பாமர மேதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 2,496 
 
 

மோதரன், சுற்றியிருந்த ஈரத்துண்டு, அவன் இடுப்பில் இருந்து நழுவி, தொடைகள் வழியாக ஊர்ந்து, முழங்கால்களில் ஓடி, தரையில் குதித்து விழுந்தது. அந்த துண்டுக்கு இருந்த நாணம் கூட, அவனுக்கு இல்லை. கிழே விழுந்த அந்த ஈரத்துணி, யாரையும் பார்க்க விரும்பாதது போல் ஒட்டு மொத்தமாய் சுருங்கி சுருண்டு கிடந்தது. ஆனால் அவனோ வாராந்தாவி ருந்து வரும் வெளியாட்களின் நேரடிக் கண்பார்வைக்கு உட்படும் அந்த அறையின் கதவை சாத்தாமலே, அங்கும் இங்குமாய் ஓடினான். பீரோவை திறந்து துணிகளை வீசிப்போட்டான். சுவரோடு பொருத்தப்பட்ட ரேக்கில் உள்ள துணிமணிகள் உள்ளிட்ட அத்தனைப் பொருட்களையும் கீழே வீசிப் போட்டான். பிறகு மெத்தைக்கட்டிலின் அடிவாரத்தில் தவளைபோல் தாவி தவழ்ந்து தேடினான். மீண்டும் நிமிர்ந்து டெலிபோனை தூக்கிப்பார்த்தான். சாளரத் திரைச்சிலையை இழுத்துப்பார்த்தான். பின்னர் காலில் மிதிபட்ட அண்டிராயரை அடையாளம் கண்டவன் போல், அதை – எடுத்து இடுப்புக்கு சரிசமாமாய கொண்டுவந்து, கால்களில் நுழைக்கப்போனான். இதற்கு பிறகு, ஒருசின்னப் பிள்ளையின் செல்லக் கோபத்தோடு கத்தினான்.

‘உன்னத்தான் … இங்கே வாயேன்’

தன்னைத்தான் என்பது போல், ஒரு ஆறு வயது பெண்குட்டி துள்ளி ஓடிவந்தது. பின்பு அவன் நின்ற கோலத்தை பார்த்துப் பயந்து மம்மீ என்று முச்சு விடாமலே கத்தியபடி, அந்த அறையை விட்டு ஓடி, முன்று நிமிடங்களில் அம்மாவின் முதுகைத் தள்ளியபடியே உள்ளே துழைந்தது. கணவனை கண்ட தமயந்தி, மகளை அவசர அவசரமாக வெளியே தள்ளி, அந்தச் சாக்கில், அவனுக்கு முதுகை காட்டிய படியே கத்தினாள்.

‘என்ன கண்றாவி இதெல்லாம்’.

‘கால் நுழையமாட்டேங்குது தமயந்தி’

“தலையணை உறைக்குள்ளே எப்படி கால் நுழையும்? அதோ மேஜையிலதான், பேண்ட், சட்டை, பனியன், அன்டிரயார்னு ஒன்று மேல ஒன்றாய் அடுக்கி வச்சிருக்கேனே… எடுத்துப் போட்டுக்க வேண்டியது தானே?”

“அயம் ஸாரிமர்”

‘ஸாரிய கட்டாம, பேண்டை போடுங்க’

ஒரு ஐந்து நிமிட அனுமானத்திற்கு பிறகு, தமயந்தி உடலோடு சேர்த்து அவன் பக்கமாய் முகம் திருப்பினாள். அப்போது, அவன், பேண்ட் குழாய்களுக்குள் கால்களை தாறுமாறாக நுழைத்துக் கொண்டிருந்தான். அதன் முன்பக்கத்தை பின்பக்கமாக்கி கால்களை விடப்போனபோது, அவள் சிரித்தாள். பின்னர் அவனது பின்பக்கமாய் போய், தனது முன்பக்கத்தை, அவன் மீது சாய்த்துக்கொண்டே, அவன் பிடித்த பேண்ட்டை திருப்பி பிடித்து சரி இப்ப காலை விடுங்க என்றாள். ஆழம் தெரியாமல் காலை விடுவது போல் அவன் அல்லாடியபோது, அவளுக்கு பொம்மலாட்டமே நினைவுக்கு வந்தது. அதனால் என்னவோ அவள் பொம்மலாட்டக்காரியானாள். அவனுக்கு ஆடை போட்டு அழகு காட்டி உபதேசித்தாள்.

‘இதோ பாருங்க… இது பிளட் பிரசர் மருந்து… இது டயாபட்டீஸ் மருந்து, இது சயனசுக்கு… இது இருதயத்துக்கு… அது பல்வலிக்கு… இந்த இரண்டும் காலையில… அந்த இரண்டும் மத்தியானம். இந்த டியூப் மருந்து ஸ்பான்டிலிட்டிக்கு. கழுத்துலயும், தோளுலயும் மட்டுந்தான் தடவணும். போன தடவ மாதிரி விழுங்க்கிட்டு கத்தாதிங்க.’

தமோதரன், அவள் காட்டிய விதவிதமான மாத்திரைகளை விதவிதமாய் நெளிந்து பார்த்தான். ஒன்றுமே புரியாமல், அவன் முகமே முட்டையானது. ஆனாலும் அவள் அந்த முட்டையை அடைகாத்து வெளியே கொண்டுவந்தாள்.

“சரி… வேளாவேளைக்கு மருந்த பேப்பரில் மடித்து அதற்கு மேலக்ாலையும் மாலையுமுன்னு எழுதிடுறேன். மாற்றி சாப்பிடாம இருந்தா போதும். இந்த காகிதத்தில எழுதி இருக்கிறது சூட்கேஸ்க்கு நம்பர் பூட்டு… மூன்றுதடவ ஒன்பது… பூட்டை தலைகீழா கவிழ்த்து போட்டிங்கன்னா ஆறா ஆயிடும் ஜாக்கிரதையா திறங்க… நான் சொல்றது புரியுதா ?”

தாமோதரன் புரிகிறமாதிரி தலையை மேலும் கீழுமாகவும், புரியவில்லை என்பது போல் பக்கவாட்டிலும் ஆட்டிக் காட்டினான். அவளுக்குத்தான் புரியவில்லை. கூடவே ஒரு பயம். ஒரு வேளை மருந்து மாத்திரைகளை சாப்பிட மறந்துட்டா?

‘ஏங்க நானும் கூட வரட்டுமா?

‘அதான்… எங்க அண்ணா வாரானே… எங்கிட்ட சொன்னத அவன் கிட்டேயும் சொல்லு.

தமயந்தி, அதுவும் சரிதான் என்பது போல் வெளியே எட்டிப்பார்த்தவள், உங்களுக்கு துறு ஆயுசு என்று அத்தானை கண்களால் வரவேற்றபடியே, அறைக்குள் கொண்டு வந்தாள். அண்ணனை, தமோதரன் பிளாங்காக பார்த்தான். தலையை ஆட்டி குழப்பத்தை வெளிப்படுத்தினான். அந்த பார்வையின் பொருள் புரிந்தவராக உள்ளே வந்தவர் தன்னை அவனுக்கு அறிமுகம் செய்து கொண்டார்.

‘நான் உன் அண்ணன்டா … கூட பொறந்த அண்ணன்டா…’

அண்ணனை அப்போது தான் அடையாளம் கண்டு கொண்டவன் போல், தமோதரன் பிசைந்த கைகளை விடுவித்துக் கொண்டபோது, தமயந்தி மூத்தாருக்கு ஆறுதல் ச்ொல்வது போல் பேசினாள்.

‘என்னயே இவருக்கு சிலசமயம் அடையாளம் தெரியாமல் போவுது. இப்படித்தான் ஒருநாள் மார்க்கெட்ல….’

மூத்தார் இடைமறித்தார்.

‘அது என்ன என்னையே ஏகாரம்…நீ இவனோட எட்டு வருசமாதான் குப்பைக்கொட்டறே. நான் முப்பத்திரண்டு வருசமா.. கூட இருந்தவன்.’

‘எனக்கு நாத்தனார் இல்லாத குறையை நல்லாத்தான் போக்குறீங்க.’

தமயந்தி, மூத்தார் பதிலுக்குச் சொன்ன வார்த்தைகள் காதுகளில் ஏற்றியபடியே, தனக்குள்ளேயே தன்னையே ஒரு ஆய்வு பொருளாக்கினாள்… மனைவி, பிற்காலத்தில் வந்தாலும்

ங்கும் கணவனுக்கும் இருக்கும் நெருக்கம் பெத்தவங் நீே உடன் பிறப்புகளுக்கோ இருக்க முடியுமா?

அவளுக்கு, தன்னை ஆய்வு செய்யச் செய்ய, கடைந்ததாக கூறப்பட்ட பாற்கடலில் ஏற்பட்டது போல், துவக்கத்தில் சந்தேகம்… அப்புறம்… பொறாமை… கூடவே… கோபம்… இறுதியில் எல்லா உணர்வுகளையும் மழுங்கடித்தபடி நாணம் வெளிப்பட்டது. மூத்தாரை சிரிப்போடு பார்த்தாள். பிறகு அந்த சிரிப்புக்கான காரணத்தை அவர் கண்டறியாமல் இருப்பதற்கு ‘காபி குடிக்கிறிங்களா? என்றாள். அவரோ அவசரப்படுத்தினார்

‘சரி… ரயிலுக்கு நேரமாயிட்டது. இன்னும் இவனை நீ ரெடியாக்கலையா ?

இவரா ரெடியாகணும்… நான் என்னத்தை ரெடியாக்குறது? இதோ.பாருங்க… சட்டப் பொத்தான்களை எப்படிப் போட்டிருக்கிறாருன்னு’

தமயந்தி, கணவனின் தாறுமாறான சட்டை பித்தான்களை அவன் கழுத்துக்கு இன்னொரு கழுத்துப்போல் தலைநீட்டி அந்த பித்தான்களை கழட்டி மீண்டும் தக்கபடி மாட்டப் போன போது, மூத்தார் அதட்டலாகப் பேசினார்.

“அவனையே பட்டன் மாட்டச் சொல்லேன். இவனை இப்படி பொஸ்ஸஸ்சிவா ஆக்கி ஆக்கியே, உருப்படியில்லாம செய்துட்டே… அவனை செயல்பட விடும்மா.”

தமயந்தியின் முகம் சுண்டியது. பாதி பட்டன்களை மாட்டாமலே, மூத்தாரை ஏறிட்டுப் பார்த்தாள். ஏறிப்போன கோபத்தை இறங்க வைப்பதுபோல், முகத்தை இறக்கினாள். ஒரு கோமாளிக்கு என்ன கட்டி வைச்சிட்டிங்க என்று கோபம் கோபமாய் கேட்கப் போனாள். கல்லூரிக் காலத்தில், தன்னைச் சுற்றி சுற்றி வந்த சில இளவட்டங்களை கூட நினைத்துப் பார்த்தாள். நினைக்க நினைக்க, தன் மேலே, ஒரு அருவெறுப்பு ஏற்பட்டது. இந்த குழந்தையைப் பற்றி தப்பாக நினைப்பதோ இதன் சாக்கில் தப்பான எண்ணங்களை ஊடுருவ விடுவதோ பெற்ற குழந்தையையே கொல்வது மாதிரி, இதை மூத்தார் சொல்லி இருக்கமாட்டார்… இவரோட பெண்டாட்டியும் மாமனார் மாமியாரும் தெரிவித்த கருத்துக்களை சொந்த கருத்தா சொல்கிறார். இதுல, கூட இவர் டுப்ளிக்கேட் தான். ஆனாலும் சூடா ஒன்ணு சொல்லி வைக்கணும்.

‘எருதுக்கு நோவு… காக்கைக்கு கொண்டாட்டம் என்கிற மாதிரி பேசாதிங்க அத்தான்

மூத்தார் திடுக்கிட்டுப் போனார். அவளைச் சமாதானம் செய்வதற்கு வார்த்தைகள் கிடைத்தாலும் வாய் ஒத்துழைக்க வில்லை. பேச்சை மாற்றுவதற்காக ஒரு விவரம் சொன்னார்

“6χυπff). தமயந்தி! என்னால இவனோட போக முடியாது. ரயில் சிநேகிதம் இல்ல… ரயில் வரைக்குந்தான் சிநேகிதம்… ஏன் அப்படி முழிக்கே…?

என்னத்தான் நீங்க? இவர கோழிக்கோட்டில் கொண்டுபோய் கூட்டி வருவதற்காகவே அந்த பக்கமாம் டுர் போட்டிருக்கிறதாய் சொன்னிங்க

‘இப்பவும் இல்லங்கல… ஆனால் எங்க அமைச்சர் டில்லியில் இருந்து நாளைக்கு வரதா மத்தியானம் தான் டெலக்ஸ் வந்தது. நான் ஆபீஸ் ஹெட் என்கிற முறையில இல்லாட்டால் என் தலை தானே உருளும்.’

முன்கூட்டிச் சொல்லியிருந்தால் நானாவது கூடப்போய் இருப்பேனே?

‘இப்படித்தான் எதுக்கெடுத்தாலும் அவனை சுயமா விடமாட்டேங்கிற … விட்டுப்பி டிம்மா… தண்ணிர்ல இறங்கினால்தான். நீச்சல் அடிக்க முடியும். டேய் ரயிலுக்கு நேரமாயிட்டு… புறப்படுடா.

தமயந்தி, மெளனியானாள். கணவனை விட்டு, சிறிது விலகி ஒரு சுவரில் போய் சாய்ந்துகொண்டாள்.

அந்த இருவருக்கும் நடந்து முடிந்த விவகாரமோ அல்லது நடந்து கொண்டிருக்கும் மெளனப்போரோ புரியாமல் விழித்த தாமோதரனின் கையை பிடித்து இழுத்தார் அண்ணன். மனைவியைத் திரும்பி திரும்பி பார்த்தபடியே, அவன், துள்ளாத ஆட்டுக்குட்டியாய் நடந்தான். படிக்கட்டுகளில் சகோதர காலணிச் சத்தங்கள், ஆலைச் சங்குபோல் ஓங்கி, பின்னர் சன்னம் சன்னமாய் குறைந்துக் கொண்டிருந்தது. தமயந்திற்கு மனம் கேட்க வில்லை. அவர்கள் காருக்குள் நுழையும்போது, மாடி தாழ்வாரத்தில் ஓடி வந்து நின்றபடியே வார்த்தைகள் ஒன்றை ஒன்று முட்டி மோத மூத்தாரிடம் பேசினாள்,

அத்தான்… உங்க தம்பிய வேளாவேளைக்கு மாத்திரையை போடச்சொல்லுங்க. யாரவது அப்பர் பெர்த்துக்குப் போகச்சொன்னால் முடியாதுன்னு சொல்லச் சொல்லுங்க. திரும்பி வரும்போது உங்க தம்பிய நீங்கதான் கூட்டி வரணும். அய்யோ கடவுளே… சூட்கேஸயும், பெட்டியையும் எடுக்க மறந்துட்டார் பாருங்க.

தமயந்தி ஓடிப்போய் இரண்டு கைகளிலும் ஒரு சின்ன பெட்டியையும் ஒரு பெரிய பெட்டியையும் பிடித்துக்கொண்டு, ஒரு தட்டை தாழ்த்திய தாராசு போல் கைகளை ஆக்கிக் கொண்டு கார் அருகே வந்தாள்.

‘இந்தாங்க உங்க தம்பியோட பெட்டிங்க… அவர பத்திரமா பார்த்துக்கச் சொல்லுங்க.”

சொல்லுக்குச் சொல் கணவனை அவர் அவர் என்று அடையாளப்படுத்தும் மைத்துணி, இப்போது உங்க தம்பி உங்க தம்பி என்று குத்திக் காட்டுவதை புரிந்து கொண்டவர் போல், அண்ணன்காரர், பதிலுக்கு ஒரு புலி உருமலையே பதிலாக்கிவிட்டு ஆத்திரத்தை காரின் ஆக்ஸிலேட்டரில் காட்டினார். எதுவுமே நடக்காதது போல், இடித்த புளியாய் இருந்த தம்பியைப் பார்த்ததும், மைத்துணியிடம், தான் அப்படி கமென்ட் அடித்திருக்க கூடாது என்றும், ஒரு பின் யோசனை. அவள் மீது ஒரு சின்ன அனுதாபம்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஆறாவது பிளாட்பாரத்தில் மங்களுர் மெயில், அந்த இளம் இரவில் மங்கிப்போன வெளிச்சத்தில் கண்ணுக்கெட்டாத தொலைவு வரை நீண்டு நின்றது. அண்ணனும் தம்பியும் வெளியே எதையும் காட்டாமல் பச்சைச் சாளரக் கண்ணாடிகளை முகமுடியாய் கொண்ட ஒரு பெட்டியில் ஏறினார்கள். இப்படிச் சொல்வது கூட தவறு. பெட்டிப் படுக்கைகளை ரயில் தளத்தில் வைத்துவிட்டு ஏறிய அண்ணன், தம்பியின் கையைப்பிடித்து ஏற்றினார். இருவரும் வெள்ளைக் கண்ணாடி தள்ளுக் கதவை தள்ளிக் கொண்டே, ராஜபாட்டை மாதிரியான பாதையில் நடந்தார்கள். இடது பக்கம், வசதியான மருத்துவ மனைகளில் இருக்குமே தீவிர சிகிச்சைப்பிரிவு, அது மாதிரியான குளிர் சாதன படுக்கைகள். வலது பக்கம் புறநோயாளிகளுக்கு அதே மாதிரியான நீளம் குறைந்த மெத்தைப் படுக்கைகள். இவை இரண்டிற்கும் இடையே சென்றவர்கள், இந்த பெட்டியின் இராணித்தேனி உறைவிடம் போல் இருந்த, முதலாவது வகுப்பு குளிர் சாதன பகுதிக்கு வந்தார்கள். வெல்வெட் தரை… தொட்டால் சிணுங்கி செடியின் இலை போன்ற மெத்தைப் படுக்கைகள்.

அண்ணன், அந்த ரயில் பெட்டியின் நுழைவாசலுக்கு வெளியே நின்று கொண்டே பெட்டி படுக்கைகளை கிழ்த்தள இருக்கையின் அடிவாரத்தில் திணித்தார், பின்னர், தம்பியை உள்ளே தள்ளிவிட்ட படியே, இதுதான் உன் சிட்டுடா… லோயர் பெர்த் என்றார். சிறிது நேரம் நின்றார். பிறகு புறப்பட்டார். அவருக்கு அவசரமில்லைதான். மீண்டும் யோசித்தபோது மைத்துணி சொன்னது திரடலாகப் பட்டது. அவள் இடத்தில் தன்னை நிறுத்தாமல், தன்னிடத்தில் அவளை நிறுத்தி சிந்தித்தபோது, உங்க தம்பி’ என்ற மைத்துனியின் சொல், அவருக்கு காதுகளில் கல்லெறியாய் விழுந்தது. அவள் ஒரு ராட்சசியாக மனதிற்குப் பட்டது. ஆகையால், தாமோதரனை, தனது தம்பியாக நினைக்காமல், தமயந்தியின் கணவனாக நினைத்தது போல், வாரேண்டா என்று கூட சொல்லாமல் புறப்பட்டு விட்டார்.

பெண் என்றும் பாராது, அழுத்தமாக உரசிக்கொண்டுபோய் இருக்கையில் உட்கார்ந்த தாமோதரனை, ரயில் தரையில் கால் ஊன்றி, குவியலாய் நின்ற முன்று பெண்களில் இருவர் முறைத்தார்கள். இவர்களில் சின்னவளான ஒருத்தி, போயும் போயும் இவன் தானா கம்பெனியா கிடைச்சான் என்பது மாதிரி அவனைப் பார்த்தாள் என்பதை விட, பழித்தாள் என்று கூட சொல்லலாம். அவளுக்கு, தனது மானசீகமான மன்மதக் கற்பனை தகர்ந்து போன கோபம். அந்த பெண்களை விட அவர்களை வழியனுப்ப வந்தவன் போல் பிளாட்பாரத்தில் நின்ற நடுத்தர மனிதருக்கு பெரும்கோபம். வெளிச்சத்திலேயே இப்படி உரசுகிறவன், இவள்கள் துங்கும் போது எப்படியோ?

அந்த நடுத்தரம், அந்த பெண்களை கண்களால் நிமிட்டி, அதே கண்களால் தாமோதரனை சுட்டிக்காட்டி ஜாக்கிரதை கேர்புல் என்றது. உடனே சின்னவள் எனக்கு காராத்தே தெரியும் என்கிறது உங்களுக்கு தெரியாதா அத்திம்பேர்?’ என்றாள். அப்படி சொன்னபடியே, தாமோதரனை பார்த்தாள். அவனது அலட்சியம், இவளை உலுக்கியது. இவளுக்கு காரத்தே தெரியும் என்பது அசல் கரடி. ஒருவேளை அவனுக்கு காராத்தே தெரியுமோ… அதனால் தான் இந்த அலட்சியமோ… குருவாயூரப்பா என்னப்பா இதெல்லாம்.

அந்த மெயில் நகராமலே திடுதிப்பென்று ஓடியது. தற்செயலாய் எழுந்த தாமோதரன், பிளாட்பாரத்தில் நின்றவருக்கு குவிந்து கைகளை ஆட்டிய அந்த முன்று பெண்களின் முதுகுகள் மீது முகம் போட்டு சாய்ந்தான். அவர்கள் உதறிய உதறலில் நல்ல வேளையாக இருக்கையில்தான் விழுந்தான். இதற்குள், ரயில், பேசின் பிர்ட்ஜை தாண்டி, வட்டமாய் வளைந்துக் கொண்டிருந்தது. அவன், தன் பாட்டுக்கு இருந்ததில் அந்த பெண்களுக்கு ஒரு ஆறுதல். அதே சமயம், அவன் தங்களை அலட்சியப்படுத்துகிறனோ என்ற ஆதங்கம். ஆனாலும் தங்களுக்குள் நடந்த அரட்டைகளில், அவர்கள் இவனை மறந்தார்கள். தத்தம் கணவன்மாரையும் மறந்தார்கள்.

இரவு, இருளாகிவிட்டது.

எந்தப் பகுதியில் ரயில் ஒடிக்கொண்டிருக்கிறது என்பதை அனுமானமாக கூட கூறமுடியாத அடர் இருட்டு. இருபக்கமும் மலையும் மரங்களும் அந்த ரயிலுக்கு முக்காடுகளாயின. தாமோதரன் இருக்கையில் இருந்து துங்கியபடியே கிடந்தான். எந்த நேரத்திலும் அவன் கீழே விழலாம் என்பது மாதிரியான உடலாட்டம். இந்தச் சமயத்தில் அந்த மூவரில் முத்தவள் அவனை சார் சார் என்றாள். ஆசாமி அசையாததால் அவன் இருக்கையின் அருகே கையைத் தட்டினாள். அது தேவையான அளவுக்கு சத்தம் போடாததால், மேலே இடைவெளியாய் உள்ள பலகையை குத்தினாள். அவன் எப்படியோ கண்விழித்தபோது, இவள் கெஞ்சும் குரலில் யாசித்தாள்.

‘சார் நாங்க மூணுபேரும் சிஸ்டர்ஸ். இவள் சிங்கப்பூரில் இருக்கிறாள். இன்னும் கல்யாணம் கூடிவரல. இப்பத்தான்… நல்லா படிச்சபொண்ணுக்கு மாப்பிள்ள கிடைக்கிறது கிடையாதே. அதோட செவ்வாய் தோசம் இருந்தா தேறவே முடியாது. அதனால மங்களுர்ல இறங்கி உடுப்பி கிருணன் கோயில்… தருமஸ்தலா… சுப்பிரமண்யா கடைசிலே முகாம்பீகைன்னு முறையிடபோறோம்.’

‘எனக்கு இதுல நம்பிக்கை கிடையாது

நம்பிக்கை இல்லாட்டியும் எங்களுக்கு உதவக்கூட துன்னு இருக்குதா?

நோ நோ… அப்படி சொல்லலியே’

‘நாங்க விடிய விடிய பேசிட்டு இருப்போம். உங்களுக்கு இடைஞ்சலா இருக்கும். அதனால அப்பர் பெர்த்ல போய் படுத்துக்கங்களேன்.

‘இது என்னோட பெர்த்தாக்கும்.’

‘தெரியும் சார்… இல்லாட்டி இப்படி கெஞ்சுவோமா ?

தாமோதரன், அந்த இருக்கையை துக்கி பிடிக்கும் ரப்பர் உறையிட்ட இரும்புச் சங்கிலிகளை பிடித்த படியே மேலே எம்பினான். ஏறவும் முடியாத இறங்கவும் முடியாத திரிசங்கு நிலை. மூச்சு முட்டியது. இதய துடிப்புகள் காதுகளுக்கே கேட்டன. உடனே அந்தப் பெண்கள் ஆபத்துக்கு பாவம் இல்லை என்பது போல், அவனது வயிற்றையும் கால்களையும் கைகளால் அனைத்துத் துக்கி, அவனை மேல் இருக்கையில் கொண்டு போட்டார்கள். பிறகு அவனுக்கு ஏதோ பெரிய சலுகை செய்து விட்டது போல், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

தாமோதரன், அப்படியே துங்கிப் போனான். ஆனாலும். இரவு இரண்டு மணியளவில் தலையை இருக்கைக்கு கீழே தொங்கப் போட்ட போது, அவன் தகாத விதமாக தங்களை நோட்டம் பார்ப்பதாக அனுமானித்து, துங்காமல் சும்மா கிடந்த இளையவள், அச்சத்தால் முந்தானை விலக எழுந்து, அபாயச் சங்கிலியை பிடித்து இழுக்க, வலது கைகைய நீட்டிய போது, தாமோதரன் தட்டுத் தடுமாறி

‘ரயில் பனங்காடில… இல்ல இல்ல பறப்பனகாடில அதுவும் தப்பு… பனங்காடிபறப்புல வரப்போ சொல்வீங்களா ?

‘எந்த நேரத்துக்குப் போகுதாம் ?

சரியா ஆறுமணிக்குன்னு என்னோட ஒய்ப் சொன்னாள்.’

‘சரி அய்ந்தரமணிக்கே உங்கள எழுப்பி விடுறேன். அதுவரைக்கும் அந்த பக்கமா திரும்பி கண்ண முடிண்டு துங்குங்கோ’

அந்த முன்று பெண்களும் சரியாக ஜந்தரைமணிக்கு உசிப்பிவிட்ட உடம்பை, கால் மணி நேரத்தில் சரிசெய்தபடியே, தாமோதரன் பறப்பனங்காடி ரயில் நிலையத்தில் இறங்கினான். நீரில்லாத அகழியில் சக்கர கால் பதித்து நின்ற ரயிலுக்கு வரவேற்பு வளையம் போல் உள்ள தோரண பாலத்தில் நடந்தான். பாலத்தின் முகப்பில் தயாராக நின்ற கோழிக்கோடு பேருந்தில் ஏறினான். முழுவதும் மலையாள எழுத்து. கோழிக்கோடா என்று கேட்டபோது, அதுதான் என்றான் ஒரு தமிழன். அவசரஅவசரமாக சொல்லிவிட்டு, அவன் போய்விட்டான். இருபது கிலோ மீட்டரில், அது கோழிக்கோட்டுக்கு எதிர் பாதையில் செல்லும் பேருந்து என்பதை ஒரு மலையாளி அனுதாபத்தோடு சொன்னார். இடையில் பேருந்தில் இருந்து இரக்கப்பட்டு, கோழிக்கோடுக்கு எதிர்புற பேருந்தில் போனால், அந்த பேருக்குரிய பல்கலைக்கழகம் கோழிக்கோட்டில் இல்லையாம். அங்கிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில், தேனிப் பாலம் என்ற இடத்தில் இருக்கிறதாம். நான்கைந்து தமிழ்ப் பையன்கள் தாமோதரனை, சரக்குப்பொதி போல், கோழிகோட்டிலிருந்து தேனிப் பாலம் வழியாக ஏதோ ஒரு இடத்திற்கு செல்லும் ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டார்கள்.

எப்படியோ கோழிக்கோடு பல்கலைகழக விருந்தினர் மாளிகையில் அவனுக்காகவே காத்திருந்த துறைத்தலைவரும், உடலி யல் பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் அவனை பார்த்ததும் ஆனந்தமானார்கள். துறைத்தலைவர் படப்படப்பாய் கேட்டார்.

‘ரயில் நிலையத்திலேயே காரை நிறுத்தி டிரைவர் கையில ஒரு போர்டையும் கொடுத்தோமே? சரி போகட்டும்… முதல்ல உங்க ஒய்புக்கு டெலிபோன் செய்யுங்க… ஏழெட்டு தடவ டெலிபோன் செய்திட்டாங்க. கடைசியா அழுதுட்டாங்க… வந்த உடனே ஒங்கள, பேசச்சொன்னாங்க. இதோ டெலிபோன்… எதற்காக தலையை சொறியுறிங்க.’

என் வீட்டு டெலிபோன் நம்பர்ல ஒரு சந்தேகம். 491948 நோ நோ 481871 இதுவும் இல்ல 489… உங்களுக்கு தெரியுமோ? மெட்ராஸ்ல திருவான்மீயூர் முதல் மூணு நம்பர் தெரிந்தா புடிச்சுக்குவேன்.

‘சரி… மேடமே பேசுவாங்க. இந்தாப்பா… பிரட் ஆம்லெட் கொண்டுவா.”

தாமோதரன், தலைதாங்கும் சோபா இருக்கையில் பொத்தென்று விழுந்தான். தலையை அங்குமிங்கும் உருட்டினான். வயிற்றை கைகளால் பிசைந்தான். கண்கள் சொருகின. வாய் கோணியது ஒரே பதட்டம். அவனுக்கல்ல… அங்கே இருந்தவர்களுக்கு.

‘என்ன சார் என்ன சார் ஆச்சு.’

‘தலை சுத்துது… வயித்து பக்கம் ஒரே வலி. ஒரு வேளை… பி.பி கூடிட்டோ என்னவோ… சுகர் அதிகமாயிருக்குன்னு நினைக்கிறேன்.’

அடக்கடவுளே! பிள்ளையார் பிடிக்க குரங்காய் போவுதே. ஒ,கே… யுனிவர்சிட்டி டாக்டர முதலுதவி சிகிச்சைக்கு கூப்பிடுப்பா. காலிக்கட் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக ஆம்புலன்ஸை ரெடிபண்ணுங்கப்பா.’

அந்த விருந்தினர் மாளிகையே பரப்பரப்பானபோது, ஒரு சேவகன் ஒரு தட்டில் வெள்ளைத்துணி உப்ப அந்த அறைக்குள் வந்து, அந்த தட்டின் முக்காட்டை விலக்கினார். ஐந்தாறு பிரட்டுகள்… இடை இடையே ஆம்லெட் துண்டுகளோடு மேல் வாக்கில் இரட்டை இரட்டையாக அடுக்கப்பட்டிருந்தன. தாமோதரன் அவசர அவசரமாக அவற்றை பிய்த்து பிய்த்து வாய்க்குள் போட்டான். ஒரு ஜக் தண்ணிரை கண்ணாடி தம்பளில் ஊற்றாமல் அப்படியே குடித்தான். பிறகு ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னான்.

‘இப்போ மயக்கம் இல்ல. தலை சுத்தல… வயிறும் வலிக்கல… நான் என்ன நினக்கேன்னா பசியிலதான் அப்படி தல சுத்தி இருக்குமோன்னு’

‘இருந்தாலும் ரிஸ்க் எடுக்க வேண்டாம் சார். உடலியல விட, உயிரியல் தான் முக்கியம் சார். அப்புறம் மேடம் தமயந்திக்கு எங்களால பதில் சொல்ல முடியாது.’

‘அப்படின்னா யாரு ?

‘உங்க ஒய்ப் சார்.’

‘ஐ.சி… செமினாருக்கு போலாமா?’

கருத்தரங்க அறையில், துறைத்தலைவரின் நீண்ட நெடிய அறிமுகத்திற்குப் பிறகு, டாக்டர் தாமோதரன். மைக்குகள் பொருத்தப்பட்ட மேடையோர போடியத்தின் அருகே வந்தான். அவனது பேண்டுக்குள் இன் செய்யப்பட்ட சட்டை மடிப்புக்கள் இருபக்கமும் வெளிப்பட்டு ஒரு பக்கம் இடுப்பு சதையையும் மறுபக்கம் டவுசர் துணியையும் காட்டிக்கொண்டிருந்தன. விருந்தினர் மாளிகையில் வாய் கொப்பளித்த தண்ணிர், அவன் மெல்லிய தாடியில் புல் மேல் படிந்த பனித்துளிகளால் காட்சி காட்டின. அவனை பார்த்து லேசாய் மனதுக்குள் சிரித்த நிபுணர் கூட்டம், அவன் பேசப்பேச கண்களை மூடி காதுகளை கூர்மையாக்கியது. டாக்டர் தாமோதரனுக்குள் ஒரு புதிய மனிதன் எழுந்தான். கையோடு, விடாப்பிடியாய் கொண்டு வந்த ஒரு பெட்டியை திறந்து, அதில் உள்ள நீண்ட வால்வுகளைக் கொண்ட ஒரு அதிசயப் பூச்சி போல் தோன்றிய கருவியை எடுத்து, அதன் வால்களை மின்சார பிளக்களில் பொருத்திவிட்டு விளக்கினான். இவன் ஒரு கவசம் போலவும். இந்த கவசத்திற்குள் இருப்பவன்தான் உண்மையான தாமோதரன் என்பது போலவும் பேசினான்.

‘இதோ இந்த மெசின் இருக்குதே இதுக்கு எக்ஸ்டர்னல் பல்மினிரி டிவைஸ் என்று பெயர். அதாவது இதய அடைப்புகள ஆப்ரேசன் இல்லாமலே சரிபடுத்தக் கூடிய கருவி. இதை பல ஆண்டு ஆராய்ச்சிக்கு பிறகு கண்டுபிடிச்சேன். இதோ இதுல இருக்குதே முனு கப்புங்க… இதுங்கள இரண்டு பாதங்களிலும் ஒரு முட்டி கால்முனை ஒன்றிலும் பொருத்தணும். பாதத்துலதான் அறுபது சதவீத ரத்தம் இருக்குதுன்னு நிபுணர்களான உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல. இந்த கருவியை, ஒரு இதய நோயாளி மேல், பொருத்தினால், இதயம் விரியும் போது, இந்தக் கருவி சுருங்கும். சுருங்கும் போது, இது விரியும். இதனால் இதயத்திற்கு நிறைய ரத்தம் போகும். எல்லா உறுப்புக்களுக்கும் சமச்சீரா ஒடும். இதனால இதயத்துல இருக்கிற அடைப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமா நீங்கும்… அந்த இடங்களுல சின்னஞ் சிறு ரத்தக் குழாய்கள் உருவாகும். அதனால, இதய சிகிச்சைக்கு இப்போதைய அஞ்சோகிராமும், அறுவைச்சிகிச்சையோ தேவையில்லை. இதனால் பிழைப்பு போயிடும் என்கிறதானலேயே இத்ய சிகிச்சை டாக்டர்கள் காது கொடுத்து கேட்க மறுக்கிறாங்க.”

விஞ்ஞானிகளில் ஒருவர், தாமோதரனை இடைமறித்து ஏதோ கேட்கப் போனார். அதற்குள், இளைஞர்கள் அவரை சும்மா இருக்கும்படி உஷ் என்று ஒலி எழுப்பினார்கள். தாமோதரன் தன் பேச்சை மீண்டும் தொடர்ந்தான்.

‘இதனால உடலியல் வல்லுனர்களான நாம், இந்த கருவியைப் பற்றி விவாதித்து மாணவர்கள் இடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தணும். இந்த விஞ்ஞானக் கருவி இதய நோயாளிகளை லட்சக்கணக்கான பணம் இல்லாமல் வெறும் இருபதாயிரம் ரூபாயல காப்பாற்றக்கூடியது.’

உங்களுக்கு தெரிந்தது போல், நம்ம உடம்பு ராசாயன, பெளதிக விதிகளால்தான் இயங்குது. இது டாக்டர்களுக்குப் புரியாது. நமக்குப் புரியும். இந்தக் கருவி ஹைட்ராலிக் காற்றழுத்த விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விதியைப் பற்றி பெரும்பாலனோருக்குச் சொல்ல வேண்டியதில்லை, என்றாலும் இங்கே வந்திருக்கிற இளம் மாணவர்களுக்காக சொல்ல விரும்புகிறேன்.

நிபுணர் கூட்டம் அவன் பேச்சை மாலையிலும் தொடர்வது என்று திர்மானித்தது. விருந்தினர் மாளிகைக்கு கொண்டுவரப்பட்ட தாமோதரனிடம், இரண்டு மாணவர்கள் குளித்துவிட்டு, உடையை மாற்றிக் கொள்ளும் படி சொன்னார்கள். அவன் சூட்கேஸை எடுத்தான். அதையே உற்றுப்பார்த்தான். பின்னர் திக்கித் திணறி பேசினான்.

‘சூட்கேஸ் பூட்டு நம்பர் மறந்துட்டு.”

– வாசுகி (பொங்கல் மலர், 2000) – சமுத்திரக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர், 2001, ஏகலைவன் பதிப்பகம், சென்னை – 600 041

சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *