பிரபலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 6,026 
 
 

கோட்டைப் புகையிரத நிலையத்துக்கு முன்பாக உள்ள பூந்தோட்ட வீதியிலிருந்து முளைத்துச் செல்லும் கிளை வீதியொன்றின் வழியாகப் பலர் மத்தியான உச்சி வெய்யிலையும் பொருட்படுத்தாது சென்றனர். அவர்களில் அநேகமானவர்கள் அரசாங்க அலுவலகங்கிலும், கூட்டுத்தாபனங்களிலும் வேலை பார்க்கும் உத்தியோகத்தவர்களாவர். வெய்யில் என்றால் வயிறு கேட்குமா?

அந்தச் சிறிய வீதிலுள்ள கடையொன்றில் மத்தியானச் சாப்பாட்டுக்காக நடுத்தரக் குடும்பத் தலைவர்களும், புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களும் செல்வது வழக்கம். விலைவாசி உயர்ந்து விட்ட இந்த நாட்களிலும் சிக்கனச் செலவில் சிறந்த சாப்பாட்டை அங்கே பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை அநேகமானவர்களுக்கிருந்தது.

பூந்தோட்ட வீதி வழியாக ஒரு கட்டையனும் ஒரு நெட்டையனும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். கட்டையனின் பெயர் கந்தசாமி. நெட்டையனின் பெயர் ஜெறோம். ஒரே கந்தோரில் வேலை செய்வதால் இருவரும் நண்பர்கள்.

“மைச்சன் இண்டைக்கு எங்கே சாப்பிடுவோம்” ஜெறோமைக் கேட்டான் கந்தசாமி.

“நீ எங்கை கூட்டிக்கொண்டு போறியோ, அங்கை வாறன்” என்றான் ஜெறோம்.

“கி.வா.ஜகந்நாதன் சொன்னமாதிரி “பைனான்சியல் புரொப்பிளமாக் கிடக்கு. அ…பரவாயில்லை: இண்டைக்கு இஞ்சை போவம்.” சொல்லிக்கொண்டே, பூந்தோட்ட வீதியிலிருந்து பிரிந்து செல்லும் சிறிய வீதி வழியாகத் திரும்புகின்றான் கந்தசாமி. அவனைத் தொடர்ந்து ஜெறோமும் அந்தச் சிறிய வீதியில் நடக்கின்றான்.

“ஐயா வாங்கோ” என்று கந்தசாமியையும் ஜெறோமையும் வரவேற்றார். சாப்பாட்டுக் கடை வாசலில் நின்ற கிழவர். இருவரும் கைகளைக் கழுவிக் கொண்டு சாப்பாட்டு மேனையின் முன்னால் அமர்ந்தார்கள்.

ஒருவர் இரண்டு இலைகளைப் போட்டுவிட்டு, தண்ணீர்ச் செம்பையும் கொண்டு வந்து வைத்தார். இன்னொருவர் பாத்திரத்திலிருந்த சோற்றை இலைகளில் கொட்டிக் கொண்டு “ஐயாவுக்கு என்ன கறி வைப்பம்?” – என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு பதிலாக “ஆடு, இறால்,கோழி, நண்டு” என்று பல விடைகளை அடுக்கிக்கொண்டு போனார்.

“எங்களுக்கு அதொண்டும் வேண்டாம்,மீன் கொண்டு வாங்கோ”

மீன் வேண்டுமென்றான் கந்தசாமி. ஆட்டிறைச்சி சாப்பிட ஆசை இருந்தாலும் அதற்கு அவனது பொருளாதார நிலை இடம் கொடுக்காது. கடன் கிடன் வாங்கிச் சாப்பிட்டாலும் சம்பளத்தன்று கையைக் கடிக்கும். வீட்டுக்கு அனுப்பும் காசைத்தான் குறைத்து அனுப்ப வேண்டும். சோறு வைத்தவர், “மீனாம் மீன்” என்று கத்திவிட்டு மற்றவர்களுக்குச் சோறு வைக்கிறார். சாப்பிடுபவர்களின் விருப்பத்தைப் பொறுத்து “ஐயாவுக்கு ஆடு” “இஞ்சாலை ஒரு கோழி” கணவாய் கொண்டு வா” “தம்பி ஒரு முட்டை இப்படியான கட்டளைகளை அடிக்கடி பிறப்பித்துக்கொண்டிருந்தார்.

ஜெறோமுக்கும் கந்தசாமிக்கும் மரக்கறி வந்துவிட்டது. மீன் குழம்பு வரச்சிறிது தாமதம். மீன் வரும் வரையில் காத்திருக்கத் தயாராக இல்லை இருவரும்.கத்தரிக்காயக் கறியுடன் சோற்றைப் பிசைந்து கொண்டே, “மைச்சான் இந்தக் கல்லுக்குவியலுக்கை இடைக்கிடை சோறும் கிடக்கு” என்று ஜெறோம் சொல்லியதும் கந்தசாமிக்குச் சிரிப்பு உண்டாகியது.

“பெரிய பகிடி விடுறாய். உன்ர சொந்தமோ? என்று கேட்ட கந்தசாமி சோற்றைக் குழைத்த போது,

“ஐயா கொஞ்சம் கையை எடுங்கோ, குழம்புவிட” என்றார் மீன் குழம்பு விநியோகஸ்தர்.

“மைச்சான், ஒரே முள்ளாக்கிடக்கு இது என்ன மீன்..” என மீனின் இனத்தை ஜெறோமிடம் வினவினான் கந்தசாமி.

“கொய் மீன். முள்ளெண்டாலும் நல்ல ருசி” என்று சொல்லிவிட்டு பொரிச்ச மீனை ஒரு கடி கடித்தான் ஜெறோம்.

இரண்டாம் தரமும் சோறு வைத்தாகிவிட்டது. கந்தசாமி ஹோர்லிக்ஸ் போத்தலோடு சொதியைத் தன் இலையில் ஊற்றியபோது, மீன் குழம்பு விநியோகஸ்தர் ஓடிவந்து, ஐயா கலக்கிப் போட்டு ஊத்துங்கோ. இல்லையெண்டால் பிறகு சாப்பிட வாற ஆக்கள் வெறும் தண்ணியைத்தான் ஊத்திச் சாப்பிட வேண்டிவரும்” என்று சொல்லிக் கொண்டே போத்தலின் வாயை உள்ளங்கையால் பொத்திக்கொண்டு போத்தலை ஒருதரம் ஆட்டிச் சொதியைக் கலக்கி வைத்தார்.

சாப்பிட்டு முடியப் போகும் தருணத்தில் கந்தசாமி தன் இலையிலிருந்த கொய்மீன் முட்களை ஜெறோமின் இலையில் தூக்கி வைத்தான். இப்படிச் செய்ததில் அவனுக்கொரு மகிழ்ச்சி. நண்பர்களோடு சாப்பிடும்போது பக்கத்திலிருப்பவரின் பப்படம், பொரியல் முதலியவற்றை ‘அபக்’ கென்று எடுத்துச் சாப்பிடுவது, பாயாசம், மோர் முதலியவற்றில் வாய் வைப்பது கந்தசாமிக்கு பிரியமான செயல்கள்.

கந்தசாமியின் செயல்கள் ஜெறோமுக்குக் கோபத்தை உண்டாக்கவில்லை. ஒரு சிரிப்பைத்தான் வரவழைத்தது. கந்தசாமியும் சிரித்துக்கொண்டே “என்ன விசயம் சிரிக்கிறாய் மைச்சான்” என்று கேட்டான்.

“இல்லை மைச்சான். நான் கனக்க மீன் திண்டனான் எண்டு பார்க்கிறவங்கள் நினைக்கட்டுமெண்டு நினைச்சுத் தான் உன்ர இலையிலிருந்த முள்ளை என்ர இலையில வைச்சனி. நீ நினைச்சதுக்கு மாறாக ஆரும் நினைச்சாங்களெண்டால்…” என்றிழுத்தான் ஜெறோம்.

“எப்படி நினைப்பினம்?” என்று கேட்டுவிட்டு இல்லையின் நாலா பக்கமும் சிதறிக்கிடந்த சோற்றுப் பருக்கைக்ள் கறி முதலியவற்றை வலக்கையால் ஒதுக்கி இலையின் நடுப்பகுதிக்குக் கொண்டு வந்தான் கந்தசாமி.

“நீ மீனோடை சேர்த்து முள்ளையும் திண்டிட்டாய் என்று எண்ணி, பாக்கிறவங்கள் சிரிப்பார்கள்” சொல்லிக் கொண்டே ஜெறோம் இலையைத் தூக்கிக் கொண்டு கை கழுவும் தொட்டிக்குப் போனான்.

சாப்பாட்டை முடித்துக் கொண்டு கந்தோருக்குச் சென்ற கந்தசாமி, பக்கத்திலிருந்த பாலசிங்கத்திடம் வாரப் பத்திரிகையொன்றை வாங்கினான்.

மின்சார விசிறியின் கீழிருந்து வாரப் பத்திரிகையின் பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தான். பத்திரிகையிலுள்ள துணுக்குகளையும், சிறு விடயங்களையும்; தான் முதலில் வாசிப்பது கந்தசாமியின் வழக்கம். துணுக்குகளை வாசித்துக்கொண்டு வரும்போது, பெர்னாட்சாவின் படத்தோடு பிரசுரிக்கப்பட்டிருந்த துணுக்கொண்றையும் வாசிக்க நேர்ந்தது.

“ஒரு நாள் பெர்னாட்சாவும் அவரது நண்பர் ஒருவரும் பேரீச்சம் பழம் சாப்பிட்டு விட்டதால், அவருடைய கோப்பையில் பழத்தின் கொட்டைகள் அதிகமாக இருந்தன. நண்பர் அந்தக் கொட்டைகளைத் தூக்கி பெர்னாட்சா கொட்டைகள் போட்ட கோப்பையில் கொட்டினார். அப்போது பெர்னாட்சா சிரித்துக்கொண்டே “ நண்பரே! இந்தச் செயகையால் தான் அதிகம் பேரீச்சம்பழம் சாப்பிட்டுவிட்டதாக யாரும் நினைக்கமாட்டார்கள். பதிலாக நீங்கள் பழத்தோடு கொட்டைகளையும் சாப்பிட்டு விட்டதாக எண்ணிக்கேலி செய்வார்கள்” என்றார்.

இந்தத் துணுக்கை வாசித்த கந்தசாமிக்குக் சிரிப்புடன் சிந்தனையும் வந்தது.

“பெர்னாட்சா சொல்லிய துணுக்கு என்றபடியால் படத்தோடு பெரிய பகிடியாகப் பேப்பரிலை போட்டிருக்கிறாங்கள். ஜெறோமும் சாப்பிடும் போது சரியாக இப்படித்தானே ஒரு பகிடி விட்டவன். நான் அதை மறந்து போனேன்” என்று சிந்தனையில் மூழ்கினான் கந்தசாமி.

பெரியவர்களின் சிறிய திருவிளையாடல்களையும் பெரிதாக வெளியிடும் பத்திரிகைகளும், வானொலியும் சிறியவர்களின் பெரிய விடயங்களைக் கூடப் பிரபலப்படுத்தமாட்டார் என்பது கந்தசாமிக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

– தினகரன் 1968 – நிர்வாணம் (சிறுகதை) – பதிப்பு: ஒக்டோபர் 1991 – புனித செபத்தியார் அச்சகம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *