ஈஸ்வரன் கோயிலில் புறாக்கள் இல்லை. கோபுரம் வெறுமனே கிடந்தது. எப்போது அவைகள் அந்த கோபுரத்தைத் துறந்து பறந்து போயினவென்று தெரியவில்லை. முன்பைவிட இப்போது கோபுரம் ரொம்பவும் சிதிலப்பட்டுக் கிடந்தது. கிருஷ்ணனிடம் அவனுடைய மாமா புறா வாங்கிவரச் சொன்னதும் அந்த கோபுரம்தான் ஞாபகத்திற்கு வந்தது. நகரத்திற்கு வெளியே, ஒதுக்குப்புறமாக இருந்த அதில் புறாக்களைப் பிடித்தால் யாரும் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டார்கள் என்று அவன் நினைத்தான்.
மசூதி இங்கிருந்து பார்த்தாலே தெரிகிறது. இதே தெருவில் நடந்து போனால் மார்க்கெட் தெருவின் மையப் பகுதியில் இணைந்து விடலாம். வலதுபக்கம் திரும்பி நடந்தால் கொஞ்சம் தூரம்தான். இன்னும் பொழுது சாய்ந்த பிறகு வந்திருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. இந்த வருஷம்போல எப்போதும் வெய்யில் காயவில்லையென்று வயதானவர்கள் சொல்கிறார்கள். பலமான மழைபெய்தாலும் இப்படித்தான் அவர்கள் முணுமுணுக்கிறார்கள். காற்றின் ஸ்பரிசமே கொஞ்சமும் இல்லை. அவனுக்கு வேர்த்துக் கொட்டியது. வேர்வை ஈரத்தில் சட்டை முதுகோடு ஒட்டிக்கொண்டது.
மார்க்கெட் தெருவில் கொஞ்சதூரம்தான் நடக்க வேண்டுமென்றாலும் அது அவ்வளவு சுலபமான காரியமல்ல. சுவாசத்தை அடைக்குமளவுக்கு எழும் அழுகிய காய்கறிகள், மீன் கருவாடுகளின் துர்நாற்றங்களுக்கிடையே கால்களை ஒரு சர்க்கஸ் வீரனின் சாதுர்யத்துடன் உபயோகிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மசூதியின் பிரதான வாயிலைக் கண்டுபிடிப்பதில் அவனுக்குக் கொஞ்சம் சிரமமாகி விட்டது. இரண்டு பலசரக்குக் கடைகளுக்கு மத்தியில் இருக்கும் குறுகிய சந்துதான் மசூதிக்குப் போகும் வழி என்று யாரும் நம்பமாட்டார்கள். காம்பவுண்ட் சுவருக்குள் கொஞ்சம் விசாலமான இடத்தை ஓதுக்கிவிட்டு மத்தியில் அது கட்டப்பட்டிருந்தது. அவன் உள்ளே நுழைந்தபோது முகப்பில் யாரும் தென்படவில்லை. எப்போதும் வியாபாரிகளின் கூக்குரல்கள், அசுத்தங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு அமைதியா என்று அவன் வியந்தான்.
மேலே பார்த்தான். கோபுரத்தின் உச்சிவரை புறாக்களின் சந்தடியே காணோம். பாதி கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு எதிரெதிரான ரேடியோக் குழாய்களில் ஒன்றில் ஒரு காகம் மட்டும் உட்கார்ந்திருந்தது. புறாக்கள் எங்கே போய்விட்டன? விசாலமான அந்தக் கட்டடத்தில் வேறு எங்காவது அவைகள் வாசம் செய்யலாமென்று அவனுக்குத் தோன்றியது. இடது பக்கமாகத் திரும்பிய சுற்றுப்பாதையை அனுமானித்து நடந்தான். பிரதான கட்டடத்தின் மாலை நிழல் சுற்றுச்சுவர் வரை நீண்டிருந்ததால் தரை கொஞ்சம் வெப்பம் தணிந்து காணப்பட்டது.
தெற்குப் பக்கத்தில் இன்னும் ஒரு கட்டடம் தென்பட்டது. பிரதான கட்டிடத்திற்கும் அதற்குமிடையே மண்டபம் போன்ற கான்கிரீட் கூரை. அதன் மத்தியில் ஒரு அகன்ற திறப்பு. கீழே நீர்த்தொட்டி. கட்டடத்தை ஒட்டிய நீளமான வராண்டாவில் ஒரு மெலிந்த கிழவர் உட்கார்ந்து அந்த நீர்த்தொட்டியையே வெறித்தபடி இருந்தார். தலையில் கச்சிதமான ஒரு வலைகுல்லா. ஒரு ஆப்பத்தைப்போல அது அவருடைய தலைமேல் கவிழ்ந்திருந்தது.
யாரோ தன்னை நோக்கி வருவதை உணர்ந்ததும் திரும்பி உற்றுக் கவனித்தார். அவருக்குப் பக்கத்தில் போய் நிற்பது வரையில் எதுவும் பேசாமல் பார்வையில் வினவிக் கொண்டிருந்தார். “இங்க புறா எதாச்சும் கிடைக்குங்களா?’’ என்று அவன் கேட்டான். “எங்கிருந்து வர்ற தம்பி?’’ என்று கேட்டார் உருது உச்சரிப்புடன். அவன் தனது கிராமத்துப் பெயரைச் சொன்னான். “ஒரு பொறாக் குஞ்சுகூட இங்க இல்லே’’ என்றார் வருத்தம் தொனிக்க. அவைகள் இங்கே வசித்தபோது அவைகளிடம் அதிக சினேகம் கொண்டிருந்திருக்க வேண்டும். “அதுங்களுக்கு என்னக் கேடோ! ஒன்னுகூட தங்கல. எல்லாம் அல்லாவுக்குத்தான் வெளிச்சம்’’ என்று மெல்ல முனகினார்.
அவைகள் இல்லையென்று தெரிந்த பிறகும்கூட ஏனோ அவன் தேடினான். மெல்ல அசைந்து அசைந்து நடந்துபோகும் ஒரு புறாவைக் கற்பனை செய்துகொண்டு இதுபோன்ற ஒரு காட்சி அங்கே தென்படுமென்று அவன் எதிர்பார்த்தான். தான் புறப்படவேண்டியதை உணர்ந்து அவன் திரும்பியபோது அங்கிருந்த நீர்த் தொட்டியைக் கவனித்தான். தரைமட்டத்தில் அது தோண்டப்பட்டிருந்தது. மேலிருந்து வந்த வெளிச்சத்தில் அந்த இடமே பிரகாசமாகத் தென்பட்டது. தெளிந்த நீருக்கடியிலிருந்து இரண்டு நீர்த்தாவரங்கள் புறப்பட்டு அந்தத் தடாகம் முழுவதும் கிளைத்துப் பரவியிருந்தன. அந்த வினோதமான தாவரங்களை இதுவரை அவன் எங்குமே பார்த்ததில்லை. அதன் நீண்ட தண்டுகளும், சிறிய சிறிய கீற்றான இலைகளும் எளிதாகக் கவர்ந்துவிடும் வடிவ நேர்த்தியுடன் காணப்பட்டன. அதையே பார்த்துக் கொண்டிருந்தான். “இது என்னச் செடி’’ என்று கிழவனிடம் கேட்டான். அது ஒரு பாசி ரகமென்றும், தண்ணீரைச் சுத்தம் செய்வதற்காக இங்கே வளரவிட்டிருப்பதாகவும் அவர் சொன்னார். அவருக்கு அதன் பெயர் தெரியவில்லை. “இது குடிக்கிற தண்ணிதானே?’’ என்று கேட்டான் அவன். அந்த நீரைச் சுவைத்துப் பார்க்க அவனுக்கு ஆவல் ஏற்பட்டது. “இது குடிக்கிற தண்ணியில்ல. தொழுகைக்கு வர்றவங்க கைகால் கழுவுறதுக்காக’’ என்றார்.
மார்க்கெட் தெருவை விட்டு வெளியேறும்போது அத்தெருவின் முனையில் இருந்த கறிக்கடைகாரரைக் கேட்டுப் பார்க்கலாமென்று யோசனை தோன்றியது அவனுக்கு. கடையின் இரண்டு பக்கமும் கோழிக்கூண்டுகள் உயரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மினுமினுப்பான மாமிசத் தோரணங்களுக்குப் பின்னால் அவர் தென்பட்டார். அவரிடம் விசாரித்தான். ராஜீவ் காந்தி நகரில் ஒரு ஆள் விற்பதற்கென்றே புறாக்களை வளர்த்து வருவதாக அவர் சொன்னார்.
ராஜீவ்காந்தி நகர் ஊருக்குத் தெற்கே தார்ச் சாலையின் ஓரத்தில் இருக்கிறது. இங்கிருந்து எப்படியும் ஒரு கிலோமீட்டர் தூரமாவது இருக்கும். ஒரு வாடகை சைக்கிள் இந்தப் பயணத்தைச் சுலபமாக்கும் என்றாலும் அவனுக்குத் தெரிந்த சைக்கிள் கடை எதுவும் இங்கே இல்லை. புதியவர்களுக்கு அவர்கள் தரமாட்டார்கள். கடைக்காரனுக்கும் அவனுக்கும் தெரிந்த நபரைத் தேடும் சிக்கலை எதிர்கொள்வதைவிட நடந்தே போய் வந்துவிடலாம். கூட்டமும் குண்டுகுழிகளும் நிறைந்த இந்தப் பாதைகளில் சைக்கிளை ஓட்டிச் செல்வதைவிட இதுதான் சுலபமான காரியமென்று அவனுக்குத் தோன்றியது.
தாலுகா அலுவலகத்தைக் கடந்த போது அங்கே பரபரப்புடனும் சலிப்புடனும் தென்பட்ட மனிதர்களைப் பார்த்தான். காகங்களின் எச்சங்களால் பூசப்பட்ட மரங்களுக்குக் கீழே அவர்கள் உட்கார்ந்தபடியும், இங்குமங்கும் நகர்ந்து கொண்டும், கும்பல்கும்பலாக நின்று விசாரித்தபடியும் இருந்தார்கள். நிறைய காகங்கள் அந்த மரங்களில் இரைந்து கத்திக்கொண்டிருப்பதை அவன் எப்போதும் பார்த்திருக்கிறான். எந்தக் காலத்திலும் இங்கே புறாக்கள் வசிக்காது என்று அவனுக்குத் தோன்றியது. இந்த மனிதர்களில் பெரும்பாலானவர்கள் கிராமங்களிலிருந்து வருபவர்கள். இங்குமட்டுமல்ல இந்த நகரத்தின் எல்லா இடங்களிலும் அவர்களுடைய உருவங்கள்தான் நிறைந்து காணப்படுகின்றன. அவர்களுக்கு எவ்வளவோ வேலைகள் இங்கே, வேலைகள் இல்லையென்றாலும் அவர்களை ஈர்த்து அணைத்துக் கொள்கிறது இந்த நகரம். மண்டிகள், உரக்கடைகள், முனியாண்டிவிலாஸ் ஓட்டல்கள், பிராந்திக் கடைகள், தியேட்டர் வாசல்கள், பஸ்டாண்ட் முழுவதும் அவர்கள்தான். இந்த மனிதர்களைப் போலவே புறாக்களும் மரம் செடி கொடிகள், தூய்மையான காற்று இவைகளை விட்டுப் புழுதியும் இரைச்சலும் மண்டிய இந்த நகரத்திற்கு வந்துவிடுகின்றன போலும்.
ராஜீவ்காந்தி நகரில் அந்த வீடு முன்னமே இருந்தது. பிரதானச் சாலையிலிருந்து இடது பக்கமாகப் பிரிந்து செல்லும் தெருவின் வலது பக்கமாக இரண்டு வீடு தள்ளி அவனுடைய வீடு. வீட்டுக்கு முன்னால் பக்கவாட்டாக, மட்டமான பார்சல் பலகைகளால் தைக்கப்பட்ட பெரிய கூண்டு வைக்கப்பட்டிருந்தது. வீட்டுக் கூரைக்கு மேலே உயரமான கம்பத்தின் முனையில் சதுரமான ஒரு மூங்கில் படலும் அதன்மேல் இரண்டு சாம்பல் நிறப்புறாக்களும் உட்கார்ந்திருந்தன. இன்னும் இந்த உலகத்தில் புறாக்கள் அற்றுப்போய்விடவில்லை என்று அவன் மனம் நிம்மதி கொண்டது.
தெருவுக்கும் அவன் வீட்டு வாசலுக்கும் இடையே சாக்கடைக் கால்வாய் மேல் போடப்பட்டிருந்த கருங்கல்லைக் கடக்கும்போதே வீட்டுக்குள்ளிருந்து ஒரு கறுத்த மனிதன் வெளிவந்து நின்றான். தொளதொளப்பான ஒரு நீலநிற டவுசரை அவன் அணிந்திருந்தான். “ஏன் புறா ஏதாச்சும் வேணுமா?’’ என்று கேட்டான் அவன். “ஆமாம்’’ என்றான். “வளர்க்கிறதுக்கா, இல்லே வைத்தியத்துக்கா?’’ “வைத்தியத்துக்குத்தான். அக்காவுக்கு ஒரு பக்க கண்ணை மூட முடியலை. வாயும் ஒரு பக்கமாக இழுத்துப் பிடிச்சிருக்கு, அதுதான்’’ என்றான்.
“நரம்புக் கோளாறுதான், டாக்டர் வைத்தியமெல்லாம் அதுக்கு செல்லுபடியாகாது’’ என்றவன் “ஒரு டம்ளர் பிராந்தி எடுத்து இந்த பொறா ரத்தத்த அதுல கலந்து குடிச்சா போதும், வேற எந்த வைத்தியமும் வேண்டாம்’’ என்று சொன்னான். “ஒன்னுன்னா முப்பது ரூபா, ரெண்டா புடிச்சிகிட்டா ஐம்பத்தஞ்சி ரூபாய்க்கு தர்றேன். பத்துநா கழிச்சி இன்னொரு தபா சாப்பிடலாம்’’ என்றான்.
கிருஷ்ணன் யோசனை செய்துவிட்டு “இப்ப ஒன்னுமட்டும் குடுங்க, வேணும்ன்னா திரும்ப வந்து வாங்கிக்கிறேன்’’ என்றான். அவனுடைய மாமா ஒன்று மட்டும்தான் வாங்கிவரச் சொல்லியிருந்தார். அவனுடைய சகோதரிக்கு வந்திருக்கும் நோயை அவர் ‘பாசிசவாயு’ என்று அழைத்தார். ‘பாரிச வாயு’ என்றுதான் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறான். அவரிடம் போய் நீங்கள் சொல்வது தவறு என்று சொல்ல முடியாது. நிச்சயமாக அதை விரும்ப மாட்டார்.
கூண்டிலிருந்து ஒரு புறாவைப் பிடித்து அவன் வெளிக்கொண்டு வந்தான். அவனுடைய விரல்கள் சரியாக அதைப் பிடிக்காததால் அதன் சிறகுகள் படபடத்தன. ஒரு சணல் கயிற்றால் அதன் கால்களைக் கட்டி கிருஷ்ணனிடம் கொடுத்தான். சிறிய குருத்தெலும்புகளுக்கு மேல் அதன் மெல்லிய தோல்கள் நழுவிச் செல்வதை அவன் விரல்கள் உணர்ந்தன. காற்றைக் கையில்பிடிப்பதைப் போல எவ்வளவு லேசாக இருக்கிறது! பறவைகளை கையில் வைத்திருப்பதே அற்புதமான விஷயம்தான். அதே நேரத்தில் அதன் கழுத்து அறுபட ரத்தம் சொட்டும் கற்பனையையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. எவ்வளவு சமாதானங்கள் இருந்தாலும் பறவைகளிடம் இப்படி இரக்கமில்லாமல் நடந்து கொள்ளக்கூடாது என்பது அவன் கருத்து. அவனுடைய மாமாவோ கோழி அறுக்கும் போது அவன் பார்த்திருக்கிறான். ரொம்பவும் உற்சாகமாகவும் நேர்த்தியாகவும் அதைச் செய்துவிடுவார்; ஏதோ பழிவாங்குவது போல.
அந்த மனிதன் வீட்டுக்குள் பார்த்து சொன்னான் “பிளாஸ்டிக் பையி ஏதாச்சுமிருந்தா எடுத்தா.’’ ஒரு நீலநிற பாலிதீன் பையுடன் கிருஷ்ணன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். ஐந்தே முக்காலுக்குத்தான் அடுத்த பஸ். இன்று வழக்கத்தைவிட அதிகமாகக் கூட்டமிருப்பதாக அவனுக்குப் பட்டது. அந்தப் பேருந்து கட்டடத்தின் நிழற்குடை மூன்று மணிக்குமேல் உபயோகப்பட்டாது. சூரியனின் சாய்வான கிரணங்கள் உள்ளே பிரவேசித்து விடுகிறது. ஜனங்களெல்லாம் நிழலுக்காக கடைகள், தூண்கள் என்று நிழல்பார்த்து ஒண்டிக் கொண்டிருந்தார்கள். மரங்களில்கூட காற்றின் சலனமில்லை.
நாலரை மணி பஸ்ஸுக்கே அவன் போய்விட்டிருக்கலாம். எல்லாம் இந்த பிராந்தி பாட்டிலால் வந்தது. புறாவுடன் அரைபாட்டில் பிராந்தியும் வாங்கி வரும்படி அவன் மாமா சொல்லியனுப்பியிருந்தார். வைத்தியத்துக்கு மட்டும்தான் என்றால் அரைபாட்டில் ரொம்ப அதிகம். அவனுடைய மாமா இந்த விஷயத்தில் உத்தமர். வீட்டில் எல்லோரும் அப்படித்தான் கருதி வருகிறார்கள். ஒயின்ஷாப்புக்குப் போவதற்கு அவன் சங்கடப்பட்டான். வீண் பழியைத் தவிர்ப்பதற்கு வேறு ஆட்களுடைய உதவி அவனுக்குத் தேவைப்பட்டது. எல்லாவற்றிலும் கரைகண்ட அவன் ஊர்க்காரர்கள் பலர் இங்கே சுற்றிக் கொண்டிருக்கும்போது இது ஒன்றும் ஆகாத விஷயமல்ல. அப்படித்தான் இது அவன் கைக்கு வந்து சேர்ந்தது.
எவ்வளவு உஷாராக இருந்தும் பஸ்ஸில் அவனால் இடம்பிடிக்க முடியவில்லை. படியில் கால்வைக்கும் முன்னமே கூட்டம் நிறைந்து விட்டது. அவன் எப்போதும் செய்வதைப் போலவே மையப்பகுதிக்கு முன்னேறினான். ஒல்லியாக இருப்பது இப்படிப்பட்ட சமயங்களில் அவனுக்கு வசதியாகப் போய்விடுகிறது. அவன் கவனமாக இருந்தும் பை ஓரிடத்தில் சிக்கித் திரும்பியது. பையை மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டு முன்னேறி கொஞ்சம் நெகிழ்வாக இருந்த மையப் பகுதிக்கு வந்துவிட்டான். இறங்குபவர்கள், ஏறுபவர்களின் நெருக்குதலிலிருந்து ஓரளவு தப்பித்து விடலாம். இருந்தும் பஸ் நகரத்தைவிட்டு வெளியேறும் போது அந்த இடத்திலும் நெரிசல் அதிகமாகி அசௌகர்யம் எங்கும் நீக்கமற நிறைந்திருந்ததை அவன் கவனித்தான். இந்த பிராந்தி பாட்டில் மட்டும் இல்லையென்றால் பையை உட்கார்ந்திருப்பவர்களில் யாரிடமாவது கொடுத்துவிடலாம்.
நகரத்தை விட்டு இரண்டு கிலோமீட்டர் தள்ளி பஸ்ஸை ஓரமாக நிறுத்தி விட்டார் ஓட்டுனர். டிக்கட் புக்கிங். பயணிகளின் அதிருப்திக் குரல் தவளை இரைச்சல்போல எழுந்து பரவியது. படிக்கு அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் இறங்கிக்கொண்டார்கள். ஒரு விடுதலையை அனுபவிக்கும் திருப்தி அவர்களுடைய முகங்களில் காணப்பட்டது. பஸ் நின்று போனதால் உள்ளே காற்றோட்டம் சுத்தமாக தடைபட்டது. உடல்கள் புழுக்கத்தில் பொங்கத் தொடங்கின. பின் பக்கத்தில் ஒரு குழந்தை சிணுங்க ஆரம்பித்தது.
நடத்துனர் பரபரப்போடு இயங்குவது போலத் தென்பட்டாலும் அவர் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டிருந்தார். ஒரு பயங்கரமான கனவுக்குள் சிக்கி மீளமுடியாது தவிப்பதுபோல கைகளை அசைத்துக் கொண்டிருந்தார். குழந்தையின் அழுகை இப்போது உச்சத்துக்குப் போய்விட்டது. எந்த சமாதானத்துக்கும் அது தயாரில்லை. மேலே கம்பியோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டிருந்த பையை ஒரு தரம் பார்த்துக்கொண்டான். அவனுடைய கைக்குப் பக்கத்தில் முன்னும் பின்னும் நிறைய கைகள். முதல் குழந்தையுடன் இன்னும் இரண்டு குழந்தைகள் சேர்ந்துகொண்டன. நடத்துனரும், ஓட்டுனரும் பலருடைய சாபங்களுக்கு ஆளாகிக்கொண்டிருந்தார்கள். சில துடுக்கான பேர்வழிகள் டிரைவருக்கு விசிலடித்து சமிக்ஞை செய்து பார்த்துவிட்டார்கள். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் பிரம்மை பிடித்தவர்போல அவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். பத்து நிமிட துன்ப துயரங்களுக்குப் பிறகு பஸ் புறப்பட்டது.
பஸ்ஸைவிட்டு இறங்கியபோது புதிதாகப் பிறப்பெடுத்து வந்தவன்போல உணர்ந்தான். பஸ் பிரயாணமே இப்படித்தான் என்று ஆகிவிட்ட பின் அவனுக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை. இறங்கியதும் முதல் வேலையாக பையைத் திறந்து பார்த்தான். அதற்கொன்றும் ஆகவில்லை. கண்களைச் சிமிட்டி தலையைத் திருப்பிப் பார்த்தது.