கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 15,532 
 
 

ஃப்ராங்க் பாவ்லாஃப்

கால்களை ஓய்வாக நீட்டிக்கொண்டு, காப்பியைப் பருகியபடி மனத்தில் தோன்றியதையெல்லாம் சார்லியும் நானும் நிதானமாகப் பகிர்ந்துகொண்டிருந்தோம். மெதுவாக நேரம் கடந்துகொண்டிருக்கச் சில அருமையான கணங்களை அனுபவித்துக்கொண்டிருந்தோம். திடீரென, தனது நாயைத் தான் கொல்ல வேண்டி வரும் என அவன் சொன்னான். எனக்குக் கொஞ்சம் தூக்கிவாரிப்போட்டாலும் வேறு உணர்வு எதுவும் எழவில்லை. என்னைப் பொறுத்தளவில் பதினைந்து வருடங்கள் – இது நீண்ட காலம்தான்- வாழ்ந்துவிட்ட ஒரு நாய், நோயுற்றுச் சிரமப்படுவது பார்க்க வருத்தமளிக்கக்கூடிய ஒரு விஷயம். எப்படியும் ஒருநாள் அது இறந்துதான் போக வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

அதை ஒரு பழுப்பு நாய் என்று சொல்லி என்னால் ஏமாற்ற இயலாதுதானே? என்றான் சார்லி.

என்ன செய்வது, லாப்ரடார் வகையின் நிறம் பழுப்பு இல்லையே. ஆனால் அதைத் தவிர வேறு என்ன சிக்கல்?

ஒன்றுமில்லை. அது பழுப்பு நிறமானது இல்லை என்பது மட்டும்தான்.

அடக் கடவுளே! இப்போது நாய்கள் விஷயத்திலும் ஆரம்பித்துவிட்டார் என்று கொள்ள வேண்டுமா?

ஆமாம்.

பூனைகள் விஷயம் பற்றி எனக்குத் தெரியும். கடந்த மாதம் என் பூனையை நான் தொலைத்துக்கட்ட வேண்டி வந்தது. வெள்ளை மற்றும் கறுப்புப் புள்ளிகளுடன் பிறக்க நேர்ந்த துரதிர்ஷ்டம் பிடித்த தெருப்பூனைகளில் ஒன்று அது.

பூனைகளின் எண்ணிக்கை தாங்க முடியாததாக இருந்தது உண்மைதான். பழுப்பு நிறத்தில் உள்ளவற்றை மட்டும் வைத்துக்கொள்வதே மிக நல்லது என அரசு விஞ்ஞானிகள் கருதினர். நகர வாழ்க்கைக்குப் பழுப்புப் பூனைகளே ஏற்றவை என ஆராய்ச்சிகள் நிரூபித்தன. அவை குறைவாக உணவருந்தி, குறைவாகக் குட்டி போடுமாம். பூனை என்பது பூனைதான். ஏதோ ஒருவகையில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதால் பழுப்பு நிறமல்லாத பூனைகளைத் தீர்த்துக்கட்டுவது என்று இறுதியில் அவர்கள் ஆணையிட்டனர்.

நகரக் குடிமக்கள் படையினர் பாஷாண உருண்டைகளை இலவசமாக விநியோகித்தனர். பூனை உணவில் அதைக் கலந்துகொடுத்தால் பூனைகளைப் பரலோகம் அனுப்பிவைக்க இரண்டு டோஸ்கூடத் தேவைப்படவில்லை.

முதலில் நான் மனம் உடைந்து போனேன். ஆனால், விரைவில் அதை மறந்துவிட்டேன்.

நாய்கள் விஷயத்திலும் அது நடக்க, ஏனோ தெரியவில்லை நான் அதிர்ச்சியடைந்தேன். அவை பெரியதாக இருப்பதாலோ மனிதனின் உற்ற துணைவனாக இருப்பதாலோ இருக்கலாம். எப்படியிருந்தபோதும் நான் எனது பூனை பற்றிச் சாதாரணமாகப் பேசியதைப் போலவே சார்லியும் அதைப் பற்றிச் சாதாரணமாகப் பேசினான். இது சரிதான். அதிகம் உணர்ச்சிவசப்படுவதனால் எந்தப் பயனும் இல்லை. பழுப்பு நிறமுடைய நாய்கள் வலிமையானவை என்பதும் உண்மை.

பேசுவதற்கு வேறு எதுவும் இல்லாததால் ஒரு விநோதமான உணர்வுடன் நாங்கள் பிரிந்துசென்றோம், ஏதோ ஒரு விஷயத்தைப் பேசாமல்விட்டுவிட்டதைப் போல. அந்த நாளின் மீதமிருந்த நேரம் முழுவதும் இந்தச் சிந்தனை மனத்தில் ஓடிக்கொண்டேயிருந்தது.

சில நாள்களுக்குப் பிறகு ‘சிட்டி டெய்லி’ நாளிதழ் இனிமேல் வெளிவராது என்பதைச் சார்லிக்குத் தெரிவித்தேன்.

இதைக் கேட்டு அவன் ஆடிப்போனான். தினமும் காலையில் காப்பி குடித்தவாறு அவன் ‘சிட்டி டெய்லி’யை வாசிப்பான்.

என்ன நடந்தது? வேலைநிறுத்தமா? பத்திரிகை திவாலாகிவிட்டதா?

இல்லை. இது நாய் விவகாரத்தின் தொடர்ச்சி.

பழுப்பு நிறத்தவை பற்றியா சொல்கிறாய்?

ஆமாம், வழக்கம்போல. இந்தப் பழுப்பு ஆணையைப் பற்றிப் பேசாமல் ஒருநாள்கூடக் கழிந்த தில்லை. விஞ்ஞானிகளின் முடிவினை ‘சிட்டி டெய்லி’ கேள்விக்குள்ளாக்கிவிட்டது. வாசகர்கள் குழம்பி விட்டதில் சிலர் தமது நாய்களை மறைத்துவிட்டனராம்.

அது பிரச்சினையை வரவேற்பதுபோலல்லவா?

நீ சொல்வது சரிதான். கடைசியில் பத்திரிகைத் தடையில் வந்து முடிந்திருக்கிறது.

கடவுளே! இனி நாம் குதிரைப் பந்தயம் பற்றி அறிய என்ன செய்வது?

நண்பரே, ‘பிரௌன் நியூஸ்’ஸில் ரேஸ் டிப்ஸ்களைப் பார்க்க வேண்டியதுதான். வேறு வழியில்லை. குதிரைப் பந்தயம் மற்றும் விளையாட்டு விவகாரங்களில் இதுவும் அதே பார்வையைத்தான் கொண்டிருக்கிறது எனத் தெரிகிறது.

செய்திகளை அறிந்துகொள்ள வேறு வழியில்லாததால், ஒன்றுமில்லாததற்கு ஏதோ ஒன்று. தினசரிச் செய்திகளை அறிந்துகொள்ளாமல் ஒருவர் இருக்க முடியாதல்லவா?

அன்று மீண்டும் நான் சார்லியுடன் காப்பி குடித்துக்கொண்டிருந்தேன். ‘பிரௌன் நியூஸி’ன் கொஞ்சம் சந்தேகம் கொண்ட வாசகனாக நான் மாறியிருந்தேன். எனினும் காப்பி விடுதியில் என்னைச் சுற்றி மக்கள் எதுவும் நடந்து விடவில்லை என்பதுபோல் இருந்துகொண்டிருந்தனர். ஒருவேளை இந்த மாற்றங்களை நான் பெரிதுபடுத்து கிறேனோ என்னவோ?

அடுத்து புத்தகங்களின் முறை. மீண்டும் அதே முறையற்ற கதையின் அரங்கேற்றம்.

‘சிட்டி டெய்லி’யைப் போன்ற குழுவினரின் பதிப்பகங்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, அவை பதிப்பித்த நூல்கள் நூலக அடுக்குகளிலிருந்து நீக்கப்பட்டன. அந்தப் புத்தகங்களை நாம் கவனமாகப் படித்தால், ஒவ்வொரு நூலிலும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது நாய் அல்லது பூனை என்ற வார்த்தை பழுப்பு என்ற முன்னொட்டு இல்லாமல் இடம்பெற்றிருக்கும் என்ற உண்மையை அறியலாம். அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்.

போதும் என்றான் சார்லி. சட்டம் என்றால் சட்டம்தான். அதனுடன் கண்ணாமூச்சி ஆடுவதில் பயனில்லை. தன்னைச் சுற்றிலும் பார்த்துக்கொண்டு, பழுப்பு! என்றான் அவன். பழுப்புச் சுண்டெலி! எங்களைச் சுற்றியிருந்தவர்கள் ஒருவேளை எங்கள் உரையாடலை ஒட்டுக்கேட்டிருந்தால்.

எதற்கு வம்பு என்று நாங்கள் ஒவ்வொரு வாக்கியம் அல்லது குறிப்பிட்ட வார்த்தைகளின் இறுதியில் பழுப்பு என்று சேர்த்துச்சொல்லத் தொடங்கினோம். ஆரம்பத்தில் பழுப்பு மதுபானம் கொண்டுவா எனச் சொல்வது விநோதமாக இருந்தது. காலக்கிரமத்தில், பேச்சு வழக்கு மொழி மாறுதலடையும் என்ற எளிய உண்மையைக் கணக்கில் கொண்டு, ‘ஃபக்’ அல்லது ‘புல்ஷிட்’ போன்ற வார்த்தைகளுக்குப் பதிலாகப் பழுப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது எங்களுக்கு விநோதமாகப்படவில்லை. அது கருத்தில்கொள்ளப்பட்டது, எங்களுக்கும் மன நிறைவு.

முக்குதிரைப் பந்தயத்தில் நாங்கள் கொஞ்சம் வென்றிருந்தோம். இது பெரிய வெற்றியில்லையென்றாலும் அதுதான் முதல் பழுப்புக் குதிரையின் வெற்றி. புதிய ஆட்சியை நாங்கள் ஏற்றுக்கொள்வதற்கும் அது உதவியது.

ஒருநாள் சார்லியை எங்கள் வீட்டிற்கு வந்து பந்தயக் கோப்பையின் இறுதிப் போட்டியைக் காண அழைத்திருந்தது நன்றாக நினைவிருக்கிறது. நாங்கள் பைத்தியம்போல் முழுக்கச் சிரித்துக்கொண்டிருந்தோம். ஒரு புதிய நாயை வாங்கும்போது நடக்கின்ற விஷயம்.

அந்த நாய் வால்நுனியிலிருந்து மூக்குவரை பழுப்பு நிறமாக இருந்தது. அதன் கண்களும் பழுப்புதான்.

பார், முன்பு இருந்த நாயைவிட இந்த நாய்தான் கடைசியில் மிக அன்பாக இருக்கிறது. கறுப்பு லாப்ரடார் நாயின் இழப்பை இவ்வளவு பெரிதுபடுத்தியிருக்கக் கூடாது. அவன் தனது வாக்கியத்தை முடிப்பதற்குள் அது கடுமையாகக் குரைத்துக்கொண்டு சோபாவுக்குக் கீழ் நெடுஞ்சாண்கிடையாகப் பாய்ந்தது. உச்சகுரலில் கத்துவேன் என்றும் பழுப்பு நிறமாக இருந்தபோதும் நான் எனது எஜமானனுக்கோ வேறு எவருக்குமோ கீழ்ப்பணியமாட்டேன் என்றும் சொல்வதுபோல இருந்தது.

சார்லி பளிச்சென்று புரிந்துகொண்டான்.

என்ன, நீயுமா?

நல்லது, நீ பார்க்கத்தான் போகிறாய்.

அந்தச் சமயத்தில் ஒரு அம்பைப் போல் பாய்ந்த எனது பூனை நிலையடுக்கில் புகலடையத் திரைச்சீலையின் மீது ஏறியது. பழுப்பு நிற உரோமம் கொண்ட ஆண்பூனை அது. அன்று நாங்கள் எப்படிச் சிரித்தோம்! தற்செயல் நிகழ்வு என்பது இதுதான் போலும்.

பார், நான் எப்போதும் பூனை வளர்ப்பவன்தான்… இது அழகாயிருக்கிறதல்லவா?

அருமை என்றான் அவன்.

பிறகு நாங்கள் தொலைக்காட்சியை இயக்கியதும் தங்கள் விழிகளின் ஓரத்திலிருந்து பழுப்பு விலங்குகள் ஒன்றையன்று பார்த்துக்கொண்டன.

போட்டியில் யார் வென்றது என்பது நினைவில்லை. ஆனால் பொழுது நன்றாகக் கழிந்தது. நாங்கள் பாதுகாப்பாக உணர்ந்தோம். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் செய்வதையே நீங்களும் செய்கிறபோது வாழ்க்கை மிக எளிதானதாகிவிடுகிறது. பழுப்பு எனும் தேர்ந்தெடுப்பும் நல்லதாகவேயிருக்கும்.

தெருவின் எதிர்ப்புறத்தில் நான் கடந்துசென்ற சிறுவனைப் பற்றி எனக்குள் கொஞ்சம் கவலைதான். தனது காலடியில் இறந்துகிடந்த வெள்ளைச் சடை நாய்க்காக அவன் அழுதுகொண்டிருந்தான். ஆனால் நாய்கள் மொத்தமாகத் தடைசெய்யப்பட்டுவிடவில்லை என்பதை அவன் புரிந்துகொள்ளவில்லை. அவன் ஒரு பழுப்பு நிற நாயைத் தேடி வாங்கினாலே போதும். சிறிய நாய்கள் பழுப்பு நிறத்தில்கூடக் கிடைக்கின்றனவே. அதன் மூலம் சட்டவரையறைக்குள் இருப்பதோடு தனது பழைய நாயையும் விரைவாக அவன் மறக்க முடியும். எங்களைப் போலவே.

நேற்று ஒரு நம்ப முடியாத சம்பவம். பாதுகாப்பாக இருப்பதாகக் கருதிய நான் பழுப்பு நிறச் சீருடையணிந்த நகரக் குடிமக்கள்படையினரால் நெருக்கடிக்குள்ளானேன். நடவடிக்கைகளில் கருணையற்ற மனிதர்கள். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அவர்கள் இந்தப் பகுதிக்குப் புதியவர்களாதலால் இன்னும் அவர்கள் எல்லோரையும் அறிந்து கொண்டிருக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமைகளில் நானும் சார்லியும் சீட்டாடுவதுண்டு. அந்த ஞாயிறும் நான் சார்லியின் வீடு நோக்கி ஒரு பீர் கூடையுடன் சென்றுகொண்டிருந்தேன். நொறுக்குத்தீனியோடு குடித்தால் அது இரண்டு மூன்று மணிநேரம் தாங்கும். நான் அவனது வீட்டை அடைந்தபோது அவன் ஃப்ளாட்டின் கதவு நொறுங்கிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தேன். வேடிக்கை பார்க்கும் கூட்டத்தைக் கலைக்க குடிமக்கள்படையினர் இருவர் முன்கதவின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தனர். அதற்கும் மேலேயிருக்கும் ஃப்ளாட்டிற்குச் செல்லும் பாவனையில் மேலே சென்றேன். பிறகு லிஃப்ட்டில் கீழே வந்தேன். வெளியே மக்கள் சன்னமான குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவரது நாய் பழுப்பு நிறமுடையதாயிற்றே! நாங்கள் எல்லோரும் பார்த்திருக்கிறோமே!

ஆமாம். ஆனால் முன்பு அவர் பழுப்பு நிறத்திலன்றிக் கறுப்பு நிறத்தில் வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். கறுப்பு நிற நாய்.

முன்பா?

ஆமாம். சட்டம் போடுமுன்பு பழுப்பு நிறமல்லாத நாயை வைத்திருந்ததுகூட இப்போது குற்றமாம். அதைக் கண்டுபிடிப்பதும் சிரமமானதல்ல. அண்டை அயலாரைக் கேட்டால் தெரிந்துவிடும்.

நான் விரைந்து திரும்பினேன். எனது முதுகில் வியர்வை வழிந்தோடியது. முன்பு ஒன்றை வைத்திருந்தது தவறென்றால் சட்டத்தின் தவறான பக்கத்தில் நான் இருக்கிறேன். நான் இருக்கும் கட்டடத்தில் இருப்பவர் அனைவருக்கும் நான் முன்பு ஒரு கறுப்புவெள்ளைப் பூனை வைத்திருந்தது தெரியும். முன்பு! அது பற்றி நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

இன்று காலை பழுப்பு வானொலி செய்தியை உறுதிப்படுத்தியது. கைதுசெய்யப்பட்ட ஐந்நூறு பேரில் சார்லியும் அடக்கம் என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில் அவர்கள் பழுப்பு நிறமுடையவற்றை வாங்கியிருந்தாலும், அவர்கள் தமது எண்ணத்தை மாற்றிக்கொண்டு விட்டார்கள் என அர்த்தமில்லை என்பது இப்போதைய அதிகாரபூர்வ நிலைப்பாடு.

‘நாய் அல்லது பூனை ஒன்றைப் பழுப்புச் சட்டத்திற்கு எதிராக ஏதாவதொரு காலத்தில் வைத்திருந்தாலும் அது குற்றம்’. செய்தி அறிவிப்பாளர் மேலும் சொன்னார், ‘இது அரசுக்கு எதிரான குற்றம்’.

அதைத் தொடர்ந்து நடந்தது மேலும் மோசமானதாக இருந்தது. ஒருவர் எந்தச் செல்லப்பிராணியையும் ஒருபோதும் வைத்திருக்காவிடினும் அவரது குடும்பத்தில் யாரோ ஒருவர் – அப்பா, சகோதரர், அத்தை மகன் – தமது வாழ்வில் ஏதோ ஒரு சமயத்தில் ஏதோ ஒரு செல்லப்பிராணியைப் பழுப்புச் சட்டத்திற்கு எதிராக வைத்திருந்தாலும் அது ஆபத்துதான்.

சார்லிக்கு என்னவாயிற்று என்று எனக்குத் தெரியவில்லை. இது மிக அநியாயம். பைத்தியக்காரத்தனமானது. கொஞ்ச காலமாகவேனும் பழுப்புப் பூனை வைத்திருப்பதால் நான் பாதுகாப்பாக இருப்பதாக நம்பினேன். முன்பு வைத்திருந்தவர்களைக் கைது செய்வதற்காக அவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள்தான்.

இரவு முழுவதும் என்னால் கண்ணை மூட முடியவில்லை. பழுப்பு விலங்குகள் பற்றி அவர்கள் முதல் சட்டம் கொண்டுவந்தபோதே நான் எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டும். அது என் பூனைதான், சார்லியின் நாயைப் போல. இப்படிச் செய்ய எந்த உரிமையும் இல்லை என நாங்கள் அப்போதே சொல்லியிருக்க வேண்டும். ஆனால் எப்படி அவர்களைத் தடுத்திருக்க முடியும்? எல்லாம் வேகமாக நடந்துவிட்டது. வேலைப் பளுவும் அன்றாடக் கவலைகளும் இருந்தன. தாங்கள் தப்பிப்பதற்காக எதிர்ப்பின்றி அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

கதவு தட்டப்படுகிறது. மிகவும் அதிகாலை நேரம். இந்த நேரத்தில் யாரும் வருவதில்லை. எனக்குப் பயமாயிருக்கிறது. இன்னமும் விடியக்கூட இல்லை. வெளியே இருட்டு. சத்தமாகக் கதவைத் தட்டுவதை நிறுத்துங்கள். நான் வந்துகொண்டிருக்கிறேன்… றீ

ஃப்ரெஞ்சிலிருந்து ஆங்கிலத்தில்:
திரிதப்ரத்தா பட்டாச்சார்யா ‘டேடோ’
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ஆனந்தராஜ்
நன்றி: Indian Literature, Issue No. 239
May – June 2007

Print Friendly, PDF & Email

1 thought on “பழுப்புக் காலை

  1. உலக பொதுத்தன்மை வாய்ந்த கதைக்கரு.எங்கே எப்பொழுது ஒருவாசகன் படித்தாலும்,தன அனுபவத்தோடு
    ஒப்பிட்டுக்கொள்ள முடியும்.இந்த கதையை எனக்கு அறிமுகம் செய்தது எழுத்தாளர்,எஸ்.ராமகிருஷ்ணன்.அருமையான மொழிப்பெயர்ப்பு….நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *