பிஞ்ச செருப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 11, 2020
பார்வையிட்டோர்: 9,441 
 
 

வழக்கமாக காலையில் நான் கண் விழிக்கும் பொழுது, பறவைகள் மற்றும் அணில்களின் இனிய குரல் ஓசையைக் கேட்டோ, “கீர! கீர!” என்று கூவி வரும் கீரைக்கார அம்மாவின் குரல் ஓசையைக் கேட்டோ, குப்பை வண்டிக்காரரின் விசில் சத்தத்தைக் கேட்டோ கண்விழிப்பது வழக்கம். ஆனால், அன்று காலை ஒரு ஆணின் குரல் தெருவில் நாராசமாக ஒலித்துக்கொண்டு இருப்பதைக் கேட்டு எரிச்சலுடன் கண் விழித்தேன்.

அவன் யாரையோ, தெருவில் வசிக்கும் அனைவரும் காதை மூடிக்கொள்ளும் அளவிற்கு மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி வசை பாடிக் கொண்டிருந்தான்.

“பொறுக்கி நாய்களா!

தைரியம் இருந்தா இப்ப வெளியல வாங்கடா பாக்கலாம்!

யார்கிட்ட ஒங்க வேலைய காட்றீங்க! அவ்வளவு தைரியமா ஒங்களுக்கு..?

நாய்க்குப்…”

கர்ண கொடூரமாக ஒலித்தது அந்த ஆணின் குரல்.

அந்தக் குரலை வைத்தும் அவன் பேசிய வார்த்தைகளை வைத்தும் அது எதிர்வீட்டு நடராஜனாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் யூகித்தேன். நடராஜனைப் பற்றி அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவன் ஒரு மூர்க்கனென்றும், சந்தேகப்பிராணி என்றும் பேசக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் தன்னுடைய மனைவி மற்றும் ஐந்து வயது மகளைக் கூட அக்கம்பக்கத்தில் உள்ள எவரிடமும் பேசப் பழக அனுமதிப்பதில்லை என்றும் தன்னுடைய உறவினர்களை ஒட்டி வாழ்வதில்லை என்றும் பேச்சு. அவன் வீட்டில் இருக்கும்போது ஜன்னல் கதவுகள் மூடியே இருக்கும் என்றும் அவன் இல்லாத சமயத்தில்தான் அவனுடைய மனைவியும் மகளும், ஜன்னல் கதவை திறந்து பக்கத்து வீட்டுப் பெண்களிடமும், அந்தத் தெரு வழியேப் போகக்கூடிய தெரிந்த பெண்களிடம் பேச்சுக் கொடுப்பது வழக்கம் என்றும் தெருவில் பேசிக் கொள்வர்.

நான் இந்தத் தெருவில் குடி புகுந்து சுமார் இரண்டரை வருடங்கள் இருக்கும். ஒன்றிரெண்டு தடவைதான் நடராஜனைப் பார்த்திருக்கிறேன். நடராஜனின் வீடு என் வீட்டிற்கு எதிர் வீடு ஆக இருந்தாலும் அவன் வீட்டு வாசற்படி அடுத்த தெருவைப் பார்த்த மாதிரிதான் இருக்கும். என் வீட்டின் வாசற்கதவை திறந்தால் எங்களுடைய குறுகிய தெருவை தாண்டி, அவன் வீட்டின் கொல்லைப்புறம் புதர் மண்டி காணப்படும் சிறிய புழங்கப்படாத இடமும், அதில் ஒரு கொய்யா மரமும் தென்படும். பாதி பூசியும் பாதி பூசாமலும் விடப்பட்ட ஆறடி உயரமுள்ள ஒரு காம்பவுண்டு சுவர்தான் அந்த புழங்கப்படாத இடத்திற்கும் கொய்யா மரத்திற்கும் பாதுகாவல்.

அது என்னவோ புழங்கப்படாத இடமாக இருந்தாலும், அந்த பழுத்த கொய்யா மரம் பல உயிர்களுக்கும் புகலிடமாக இருந்தது. காலை நேரக் குளிர்க்காற்றில், அந்த கொய்யா மரத்தில் வசிக்கும் ஜோடி அணில்களின் காலை நேர விளையாட்டுகளையும், சிட்டுக்குருவிகளின் சிறகடிப்பையும், கொய்யாமரத்தின் பசுமையையும் சிறிது நேரம் என் வீட்டு வாசற்படியில் இருந்து கண்டுகளிப்பது எனது காலை நேர சோம்பலை முறித்துக் கொள்வதற்கும் அந்த நாளுக்கானப் புத்துணர்வை அடைந்து கொள்வதற்கும் எனக்கு உதவியாக இருந்தது எனலாம்.

‘பழுத்த மரம்தான் கல்லடி படும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப அந்த கொய்யா மரமானது தெருவில் வசிக்கக்கூடிய மற்றும் போய்வரக்கூடிய சிறுவர்களால் கல்லடிக்கு உள்ளாவது வழக்கம்.

அணில் கடித்து வைத்த கொய்யாக் கனிகளின் மணமானது காற்றில் பரவி, பெரியவர்களையே திரும்பி பார்க்க வைக்குமெனில், அந்தக் குறும்புச் சிறுவர்களை சுண்டி இழுப்பதில் எந்த ஆச்சரியமுமில்லைதான். கல்லடிக்கும் கிட்டாத கனிகளை அடைவதற்கு, அந்தச் சிறுவர்கள் ஆறடி உயரமுள்ள அந்தக் காம்பவுண்டு சுவரை ஒருவர் முதுகில் இன்னொருவரை ஏற வைத்துக் குதித்துப் பறிப்பது அடிக்கடி நடக்கக்கூடிய காட்சியாகும்.

அன்று விடியற் காலையிலேயே நடந்த அப்படி ஒரு சம்பவம்தான் நடராஜனின் காலை நேர அர்ச்சனைக்கு காரணமாக அமைந்தது போலும். சிறுவர்கள் என்றும் பாராமல் நடராஜனின் வசைப் பேச்சுக்கள் அந்த காலை நேர இனிமையே கலங்கப் படுத்தியது போலிருந்தது.

அரைமணி நேர அர்ச்சனையை அரைகுறையாக முடித்துக்கொண்ட நடராஜன் தனது வீட்டிற்குள் நுழைய, ஏதுமறியாப் பிஞ்சுகளைத் தரக்குறைவாக வசைபாடியதைச் சகித்துக்கொள்ள முடியாத அவனுடைய மனைவியின் கூக்குரலும், அதனைத்தொடர்ந்து நடராஜனின் முரட்டுக்குரலும், அவர்கள் வீட்டில் நடக்கும் களேபரத்தை தெருவிற்கு அம்பலப்படுத்தியது.

தன் வீட்டிலும் கண்ணியமான பெண்கள் இருக்கும் போது இவனால் எப்படி இவ்வளவு மோசமான வார்த்தைகளைப் பேச முடிகிறது என்று எண்ணிக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்த நான் முகத்தைக் கழுவிக்கொண்டு வாசற்கதவை திறந்து பார்த்தேன். அப்பொழுதுதான் நடராஜன் செய்திருந்த அந்த விசமத்தனமான காரியம் என் கண்ணில் பட்டது. நான்கைந்து பிய்ந்த செருப்புகளைக் கயிற்றில் கட்டி கிளைக்கு ஒன்றாக அந்த கொய்யா மரத்தில் அவன் தொங்க விட்டிருந்தான். விவரமில்லாத, விளையாட்டுத்தனமான அந்த சிறுவர்களுக்கு அவன் விடுக்கும் எச்சரிக்கை மணியாக அந்த பிய்ந்த செருப்புகள் காற்றில் ஊசலாடிக் கொண்டிருந்தன.

அவனுடைய எச்சரிக்கையைப் புரிந்துகொள்ளக் கூடிய அளவிற்கு அந்த சிறுவர்களுக்குப் பக்குவம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

இயற்கை அள்ளித் தரும் கொய்யாக்கனிகளுக்கு மத்தியில் நடராஜனின் பரிசாக அந்த பிய்ந்த செறுப்புகள் அந்தக் கொய்யா மரத்தில் காய்(ந்)த்து தொங்கிக்கொண்டிருந்தன.

இப்பொழுதெல்லாம், அந்த பிய்ந்த செருப்புகளையும், அதனைத்தொடர்ந்து என் காதில் ரீங்காரமிடும் நடராஜனின் அன்றைய காலை நேர அர்ச்சனையையும் தாண்டி, என்னால் அந்த கொய்யா மரத்தையும் அதன் சுற்றுப்புற அழகையும் அவ்வளவாக இரசிக்க முடிவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *