‘பலிக்கும்’ ஜோதிடங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 12, 2022
பார்வையிட்டோர்: 3,914 
 

ஜோதிடம், எண்கணிதம், ஜாதகம் போன்றவற்றில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா..?. அதில் நம்பிக்கை உள்ளவர்கள், இப்படி வாங்களேன் உங்களுக்குக் கைகொடுக்கனும். நம்பிக்கை இல்லாதவங்களும் வாங்க உங்களுக்கும் கைகொடுக்கனும். இரு தரப்பினர்க்கும் கைகொடுக்கறேன்னா காரணம் இல்லாமல் இருக்குமா.? காரணத்துக்கு ஒரு கதை இருக்கிறது. கதையைச் சொல்லவா?

அந்த தோட்டத்துக்கு இரு ஜோதிடர்கள் வந்தாங்களாம். இருவரும் ஒரே குருகிட்ட பாடம் படிச்சவங்களாம். தோட்டத்திற்கு நுழைஞ்சதும் அவங்களுக்கு தாகமா வந்துச்சாம். அப்போ ஒரு வீட்டு வாசல்ல நின்னுகிட்டு தண்ணி கேட்டாங்களாம். அந்த நேரம் பார்த்து வீட்டு பின்னால இருக்கிற கிணத்துல மண் குடத்தால் தண்ணி எடுத்துக்கிட்டு இருந்தாங்க ஒரு அம்மா. அப்போ கயிறு வழுக்கி குடம் கிணத்துக்குள்ளயே விழுந்துடிச்சாம். அப்பறம் வேற கயிறைக் கொண்டு வந்து வேற மண் சட்டியில் தண்ணி எடுத்துக் கொடுத்தாங்களாம்.

தண்ணி கொடுத்தவங்க சும்மா இல்லாம ரொம்ப வருசத்துக்கு முன்னே விட்டுட்டுப் போன வீட்டுக்காரர் எப்போ வருவார்னு ஜோசியம் கேட்டாங்களாம். அந்த ரெண்டு ஜோதிடர்களும் பதில் சொன்னாங்க. ஆனால் ஆளுக்கு ஒரு பதில் சொன்னாங்களாம். ஒருத்தரு, வரமாட்டாருன்னும்; அடுத்தவரு, வருவாருன்னும் சொன்னாங்களாம். என்னடா இது ஒரே குருகிட்ட படிச்ச இந்த ரெண்டு ஜோசியக்காரங்களும் இப்படி எதிர்மறையான பதிலைச் சொல்றாங்களேன்னு ஊர் மக்கள் ஒன்னுகூடிட்டாங்க. நம்மாலுங்க சும்மாவே வ்னதிடுவாங்க. இப்போ சொல்லவா வேணும்.

இப்போ முடிவா என்னதாம்பா சொல்றிங்கன்னுக் ஊர் மக்கள் கேட்டாங்களாம். அப்பவும் ரெண்டு ஜோசியக்காரங்களும் சொன்ன பதிலேதான் சொன்னாங்களாம். சும்மா விடுவாங்களா ஊர் மக்கள். வருவாருன்னு சொன்னவர்கிட்ட எப்போ வருவாருன்னு கேட்க அவரும் ஏதேதோ கணக்கு கையில போட்டுக் காட்டி இன்னும் ஒரு மணி நேரத்திலன்னு சொல்லிபுட்டாரு. காத்திருந்துக் காத்திருந்து மக்கள் ஒரு மணி நேரமும் யார் சொன்னது நடக்கும்னு பேசிக்கிட்டாங்க.

ஐம்பது நிமிசத்துக்குள்ளயே தாடியோட ஒருத்தரு அந்த வீட்டுக்கு வந்தாரு. அட அவர்தான் வீட்டுக்காரர்னு அந்த அம்மா சொன்னாங்க. ஊர் மக்களும் வருவாருன்னு சொன்ன ஜோசியக்காரரை அப்படித்தான் புகழ்ந்தாங்க. பாவம் வரமாட்டாருன்னு சொன்ன ஜோசியக்காரை யாரும் கண்டுக்கவே இல்லை.

கொஞ்ச நேரம் கழிச்சி ரெண்டு ஜோசியக்காரரும் புரப்பட்டாங்க. அவங்க ரெண்டு பேரும் எப்படி வேறவேற பதில் சொன்னாங்கன்னு கேட்டுகிட்டாங்க. ஒருத்தரு சொன்னாரு மண் சட்டி ஒடிஞ்சதை கணக்கு பண்ணேன்னு சொன்னாரு. அடுத்தவர் சொன்னாரு நான் மண் சட்டி ஒடிஞ்சி குடத்தில் இருந்த தண்ணி மறுபடியும் கிணத்து தண்ணியோட கலந்ததை கணக்கு பண்ணேன்னு சொன்னாரு. ஆக, பாருங்க ஒரு விசியம் தவறா இருக்கா சரியா இருக்கான்னு பார்க்கற முன்னுக்கு ; அதில் சம்பந்தப்பட்டவங்க எப்படிப்பட்டவங்கன்னு பார்க்கனும்.

இப்படியொரு கதையை சொல்லிய நண்பனுக்கு என் உதவி தேவைப்பட்டது. இந்த கதைக்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தமில்லை. ஆனால் ஜோதிடத்துக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் உண்டு.

பிரச்சனை மேல் பிரச்சனைகள் அர்ச்சனை செய்ததால், தீர்வுக்காக ஜோதிடம் பார்க்க வேணுமாம். எனக்கும் நேரம் இருந்ததால் உடன் சென்றேன்.

கோவிலுக்கு அருகிலேயே ஜோதிடரின் வீடும் இருந்தது. கோவிலைவிட வீடே வசதியா தெரிந்தது. தலைமேல் விளக்கும் தரையின் பளிங்கும் அதற்கு ஓர் உதாரணம். இன்னமும் இருக்கிறது. வரவேற்பறையில் அமர்வதற்கென்றே உயர் ரக சோபா செட்டுகள்; வருசையாக இருப்பதைப் பார்த்தால் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகம்தான்.

முன்பதிவு செய்த பிறகே ஜோதிடரைப் பார்க்க முடியுமாம். இரண்டு வாரங்களாக நண்பனே காத்திருந்ததாகச் சொன்னான். கையில் ஏதும் கொண்டுவரவில்லை. வருவதற்கு முன்னதாகவே தொலைபேசியின் வழி தேவையான விபரங்கள் வாங்கப்படுவதால்; வரும் போது கைவீசிக்கோண்டே வராலாம் என்றான் நண்பன். உடன் சொன்னேன் அப்படியே என்னைப் போல வேலை இல்லாத யாரையும் கூட்டி வரலாம்.

சிரிப்பு சத்தம். அவ்வளவு சத்தமாக நான் எந்த ஜோக்கையும் அப்போது சொல்லியிருக்கவில்லை. ஆனாலும் சிரிப்புச் சத்தம். இப்போதுதான் கவனித்தேன். எங்கள் எதிரே போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் இரண்டு பேர். எப்போது வந்தார்களோத் தெரியவில்லை. வந்தவர்களின் நெருக்கத்தைப் பார்த்தால்…… காதலர்களா..? கணவன்..? மனைவியா என யூகிக்கவே முடியவில்லை. உருவத்தைப் பார்த்தால் கணவன் மனைவி. நாங்கள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் கொஞ்சி குலாவுவதைப் பார்த்தால் காதலர்கள்.

இருந்தாலும் இதெல்லாம் அநியாயம். என்னதான் சுற்றி நான்கு சுவர்களுக்கு மத்தி என்றாலும், எதிரில் முன்பின் அறிமுகமற்ற நாங்கள். உள்ளே அறையில் ஜோதிடர். அவரிடம் ஜோதிடம் பார்த்துக் கோண்டிருப்பவர்கள்.

எதிரில் அமர்ந்ததால் என்னவோ, அவ்வபோது கண்ணிரண்டும் அவர்களை சட் சட் என பார்த்துத் திரும்பியது. நான்தான் அப்படியென்றால், என்னைக் கூட்டி வந்த நண்பன் அதற்கு மேல். நான் திரும்பி திரும்பி பார்த்ததை கொஞ்சமும் கழுத்தைத் திருப்பாமல் அங்கேயேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சட் சட் பார்வையில் சிக்கியவை;

தாராள இடத்திலும் காற்றுக்கே இடமின்றி ஒட்டியிருந்தார்கள்;

பேச்சின் முடிவில் ஒருவர் கண்ணத்தை மற்றொருவர் கிள்ளினார்கள்;

அவன் காதில் ஏதோ சொல்ல அவள் சிரித்தால்;

இடுப்பை இரண்டு முறை கிள்ளி விளையாடிக் கொண்டார்கள்;

ஒருவர் முதுகை ஒருவர் இப்படியா தேய்ப்பது; என்ன முதுகு தேய்த்து குளிக்கிறார்களா;

நல்ல வேலை முத்தமிடவில்லை; அல்லது நான் அதுவரை பார்க்கவில்லை;

சட் சட் பார்வைக்கே இவ்வளவு என்றால், அவர்களையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்த என் நண்பனிடம் கேட்டால்… ஒரு ‘ஏ’ படத்தையே எடுக்கலாம் போல.

உள்ளே இருந்தவர்கள் வெளிவந்தார்கள். அவர்களுடன் வந்திருந்த ஒரு இளைஞன் என் நண்பனின் பெயர் சொல்லி அழைத்து இன்னும் கொஞ்ச நேரத்தில் கூப்பிடுவோம் என்றான்.

நானும் உள்ளே வரவேண்டுமென கேட்டுக் கொண்டதால் கண்ணெதிர் காட்சிகளை காணமுடியாதோ யோசித்தேன். வெளியில் ஏதோ கார் வரும் சத்தம் கேட்டது. வீட்டின் வாசலில்தான் அந்த கார் நின்றிருக்க வேண்டும். அதுவரை கொஞ்சியும் உரசியும் இருந்தவர்கள் இப்போது பதட்டாமானார்கள்.

தெரிந்த இடுப்பை மறைத்து இருந்த நெருக்கத்தை கலைத்தார்கள். கணவன் மனைவி அல்லது காதலர்கள் இரண்டு நாற்காலிகள் இடைவேளிவிட்டு உட்கார்ந்தார்கள். உள்ளே வேகமாக வந்தவரைப் பார்த்ததும் அந்த பெண் எழுந்து ஓடினார். நிச்சயம் அவரின் வருகைக்காக காத்திருந்தது போலவே ஒரு ஓட்டம். அவரும் தாமதமா வந்ததற்கு வேலையைக் காரணம் சொல்லி முன்பு அந்த பெண் அமர்ந்திருந்த நாற்காலியில் அமர ஆயுத்தமானார்.

இரண்டு நாற்காலி இடைவேளைவிட்டு அமர்ந்திருந்த அந்த நபர், வந்தவரைப் பார்த்து சிரித்தவாரே எழுந்தார். உள்ளே இருந்து மீண்டும் வெளிவந்த இளைஞன் எங்களை அழைக்க உள்ளே சென்றோம்.

முன்பெல்லாம் நெற்றியில் பட்டையும்; காவியும் அணிந்து; தரையில் அமர்ந்து ஜோதிடம் சொன்னார்கள். இப்போது, உயர் ரக மேஜை நாற்காலி. கணினி. எங்களை அமர வைத்து தேவையில்லாத கதைகளையெல்லாம் பேசினார். பிறகு கணினியைப் பார்த்தவாரு பலன் சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்னதில் பெறும்பாலும் தொடக்கத்தில் எங்களிடம் கேட்டதே இருந்தது. ஆனாலும் நண்பன் ஒவ்வொன்றையும் வியப்பாகத்தான் கேட்டான்.

அரைமணிநேரம் இருக்கும்; புறப்படும் முன்பு என்னைப் பார்த்து சிரித்தார் நானும் சிரித்தேன். உங்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லைன்னு தெரியுது என்றான். சிரித்தேன். வேணும்னா வெளியா வந்திருக்காங்களே அவங்க ரெண்டு பேரையும் கேளுங்க என் ஜோதிடத்தை என்றார். புருவத்தைச் சுருக்கி ஏன் என்பதாகக் கேட்டேன்.

கல்யாணமாகி மூணு வருசமா அவங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இங்க வந்து நான் நாள் நட்சத்திரம் கணிச்சிக் கொடுத்தேன் இப்போ பாருங்க கரு தங்கியிருக்குன்னு சந்தோஷமா வந்திருக்காங்க என்றவரிடம் கேட்கத் தோன்றியது;

“நாள் நட்ச்சத்திரத்தை பயன்படுத்தியது கணவனா இல்லை… அதுவரை கணவன் போல அமர்ந்திருந்தவனா..?”

எது எப்படியோ; ஜோதிடங்கள் பலித்துவிடுகின்றன.

– அக்டோபர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *