“அனாதையாய் சாலையில் பறந்துகொண்டிருக்கும் பலூன்களை கண்டிருக்கிறீர்களா. குறிப்பாக வாரயிறுதி இரவுகளில் வெள்ளை, மஞ்சள், ஊதா, சிகப்பு நிற பலூன்களை பார்க்கலாம். அவை கல்யாண வரவேற்புக்கோ, பிறந்தநாள் விழாவுக்கோ சென்று வந்த குழந்தைகளுக்கு பரிசளிக்கப்பட்டவையாக இருக்கக்கூடும். இரவு ஒன்பது மணிக்கு மேல் வீடு திரும்பும்போது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே சாண்ட்விச்சாய் அமர்ந்திருக்கும் குழந்தை தூக்கக்கலக்கத்தில் தவறவிடும் பலூன்களே அவை.
வீட்டுக்குப் போனதும், தூக்கம் களைந்த எரிச்சலிலும் பலூனை தொலைத்த கையாலாகத்தனத்தை எண்ணியும் குழந்தை எப்படியும் அழும். புது பலூன் வேண்டும் என்று அடம்பிடிக்கும். முன்னேற்பாடான பெற்றோர் என்றால் வீட்டிலேயே ஸ்டாக் வைத்திருக்கும் பலூனை ஊதிக்கொடுத்து சமாளிப்பார்கள். அல்லது அடம் பிடிக்கும் குழந்தை செம சாத்து வாங்கி, கேவிக்கொண்டே தூங்கும்.
ஒரு சப்பை மேட்டருக்கு இத்தனை ஆராய்ச்சி தேவையா என்று கேட்காதீர்கள். இனிமேல் இரவுப் பயணங்களில் இம்மாதிரி பலூன்களை பார்த்ததுமே நீங்களும் இப்படித்தான் என்னை மாதிரியே ஆராய்ந்து மன உளைச்சல் அடையப் போகிறீர்கள். ஏனெனில் உங்கள் கண் முன்னால் பறந்துப் போவது வெறும் பலூன் அல்ல. ஒரு குழந்தையின் தற்காலிக மகிழ்ச்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்”
நானே எதிர்ப்பார்க்காத அளவுக்கு செம கைத்தட்டல். நண்பரின் பொம்மைக்கடை திறப்புவிழா. திறந்துவைத்து பேச ஒப்புக்கொண்ட நடிகை, திடீரென்று ஏதோ ஷூட்டிங்குக்கு மும்பை போய்விட்டாராம். விழாவை ஒப்பேற்ற விருந்தினராக வந்த என்னை மாதிரி இரண்டு மூன்று பேரை பேசவைத்து சமாளித்தார் நண்பர். எதையாவது பேசவேண்டுமே என்பதால் திட்டமிடப்படாத இந்த திடீர் உரையை பேசினேன். உண்மையில் என் உரையில் அமைந்திருந்தது மாதிரி எனக்கு பெரிய பலூனாபிமானமோ, குழந்தைகள் மீது அக்கறையோ எதுவுமில்லை. வந்திருந்தவர்களை ஈர்க்க வேண்டுமே என்று வலிய திணித்த உணர்ச்சிகள் இவை.
நண்பர் அருமையான இரவு உணவை ஏற்பாடு செய்திருந்தார். சாப்பிடும்போது என்னை பாராட்டாத ஆளே இல்லை. எனக்கு கிடைக்கும் இந்த பெருமையை எல்லாம் பக்கத்தில் நின்று பார்க்க என்னுடைய மனைவியையும், மாமியாரையும் அழைத்துவரவில்லையே என்று நொந்துகொண்டேன். எல்லாம் முடிந்து கிளம்பும்போது நேரம் இரவு பத்தை தாண்டியிருந்தது. பல்ஸரை கிக்கி சீறவிட்டேன்.
இரவு பன்னிரெண்டுக்கும் கூட நெரிசலாக இருக்கும் அண்ணாசாலை ஏனோ அன்று வெறிச்சோடிப் போயிருந்தது. எழுபதில் வண்டி அனாயசமாக பறந்தது. முகத்தில் மோதிய காற்று உற்சாகமளித்தது. சைதாப்பேட்டையை தாண்டும்போது வானம் இருட்டத் தொடங்குவதாக உணர்வு. தூரத்தில் மின்னல் பளிச்சிட்டது. காற்றில் ஈரத்தை உணர, அடுத்த அரை மணி நேரத்தில் வானம் பிளந்து பேய்மழை கொட்டப் போகிறது என்று யூகித்தேன். லேசான ரம்மியமான மண்வாசனை. விரைவாக வீடு சேரும் அவசரத்தில் ஆக்ஸிலேட்டரை கூடுதலாக முறுக்கினேன். அடுத்த ஐந்தாவது நிமிடம் கிண்டியை தொட்டேன். பாலத்துக்கு அருகிலிருந்த நட்சத்திர ஓட்டல் வாசலில் கசகசவென்று போக்குவரத்து நெரிசல். பணக்காரர்களுக்கு பார்ட்டிக்குப் போவதைத் தவிர வேறு வேலையே இல்லை.
வீட்டுக்கு போக வேண்டிய அவசரத்தில் இருந்த நான் பாலத்தில் ஏறினேன். ஒரு சுற்று சுற்றி தாம்பரம் போகவேண்டிய வழியை அடைந்தேன். பாலத்தில் இருந்து இறங்கும்போதுதான் கவனித்தேன். வெள்ளை நிற பலூன் ஒன்று காற்றில் இங்கும் அங்குமாக அலைந்துக் கொண்டிருந்தது. ஏதோ இனம்புரியாத உணர்வு உள்ளத்தை உந்த, வண்டியின் வேகத்தை குறைத்தேன். இண்டிகேட்டரை இயக்கி பலூனுக்கு அருகாக வண்டியை ஓரங்கட்டினேன். அந்த பலூனை எடுத்து வழியில் எதிர்படும் முதல் குழந்தையிடம் கையளிக்க வேண்டும். அந்த பிஞ்சு முகத்தில் ஏற்படும் குதூகலத்தை ரசிக்க வேண்டும். இப்படியெல்லாம் நல்லவிதமாக வாழ்க்கையில் இதுவரை நான் யோசித்ததே இல்லை. ஒரே நாளில் ஏன் இப்படி மாறிவிட்டேன்?
அலைந்துக்கொண்டிருந்த பலூனை இரு கை நீட்டி தொட்டதுதான் தாமதம். தலை கிறுகிறுக்கத் தொடங்கியது. கால்கள் பிடிமானம் இல்லாமல் தரை நழுவியது. பாலம் இடிந்து விழுந்துக் கொண்டிருக்கிறதா. சென்னையில் பூகம்பமா. இல்லை, நான் மயங்கிக் கொண்டிருக்கிறேனா. எதுவுமே புரியவில்லை.
கண்விழித்து, மலங்க மலங்க நான் பார்த்தபோது வெள்ளைச்சட்டையும், நீலநிற பேண்டும் அணிந்திருந்த கருப்பான ஒருவன் என் எதிரில் நின்றிருந்தான். விகாரமாக சிரித்தான். முட்டைக்கண், தெத்துப்பல் என்று அவனை பார்க்கவே பயங்கரமாக இருந்தது.
“இப்படித்தாம்பா எனக்கும் ரெண்டு நாளைக்கு முன்னால போரூர் சிக்னலாண்ட ஆச்சி. நல்லவேளையா நீ தொட்டியா. நான் தப்பிச்சேன். உன்னையும் எவனாவது இளிச்சவாயன் தொடுவான். அதுவரைக்கும் வெயிட் பண்ணு” சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் பேய் மாதிரி ஓட ஆரம்பித்தான். அவன் சொன்னது எக்கோவாக திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தது.
யெஸ். நம்பினால் நம்புங்கள். நானே பலூனாக மாறிவிட்டேன்.
– செப்டம்பர் 2013