக்கவென்று போனவர்.”

விம்மி விம்மி அழத் தொடங்கினாள். மௌனம் அறையெங்கும் விரிந்தது. அவள் சுவரைப் பார்த்தபடியே கண்களைத் துடைத்துக் கொண்டாள். உதடுகள் நடுங்கித் துடித்தன.

அமைதியை அவன் குலைத்தான். “பிள்ளைகள் இல்லையா?”

“மகன் இருக்கிறான். ஹொஸ்டலில் அவனைப் படிக்க வைத்திருக்கிறேன். தகப்பனைப் போல நல்ல கெட்டிக்காரன். அவனை நன்றாகப் படிக்க வைத்து ஒரு டொக்டராகவோ இன்ஜினியராகவோ ஆக்க வேண்டும். என் கணவரின் ஆசையும் இதுதான். அவர் எப்படி வர ஆசைப்பட்டாரோ அது முடியவில்லை . மகனை அப்படி ஆக்க நான் எதையும் இழப்பேன்.”

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் நிதானமாக வந்தது. மெல்லிய வெளிச்சத்தில் அவளைப் பார்வையால் அளந்து கொண்டிருந்த அவன் கேட்டான்:

“உன் பெயர் என்ன?”

“நந்தாவதி.”

“நந்தா, உன்னுடைய கதையைக் கேட்க எனக்கு மனம் கஷ்டமாயிருக்கிறது. ஆனால் நீ ஏன் இந்தத் தொழிலைச் செய்கிறாய்? இது அவமானமில்லையா?”

விரக்தியோடு சிரித்தாள் அவள்.

“போர் முனையிலிருந்து எனது கணவரின் சடலத்தைப் பிரேதப் பெட்டியுள் வைத்து அதைத் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுப்பிவிட்டு நட்ட ஈடாகக் கொஞ்சம் பணமும் தந்தார்கள். கிராமத்தவர்கள் நிபந்தனையை மீறிப் பிரேதப் பெட்டியைத் திறந்து பார்த்தார்கள். அதற்குள் என் கணவர் பிணம் இருக்கவில்லை. இரண்டு கற்களும் வாழைக் குற்றியும் மட்டும் இருந்தன. பிறகு என்னால் கிராமத்தில் வாழ முடியவில்லை. என்னைப் போன்ற இருவருடன் இங்கு வந்தேன். மகனது வாழ்விற்காக, இது தவறென்றாலும். இதை நான் செய்ய..”

“நந்தா …”

கனிவான அவனது குரலை இப்போதுதான் கேட்டாள் நந்தாவதி,

“சொல்லுங்க.”

“சாப்பிடு.”

“பிறகு சாப்பிடலாம்.”

“இல்லை சாப்பிடு.”

“சாப்பிட்டால் எனக்கு உடனே நித்திரை வந்துவிடும். பிறகு நீங்கள்…”

செல்வராசன் தனது பர்ஸை எடுத்தான். ஆயிரம் ரூபாயை வெளியே இழுத்து அவளுக்கு எதிரே நீட்டினான். “நந்தா இது உனது மகனுக்கு. இப்போது நான் வெளியே போனால் பொலிஸ் பிடித்துவிடும். இங்கேயே இரவுபடுத்திருப்பேன். நீசாப்பிடு, பிறகு படுத்துவிடு கீழே…”

நந்தாவதிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவன் கட்டிலில் இருந்த தலையணையையும் பெட்ஷீட்டையும் மறு கையால் எடுத்து அவளெதிரே வைத்துவிட்டு, பணத்தை அவளிடம் கொடுத்தான்.

மெல்லிய குரலில் மீண்டும், “நந்தா, போய்ச் சாப்பிடு” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது, தடதடவென்று கதவில் தட்டி, “பொலிஸ் வந்திருக்கிறது, கதவைத்திற” என்று வெளியே இருந்து கடூரமான குரல்கள் கேட்டன.

– விநோதினி (பதினொரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, விண்மீன் பப்ளிகேஷன், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *